காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்

ARMY_2106277f
மக்களை மீட்கும் ராணுவவீரர்கள்.

ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. சேவை செய்தவர்களைக் குறை கூறும் பிரிவினைவாதிகளுக்கும் இந்த ஊடகவாலாக்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

ஒரு முக்கியமான சம்பவம். காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையத் அலி கிலானி வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் ராணுவவீரர்களால் மீட்கப்பட்டார். இந்தப் புகைப்படம் ஊடகங்களில் வெளியானவுடன் அவர்,  “ஆபத்துக்காலத்தில் ஆக்கிரமிப்பு நாட்டின் உதவியைப் பெறுவது தப்பில்லை’’ என்று சொன்னார். என்ன ஒரு நெஞ்சழுத்தம்? அவரை மீட்ட இந்திய ராணுவவீரர்கள் ஆக்கிரமிப்பு நாட்டின் ராணுவமாம்.

Geelani Rescue
ராணுவவீரர்களால் மீட்கப்படும் கிலானி

இவ்வாறு கூறிய கிலானியை மறுகேள்வி கேட்கவும் எந்த ஊடகவாலாக்களுக்கும் துப்பில்லை. இதே வெள்ளம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் மீட்க ஆளின்றி தவித்த கதைகள் உள்ளம் உருக்குபவை. அந்தப் பகுதிக்கும் கூட உதவத் தயார் என்று நமது பிரதமர் மோடி அறிவிக்கிறார். ஆனால், உயிரைப் பற்றிய கவலையின்றி வெள்ளத்தில் சிக்கிய கிலானியை மீட்ட நமது வீரர்கள் ஆக்கிரமிப்பு ராணுவமாம்! இவ்வாறு கூற கிலானிக்கு எங்கிருந்து துணிவு வந்தது?

நமது ஆங்கில ஊடகங்கள் கடைபிடிக்கும் மாய்மால மதச்சார்பின்மையும், இஸ்லாமிய அமைப்புகளின் பிரசார வலிமையும், அவற்றின் நாடுதழுவிய ஆபத்தான வலைப்பின்னலும், அரசியல்வாதிகளின் நடுநிலையற்ற சுயலாபக் கொள்கைகளுமே கிலானிக்கு இந்த துணிவைத் தந்திருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரை வெள்ளம் சூழ்ந்ததிலிருந்தே அங்கு மக்கள்நலப் பணிகளிலும் மீட்பு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபடும் எந்த ஒரு ஸ்வயம்சேவகரின் படமும் ஊடகங்களில் வெளிவராமல் தணிக்கை செய்யப்படுவதற்குக் காரணமும் இதுவாகவே இருக்க முடியும்.

இதே கிலானி, தான் மீட்கப்பட்டு இரண்டொரு நாள்கள் கழித்து சௌகரியமாக ஸ்ரீநகரில் அமர்ந்தபடி பேட்டி கொடுக்கிறார். அப்போது, “இந்திய ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதாக நாடகமாடுகின்றனர். அவர்கள் சுற்றுலாப் பயணிகளையும் வெளிமாநில மக்களையும் மீட்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். உள்ளூர் மக்களை பாரபட்சமாக அணுகுகின்றனர்’’ என்றார். அவர் வணங்கும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அறிவாளனுமான அல்லா, இவ்வாறு அவர் நேர்மையின்றிப் பேசுவதற்கு என்ன தண்டனை தருவார்?

கிலானி தண்டனை பெறுவது இருக்கட்டும். அவரது பேச்சு எதிர்பார்த்தபடியே ஸ்ரீநகரில் புகைச்சலை ஏற்படுத்திவிட்டது. அவரது பேச்சால் மதியிழக்கும் மக்கள் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்? வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களை அவரது பேச்சு உசுப்பிவிட்டது. அதன் விளைவே மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் மீதான கல்வீச்சுத் தாக்குதல்கள். இது ஒருவகையில் இந்திய அரசின் மீட்புப் பணிகளை மட்டம் தட்டும் உலகளாவிய சதித்திட்டத்தின் அங்கமும் கூட.

நமது நாட்டில் ஒரு சிந்தனையோட்டம் இருக்கிறது. அது இயற்கைச் சீற்றமான வெள்ளத்தைவிட அபாயகரமானது. மதச்சார்பின்மை என்ற பெயரில் தேசிய இயக்கங்களைப் புறக்கணிப்பதும், பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிப்பதும் தான் ஊடக தர்மம் என்ற சிந்தனைப் பாங்கு கடந்த காலத்தில் இங்கு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைப்பதாகவும் தகவல்கள் உண்டு. அதன் விளைவாகவே, கிலானி போன்ற உளறல் பிரிவினைவாதிகளுக்கு ஊடகங்கள் அளவுக்கு மீறி வெளிச்சம் தருகின்றன. அதேசமயம், அர்ப்பண மனப்பான்மையுடன் சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளின் பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

வெள்ள மீட்புப்பணியில் ஸ்வயம்சேவகர்கள்.

நல்லவேளை ஆர்.எஸ்.எஸ். சேவைகளை இருட்டடிப்பு செய்தாலும், ராணுவவீரர்களின் சேவையையேனும் நமது ஊடகங்கள் வெளிப்படுத்தினவே என்று நிம்மதி கொள்ளலாம் என்றால், அங்கும் வந்தது பிரச்னை. வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம் சரிவர இயங்கவில்லை என்று, அந்தப் பகுதிக்கே செல்லாமல்- தில்லி ஸ்டுடியோவுக்குள் இருந்தபடி- செய்தி வாசித்து சர்ச்சை கிளப்பி, ரேட்டிங் ஏற்றிக்கொண்டனர் சில காகிதப்புலிகள்.

இந்த வெள்ளச்சேதத்தைக் குறைத்ததில் ராணுவவீரர்களின் பணி அளப்பரியது. இப்பணியில் இதுவரை 9 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். வெள்ளம் கடுமையாக பாதித்த செப். 7 முதல் செப். 15 வரை, 2.26 லட்சம் மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இப்பணியில் சுமார் 30,000 வீரர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணியில் 86 மீட்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. 224 ராணுவப் படகுகளும் 148 தேசிய பேரிடர் மீட்புப் படகுகளும் 24 மணிநேரமும் அயர்வின்றி தொடர்ந்து ஒருவார காலத்திற்கு இயங்கின. வெள்ளம் பாதித்த மக்களுக்கு செப். 12ம் தேதி நிலவரப்படி, 5 லட்சம் குடிநீர் பாக்கெட்கள் வழங்கப்பட்டன. 1,054 டன் அளவுள்ள 3 லட்சம் உணவு பாக்கெட்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டன. குடிநீர் சுதிகரிப்பு மாத்திரைகள் மட்டுமே 13 டன் அளவிற்கு வழங்கப்பட்டன. இது ஒரு மாபெரும் மீட்புப்பணி.

மீட்புப்பணியில் பிராந்திய வாரியாக பாரபட்சம் காட்டப்படுவதாக, பிரிவினைவாதிகளான யாசின் மாலிக், கிலானி உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்த அதேநேரத்தில் தான், மீட்புப்படையில் 21,000 பேர் ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், 9,000 பேர் ஜம்மு பகுதியிலும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதை உரக்கச் சொல்ல வேண்டிய ஊடகங்கள் மௌனம் காத்தது ஏன்?

புவியியல் அமைப்பில் உள்ள சிக்கலான சூழலால், காஷ்மீரில் வீரர்கள் அதிகம் பணிபுரிய வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்பு மிக அதிகமாக இருந்தது ஜம்மு பிரந்தியத்தில் தான். அங்கு தான் அதிகபட்ச (200) உயிரிழப்பும் கிராமங்கள் அழிவும் நேரிட்டிருக்கின்றன. ஆனால், நமது தலைநகரச் செய்தியாளர்களோ ஸ்ரீநகர் (இங்கு இறப்பு எண்ணிக்கை 60 பேர்) மட்டுமே காஷ்மீர் என்பதுபோல படம் காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கேமராக்குழுவுக்கு சேணம் கட்டியது யார் என்று தெரியவில்லை.

india-pakistan-floodi_josh_650_091314053705
நிவாரணப் பொருள்களை ஹெலிகாப்டரில் விநியோகிக்கும் வீரர்கள்.

வெள்ளம் பாதித்தவுடன் சங்க ஸ்வயம்சேவகர்கள் வழக்கம் போல யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ராணுவ வீர்ர்கள் அணுக முடியாத் பகுதிகளில் கூட ஸ்வயம்சேவகர்கள் சேவைப் பணியில் ஈடுபட்டனர். சாலை சீரமைப்புப் பணிகளிலும் வீரர்களுக்கு அவர்கள் உதவினர். ஆனால் ஒரு குறைபாடு, அதைப் பதிவு செய்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இல்லை. அதற்கான கருவிகளுடன் சென்று சிறு பணியையும் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுக் காசாக்கும் தந்திரமும் அவர்களிடம் இல்லை. சேவை செய்வதை விட அதற்கு புகைப்பட  ‘போஸ்’ கொடுப்பதே முக்கியம் என்ற ஊடக அளவுகோல் அவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் தெரியவில்லை. இன்னமும் கூட, ஒவ்வொரு நொடி படக் காட்சியிலும் லாபம் கொழிக்கச் செய்யும் தொலைக்காட்சி தர்மம் குறித்து இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். ஊடகவாலாக்களுக்கோ, சென்டிமீட்டர் செய்தியையும் காசாக்கும் ஞானம் மட்டுமே வாய்த்திருக்கிறது.

உண்மையில் பாரபட்சம் காட்டுவது யார்? வெள்ளத்தில் உயிரை பற்றிய சிந்தையின்றி மீட்புப்பணியில் ஈடுபட்ட ராணுவமா? பிரதிபலன் கருதாது மதம் கடந்து சேவை செய்த ஸ்வயம்சேவகர்களா? அல்லது பிழைப்புக்காக செய்தித் தணிக்கை செய்வதுடன், உளறல் செய்திகளையும் வாசிக்கும் நமது ஊடகங்களா?

பிரிவினைவாதிகளின் தூண்டுதலால் கல்லெறிந்த மக்களுக்கும் ராணுவம் உதவி செய்கிறது. ”துஷ்பிரசாரத்தால் ராணுவவீரர்கள் காயம் பட்டபோதும், “நாங்கள் ஜாதி, மதம், இனம், பிராந்தியம் என்ற எந்த அடிப்படையிலும் பாரபட்சம் காட்டாமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறோம். வெள்ளத்தில் சிக்கிய கடைசி மனிதரையும் மீட்கும் வரை எங்கள் பணி தொடரும்” என்று விளக்கம் அளித்துக் கொண்டே ராணுவம் அங்கு தொடர்ந்து பணிபுரிகிறது. இந்த ராணுவத்தைத் தான் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று முன்னொருசமயம் கூக்குரலிட்டார் அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா.

வெள்ளநகராகிவிட்டஸ்ரீநகர்.
வெள்ளநகராகிவிட்ட ஸ்ரீநகர்.

மோடி பிரதமரானால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும் என்று முன்னர் சொன்ன அதே வாய் தானே? இப்போது ஜம்மு காஷ்மீர் வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடர் என்று அறிவித்து உடனடியாக ஆயிரம் கோடி நிதியுதவியும் அறிவித்திருக்கிறார் ஸ்வயம்சேவகரான பிரதமர் மோடி. ஜம்மு காஷ்மீர் மக்களைக் காக்க பெருமளவு நிதியுதவி தருமாறு அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு நெடுகிலும் இருந்து நிதியுதவி குவிகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் பொருளை ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அதைத் தடுக்கவே, ராணுவம் மீதான கல்வீச்சை ஊக்குவிக்கிறார்கள் பிரிவினைவாதிகள்.

ஜம்மு காஷ்மீர் மீண்டு சீராக இன்னும் 6 மாதங்கள் ஆகலாம். கிட்டத்தட்ட ரூ. 60,000 கோடி மதிப்புக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உள்கட்டமைப்பில் பல்லாயிரம் கோடி மதிப்புக்கு அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஓமர் அப்துல்லா கூறியிருக்கிறார். இந்த இக்கட்டான நிலையில் சகோதர மக்களுக்கு உதவுவது நமது கடமை. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்.சின் சேவைப்பிரிவான சேவாபாரதி நாடு முழுவதும் அதற்கான நிதி சேகரிப்பைத் துவக்கி, தனது பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது.

வெள்ளத்தில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 1, 024 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4.7 டன் மருந்து செப். 14 வரை வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தின்போதும் மீட்புப்பணிகளில் சிறு குறைகள் இருக்கவே செய்யும். ஆனால், அந்தக் குறையைக் கூற ஒரு தகுதி வேண்டும்.

காஷ்மீர மக்களின் ஆபத்பாந்தவன் இந்திய ராணுவம் தான்.
காஷ்மீர மக்களின் ஆபத்பாந்தவன்
என்றும் இந்திய ராணுவம் தான்.

உண்மையில் ராணுவம் செய்த பணிகளில் இருந்த குறைபாடுகளுக்கு தகவல் பரிமாற்ற இடைவெளிகளே காரணம். காஷ்மீர் பள்ளத்தாக்கு போன்ற பயங்கரவாதிகள் சூழ்ந்த பகுதியில் திடீர் வெள்ளச்சேதத்தை எதிர்த்து எந்த ஆயுதமும் இன்றிப் போராடும் நமது வீரர்களை- தங்கள் முகாமே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போனாலும் கவலையின்றி மீட்புப்பணியில் ஈடுபடும் நமது வீரர்களை- விமர்சிப்பதென்பது, இந்நேரத்தில் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாத பிரிவினைவாதிகளின் கீழ்த்தரமான பிரசாரத்திற்கே உதவும்.

உண்மையில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் இப்போது அரண்டுபோயிருக்கிறார்கள். இந்திய வீரர்களின் தன்னலமற்ற மீட்புப்பணியால் காக்கப்பட்ட லட்சக் கணக்கான காஷ்மீர மக்களிடம் மத்திய அரசு மீது நல்லெண்ணம் ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை. பேரிடரின்போது ஓடி ஒளிந்த தங்களைப் பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள தவறான பிம்பத்தைச் சரிசெய்தாக வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா மீதான நல்லெண்ணம் மக்களிடம் ஏற்பட்டால் தங்கள் ‘பிழைப்பு’ என்னாவது என்ற கவலை அவர்களுக்கு. இதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டிய ஊடகங்கள் தங்கள் மனங்களில் புகுந்துள்ள சகதியை வெளியேற்ற வேண்டிய தருணம் இது.

.

4 Replies to “காஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்”

 1. Whatever written is truth. At least few of the papers should commence publishing photos of our Jawans saving people. Photos of relief materials being distributed should also be highlighted. It is not for projecting self but to give a true picture

 2. நடுசென்டர் வாலா ஊடகங்கள் கிலானியை பேட்டிகண்டு
  வெளியிடுவதுதானே !

  தேவ்

 3. திரு ஜெயமோகன் இது பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

 4. நமக் ஹராமாகிய……..தின்ற உப்புக்கு த்ரோஹம் செய்யத்துணியும்………..பிரிவினைவாதியான சையத் அலி ஷா கிலானி போன்ற சமூஹ விரோதி தன் உயிர் பாதுகாக்கப்பட்டதும் தேச விரோத ப்ரசங்கங்கள் நிகழ்த்த முடிகிறது. இதை விட பெரிய நமக் ஹராமியாகிய யாஸீன் மாலிக் என்றொரு பிரிவினைவாதி சர்க்காருடைய மீட்புப்படகுகளை கபளீகரம் செய்து அதில் உள்ள உபகாரபொருட்களை களவு செய்த கண்றாவி கூட ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கும் சாதாராண காஷ்மீர மக்கள் சர்க்காருடைய படகுகளை எதிர்பார்த்து அதில் ஏற விழையும் போது…………….. கூச்சல் போட்டு………….. அச்சுறுத்தி…………… அவர்களை புகலிடத்துக்குப் போகாமலிருக்க…………….ஃபத்வாக்கள் விதித்த கண்றாவிகளும் இந்த சமயத்தில் அரங்கேறின.

  \\\\\ சாலை சீரமைப்புப் பணிகளிலும் வீரர்களுக்கு அவர்கள் உதவினர். ஆனால் ஒரு குறைபாடு, அதைப் பதிவு செய்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இல்லை. அதற்கான கருவிகளுடன் சென்று சிறு பணியையும் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுக் காசாக்கும் தந்திரமும் அவர்களிடம் இல்லை. \\\\

  இது நிச்சயம் குறைபாடு தான். இது போன்ற சேவைக்காரியங்களை சங்கத்தினர் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். இன்றைய திகதியில் மொபைல் கேமராக்கள் சர்வ சஹஜம். ஆபத்துப் பகுதியில் இன்னலுற்று மீட்பு பெற்ற மக்களுக்கு ஸ்வயம் சேவகர்களது சேவை நிச்சயம் ஆழப்பதிந்திருக்கும். ஆனால் அதை படமெடுத்து பதிவு செய்திருக்க வேண்டும்.

  ஆனால்………………….. ஹிந்துஸ்தானத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் ஹிந்து, முஸ்லீம், க்றைஸ்தவ சஹோதரர்களுக்கு…………….. பேரிடர்கள் ஏற்படும் போது சங்கத்தினருடைய ஒழுங்கு சார்ந்த பணிகள் மூலம் தாங்கள் எப்படி பயன் பெறலாம் என்ற தகவல் கிட்ட வாய்ப்புள்ளது……………….என்ற படிக்கு சங்கத்தின் பணிகள் இனிமேலாவாது நிச்சயம் படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்யப்பட வேண்டும்.

  தேச விரோத சகதிகளுக்கு விலை போன அச்சு ஊடகம் மற்றும் காணொளி ஊடகம் மட்டுமே செய்திகளுக்கான கதி என்பது அந்தக்காலம். சோஷல் மீடியா என்று மாற்றுக்கருத்துக்களை பொதுதளத்தில் பகிர அரும் வாய்ப்பு இன்றுள்ள போது……………….. இதை விட்டு விட்டது நிச்சயம் குறைதான். சர்வ நிச்சயமாக வரும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டிய குறை.

  இயலுமானால் சங்கப்பணியாளர்கள் யாரேனும் சேவைகளின் போது எடுத்த மொபைல் சித்திரங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை இந்த வ்யாசத்தில் பகிரவும்.

  \\\ நமது நாட்டில் ஒரு சிந்தனையோட்டம் இருக்கிறது. அது இயற்கைச் சீற்றமான வெள்ளத்தைவிட அபாயகரமானது. மதச்சார்பின்மை என்ற பெயரில் தேசிய இயக்கங்களைப் புறக்கணிப்பதும், பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிப்பதும் தான் ஊடக தர்மம் என்ற சிந்தனைப் பாங்கு கடந்த காலத்தில் இங்கு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைப்பதாகவும் தகவல்கள் உண்டு. \\\

  முந்தைய சர்க்கார் தேச விரோத சக்திகளுடன் இலை மறைவு காய் மறைவாக வேலை செய்தது நிச்சயம் தான். இப்போது வெறுமனே இது போன்ற தேசவிரோதசக்திகள் ஊடகங்களுடன் கை கோர்த்து வேலை செய்கின்றன என்று உரக்க பேச மட்டிலும் செய்யாது சர்க்காருடைய சட்ட அமைச்சகம் இது போன்ற புல்லுறுவிகளை ந்யாயாலயத்துக்கு இழுத்து அவைகளுக்கு தண்டனை வாங்கியும் தரவேண்டும் என்பது பொது ஜனங்களின் ந்யாயமான எதிர்பார்ப்பு.

  டாக்டர் சுப்ரமண்ய ஸ்வாமி அவர்கள் ஸ்ரீமதி சோனியா காந்தி, ஸ்ரீ ராஹுல்காந்தி, ஸ்ரீ ஆண்டிப்பட்டி ராஜா, ஸ்ரீமதி கனிமொழி அம்மையார், ஸ்ரீமதி தயாளு அம்மையார் போன்ற பெருந்தலைகளை ந்யாயாலயத்துக்கு இழுத்து சிலரை காராக்ருஹத்திலும் தள்ளும் கார்யத்தை தனிப்பட்ட முறையில் செய்ய முடியுமானால் ……………….. முழு மெஜாரிடியில் இருக்கும் பாஜக சர்க்கார் தன்னுடைய சட்ட அமைச்சகம் மூலம் இது போல பல மடங்கு நன்மையை தேசத்துக்குச் செய்ய முடியும்.

  தேச விரோத செயல்களில் ஈடுபடுவது காராக்ருஹம் செல்ல வழி வகுக்கும் என்று தெரிந்தால் பரங்கிப் பிச்சைப் பணத்தில் ஆட்டம் போடும் விலை போன ஊடகங்களுக்கும் நிச்சயம் புத்தி கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *