வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

– கிரைம் நாவல் மன்னர்

ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்

 

RajeshKumarகிரைம் நாவல் மன்னரான எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமாரை தமிழ் எழுத்துலகில் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. 1,500-க்கு மேற்பட்ட குற்றப்புனைவு (கிரைம்), அறிவியல் புனைவு புதினங்கள், 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள ராஜேஷ்குமார் (66), உலக சாதனையாளர். தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கூட இவரது எழுத்துலக சாதனையை முறியடிக்க நீண்டகாலம் ஆகும்.

கோவையில் வசிக்கும் திரு.ராஜேஷ்குமார்  விஜயபாரதம் தீபாவளி மலருக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் முழு வடிவம் இது…


 

உங்களது எழுத்துலகப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

நான் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டேன். 1966-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எழுதிய முதல்கதை (உன்னை விட மாட்டேன்) கோவையில் வெளியாகும் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் வெளியாகி ரூ. 10 பரிசைப் பெற்றுத் தந்தது. அதைப் பார்த்து நண்பர்கள் பலரும் என்னை ஊக்குவித்தனர். தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வந்தேன்.

அந்தச் சமயத்தில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை தினமணிக்கதிரில் அதன் ஆசிரியர் சாவி நடத்தினார். அதில் என் கதை தேர்வாகி (நானும் ஒரு ஹீரோ தான்) வெளிவந்தது. அதன் பிறகு சாவி, ராணி பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தேன்.

 ஆனால் நீங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு தானே எழுத்தாளரானீர்கள்?

ஆமாம், பி.எஸ்சி, பி.எட். படித்து முடித்தவுடன், பவானிசாகரில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன் (1976). அங்கு ஒரேவிதமான பாடத்தை திரும்பத் திரும்ப ஏழு வகுப்புகளுக்கு சொல்லிக் கொடுத்ததில் எனக்கே அலுத்துவிட்டது. அதிலிருந்து மீள ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, என் தந்தை செய்துவந்த ஜவுளித் தொழிலில் ஈடுபட்டேன். அப்போது பல ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் பலதரப்பட்டவர்களைச் சந்திக்கும் அனுபவமும் கிடைத்தன. ஆனால், ஜவுளித் தொழிலில் எனக்கு நஷ்டமே ஏற்பட்டது. அப்போது தான் மீண்டும் எனது கவனம் எழுத்துலகில் திரும்பியது.

தொழிலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து விடுபட எழுத்து எனக்கு மிகவும் துணையாக இருந்தது. அப்போது எனது எழுத்துத் திறனையே மூலதனமாக்கி முழுநேர எழுத்தாளராக முடியும் என்ற உறுதி ஏற்பட்டது. தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.

 எந்தப் புதிய முயற்சியும் உடனே வெற்றி கண்டுவிடுவதில்லை. உங்களுக்கு எப்படி?

உண்மைதான். நானும் ஆரம்பகாலத்தில் பல சோதனைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அதனால் நான் நிலைகுலைந்ததில்லை. அதையே சவாலாக ஏற்று தொடர்ந்து எழுதி எனது எழுத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டேன்.

எனது முதல் கதை 1966-ல் வெளியானது. அதன்பிறகு பல பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும் பரவலாக நான் கவனம் பெறவில்லை. அந்தக் காலத்தில் ‘குமுதம்’ வார இதழில் எழுதுவதே பெரும் சாதனையாக இருந்தது. நானும் குமுதத்திற்கு தொடர்ந்து சிறுகதைகளை அனுப்பி வந்தேன். ஆனால், ஒருகதையும் வெளியாகவில்லை; நானும் விடவில்லை. தொடர்ந்து தினசரி ஒரு கதையை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தேன். அதன் பட்டியலையும் தனியே தயாரித்து வைத்திருந்தேன்.

இவ்வாறு நூறு கதைகளுக்கு மேல் அனுப்பிய நிலையில் ஒருமுறை சென்னை, குமுதம் அலுவலகத்திற்கே நேரில் சென்றுவிட்டேன். அங்கு ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோதுதான். நான் நூறு கதைகளைத் தொடர்ந்து அனுப்பியதே அவருக்கு தெரியவந்தது. அப்போது அவர், “நீங்கள் நூறு கதைகளை எழுதியது பெரிய விஷயமல்ல, குமுதம் பத்திரிகைக்கு ஏற்றவிதமாக எழுதினால் தான் அது வெளியாகும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு எழுதுங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அதன்பிறகு அதுவரை குமுதத்திற்கு அனுப்பிய அனைத்துக் கதைகளும் ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற கடிதத்தோடு திரும்பின. அதையே சவாலாக ஏறு, ‘இது நியாயமா?’ என்ற தலைப்பில், குமுதம் அளவுகோலுக்கு ஏற்றவிதமாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பிவைத்தேன். அந்தக் கதை அடுத்த வாரமே குமுதம் வார இதழில் வெளியானது.

அரசு ஆசிரியராகப் பணியாற்றுவதை விடுத்து, எழுத்துத் துறையில் சவாலாக இறங்கித்தான் நான் சாதித்தேன். இதுபோல பல சோதனைகளை,  புறக்கணிப்புகளைக் கடந்து தான் உயர்நிலையை அடைந்திருக்கிறேன்.

 எழுத்துலகில் பல துறைகள் இருக்கின்றன. அதில்  ‘கிரைம் எனப்படும் குற்றப்புனைவுத் துறையை எப்படி உங்களுக்கு உரியதாகக் கண்டுபிடித்தீர்கள்?

Crime Novelsஉண்மையில் கிரைம் எழுத்து எனக்கு இயல்பிலேயே இருந்துள்ளது. இதற்கு எனது அம்மா சிறுவயதில் கூறிய கதைகளும் காரணமாக இருக்கலாம். எல்லா அம்மாக்களையும் போல எனது அம்மா சாதாரணக் கதை கூறியதில்லை. அவர் சொன்ன கதைகள் எல்லாமே வீரக்கதைகள். எனது தாத்தா காலத்தில் மருதமலைக்கு மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு செல்வாராம். அந்தக் காலத்தில் மருதமலைப் பக்கம் இரவு நேரத்தில் செல்லவே அனைவரும் அஞ்சுவார்களாம். ஆனால் எனது தாத்தா துணிவுடன் அங்கு வியாபார விஷயமாக சென்று வருவாராம். அந்த அனுபவக் கதைகளை நேரில் பார்த்தது போல அம்மா சொல்லியிருக்கிறார். மருதமலை முருகன் கோயிலில் திருட முயன்ற மூன்று திருடர்களை முருகர் கல்லாக மாற்றிய கதையை எனது சிறுவயதில் சோறூட்டியபோது அம்மா சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. இதுவும் கூட எனக்கு திகில் கதைகளை பின்னாளில் எழுதத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.

நான் எழுதத் துவங்கிய காலத்தில் எழுதிய பெரும்பாலான கதைகளில் இந்த அம்சம் வெளிப்பட்டதைக் கவனித்தேன். கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதையும் எனது கதைகளில் சொல்லிவந்தேன். அதற்கு குற்றப்புனைவுக் கதைகள் உதவிகரமாக இருந்தன. 1976 வரையிலும் எனது கதைகளின் மூலப்பொருளாக குற்றச் செய்திகளும் ஒவ்வொருவருக்கும் இறையச்சம் தேவை என்ற அடிப்படை அறவுணர்வுமே இருந்து வந்தன. சட்டத்தின்முன் குற்றவாளி தப்பினாலும் இயற்கை அவனைத் தண்டிக்கும் என்ற நீதிபோதனையையே எனது கதைகளில் வலியுறுத்தி வந்தேன்.

1980களில் பத்திரிகைகளில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, லட்சுமி, சாண்டில்யன் போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அவர்கள் அனைவருமே சமூகப் புதினங்கள் எழுதுவதில் தேர்ந்தவர்கள். அவர்களுடன் போட்டியிட முடியாது என்பதை எனது இளம் மனது உணர்ந்தது. அப்போதுதான், அவர்கள் தொடாத, அதே சமயத்தில் எனக்கு நன்றாக வரக்கூடிய குற்றப்புனைவுத் துறையை (கிரைம்) தொடரத் தீர்மானித்தேன்.

 கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என நம்புகிறீர்களா?

கண்டிப்பாக. நான் எழுதும் எந்த குற்றப்புனைவு புதினத்திலும் இறுதியில் நியாயமே வெல்லும் என்பதையே உறுதிப்படுத்தி இருப்பேன். எனது ஆரம்பகாலக் கதைகளில் கடவுள் பக்தியே மனிதர்களைக் காக்கும் என்பதை பலவாறாகச் சித்தரித்திருக்கிறேன். உதாரணமாக ஒரு கதை. இக்கதை குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களுக்குப் பிடித்த கதை.

அந்தக் கதையில் தாய் ஒருவர் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு சிவப்புப்புடவை சார்த்த வேண்டும் என்று நச்சரித்து விருப்பமில்லாத மகனுடன் கோயிலுக்குச் செல்வார். செல்லும் வழியில் ரயில்பாதையில் ஏற்பட்டிருக்கும் விரிசலைக் காணும் மகன், அம்மனுக்கு சார்த்த வைத்திருந்த புடவையை எதிர்த்திசையில் காட்டியபடி ஓடி, பெரும் விபத்து நேராமல் காப்பாற்றுவான். கதையில் முடிவே அதுதான். இதைத் தானே ‘தெய்வம் மனுஷ்ய ரூபே’ என்கிறார்கள்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்துக்குள் பலர் செல்வார்கள். அதுவும் அவனது விளையாட்டுத் தான். கடவுள் எக்காலத்திலும் நேரடியாக வர மாட்டார். சக மனிதராகத் தான் அவர் வருவார். இந்த ஞானம் வர நீண்டகாலம் ஆகலாம்.

நான் கடவுள்பக்தி மிகுந்தவன். சிறுவயதில் தினசரி கோயிலுக்குச் செல்வேன். காமாட்சியம்மன், முருகன், தண்டுமாரியம்மன், சாயிபாபா கோயில் என முறைவைத்து ஒவ்வொருநாளும் கோயிலுக்குச் சென்ற காலம் உண்டு. பிறகு சக மனிதரை மகிழச் செய்வதே தெய்வகாரியம் என்பதை உணர்ந்தேன். கோயில் வழிபாடு வர்த்தகமயமாகிவிட்ட சூழலில், நேர்மையுடன், நல்ல காரியங்களைச் செய்வதே இறைபணி என்று தீர்மானித்துக்கொண்டேன். எனது கதைகள் மூலமாக சமுதாயத்திற்கு நல்லது செய்தாலே போதுமே?

Rajeshkumar 008நீங்கள் எழுத வந்த காலத்தில் தமிழ்வாணன், பி.டி.சாமி. புஷ்பா தங்கதுரை, சுஜாதா   போன்றவர்கள் குற்றப்புனைவுக் கதைகளை எழுதிவந்தனர். அவர்களின் பாதிப்பு உங்களிடம் உண்டா?

நான் எழுதவந்த காலத்தில் தமிழ்வாணன் மறைந்துவிட்டார். ஆனால் அவரது புதினங்களைப் படித்திருக்கிறேன். சங்கர்லால் துப்பறியும் அக்கதைகள் குற்றப்புனைவுத் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தின. ஆனால், அவரது தாக்கம் எனது எழுத்தில் வரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பிற எழுத்தாளர்களைப் போல ஆபாசமும் வக்கிரமும் கலந்து எழுதக் கூடாது என்றும் எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன்.

எழுத்தாளர் சுஜாதாவின் தாக்கமும் என்மீது இருந்தது. அழுதான் என்பதை உடைந்தான் என்று புதிய சொல்லாட்சியாக அவர் எழுத்துலகில் கொண்டுவந்தார். இலக்கியம் என்றால் ஏதோ ஒரு ஜந்து என்றிருந்த நிலையை அவர் தான் உடைத்தார். எனினும் அவரது எழுத்தின் பாதிப்பு என்னிடம் வந்துவிடக் கூடாது என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன். எனக்கென்று ஒரு தனி பாணியை நானே உருவாக்கிக் கொண்டேன்.

ஆங்கிலத்தில் குற்றப்புனைவு இலக்கியம் பேரிடம் வகிக்கிறது. அகதா கிறிஸ்டியின் உலகப்புகழ் அனைவரும் அறிந்தது. எழுத்தாளர் ஆர்தர் கனான் டாயல் உருவாக்கிய புலனாய்வாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்திற்கு இன்றும் கோடிக் கணக்கான ரசிகர்கள் உண்டு. அவர்களின் தாக்கம் உங்களிடம் உண்டா?

நான் கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் வந்த குற்றப்புனைவுப் புதினங்களைப் படித்திருக்கிறேன். இத்துறையில் எனது ஈடுபாட்டை வளர்க்க அவை பயன்பட்டன. அதிலும், இர்வின் வாலஸ் (1916- 1990) எழுதிய அறிவியல் புனைகதைகளில் எனக்கு அந்நாட்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரது ‘தி பிரைஸ்’ புதினம் நோபல் பரிசு வழங்குவதில் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தியது.

அவர் எந்தக் கதை எழுதினாலும், அதைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து அதன் பின்னரே எழுதுவார். விமானநிலையம் பற்றிய கதையானால், அங்கேயே சென்று ஆராய்வார்; கார் தொழிற்சாலை பற்றிய கதையானால், அதே தொழிற்சாலையில் ஆய்வு செய்து நுட்பமான தகவல்களுடன் கதை எழுதுவார். இந்த அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. ஆனால், அவரைத் தொடர்ந்து படித்தால் அவரது பாதிப்பு என் எழுத்தில் படிந்துவிடும் என்பதால் அதையும் விட்டுவிட்டேன். நல்ல எழுத்தாளருக்கு கதைக் கரு எங்கிருந்தும் கிடைத்துவிடும். இதற்கு ஆங்கில புதினங்களைப் படிக்க வேண்டியதில்லை.

 உங்கள் கதைகளில் பல தகவல்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறீர்கள். இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுகிறீர்கள்?

நான் எந்தக் கதை எழுதினாலும், அதற்கு பத்திரிகைகளில் வெளியாகும் உள்ளூர் செய்தித் துணுக்குகளே ஆதாரமாக இருக்கின்றன. எழுத்தாளனுக்கு முதல் தேவை தேடுதல் தான். நான் தினசரி பத்திரிகைகளில் படிக்கும் செய்திகளில் குற்றம் தொடர்பானவற்றை குறித்துவைத்துக் கொள்வேன். அதை எனது பாணியில் சம்பவங்களாகத் தொகுத்து, வளர்த்தெடுத்து கதையாக்குவேன்.

எனது புதினங்களில் பெரும்பாலானவை கற்பனையல்ல. நான் படித்த, பார்த்த, என்னை பாதித்த நிகழ்வுகளே கதையாக வடிவம் பெறுகின்றன. அதற்காக முன்னர் பத்திரிகைகளை நம்பி இருந்தேன். இப்போது இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

Crime Novels4ஒரு உதாரணம். செயற்கை இருதய வால்வ் தயாரிக்க பல்லேனியம் என்ற தனிமம் பயன்படுகிறது. அதைக்கொண்டு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கிறார்கள் என்பது செய்தி. அதில் ஒரு முக்கிய தகவல், அணுக்கதிர் இயக்கம் கொண்ட இந்த வால்வின் விலை ரூ. 20 கோடி என்றும், இந்த அறுவைச் சிகிச்சையை ரகசியமாகச் செய்வார்கள் என்றும் ஓர் ஆங்கில பத்திரிகையில் படித்தேன். இந்த அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் விவரங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் அந்தச் செய்தி கூறியது. அதில் தான் எனது ‘ஃபர்ஸ்ட் ஃபிளைட் டு நியூயார்க்’ புதினத்திற்கான கரு கிடைத்தது. அந்த வால்வை இந்திய கோடீஸ்வரரின் ஒரே இளம்வயது மகளுக்குப் பொருத்த அவர் செய்யும் முயற்சியையும், அவளைக் கொன்று வால்வை அபகரிக்கத் திட்டமிடும் குற்றவாளியையும் சித்தரித்து புதினத்தை உருவாக்கினேன். குற்றவாளியிடமிருந்து அந்த இளம்பெண் எப்படித் தப்பினாள் என்பதே கதையின் முடிவு.

இப்படித்தான் அணுவியல், ஸ்டெம் செல், உடலுறுப்பு தானம் போன்ற புதிய விஷயங்களில் தகவல்களைத் திரட்டிக் கொள்வதன் மூலமாக புதிய கதைகளை உருவாக்குகிறேன். நான் இதுவரை விமானநிலையத்திற்கே போனதில்லை. ஆனால், விமானப்பயணம் செல்லும் லேனா தமிழ்வாணன் போன்ற நண்பர்களிடம் விமான நிலையம் குறித்த தகவல்களை கிரகித்துக் கொள்வேன்.

எனது ‘நந்தினி 440 வோல்ட்ஸ்’ புதினத்தில் குற்றவாளியிடமிருந்து கண்தானம் பெற்ற ஒரு பெண் எவ்வாறு அநீதிக்கு எதிரானவளாக தன்னை மாற்றிக்கொள்ள நாடகமாடுகிறாள் என்பதைச் சித்தரித்தேன். இப்படித்தான் புதிய கோணங்களில் கதையை நடத்துவேன். ஆர்வமூட்டும் துவக்கம், அதிரடித் திருப்பங்கள், திடீர் உச்சம் என எனது கதைக்கு ஒரு வடிவம் உள்ளது. அதன் முடிவில் நீதிபோதனை மறைந்திருக்கும்.

இப்போதும் கூட குமுதம் வார இதழில் எழுதும் ‘வெல்வெட் குற்றங்கள்’ தொடர்கதையில், காணாமல் போன மலேசிய விமானம் என்ன ஆனது என்று, சமீபத்திய பரபரப்புச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதி வருகிறேன். அதற்காக, காணாமல் போன விமானங்களின் வரலாறு, அதைக் கண்டுபிடிக்கச் செய்யப்படும் படிப்படியான நடவடிக்கைகள், கண்காணிப்பு விமானம், மீட்பு நடவடிக்கைகள், கடலுக்குள் உள்ள பொருள்களைக் கண்டறியும் ஒலி அலை தொழில்நுட்பம் போன்ற பல புதிய விஷயங்களை அறிந்துகொண்டு, அதை கதையில் எழுதுவதால், புதிய வாசகர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.

 1980 முதல் 1990களின் பிற்பாதி வரையிலும் வார இதழ்களின் பொற்காலமாக இருந்தது. தவிர காகிதக்கூழ் பதிப்பு (பல்ப்  ஃபிக்‌ஷன்) எனப்படும் பாக்கெட் நாவல்களின் வளர்ச்சி அதீதமாக இருந்தது. அக்காலகட்டத்து எழுத்தாளர்களில் முதன்மையானவராக நீங்கள் திகழ்ந்தீர்கள். ஒரே சமயத்தில் 7 வார இதழ்களிலும் 3 பாக்கெட் நாவல்களிலும் தொடர் கதைகளாகவும், குறும் புதினங்களாகவும் எழுதித் தள்ளினீர்கள். எப்படி இதனை நீங்கள் சாதித்தீர்கள்?

Crime Novels2எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் உழைப்பு தான். தவிர எனக்கு வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், என்னைத் தொடர்ந்து படித்த வாசகர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இந்தச் சாதனை நிகழ்ந்திருக்காது.

குறிப்பாக குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள், கல்கண்டு வார இதழில் 1980-ல் அளித்த தொடர்கதை வாய்ப்பே என்னை அனைவரும் உணரச் செய்தது. அதில் எழுதிய ‘7வது டெஸ்ட் டியூப்’ தொடர்கதை எனது அடையாளத்தை பதிவு செய்த்து. அதைத் தொடர்ந்து பல வார இதழ்கள் எனது படைப்புகளை வெளியிடத் துவங்கின. எனக்கும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம்.

எஸ்.ஏ.பி. மட்டுமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம், இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன், சாவி ஆசிரியர் விஸ்வநாதன், கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் போன்றவர்கள் என் மீது வைத்திருந்த அன்பே என்னை கடுமையாக உழைக்கச் செய்தது. அந்தக் காலத்தில் வாரத்தின் 7 நாட்களும் ஏதாவது ஒரு வார இதழில் எனது தொடர்கதை வந்து கொண்டிருந்தது. விகடன், ராணி, கல்கி, குமுதம், சாவி, இதயம் என அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து இதழ்களும் எனது தொடர்கதையையைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தன.

தவிர எனது நண்பரும் உடன்பிறவாத் தம்பியுமான அசோகன் (ஜீயே) 1985-ல் ஆரம்பித்த பாக்கெட் நாவல்கள் விற்பனையில் சரித்திரம் படைத்தன. அசோகனுடனான எனது உறவு எழுத்தாளர்- பதிப்பாளர் என்ற நிலையையும் தாண்டியது. கடந்த 30 ஆண்டுகளில், அவருக்கு மட்டுமே 500-க்கு மேற்பட்ட புதினங்களை நான் எழுதி இருக்கிறேன்.

இவர்கள் அனைவருக்கும் கதை எழுத எனக்கு ஒருநாள் போதாது என்ற நிலைமை இருந்தது. தினமும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் தொடர்கதை அத்தியாயங்களை எழுதி கூரியரிலோ, அல்லது எனது வாசகர்களான ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலமாகவோ சென்னைக்கு அனுப்பி விடுவேன்.

 ஒவ்வொரு வார இதழிலும் வெவ்வேறு விதமான தொடர்கதை எழுதும்போது, எப்படி அதை நினைவில் கொண்டு எழுதுவீர்கள்?

உண்மையில் இதை கடவுளின் கிருபை என்று தான் சொல்ல வேண்டும். எனது ஞாபக சக்தி கூர்மையானது. தவிர, ஒவ்வொரு பத்திரிகைக்கும் எழுதும் அத்தியாயங்களின் சுருக்கத்தை தனிக் குறிப்பேட்டில் குறித்து வைத்திருப்பேன். எந்த ஒரு கைப்பிரதியையும் நகல் எடுத்து வைத்துக் கொள்வதில்லை.

நாம் எந்த ஒரு விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறோமோ, அதை மறந்துவிட மாட்டோம். அப்படித்தான் எனக்கு என் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் நினைவில் வைத்திருப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. தவிர அர்ப்பணிப்பு மனநிலையில் நீங்கள் எழுதும்போது எல்லாம் கூட வரும். எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் என் அர்ப்பணிப்புக்குக் காரணம்.

Rajeshkumar 002இன்னமும் நீங்கள் கையில் தான் எழுதுகிறீர்களா?

ஆமாம். கணினியில் தட்டச்சு செய்யப் பழகி இருந்தாலும், கையில் எழுதும்போது வரும் தொடரோட்டம் தட்டச்சில் வருவதில்லை. எனவே, இப்போதும் கையில் தான் எழுதுகிறேன்.

முந்தைய காலத்தில் வார இதழ்களுக்கு இருந்த கிராக்கி தற்போது குறைந்துவிட்டது. புதினங்களைப் படிக்கும் வாசகர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எல்லாமே மாற்றங்களுக்கு உட்பட்டது தான். மாறிவரும் தகவல் தொழில்நுட்ப உலகிற்கு ஈடு கொடுக்க பத்திரிகைகளும் மாறியாக வேண்டியிருக்கிறது. முன்னர் 6 லட்சம் பிரதிகள் விற்றது குமுதம். வாசகர்களுக்கு பொழுதுபோக வாசிப்பு மட்டுமே கருவியாக இருந்த காலம் அது. இப்போதோ அலைபேசிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களின் காலம். எனவே ஒருநிமிடக் கதை, கால்பக்கக் கதைகள் என வாசகருக்கேற்ப வார இதழ்களும் வணிகரீதியாக மாறி இருக்கின்றன. ஆனாலும் தொடர்கதைக்கு இன்னமும் மவுசு இருக்கிறது.

வாசகர்களைப் பொருத்த வரை, புத்தக வாசிப்பு குறைந்திருந்தாலும், இணையதள வாசிப்பு பெருகி இருக்கிறது. அதற்கேற்ப மின்னூல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. எனது புதினங்களே இப்போது மின்னூல் வடிவில் கிடைக்கின்றன.

1980- 1990களில் ஓய்வே இல்லாமல் எழுதிய நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் தேவை குறைந்துவிட்டதா?

இல்லை. இப்போதும் நான் மும்முரமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். சொல்லப்போனால் முன்னை விட இப்போது தான் நான் அதிகம் எழுதுகிறேன். இப்போதும்கூட, மங்கையர் மலர் மாத இதழ், குமுதம், சூரியகதிர் வார இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தவிர தொலைக்காட்சிக்காக சின்னத்திரை தொடர்களிலும் எழுதுகிறேன். திரைப்படத் துறையிலும் எழுதுகிறேன். இவை தவிர, புனைவல்லாத கட்டுரைகளும் எழுதுகிறேன்.

நான் எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. கோயிலுக்குப் போகக்கூட எனக்கு நேரம் இல்லை. இப்போதும்கூட பல்வேறு இதழ்களின் தீபாவளி மலர்களுக்கு சிறப்புச் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இவையல்லாது முகநூலில் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்ற தலைப்பில் பல புதிய விஷயங்களை எழுதி வருகிறேன். அங்கு எனக்கு மிகப் புதிய வாசகர்கள் பலர் அறிமுகமாகி வருகின்றனர்.

எனது மகன்கள் கூட, ‘ஏம்ப்பா கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூடாதா?’ என்று கேட்கிறார்கள். என்னால் ஓய்வெடுக்க முடியாது. ஓய்வெடுத்தால் எனக்கு வயதாகிவிடும் என்று அவர்களிடம் கூறுவேன்.

(நேர்காணல் தொடர்கிறது)

.

 

3 Replies to “வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1”

  1. அவரது வாசகர்களில் ஒருவனாகிய எனக்கு இந்த பேட்டி இப்போது இந்த தீபாவளி நன்னாளில் மிக்க மகிழ்வைத் தருகிறது. வையகம் வளமுடன் வாழ்க.

  2. என்ன. இவ்வளவு எளிமையாக பேசுகிறார். ஆச்சரியமாக உள்ளது. நல்ல தீபாவளி கட்டுரை. கொடுத்ததிற்கு நன்றி.

  3. க்ரைம் சக்கரவர்த்தி அண்ணன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தால் உருவான சுஜாதா மாதநாவலில் நாலும் தெரிந்துக்கொல் ( பரத் அட்சயா ஹீரோ ஹீரோயின் ) என்ற கதைமூலம் ஆரம்பித்து அடுத்து க்ரைம் நாவல்
    மரணத்திற்கு ஒரு மணு
    ஹலோ டெட் மார்னிங் என தொடர்ந்து இன்றும் அவர் எழுத்துக்களோடு பயணம் செய்து கொண்டிருக்கும் வாசகர் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்
    அவருக்கு பிடித்த அன்னை ராமலிங்க சௌடேஸ்வரி தெய்வம் இன்னும் பசுமையாக நினைவுகளில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *