எல்லையில் மீண்டும் போர்மேகம்

கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி இருக்கிறது.  பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் இந்தியப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

பங்காளி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்தபோதே, இரு நாடுகளிடையிலான பிரச்னைக்கும் கால்கோள் இடப்பட்டுவிட்டது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரை சொந்தம் கொண்டாடுவதன் வாயிலாக பாகிஸ்தான் தனது உள்ளூர் அரசியலை வளர்த்து வந்திருக்கிறது. உண்மையில் இந்திய விரோதமே பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குக் காரணம். அந்த அடிப்படையில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்குப் பெற இந்தியா மீது தொடர்ந்து விஷம் கக்குவது, அங்குள்ள அரசியல்வாதிகளின் அத்தியாவசியத் தேவையாக மாறிப்போனது.

இருதரப்பு மோதல்கள்- இதுவரை:

கார்கிலில் வென்று, புலிக்குன்று பகுதியில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய வீரர்கள்

சுதந்திரம் பெற்ற காலத்திலேயே காஷ்மீரில் ஊடுருவிய பாக். கூலிப்படையினரும், அந்நாட்டு ராணுவமும் காஷ்மீரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தனர். அதையடுத்து 1947, அக்டோபரில் தொடங்கிய போர்,  1948 ஏப்ரல் வரை  நீடித்தது. இறுதியில் இந்தியா வென்றபோதும், அப்போதைய அரசியல் தலைமையின் தவறான கொள்கை முடிவுகளால், அச்சமயத்தில் ராணுவநிலையில் இந்தியாவின் கரம் ஓங்கியிருந்தபோதும், பாக். ஆக்கிரமித்த பகுதிகள்  ‘ஆசாத் காஷ்மீர்’ என்ற பெயரில் இன்றும் அந்நாட்டின் பகுதியாகவே நீடிக்கின்றன. அதுவே இன்றும் தொடரும் பாக். பிரச்னைக்கு விஷ வித்து. ஐ.நா.சபை மட்டும் அன்று தலையிடாமல் இருந்திருந்தால், அதற்கு அன்றைய பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால் அப்போதே பகைத்தீ அணைக்கப்பட்டிருக்கும்.

அடுத்து பாக். அதிபராக அயூப்கான் இருந்தபோது 1965, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற இந்தோ- பாக். போர் மீண்டும் இந்தியாவின் பலத்தை உறுதிப்படுத்தியது. அப்போது பாகிஸ்தானின் பல முக்கிய நகரங்கள் இந்தியாவின் வசம் வரவிருந்தன. இதை விரும்பாத வல்லரசு நாடுகளின் தந்திரத்தால் தாஸ்கண்ட் நகரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்காரணமாக மர்மமான முறையில் நமது வீரம் மிகு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை இழந்தோம். இப்போரில் இந்தியத் தரப்பில் 3,264 வீரர்கள் பலியாகினர்; பாக். தரப்பில் 3,800 பேர் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து பாக். அதிபராக யாஹியா கான் இருந்தபோது, 1971 மார்ச் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற மூன்றாவது இந்தோ- பாக். போர், பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட வங்கதேசம் பிரியக் காரணமானது. இந்த வெற்றியால் இந்திய அரசியலில் இந்திரா காந்தியின் அரசியல் தலைமைக்கு மதிப்பு கூடியது. இப்போரில் இந்தியத் தரப்பில் 1,426 வீர்ர்கள் பலியாகினர்; பாக். தரப்பில் 8,000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போரின் இறுதியில் 91,000 பாக். வீர்ர்கள் இந்திய ராணுவத்திடன் சரணாகதி அடைந்தனர். ஆனால், இந்த வாய்ப்பை இந்திய அரசியல் தலைமை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதன்பிறகு இந்தியாவின் கார்கில் பகுதியில் அவ்வப்போது அத்துமீறினாலும், இரு நாடுகளிடையே போர் உருவானது 1998-இல் தான். பாக். பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது, அந்நாட்டுடன் நட்புறவு கொள்ள அன்றைய பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு பேருந்துப் பயணம் மேற்கொண்டார். ஆனால் முதுகில் குத்துவதை சுபாவமாகக் கொண்ட பாகிஸ்தான், 1998, மே மாதம் கார்கிலில் தனது வீரர்களை ஊடுவச் செய்தது. அதையடுத்து இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட  ‘ஆபரேஷன் விஜய்’ போர் நடவடிக்கை, பாக் வீரர்களுக்கு ந்ல்ல பாடம் கற்பித்து ஜூலையில் முடிவடைந்தது. இப்போரில் இந்தியத் தரப்பில் 527 பேர் பலியாகினர்; பாக். தரப்பில் 700 பேர் கொல்லப்பட்டனர். பாக். தரப்பில் சேத மதிப்பு இன்னமும் அதிகமாகவே இருக்கும்.

இவ்வாறாக, கடந்த 67 ஆண்டுகளில் இந்தியா மீது நான்கு முறை போர் தொடுத்து மண்ணைக் கவ்வியபோதும், பாக். ராணுவத்தின் ஆதிக்க வெறி அடங்கவில்லை. இதன் காரணம் என்ன என்று பார்த்தால், அந்நாட்டு அரசியல்வாதிகளை அடக்கியாள பாக். ராணுவம் கைக்கொள்ளும் தந்திரமே இந்தியா மீதான தாக்குதல் என்று கண்டறியலாம்.

பாகிஸ்தான் ஒரு பாவக்குழநதை:

முஸ்லிம் லீகின் நேரடி நடவடிக்கை- ஒரு மாபெரும் மானுடத் துயர்

மதவெறியை ஆணிவேராகக் கொண்டு, முகமது அலி ஜின்னா அறிவித்த நேரடி நடவடிக்கையால் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்ட பின் உருவான, இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த நாடு பாகிஸ்தான். அங்கு இதுவரை மக்களாட்சி முறை நிலைகொள்ளவில்லை. பெயரளவில் இயங்கும் மக்களாட்சி முறைக்கு அவ்வப்போது ராணுவ தளபதிகளால் சிக்கல் ஏற்பட்டு அடிக்கடி ராணுவ ஆட்சி நடைபெறுவது பாகிஸ்தானில் இயல்பாகிப்போனது.

பாகிஸ்தான் தனது ஆரம்பகாலப் பாவங்களை தொடர்ந்து சுமக்கிறது. அங்கு ஆட்சியில் அமரவும், அரசியல் நடத்தவும், ஒரே வழி இந்திய விரோத மனப்பான்மை மட்டுமே. இந்தியா மீது தொடர்ந்து வசைமாரி பொழிவதும், அவ்வப்போது எல்லை தாண்டி வாலாட்டுவதுமே அந்நாட்டு அரசியல்வாதிகள் சிறிதுகாலமேனும் தாக்குப் பிடிக்க உதவும் உபாயங்களாக உள்ளன. ஒவ்வொரு இந்தோ- பாக். போரின் முடிவிலும் பாகிஸ்தானில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் சுட்டிக்காட்டுவது இதனையே.

பாகிஸ்தானின் மூர்க்கத்திற்கு ஒரு காரணியாக தொடர்ந்து இருந்து வருகிறது காஷ்மீர் பிரச்னை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம் என்பதை ஏற்க பாகிஸ்தான் தயாராக இல்லை. இதில் வேதனை என்னவென்றால், இந்தியாவிடமிருந்து ஆக்கிரமிப்பால் பறிக்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) வாழும் காஷ்மீர மக்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் துயருறுகின்றனர். பாகிஸ்தானிலேயே பஞ்சாப், பலுசிஸ்தான், சிந்து பகுதிகளிலும் பழங்குடிப் பகுதிகளிலும் உள்நாட்டுக் கலகங்கள் தோன்றத் துவங்கி இருக்கின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைக்க பாக். அரசியல் தலைமைக்கு இந்திய விரோதமே கருவியாகப் பயன்பட்டு வருகிறது.

அங்கு ஜனநாயக ரீதியான அரசு ஸ்திரமாவதை ராணுவம் விரும்புவதில்லை. தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தற்போது பாக். ராணுவம் ஆட்டுவிப்பது, 1998 காலகட்டத்தில் அன்றைய பாக். ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப் ஆட்டுவித்ததை ஞாபகப்படுத்துகிறது. இந்தப் போட்டியில் அங்கு வெல்வது யார் என்பதற்கான களமே காஷ்மீர். தற்போது ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்திவருவதன் பின்புலம் இதுவே.

தொடரும் அத்துமீறல்கள்:

பூஞ்ச் பகுதியில் இந்திய வீரர்களின் பதிலடித் தாக்குதல்

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் படையினர் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடத்தி வரும் தாக்குதல்களால் இதுவரை (அக். 18 நிலவரம்) 9 குடிமகன்கள் இறந்துள்ளனர். இந்திய ராணுவத் தரப்பில் 13 ராணுவ வீரர்களும் பொதுமக்கள் 80 பேரும் காயமடைந்துள்ளனர். தற்காப்பு நடவடிக்கையாக எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து 30,000 பேர் வெளியேற்றப்பட்டு  113 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் துவங்கிய இத்தாக்குதல்கள், அவ்வப்போது விட்டுவிட்டுத் தொடர்கின்றன. இதற்கு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஜம்மு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளே பாக். தாக்குதலுக்கு தொடர் இலக்காக் உள்ளன. இதே காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவ முயன்ற பாக். கூலிப்படையினர் 20-க்கு மேற்பட்டோர் நமது வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது ஜம்முவில் இந்திய வீரர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, காஷ்மீரில் ஊடுருவுவது பாக். ராணுவத்தின் உள்நோக்கமாக இருக்கிறது. இதனை இந்திய ராணுவம் அற்புதமாக முறியடித்திருக்கிறது.

சௌஜியான், கிர்னி, சாபூர், கத்வா, சம்பா, ஆர்.எஸ்.புரா ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துவரும் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் கடந்த அக். 16, 17 தேதிகளில் இரவிலும் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறனர்.

இதுவரை இருந்த அரசுகள் போலல்லாது, எல்லைப் பகுதியில் காவலில் இருக்கும் ராணுவ அதிகாரிகளே இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. இதன் காரணமாக சுதந்திரமாக இயங்கும் ராணுவம், பாக். வீரர்களின் அத்துமீறலுக்கு சரியான பாடம் புகட்டி வருகிறது.

இந்திய ராணுவத்தின் பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் தாரப்பில் 60-க்கு மேர்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல். இதனை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை. பாக். தரப்பில் உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதென்பது அந்நாட்டு அரசியல் தலைமையின் தற்கொலை முயற்சியாகவே கருதப்படும்.

செய்ய வேண்டியது என்ன?

பாக். தாக்குதலால் காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி.

பாகிஸ்தானின் இந்த விபரீத விளையாட்டிற்கு பிரதமர் மோடியும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்விஷயத்தில் இந்திய அரசு முனைப்பான தாக்குதலை நடத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் வழக்கம்போலக் குறை கூறியுள்ளன. ஆனால், ராணுவத்தை சுதந்திரமாக இயங்க அனுமதித்து, தனது பணியை ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. ‘பாகிஸ்தான் வாலாட்டத்திற்கு தக்க பதிலடியை இந்திய வீரர்களே அளித்துவிட்டனர்’ என்று கூறி இருக்கிறார் பிரதமர் மோடி.

அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் தொடர்ந்து ஊடுருவி அத்துமீறும் சீன ராணுவமும், ஜம்மு பிரதேசத்தில் தொடர்ந்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவமும் ஒன்றுக்கொன்று பேசிவைத்து செயல்படுவதுபோலத் தெரிகிறது. இந்தியாவை சீண்டி, இருவேறு முனைகளில் தாக்குதல் நடத்துவது இவ்விரு நாடுகளின் திட்டமாக இருக்கலாம். எனவே தான் இந்திய அரசு நிதானம் காக்கிறது. இந்நிலையில், முப்படைத் தளபதிகளுடன் அரசு தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆயுத உதவி அளித்துவரும் சீனா, காஷ்மீரின் ஒரு பகுதியை (அக்‌ஷாய்சின்) ஆக்கிரமித்து, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு தரைவழிப் போக்குவரத்தை உருவாக்க முயன்று வருகிறது. இந்தியாவின் எழுச்சிக்கு முட்டுக்கட்டை போட, பாகிஸ்தானை ஒரு கருவியாக சீனா பயன்படுத்தக்கூடும். அமெரிக்காவும் கூட, இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க பாகிஸ்தானை பின்னணியில் இருந்து இயக்கக் கூடும்.

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரிவினைவாதிகளுக்கு பாக். ஆதரவளித்தும், அவர்களால் காஷ்மீர் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை. மத அடிப்படையில் இஸ்லாமியராக இருந்தாலும் காஷ்மீர மக்களின் அமைதி வாழ்க்கைக்கு இந்தியாவில் நிலவும் ஜனநாயகமே ஏற்றது என்பதை அம்மாநில மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இதுவும் பாகிஸ்தானின் சீற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்நிலையில், உள்நாட்டிலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துவரும் நிலையில், எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீரில் பாக். தொடர்ந்து அத்துமீறுவதன் நோக்கங்கள் துல்லியமாக்க் கண்காணிக்கப்படுவதுடன், அதன் பின்புலம் குறித்தும் மோடி அரசு தீர ஆலோசிப்பது அவசியம். ஏனெனில் பாகிஸ்தானிடம் இழப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், வளர்ந்துவரும் வல்லரசான இந்தியாவின் வளர்ச்சியை ஒரு சிறு போர் குலைத்துவிட முடியும். இதுவே பாகிஸ்தானின் நோக்கமாக இருக்க முடியும்.

இந்தியாவுடன் மோதுவதால் வெற்றிபெற முடியாது என்பதை அந்நாட்டு அரசியல் தலைமையும் ராணுவத் தலைமையும் உணர்ந்தே உள்ளனர். ஆனாலும், பொறாமையும், சீன கொடுக்கும் தெம்பும் பாக். அத்துமீறக் காரணமாகின்றன. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் தோல்வி அந்நாட்டு அரசியலில் பாராதூரமான விளைவுகளை உண்டாக்கும்.

எனவே, இந்திய அரசு இப்பிரச்னையை நிதானமாக அணுக வேண்டும். பலசாலியுடன் மோதி தன்னை பலசாலியாக கற்பிதம் செய்துகொள்ளும் நோஞ்சானுடன் நமக்கு எந்தப் போட்டியும் இல்லை. தராதரமற்ற பாக். ராணுவத்திற்கு இப்போது இந்திய அரசும் ராணுவமும் அளிக்கும் பதிலடியே மிகச் சரியானது. பாக். அத்துமீறல் எல்லை மீறினால், அப்போது இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க தார்மிக ஆதரவு தானாக வந்துசேரும்.

 

 முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும்!

– பிரதமர் நரேந்திர மோடி

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி

தில்லியில் முப்படைத் தளபதிகளின் மாநாடு அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்றது.  பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முப்படைத் தளபதிகளையும் மோடி முதல்முறையாக அப்போது நரேந்திர மோடி கூட்டாகச் சந்தித்தார். இந்திய விமானப் படை தளபதி அரூப் ராகா,  கடற்படை தளபதி ஆர்.கே.தோவான்,  ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதன் சுருக்கம்:

இந்தியா தனது பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதற்கு அமைதி, பாதுகாப்புடன் கூடிய சூழல் அவசியம். சாதகமான வெளியுறவுச் சூழலை உருவாக்குவதிலும், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் தற்போது அரசு கவனம் செலுத்தி வருகிறது.

நமக்கு பரிச்சயமான, வழக்கமான சவால்களோடு, மாறிவரும் உலகையும் சந்திக்க இந்தியா தயாராக வேண்டும். இதற்கு, பொருளாதாரக் கொள்கைகளிலும், பாதுகாப்புக் கொள்கைகளிலும் நமக்குப் புதிய சிந்தனை தேவைப்படுகிறது. முழு அளவிலான போர்கள் நடப்பது அரிதாகி இருக்கலாம். ஆனால், முப்படையானது எதிரிகளைத் தடுக்கும் கருவியாகத் தொடர்ந்து நீடிக்கும். அது மற்றவர்களின் அணுகுமுறை மீது தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

மாறிவரும் உலகில், கணிக்கவே முடியாத மறைமுக எதிரியையும், மறைமுகச் சவால்களையும் சந்திக்க முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்புச் சவால்களை கணிக்க இயலாததொரு எதிர்காலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம். சூழ்நிலைகள் அடிக்கடி மாறலாம்.  இணையவெளி மீதான ஆதிக்கமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும். நிலம், வான், கடல் போலவே விண்வெளி மீதான கட்டுப்பாடும் முக்கியமானதாக மாறும்.

இந்தியப் பாதுகாப்புப் படைகளை சீரமைக்க வேண்டியது அவசியம். படையினரின் முழுமையான ஆயத்த நிலையை உறுதிப்படுத்துவதற்காக போதுமான வளங்களை வழங்கவும், குறைபாடுகளைக் களையவும், நவீனமயத்துக்கான தேவைகளைச் சந்திக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது.

உலகம் தற்போது இந்தியாவை ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் கவனிக்கிறது. உலகப் பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்றாக மட்டுமன்றி, பிராந்திய, உலகப் பாதுகாப்புக்கான நங்கூரமாகவும் இந்தியா மாறும் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகள் தங்கள் கொள்முதல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், உள்நாட்டிலேயே பாதுகாப்புச் சாதனங்களை வடிவமைப்பதிலும், தயாரிப்பதிலும் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முப்படைகளும் வளங்களைப் பயன்படுத்துவதில் சிக்கனம், திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

 

2 Replies to “எல்லையில் மீண்டும் போர்மேகம்”

  1. “ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரிவினைவாதிகளுக்கு பாக். ஆதரவளித்தும், அவர்களால் காஷ்மீர் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை. மத அடிப்படையில் இஸ்லாமியராக இருந்தாலும் காஷ்மீர மக்களின் அமைதி வாழ்க்கைக்கு இந்தியாவில் நிலவும் ஜனநாயகமே ஏற்றது என்பதை அம்மாநில மக்கள் உணர்ந்திருக்கின்றனர்”

    The above paragraph clearly shows that the writer has no clue about the situation in the Kashmir valley. Kashmiris despise India. They cried for help during the floods and the moment the floods receded, they went back to the usual routine of pelting stones on Indian soldiers.

    On top of that, a lot of people have started raising ISIS flags in Kashmir, which the army is very concerned about. Add it to the fact that ISIS could very well be at our door soon thanks to the Pakistan military establishment, we are looking at a very gloomy winter which could keep our army forces and intelligence agencies extremely busy.

    And here you are, making all these tall claims about winning over the hearts of Kashmiris. Damn; Hindus never learn; do they?

  2. காஷ்மீா் பிரச்சனை வங்கதேச உருவாக்கம் குறித்து விரிவான கட்டுரைகள் தேவை. எழுத வேண்டுகின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *