புதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்

நமது புதிய மத்திய அரசு தனது பணியை சிறப்பாகத்தொடங்கி உள்ளது. பிரதமர் திரு மோதி தனது அரசு எப்படி செயல்படப்போகிறது என்பதை சூசகமாக உணர்த்தி உள்ளார்.

கச்சிதமான அமைச்சரவை, செயல்திறன்மிக்க பொறுப்பான மூத்த அமைச்சர்கள் போன்றவை இந்த அரசின் சிறப்புகள். உறுதியான, மக்கள்நலன் நாடும் தலைமையே தங்களது ஏக்கம் என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் உணர்த்தி உள்ளனர். அதற்கேற்றாற்போல்  உண்மையான நிர்வாக அதிகாரம் பிரதம மந்திரியாகிய தன்னிடம் மட்டுமே உள்ளது என்பதை தெளிவாக மோதி உணர்த்தியுள்ளார். தமது நிர்வாகபாணி எந்த நோக்கத்தை நோக்கி செயல்படவேண்டும் என்று தனது அமைச்சரவை சகாக்களுக்கும் மோதி உணர்த்திவிட்டார்.

பதவியேற்றவுடன் செயலில் இறங்கிவிட்டார் மோதி, மலிவான கவர்ச்சித்திட்ட அறிவிப்புகள், வீர ஆவேசப் பேச்சுக்கள் பழிவாங்கும் செயல்கள் என பழைய ஆட்சிகளின் புளித்துபோன பாணியிலிருந்து விலகி 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை முடிவுசெய்வது,   அமைச்சர்கள் தங்களது உறவினர்களுக்கு பதவி அளிக்கக்கூடாது எனும் எச்சரிக்கை ஆகியவை நல்ல தொடக்கத்தையும் பொதுமக்களான நமக்கு நம்பிக்கையையும் அளிப்பவையாக உள்ளன.

அமைச்சர்களை மோதியே தேர்வு செய்துள்ளார், தனது கட்சி மற்றும் கூட்டணிக்கட்சிகள் ஆகியவற்றின் நெருக்குதல்கள் அவரைப் பாதிக்கவில்லை.

narendra-modi-cabinet-2014

ஒரு அரசின் சிறந்த செயல்பாட்டிற்க்கு அதிகாரிகளின் பணி மிகமிக முக்கியமானது, அந்தவகையில் நிருபேந்த்ர மிஸ்ரா அவர்களை பிரதமர் அலுவலக  செயலாளராக நியமித்தது, அஜித்குமார் டோவல் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தது ஆகியன சிறப்பான முடிவுகள். மோதி அவர்களின் நினத்ததை சாதிக்கும் உறுதிக்கு மிஸ்ரா அவர்களின் நியமனத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

மிஸ்ரா அவர்கள் பல துறைகளிலும் பணியாற்றி நற்பெயர் எடுத்தவர். கருமமே கண்ணாக செயல்படும் காரியவாதியாக அறியப்படுபவர். இவர் ட்ராய் தலைவராகவும் இருந்தவர், அவர் செயலாளர் பதவியை ஏற்பதற்க்கு ட்ராயின் விதிமுறைகள் தடையாய் இருந்ததால் ஒரு அவசரச்சட்டம் வழியாக அவர் அப்பொறுப்பிற்க்கு நியமிக்கப்பட்டார். தொற்றதனால் ஏற்பட்ட விரக்தியில் உள்ள காங்கிரஸ் மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட்டு அதை எதிர்க்கத்துவங்கி மண்ணைக்கவ்வியது தனிக்கதை.

அஜித்குமார் டோவல் அவர்களும் அனுபவம் வாய்ந்த செயல்வீரராக அறியப்படுகிறார். அவர் பல காலம் வடகிழக்குபகுதியிலும், காஷ்மிரிலும் பணியாற்றிய அனுபவமுடையவர், IB ன்  முன்னால் தலைவர். தேசத்தின் இன்றைய தேவைகளையும் முன்னுறிமைகளையும்  நன்கு உணர்ந்ததால் தான் மோதி அவர்களால் இன்நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருஷ்டி பரிகாரம்போல் ஸ்மிருதி இரானியின் கல்விதகுதி பிரச்சினையாக்கப்பட்டதும், காஷ்மிருக்கான 370 ஆவது பிரிவுபற்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின்  பேச்சு விமர்சிக்கப்பட்டதும் ஒருவகையில் நல்லதே.

ஸ்மிருதி இரானியி தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதிலளித்துள்ளார், தன்னை தான் செய்யும்பணிகளைவைத்து எடைபோடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரை சங்கடப்படுத்தவேண்டும் என்று ஒரு கோஷ்டி தீவிரமாக செயல்படுவது தெரிகிறது. எனினும் தனது உறுதிமொழிப் பத்திரத்தில் இருப்பதாகக்கூறப்படும்  முறன்பாடுகளுக்கு அவர் தெளிவான பதில் கொடுப்பது அவசியம்.

ஜிதேந்திர சிங்கின்  370 ஆவது பிரிவுபற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியமளிக்கும் விதத்தில் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட அப்பிரிவை நீக்குவதுபற்றிய விவாதத்துக்கு ஆதரவளிக்கும் போக்கை வெளியிட்டுள்ளன. உமர் அப்துல்லாவும், மெஹபூபாவும் மட்டுமே உணர்ச்சிபூர்வமாக பதிலளித்துள்ளனர். அவர்களது பேச்சு மலிவான அரசியல் என்பது அனைவருக்கும் தெரியும். 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டால் காஷ்மிர் பிரிந்துவிடும் என்று பேசி உமர் தனது முகத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.

உண்மையில் 370 வதாவது பிரிவால் காஷ்மிருக்கு எந்தப்பலனும் இல்லை, மாறாக காஷ்மீரிகளை அது அன்னியப்படுத்தி அரசியல் தரகு வேலைகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. உண்மையில் காஷ்மிர் நமது ராணுவத்தின் தியாகத்தாலும் தேசத்தின் வலுவான நிலையாலும் மட்டுமே இந்தியாவுடன் இணைந்திருக்கிறது,  பலவீனமான தேசமாக இருந்திருப்பின் காஷ்மீர் அம் மக்களின் விருப்பம் இல்லமலேயே அம்மாநிலம் பிரிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கும். இன்றைய வாய்ப்பைப்பயன்படுத்தி காஷ்மிர் பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களைக்கொண்டு காங்கிரஸ், முப்தி, உமர் ஆகியோருக்கு மாற்றாக ஒரு தேசிய அரசியல் சக்தியை உருவாக்குவது  அவசியம். SDPI எனும் மதவாத கட்சியால் தமிழகத்தில் ஹிந்துகளை தீவிர உறுப்பினராக்கமுடியும் எனும்போது காஷ்மிரில் நம்மால் முடியாதா என்ன?

prime-minister-narendra-modi-on-his-first-day-in-office

தமிழகத்தைப்பொருத்தவகையில் தமிழக முதல்வர் மத்திய அரசுடன் நட்புறவைக் கடைபிடிப்பார் என்றே தோன்றுகிறது. இலங்கைதமிழர் பிரச்சினையில் நாம் மத்திய அரசுமீது ஏதேனும் செல்வாக்கு செலுத்தவேண்டும் என விரும்பினால், கூட்டணி கட்ச்சியினர் செய்யவேண்டியது  கூட இருந்தபடி குழப்பத்தை ஏற்படுத்தாமல் முறையாக நட்புரீதியில் மோதி அவர்களிடம் தொடர்புகொண்டு கருத்துக்களை தெரிவித்து காரியம் சாதிக்கவேண்டும். தேர்தல் கூட்டணிப்பேச்சுக்களின்போது பா.ஜ.கவை தவிக்கவிட்டது போன்று மலிவான தந்திரங்களில் ஈடுபடாமல் யதார்த்த நிலைமைகளைக் கணக்கில் கொண்டு கூட்டணிக்கட்சிகள் செயல்பட வேண்டும். அன்பு விசுவாசம் மற்றும் நற்பு ஆகியவற்றின் மூலம் மோதிமீது செல்வாக்கு செலுத்தி காரியம் சாதிக்கலாம், இதுவே தமிழர் நலன் பேணப்பட தமிழக கட்சிகள் செய்யவேண்டியது.

தமிழக பா.ஜ.க வுக்கு ஒரு வேண்டுகோள் – ராஜபச்சாவின் வருகையின்போது விமர்சனங்களுக்கு பயந்து same side goal போட்டது போல் செயல்பட வேண்டாம். மக்கள் கோபப்படுகின்றனர்,மக்களை சந்திப்பது நாங்கள்தானே, என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருக்காமல் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மக்களிடம் தைரியமாக, திறமையாக நிலவரங்களை எடுத்துக்கூறி பெரும்பான்மைக்கருத்தை உருவாக்குவதுதான் நம் வேலை, கூட்டத்தோடு கொவிந்தா போடுவதற்கும், ஆற்றோடு போவதற்குமல்ல கொள்கைப்பிடிப்புடைய அரசியல் என்பதை நாம் உணரவேண்டும். நமது நிலைமைக்கு யாராவது ஒருவரை குறைகூறிக்கொண்டிருந்து ஒருபயனும் இல்லை. பொறுப்பை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையும் செயல் திறனுமே நமது இன்றைய தேவை. 20 MP க்களையாவது நாம் அனுப்பியிருந்தால் கட்சியில், ஆட்சியில் நாம் செல்வாக்கு செலுத்தமுடியும், இலங்கை அரசு, இந்தியத் தமிழனைப்பார்த்து பயப்படும். தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடித்து என்னபயன். இனியாகிலும் நிலவரங்களை உணர்ந்து செயல்படவேண்டும், அதுதான் நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

7 Replies to “புதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்”

  1. திரு தீரன் அவர்களே! வணக்கம். (1) கச்சிதமான அமைச்சரவை (2) அமைச்சர்கள் யாரும் தங்கள் உறவினர்களுக்கு பதவி தரக்கூடாது (3) மோதி பதவி ஏற்ற உடன் செயலில் இறங்கிவிட்டார்.(4) திறமையான அதிகாரிகள் நியமனம். இவை எல்லாம் ஓகே சார். ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே டீசல் விலையேற்றம், ரயில் கட்டண ஏற்றம் என்று அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்கும் பிஜேபி க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? (இன்னும் 100 நாட்களுக்குள் என்னென்ன நடக்குமோ அது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்) பிஜேபி “நாங்கள் ஒரு ABLE & NOBLE அரசை கொடுப்போம்” என்றுதானே பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தது? வெறும் 50 காசுக்கு இப்படி ஒரு பிச்சைகாரன் போல வாதாடிகொண்டிருக்கிறானே என்று நீங்கள் கேவலமாக நினைக்கலாம். டீசல் விலையேற்றம் என்பது ஒரு Cascade effect கொண்டது. அதாவது இந்த விலையேற்றம் மற்ற மற்ற பொருட்களின் விலையேற்றத்திற்கு வித்திடும். அதனால் பாதிக்கபடுவது யார்? ஏழை மக்கள்தானே? காங்கிரஸ்காரன்தான் தனக்கு காது இல்லை கண் இல்லை என்று மக்கள் எந்த எதிர்பை தெரிவித்தாலும் ஜடமாக இருந்தான் . அதன் பலனை தேர்தலில் சந்தித்தான். அவன் பாணியிலேயே பிஜேபி யும் சென்றால் அப்புறம் அவனுக்கு நேர்ந்த கதிதானே உங்களுக்கும் (அதாவது பிஜேபி க்கு) வரும்? நானே நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிஜேபி நடத்திய ஒரு பொதுகூட்டத்தில் “”காங்கிரஸ் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை தாறுமாறாக தான்தோன்றிதனமாக தயவு தாட்சணியமின்றி மாதமிருமுறை ஏற்றுகிறது. ஏழைகளை பற்றி எண்ணிப்பார்க்காத அவர்களுக்கா உங்கள் வாக்கு? இதுபோல விண்ணைதொடும் விலைவாசியை மண்ணைதொடவேண்டுமானால் ஆட்டோ ஓட்டுனர்களே! இருசக்கர வாகன் ஓட்டிகளே! மகிழுந்து (=Car ) ஓட்டுனர்களே!உங்கள் பொன்னான வாக்குகளை தாமரை சின்னத்தில் அளியுங்கள்”” என்று பேசினேன். ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை?. அவன் விரலில் வைத்த மை கூட “முழுமையாக” அகலவில்லை. அதற்குள் நான் கூறிய வார்த்தை lie (=பொய்) ஆகி போனது. “நம்பினார் கெடுவதில்லை நமோ மந்திரம்” அது அத்தனை சிறப்பு வாய்ந்தது என்பார்கள். ஆனால் நமது NaMo வை நம்பி வாக்களித்த மக்களை நட்டாற்றில் விடுவது நியாயமா? இப்போது அப்படி என்ன நடந்துவிட்டது? இப்படி சும்மா ஒப்பாரி வைக்கிறான் இவன் என்று சிலர் நினைக்க கூடும். இனிமேலும் இப்படி (அதாவது விலையேற்றம் செய்து மக்கள் மனதில் ஒரு வெறுப்பு ஏற்படுவது) நடக்க கூடாது என்பதற்காக இவற்றை எழுதுகிறேன். வேறொன்றும் இல்லை.

  2. அதெல்லாம் இருக்கட்டும். பாஜக உருப்படனும்னா முதல்ல அந்த சுனா.சானா வை கழட்டி விடனும்… #மிடில

  3. மோடிக்கு சோதனை காலம் முந்தைய அரசு செய்த தவறுகளை களை எடுக்கவேண்டும் இது சாதாரண காரியம் இல்லை ஆளும் கட்சியில் இருக்கும் மந்திரியின் உறவினர் வேறு கட்சியில் இருப்பர் அவரும் ஊழல் செய்வா மந்திரி கண்டுகொள்ளமாட்டார் இதனை மோடி கவனத்தில் கொள்ளவேண்டும்

  4. பல நூற்றாண்டுகளாக கழுதைகளால் கட்டியம் கூறப்பட்ட காவிய நாடகமாய் கலங்கிய நாட்டின் அரசியல்நாயகி ,தன் தலைவனை கண்டு ,பொற்கால புராணங்களில் புழங்கிய பீடு குலையாமல் ,இக்கால நிதானத்திற்கு இறங்கி வருகிறாள் .

  5. பாஜக செய்த தவறு என்னவென்றால், “விலைவாசியை குறைப்போம், தமிழன் தொப்புள் கொடி உறவு” என கழகங்கள் பாணியில் உணர்ச்சி பொங்க பேசியது. நாம் என்னதான் இங்கு தொண்டை வலிக்க பிரச்சாரம் செய்தாலும் மக்கள் ஜெயிக்க வைத்தது கன்னியாகுமரியில் மட்டும் தான் (குறிப்பு 1: இங்கு நம்மவர் வெற்றி பெற்றதின் காரணம், தான் யாரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை வேற்று மதத்தார் வழக்கம்போல் சர்ச்சிலும், மசூதியிலும் தீர்மானித்து வாக்களித்ததால், சதியை உணர்ந்த இந்துக்களும் கன கச்சிதமாக ஒன்றுசேர்ந்து ஓட்டளித்தனர்). எதார்த்தத்தை பேசி இருக்கவேண்டும். அதாவது, “விலைவாசி உயர்வை தடுக்க முடியாது, ஆனால் மக்களின் வேலை வாய்ப்பை பெருக்கி, வாங்கும் சக்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். தமிழக மீனவர்கள் கடல் எல்லைகளை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்”. இவற்றை (அதாவது எதார்த்தத்தை பேசியவர்) சொன்ன ஒரே நபர் சுப்ரமணிய சுவாமி. அவரை தமிழ் விரோதி என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார வைத்துவிட்டோம். அப்புறம், முக்கியமாக, கழகங்கள் மதுவை கொடுத்து இன்றைய வாலிபர்களை சிந்திக்கவிடாமல் ஆக்கிவிட்டனர். நாம் செய்ய வேண்டியது, ஊருக்கு ஊர் சங்கம் தந்த அரு மருந்தாம் ஷாகவை ஆரம்பிக்கவேண்டும். அது பொன் ராதாக்ருஷ்ணன் என்றாலும் சரி, சி. பி. ராதாக்ருஷ்ணன் என்றாலும் சரி காக்கி நிக்கர் போட்டு ஊருக்கு ஊர் ஷாகா ஆரம்பித்து நமது இளைய தலைமுறைக்கு தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் வளர்க்க அர்ப்பணிப்பு உணர்வோடு தயார் ஆக வேண்டும். மாறாக, தேர்தல் சமயத்தில் மட்டும், வலம் வருவதும் அன்றாடம் தொலைகாட்சியில் பேசுவதும் மட்டும் போதாது. ஏனெனில், நல்ல விஷயங்களை மக்கள் ஏற்றுகொள்வதற்கு கடுமையான முயற்சிகள் வேண்டும். அந்த முயற்சியினை நாம் ஒவ்வொருவரும் எடுத்துதான் ஆகவேண்டும். அப்படி முயற்ச்சி நம்மில் இருந்து ஆரம்பித்தால் மட்டுமே, தமிழகமும் தேசிய நீரோட்டத்தில் இரண்டற கலரும். நமது சந்ததிகளை இனியும் பாழ்படுத்தவேண்டாம். ஷாகா என்ற அமுதை அருந்தி, அதனை கடின முயற்சியால் சிலபெருக்காவது எடுத்து சொன்னவன், அவர்களிடம் மாற்றங்களை கண்கூட கண்டவன் என்ற முறையில் அடக்கத்துடன் இதனை பகிர்கின்றேன்.

  6. உயர் கல்வி அமைச்சகப் பொறுப்பை வைத்திருக்கும் அமைச்சரை செயல் திறனை வைத்து மட்டும் எடை போட வேண்டும் என்பது பொறுப்பற்ற வாதம். செயல் திறனிற்கு கல்வி ஒரு தேவை இல்லையெனில், அந்த அமைச்சகத்தின் தேவையே கேள்விக்குறியாகிறது. இந்த திறமையாளரை வேறு துறைகளில் பயன்படுத்தமுடியாதா?
    கபில் சிபல் நுழைவு தேர்வுகளில் செய்த சிக்கல்கள் ஏராளம். ஏப்ரல் 6 ல் நடைபெற்ற தேர்விற்கு இன்னும் முடிவு வரவில்லை. CBSE சமிபத்திய பாய்ச்சல் கவலை அளிக்கிறது. CLAT தேர்வில் முறைகேடு. இவற்றையெல்லாம் இவர் சரி செய்வாரா? எனக்கு ஐயமாக இருக்கிறது.
    கபில் சிபல் கொண்டு வந்த மோசடி மாறுதல்களை முதலில் ஏற்றது மோடியின் குஜராத் அரசு என்பதையும் இங்கு நினைவு கூர்கிறேன்.
    RTE தொடர தேர்தல் வாக்குறுதியில் பாஜக உறுதியளித்தது. அதனுடைய அபத்தங்களை களையவே தனித் திறமை வேண்டும். திறமையான ஆசிரியர்களை உருவாக்குவதாகவும் ஒரு உறுதி. செயல் திட்டம் என்னவோ?
    இது மோடியின் முதல் சறுக்கலா?
    ஆறு மாதத்தில் விடை தெரியும்!!

  7. ஆறு மாதம் தேவையில்லை என்றே எண்ணுகிறேன். புதிதாக ஆறு தொழிநுட்பக் கல்லூரி துவக்குகிறாராம். பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பவையே திணறுகின்றன. சென்ற கல்வி ஆண்டு துவக்கத்திற்கு முன் வந்த செய்தி
    https://timesofindia.indiatimes.com/india/43-of-teaching-slots-in-IITs-lying-unfilled/articleshow/19282777.cms

    பெருவாரி ஆதரவை மட்டும் குறி வைத்து அரசு முயற்சிகள் அமையுமேயானால் காங்கிரஸ் மீட்டு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *