தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்

டிக்கடி பிள்ளைப்பேறு, அன்னையின் உடல்நலத்துக்குக் கேடு” என்ற விளம்பர வாசகத்தைக் கேள்விப்பட்டிருக்கலாம். அதுபோலவே, அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்வது அரசின் நிர்வாகத்துக்குக் கேடாக முடியும். தமிழக அமைச்சரவை எட்டாவது முறையாக (அக். 5 நிலவரம்) மாற்றி அமைக்கப்பட்டிருப்பது, அரசின் நிர்வாகம் எந்த அளவுக்குக் குலைந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு மூன்றாவது முறையாக மே 16, 2011-இல் பதவியேற்றது. அதில் 34 பேர் அமைச்சர்களாக இடம் பெற்றார்கள். அதில் இதுவரை 15 பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் விபத்தில் காலமான மரியம் பிச்சை, உடல்நலக்குறைவால் இறந்த ஜி.கருப்புசாமி ஆகியோரைத் தவிர்த்து, மீதமுள்ள 13 பேரும் முதல்வரின் அதிருப்தி காரணமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். பதவி இழந்தவர்களில் சிவபதிக்கு மட்டுமே மீண்டும் அமைச்சராகும் அதிர்ஷ்டம் வாய்த்தது. இதுவரை அதிமுக அமைச்சரவையில் அமைச்சர் பதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 100 பேர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக- அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்த அமைச்சர்ப்பதவி பறிப்பு, இலாகா மாற்றம், பதவி விலகல் போன்ற அனைத்துக்கும் காரணமாகக் கூறப்படுவது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர்கள் குறித்து சென்ற தகவல்கள் மோசமாக இருந்ததுதான் என்கிறார்கள். இதுதான் கவலை அளிக்கும் விஷயம். அமைச்சர்களின் மோசமான செயல்பாட்டுக்காக முதல்வர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைதானே இது என்று இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை; பாராட்டவும் முடியவில்லை. ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் 15 அமைச்சர்களை மாற்றுவதென்பது, ஒட்டுமொத்த அமைச்சரவையின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகவே உள்ளது என்பதை ஜெயலலிதா ஏன் உணராமல் உள்ளார் என்பதுதான் புரியவில்லை.

இந்த அரசில் உள்ள எந்த அமைச்சருமே நிம்மதியாக இல்லை; அதிமுக அரசின் எந்த ஒரு அமைச்சரும் சுய விருப்பப்படியோ, தன்னிச்சையாகவோ, தானாக முடிவெடுத்தோ செயல்பட முடியாத நிர்பந்தத்தை இந்த அமைச்சரவை மாற்றங்கள் உருவாக்கியுள்ளன. ‘அம்மாவுக்குப் பிடிக்காதோ?!’ என்ற அச்சத்திலேயே காலம் கடத்துபவர்களிடம் நல்ல நிர்வாகத்தை எதிர்பார்க்க இயலாது. இதன் காரணமாக, அமைச்சருக்கு கீழுள்ள அதிகாரிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. பதவியில் இருக்கும் காலத்திற்குள் ஏதாவது பயனடைந்துவிட வேண்டும் என்ற சிந்தனையும் அமைச்சர்கள் மத்தியில் உலா வரத் துவங்கிவிட்டது. இதன் காரணமாக, என்ன நோக்கத்திற்காக அமைச்சர்களை முதல்வர் மாற்றினாலும், அதன் பயன் எதிர்விளைவாகவே மாறிவிடுகிறது.   தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உளவுத்துறை மூலம் தகவல்களை முதல்வர் கவனத்துக்கு அவரது தனிப்பிரிவு அதிகாரிகள் கொண்டு செல்கிறார்கள். அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அமைச்சர்களை முதல்வர் கண்டிக்கிறார். கண்டித்தும் திருந்தாத போதுதான் அமைச்சரை மாற்றுகிறார் முதல்வர் என்று ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை சில பத்திரிகைகள் நியாயப்படுத்துகின்றன.

ஆனால், இதையே பயன்படுத்தி உளவுத்துறைக்கு அமைச்சர்கள் குறித்த தவறான தகவல்களை போட்டியாளர்கள் தருவதாகவும் தகவல்கள் உண்டு. அதனால், காவல்துறையைக் கண்டு எம்எல்ஏ-க்களே அஞ்சும் நிலை ஏற்படுகிறது. இதனால் தான் அதிமுக ஆட்சியில் காவல்துறை கட்டுப்பாடின்றி செயல்படுவதாகவும் புகார் உண்டு (முந்தைய திமுக ஆட்சியில் இந்நிலைமை தலைகீழாக இருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஆபத்தான தகவல்).

உதாரணமாக, கோவையில் பதவி பறிக்கப்பட்ட வேலுமணி குறித்து கோவையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவர்தான் போட்டுக் கொடுத்தாராம். ஈரோடு மாவட்டத்தின் தனிக்காட்டு ராஜாவாக இருந்த செங்கோட்டையனின் வருவாய்த்துறை அமைச்சர் பதவியும் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட, ஈரோடு ரத்தத்தின் ரத்தமே காரணம் என்கிறார்கள். அண்மையில் சட்டசபை சபாநாயகராக இருந்த ஜெயகுமாரின் பதவி பறிக்கப்பட்டதிலும் கூட உள்கட்சி அரசியலே காரணமாக இருந்துள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சர்கள் குறித்தும், மக்கள் பிரதிநிதிகள் குறித்தும் கட்சிக்காரர்கள் புகார் மனுக்களை எழுதுவது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது- அதிமுகவில்.   இவ்வாறு அடிக்கடி பதவிகள் மாறுவதால், எந்த ஒரு அமைச்சருமே வெளியுலகில் புன்னகையுடன் பேசவோ புழங்கவோ முடிவதில்லை. அதிமுகவில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலோர் ஒருவித இறுக்கத்துடன்தான் காட்சி தருகிறார்கள். அனைவருக்குமே தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பது தெளிவாகவே தெரிந்திருக்கிறது. நித்ய கண்டம் என்ற முறையில் இருக்கும் இவர்களிடம் ஆக்கபூர்வமான, வேகமான செயல்பாட்டை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

நமது அரசியல் சாசனத்தைப் பொருத்த மட்டிலும், அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பாகும். மாநில அரசை நிர்வகிக்க, பல்வேறு துறைகளை பகிர்ந்துகொண்டு நிர்வகிப்பதே இதன் பொருள். மக்களாட்சி முறையில் மக்களே எஜமானர்கள் என்பதன் அடையாளமாகவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் சார்பாக அரசு நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து அரசின் தலைமையையும் தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்பட்டால், அரசு நிர்வாகம் தடங்கலின்றி நடக்கும். இதுவே அமைச்சரவையின் தாத்பரியம். தமிழகத்திலோ, நாடாறு மாதம், காடாறு மதம் கதையாக அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படுவதால், இந்தக் கோட்பாடே சின்னாபின்னமாகிறது.

கடைசியாக (அக். 5 நிலவரம்) சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. பதவி இழந்த பிரமுகர் ஒருவர் தனது தொகுதியில் எவ்வாறு சங்கடத்துடன் நடமாட வேண்டியிருக்கும் என்பதை சற்றே நினைத்துப் பார்த்தால் தெரியும், இதன் கொடுமை. பதவியில் இருப்பவர்களை விட பதவியில் இல்லாதவர்களே நிம்மதியாக இருக்க முடியும் என்ற சூழல் தமிழகத்தில் மட்டுமே உள்ள அவலம். இங்கு எல்லாமே ‘அம்மா’ வைத்த சட்டம்தான். அம்மாவுக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் கட்சியையே கந்தலாக்கியவர்கள். சண்முகத்துக்குப் பதிலாக அமைச்சராகி உள்ள மோகன் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிப்பார் என்று பந்தயம் கட்டும் அளவுக்கு தமிழக அரசியல் இருப்பது வேதனைக்குரியது அல்லவா?

இவ்வாறு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவது முதல்வர் மீதான மதிப்பையும் குலைக்கிறது. அவரை மீறி ஊழலில் திளைக்கக் கட்சிக்காரர்களால் இயலுவதையே பறைசாற்றுகிறது இந்நிகழ்வுகள். தவிர, முதல்வரின் ஜாதகப்படி கட்சிக்காரர் ஒருவர் அவரது இடத்தைப் பிடித்துவிட வாய்ப்புள்ளதாக பரப்பப்படும் வதந்தி அவரது மதிப்பை குறைக்கிறது. தனக்குப் போட்டியாக கட்சிக்குள் யாரும் உருவாவதைத் தடுக்கவே இவ்வாறு அடிக்கடி அமைச்சர்களை ஜெயலலிதா பந்தாடுவதாக பொதுவான ஒரு கருத்து நிலவி வருவது, அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை.

காமராஜர் முதல்வராக இருந்தபோது இருந்த அமைச்சரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 மட்டுமே. அதில் இருந்த எம்.பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், ஏ.பி.செட்டி, எம்.ஏ.மாணிக்கவேலு நாயக்கர், ராஜா ஸ்ரீ சண்முக ராஜேஸ்வர சேதுபதி, பி.பரமேஸ்வரன், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகியோர் அனைவருமே முதல்வராக இருந்த காமராஜருக்கு நிகரான ஆளுமைகள். அதில் பலர் காமராஜரின் போட்டியாளர்கள். தனக்கு நிகரான அமைச்சர்களை அதுவும் குறைவான எண்ணிக்கையில் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்திய காமராஜர் காலத்தில் நிகழ்த்திய சாதனைகளில் ஒரு பங்கையேனும் தற்போதைய அரசுகளால் ஏன் நிகழ்த்த முடியவில்லை? கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ஏனெனில், காமராஜர் அமைச்சரவையில் அரசியல் நடத்தவில்லை. நாட்டு நலனுக்காக, தன்னை எதிர்த்தவர்களுக்கும் பதவி அளித்து அமைச்சரவையின் செயல்பாட்டை சுமுகமாக்கினார் அவர். இதுதான் மக்களாட்சியின் சிறப்பு. ஆனால் தமிழகத்தில் இப்போது நடப்பது என்ன?

அதிமுக ஆட்சியில் அனைவருமே பதவி பெறலாம். கீழ்நிலையில் உள்ளவரும் கூட ஒரே நாளில் கட்சியில் பிரமுகராகலாம் என்று அக்கட்சியினர் பெருமிதத்துடன் கூறுவதுண்டு. உண்மைதான். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் திமுக தலைவருடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதா சிறப்பானவரே. ஆனால், ஜனநாயகம் என்பது பதவிகளைப் பங்கிடுவதல்ல. ஜனநாயகம் என்பது எதிர்க்கருத்துகளுக்கும் இடமளிப்பது. அதையே காமராஜர் செய்தார். இன்றும், காமராஜர் ஆட்சி என்பது ஒரு கனவுச்சொல்லாக தமிழகத்தில் நிலைபெற்றிருப்பது அதனால்தான். இதை ஜெயலலிதா எப்போது உணரப்போகிறார்?

ஆட்சியின் தலைவர் என்ற முறையில், அமைச்சர்கள் மீதான புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், அமைச்சர்களைக் கட்டுப்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரிமை உண்டு. ஆயினும், எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகி விடும் என்பதை முதல்வர் மறந்துவிடக் கூடாது. இதேநிலை தொடர்ந்தால், எதற்கெடுத்தாலும் சுற்றுமுற்றும் பார்த்தபடி விழிப்பவர்களை ”என்னய்யா, தமிழ்நாட்டில் அமைச்சர் பதவி கிடைத்தவன் போல முழிக்கிறே” என்று மக்கள் நகைக்கும் காலம் வந்துவிடும்.

8 Replies to “தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்”

 1. Please tell us the truth. Do you accept that murders and robberies are reduced when compare to DMK government?

  Instead of concentrating only in arresting Ex-DMK ministers, JJ should give bit of concentration in controlling Dengu fever and power cuts.
  But unfortunately media like you did’t even give importance to Dengu and power cuts… shame…

 2. நன்றி. இது போலக் கட்டுரைகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு செல்ல வேண்டும். மட்டுமல்லாது மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளன. இதை தனி ஒருவராக தானே தீர்த்து விட முடியாது. நீங்கள் சொல்வது போல அமைச்சர்களின் சிறப்பான செயல்பாடு மிக முக்கியம். தன் அமைச்சர் பதவி நீடிக்காது, என்று தெரிந்தால் எவருமே செயல் படத் தயங்குவார்கள்.
  இன்னும் மின்சாரம் முழுவதாகத் தர முடியவில்லை, ஆனால் திருட்டும் கொள்ளைகளும் தொடர்கின்றனவே?.
  வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மக்கள் நலன்களிலும் கவனம் சரியான படி செலுத்த வேண்டியது ஜெயலலிதாவின் முதல் கடமையாகும்.
  நன்றி. வாழ்க பாரதம்.

 3. கடந்த சட்டசபை தேர்தல் நேரம்…..தமிழகம் முழுக்க தி.மு.கவுக்கு எதிரான அலை வீசிக்கொண்டிருந்தது……….[ நானும் பார்ப்பவர்களிடமெல்லாம் திமுகவுக்கு எதிரான கடும் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தேன் ] திருப்பூரை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவரை சந்தித்தேன்…..அவர் தொழில் நலனை பொறுத்தவரை திமுகவே மேல் என்று குறிப்பிட்டார்……காரணம் , திமுக ஆட்சியில் மந்திரிகள் சுயமாக முடிவெடுப்பார்கள்……நல்லதோ , கெட்டதோ பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்கும் …ஆனால் அதிமுக வில் மந்திரிகள் எல்லாம் டம்மி பீஸ்கள் , எல்லா முடிவும் ஜெ வே எடுப்பார்…..தொழில் சம்பந்தமான ஒரு விஷயத்தை அவரது கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்குள் தாவு தீர்ந்து விடும் என்றார்……
  அந்த நிலையில் நான் அவரது கருத்தை ஏற்காமல் மறுத்தேன்…..ஆனால் அவரது கருத்து எவ்வளவு தூரம் உண்மை என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்…..

  தற்போது திருப்பூரில் உள்ள மந்திரியை அவரது துறை செயலாளரே மதிப்பதில்லை என்பது பொது அறிவு……

  மின்வெட்டு பிரச்சினை தமிழகத்தை வாட்டி எடுக்கிறது……இரண்டு வருடமாகப்போகிறது……அதற்கு ஒரு தீர்வும் காணோம்…….இதே நிலை நீடித்தால் தொழிலாளர்களும் , விவசாயிகளும் எலிக்கறி தின்னும் நிலைக்கு ஆளாகிவிடுவார்கள் ……..ஜெ. அதை பற்றி கவலைப்படாமல் உள்ளே , வெளியே விளையாடிக்கொண்டிருக்கிறார்…..

  உண்மை என்னவென்றால் , தற்போது சபையில் உள்ள அதிமுக உறுப்பினர்களில் திறமையானவர்கள் வெகு சொற்பம்…….சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?….ஓரளவு திறமை , மற்றும் அனுபவம் உள்ள பொள்ளாச்சி ஜெயராமன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், போன்றோருக்கும் நிரந்தரமான பொறுப்பை கொடுப்பதில்லை……பிறகு எப்படி நிர்வாகம் நடக்கும்?

  சாதாரணமாக ஒரு ஆட்சி, தனது கடைசிக்காலத்தில்தான் அதிருப்தியை சம்பாதிக்கும்…….ஜெ ..” புரட்சித்தலைவி ” அல்லவா?அதனால்தான் ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகிவிட்டார்……இதுதான் ” நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை ” போலும்…………

 4. ஜெயலலிதாவின் ஆளுமைத் திறன் என்பது மந்திரிகளை பந்தாடுவதில்தான் வெளிபடுகிறது. என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மின்வெட்டு பிரச்னை ஒன்றே போதும் அவரது ஆட்சித் திறன் எவ்வளவு என்று காட்டுகிறது.கூடங்குளம் பிரச்னையில் அவர் ஏன் எந்தமுடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார் என்று தெரியவில்லை. உதயகுமார் போன்ற “தலைவர்கள்”சிறுபான்மை கிறிஸ்தவர்களின் ஆதரவில் ஆடுகிற ஆட்டத்தை ஜெ கண்டுகொள்ளாமல் இருப்பதில் இருந்தே அவரும் ஒரு சாதாரண அரசியல் வியாபாரி தான் என்று தெரிகிறது. அவரை பாரத பிரதமராக சித்தரித்து பேனர்கள் பல இடங்களில் அ திமுக வினரால் வைக்கப்பட்டுள்ளன. நகைச்சுவைக்கும் ஓரளவு உண்டு. ஜெ ஒன்றும் நரேந்திர மோடி அல்ல என்பதை அவரது கட்சிக்காரர்கள் புரிந்துகொண்டு தமிழகத்தை நல்முறையில் ஆட்சி செய்ய முன்வந்தாலே போதும்,

 5. ற்போதைய அ.தி.மு.க. அரசில் அதிரடியாக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள், இவற்றால் நிர்வாகத்தின் வேகம் தடைப்படுகிறது எனும் கருத்து பேசப்படுவது உண்மைதான். ஆனால் அ.தி.மு.க. எனும் கட்சி தலைமைக்குக் கட்டுப்பட்ட கட்டுக்கோப்பான கட்சி. குற்றச்சாட்டுகளின் நிழல் யார் மீது படுவதாகத் தலைமைக்குத் தகவல் போகிறதோ, அப்படிப்பட்டவர்கள் மாற்றப் படுகிறார்கள் அல்லது நிர்வாகத் திறமையைக் கருத்தில் கொண்டும் அவை நடக்கின்றன. அப்படி தலைமை கட்சியையும், ஆட்சியையும் தனது இரும்புப் பிடியில் வைத்துக் கொண்டு கவனமாகப் பார்த்துக் கொண்டிராவிட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம். தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆகிவிடுவான். ஆளாளுக்கு நாட்டாமை என அனுமதித்து விட்டால், தலைமை அயர்ந்திருக்கும் சமயம், இனி நான் தான் தலைவர் என்று கூட பிரகடப்படுத்தப் படலாம். ஜனநாயகம் நிலவ வேண்டும் உண்மைதான், அதற்காக எல்லா கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்து விட்டால், விளைவு விபரீதம்தான். ஆகையால் தலைமைக்கு மக்கள் நலனில் உண்மையான அக்கறையும், நாட்டு முன்னேற்றத்தில் உண்மையான ஈடுபாடும் இருக்கும் வரை இப்படிப்பட்ட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதில் மக்களுக்கு எந்த இழப்பும் இல்லை. கம்யூனிஸ்டுகள் சொல்லும் “உழைப்பாளிகளின் எதேச்சாதிகாரம்” என்பது அவர்களது குறிக்கோள். ஓரளவு அது நேர்மையாக நடந்து கொள்பவர்கள் கையில் இருந்தால் பலன் நிச்சயம் உண்டு. ஆனால் நிர்வகிப்பவர்கள் சுயநல எதேச்சாதிகாரிகளாகப் போய்விட்டால் விபரீதம் தான். சீனா கட்டுக்கோப்பான சர்வாதிகாரத்தால்தான் மின்னல்வேகப் பாய்ச்சலில் முன்னேற முடிந்தது. ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாக ஆகக்கூடாதே தவிர, இரும்புப் பிடியில் நேர்மையைக் கடைப்பிடிக்கும் ஜனநாயகம் வரவேற்கத் தக்கதே.

 6. திரு.கோபாலன்,

  நீங்கள் கட்சியையும் ஆட்சியையும் குழப்பிக்கொள்கிறீர்களோ என்று தோன்றுகிறது. கட்சியில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பந்தாடிக்கொள்ளட்டும், அது கட்சித்தலைவர் என்ற முறையில் அவரது உரிமை; கட்சிக்காரர்கள் பிரச்சினை. ஆனால் ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இப்படி அடிக்கடி கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தால் “வெளங்கிடும்”.

  “ஆளாளுக்கு நாட்டாமை” என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் உண்மை. நடைமுறையில் அது சாத்தியமில்லை. காரணம் தமிழகத்தில் நடப்பது கொள்கை அரசியலல்ல, தனி நபர் சார்ந்த அரசியல். அ.தி.மு.க என்றாலே அது ஜெ-தான். தி.மு.க என்றாலே அது க.தான். அவர்களை தாண்டி வெளியே வந்தோ கட்சிக்குள்ளே கலக்கம் செய்தோ எவரும் எதுவும் செய்ய இயலாது. வேண்டுமானால் சிறு சலசலப்பை எற்படுத்திப்பார்க்கலாம். கட்சிக்கட்டுப்பாடு தொடர்பாக ஜெ. அஞ்சும் (அல்லது அஞ்ச வேண்டிய) ஒரே நபர் சசி ஒருவர்தான். அது ஏன் என்பது இன்னும் விளங்காத மர்மம் 🙂 எனவே பதவி எற்கும்போதே கண்டிப்பான உத்தரவுகளோடு அமைச்சரவை-யை தந்தால் அதை மீற எந்த அ.தி.மு.க அமைச்சருக்கும் துணிவு வராது.

  அப்படி “ஆளாளுக்கு நாட்டாமை, தடி எடுத்தவன் தண்டல்காரன்” என்று எத்தனை பேர் அ.தி.மு.க-வுக்கோ அரசுக்கோ ஆபத்து ஏற்படுத்தி விட்டார்கள் என்றுதான் கூறுங்களேன்.

  ஜெ.வுக்கு insecurity மனோநிலை வந்துவிட்டதோ என்று ஐயுறத்தோன்றுகிறது.

 7. People expected a lot from JJ, but she has disappointed them. She hiked the bus fares immediatley after winning the local council elections. The way she handled the koodankulam protest left a lot to be desired.

  Murders & dacoity are increasing day by day. Regarding power cut, she should have taken steps as soon as she came to power.

  Ministers have been removed even within a month of they occupying the post.

  The Chennai mayor is hardly seen in public. The local councillors do not interact at all with the people in spite of JJ warning them severely.

  Unless JJ take some urgent steps, her party will suffer greatly in the coming parliament polls. More importantly, the people of Tamilnadu will be put to greater hardship.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *