ஜேம்ஸ் பர்டன் சாண்டர்ஸன் ஹால்டேன் என்கிற JBS ஹால்டேன் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அட்டகாசமான மனிதர். உயிரியலாளர். கணிதவியலாளர். நல்ல எழுதுவார். பேசுவார். எல்லாவற்றுக்கும் மேல் மனிதர் மார்க்ஸிஸ்ட். கிரேட் பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of Great Britain CPGB) நட்சத்திர ஆதரவாளர். கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் இவர் எழுதுகிற கட்டுரைகளுக்காகவே கட்சி பத்திரிகைக்கு பிரிட்டன் அறிவுஜீவிகளிடம் தனி கவர்ச்சி இருந்தது. ஆனால் கொஞ்சம் பிரச்சனையான ஆசாமி. அப்படியே கட்சியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுகிறவர் கிடையாது. உதாரணமாக CPGB க்கு காந்தி மீது பெரிய அபிமானமெல்லாம் கிடையாது. அந்த குஜராத்தி கிழவரின் உப்பு சத்தியாகிரகம் குறித்தும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனால் ஹால்டேன் உப்பு சத்தியாகிரகத்தை உயிர்வேதியியல் (bio-chemistry) அடிப்படையில் நியாயப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினார்.
எதுவானாலும் மார்க்ஸிசத்துக்கும் ஹால்டேனுக்குமான காதல் இறுதியில் மன-முறிவில் முடிந்தது. சோவியத் ஆட்சி ஜெனிடிக்ஸ் எனும் மரபணுவியலை கடுமையாக எதிர்த்தது. அது பூர்ஷ்வா கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட போலி அறிவியல் என்றது. அதற்கு மாற்றாக லைசன்கோ என்கிறவரை வைத்து ஒரு கேலிக்கூத்தை நடத்தினார்கள். மரபணுவியலாளர்களையெல்லாம் பிடித்து சிறையில் போட்டார்கள். சித்திரவதை செய்து வாக்குமூலம் சேகரித்தார்கள். சைபீரியாவுக்கு அனுப்பி பட்டினி போட்டு கொன்றார்கள். லண்டனின் பாதுகாப்பில் வாழ்ந்த ஹால்டேனுக்கு இரண்டு விஷயங்கள் தெரியும். லைசன்கோ ஒரு போலி ஆசாமி என்பதும் ஜெனிடிக்ஸ் சத்தியம் என்பதும். ஹால்டேன் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை துறந்தார். 1957 இல் இந்தியாவுக்கு வந்தார். இந்தியா விடுதலை அடைந்து பத்தாண்டுகள் ஆகியிருந்தன. இந்திய அறிவியல் மையங்களை உருவாக்குவதில் ஹால்டேன் தன்னாலான பங்களிப்பை செய்தார். அவர் சுதந்திர இந்தியாவின் அறிவியல் அமைப்புகளின் உருவாக்கத்தில் சில விரும்பத்தகாத போக்குகளை அவதானித்தார். அதை பதிவு செய்யவும் அவர் தயங்கவில்லை. அவர் கூறுகிறார்:
இந்தியாவில் பழைய சாதி அமைப்பு போவதற்கு முன்னரே ஒரு புதிய சாதி முறை உருவாகி வருகிறது. அந்த புதிய முறை பட்டபடிப்புகளின் அடிப்படையில் அமைந்தது. வங்க மொழியையோ, வேதியியலையோ வரலாற்றையோ அல்லது எதை விரும்புகிறீர்களோ அதை கற்றுக்கொடுக்க அந்த துறையில் நீங்கள் கட்டாயம் பட்டம் வாங்கியிருக்க வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டுமா அல்லது பேராசிரியர் ஆக வேண்டுமா அந்த துறையில் கட்டாயம் உயர்பட்டங்கள் தேவை. எனக்கு அறிவியலிலோ புள்ளியியலிலோ பட்டங்கள் கிடையாது. எனவே எப்போது நான் இவற்றை கற்பிப்பதில் இருந்து நிறுத்தப்படுவேன் என்பது எனக்கு தெரியாது…. பழைய சாதி அமைப்பில் குறைகள் இருந்தன. மிக மோசமான குறைகள் என நான் அவற்றை கருதுகிறேன். ஆனால் அதில் கல்வி செல்வத்துக்கு அடிமையாகவில்லை. ஆனால் நிர்வாக அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் இந்த புதிய சாதி அமைப்பில் அந்த அம்சமும் கூட இல்லை.
இது ஒரு நேருவிய குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் அனைத்தையும் வைத்துக் கொள்வதில் நேருவுக்கு ஒரு அலாதி பிரியம் இருந்தது. இதன் விளைவாக உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளிலும் அதிகாரிகள் கோலோச்சினார்கள். நகராட்சிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை இதுதான் கதை. இதன் உச்சகட்ட விளைவு என்ன? இந்தியாவிலிருந்து ஒரு அறிவியல் குழு வெளிநாட்டுக்கு அறிவியல் மாநாட்டுக்காகவோ கருத்தரங்குக்காகவோ செல்கிறது என வைத்துக் கொள்வோம். கூடவே ஒரு அரசு அதிகாரியும் செல்வார். அல்லது மத்திய அமைச்சர் செல்வார். அவருக்கு அது வெளிநாட்டு இன்பச் சுற்றுலாவாக அமையும். கட்சி வேறுபாடில்லாமல் துறை வேறுபாடில்லாமல் இதுதான் கதையாக இருந்தது. அண்மையில் பாஜகவே ஆளும் கோவாவில் அமைச்சர்கள் அரசு செலவில் உலக கால்பந்து போட்டியை பார்க்க முயற்சிகள் மேற்கொண்டது நினைவிருக்கலாம். Old Habits die hard என்பார்கள் ஆங்கிலத்தில். ஆனால் இன்றைய பிரதம மந்திரி வேறுமாதிரி ஆள். இன்று இருக்கும் அரசு வேறுமாதிரி அரசு.
அண்மையில் சாண்டியாகோவிலும், பாஸ்டனிலுமாக இரு அறிவியல் கருத்தரங்குகள். வழக்கம் போல அறிவியல் தொழில்நுட்பத்துக்கான இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அறிவியலாளர் குழுவை முன்னடத்தி வெளிநாடு செல்வதற்காக. பொதுவாக அமைச்சர் அல்லது அரசு அதிகாரி ஒருவர் இப்படி செல்வது வழக்கம். சாச்சா நேரு முதல் அன்னை சோனியா வரை தலைமுறை தலைமுறையாக ஆகிவந்த வழக்கம் அது. ஆனால் இம்முறை ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நல்ல, தகுதி வாய்ந்த, தனித்துவம் கொண்ட விஷயங்களை கருத்தரங்கில் முன்வைக்கக் கூடிய அறிவியலாளர் ஒருவர் இதற்காக செல்லும் அறிவியல் அணிக்கு தலைமை தாங்கட்டும் என்று சொல்லிவிட்டார் அமைச்சர். ஆக ஜூலை 25 சாண்டியாகோ பாஸ்டன் செல்லும் அறிவியலாளர் குழுவுக்கு விஞ்ஞானி டாக்டர். ராகவன் தலைமை தாங்குவார். (பிடிஐ செய்தி ஜூன் 7 2014)
இதே போக்கு பிற துறைகளிலும் தெரிகின்றன. இந்த நல்ல கண்டிப்பான போக்குக்கு பிரதம மந்திரியும் விதிவிலக்கு அல்ல என்பதுதான் சந்தோஷமான விஷயம்.உலக கால்பந்து இறுதி ஆட்டம் நடப்பது ஜூலை 13. பிரேஸில் – இந்தியா- ரஷியா-சீனா தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டுத்தலைவர்களின் உச்சி மாநாடு (BRICS) நடக்கவிருப்பது ஜூலை 15-17 அதே பிரேஸிலில். இந்த மாநாட்டில் மோதி கலந்து கொள்கிறார்.எனவே பிரேஸில் அரசு கால்பந்து இறுதி போட்டிக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதில் கலந்து கொள்ளும் எண்ணம் மோதிக்கு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்திருக்கிறார். (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூன் 25). பிரதம மந்திரி இப்படி இருந்தால்? இதுவே போன அரசாக இருந்திருந்தால் குடும்பம் குடும்பமாக அமைச்சர்களும் அதிகாரிகளும் குடும்ப அடிவருடிகளும் தனி விமானத்தில் சென்று இந்தியாவை அசிங்கப்படுத்திவிட்டு வந்திருப்பார்கள். தனக்குத்தானே பாரத ரத்னா அளித்து கொண்ட நேருவிய பாரம்பரியமல்லவா? கிழக்கு பாகிஸ்தானில் கஷ்டப்படும் இந்து தலித், பௌத்த வனவாசி அகதிகளைக் குறித்து கவலைப்படாமல் நாஸரிடமும் ஸ்டாலினிடமும் மாவோவிடமும் கிண்ணங்கள் தட்டி உலக அமைதிக்காக உறவாடிய பாரம்பரியமல்லவா?
சாதியம் – பழசோ புதுசோ – நரேந்திரர் அதை ஒழித்து எல்லா துறைகளிலும் ஆரோக்கியமான ஜனநாயக போக்கை கல்விசார்ந்த புத்துணர்வை பரவ வைக்கிறார். நல்ல தினங்கள் காத்திருக்கின்றன எனும் நம்பிக்கை வருகிறது.
இறுதியாக ஒரு நவீன வேதாளம் சொன்ன கதை: தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் வேதாளம் இருந்த உடலை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு செல்லலானான். அப்போது அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, ”நீ எதற்காக இதை செய்கிறாய்? நீ இதை செய்வதால் நன்மை ஏற்படும் என நினைத்தால் நன்மைக்கென்றே அவதாரம் எடுத்ததாக சொல்லுபவர்கள் கூட உன்னை எதிர்க்கக் கூடும். இது குறித்து நான் ஒரு ராசா கதை சொல்கிறேன் கேள்..” என்று சொல்லி சொல்லத் தொடங்கியது.
பின்னொரு காலத்தில் டெல்லி டெல்லி எனப்படுகிற மாநகரத்தில் அனிதா ஷெனாய் என ஒரு வழக்கறிஞர் இருந்தார். அவர் பழைய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவின் வழக்கறிஞர். நவம்பர் 2010 இல் ஸ்பெக்ட்ரம் விஷயம் குறிப்பாக வழக்குகள் சோதனைகள் என ராசாவின் சோதனை காலம் அது. ராசாவுக்கு மட்டுமல்ல சோனியா-மன்மோகன் அரசாங்கத்துக்கும். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்போது சிபிஐ அதிகாரிகள் அழைக்கப்பட்டு அனிதா ஷெனாயிடம் பேச வைக்கப்பட்டனர். எங்கே இந்த சந்திப்பு நிகழ்ந்தது? அன்றைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (Solicitor General) அலுவலகத்தில்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு நவம்பர் 15 2010 இல் இப்படி செய்தி வெளியிட்டது: “Documents accessed by TOI conclusively establish the SG’s efforts to coordinate between the agencies and the counsel of the telecom minister, whom they were to investigate…” சிபிஐயின் மறுப்புகளை புறக்கணித்து அன்றைய மத்திய அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் நடந்து கொண்டார். மட்டுமல்ல அவர்தான் சிபிஐ தரப்பில் ராசா விவகாரத்தில் வழக்கறிஞராக செயல்படுவேன் என பிடிவாதமும் பிடித்தார். இறுதியில் அவர் வழக்கறிஞராக இருப்பதை சிபிஐ விரும்பவில்லை என சிபிஐயே எழுத்து மூலமாக சொல்ல வேண்டிய நிலை வந்தது.
யார் இப்படி தனது பதவியை பயன்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட ஆசாமி? யார் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ ‘ராசா விசயத்தில் நீர் ஆஜராக வேண்டாம்’ என எழுத்து மூலமாக கோரிய ஆசாமி? அவர்தான் திருவாளர்.கோபால் சுப்ரமணியம். அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த போதே இப்படி செயல்பட்டவர் தலைமை நீதிபதியானால்? ராசாவுக்கும் கனிமொழிக்கும் நன்மை பயக்கலாம். காங்கிரஸுக்கு தப்பிக்க முடியலாம். ஆனால் இந்தியாவுக்கு? … எனவே மோதி அரசு ஆசாமியை நிராகரித்ததில் அநியாயமும் இல்லை. அநீதியும் இல்லை. நீதித்துறையின் குறிக்கீடும் இல்லை.
இப்படி சொல்லி நிறுத்திய வேதாளம் சொன்னது.
மன்னா நான் இப்போது கேட்கப்போகும் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையை நூறு சுக்கலாக சிதறடிப்பேன். கோபால் சுப்ரமணியத்தின் பெயரை உச்ச நீதிமன்ற நியமன பட்டியலில் இருந்து மோதி அரசு நீக்கியதை 2G பிரச்சனையில் தொடர்புடைய காங்கிரஸ் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உடைய திமுக எதிர்ப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஊழலை எதிர்க்கவே அவதாரம் எடுத்ததாக சொல்லும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன தலைவர் சாந்திபூஷன் இந்த ஆசாமிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கிறாரே… அது ஏன்?
உடனே விக்கிரமன்,
வேதாளமே…கேள் ஆம் ஆத்மி கட்சி என்பது ஊழலை எதிர்ப்பதைவிட காங்கிரஸுக்கு எதிரான கோபத்துக்கான ஒரு வடிகாலாக காங்கிரஸாலேயே உருவாக்கப்பட்டது என ஒரு பேச்சு உண்டு. அப்படி இருக்க சொந்த எசமானர்களுக்கு எதிராக எப்படி அவர்கள் செயல்பட முடியும். எனவே சாந்திபூஷனின் இந்த பேச்சில் நியாயம் இல்லைதான். ஊழல் எதிர்ப்பு இல்லைதான். ஆனால் நிச்சயமாக எசமான விசுவாசம் வெளிப்படுகிறது.
என்றான். விக்கிரமனின் சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.
” பிரேஸில் அரசு கால்பந்து இறுதி போட்டிக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதில் கலந்து கொள்ளும் எண்ணம் மோதிக்கு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி தெரிவித்திருக்கிறார். (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூன் 25). பிரதம மந்திரி இப்படி இருந்தால்? இதுவே போன அரசாக இருந்திருந்தால் குடும்பம் குடும்பமாக அமைச்சர்களும் அதிகாரிகளும் குடும்ப அடிவருடிகளும் தனி விமானத்தில் சென்று இந்தியாவை அசிங்கப்படுத்திவிட்டு வந்திருப்பார்கள். தனக்குத்தானே பாரத ரத்னா அளித்து கொண்ட நேருவிய பாரம்பரியமல்லவா? கிழக்கு பாகிஸ்தானில் கஷ்டப்படும் இந்து தலித், பௌத்த வனவாசி அகதிகளைக் குறித்து கவலைப்படாமல் நாஸரிடமும் ஸ்டாலினிடமும் மாவோவிடமும் கிண்ணங்கள் தட்டி உலக அமைதிக்காக உறவாடிய பாரம்பரியமல்லவா? “- சபாஷ் அரவிந்தன் நல்ல போடு போட்டீர்கள். நன்றி. தனக்குத்தானே பாரத ரத்னா அளித்துக்கொண்ட நேருவிய அசிங்கங்களுக்கு இது எங்கே புரியப்போகிறது ?
ஆம் ஆத்மி காங்கிரசால் உருவாக்கப்பட்ட டம்மிகளின் கும்பல். அதனிடம் நல்லது எதனையும் எதிர்பார்க்க முடியாது. கம்யூனிஸ்டுகளை விட ஆம் ஆத்மிகள் மிக கேவலமானவர்களே. காங்கிரசின் சொம்புகள்/ கூஜாக்கள்.
மிகவும் அருமையான பதிவு. சாந்தி பூஷன் மீது இருந்த பாக்கி மரியாதையும் ஓடிவிட்டது. ஆமாம் கட்சி காங்கிரசுக்கு மறைமுகமாக ஆமாம் போடுவதையே முக்கியமான agenda ஆகக் கொண்டுள்ளது.
விக்ரமன் சரியாகத்தான் பதில் அளித்தார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை விஷயத்தில் வேதாளம் கேட்டால், விக்ரமனின் பதில் என்னவாக இருக்கும்? ஏனெனில் இது பற்றி கேஜிரிவாலோ பூஷனோ வாயை திறப்பது இல்லை.
N.Paramasivam
எனக்கு இந்த வேதாளத்தின் கேள்வி பதில் தினமும் வேண்டியிருக்கும்போல. அவ்வளவு அருமை. தொடர்ந்துகிடைக்கட்டும் இந்தக்காலைத்தேநீர்.
நன்றிகள் அரவிந்தன் நீலகண்டனுக்கும், தமி ஹிந்துவுக்கும்.