அருட்செல்வருக்கு அஞ்சலி

பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

(மார்ச் 21, 1923 – அக்டோபர் 2, 2014)

தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும் காந்தியவாதியுமான திரு. மகாலிங்கம் ஐயா அவர்கள் 2014, அக்டோபர் 2-ஆம் நாளன்று தனது 92-ஆவது வயதில் காலமானார். தொழிலதிபர் என்று பரவலாக அறியப்பட்டாலும், அவர் பல்வேறு துறைகளில் மிகுந்த ஈடுபாடும் நெருக்கமான தொடர்பும் கொண்டவர்.

அதனால் அரசியல்,  கல்வி, ஆன்மிகம், இலக்கியம், வேளாண்மை, பொதுப்பணிகள் உள்ளிட்ட வெவ்வேறு தளங்களில் தனது முத்திரையைப் பதித்தவர்.  மேலும் நாடு சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் தனக்கே உரித்தான தனித்தன்மை  நிறைந்த  சிந்தனைகளைக் கொண்டவர்.

தமிழத்தின் பல்வேறு  துறைகளைச்  சார்ந்த மக்களிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.  அதனால் பட்டிதொட்டிகள் தொடங்கி சென்னை வரை மாநிலம் முழுதும் பல்லாயிரக் கணக்கான பேருக்கு  நேரடியாக அறிமுகமானவராக இருந்தார். அவ்விதத் தொடர்புகள் உலக அளவிலும் அவருக்கு இருந்தன. அவரது நட்பு வட்டம் சாதாரண மனிதர்கள் முதல் நாட்டின் செல்வாக்குள்ளவர்கள் வரை பரந்து விரிந்திருந்தது.

அவரே பெரிய தொழிலதிபராக விளங்கியபோதும், சாதாரண மக்கள், கிராமத்து விவசாயிகள், பழைய கால நண்பர்கள்  மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் எனப் பல வகையானவர்களிடமும் தொடர்பு வைத்திருந்தார். அவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று அங்கேயே அவர்களுடன் உணவருந்துவார். அவரைப் போல மிக அதிக அளவில் மக்களை நேரடியாக அறிந்த ஒரு தொழிலதிபரைப் பார்ப்பது அரிது.

அவரது ஒரு சிறந்த குணம், சாதாரண மனிதர்களின் அழைப்பினை ஏற்று அவர்களின் வீட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வது.  மேலும் மக்கள் விரும்பி அழைக்கும்போது, அவர்களின் இல்லத் திருமணங்களை முன்னின்று நடத்தி வைப்பார்.

தேவையான சமயத்தில் பிறருக்கு உதவுவதை கடைசி வரைக்கும் தன்னுடைய கடமையாகவே கொண்டிருந்தார். அந்த உதவிகளை எந்தவித வித்தியாசமும் பார்க்காமல் பலருக்கும் செய்து வந்தார். அதுவும் பல சமயங்களில்  சம்பந்தப்பட்டவர்கள் கேட்காமலேயே செய்வார்.

காந்தியவாதிகள், வயதில் மூத்தவர்கள் ஓய்வு பெற்றவர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் பணிகளைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்வுக்கு ஒரு நிறைவை அளித்து வந்தார்.  பல சமயங்களில் அவரது அறை முன்பு அவரைப் பார்ப்பதற்கு பெரியவர்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை,  செயல்பாடுகள் நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது. 1952-இல் தனது இருபத்தொன்பதாவது வயதில் பொள்ளாச்சி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பதினைந்து வருடங்கள், 1967-இல் காங்கிரஸ் ஆட்சி மாறும் வரை  அந்தப் பொறுப்பில் இருந்துள்ளார். அதன் பின்னர்  அவர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை.

மாறிவிட்ட தமிழக அரசியல் களம் அவருக்குப் பொருத்தமானதாகப் படவில்லை. பின்னர் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக்க சில முக்கிய தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அவரது தந்தையார் நாச்சிமுத்து கவுண்டர் தனது  சொந்த உழைப்பினால் ஒரு பெரிய தொழில் குழுமத்துக்கு வித்திட்டவர்; கொங்குநாட்டுப் பகுதியில் சுதந்திர இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக இருந்தவர். அவர் உருவாக்கிய ஏ.பி.டி. (ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்ஸ்) நிறுவனம் 1946-ஆம் வருடத்திலேயே நூறு பேருந்துகளைக் கொண்டதாக  இருந்தது.

தனது தந்தையின் மரணத்துக்கு அப்புறம் தொழில் நிர்வாகத்தை  எடுத்துக்கொண்டு, புதிய தொழில்களில் கால் பதித்தார். அதன்மூலம் சக்தி குழுமத்தை,  தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான தொழில் குழுமமாக உருவாக்கினார். மாநிலத்திலுள்ள தொழில்துறையினருக்குப் பல விதங்களில்   ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.

அதேசமயம் தொழில்களில் தனக்கென உறுதியான கொள்கைகளை வைத்திருந்தார். பெரிய சர்க்கரை ஆலை வைத்திருந்த போதும், அது சம்பந்தப்பட்ட எரிசாராயத் தொழிலுக்கு அவர் செல்லவேயில்லை. அதில் பெரிய லாபமிருந்தும்,  கடைசி வரை தவிர்த்து  விட்டார்.

கல்வித் துறையில் முன்னோடியான முயற்சிகளை மேற்கொண்டார். தொழிற்கல்வியிலும் தாய்மொழிக் கல்வியிலும் தனி ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவம் முதல் மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வது அவசியம் எனக் கருதினார். அதற்காக பொள்ளாச்சியில் அவர் ஆரம்பித்த பழனிக் கவுண்டர் பள்ளியில் தொழிற்கல்வியோடு சேர்ந்த கல்வி முறை கொடுக்கப்பட்டு வருகின்றது.

விவசாயத் துறை குறித்தும் நிறையச் சிந்தித்து, வித்தியாசமான  கருத்துகளை வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் அவருடன் ஒரு சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது,  ‘மேற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த  விவசாயிகள் அதிக அளவில் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும்’ எனக் கூறினார். அதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது,  ‘இங்குள்ள  விவசாயிகள்  கடுமையான உழைப்பாளிகள்; ஆனால் விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதிகள் இங்கில்லை; ஆனால் அங்கெல்லாம் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் எளிதாகக் கிடைக்கின்றன; எனவே இங்குள்ள விவசாயிகள் அங்கு செல்வது அவர்களுக்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் நல்லது’ எனப் பதிலளித்தார்.

அவர் ஆரம்பம் முதலே ஆன்மிகத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தார். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தொடங்கி, சென்னை கபாலீஸ்வரர் கோவில் வரையில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில்களின் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.  மேலும் நமது தேசத்தின் புனித நகரமான வாரணாசியில், தென்னிந்தியப் பாணியில் கோவில் கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். பலவிதமான அவரது ஆன்மிகப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக  ‘அருட் செல்வர்’ என அழைக்கப்பட்டார்.

பொள்ளாச்சியில் 2013 சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநில மாநாட்டில் உரையாற்றுகிறார் டாக்டர் நா.மகாலிங்கம்
பொள்ளாச்சியில் 2013 சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநில மாநாட்டில் உரையாற்றுகிறார் டாக்டர் நா.மகாலிங்கம்

புத்தகங்களில் அவருக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு. அவரைச் சந்திக்கும் பல சமயங்களில் ஒவ்வொருவருக்கும் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து அனுப்புவார்.  மேலும் எழுத்தாளர்களை நன்கு ஊக்கப்படுத்துவார். ஒவ்வொரு முறையும் என்னுடைய புத்தகங்களின் பிரதியை அவருக்குக் கொடுத்துப் பேசிவிட்டு வந்த சில மணி நேரங்களிலேயே,  குறிப்பிட்ட அளவு பிரதிகளைப் புத்தகக் கடையில் இருந்து வாங்கி விடுவார். பின்னர் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பார்.

தனது வாழ்நாளில் நூற்றுக் கணக்கான புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளார்.  திருக்குறளை ஆங்கிலம், இந்தி, ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பத்து பாகங்களாக வெளியிட்டார்.  மகாத்மா காந்தி பற்றிய ஆங்கிலப் புத்தகத்தை தனது செலவில் மறுபதிப்புச் செய்தார்.  மேலும் ஆன்மிக நூல்கள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உதவிகளைச் செய்து வந்தார்.

தனது கருத்துக்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து பல வருடங்களாக கட்டுரைகளாகவும் புத்தகங்களாகவும் வெளியிட்டு வந்தார். அவற்றின் மூலம் அவரது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.   தமிழில் ‘ஓம் சக்தி’ மாத இதழ், ஆங்கிலத்தில்   ‘கிசான் வேர்ல்டு’  என்னும் வேளாண்மை மாத இதழ் ஆகியவற்றைத் தொடங்கி பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். அவற்றில் அவர் கூறியுள்ள பல கருத்துக்கள் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை.

அவரைச் சந்தித்து  ஒவ்வொரு முறை விரிவாகப் பேசும் போதும், அவர் ஒரு அறிவுப் பெட்டகமாகவே தோன்றியிருக்கிறார். அரசியல், வேளாண்மை, தொழில், கல்வி, ஆன்மிகம் எனப் பல விஷயங்களிலும் அவருக்கு அதிக அளவில்  வரலாற்று அறிவு, அனுபவம் ஆகியவை இருந்தன. சமகால அரசியலைப் பற்றிக் கேட்டால் சுதந்திரம் பெற்ற காலத்தில் தொடங்கி, விஷயங்களைப் பிறழாமல் சொல்லும் அவரது ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கும்.

அவரது இன்னுமொரு உயர்ந்த குணம் என்னவெனில்,  கடைசி வரைக்கும் அவர் மற்றவர்களிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினார். அதைப் பல சமயங்களில் நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். பேசிக் கொண்டிருக்கும்போது  எங்களின் முக்கியமான ஆய்வுகள் குறித்து ஆர்வமாகக் கேட்பார். இது சம்பந்தமாக எனக்கு கடைசியாகக்  கூட ஓர் அனுபவம் ஏற்பட்டது.

சென்ற வருடத்தின் இறுதியில் என்னை அழைத்தார். அந்தச் சமயத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு புதிய யோசனையைத் தெரிவித்தார். மாதாமாதம், கோவை,  புரந்திரதாசர் வளாகத்தில் பொருளாதாரம் குறித்து ஆர்வம் கொண்டவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமா என்றும்,  அதில் கலந்துகொண்டு என்னால் பேச முடியுமா எனவும் கேட்டார். எனக்கும் அது நல்ல கருத்தாகவே  பட்டது. ஆனால் அதைச் செயல்படுத்துவது பற்றி மேலும் யோசித்து இறுதி முடிவு செய்யலாம் எனத் திட்டமிட்டோம்.

அது சம்பந்தமாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில்   மீண்டும் அவரே அழைத்துப் பேசினார். அப்போது பொருளாதாரக் கோட்பாடுகள்   மற்றும் உலக நடை முறைகள் பற்றித் தொடர்ந்து பேசும்போது, அது  கேட்பவர்களுக்குப் பெரும்பாலும் சலிப்பைக் கொடுத்து விடலாம் என்றும், எனவே   நடைமுறையில் நிலவும் இந்திய முறைகள் குறித்த எங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் சமூக, கலாசாரத் தன்மைகளோடு இணைத்துச் சொன்னால் அதை ஆர்வத்துடன் கேட்க வாய்ப்பு அதிகம் என்றும் எனது கருத்தைத் தெரிவித்தேன்.

அவர் உடனே தானும் அதைத் தான் விரும்புவதாகவும், காந்திய, இந்திய சிந்தனைகளின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் எனவும் கூறினார். எனவே கலந்துரையாடலைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதல் கூட்டத்துக்கான தேதியை முடிவு செய்யும் சமயத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியைத் தொடங்கவே முடியவில்லை.

அவரைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போக முடியும். இந்தியப் பாரம்பரியம்  குறித்த அவரது ஆய்வுகள், கூட்டுறவுத் துறையில் அவரது பங்களிப்பு, சதுரங்க விளையாட்டுக்கு அவர் அளித்த ஆதரவு என முற்றிலும் வேறுபட்ட கோணங்களில் தனது முயற்சிகளைச் செலுத்தியிருக்கிறார்.

பன்முகத் தன்மை கொண்ட அவரது வாழ்க்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. பொள்ளாச்சியைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், கொங்குநாடு முழுவதும் அவரைத் தலைமகனாகவே கருதி வந்தது.  இங்கு அவரது மறைவு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

பெரிய வசதிகள் இருந்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையாக வாழ்ந்து வந்தார். சாதாரண கதர் ஆடைகளையே எப்போதும் அணிவார்.  உயர்ந்த மனிதநேயத்தின் பல பண்புகளைக் கொண்டிருந்தார். வாழ்வின் இறுதி வரைக்கும் செயல்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். எனவே அவரைப் பொருத்த வரையில் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து சென்றிருக்கிறார்.

வள்ளலார் கொள்கைகளிலும் மகாத்மா காந்தியின் சிந்தனைகளிலும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். அவர்களின் பெயரில் சென்னையில் தொடர்ந்து நாற்பத்தொன்பது ஆண்டுகளாக நான்கைந்து நாட்கள் விழா எடுத்து வந்தார். அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனையாளர்களை அழைத்து உரையாற்ற வைத்தார். ஒவ்வொருவரின் பேச்சுகளையும் உட்கார்ந்து கேட்பார்.

அவ்வாறு இந்த வருடமும் விழா நடந்து வரும் போது,   அவரது நாயகனான காந்தியின் பிறந்த நாளில் விழா மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தார். மாலை நிகழ்ச்சி தொடங்குவதற்காக இறை வணக்கம் ஆரம்பிக்கப்பட்டது. திருவாசகத்திலுள்ள கோயில் திருப்பதிகத்தின்  ஐந்தாவது பாடலான ‘குறைவிலா நிறைவே கோதிலா அமுதே …… ’ என்னும் பாடல். இறை வணக்கம் முடிந்துக் கவனித்தபோது,  அவரது வாழ்வு நிறைவுற்றிருந்தது தெரிய வந்திருக்கிறது.

 

 

8 Replies to “அருட்செல்வருக்கு அஞ்சலி”

 1. அருட்செல்வருக்கு ஒரு அருமையான அஞ்சலி. பேராசிரியர் கனகசபாபதி ஐயாவுக்கு நன்றி. இன்னும் கொஞ்ச வாரங்களுக்குமுன்னரே இந்தக்கட்டுரை வந்திருக்கவேண்டும். அருட்செல்வர் கொங்கு மண்டலத்தினை திராவிட மாயைதாக்கிய காலத்திலும் ஆங்கெ ஆன்மிக ஒளி மங்காமல் காத்திட்ப்பாடுபட்ட பெரியார்களில் ஒருவர். அவர் வள்ளலார் வழியினராயிருந்தாலும் சைவத்தினையும் போற்றியவர் வைணவத்தினையும் மதித்தவர். தொழில் நுட்பம் பயின்றவர், தமிழ்கத்திட்டக்குழுவில் பணியாற்றியவர். ஆராய்ச்சிகள் பல செய்த அறிஞர். தமிழையும் வடமொழியையும் ஒருங்கே போற்றியவர். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவரது ஆன்மிகப்பணி, அறிவுலகப்பணி மக்கட்பணி தொடர எந்தை ஈசன் அருள் செய்க.

 2. மிக உன்னத மனிதர் .அவரின் அருட்பணியால் நன்மையுற்ற கோடிக்
  கணக்கானவர்களில் நானும் ஒருவன்.வேதாத்ரியமும் அருட்தந்தை வழிவிரும்புவர் அனைவரும் அவர் வாழ்நாள் முழுதும் போற்றி புகழ்வர் .குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ..அவருக்கு பொருந்தும் .வாழ்க வளமுடன் .

 3. வள்ளல் பெருமான் வழி நடந்த வள்ளல் மகாலிங்கம் அவர்கள் மறைந்து விட்டார் . மக்கள் மனதில் நிலையாக நிறைந்து விட்டார்.

 4. நல்ல பண்பான உள்ளம் நல்லவர் ஆத்மா சாந்தி பெற வேண்டுவோம்

 5. Mr.Mahalingam was not only a great torch bearer of Hindiusim but also a great nationalist.

  His articles in the monthly magazine “Om Shakthi” on scince, agriculture, commerce etc., are an indication of his profound knowledge & experience.

  He was also a great educationalist & philanthropist.

  Above all, a great human being & a true follower of Ramalinga Swamigal.

  His loss has definitely left a void which wil be hard to fill.

  May his soul rest his peace.

 6. Great loss, my father knew him personally. Pollachi owes to this man for putting it on the industrial and educational map.He was a Karma Yogi.
  Usual whinge. I request readers not to use the Christian proclamation ” May his soul rest in peace”. Atman is always in peace and Atman is not synonymous with soul.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *