ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்
தமிழாக்கம்: எஸ். ராமன்

எனது முன்னுரை

தற்போது உள்ள நாட்டின் எல்லைகளும், ஆளும் வரைமுறைகளும் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பிருந்தே நம் பாரத தேசத்தில் நடந்த பழம்பெரும் நிகழ்ச்சிகளையும், ஆய்வுகளையும், அறிவுப் பொக்கிஷங்களையும் நாம் எழுத்து மூலம் தக்க வைக்காது, செவி வழி மட்டுமே பரவவிட்டு தக்க வைத்திருக்கிறோம். அதனால் ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு இடத்திலும், வேறுபல காலத்திலும் விதவிதமான விளக்க வடிவங்களும் இருந்திருக்கின்றன. செவி வழி செல்வது நெறியுடன் வாழ்வோர் மூலம் பரவுவதால் அடிப்படை விவரங்கள் மாறாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையும், அன்று எழுத்து வடிவங்கள் உருவாகாத நிலை என்பதாலும், செவி வழியே விவரங்களை மற்றவர்க்கு அறிவித்தது நமது பாணியாக இருந்தது. இன்று நாம் ஆவணங்கள் மூலம் எழுத்து வடிவில் அனைத்தையும் அறிவித்தாலும், நெறியுடனான வாழ்வு தளர்ச்சி அடையும் போது எழுத்து மூலம் வருவதற்கு மட்டும் என்ன பெரியதாக உத்திரவாதம் கொடுத்துவிட முடியும்?

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறளை எடுத்துக்கொண்டோமானால், “அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதுதான் இன்றைய பாடமாக இருக்கிறது. ஆனால் வாய்வழி-செவிவழியாக அனைத்தும் நமக்கு வந்த நேர்மை நிறைந்த அந்தக் காலத்திலேயே குறள் இருந்திருந்தால் “அப்பொருள் மெய்ப்பொருள் என்று காண்பது அறிவு” என்பதே பாடமாக இருந்திருக்கும் என்று சொல்லலாம்.

மேலும் இப்போதுகூட புதிதாக மொழி ஒன்றைக் கற்கும்போது, கேட்பதும் பேசுவதும்தான் முதன்மை பெறுகிறது. எழுதுவது என்றுமே இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. அதனாலேயே படிக்கவோ எழுதவோ இயலாதவர்கள் பலரும் எந்த மொழியையும் பேசிப்பேசியே கற்க முடிகிறது என்பதும், அதேபோல எழுத்தறிவு மட்டும் உள்ள பலரும் பேச முடியாது தவிப்பதையும் நாம் பார்க்கிறோம் அல்லவா? அதனால் வாய்வழி-செவிவழி வருவது என்றுமே மகத்துவம் வாய்ந்ததுதான். அதனாலேயே நா நயம் என்பதுதான் நாணயமாக அன்று அறியப்பட்டதோ?

அவ்வாறு செவி வழி வந்து, பின்பு எழுத்துக்கள் மூலம் நம்மை அடைந்ததுதான் நமது புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் என்பதை நாம் அறிவோம். வேத-உபநிஷத்துகள் கூறும் உயர்ந்த தத்துவங்களை, பேச்சு வாக்கில் மக்களிடம் பரப்புவதற்காக, நடந்த நிகழ்ச்சிகளை தத்துவங்களோடு ஒப்பிட்டு, வாழும் வகையைக் காட்டுவதில் இதிகாசங்கள் மென்மையான, மற்றும் மேன்மையான வழிகாட்டிகளாக விளங்கின. இதிகாசங்கள் பாரதத்தில் நடந்த நிகழ்வுகளின் கோவையான நமது பண்டைய சரித்திரங்களாக இல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? ஏனென்றால், எவ்வாறு வேத மந்திரங்களை ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு பதிவு செய்துகொண்டார்களோ, அதேபோல நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் பயன்படும் முறையில் நீதி, நேர்மைக்கான கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.

sri-rama

நீதி, நேர்மை என்றாலே இறைவனை முன்னிறுத்தி அனைத்தையும் காண வைப்பார்கள். இவ்வாறு அக்காலத்தில் செவி வழி வந்த பலவும் இறையியல் பற்றியே இருந்திருக்கின்றன; உலகியல் பற்றி இருந்ததும் இறைக்கோட்பாட்டை வலியுறுத்தியே வந்திருக்கின்றன. பின்னர் எழுத்து முறை வந்தபோதும், அந்த மரபே கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஊடகங்கள் பலவாகி அண்மையில் திரைப்பட வழி உருவாகிய போதும் அந்த மரபு தொடர்ந்து வந்ததை நாம் கண்கூடப் பார்த்தவர்கள்தானே? தொடக்கத்தில் பக்திப் படங்களே வந்தன என்பதைத் தவிர, அக்காலத்தில் “சுபம்” என்ற Title card ஒன்று இறுதியில் வராத படங்களையே நான் பார்த்ததில்லை. திரைப் படத்தில் அசுபமான முடிவுகள் அப்புறமாக வரத்தொடங்கியதால் தமிழை முன்னிறுத்தி “வணக்கம்” என்றும், தன்னை முன்னிறுத்தி “இது இவரின் படம்” என்றும் வரத் தொடங்கின.

தொடக்கத்தில் செவி வழி வந்ததால் இங்கங்கு சில இடைச் செருகல்கள் இருந்திருக்கலாம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் நமக்குப் பண்டைய வழிகளில் வந்த அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஆராயும்போது அந்தப் பதிவுகளைக் கேட்போரும், பின்னர் படிப்போரும், அவ்வாறு அனைவருமே நல்ல வழிகளைப் பின்பற்றி, நெறியுடன் வாழ்ந்து, நலமாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையே அவைகளின் மூல காரணமாக இருந்திருக்கிறது என்பதை நாம் பொதுவாகக் காணலாம். அதனாலேயே பாரதத்தில் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து, பக்தி இலக்கியமும் நன்கு மலர்ந்து ஒரு முழுமை அடைந்திருந்தது என்று உறுதியாகக் கூறலாம். பாரதத்தின் எந்த மூலையில் வழங்கும் தொன்மையான மொழியில் உள்ள இலக்கியங்களுக்கும் இந்தக் கூற்று சாலப் பொருந்தும். அதனாலேயே நமது கலாச்சாரத்தில் மத அடிப்படையில் ஓர் ஒற்றுமையும், வேறு மதங்கள் தலையெடுத்தபோது அவைகளைப் புரிந்துகொள்ளும் தன்மையும், சகிப்புத் தன்மையும் தென்பட்டது. அக்பர் போன்ற முகலாய மன்னர்கள் கூட அதை நன்கு அறிவார்கள்.

இதிகாசங்கள் நமது சரித்திரங்கள் அல்லது சரித்திரக் கதைகள் என்று எவ்வாறு எடுத்துக்கொண்டாலும், அவைகளில் கூறப்பட்டிருப்பவைகள் பலவும் அக்காலத்திற்கு மட்டுமின்றி தற்போதைய நடைமுறை வாழ்விற்கும் பயனுள்ளதாக அமைகின்றன என்பது அறிவார்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும். தான் எழுதுவது மட்டும் அல்லாது, மற்றவர்கள் பார்வையையும் பலர் அறியவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதுதான் பல மொழியாக்கப் படைப்புகளும். பொதுவான இந்த எண்ணங்களால் உந்தப்பட்டே எனது அடுத்த தொடரை வாசகர்கள் முன் வைக்கிறேன்.

அது தமிழ் ஹிந்து வலைத் தளத்தில் திரு. கிருஷ்ணகுமாரின் “ராமாயணப் படைப்பாய்வுகள்” பதிவாகிக் கொண்டிருந்த சமயம். அப்போது இத்தளத்தில் தொடராக முன்பு வந்த எனது முந்தைய தமிழாக்கமான “ராமாயணப்” புத்தக வடிவின் ( https://www.nhm.in/shop/home.php?cat=1466 ) பிரதி ஒன்றை சென்னை பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருதப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றிருந்த முனைவர் வீழிநாதனிடம் தருவதற்காகச் சென்றிருந்தேன். அதைப் பெற்றுக்கொண்டவர், அவர் வழி நடத்தும் “ஆதி சங்கர அத்வைத ஆராய்ச்சி மையம்” வெளியிட்டுள்ள இரண்டு ஆங்கில நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து அருளினார். அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது தமிழில் காணவிருக்கும் “Divine Design in Srimad Ramayana” என்ற ஓர் ஆய்வு நூல். அதை எழுதியவர் காலம் சென்ற முனைவர் T.P. ராமச்சந்திரன். ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணியின் விளக்கங்களை நமது வலைத் தள வாசகர்கள் அறிய ஆவல் கொண்டிருப்பார்கள் என்ற எனது எதிர்பார்ப்பில் இத்தொடரை எழுதுகின்றேன்.

சமீபத்தில் நமது தளத்தில் வந்துகொண்டிருக்கும் அரிசோனனின் வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களின் இலக்கிய ஒப்பீடுகளின் மூலம், எவ்வாறு முன்னவர் இராமபிரான் மற்றும் சீதாப் பிராட்டியின் மனித குணங்களையும், பின்னவர் அவர்களது தெய்வீகப் பின்னணியையும் மனதில் முதன்மையாக இருத்தித் தங்களது காப்பியங்களைப் புனைந்துள்ளார்கள் என்பதை வாசகர்கள் இப்போது அறிந்திருக்கக் கூடும். அவ்விரு படைப்பாளர்களுமே மற்றதொரு பார்வையை மறைத்ததோ, மறுத்ததோ இல்லை. எனது முந்தைய தமிழாக்கப் படைப்பு இராமபிரானின் அரும்பெரும் மனித குணங்களை வாசகர்களுக்கு விளக்கியது என்றால், அவரது அவதாரத்தின் தெய்வீகப் பின்னணியை இந்த ஆய்வு நூல் மூலம் இப்போது நாம் அறிந்துகொண்டு தெளிவு பெறலாம்.

பேராசிரியர் ராமச்சந்திரனைப் பற்றி
பேராசிரியர் வீழிநாதன் அவர்களின் அறிமுகம்

முனைவர் T.P. ராமச்சந்திரன், சென்னை பல்கலைக் கழகத்தின் “தத்துவ ஆராய்ச்சி மைய”த்தில் சம்ஸ்க்ருதப் பேராசிரியராகப் பணியாற்றிய பின் 1987-ம் ஆண்டில் ஒய்வு பெற்றார். அவரது கைவண்ணம் பெற்ற பதிப்புகளில் “அத்வைத வேதாந்தத்தில் உலகியல் தத்துவம்” (The Concept of Vyavaharika in Advaita Vedanta) , (இரண்டு பாகங்களில் வெளிவந்த) “அழகைப் பற்றிய இந்திய தத்துவக் கருத்துக்கள்” (The Indian Philosophy of Beauty), “இந்தியத் தத்துவத்தின் அழகு அம்சங்கள்” (The Aesthetic Value in Indian Philosophy), “துவைத வேதாந்தம்” (Dvaita Vedanta), “மைசூர் ஹிரியாண்ணர் சரிதம்” (M. Hiriyanna), “தத்துவ ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள்” (The Methodology of Research in Philosophy) என்ற இவ்வாறான படைப்புகளும் அடங்கும். தத்துவ ஆராய்ச்சி பற்றிய ஆய்வுப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்த அவரது ஆராய்ச்சிப் பதிப்புகள் எண்ணில் அடங்காதவை. அவ்வாறான அவரது ஒவ்வொரு பதிப்பும் அந்தந்தப் பிரிவுகளில் ஒரு தனித்துவம் பெற்ற பதிப்பாகும்.

அறிவார்ந்து பொறுக்கி எடுக்கப்பட்ட பதிப்புகள், அதற்காக அறிவு கூர்மையுடன் நடத்தப்பட்ட ஆய்வுகள், அவைகளில் இருந்து வெளிப்பட்ட அவரது அருமையான எளிய விளக்கங்கள், எதையுமே எப்போதும் கூர்ந்து கவனித்த அவரது பார்வைகளின் கோணங்கள் என்றிவ்வாரான அனைத்துமே அவரது படைப்புகளின் குணாதிசயங்கள். “அதிகாரபூர்வமற்ற விவரங்கள் எதனையும் தரலாகாது; மற்றும் தேவைக்கு மேற்பட்ட விவரங்களையும் அளிப்பது தகாது” என்ற மகாகவி காளிதாசரின் நூல்களுக்கு உரைகள் எழுதிய மல்லிநாதரின் கூற்றை அவர் கவனமாகக் கடைப்பிடித்தார். அவரது படைப்புகள் அனைத்துமே அறிவுக்கு ஒரு விருந்தாகவும் விளங்கி, நல்லதொரு நடையிலும் எழுதப்பட்டிருந்தன.

எவ்வாறு பார்த்தாலும் திரு. ராமச்சந்திரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக தன்னிகரற்று விளங்கினார். ஓர் எளிமையான வாழ்க்கை, மிகவும் போற்றுதற்குரிய சிந்தனை, மற்றும் சீரிய பழக்க வழக்கங்கள் கொண்டே அவர் வாழ்ந்தார். சத்தியம், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று கூறாமை, நேர்மையுடன் கூடிய நாணயம் என்றிவ்வாரான குணாதிசயங்களுடன் அவர் வாழ்ந்ததால், கற்றோர் அனைவரின் அன்புக்கும், போற்றுதலுக்கும் அவர் உரியவர் ஆனார்.

ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் வழிகாட்டுதலில் வாழ்ந்த அன்பராகவும், பரந்த மனப்பான்மையுடன் கூடிய தத்துவ ஆராய்ச்சியாளராகவும் விளங்கி, ஆன்மிகத் தத்துவமே தனது மூச்சாக வாழ்ந்த அன்பராக இருந்து, இப்போது தங்களது நினைவில் மட்டுமே வாழும் முனைவர் ராமச்சந்திரன் அவர்களுக்கு, ஆதி சங்கர அத்வைத ஆராய்ச்சி மையத்தின் அன்பர்கள் அனைவரும் தங்களது அன்பு கலந்த வணக்கத்தை இந்த நூல் மூலம் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

ஆசிரியரின் முன்னுரை: ஓர் அவதாரத்தின் மகிமை

சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்ற நான்கு யுகங்களைப் பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் பலமுறை கடந்து வருகிறது என்பதே நாம் பரம்பரையாகக் கொண்டுள்ள வழிமுறையாகும். எண்ணிக்கையில் அவை நான்காக இருப்பதால், அதன் ஒரு சுழற்சியை நாம் சதுர் யுகம் என்கிறோம். பலமுறை அவ்வாறு நிகழ்வதை ஒரு பெரிய சுழற்சி என்று கொண்டு அதனை அவாந்தர கல்பம் என்று அழைக்கிறோம். அது போன்ற பலப்பல கல்பங்களை உள்ளடக்கிய ஒரு மகா பெரிய சுழற்சியை மகா கல்பம் என்கின்றோம். அந்த மகா கல்பங்களும் மீண்டும் மீண்டும் சுழன்று வருகின்றன. இப்போது நாம் சதுர் யுகம் என்பதன் கால அளவைப் பார்ப்போம். மனிதர்கள் அறிந்துள்ள காலப் பிரமாணப்படி ஒரு சதுர் யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் நீண்டு இருப்பது. அதில் சத்ய யுகம் 40 விழுக்காடும், திரேதா யுகம் 30 விழுக்காடும், துவாபர யுகம் 20 விழுக்காடும், மற்றும் கலியுகம் 10 விழுக்காடுமாக கால அளவில் பரிமாணித்துப் பரந்து உள்ளன.

காலத்தில் இந்த நான்கு யுகங்களையும் உலகம் கடக்கும் போது, உலகியல் நியதிப்படி நீதி, நேர்மை பார்த்து வாழும் தரம் படிப்படியாகக் குறைந்துகொண்டே செல்லும். இவ்வாறு தரம் குறைந்துகொண்டே போவதால் சீவராசிகள் வாழ்வதற்கான உலகியல் ஆதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பல சிரமங்கள் தோன்றும். இறுதியாக, ஒரு போராட்டம் நடந்து முடிவது போல, இறைவன் அனைத்துத் தீய சக்திகளையும் ஒடுக்கி அழித்து, சத்ய யுகத்திற்கே உரித்தான தூய்மையான நிலையைப் புனரமைத்து, உலகைத் தரம் தாழ்ந்த நிலையில் இருந்து மீட்டெடுத்து, அடுத்த சதுர் யுகத்தைத் தொடங்கி வைப்பார். இவ்வாறாகப் புதியதான சுழற்சி ஒன்றின் முதல் யுகம் தோற்றுவிக்கப்படுவதால் சத்ய யுகத்திற்கு “கிரேதா யுகம்” என்றும் ஒரு பெயர் உண்டு. (க்ரியா = உருவாக்கம்; ஆங்கிலச் சொல்லான create-உடன் இதற்கு தொடர்பு இருக்க வேண்டும்)

dasavatara

மேற்கண்டவாறு ஒரு சதுர் யுகத்தின் காலப் போக்கில் பொதுப்படையான நீதித் தாழ்வுகள் ஏற்படுவதைத் தவிர, உலகின் வெவ்வேறு பகுதிகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அத்தகைய தாழ்வுகள் அடிக்கடி ஏற்படும் வாய்ப்புகளும் நேர்ந்துகொண்டே இருக்கும். அது போன்ற சமயங்களிலும் இறைவன், அந்தந்த இடத்தில் தோன்றி, சூது கவ்விய வாழ்வை மீட்டெடுத்து தர்மத்தை நிலை நாட்டுவார். இவ்வாறாக ஒரு சதுர் யுகத்தின் முடிவிலோ, அல்லது அதன் காலப்போக்கிலோ வெவ்வேறு சமயங்களிலும், இடங்களிலும் அவ்வப்போது அங்கங்கு இடறிய தர்மத்தை நிலைநாட்டுவதற்காக இறைவன் வருவதையே அவதாரம் என்கின்றனர். தோற்றுவிக்கப்பட்ட சீவராசிகளை உள்ளடக்கிய ஓர் உலகம் அழியும்வரை அவை அனைத்தையும் காக்கும் பொறுப்பு முழு முதற் கடவுளர்களில் ஒருவரான மகாவிஷ்ணுவின் பொறுப்பு என்பதால் அவதாரம் என்பதும் அவரது விசேஷ உரிமையாகும். அனைத்தின் தோற்றம் பிரம்மனின் பொறுப்பு என்பது போல, அவைகளை அழித்தல் என்பது சிவபெருமானின் பொறுப்பாகும். ஆக இம்மூன்று முழு முதற் கடவுட்களும் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற இடைவிடாத செயல்களைத் தங்களது முதன்மைப் பொறுப்புகளாக எடுத்துக்கொண்டு பிரபஞ்சத்தை நிர்வகித்து வருகின்றனர்.

அவதாரம் என்ற வார்த்தையின் சம்ஸ்க்ருத மூலச் சொல்லான “அவதர” என்பதன் பொருளே “இறங்கி வருதல்” என்பதாகும். அதாவது எங்கும் எதிலும் எப்போதும் நுண்ணிய வடிவில் உள்ள இறைவன் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறித்த காலத்திற்காக, ஒரு குறிபிட்ட வடிவம் கொண்டு வருதலே அவதாரம் எனப்படுகிறது. அவதாரங்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று இறைவனே அனைவரும் காணப்படும் வடிவில் வருவது; அதனைப் பூர்ணாவதாரம் என்பார்கள். மற்றது இறைவனின் பற்பல விசேஷ அம்சங்களில் ஒன்று ஒரு வடிவில் இறங்கி வருவது; அதை அம்சாவதாரம் என்பர். பூர்ணம் என்றும் அம்சம் என்றும் அவைகள் இரண்டும் குறிப்பிடப்படுவதால் முன்னதை முழுமையானது என்றும், பின்னதை ஒரு பின்னம் அல்லது ஒரு பகுதி என்றும் புரிந்துகொள்வது தவறாகும். மாறாக, முன்னதில் இறைவனே உதிப்பதாகவும், பின்னதில் இறைவனின் விசேஷ சக்தியோ, அல்லது சின்னமோ ஒரு வடிவில் பொருந்தி வந்துள்ளதாகக் கொள்ள வேண்டும். பூர்ணமாகவும், அம்சமாகவும் ஆன வகைகளில் இருபதிற்கும் மேலான அவதாரங்கள் நிகழ்ந்துள்ளதாக நமது சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நாம் பொதுவாக அறிந்துள்ள பத்து அவதாரங்களைக் கீழ்க்கண்ட ஸ்லோகம் குறிப்பிடுகிறது:

மத்ஸ்ய கூர்மோ வராஹஸ்ச நரசிம்ஹஸ்ச வாமனஹ
ராமோ ராமஸ்ச ராமஸ்ச க்ருஷ்ணஹ கல்கிஸ்ச தே தசா

இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ள மூன்று ராமர்களில் நடுவில் இருப்பதே நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ள ராமாயணத்தின் கதாநாயகனான ஸ்ரீ ராமபிரான் ஆவார். அவரது காலத்திலும், அதற்கு முன்னரும் வாழ்ந்திருந்த பரசுராமரை ஸ்லோகத்தில் வரும் முதலாவது ராமரும், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் தமையனாரான பலராமரை மூன்றாவது ராமரும் குறிக்கின்றன. இங்கு நாம் காணும் பரசுராமரும், பலராமரும் அம்சாவதாரங்கள் ஆவார்கள்; ஸ்ரீ ராமபிரானும் ஏனையவர்களும் பூர்ணாவதாரங்கள் எனப்படுவார்கள். வழிவழியாக நாம் அறிந்துள்ளவைகளில் தற்போது நடக்கும் சதுர்யுகத்தில், ஸ்ரீ ராமபிரான் திரேதா யுகத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் துவாபர யுகத்திலும் அவதரித்திருந்தனர். கலியுகம் முடிந்து சதுர் யுகத்தின் இந்தச் சுழற்சி முடியும்போது இறைவன் கல்கி அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்றும் நாம் அவ்வாறே அறிந்துள்ளோம்.

(தொடரும்)

3 Replies to “ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1”

  1. பெரியவர் திரு எஸ்.இராமன் அவர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும். தமிழ் இந்து தளத்தில் தங்களது தொடர் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். நமது தளத்துக்கு மிகவும் அழகு சேர்ப்பவை ஆன்மீக மற்றும் சமூக கட்டுரைத்தொடர்களே. உங்கள் பணி சிறக்கட்டும். இக்கட்டுரை தொடரை பார்த்தவுடனேயே மகிழ்ச்சி பொங்குகிறது. கட்டுரையை இனிமையாக வழங்கும் தங்களுக்கும், படித்து மகிழும் வாசகர்களுக்கும் எல்லாம் வல்ல சிவகுருநாதனாம் சக்திவேல் முத்துக்குமாரசாமியின் அருள் என்றும் பெருகட்டும். நல்ல தொடரை வழங்கும் தமிழ் ஹிந்துவுக்கும் நமது பாராட்டுக்கள். நீவிர் வாழ்க ! மேலும் மேலும் இத்தளம் வளரட்டும்! வையகம் வளமுடன் வாழ்க.

  2. ஏகாதசி நன்னாளில் ராம குணார்ணவத்தை வாசிக்கும் வாய்ப்பை பகிர்ந்தமைக்கு ஸ்ரீ ராமன் அவர்களுக்கும் தள நிர்வாகிகளுக்கும் மிகுந்த நன்றி.

    கற்பார் ராமபிரானையல்லால் மற்றொன்றும் கற்பரோ

    மற்றும்

    பேசிற்றே பேசலல்லால்

    போன்ற ஆழ்வாராதிகளின் வாக்குகளை ஒட்டி

    கசடறக் கற்றறிந்த சான்றோர் வாயிலாக ராம குணார்ணவத்தை எத்துணை முறை கேட்டாலும் திரும்பவும் கேழ்க்கவே தோன்றும்.

    பேராசிரியர் ஸ்ரீ ராமசந்த்ரன் அவர்களது தெய்வீக விளக்கங்களை மொழியாக்கம் செய்ய விழையும் தங்களது முயற்சிக்கு ஸ்ரீ ராமபிரானின் திருவருள் கூடுவதாக.

    \\ “அதிகாரபூர்வமற்ற விவரங்கள் எதனையும் தரலாகாது; மற்றும் தேவைக்கு மேற்பட்ட விவரங்களையும் அளிப்பது தகாது” என்ற மகாகவி காளிதாசரின் நூல்களுக்கு உரைகள் எழுதிய மல்லிநாதரின் கூற்றை \\

    மிக அருமையான கூற்று.

    இயலுமானால் ஸ்ரீ மல்லினாதரின் காளிதாச காவ்யங்களின் மூல வ்யாக்யானத்தில் இருந்து மேற்கண்ட கூற்றின் சம்ஸ்க்ருத வடிவைப் பகிரவும்.

    ஸ்ரீ ராமஜெயம்.

  3. நான் ஏற்கனவே தமிழ் ஹிந்து தளத்திற்கு ஒரு கட்டுரையை பகிர்ந்து இருந்தேன். அதில் இருந்து சில..

    சங்க இல்லக்கியங்களில் இராமன்

    புறநானூற்றின் சான்று

    “ராமன் மனைவியான சீதையை, இரக்கமில்லாதவனான ராவணன் கவர்ந்து கொண்டு போனபோது, சீதை தன் நகைகளைக் கழற்றி வீசினாள். அந்த நகைகளைக் கண்டு கைப்பற்றிய குரங்குகள்; விரலில் போட வேண்டிய மோதிரம் முதலானவைகளை காதிலும், காதில் அணிய வேண்டிய குழை முதலானவைகளை விரலிலும், இடுப்பில் அணிய வேண்டியவைகளைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டிய நகைகளை இடுப்பிலும் – மாற்றி மாற்றி அணிந்து கொண்டன. அதே போலத்தான் நம் உறவினர்களான இவர்களும் செய்கிறார்கள்” என்று எண்ணிச் சிரித்தார்.
    இத்தகவலைச் சொல்லும் பாடல், புறநானூறு என்ற நூலில் 378ஆவது பாடலாக இடம் பெற்றுள்ளது. அப்பாடல் :

    இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக்கு நரும்
    செவித்தொடர் மரபின விரல் செறிக்குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும்
    மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவியஞான்றை
    நிலஞ்சேர் மதரணிகண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தா அங்கு
    அறாஅ அருநகை இனிது பெற்றிடும்.

    அகநானூற்றின் சான்று (இராமன் அவித்த ஆலமரம்):

    அகநானூற்றின் 70-அம் பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலாகும். அதில் தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:
    “…
    நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
    அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
    பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
    வதுவை கூடிய பின்றை….

    வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
    முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை
    வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
    பல்வீழ் ஆலம் போல
    ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே”. (அகநானூறு:70:5-17)

    அ•தாவது, “உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்முன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான தனு*ச்கோடியில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்;
    அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *