அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்

இன்று கந்த சஷ்டி – சூரசம்ஹாரம்.

ங்கும் நிறைந்திருக்கும் சர்வ வல்லமை படைத்த இறைவனைக் குழந்தையாக்கி அவ னுக்குப் பிள்ளைத்தமிழ் பாடினார்கள் புலவர்கள். கண்ணனுக் கும் முருகனுக்கும் தேவிக்கும் பிள்ளைத் தமிழ் பாடி மகிழ்ந் தார்கள். பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவனுக்குப் பிள் ளைத் தமிழ் பாடுவதில்லை.

அலகிலா விளையாட்டுடை யான் என்று ராமனைப் போற்றுகிறான் கம்பன். கண்ணனைத் தீராத விளையாட்டுப் பிள்ளை என்கிறான் பாரதி. கண்ண னைப் போலவே முருகனும் அளவிலாத விளையாட்டுகளை நிகழ்த்தி யிருக்கிறான். அவனுடைய விளையாட்டைக் குமர குருபரர் அருணகிரிநாதர் வாயிலாகப் பார்ப்போம். இவனு டைய பிறப்பே ஒரு விளையாட்டுத்தான்.

muruga06அவதாரம்

சூரனின் கொடுமை தாங்கமுடி யாத தேவர்கள் கயிலை சென்று தம் குறையிரந்தார்கள். அவர்கள் நிலையைக் கண்டு இரங்கிய கயிலை நாதன் தன் ஐந்து முகங்களோடு அதோமுகத்தையும் சேர்த்து ஆறுமுகங் களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை விடுத்தார்.

இதைக் கண்டு தேவர்கள் நடுங்கினார்கள். அப்பொறிகளை வாயு தேவனிடம் கொடுத்தார்கள். அதன் வீர்யத்தைத் தாங்க முடியா மல் வாயு தேவன் கொண்டுபோய் அக்கினி தேவனிடம் கொடுத்தான். அவனும் பொறுக்க முடியாமல் கங்கையிடம் கொண்டு சேர்த்தான். அவள் சரவணப் பொய்கையில் விட் டாள். கார்த்திகைப் பெண்கள் சரவணப் பொய்கையிலிருந்து எடுத்துப் பாலூட்டினார்கள்.

அந்தக் குழந்தையைப் பார்க்க வந்த உமாதேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து அணைத்தாள். சேர்த்து அணைத்த மகன் கந்தன் என்று பெயர் பெறுகிறான்.

இதை,

வெந்தவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும்-தந்து
திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப—விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கு தழற் பிழம்பைப் பொற்கரத்தால்—அங்கன்
எடுத்தமைத்து வாயுவைக் கொண்டு ஏகுதி என்று
அம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் அடுத்ததொரு
பூதத்தலைவ கொடுபோதியெனத் தீக்கடவுள்
சீதப்பகீரதிக்கே சென்றுய்ப்பப் போதொரு சற்று
அன்னவளும் கொண்டு அமைதற்காற்றாள் சரவணத்திற்
சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவுருவாய்—முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுது விளையாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன்-குறுமுறுவல்
கன்னியொடுஞ் சென்று அவளுக்குக் காதலுருக்
காட்டுதலும்
அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும்
தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தன் என பேர்புனைந்து

என்று ஒரு நாடகக் காட்சி போல் விவரிக்கிறார் குமர குருபரர்.

செங்கீரை ஆடும் முருகன்

குழந்தை முருகன் செங்கீரை ஆடுகிறான். ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலை நிமிர்ந்து முகம் அசைய ஆடுகிறான். முருகனுடைய விளையாடல்களை யெல்லாம் சொல்லி அவனைச் செங்கீரை ஆடும்படி சொல் கிறார் குமரகுருபரர்.

முருகன் அஷ்டதிக் கஜங்களை யும் பிடித்து அவற்றை ஒன்றோடு ஒன்று முட்ட விட்டு வேடிக்கை பார்க்கிறான்.ஆகாய மண்டலத்தோடு சூரிய மண் டலத்தையும் சக்ரவாள மலையில் இடுகிறான். சிவபெரு மான் தமது வில்லாகக் கொண்ட மேரு மலையை பெரிய தண்டாயுதமாகக் கொண்டு வான் முகட்டையும், திரிகூட மலையையும் மோதுகிறான். மேல்கடலைக் கீழ்க்கடலில் புகும் படி விளையாடுகிறான். இந்தக் காட்சியைக் குமர குருபரர் எப்படி வருணிக்கிறார் என்று பார்ப்போம்.

கைக்கெட்டும் எட்டுக் களிற்றைப் பிடித்து அக்
களிற்றோடு முட்ட விட்டுக்
ககன வட்டத்தினொடு பருதி வட்டத்தை வளை
திகிரி வட்டத்திலிட்டு
முக்கண் திருத்தாதை கோதண்டம் என வைத்த
வேதண்டம் மாதண்டமா மூதண்ட கூடம்
த்ரிகூடத்தொடும் சாடி
மேல் கடலினைப் பெருங் கீழ்க்கடல் புகப் பெய்து
விளையாட்டு வீரர்களொடும்
திக்கெட்டும் விளையாடும்
சேனாபதிக் கடவுளே! செங்கீரையாடி அருள்

என்று முருகணைப் போற்றுகிறார்.

சப்பாணி கொட்டும் முருகன்

குமரன் தன் பிஞ்சுக் கைக ளால் சப்பாணி கொட்டுகிறான். இவன் சப்பாணி கொட்டக் கொட்ட என்ன நடக்கிறது? எட்டுக் குல மலைகளும் குலுங் கிப் பாதிப் பாதியாக விழுகிறது! மேரு மலையும் அதிர்வடை கிறது! தேவர்கள் நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. நாம் உய்ந்து போனோம் என்று சந்தோஷமடைகிறார்களாம்.

…… இரு நான்கு வெற்பும்
அப்பாதியாய் விழ மேருங் குலுங்க
விண்ணாருமுய்ய
சப்பாணி கொட்டிய கையாறிரண்டுடைச்
சண்முகனே

என்று முருகன் சப்பாணி கொட்டியதை அருணகிரிநாதர் ரசிக்கிறார்.

குறும்பு விளையாட்டு

muruga05உமாதேவியின் மடியில் அமர்ந் திருக்கிறான் முருகன். அம்மையின் மணி வயிறு குளிரும் படி தவழ்ந்து சென்று ஐயன் சிவபெருமான் மார்பிலே குர வைக் கூத்தாடுகிறான். பின் இறைவனின் துடியை எடுத்து முழக்குகிறான். அப்போதே இறைவன் கையிலிருக்கும் தீயைப் பார்த்து விடுகிறான். அதை அணைக்க வேண்டும் என்று நினைக்கிறான். தீயை அணைக்கத் தண்ணீர் வேண் டுமே? ஐயன் சடையிலிருக்கும் கங்கை நீரைச் சொரிந்து அதை அணைக்கிறான்.

இப்போது சடையில் இருக்கும் பிறைச் சந்திரனையும் பாம்பையும் கண்டதும் ஒரு யோசனை! இந்தப் பாம்புக்கு இந்தச் சந்திரனைக் கொடுத்தால் என்ன? உடனே பிறைச் சந்திரனைப் பாம்பின் வாயில் கொடுக்கிறான். அடுத்ததாக முருகன் கவனம் ஐயன் கையி லிருக்கும் மானின் மேல் தாவுகிறது. மானுக்கு என்ன கொடுக்கலாம்.? இருக்கவே இருக்கிறது ஐயன் சடையி லிருக்கும் அறுகம்புல்! சட்டென்று அருகம்புல்லை யெடுத்து மானுக்குக் கொடுத்து மகிழ்கிறான்.

இதன்பின் இறைவனின் மேனி யில் மிதித்துத் துகைத்து விளையாட அவர் மேனியிலிருந்த வெண்ணீறு புழுதியாகக் கிளம்பி முருகன் மேனியும் வெண் ணீரால் அபிஷேகம் செய்ததுபோலாகி விடுகிறது. அதனால் அவன் நீராட வேண்டும் என்று நினைக்கிறான். எங்கே நீராட லாம்? பக்கத்திலேயே கங்கை இருக்கிறதே! அதில் இறங்கி நீரில் மூழ்கித் திளைக்கிறான். அதனால் அவன் கண்கள் சிவந்து போகிறதாம். இப்படி முருகன் செய்த குறும்பை வருணிக்கிறார் குமரகுருபரர்.

அம்மை
மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான்
மார்பினிற் குரவையாடி
முழவு முதிர் துடியினிற் சிறுபறை முழக்கி
அனல்மோலி நீர் பெய்(து) அவித்து
முளை மதியை நெளியரவின் வாய் மடுத்து
இளமானின் முதுபசிக்கு அருத்தி
விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ
மிகப்புழுதி யாட்டயர்ந்து
விரிசடைக் காட்டினின் திருவிழிகள் சேப்ப
முழு வெள்ள நீர்த் துளையமாடிக்
குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வரச்
சிறு குறும்பு செய்தவன்

என்று குமரனின் குறும்பு விளையாட்டில் ஈடுபடுகிறார் புலவர் குமர குருபரர்..

shiva_parvati_ganesha_muruga_mango

கோபம் கொண்ட முருகன்

கந்தன், வீரபாகு முதலிய நவ வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது நாரதர் கையில் ஒரு மாங்கனியுடன் வருகிறார். அதை சிவ பெருமானிடம் கொடுக்கிறார். விநாயகரும் முருகனும் அக் கனியைக் கேட்க, “அகில உலகங்களையும் முதலில் யார் சுற்றி வருகிறார்களோ அவருக்கே இந்தக் கனி” என்று கூறி விடுகிறார்.

முருகன் தன் மயில் வாகனத்தில் ஏறிப் புறப்படுகிறான். அகில உலகங்களும் அம்மை அப்ப னுக்குள் அடக்கம் என்பதை உணர்ந்த விநாயகர், அம்மை அப்பனை வலம் வந்து, “ஐயனே! நான் அகில உலகங்களை யும் வலம் வந்து விட்டேன். எனவே எனக்கே இக் கனியைத் தர வேண்டும்” என்று கனியைப் பெற்றுக் கொண்டு விடு கிறார். மயிலில் ஏறி உலகை வலம் வந்த முருகன் விநாயகர் கையில் கனி இருப்பதைக் கண்டு வெகுண்டு மலை மேல் ஏறி தண்டாயுத பாணியாக நிற் கிறான். இதைக் கண்ட அம்மையும் அப்பனும் சிவகணங்கள் புடைசூழச் சென்று “குமரா! நீயே ஞானப் பழம் தானே! நீ ஞானபண்டிதன் அல்லவா? என்று சமாதானம் செய்கிறார்கள்.

முருகனின் இந்த லீலையால் அந்த மலை பழனி மலை என வழங்கப் படுகிறது.

பிரமன் பட்ட பாடு

ஒரு நாள் முருகன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிருஷ்டிகர்த்தாவான பிரமதேவன் சிவபெருமானைப் பார்க்க வருகிறார். நான்முகன் போகும் போது முருகனைக் கண்டு கொள்ளாமல் சிறு பிள்ளைதானே என்று கொஞ்சம் அலட்சியமாகச் செல்கிறார்.

முருகன் அவரை வழி மறிக்கி றான். ”உமது தொழில் என்ன?” என்று கேள்வி கேட்கிறான். படைப்புத் தொழில் என்று சொன்ன பிரமனை, ”அப்படியா னால் உமக்குப் பிரணவத்தின் பொருள் தெரியுமா?” என்று வினா எழுப்புகிறான். பிரமன் தடுமாறுவதைக் கண்ட முரு கன் அவர் தலையில் குட்டி அவரைச் சிறைப்படுத்துகிறான். பின் தானே சிருஷ்டித் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறான்.

இதைக் கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிடுகி றார்கள். இதை,

படைப்போன்
அகந்தை உரைப்ப மறை ஆதி எழுத்தென்று
உகந்த ப்ரணவத்தின் உண்மை புகன்றிலையால்
சிருஷ்டித் தொழிலைச் செய்வதெங்கன் என்று
குட்டிச் சிறையிருத்தும் கோமானே!

என்று முருகனின் பெருமையைப் புகழ்கிறார் குமரகுருபரர்.

கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர் செய்து
கன்றச் சிறையிடும் மயில் வீரா

என்று பரவுகிறார் அருணகிரிநாதர்.

muruga07சுவாமி நாதன்

தேவர்கள் முறையீட்டைக் கேட்ட சிவன் முருகனிடம் வருகிறார்.”முருகா! பிரமனை விட்டு விடு” என்று அறிவுரை சொல்கிறார். “ப்ரணவத்தின் பொருள் தெரியாமல் சிருஷ்ட்டித் தொழிலில் ஈடுபடலாமா?” என்று எதிர்க் கேள்வி போடுகிறான் குமரன்.”சரி, அப்படியா னால் உனக்கு அப் ப்ரணவத்தின் பொருள் தெரியுமா?” என்று ஏளனமாகக் கேட்கிறார் சிவன். “தெரியும். ஆனால் இப்படிக் கேட்டால் சொல்ல மாட்டேன் முறைப்படி நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் சொல்லுவேன் என்கிறான் குமரன்

மைந்தன் சொன்னபடியே. சீடனாகக் கீழே அமர்ந்து பணிவோடு உபதேசம் பெறுகிறான் தந்தை. மைந்தன் முருகன் தகப்பன் சாமியாக ஸ்வாமிக்கே நாதனாக ப்ரணவத்தின் பொருளை உபதேசம் செய்கிறான்.

இதை, “சிவனார் மனம் குளிர உபதேச மந்தரம் இரு – செவி மீதிலும் பகர் செய் குருநாதா” என்று வாயாரப் போற்றுகிறார் அருணகிரிநாதர். இப்படி தந்தைக்கே உபதேசம் செய்த ஸ்வாமிநாதனாக ஸ்வாமி மலையில் காட்சி தருகிறான் குமரன். முத்து ஸ்வாமி தீக்ஷிதருக்கும் குருவாக வந்து உபதேசம் செய்ததும் இங்கேதான்.

மயில் வாகனன்

முருகன் தன் வாகனமான மயிலில் ஏறிக் கிளம்புகிறான். என்னென்ன நிகழ்கின்றன? . பாதாளலோகமும். மூதண்டகூட முகடும் பெயர்கிறது! உல கைத் தாங்கும் ஆதி சேடனின் முடி பெயர்கிறது! எட்டுத் திசைகளும் பெயர்ந்து விடுகின்றன! வேதாள கணங்களும் கூட ஆடுகின்றனவாம்! முருகன் இப்படி மயிலின் மீதேறி வருவதைப் பார்த்த அன்னை கௌரி மகிழ்ச்சி யடைகிறாள்.

இது மட்டுமல்ல யுகாந்தமே ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சுகிறான் பிரமன். அண்டர் அண்டங்களும் பாதாளலோகமும், மேரு மலையும் அடியில் தகர்ந்து போவது போல் தோன்றுகிறதாம். மலைகள் விசும் பில் பறப்பது போல் தோன்றுகிறது. மயில் சிறகை வீசிப் பறக்கும் போது அந்த விசையால் கடல்நீர் வற்றி விடுமோ என்று அச்சம் தோன்றுகிறது. தேவர்கள் நடுக்கம் கொள் கிறார்கள். முருகன் அப்படி மயிலைச் செலுத்தி விளையாடு கிறான்.

யுககோடி முடுவில் மண்டிய சண்டமாருதம்
உதித்ததென்று அயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்
வேலை சுவறச் சுரர் நடுக்கம் கொளச் சிறகை
வீசிப் பறக்கும் மயில்

என்று முருகன் மயிலில் ஏறி விளையாடுவதைக் காட்டு கிறார் அருணகிரிநாதர்.

murugan-soora-samharam

சூரன் வதம்

தேவர்களைச் சிறை மீட்க தேவ சேனாபதியாகி போருக்குப் புறப்படுகிறான் முருகன். திருச் செந்தூரிலே படை வீடமைத்துப் போர் செய்கிறான். பால னென்று மனதில் எண்ணிய சூரன், முருகனின் வீரத்தைப் புரிந்து கொள்கிறான். என்றாலும் அவன் ஆணவம் அவனை விடவில்லை. முருகன் விளையாட்டாகவே போர் செய்கி றான். மாயையால் பலரூபம் எடுக்கிறான் சூரன். சூரனை வெல்ல அன்னை சக்தியிடமிருந்து பெற்ற ஞான வேலை விடுகிறான் முருகன் அந்த வேல் சுழன்று சுழன்று சென்று சூரனை அழிக்கிறது. கிரவுஞ்ச மலையாகி நின்ற சூரனை அழிக்கிறது. இந்த வேல்

அண்டர் உலகுஞ் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல, அவுணர் உயிருஞ்சுழல
அகிலதலமும் சுழலவே
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப்பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமும் மருளச் சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்

என்று முருகனுடைய வேலின் வீரவிளையாட்டை வருணிக் கிறார் அருணகிரியார். தேவர் சிறை மீட்டு அவர்கள் குறை தீர்த்த குமரனுக்குத் தன் மகள் தேவகுஞ்சரியை மண முடித்து வைக்கிறான் தேவேந்திரன்.

muruga04வேட(ன்)தாரி

வேடன் நம்பிராஜனின் மகள் வள்ளி தங்கள் குல வழக்கப்படி தினைப்புனம் மேயவரும் பறவைகளை ஆலோலம் பாடி விரட்டிக் காவல் காக்கிறாள். நாரதர் மூலம் அவளைப்பற்றிக் கேள்விப்பட்ட முருகன் வேடன் வடிவத்தில் தினைப்புனம் வருகிறான். நான் வேட் டையாடிய மான் ஒன்று இங்கு வந்ததா?” என்று கேட்கிறான். மான் எதற்காக தினைப்புனம் வரவேண்டும் என்று வள்ளி அவனை மடக்குகிறாள்.

“வள்ளிமானைப் பார்க்க புள்ளி மான் வந்திருக்கும்” என்று என்கிறான் வேடன். வேடனின் இடக்குப் பேச்சைக் கேட்டுக் கோபம் கொண்ட வள்ளி அண் ணன்மார் வருவதைக் காட்டுகிறாள்.வேடன் உடனே வேங்கை மரமாகி விடுகிறான். இதன் பின் வளைச்செட்டி வேடம் கொண்டு வள்ளியிடம் காதல் நாடகமாடுகிறான் இப்படி வள்ளியிடம் மோகம் கொண்டு முருகன் சென்றதை

கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்
குறிப்பறிந்து அருகணைந்து, உன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கு எனக்
குறையிரந்து அவள் தொண்டைவாய்த்
தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்

என்று முருகன் வள்ளியிடம் காதல் கொண்டு சென்றதைக் கூறுகிறார் குமரகுருபரர்.

கிழவரின் விளையாட்டு

பெரும் பைம்புனத்துள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பிய குமரன், வயதான கிழவர் வேடத்தில் தினைப்புனம் வருகிறான். தான் தலயாத் திரை போகும் வழியில் அங்கு வந்ததாகவும் கொஞ்ச நாள் அங்கு தங்கி விட்டுப் போகலாம் என்று நினைப்பதாகவும் நம்பி ராஜனிடம் சொல்கிறார் கிழவர். நம்பிராஜனும் சம்ம திக்கிறான்.

நம்பிராஜன் சென்றபின் கிழவர், ”வள்ளி எனக்கு ரொம்பப் பசியாயிருக்கு என்று சொல்ல அவள் தேனும் தினைமாவும் கலந்து தருகிறாள். அதைத் தின்ற கிழவருக்கு விக்கல் எடுக்கவே தண்ணீர் கேட்கிறார். வள்ளி குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். தள்ளாடி விழு வதுபோல் பாசாங்கு செய்ய வள்ளி அவரைத் தூக்கிப் பிடிக் கிறாள்.”வள்ளி, என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்ட கிழவரை எதிர்த்துப் பேசி தன் கோபத்தைக் காட்டுகிறாள் வள்ளி.

இதன் பின் கிழவர், “வள்ளி இந்தக் காட்டில் தனியாக இருக்கிறாயே இங்குள்ள மிருகங் களிடம் உனக்கு பயமில்லையா?” என்று கேட்கிறார். வள்ளி எனக்கு சிங்கம் புலி எதைக் கண்டாலும் பயம் கிடையாது ஆனால் யானையைக் கண்டால் மட்டும் பயமாக இருக்கும் என்கிறாள்.

muruga001யானை வருத்தியது

வள்ளியின் யானை பயத்தைப் புரிந்துகொண்ட முருகன் (கிழவர்) தன் அண்ணன் யானை முகனை நினைக்கிறார். உடனே தம்பிக்காக யானைமுகனான அண்ணன் யானை வடிவோடு அங்கே தோன்றுகிறார். இவ் வளவு நேரம் தைரியமாக நின்ற வள்ளி அலறி அடித்துக் கொண்டு கிழவரை அணைத்துக் தாத்தா, அந்த யானையை விரட்டுங்கள் என்று மன்றாடுகிறாள். இப்பொழுது கிழவர் எங்கே? யானை எங்கே? குன்றாடும் குமரன் வள்ளியை அணைத்துக் கொண்டு நிற்கிறான். குமரனைக் கண்டதும் வள்ளி அளவிலா மகிழ்ச்சி அடைந்து நாணி நிற்கிறாள். இதை

அப்புனமதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கணமணமருள் பெருமாளே என்று

யானைமுகப்பெருமான் உதவி செய்ததைப் பாடுகிறார் அருணகிரியார். முருகன் வள்ளியை விரும்பி வந்து அவளோடு விளையாடியதை,

கானச் சிறுமானை நினைந்து
ஏனற்புனமீது நடந்து
காதற்கிளி யோடு மொழிந்து சிலைவேடர்
காணக் கணியாக வளர்ந்து,
ஞானக் குறமானை மணந்து

என்று முருகன் வள்ளி மணாளனாக விளங்குவதைப் போற்றுகிறார்.

இப்படிப் பலவிதமாக அளவிலாத விளையாட்டை நிகழ்த்துகிறான் முருகன்.

4 Replies to “அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்”

  1. கந்த சஷ்டி திருநாளில் இந்த கட்டுரை அற்புதமாக வெளி வந்துள்ளது.
    கட்டுரையாளருக்கு நமது பாராட்டுக்களும் நன்றிகளும்.

  2. அருமை. தித்திக்கும் முருகன் திருவிளையாடல்களை கந்த ஷஷ்டி அன்று தந்த நீங்கள் எல்லா நலமும் பெற இறைவன் அருள் புரிவானாக

  3. மிக அழகான பொருள் நயம் பொதிந்த கட்டுரை , திருமதி ஜயலக்ஷ்மியின் கட்டுரைகள் எப்போதுமே படிக்கப் படிக்க இனிப்பவை. கருத்துச் செறிந்தவை, இவற்றை எழுதும் அவருக்கும் பதிப்பிக்கும் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  4. கந்த சஷ்டி திருநாளில்
    குமர குருபரரின்
    பிள்ளைத்தமிழ் படித்தேன்;

    மனம் மகிழ்ச்சியடைந்தது
    மாண்பும் பெருகுகின்றது – தமிழனென்ற பெருமையிலே.

    நன்றி – மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *