விவாத களத்தில் கவர்னர் பதவி

சில மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் மாற்றப்படலாம்; அந்த இடங்களில் பாஜக மூத்த தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்ற ஹேஸ்யங்கள் ஊடகங்களில் உலவிவரும் சூழலில்,  அதுகுறித்து விவாதத்தைத் துவக்குகிறார் இக்கட்டுரை ஆசிரியர்.

.

இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசின் சிபாரிசின் பேரில் குடியரசுத் தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும் நபரே கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக கவர்னர் என்பார் சமூகத்தில் கெளரவமான அந்தஸ்து உடையவராகவும், அரசியல் அறிவும் அனுபவமும் பெற்றவராகவும், ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த நிபுணத்துவம் உடையவராகவும், பாரபட்சமின்றி மாநில அரசு நிர்வாகம் செயல்படுவதைக் கண்காணித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரு நல்லெண்ண தூதராகவும் இருக்க வேண்டும்.

ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்தில் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.   தேர்தலில் தோற்றவர்களுக்கும்,  வேறு எந்தப் பதவியிலும் இல்லாத காங்கிரஸ்காரர்களை சமாதானப்படுத்துவதற்காகவும், கவர்னர்களாக நியமிக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்ததன் மூலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் தங்கள் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ளும் முறையை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. இப்படி நியமனம் ஆன பல கவர்னர்கள் மாநில அரசின் மனக்கசப்புக்கும்,  கோபத்துக்கும் ஆளானதுண்டு.

எடியூரப்பாவுக்கு குடைச்சல் கொடுத்த கர்நாடக ஆளுனர் பரத்வாஜ்
எடியூரப்பாவுக்கு குடைச்சல் கொடுத்த கர்நாடக ஆளுனர் பரத்வாஜ்

ஒருசில கவர்னர்கள் தாங்கள் மாநில அரசுக்கு ஒட்டுமொத்தமான எஜமானர் எனும் எண்ணத்தில் அந்த முதலமைச்சருக்குப் பல தலைவலிகளைக் கொடுத்திருக்கின்றனர். இப்போது கர்நாடகத்தில் இருக்கும் கவர்னர் பரத்வாஜ் அந்த மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. அரசு உருவானபோது, இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களைச் சொல்லி பெரியண்ணன் வேலையைச் செய்து வந்தார். இவர்கள் ஒரு கட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியினர் மீதிருந்த கசப்பு, எரிச்சல், பொறாமை அத்தனையையும் கொட்டித் தீர்க்கத் தங்கள் புதுப் பதவியை உபயோகித்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன்னர் மேற்கு வங்கத்திலும் ஒரு கவர்னர் அங்கிருந்த அப்போதைய அரசுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்து வந்த பழைய வரலாறும் இருக்கிறது.

கவர்னர்கள் அரசியல் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவராக இல்லாமல், பொதுவான, கெளரவமான மனிதர்களாக இருந்தால் அந்தப் பதவிக்கும் அழகு, அதனை அலங்கரிப்பவர்களுக்கும் அழகு. தில்லியில் சமீபத்திய தேர்தலில் கட்சிக்கும் தனக்கும் ஒருங்கே தோல்வியைச் சந்தித்த ஷீலா தீட்சித் கேரளாவுக்கு கவர்னராக அனுப்பப் பட்டார். 1977-இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றதும், பதவிக்கு வந்த ஜனதா அரசு அத்தனை கவர்னர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதிய கவர்னர்களை நியமித்தது. 1980-இல் இந்திரா மீண்டும் பதவிக்கு வந்தபின் மறுபடி மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்படி கால்பந்து போல பந்தாடப்படும் பதவியா கவர்னர் பதவி?

தமிழக ஆளுனராக இருந்தபோது சர்ச்சகளில் சிக்கிய சென்னா ரெட்டி
தமிழக ஆளுனராக இருந்தபோது சர்ச்சைகளில் சிக்கிய சென்னா ரெட்டி

தமிழ்நாட்டில் சென்னா ரெட்டி கவர்னராக இருந்த போது இங்கிருந்த மாநில அரசுடன் மோதல் போக்கைத் தான் கையாண்டார். அப்போதைய ஆளும் கட்சியும் அவருடன் மோதலைத் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அந்த கவர்னர் மீது சில (விபரீதமான) புகார்களைக் கூட மாநில அரசு கூறியது. சில வேண்டத்தகாத நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. இவற்றுக்கெல்லாம் காரணம் கவர்னர்கள் மத்தியில் ஆளும் கட்சி தான் தங்களுக்கு எஜமானர்கள் போலவும், மாநிலங்களில் ஆளும் (எதிர்) கட்சிகள் எதிரிகள் போலவும் அவர்கள் நினைத்துக் கொண்டது தான்.

சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் பலரும் பிரச்னைகளுக்கு உட்பட்டவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள். குஜராத்தில் கவர்னராக இருக்கும் பெண்மணி அங்கு ஆட்சிபுரிந்த மோடிக்கு எதிரான போக்கைக் கையாண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், முதலமைச்சரையும் காட்டிலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தாங்கள் பெரியவர்கள் எனும் எண்ணம் இருந்தது.

கர்நாடக கவர்னரைப் பற்றித் தான் இதற்கு முன்னரே பார்த்தோம், அவர் எடியூரப்பாவை வீட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். அதேசமயம்,  ஆந்திராவில் காங்கிரஸ் தலைவராக இருந்து தமிழகத்துக்கு கவர்னராக வந்தவர் இப்போதைய கவர்னர். அவர் இடத்துக்குத் தக்கவாறு தன்னை அனுசரித்துக்கொண்டு போகத் தொடங்கியதால், பிரச்னை எதுவும் வராமல் போயிற்று.

மோடியுடன் மோதிய குஜராத் ஆளுனர் கமலா பேனிவால்
மோடியுடன் மோதிய குஜராத் ஆளுனர் கமலா பேனிவால்

இந்தச் சூழ்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று,  ஆட்சி மாறும்போது கவர்னர்களை நீக்கும் பழக்கத்துக்கு எதிராக அமைந்தது. ஆனால் அப்படி ஏன் நீக்கும்படி ஆகிறது என்பதை ஆழமாகக் கவனிக்கும்போது, சில கவர்னர்கள் நடந்து கொண்ட முறைகளுக்கேற்ப அவர்கள் மாற்ற வேண்டியவர்களே என்பது புரியும்.

மேலும் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் தாமாகவே முன்வந்து, தங்கள் நியமனம் அரசியல் கட்சி சார்ந்து அமைந்திருப்பதால், தாங்கள் ராஜிநாமா செய்வது தான் முறை என்பதை உணர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழக்கத்தை இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது ஏற்று எந்த கவர்னரும் பதவி விலக முன்வரவில்லை- கர்நாடகத்தின் பாரத்வாஜ் உட்பட.

அவர்களுக்குத் தெரியாதா, தங்கள் நியமனம் முந்தைய ஆட்சியின் அரசியல் காரணமாக நடந்தது என்று? அவர்களே முன்வந்து பதவி விலகினல் அது கெளரவமாக இருக்கும். புதிய அரசு தங்களை பதவி நீக்கம் செய்யும் வரை காத்திருப்பது மூன்றாம்தர அரசியல்வாதிகளின் நடைமுறை போல இருப்பது அவர்களுக்குத் தெரியாதோ,  தெரியவில்லை.

யாருக்கும் சிக்கல் அளிக்காத தமிழக ஆளுனர் ரோசையா
யாருக்கும் சிக்கல் அளிக்காத தமிழக ஆளுனர் ரோசையா

இப்போது மத்தியில் பா.ஜ.க.ஆட்சி ஏற்பட்டதும், முந்தைய ஆட்சியில் நியமனமான கவர்னர்கள் பதவி விலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்போது மத்திய அரசு பழைய கவர்னர்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய ஆட்சியில் பதவி கிடைக்காதவர்களை, கட்சியில் மூத்தவர்களை கவர்னர்களாக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்படி நடந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, எதிர்பார்த்த ஒன்று தான் என்பது விளங்கும். இந்த வகையில் திரு முரளி மனோகர் ஜோஷி, மகாராஷ்டிர கவர்னராக நியமிக்கப்படலாம் என்பது தெரிகிறது. அப்படி புதிய கவர்னர்கள் நியமனம் ஆகும்போது தமிழ்நாட்டிலிருந்தும் யாராவது பெரிய தலைவர் கவர்னராக நியமித்தால் அது தமிழகத்துக்குச் செய்த மரியாதையாக இருக்கும்.

நீண்ட நெடும் நாட்களாக உழைத்து வரும் இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றவர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க. ராஜ்ய சபாவில் பா.ஜ.க.அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் துணை சபாநாயகர் பதவியோடு ஒரு கவர்னர் பதவி கூட அந்தக் கட்சிக்குக் கிடைக்கலாம். அப்படி நடந்தால் அந்தப் பதவி யாருக்குப் போகும் என்பது அவரவருடைய ஹேஷ்யத்துக்கு விட்டுவிடலாம்.

என்னைக் கேட்டால் அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கவர்னர் பதவிக்கு ஏற்றவராக இருப்பார் என்று என் விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்.

என்ன நடக்குமோ பார்க்கலாம்.

 .

11 Replies to “விவாத களத்தில் கவர்னர் பதவி”

 1. Banruti ramachandran he is betrayer.its a wrong move if BJP had tie up with ADMK,those who are having really patriotic those people can not support BJP’S move.

 2. While PResident mukerjee continue to serve so also, Governors who are non controversial, may not be removed,unless, they have been appointed on political accomdation and reason by the congress.

 3. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லாத விஷயங்கள் என்றார் அண்ணா. மாநில கவர்னரை மாநிலத்தின் உயர்நீதிமன்றமே நியமிக்கும் விதத்தில் அரசியல் சட்டத்தினை திருத்த வேண்டும்.

 4. சிறந்த பார்லிமெண்டரியன் செழியன் ??

 5. கவர்னர் பதவி என்பது வேண்டாத மாநில அரசுகளுக்கு எதிராக வைக்கப்பட்ட
  ‘செக் மேட்’தான்.காங்கிரஸ் செய்துவந்த இந்த அலங்கோலத்தை நமோ மாற்றி கவுரமானவர்களுக்கு இந்தக் கவுரப் பதவியைத் தரலாம்.

  ஜனாதிபதி பதவியையே காங்கிரஸ் தலைவி வீட்டில் “ஹோஸ்டெஸ்” வேலை பார்த்த பெண்மணிக்குத் தரவில்லையா?இந்தக் கலாச்சாரத்தையெல்லாம் மாற்றவே நமோவுக்கு மககள் வாய்ப்புத் தந்து இருக்கின்றனர்.

  கட்டுரையாளரின் ஆலோசனை சரிதான். குருமூர்த்தி, சோ கூட நல்ல சாய்ஸ்தான்.

  குருமூர்த்தியை நமோ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம். அவருக்கு ஒரு
  அரசியல் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.இது என் ஆலோசனை.

 6. ரொமேஷ் பண்டாரி போன்ற கவர்னர்களும் இருந்தார்கள். ஆனால் அவர் கொஞ்சம் சொரணை உள்ளவர். வாஜ்பாய் பதவி ஏற்றதும் அவராகவே ராஜினாமா செய்து விட்டார். கவர்னர்கள் தேவை. ஆனால் நல்ல கவர்னர்கள் தேவை.

 7. காங்கிரஸ் கவர்னர்கள் நீக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இல.கணேசன் கர்நாடகா கவர்னர் என்பது நல்ல யோசனை.

 8. காங்கிரஸ் செய்த தவறையே பாஜகவும் செய்யகூடாது என்பதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து உள்ளனர். உண்மையிலயே தகுதியுடைய நபர்களை மட்டுமே கவர்னர்களா நியமிக்க வேண்டும். அவர் எந்த கட்சியையோ அல்லது கட்சி சாராதவரகவோ இருந்தாலும் கூட…அதே சமயத்தில் கட்டுரையாளர் குறிப்பிட்டதை போல தகுதியற்றவர்களை தூக்கியெறியவும் தயங்க கூடாது தயவு தாட்சணையின்றி…

 9. ஆளுநர் கட்சியை சார்ந்தவராக ஏன் இருக்கவேண்டும்? அவசியம் இல்லை பொதுவாக தேர்தலில் தோற்றவர் அல்லது கட்சியில் உள்ள முக்கிய நபர்க்கு மதிய அரசால் ஆளுநர் பதவி வழங்கபடுகிறது இதற்க்கு நன்றியாக இவர்கள் செயல்படுகிறார்கள் நடு நிலையில் உள்ள நீதிபதிகளை ஏன் நியமனம் செய்யகூடாது?

 10. எந்தக் கட்சி மத்தியில் ஆட்சி செய்தாலும், கவர்னர் பதவியை தன்னுடைய சுய லாபத்திற்காக பயன் படுத்தியே தீரும். பாஜகவும் இதற்கு விதி விலக்கல்ல.

  காங்கிரஸ் கட்சி கவர்னர்கள் 100% தொந்தரவு தருவார்கள் என்றால், பாஜக கட்சி கவர்னர்கள் 75% தொந்தரவு தருவார்கள், அவ்வளவுதான்.

  கட்சிக்கு அப்பாற்ப்பட்ட நல்ல நபர்களை கவர்னர்களாக நியமிக்கும் மரபு வர வேண்டும்.

 11. பாஜக, இங்குள்ள எல்லோரின் கருத்துக்களை கேட்டாலும், தேச பக்தி தெய்வபக்தி உள்ளவர்களை கவர்னராக்கவேண்டும். இல கணேசன்ஜி அருமையான தேர்வாகவே இருக்கும். நடக்கட்டும் நல்லநிகழ்வுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *