பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை

Parivadini - logo. The name referes to a type of Veena.
Parivadini – logo. The name referes to a type of Veena.

ர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமான புலம்பல் என்பது, இக்கலையின் மீதான இளைய தலைமுறையினரின் அக்கரையின்மையும், பொது மக்களின் ஆர்வமின்மையுமே. அரசியல் காழ்ப்புகளால் தமிழகத்தில் நிகழ்ந்த பெரும் கலாசார அழித்தொழிப்பு இந்நிலைக்கு ஒரு கூடுதல் காரணமாக இருந்திருக்கிறது. இத்தனையையும் தாண்டி தமிழகத்தை, அதிலும் சென்னையை கர்நாடக இசையின் தலைநகர் என்று சொல்லலாம். அரியக்குடி, செம்மங்குடி, ஜி.என்.பி, எம்.எஸ், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் என்று தொடர்ந்து வரும் மகாமேதைகள் கர்நாடக இசைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தூக்கி நிறுத்துகிறார்கள்.

சபாக்களும் சில கர்நாடக இசைக்கலைஞர்களும் இந்த நிலையை மாற்றவும் பெரும்பாலானவர்களுக்கு இக்கலையை கொண்டு சேர்க்கவும் பல விதங்களில் முயன்று பார்த்திருக்கிறார்கள். அவை சபா கச்சேரிகள் முதல் திருவிழா கச்சேரிகள், சினிமா தியேட்டர்கள் என பல விதங்களில் விரிந்தாலும், மிகப்பெரும்பாலானவை சிறு சலசலப்பை மட்டுமே ஏற்படுத்திவிட்டு இறந்துவிடுகிறது. அல்லது வருடந்தோறும் நிகழ்த்தும் அனுஷ்டானமாக மட்டுமே இருந்துவிடுகிறது. இவைகள் கர்நாடக இசையை உயிர்ப்போடு வைத்திருக்க தேவையானதே என்றாலும் அதற்குமேல் அதன் தளங்களையும், சாத்தியங்களையும் விரிவாக்க முடிவதில்லை.

கர்நாடக இசை இந்நிலையில் இருப்பதற்கு காரணங்கள் பல உண்டு. இவற்றில் எனக்கு மிக முக்கியமாக தெரிவது இசைக்கலைஞர்களுக்கும், சபாக்களுக்கும், புரவலர்களுக்கும் அதன் மீதுள்ள (அல்லது இல்லாத) ஈடுபாடுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நல்ல இசை ஒலிக்க முயற்சிகள் நடந்தாலும் அதன்மீது வெளிச்சம் விழுவதில்லை. அப்படிப்பட்ட முயற்சிகளும் மக்களைத்தேடிசென்றடையாமல் மக்களை அவர்களை நோக்கி வரக்கோருகிறது.

நல்ல இசைப் பதிவு உள்ள கர்நாடக இசை சிடிக்கள் வாங்கவேண்டும் என்றால் ஐநூறுகளிலும் ஆயிரங்களிலும் ஆகிறது. ரேடியோக்கள் கர்நாடக இசையை முன்னிறுத்துவது பெரும்பாலும் இல்லை. கர்நாடக இசையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பவை நேரடி கச்சேரிகள் மட்டுமே.ஆனால் அவை எங்கு நிகழ்கின்றன என்று அறிந்து, பயணித்துச் சென்று பார்ப்பதற்கு நமக்கு பொறுமையும், முனைப்பும் இல்லை. அவைகளும் சென்னையில் மட்டுமே மையம் கொண்டுள்ளன. சென்னைக்கு வெளியே உள்ள தமிழகம் என்ன செய்யமுடியும்? கிட்டத்தட்ட சென்னை தவிர வேறு ஊர்களில் கர்நாடக இசை கற்பிக்கும் நல்ல ஆசிரியர்கள் கூட இல்லை. இத்தனைக்கும் கர்நாடக இசையின் தொட்டில் என்று சொல்லப்படும் தஞ்சை மாவட்டத்திலேயே கர்நாடக இசை கற்பிக்கும் உருப்படியான ஆசிரியர் ஒருவர் கூட இல்லை என்று சொல்லிவிடலாம். ஆர்வம் இருந்தும் வாய்ப்பில்லாமல் ஒரு பெரும் ரசிகர் வட்டம் கிடைத்ததை கேட்டு த்ருப்தி அடைகிறது.

இதற்கு பதில் என்னவாகத்தான் இருக்கமுடியும்?  நாள்தோறும் முன்னேறிவரும் டெக்னாலஜியை பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல இசையை அவர்களிருக்குமிடத்தில் கொண்டு சேர்க்க முடியும். மனமிருந்தால். உண்மையான அக்கரையும், முனைப்பும் இருந்தால் சாதித்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. இதற்கான ஒற்றை பதிலாக இருப்பது “பரிவாதினி” என்ற ஆன்லைன் இசை சேனல். இவர்கள் தொடர்ந்து தினமும் கச்சேரிகளை இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். இப்போது இரண்டாவது வருடத்தில் அடிவைத்திருக்கிறார்கள்.

இவர்களது உழைப்பு அசாதாரணமானது. ஒரு கச்சேரியை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றால் முதலில் அங்கே இணைய இணைப்பு முதல் அத்தனையையும் தயார் செய்து, தரமான ஒலியமைப்போடு அதைச் செய்யவேண்டும். இது அத்தனை சுலபமான வேலையும் அல்ல. தன் முனைப்பால், தங்களது நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி மாபெரும் சேவையாக நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை எத்தனை கச்சேரிகள், எத்தனை ஒளிப்பதிவுகள், எத்தனை பொக்கிஷங்கள் இவர்களால் நிரந்தரப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நினைத்தால், ஒரு சிறு குழுவால் இத்தனை செய்துவிடமுடியுமா என்று பிரமிப்பே தோன்றுகிறது.

மேலும், இசையுலகில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பாடகர்கள் இரண்டு சதவிகிதம் கூட கிடையாது. மற்றவர்கள் இசைத்திறனில் சற்றும் குறைந்தவரல்ல எனும்போதும், வாய்ப்புகள் முதல், பல்வேறு காரணங்களால் இவர்கள் பொதுவெளியில் கவனிக்கப்படுவதே இல்லை. பரிவாதினி அபார இசைஞானமுடையவர்களுக்கு மேடை அமைத்துக்கொடுத்து அவர்கள் மேலும் ஊக்கமுடன் செயல்பட வழிவகுக்கிறார்கள்.  இதனால் போதிய பொது கவனம் பெறாதவர்கள் வெளிச்சத்திற்கு வருகிறார்கள். இவர்கள் இசைக்கலைஞர்களை தேர்ந்தெடுப்பதும் அவர்களது இசை ஞானத்தையும், திறனையும் வைத்து மட்டுமே என்பதால் எந்தவிதமான முன்முடிவுகளும் இல்லாமல் இவர்களால் இசையுலகில் தொடர்ந்து இயங்க முடிகிறது. பரிவாதினி – கர்நாடக இசைக்கு கிடைத்த ஒரு மாபெரும் கொடை.  இதன் பின்னனியிலிருப்பவர்களின் இசை அறிவும், ஆர்வமும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று.

lalitharamலலிதாராம் அதில் மிக முக்கியமானவர். இவர் கந்தர்வ கானம் , இசையுலக இளவரசர் ஜி.என்.பிதுருவ நக்ஷத்ரம்  போன்ற புத்தகங்களில் இசை கலைஞர்கள் வாழ்கையை பதிவு செய்தவர். இத்தனை உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளவர்களாலேயே பரிவாதினி போன்ற முயற்சியை தொடர்ந்து செய்யமுடியும்.

கருவியிசை கர்நாடக உலகில் பிரபலமாக இருந்தாலும் சபாக்கள் அவர்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காததாலும், சுழற்சி முறையிலேயே வாய்ப்பளிப்பதாலும், இன்று மிகப்பெரிய சரிவையும் சவாலையும் எதிர்நோக்கியிருக்கிறது. இது காலப்போக்கில் கருவியிசையினை அழித்துவிடவும் கூடும். பரிவாதினி குரலிசைக்கும் கருவியிசைக்கும் சமமான இடத்தை அளித்திருக்கிறது. இவர்களது ஒளிக்கோர்வைகளில் நேர்பாதி கருவியிசை நிகழ்ச்சிகளாகும். சாபாக்களின் இந்தச்செயல்பாட்டின் எதிர்மறை விளைவை இவர்கள் சமன் செய்கிறார்கள். இது இசையுலகிற்கு பெரும் நன்மை பயக்கும்.

பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது என்றும் தமிழிசை என்பது வேறேதோவென்றும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டிருக்கிறேன்.  நல்ல விஷயங்களை எல்லாமே பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் மனப்பான்மைக்கு சற்றும் எதிரானதல்ல இது. இதன் காரணமாகவே இவ்விசையிலிருந்து விலகிப்போன பலரையும் நான் அறிவேன். பரிவாதினி இவ்வரசியல்களுக்கு அப்பாற்பட்டது என்று நிறுவியிருக்கிறார்கள். கர்நாடக இசைக்குள் தலித்துகள் வரவேண்டும் என்று சமூக நீதி வாய் வக்கனை மட்டும் பேசி ஒதுங்குபவர்கள் அல்ல இவர்கள்.

தலித் கிறுத்துவர் (ஃபெர்னாண்டஸ்/பர்லாந்து) ஒருவரது பெயரில் விருது நிறுவி ஒவ்வொரு வருடமும் அதை  இசைக்கருவி செய்யும் வினைஞர்களுக்கு கொடுத்து பெருமை படுத்துகிறார்கள் (இந்த வருட விருது  குறித்த “தி இந்து” செய்தி இங்கே.) இவர்களது கருவிகள் மட்டுமல்ல இவர்களும் மேடை ஏறலாம் என்ற நிலையை பரிவாதினி உண்டாக்கியிருக்கிறது. இதை பரிவாதினி குழுவினரிடம் கேட்டபோது அவர்கள் “பர்லாந்து தலித் என்பதற்காக அல்ல. அவர் அபாரமான இசைக்கருவி வினைஞர் என்பதாலேயே அவர் பெயரில் விருது வழங்க முன்வந்தோம்.” என்று சொன்னார்கள். ஆம், மஹா கலைஞர்களுக்கும், வினைஞர்களுக்கும் செய்யப்படும் ஆத்மார்த்தமான மரியாதை என்பது அப்படித்தானே இருக்கமுடியும்?

Palghat Mani Iyer with Parlandu, the Mridangam Maker (Courtesy: The Hindu)
Palghat Mani Iyer with Parlandu, the Mridangam Maker (Courtesy: The Hindu)

இவர்கள் மேலும் பல முனைகளில் கர்நாடக இசையை பலருக்கும் கொண்டு சேர்க்கவும், இசைக்கலைஞர்களின் பங்களிப்பை நிரந்தரப்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் புதிய முயற்சிகளிலும் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். இவர்களே கர்நாடக இசையின் உண்மையான போராளிகள். உண்மையான ரசிகர்கள். உண்மையான முகம்.  இவர்களே கர்நாடக சங்கீதத்தின் எதிர்கால நம்பிக்கை.

பரிவாதினி  யூ ட்யூப் இசை சேனல் – இசைக் கச்சேரிகளை தொடர்ந்து அறிய சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்

கமகம் – லலிதா ராம் வலைப்பதிவு

பரிவாதினி  ஃபேஸ்புக் பக்கம்

லலிதாராம் ஃபேஸ்புக் பக்கம்

நவம்பர் 2014 – சென்னையில் பரிவாதினி இசை விழா

பரிவாதினி விருது  மற்றும் நன்கொடைகள் குறித்த மேலும் விவரங்கள் இங்கே.

கட்டுரையாசிரியர் ராமச்சந்திர சர்மா தஞ்சை இசைப் பாரம்பரியத்தினூடாக பிறந்து வளர்ந்த தேர்ந்த வாய்ப்பாட்டுக் கலைஞர். கூர்மையான ரசனை கொண்ட இசை விமர்சகர். தீவிர இலக்கிய ஆர்வலர். 

18 Replies to “பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை”

  1. இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்திராத என்னைப் போன்றவர்களுக்கு நல்ல அறிமுகம்…

    அத்துடன் கூடவே, இணைய முகவரிகளும் தந்திருப்பது கட்டுரையை விட நேரடியாக அவற்றின் வழியே இந்த இசையை கேட்கவும், இசை நிகழ்வை பார்க்கவும் வழி செய்கிறது…

    தொடர்ந்து கர்நாடக சங்கீதத்தின் இன்றைய நிலை குறித்தும், அந்த நிலையை மாற்றச் செய்ய வேண்டிய செயல்கள் குறித்தும் தமிழ்ஹிந்து போன்ற பாரம்பரியத்தில் ஈடுபாடு கொண்ட இணையங்களில் எழுத வேண்டும் என்று திருமிகு.ராமச்சந்திரசர்மா அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்…

    இசை என்பது வலுக்கட்டாயமாகத் திணிப்பது அல்ல… மக்களை இசையச் செய்ய வேண்டும்.. இதை கேட்கிற போது சந்தோஷம்… ஆனந்தம் உண்டாக வேண்டும்… ஆக, வர வர கர்நாடக இசையை இளந்தலைமுறையினரான எம்மால் இரசிக்க இயலாமல் போகிறது.. அதற்கு பலப்பல காரணங்கள் உண்டு.. எனவே, அதற்கேற்ப இரசனைக்குரியதாக இசை மாற வேண்டும் என்று விரும்புவதில் தவறென்ன இருக்கிறது..? பாரம்பரியத்தோடு நவீனம் கலந்து புதியதாக புத்தெழுச்சியோடு இசை மரபில் சாதனை படைக்க வேண்டுமல்லவா…? இவ்வாறு யான் குறிப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன்..

  2. //இவர்களது உழைப்பு அசாதாரணமானது. ஒரு கச்சேரியை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றால் முதலில் அங்கே இணைய இணைப்பு முதல் அத்தனையையும் தயார் செய்து, தரமான ஒலியமைப்போடு அதைச் செய்யவேண்டும். இது அத்தனை சுலபமான வேலையும் அல்ல. தன் முனைப்பால், தங்களது நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி மாபெரும் சேவையாக நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை எத்தனை கச்சேரிகள், எத்தனை ஒளிப்பதிவுகள், எத்தனை பொக்கிஷங்கள் இவர்களால் நிரந்தரப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நினைத்தால், ஒரு சிறு குழுவால் இத்தனை செய்துவிடமுடியுமா என்று பிரமிப்பே தோன்றுகிறது.//

    மிகவும் மிகவும் வியப்பாகவே இருக்கிறது… தங்களோடு சேர்ந்து நாமும் இந்த இசைக்குழுமத்தை வாழ்த்தி வணங்குகின்றோம்…. இயன்ற வகையில் இந்தச் செய்தியை பலருக்கும் பகிர்ந்து கொள்கிறோம்..

  3. பரிவர்தினுக்கு வாழ்ட்டுகள். Hatsoff Lalitha Ram.

  4. மிக இனிப்பான பதிவு.நன்றிகள் கோடி.
    சுப்ரமணியம் லோகன்.

  5. அன்புள்ள மயூரகிரி சர்மா,

    மிக்க நன்றி.

    செவ்வியல் இசை என்றானபிறகு அதை மக்களை இசையை நோக்கி வரச்செய்ய அதை நீர்க்கச்செய்வது நல்ல வழியல்ல. அவர்களை நோக்கி நல்ல இசையை எடுத்துச்செல்வதால் மட்டுமே, நல்ல இசையை எங்கும் கிடைக்கச்செய்வது வழியாகவே அது நிகழ முடியும். பரிவாதினி அத்தனைய ஒரு இடத்தை நிறப்புகிறது.

    மேலும் எந்த ஒரு செவ்வியல் கலைகளுமே ஆரம்பத்தில் சிறிது கட்டாயப்படுத்துதல் மூலமே இளைய தலைமுறைக்கு கற்பிக்கமுடியும். ஆர்வம் உண்டாக்குவது என்றாலும் கூட ஆரம்பத்தில் திமிறி ஓடும் மனதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இளைய தலைமுறையை கவனம் சிதறச்செய்ய பல வழிகள் உள்ளனவே. சிறிதேனும் கட்டாயப்படுத்தாமல் எந்த செவ்வியல் கலைகளையுமே அடுத்தவருக்கு கடத்தமுடியாது என்பதுதான் நான் உணர்ந்தது.

    -ராம்

  6. அன்பார்ந்த ஸ்ரீ ராமசந்த்ர ஷர்மா,

    இது போன்று இசை சம்பந்தப்பட்ட இன்னும் பல விஷயங்களையும் தாங்கள் தமிழ் ஹிந்து தள வாசகர்களுடன் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன். மிக அருமையான வ்யாசம்.

    கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதம் மற்றும் உபசாஸ்த்ரீய சங்கீதம், அராபிய இசை என கட்டுக்கோப்பான இசை வடிவங்களை ரசனையுடம் கேழ்ப்பவன்….. மற்றும் இந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவன்….. என்ற படிக்கு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    செவ்விசை வடிவங்கள் எவையும் மூன்று விஷயங்களை சார்ந்து இருக்கின்றன. பிசகாத இலக்கணப்படி அமைந்த இசை, செவ்விசை இலக்கணம் பிசகாது இசை பொழியும் இசை வல்லுனர், கேழ்க்கும் ரசிகர்கள்.

    எப்படிப்பட்ட இசைக்கும் இந்த மூன்று காரணிகளும் வலுவாக இருந்தால் மட்டிலும் அது செழித்துத் தழைத்து வளரும்.

    விதிவிலக்காக மிகப்பெரும் சாதகராக அல்லது உபாசகராக இருக்கும் ஒருவருக்கு வேண்டுமானால் மூன்றாம் காரணியான ரசிகன் என்பது அவச்யமில்லாததாக இருக்கலாம். ஆனால் எந்த ஒரு கலை வளர்வதற்கும் இந்த மூன்றாவது காரணி மிகவும் அவச்யம்.

    குழந்தையும் தெய்வமும் மட்டிலும் கொண்டாடும் இடத்திலே இல்லை. இசையும் கூட.

    இசைக்கலைஞர்களுக்கு தங்கள் வாழ்க்கையை நடத்த பணம் நிச்சயம் தேவை தான். ஆனால் தாங்கள் பொழிந்த இசையை அதன் நுட்பத்தில் ஆழ்ந்து அந்த நுட்பங்களை ரசித்து அதை அந்த இசை வல்லுனருடன் ரசிகர்கள் பகிர்ந்தால் அந்த இசை வல்லுனர் அடையும் மகிழ்ச்சி வெகுவாக இருக்கும்.

    இசையைக் காக்க எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் …….இருக்கும் இசை வல்லுனர்களின் பாண்டித்யத்தை விகசிதமாக ஆக்க….இன்னமும் மேற்கொண்டு மேற்படி தரமான சிக்ஷை எடுத்துக்கொள்ள உத்சாஹப்படுத்தல்…………. கச்சேரிகள் நடத்த சபாக்களை அமைத்தல்………..ஆதரவு தர புரவலர்கள்……….. என்ற படிக்கு மட்டிலும் நின்று விடுகிறது.

    கேழ்க்கும் ரசிகர்களுடைய ரசனையை பெருக்கும்படிக்கு அவர்களுக்கு இசை நுட்பங்களை விவரித்தல்……….. கேட்ட அதே கச்சேரியை திரும்பக்கேழ்க்கும் போது……….. தாங்கள் அறிந்து கொண்ட புது நுட்பங்கள் மூலம் அதில் இன்னமும் ஆழமாக ஆழ்தல்……… போன்ற அனுபவங்களை அவர்கள் அடைவதற்கு……….. பரிவாதினி போன்ற அமைப்புகள் முயன்று வரும் என நம்புகிறேன். இன்னமும் நீங்கள் பகிர்ந்த தளங்களை பார்க்கவில்லை. இந்தக்கோணத்திலிருந்தும் இந்த அமைப்பின் சேவை இருக்குமானால் முருகனருளால் கர்நாடக சங்கீதம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ப்ரயாணிக்கும் என்பதில் சம்சயமில்லை.

    \\\\ பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது என்றும் தமிழிசை என்பது வேறேதோவென்றும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டிருக்கிறேன். நல்ல விஷயங்களை எல்லாமே பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் மனப்பான்மைக்கு சற்றும் எதிரானதல்ல இது. இதன் காரணமாகவே இவ்விசையிலிருந்து விலகிப்போன பலரையும் நான் அறிவேன். \\\\

    மிகவும் துரத்ருஷ்டமான விஷயம்.

    தமிழிசை என்பது என்ன இதன் இலக்கணம் என்ன என்பதும் புரியாத புதிர். ஒரு சமயம் திருமுறைகள் ஓதப்படும் பண்களால் அமைந்த இசை தான் தமிழிசை என்ற புரிதலுடன் இருந்தேன்.

    ஆனால் செவ்விசையல்லாத மேலும் வெகுஜனங்களுக்கு ஜனரஞ்சகமான நாட்டுப்புறப்பாடல், கானா போன்ற இப்போதைய புது வடிவங்கள் கூட தமிழிசை என்று இணையங்களில் வாசிக்க நேருகிறது. தமிழில் பாடப்படும் அனைத்து இசை வடிவங்களும் தமிழிசை என்று எடுத்துக்கொள்ளலாமா? புரியவில்லை.

    தமிழிசையை வளர்ப்பது என்பது நோக்கம் என்றால் எது தமிழிசை என்பதில் சரியான தெளிவு இருத்தல் அவச்யம். இலக்கு தெளிவாக இருந்தால் வளர்ச்சிப்பணி தெளிவான இலக்கை நோக்கி குவிக்கப்பட சாத்யக்கூறுகள் உண்டு.

    சமயம் கிடைக்கும் போதெல்லாம் பொதிகை தொலைக்காட்சியில்….. இரவு நேரங்களில் ஒளிபரப்பப்படும் பாஸ்டர் சாம் செல்லதுரை அவர்களது நிகழ்ச்சிகளில் பாடப்படும் க்றைஸ்தவப் பாடல்களை கேழ்ப்பதுண்டு. மிக அழகாக ச்ருதி சுத்தமாக மணிப்பவள நடையில் ஆன க்றைஸ்தவப் பாடல்களை பாஸ்டர் அவர்கள் பாடுவார்கள். ஆனால் இசை வடிவம் மேற்கத்திய இசை. எனது குழப்பம் இது மேற்கத்திய இசை என்று தெளிவாகத் தெரிந்தாலும் ………… தமிழில் பாடப்படுவதால்……… இதையும் தமிழிசையாகக் கருதினார்கள் என்றால் …………. முரணாகவே தெரிகிறது. வேண்டுமானால் தமிழ் மொழியில் பாடப்படும் மேற்கத்திய இசை என்று சொன்னால் சரியாக இருக்குமா தெரியவில்லை.

    ஒரு பத்து இருபது வருஷங்கள் முன் வரை ………. ஜாதி பேதங்கள் என ஏதும் சங்கீதத்தில் இருந்ததாக நினைவில்லை. ஏன் மத பேதம் கூட.

    எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள் சிறு வயதில் நாகூர் தாவூத் மியான் சாஹேப் (எஸ்.எம்.ஏ.காதர் பாகவதரின் குரு ஸ்தானம்) அவர்களிடம் சிக்ஷை எடுத்துக்கொண்டதாக ஆபிதீன் சாஹேப் அவர்களது தளத்தில் வாசித்தது நினைவுக்கு வருகிறது.

    மதுரை சோமு அவர்களை மறக்க முடியுமா? சௌடய்யா அவர்களை மறக்க முடியுமா? தக்ஷிணா மூர்த்தி பிள்ளை அவர்களை மறக்க முடியுமா? க்ளாரினெட் நடராஜன்? எத்தனையெத்தனை தவில் வித்வான் கள் எத்தனையெத்தனை நாதஸ்வர வித்வான் கள்……….

    உத்தர பாரதத்தில் ஹிந்து முஸ்லீம் இணக்கத்துக்கு பெரும் காரணி ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய மற்றும் உபசாஸ்த்ரீய சங்கீதம் என்றால் மிகையாகாது..

    \\\\ செவ்வியல் இசை என்றானபிறகு அதை மக்களை இசையை நோக்கி வரச்செய்ய அதை நீர்க்கச்செய்வது நல்ல வழியல்ல. அவர்களை நோக்கி நல்ல இசையை எடுத்துச்செல்வதால் மட்டுமே, நல்ல இசையை எங்கும் கிடைக்கச்செய்வது வழியாகவே அது நிகழ முடியும். பரிவாதினி அத்தனைய ஒரு இடத்தை நிறப்புகிறது. \\\

    அருமையான கருத்து.

    தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் ஸ்ரீமன்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

  7. ஸ்ரீமன் ராமச்சந்திர சர்மா அவர்களுக்கு வணக்கங்கள்!
    நான் தமிழ்இந்து.கொம் தளத்தை எனது தேடுதல் முயற்சிமூலம் ,5/6 வருடங்கள் முன்பு நானாகவே சென்றடைந்தேன். அது எனது பிறவிப்பயன் என்றால் அத தளத்தின்மூலம் உங்கள் தளத்தின் தகவல் கிடைத்தது அத தளத்தின் பெரும் சேவை என்றே கருதுகின்றேன்.

    மேலும் உங்கள் பதில் மூலம் சாஸ்த்ரீய சங்கீதத்திற்கு விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை என்கிற உங்கள் நிலைப்பாடு அல்லது உறுதி மிகவும் சரியானது.எங்கள் பாரம்பரிய இசையை மேலும் அப்படியே ஜனரங்க்சக்படுத்த எனது இனிமையான(இசை)வாழ்த்துக்கள்.
    சுப்ரமணியம் லோகன்.

  8. ராம்,

    பரிவாதினியைப் பற்றி – தொழில் நுட்பம் மூலம் கலையைப் பரப்பும் ஒரு அற்புதமான முயற்சி – நல்ல அறிமுகம். இது மாதிரி அறிமுகங்கள் தேவை. நீங்கள் இதை பிற ஊடகங்களிலும் – இணைய இதழ்களான திண்ணை, சொல்வனம், ஜெயமோகன்.இன், மற்றும் பிரபல காகித இதழ்களான விகடன், குமுதம், ஹிந்து பேப்பரின் தமிழ் வடிவம், அவற்றின் இணைய வடிவங்கள் ஆகியவற்றிலும் பிரசுரிக்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஜடாயுவும் நீங்களும் அனுமதித்தால் சிலிகன் ஷெல்ஃபிலும் பிரசுரிக்க விரும்புகிறேன்.

    // பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது என்றும் தமிழிசை என்பது வேறேதோவென்றும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டிருக்கிறேன். நல்ல விஷயங்களை எல்லாமே பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் மனப்பான்மைக்கு சற்றும் எதிரானதல்ல இது. இதன் காரணமாகவே இவ்விசையிலிருந்து விலகிப்போன பலரையும் நான் அறிவேன். பரிவாதினி இவ்வரசியல்களுக்கு அப்பாற்பட்டது என்று நிறுவியிருக்கிறார்கள். கர்நாடக இசைக்குள் தலித்துகள் வரவேண்டும் என்று சமூக நீதி வாய் வக்கனை மட்டும் பேசி ஒதுங்குபவர்கள் அல்ல இவர்கள். //
    பரிவாதினிக்கு ஒரு ஜே! செத்த பாம்பை அடிப்பவர்களை இன்னும் ஏன் பொருட்படுத்தி எழுதுகிறீர்கள்? விட்டுத் தள்ளுங்கள்!

  9. ஸ்ரீ.க்ருஷ்ணகுமார்,

    என்னை பொருத்தவரை இன்றைய கர்நாடக இசை என்பது தமிழிசையை, தெலுங்கிசையை, கன்னடைசையை உண்டு, அதன்மேல் கொஞ்சம் ஹிந்துஸ்தானி இசையையும் உள்ளே தள்ளி செரித்து, தனக்கென ஒரு வடிவத்தை கடந்த இருநூறு வருடங்களில் வந்தடைந்திருக்கிறது. எனவே தமிழிசை என்பது கர்நாடக இசையே. கூடவே தெலுங்கிசை, கன்னட் இசை எல்லாமும் இதுவே.

    தமிழில் பாடினால் தமிழிசை, இல்லையென்றால் அது பார்ப்பன சதி என்பதெல்லாம் அபத்தம் என்றே நினைக்கிறேன்.

    //ஒரு பத்து இருபது வருஷங்கள் முன் வரை ………. ஜாதி பேதங்கள் என ஏதும் சங்கீதத்தில் இருந்ததாக நினைவில்லை. ஏன் மத பேதம் கூட.

    ஜாதி மத பேதங்கள் கர்நாடக இசையில் எப்போதுமே இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. இசைக்கு தொடர்பில்லாத சில விளிம்புநிலை ரசிகர்கள் தமது அரசியலை இதில் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள் சில சமயம். அவ்ளோதான்.

    -ராம்

  10. //மேலும் எந்த ஒரு செவ்வியல் கலைகளுமே ஆரம்பத்தில் சிறிது கட்டாயப்படுத்துதல் மூலமே இளைய தலைமுறைக்கு கற்பிக்கமுடியும். ஆர்வம் உண்டாக்குவது என்றாலும் கூட ஆரம்பத்தில் திமிறி ஓடும் மனதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இளைய தலைமுறையை கவனம் சிதறச்செய்ய பல வழிகள் உள்ளனவே. சிறிதேனும் கட்டாயப்படுத்தாமல் எந்த செவ்வியல் கலைகளையுமே அடுத்தவருக்கு கடத்தமுடியாது என்பதுதான் நான் உணர்ந்தது.//

    தங்களின் அனுபவ பூர்வமான இக்கருத்தை நான் பணிவோடு ஏற்றுப் போற்றுகிறேன்… ஆனால், தமிழருக்கு அளிக்கப்படும் இசையில் தமிழுக்கு அதிக முதன்மை தரலாம் அல்லவா…?

    சம்ஸ்கிருதம் பொதுமொழியானதால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்.. ஆனால், தெலுங்கு கீர்த்தனைகளையே தொடர்ந்து பாடினால் எப்படி கேட்பது..?

    ஆனால், மீண்டும் மீண்டும் பரிவாதினி முயற்சி பெருமைக்கும் போற்றுதற்கும் உரியது.. பாராட்டப்பெற வேண்டியது… வளர்க்கப்பட வேண்டியது.. வாழ்த்தப்பட வேண்டியது என்பதில் ஒரு துளியும் ஐயமில்லை… இவ்வாறு கேட்பதனை எல்லாம் பரிவாதினிக்கான விமர்ச்னமாக கருத வேண்டாம்..

  11. சரி, பரிவாதினியை விட்டு கொஞ்சம் அல்ல நிறையவே விலகி வந்துவிட்டோம். இவ்விவாதம் சச்சரவுக்குத்தான் வழிவகுக்கும் என்று தோன்றுகிறது. 🙂 இருந்தாலும்….

    /* ஆனால், தமிழருக்கு அளிக்கப்படும் இசையில் தமிழுக்கு அதிக முதன்மை தரலாம் அல்லவா…? சம்ஸ்கிருதம் பொதுமொழியானதால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்.. ஆனால், தெலுங்கு கீர்த்தனைகளையே தொடர்ந்து பாடினால் எப்படி கேட்பது..? */

    யாரேனும் ஒருவர் கேட்பார்கள் என்று நினைத்தேன். நீங்கள் கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 🙂

    மேலும், கிட்டத்தட்ட 300 வருடங்களாக தெலுங்கில், கன்னடத்தில் எழுதப்பட்ட பாடல்கள்தாம் கர்நாடக இசையில் 80% க்கும் மேல். அவைகள்தாம் இப்போதுள்ள கர்நாடக இசைக்கு அடித்தளமாக இருப்பவை. தியாகராஜரும், சியாமா சாஸ்திரியும், அன்னமைய்யாவும், ராமதாசுவும், புரந்தரதாசரும், கனகதாசரும், க்ஷேத்ரஞ்யரும், நாராயண தீர்த்தரும், பட்னம் சுப்ரமணிய ஐயரும், ஆதியப்பையாவும், ஆணையையாவும், முத்தையா பாகவதர், மைசூர் வசுதேவசார், வீணை குப்பையர், சுப்பராய சாஸ்த்ரி என எல்லோரையும் தூக்கி எறிந்துவிடலாமா?

    சார், இது மிகவும் தந்திரமாக மீண்டும் மீண்டும் இங்கே பேசப்படுகிறது. எதோ தமிழை வாழவைக்கவும், தமிழுக்கு ஒரு இடத்தை பெற்று தரவும் உண்மையான முயற்சிபோல தனித்தமிழ் ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. இதை பலரும் உணர்வு ரீதியாக ஏற்றுக்கொண்டுவிடுகிரார்கள். இதன் பின்னே இருக்கும் நோக்கம் இந்த செவ்வியல் கலையை அழிப்பதே. ஒரு கலையின் அடிப்படைபடைப்புகளை, ஆதாரங்களை அழிப்பதன் மூலம் அந்த கலையையே அழித்துவிட முடியும். இதுவே அவர்களுக்கு தேவை. அவர்களது வாய்ப்பாட்டைத்தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கப்போகிறோமா என்ன? தெலுங்கு, தமிழ்,கன்னட, மலையாளம், ஹிந்தி, போன்ற வேறுபாடுகள் கர்நாடக இசைக்கு அன்னியமானதாகவே இருக்கட்டும். இப்போதிருக்கும் பாடகர்கள் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் தானே? அவர்கள் என்ன தெலுங்கு மொழி மீது பற்று கொண்டு அதை பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

    இசைக்கு மொழி இல்லை. தேவையும் இல்லை. ஒரு சராசரி ரசிகனுக்கு பாடல் வரிகள் அந்த இசைப்படைப்புக்குள் நுழைவதற்கு உதவுகிறது. பாடல் வரிகளின் பொருள் அவருக்கு ஒரு தறுவாயை கொடுத்து அதன்வழி அவர் பாடலின் உள்ளே வர வழி வகுக்கிறது. அதற்கு பின் அதற்கு அங்கே வேலை இல்லை. (கிட்டத்தட்ட ராக்கட் ஏவுவது போலத்தான். மேலே போக போக ஒவ்வொரு தேவையில்லாத விஷயத்தையும் விட்டுவிட்டே இன்னும் மேலே போகமுடியும்). கருவி இசையில் மொழிக்கு இடமில்லையே?

    அருணாச்சல கவி, மாரிமுத்து பிள்ளை, முத்து தாண்டவர், கணம் கிருஷ்ணையர், ஊத்துக்காடு வேங்கட கவி, கோபாலக்ருஷ்ண பாரதி, பெரியசாமி தூரன் என பல தமிழ் பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்களது “நல்ல” பாடல்களும் தொடர்ந்து மேடைகளில் பாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

    இன்னொரு விஷயமும், பாடல் ஒருவர் எழுதி, அதற்கு மற்றவர் இசையமைத்து பாடவேண்டிய நிலையில் இருக்கிறோம். அல்லது பாடகரே எழுதும் அச்சுபிச்சு பாடல்களை மேடை ஏற்றுகிறார்கள். நல்ல தமிழ் மொழி வளமும், சீரிய இசை ஞானமும் பெற்றவர்கள் தமிழுக்கு பெரிய அளவில் கிடைக்காதது துரத்ருஷ்டமே. என்றாவது ஒரு நாள் நாம் தமிழில் ஒரு தியாகராஜரோ, முத்துச்வாமி தீக்ஷிதரோ நிகழாமல் போனதற்கான காரணங்களை ஆராயலாம்.

    மேலும், நமது நாட்டு, பக்கத்துவீட்டு மொழியை கற்றுக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கர்நாடக இசை கேட்க வருபவர்கள் குறைந்தபட்சம் பாடல் பொருளேனும் அறியலாமே? சிறு முயற்சி செய்யலாமே? மொழி என்றைக்குமே எனக்கு ஒரு தடையாக இருந்ததில்லை.

    (இதுவரை எந்த தமிழ் பாடகரும் (விஜய் சிவா தவிர்த்து) தெலுங்கை குத்தி, கொன்று, உடைத்து, தூக்கிலிட்டு சிதைக்காமல் பாடி கேட்டது இல்லை.. தெலுங்கை கொல்கிறார்கள் என்று அதற்கெல்லாம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தால் ஆகுமா? கிட்டத்தட்ட பலர் தமிழையே அப்படித்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.)

  12. \\\ ஆனால், தமிழருக்கு அளிக்கப்படும் இசையில் தமிழுக்கு அதிக முதன்மை தரலாம் அல்லவா…? \\\

    ஸ்ரீ ஷர்மா,

    தமிழருக்கு அளிக்கப்படும் தமிழிசையில் தமிழகத்து சிவாலயங்களில் எத்துணை பேர் அதை ரசித்து உருகுகிறார்கள் எனத் தமிழகத்தில் எத்தனை சிவாலயங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

    வணக்கத்துக்குரிய ஓதுவார் மூர்த்திகள் தேவாரத் திருமுறைகள் பாடும்போது எத்தனை பேர் அதில் உருகுகிறார்கள்?

    ஓதுவார் மூர்த்திகள் பாட்டுக்கு தனியாக கரதாளத்துடன் சிவனேன்னு பாடுவார்கள். நம்மூர் ஜனங்களில் பெரும்பாலோர் சிவாலயம் என்ற மட்டு கூட இல்லாமல்…………. ம்லேச்ச வேஷத்துடன் கைலி கட்டிக்கொண்டு கோவில் ப்ராகாரத்திலே உட்கார்ந்து புளியோதரை சாப்பிடுவது, சுண்டல் சாப்பிடுவது, அரட்டைக் கச்சேரியில் ஈடுபடுவது என்று இருந்து விடுகிறார்கள்.

    இந்த அவலத்தை நான் ஸ்ரீ ரங்கத்தில் கண்டதில்லை. நம்பெருமாள் எழுந்தருளட்டும். என்ன ஒரு கும்பல். அரையர் கரதாளத்துடனும் அபிநயத்துடனும் நாலாயிரத்தை சேவித்துக்கொண்டே நம்பெருமாளுடன் பாவுகமாக சம்வாதம் செய்யும் அழகிற்கு ஈடும் உண்டா? இன்றைய திகதியிலும் நம்பெருமாளைப் பார்ப்பதா அரையரைப் பார்ப்பதா அவர் பொழியும் அமுதினுமினிய நாலாயிரத்தில் உருகுவதா என்று தெரியாமல் ஈ போவது தெரியாது வாயைப்பிளந்த வண்ணம் அரையர் சேவையை ரசிக்கும் தமிழ்ப்பெருமக்களையும் பார்த்திருக்கிறேன். இப்படியெல்லாம் ரசிக்க வேணும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே அது தான் காரணம்.

    அந்த ரசனை தமிழர்களுக்கு போதிக்கப்பட்டால் நிச்சயம் பழையபடி கர்நாடக இசையை ரசிப்பார்கள்.

    கர்நாடக இசைக்குத் தமிழர்கள் ரசிகர்கள் இல்லை என்பதை மட்டிலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

    ராஜ ரத்னம்பிள்ளை, ஷேக் சின்ன மௌலானா சாஹேப் போன்றோர் நாதஸ்வரம் வாசித்தால் ரா முழுக்க கேட்டு ரசித்தவர்கள் தானே தமிழர்கள். என்ன இந்த தமிழ் விரோத த்ராவிடத் தறுதலைகளும் அவர்களது சொம்பு தூக்கிகளும் அப்போது இல்லை.

    த்ராவிட கும்பல் தான் அந்த்யேஷ்டிக்கு தயாராகி வருகிறதே. தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் விடிவு காலம் பிறக்க ஆரம்பித்துவிட்டது. முன்னைப்போலவே தமிழிலும் மற்றைய பாரதீய பாஷைகளிலும் தமிழர்கள் பாரங்கதர்களாக ஆகி உலகத்தவர்களை மூக்கில் விரலை வைக்கும் காலம் தொலைவில் இல்லை.

  13. ஸ்ரீ கிருஷ்ணகுமார்,

    நமது மரபிசை இதுவரை காப்பாற்றிக்கொண்டுவரப்பட்டதில் பக்தி மார்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. அது இல்லை என்றால் இதுவரை அது நீடித்திருக்குமோ என்றும் சந்தேகம் தான். ஓதுவாரும், அரையர்களும் மீண்டுவந்து நமது மரபிசையை மீட்டெடுக்கவேண்டும். கோவில்கள் தோறும் ஆழ்வார்களின், நாயன்மார்களின் குரல் ஒலிக்கவேண்டும். சுமார் ஆறு வயதில் நான் தாயுமானவர் சந்நிதியில் கேட்ட காம்போதியும், கேதார கௌளையும் மீண்டும் நினைத்துக்கொள்கிறேன். நமது இசைமரபு கோவில் சார்ந்தே வளர்ந்தது அல்லவா?
    தமிழ் நாட்டில் தான் கர்நாடக இசைக்கு அதிக ரசனை இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். அதுவும் இன்னும் மேலே கொண்டு செல்லப்படவேண்டும். அதற்க்கு நீங்கள் சொல்லியதுபோல அறிமுகமும், ரசனை பயிற்ச்சியும் தான் கொடுக்கவேண்டும். வீட்டிலும், கோவில்களிலும்.
    -ராம்

  14. செவிவழிச் செய்தியாக வரும் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. பிரபல வித்துவான் மதுரை மணி அய்யர் ஒரு கச்சேரி செய்து முடித்த பின்னர், ஒரு ரசிகர் அவரிடம், “ஐயா, நீங்கள் தியாகராஜ கீர்த்தனைகளை மிகவும் சிதைக்கிறீர்கள். தெலுங்கு மொழியைப் புரிந்து கொண்டு பாடுங்கள்” என்றாராம். மணி அய்யர் அந்த ரசிகரை நோக்கி “உங்களிடம் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் கொண்ட புத்தகம் தெலுங்கில் இருக்கிறதா?” என்றார். ரசிகரும் இவர் நம் வழிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் “இருக்கிறது, இருக்கிறது” என்று ஊக்கத்துடன் கூறினார். “சரி, அப்படியானால் நீங்கள் அந்த புத்தகத்தை வீட்டிலேயே படியுங்கள். என் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்” என்றார் மணி அய்யர்.

    கதை கட்டுக்கதையாக இருக்கலாம், ஆனால் அதில் ஒரு உண்மை இருக்கிறது. அதைக் கர்னாடக சங்கீதத்தை நன்கு ரசிப்பவர்கள் அறிவார்கள்.

  15. அன்புடைய ஸ்ரீ கிருஷ்ணகுமார் அரையர் சேவை என்பது தற்போது இய லாக செய்யப்படுகிறது. இயல் என்பது பாசுரங்களை இசையோடு இல்லாமல் சொல்லப்படுவது. வெகுகாலங்களுக்கு முன் இசையோடு பாடியே அரையர் சேவை என்பது திருவரங்கம் முதலான கோயில்களில் நடந்து வந்திருக்கவேண்டும் என்பது ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் சுவாமிகளின் கருத்து. மேலும் கர்நாடக இசை என்பதை பிராமணர்களோடு மட்டும் இணைந்தது என்று ஒரு தவறான பிரச்சாரம் வெகு காலமாக திராவிட கும்பல்களால் செய்யப்பட்டு வருகிறது. நல்ல இசை மனிதனை பண்படுத்தும். கேரளாவில் கர்நாடக இசை என்பது மதம் கடந்த ஒரு கலையாக பயிற்றுவிக்கபடுகிறது. அதற்கு உதாரணமாய் ஆசியாநெட் தொலைகாட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் நிறைய முஸ்லிம், கிறிஸ்தவ இளைஞர்கள் இளம்பெண்கள் கர்நாடக பாணியில் அமைந்த திரையிசை பாடல்களைப் பாடி வெற்றி பெறுகின்றனர். பள்ளிகளில் இசையை ஒரு பாடமாக அவசியம் வைக்கவேண்டும். பதின் வயது மாணவர்கள், மாணவிகள் வழியும் நெறியும் தவறாமால் இருக்க மனதை பண்படுத்த இசை பெருமளவில் உதவும்.

  16. “இன்னொரு விஷயமும், பாடல் ஒருவர் எழுதி, அதற்கு மற்றவர் இசையமைத்து பாடவேண்டிய நிலையில் இருக்கிறோம். அல்லது பாடகரே எழுதும் அச்சுபிச்சு பாடல்களை மேடை ஏற்றுகிறார்கள். ” இன்றைய இசை பற்றி திரு ராம் சொல்வது ஒப்புக் கொள்கிறேன்.

    இசை அமைக்க ஒருவர், பாடல் எழுத இரண்டாமவர், மற்றும் அப்பாடலை ஒழுங்காகப் பாட மூன்றாமவர் என்று இன்று மூன்று பேர்கள் தேவைப்படுகின்றனர் . ஒவ்வொரு பாட்டுக்கும். சினிமா இசைக்கோ மென்பொருள் வல்லுனரும் வேண்டும்!

    திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்வதும் ஒப்புக்கொள்ள வேண்டியதே. உருகி தேவாரம் பாடுவோர் அருகிலேயே ஊர் வம்பு பேசுவோரை காண முடிகிறது.

    பக்தி என்ற ஒரு சக்தியில் முன்பெல்லாம் ஒரே ஆள்- த்ரீ -இன்- ஒன் ஆக சுவாமி புறப்பாட்டில் தன்னை மறந்த நிலையில் புதிய பாடல்களை பொழிவது, [ பாடல் வரிகள்+ இசை ” அமைத்தல்+” பாடுதல்] கேள்விப்பட்டிருக்கிறோம்.
    பாபநாசம் சிவன் அப்படி பாடியதாக கேள்விப்படிக்கிறேன்.

    உள்ளார்ந்து உள்ள இறைவனை ஒருவர் உணர்ந்து ஏத்தும் போது நமக்கு கிடைப்பதே தேவாரப் பண்கள் , பாசுரங்கள், த்யாகையர் கிருதிகள், பாபநாசம் சிவன் பாடல்கள், -ஏன் பாடதியார் தானே எழுதி , இன்னை ராகம் இன்ன தாளம் என்று பாடவும் செய்தாரே சமீபங்களில்.

    ரூம் போட்டு , பாடல் எழுதி [ மானே , தேனே பொன்மானே எல்லாம் போட்டு]
    இசை ‘அமைத்து” மற்றொருவரைப் பாட வைத்து அதையும் மென்பொருள் கொண்டு துலக்கி – என்ற சினிமா கதையில் மயங்கும் தலைமுறையை சற்று மெனக்கெட்டாவது நம் பாரம்பரியத்திற்கு கொண்டு வரும் சீரிய முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    சாய்

  17. முன்புள்ள என் மறுமொழியில் “பாரதியார் தானே எழுதி , இன்னை ராகம் இன்ன தாளம் என்று பாடவும் செய்தாரே சமீபங்களில்.” என்று திருத்தி வாசிக்கவும். பிழைக்கு மன்னிக்க.
    சாய்

  18. நாங்கள் பாரிஸ் நகரத்தில் வாழ்கிறோம். பரிவர்தினி இசை நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது; அவர்கள் கர்நாடக இசைக்கு சேவை செய்வது மிகவும் பாராட்டத்தக்கது; ஆனால், உதாரணமாக என் நண்பர்கள் டெல்லி இல் வசிப்பவர்கள் அவர்களுக்கு இது நடப்பது தெரியவில்லை ; இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *