கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்

2001ம் வருடம்.

ஜமைக்காவில் கிங்ஸ்டனில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஐ.சி.யு. மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் -ல் மிகவும் பிரபலமான கண் டாக்டர்,

இந்திய வம்சாவளியினரான டாக்டர் சார் (Dr. Chaar) கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, ஐ.சி.யு. வில் டாக்டர்களின் மிகவும் தீவிரமான கண்காணிப்பில் இருக்கிறார்.

அவரது நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் அவர் விரைவில் குணமடைந்து தனது கண் மருத்துவ சேவையை தொடர வேண்டும் என்று அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐ.சி.யு.வில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருப்பது, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்கள், அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையை அளித்துக் கொண்டிருந்தது. அவரது மனைவி டாக்டர் குரேந்திரா சார், மற்றும் அவரது மகள் வந்தனா இருவரும் மிகுந்த கவலையுடன் இருந்தனர். டாக்டர் திருமதி குரேந்திரா சார் வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தின் பாத்தாலஜி துறையில் பணியாற்றி வந்தார். அப்பா, அம்மா மற்றும் மகள், மருத்துவ சேவை என்று அமைதியாக இருந்த அந்த குடும்பத்திற்கு கடந்த ஆறு மாதங்களாக மிகவும் இக்கட்டான அதிகபட்ச மன அழுத்தத்துடன் கூடிய சூழ்நிலை. டாக்டர் சார் உயிர் பிழைப்பாரா? மாட்டாரா? என்று எதுவுமே சொல்ல முடியாத நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர்கள் தங்கள் முயற்சியில் சற்றும் தளர்வில்லாமல் போராடிக் கொண்டிருந்தனர்.

ஜமைக்கா வாழ் நண்பர்கள், டாக்டர் குரேந்திரா சார் ருக்கும், வந்தனாவுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில், எப்போதும் யாராவது உடனிருந்தனர்.

டாக்டர் ஜே.என்.சார்
டாக்டர் ஜே.என்.சார்

டாக்டர் சார் குடும்பத்தின் நண்பர்களான டாக்டர் ஓம்கார் பர்சாத், அவரது மனைவி திருமதி குஸும், மற்றும் திரு ராமச்சந்திரன், அவரது மனைவி கீதா நான்கு பேரும், மிகுந்த பயத்தில் இருந்த வந்தனாவுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தனர். டாக்டர் குரேந்திரா சார் பேங்க் வரை சென்று வரவேண்டும் என்று திருமதி குஸும் மற்றும் திருமதி கீதாவிடமும் சொல்லிவிட்டு அங்கே இருந்து வங்கியை நோக்கிமெதுவாக சோர்வுடன் நகர்ந்தார்.

அப்போது அந்த பக்கமாக வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு வெங்கட்ராமன்,அங்கே தனது நண்பர் டாக்டர் ஓம்கார் பர்சாத், மற்றும் திரு ராமச்சந்திரன் தங்கள் குடும்பத்தோடு சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து வேகமாக அவரை நோக்கி வந்தார். டாக்டர் குரேந்திரா சார் மற்றும் டாக்டர் சார் இருவரையும் தெரியும் என்றாலும், அவ்வளவாக பழக்கமில்லாததால் டாக்டர் ஓம்கார் பர்சாத்தை நோக்கி நடந்தார்.

திரு வெங்கட்ராமன் வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழத்தில் ஃபைனான்ஸ் துறையில் முன்பு பணியாற்றியவர்.பின்னர் 1998 முதல் அமெரிக்காவில் தங்கி தனது ஃபைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ் தொழிலை கவனித்து வந்து கொண்டிருந்தார்.

பல்கலைக்கழக மருத்துவமனை ஐ.சி.யு.வின் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் அறையில் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதைப் பார்த்தவுடன் திரு வெங்கட்ராமன், டாகடர் ஓம்கார் பர்சாத்தை கேள்விக்குறியோடு “என்ன இங்கே ரொம்ப வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.

“உங்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் யுனிவர்சிட்டி கண் டாக்டர் சார் நினைவிருக்கிறதா?”

“ஓ நினைவிருக்கிறதே, அவர் மனைவி டாக்டர் குரேந்திரா அவர்களைக்கூட எதிரே பார்த்தேன். அதிகமாக பழக்கமில்லை.”

“டாக்டர் சார் அவர்களுக்கு உடல் நலமில்லை. மல்டிப்பிள் ப்ராப்ளம், ஆறு மாதமாக ஐ.சி.யு. வில் சீரியசாக இருக்கிறார். டாக்டர்கள் கூட கைவிரித்துவிடக்கூடிய நிலை. இருந்தாலும் ரொம்பவே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்”- என்று வேதனையோடு வெங்கட்ராமனிடம் டாக்டர் ஓம்கார் பர்சாத் கூறினார்.

திரு வெங்கட்ராமன் சற்று நேரம் டாக்டர் ஓம்கார் பர்சாத்திடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, வந்தனாவிடம் ”கவலைப்படாதேம்மா, நான் கடவுளை பிரார்த்தனை பண்ணுகிறேன். அப்பா குணமடைந்து விடுவார்” – என்று ஆறுதல் சொல்லி விட்டு தான் வந்த வேலை விஷயமாக வங்கிக்கு கிளம்பினார்.

அங்கே வங்கியில் டாக்டர் குரேந்திரா இருந்தார். அவருக்கு வணக்கம் சொன்ன திரு வெங்கட்ராமன், டாக்டர் சார் உடல் நிலை குறித்து விசாரித்தார்.

“”நாங்கள் எங்கள கரங்களில் ஏதுமில்லை என்பதை புரிந்து கொண்டோம். அவரது உடல் நிலை மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருக்கிறது. அவர் உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டுமென்று கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டிக் கொண்டிருக்கிறோம். யுனிவர்சிட்டியில் எல்லா டாக்டர்களுமே கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு கடவுளை வேண்டுவதைத்தவிர வேறு வழியில்லை” – என்று கண்ணோரம் துளிர்த்த கண்ணீருடன் வேதனையோடு சொல்கிறார்.

அவரது குரலில் தொணித்த வேதனை வெங்கட்ராமனையும் சற்று வேதனைப்படுத்தினாலும் திரு வெங்க்ட்ராமனும் “கடவுளின் ஆசியில் உங்கள் கணவருக்கு உடல்நலம் சீராகும். எல்லாம் நல்லபடியாக நிறைவேறும்.கவலைப்படாதீர்கள். டாக்டர் சார், பூரண நலம் பெற்று தனது சேவையை தொடர்வார். நானும் கடவுளை பிரார்த்தனை பண்ணுகிறேன்” – என்று சொல்ல,

டாக்டர் குரேந்திரா, ”ப்ளீஸ்” – என்று கண்கள் நிறைய வேண்டுகோளோடு அவரை வணங்கி விட்டு கடந்த ஆறு மாதங்களாக படுத்த படுக்கையோடு இருக்கும் தன் கணவரை கவனிக்க மருத்துவமனைக்கு விரைந்தார்.

டாக்டர் சார் – உடல் நிலை குறித்த கவலையுடனே அங்கே இருந்த நகர்ந்த வெங்கட்ராமன் அமெரிக்காவுக்கு அன்றே கிளம்பி விட்டார்.

******

அமெரிக்காவிற்குச் சேன்ற மூன்றாவது நாள் திரு வெங்கட்ராமன் பயணக்களைப்போடு இரவில் வழக்கம் போல உறங்கச் சென்றார்.

இரவில் நல்ல உறக்கத்தில் இருந்த போது, கணீரென்ற குரலில் அவர் கனவில் ஒரு குரல் ஒலித்தது.

”டாக்டர் திருமதி குரேந்திராவும் அவரது மகள் வந்தனாவும் நீராடி மடியாக  காலை மாலை இரண்டு வேளைகளும் ‘த்ரயம்பகம் யஜாமஹே’ என்று  தொடங்கும் மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை இருவரும் டாக்டர் சார் குணமடையும் வரை சொல்லிவர வேண்டும். டாக்டர் சார் -க்கு இந்த பத்து நாட்கள் மிகவும் சோதனையான காலம்.

அந்த கால கட்டத்தைக் கடந்து விட்டால் அடுத்த பத்து வருடங்களுக்கு யாவும் நலமாகவே நடைபெறும்.

டாக்டர் சார், குணமடைந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழும் நாளில் ஒரு முறை திருக்கடையூருக்கு என்னை சந்திக்க வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.  மேலும்… ”

நல்ல உறக்கத்தில் இருந்த திரு வெங்கட்ராமன் காதுகளில் தெள்ளத்தெளிவாக தமிழில் ஒரு தெய்வ வாக்காக ஒலித்தது.

அந்த அசரீரியான குரலில் திரு வெங்கட்ராமனின் கனவில் அந்த அறிவுரை ஒலித்தது. ஒரு ஆசிரியர் மாணவனுக்கு கட்டளையாக எடுத்துச்சொல்வது போல தமிழில் தெள்ளத்தெளிவாக அந்த அறிவுரை ஒலித்தது.

அந்த அறிவுரை தெய்வத்தின் குரலாக மறு நாள் காலையிலும் அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது.

இடையில் தூக்கத்தின் இடையே அவர் எழுந்து கொள்ளவும் இல்லை. அவர் தனது மனைவியிடம் கூற, அவர் அதனை கேட்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.

இந்த கனவினை எப்படி எடுத்துக் கொள்வது என்று முதலில் இருவருக்குமே தெரியவில்லை.

ஏதோ ஒரு கனவு என்று விட்டு விடவும் மனமில்லை.

திரு வெங்க்ட்ராமனுக்கும் டாக்டர் சார் மற்றும் அவரது குடும்பத்தாரோடு நெருங்கிய தொடர்பு ஏதும் கிடையாது. அவர்களது இ-மெயில் ஐ டி யோ அல்லது ஃபோன் நம்பரோ கூட இருவரிடமும் கிடையாது. எப்படி இந்த செய்தியை இந்த ஆலோசனையை அறிவுரையை அவர்களுக்கு தெரியப்படுத்துவது?

காலை எழுந்தவுடன் அந்த கனவைப் பற்றிய சிந்தனையே மீண்டும் மீண்டும் அவரை தொடர்ந்தது.

தனக்கு டாக்டர் சார் குடும்பத்தோடு அதிக நெருக்கம் கிடையாது.
இதனை எப்படி சொல்வது?
சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா?
அவர்களுக்கு இப்படி பூஜை புனஸ்காரங்களில் எல்லாம் நம்பிக்கை உண்டா என்றும் தெரியாது.

மேலும் பஞ்சாபைச் சேர்ந்த டாக்டர் சார் குடும்பத்தினர், எப்படி சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை எப்படி திருத்தமாகச் சொல்ல முடியும்?

மேலும் கனவின் இரண்டாம் பகுதியையும் சொன்னால், தன்னை ஒரு சுயநலவாதியாக நினைத்துக் கொள்வார்களே..,என்றும் தயங்கினார் திரு வெங்கட்ராமன்.

தன் மனைவியோடு ஆலோசனை செய்தார்.

நிறைவாக தனக்கு டாக்டர் சார் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்த,டாக்டர் ஓம்கார் பர்சாத் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தனர்.

lady-dreamsஉடனே, டாக்டர் ஓம்கார் பர்சாத் – குஸும் தம்பதியினருக்கு தான் கண்ட கனவின் விவ்ரத்தை தெரிவித்து, டாக்டர் சார் இன் மனைவி டாக்டர் குரேந்திரா சார், மற்றும் செல்வி வந்தனா சார் இருவருக்கும் நம்பிக்கை இருந்தால் தினசரி, காலை மாலை இரண்டு வேளையும் மடியோடு, மஹா ம்ருதியுஞ்சய மந்திரத்தை சொல்லி வரட்டும், கனவில் வந்த கட்டளைப்படி பத்து நாள் சிரமமான நாட்கள் என்றும், அதன் பின்னர் பத்து வருடங்களுக்கு கவலை என்றும் அசரீரி செய்தி சொன்னதால், அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். மடி, ஆச்சாரம், சம்ஸ்கிருத சுலோகத்தை தெளிவாக உச்சரிப்பதற்கு, நண்பர்கள் திரு ராமச்சந்திரன் மற்றும் திருமதி கீதா ராமச்சந்திரன் உதவி செய்ய முடியும் என்றும், தெரிவித்து விட்டு, தயக்கம் காரணமாக கனவில் ஒலித்த இரண்டாவது வேண்டுகோளை மட்டும் சொல்லாமல், அந்த விவரத்த்தை பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்வதாகவும் மின்னஞ்சல் மூலம் உடனே தெரிவிக்கிறார்.

”டாக்டர் சார் இன் தற்போதைய நிலையை பற்றி எனக்கு எதுவுமே தெரியாத நிலையில், இந்த செய்தியை திருமதி சார் க்கு தெரிவிப்பது பற்றி நீங்களே ஒரு தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள்” – என்று டாக்டர் பர்சாத் அவர்களை கேட்டுக் கொள்கிறார். ஒருவேளை திருமதி சார் தெய்வத்தின் குரலை ஏற்று செயல்பட ஒப்புக் கொண்டால், அவர்கள் டாக்டர் ராமச்சந்திரன் – கீதா தம்பதிகளை தொடர்பு கொண்டு ”மடி, ஆச்சாரம்” போன்ற விவரங்களையும் மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தையும் அவர்களிடமிருந்தே கற்றுக் கொள்ளும்படியும் மீண்டும் கேட்டுக் கொள்கிறார்.

டாக்டர் ஓம்கார் பர்சாத் மின்னஞ்சலை படித்து விட்டு, இரண்டு நாட்களில் உடனே தனது பதிலில் ’டாக்டர் சார் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், திரு வெங்கட்ராமன் அனுப்பிய மெயில் விவரங்களை திருமதி சார் மற்றும் அவரது மகள் வந்தனாவிடம் தெரிவித்து விட்டதாகவும், அவர்கள் டாக்டர் ராமச்சந்திரன் – கீதா தம்பதிகளோடு தொடர்பில் இருப்பதாகவும் திரு வெங்கட்ராமனுக்கு தகவல் தருகிறார்.

டாக்டர் திருமதி குரேந்திரா மற்றும் செல்வி வந்தனாவின் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலும், மாலையிலும் நீராடி மடியுடுத்தி, தெரியாத சம்ஸ்க்ருத மொழியில் இருக்கும் மஹா ம்ருத்யுஞ்சய மந்திர’த்தை டாக்டர் ராமச்சந்திரன் மற்றும் அவரது கணவர் திருமதி கீதாவிடமிருந்து கற்றுக்கொண்டு சரியாக மஹா ம்ருத்யுஞ்சய மந்திர’த்தை தினசரி சொல்லி பிரார்த்தனை செய்து வருவதாகவும் டாக்டர் ஓம்கார் பர்சாத் பதில் மின்னஞ்சல் அனுப்புகிறார்.

மிருத்யுஞ்ஜய மகாமந்திரம்

த்ர்யம்ப³கம் யஜாமஹே
ஸுக³ந்தி⁴ம் புஷ்டிவர்த⁴னம்
உர்வாருகமிவ ப³ந்த⁴னான்-
ம்ருத்யோர் முக்ஷீய மா(அ)ம்ருதாத்.

முக்கண்ணனை வேண்டுகிறோம்
நன்மணமுடையோன்
பேணி வளர்ப்போன்
வெள்ளரி காம்பினின்று உதிர்தல் போல
விடுபடுக மிருத்யுவின் கட்டுகள்
அமுதநிலை கூடிடுக.

(மந்திரத்தின் மொழியாக்கம் ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது)

சரியாக பத்தாவது நாள்,

கிங்ஸ்டனில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அந்த அதிசயம் நடைபெறுகிறது.

சுமார் ஆறு மாத காலம் ஐ.சி.யு.வில் இருந்த அந்த கண் மருத்துவர் டாக்டர் சார் – உடல் நிலையில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம்!.

டாக்டர் திருமதி குரேந்திரா மற்றும் செல்வி வந்தனாவின் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலும், மாலையிலும் நீராடி மடியுடுத்தி, தெரியாத சம்ஸ்க்ருத மொழியில் இருக்கும் மஹா ம்ருத்யுஞ்சய மந்திர’த்தைச் சொல்லிவந்த பிரார்த்தனைக்கு விரதத்திற்கு பலன் தெரிகிறது.

ஆறுமாதத்திற்கும் மேலாக ஐ சி யு வில் இருந்த டாக்டர் சார், வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படுகிறது. உலகின் எங்கோ ஒரு மூலையில் வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சாருக்கு ஸ்ரீகால சம்ஹாரமூர்த்தியின் ஆசியும் கிடைக்கிறது. டாக்டர் சார் முற்றிலும் பரிபூரணமாகக் குணமடைகிறார்.

kalasamhara_murthy_thirukkadaiyur

சில காலம் சென்ற பிறகு டாக்டர் சார் குணமடைந்து விட்டதாக திரு வெங்கட்ராமனுக்கும் மின்னஞ்சல் பறக்கிறது.

டாக்டர் திருமதி குரேந்திரா சார் அவர்களும் வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தில் பாத்தாலஜி துறையில் பணியாற்றி வந்தார்.(தற்போது பாத்தாலாஜி துறை பேராசிரியராக இருக்கிறார்).

திரு வெங்கட்ராமன் சிறிது காலத்திற்குப்பின்னர் ஒரு முறை கிங்ஸ்டானில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது டாக்டர் பர்சாத் வீட்டிற்கும் செல்கிறார். அங்கே டாக்டர் சார் அவர்களையும் சந்திக்கிறார். டாக்டர் நல்ல ஆரோக்யத்துடனும், துடிப்புடனும் இருப்பதைப் பார்த்து திரு வெங்கட்ராமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

டாக்டர் சார், திரு வெங்கட்ராமனிடம், நீங்கள் கண்ட கனவில் இன்னும் ஒரு வேண்டு கோள் இருப்பதாகவும், அதனை பின்னர் தெரிவிப்பதாகவும் கேள்விப்பட்டேன் அது என்ன? அந்த கனவின் இரண்டாவது பகுதி என்ன?’ என்று கேட்டார்.

அதற்கு பதில் சொல்வதற்கு திரு வெங்கட்ராமன் மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலையில் யோசித்தாலும், சற்று சுதாரித்துக் கொண்டு, அந்த அறிவுரையின் இரண்டாவது பகுதி, ’சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயாவிற்க்கு 2,500/- யு எஸ் டாலர் நன்கொடை வழங்க வேண்டும் என்பது’ என்கிறார்.

“ஏன் இதனை முதலிலேயே சொல்லவில்லை?” – என்று டாக்டர் சார் கேட்கிறார்.

”நான் இந்திய வம்சாவளியினர் என்ற முறையில், சென்னை, சங்கர நேத்ராலயாவின் தன்னலமற்ற சேவைகளுக்காகவும், அதன் தேவைகளுக்காகவும் இந்திய வம்சாவளியினர்களிடமும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் சங்கர நேத்ராலயாவின் சேவையைப் பற்றி எடுத்துரைத்து நன்கொடைகள் பெற்று வழங்கும் அமைப்பான அமெரிக்காவில் உள்ள ”ஓம் டிரஸ்ட்” டின் துணைத்தலைவராகவும் இருக்கிறேன். அதனால் எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் பிரபலமானவர்களிடம் சங்கர நேத்ராலயாவின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நன்கொடை பெற்று சங்கர நேத்ராலயாவிற்க்காக சேவை செய்து வருகிறேன். இந்த நிலையில் உங்கள் உடல் நிலையை எனது சேவைக்கு சாதகமாக்கிக் கொள்வதாக மற்றவர்கள் எண்ணிக்கொள்ள ஏதுவாக அமைந்து விடுமோ? என்று தயங்கினேன்” என்று தெரிவித்தார்.

“சங்கர நேத்ராலயாவிற்கு நன்கொடை வழங்கலாமா? வேண்டாமா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்” என்றும் சொல்கிறார்.

ஆனால் டாக்டர் சார் அவர்களோ ”எவ்வளவு நன்கொடை அளிக்க வேண்டும்?” – என்று கேட்கிறார்.
திரு வெங்கட்ராமன் அவர்களோ கனவில் ஒலித்த தெய்வீக குரல் தனக்கு கட்டளையிட்டதை அப்படியே மீண்டும் சொல்கிறார். உடனடியாக டாக்டர் சார் தனது அறைக்குச் சென்று செக் புத்தகத்தை எடுத்து 2,500/- யு.எஸ். டாலருக்கு ஓம் டிரஸ்ட் பெயருக்கு எழுதி கையெழுத்திட்டு ஒரு செக்கினை வழங்கினார். அதனை சங்கர நேத்ராலயாவுக்கு அனுப்பிவைக்க, சங்கர நேத்ராலயாவின் இலவச சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு படுக்கைக்கு டாக்டர் சார் அவர்களின் பெயர் சூட்டப்படுகிறது. ஒருமுறை திருக்கடையூருக்கு வந்து ஸ்ரீகால சம்ஹாரமூர்த்தியை தரிசனம் செய்ய வரவேண்டும் என்றும் டாக்டர் சார் அவர்களை திரு வெங்கட்ராமன் கேட்டுக் கொள்கிறார்.

இவையனைத்தும் நடைபெற்றது 2001ம் ஆண்டில்.

மரணத்தில் வாசலில் சுமார் 6 மாத காலத்திற்கு மேலாக போராடிக்கொண்டிருந்த டாக்டர் சார், ஸ்ரீகால சம்ஹாரமூர்த்தியின் கருணையினால், மீண்டும் எழுந்து சுமார் 12 வருடம் தனது கண் மருத்துவ சேவையை அமெரிக்கர்களுக்கும், அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும் சிறப்பாக ஆற்றி வந்தார்.

கடந்த ஜனவரி 2013 ல் டாக்டர் சார் காலமாகி விட்டார்.

திரு வெங்கட்ராமன், டாக்டர் சாரின் மனைவி திருமதி குரேந்திரா சார் அவர்களிடம் எங்களது இரங்கலை நேரடியாக தெரிவிக்க நேரடியாகச் செல்கின்றார்.
அப்போது டாக்டர் சாரின் மனைவி டாக்டர் குரேந்திரா சார் 2001 ம் வருடம் திரு வெங்கட்ராமன் கண்ட கனவினை நினைவு கூர்ந்து பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்றவற்றை ஆச்சரியத்தோடு விவரித்தார்.

”டாக்டர் சார், உடல் நலமின்றி ஆறு மாதங்களுக்கும் மேலாக நீண்ட நாட்கள் ஐ.சி.யு.வில் இருந்த கால கட்டத்தில் அனைவருமே நம்பிக்கை இழந்திருந்த நிலையில், கடவுளின் கருணைதான் அவரை மீட்டுக்கொடுத்தது. நானும் என் மகளும் நீங்கள் விவரித்திருந்த படி கடவுளின் கட்டளையை நீங்கள் சொன்னபடி 10 நாட்கள் மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பிரார்த்தனை செய்து வந்தோம். டாக்டர் சாரின் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. ஐ.சி.யு விலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து இரண்டு மாதகால மருத்துவக்கண்காணிப்புக்குப் பின்னர் முற்றிலும் குணமடைந்து தனது கிளினிக்கில் மருத்துவப் பணியையும் மற்ற வழக்கமான பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வந்தார்.

அதன் பின்னர் 12 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் மிக மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்தோம். அதன் பின்னர் மீண்டும் அவரது உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன, அவர் சமாளித்து வந்தார். ஜனவரி 2013ல் தனது கடைசி மூச்சினை வெளியிட்டார்.

எங்கள் குடும்பத்தினை ஆசீர்வதித்த ஸ்ரீகால சம்ஹாரமூர்த்திக்கு எனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தனது தெய்வீகக் குரல் மூலம் ஒரு கட்டளை பிறப்பித்து என் கணவரின் வாழ்க்கையை நீட்டித்து, பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரோடு வாழக்கூடிய பாக்யத்தை ஸ்ரீகால சம்ஹாரமூர்த்திதான் அளித்தார். அவருக்கு நன்றி.” – என்று விவரிக்கிறார்.
திரு வெங்கட்ராமன் தன்கனவில் வந்த தெய்வத்தின் குரல் – கட்டளையின் படி அவர் ’திருக்கடையூருக்கு வந்து ஸ்ரீகால சம்ஹாரமூர்த்தியை தரிசனம் செய்ய வரவேண்டும்’ என்று கூறுகிறார்.

“எனக்கு திருக்கடையூருக்கு வந்து ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவலாக இருப்பதாகவும், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே, எனக்கு யாராவது உதவி செய்தால் நல்லது” என்று கேட்க, திரு வெங்கட்ராமன் தானும் தன் மனைவியும் உதவி செய்வதாகக் கூறினார்கள்.

2014 ஜனவரி மாதம்.

டாக்டர் திருமதி குரேந்திரா சார் இந்தியாவுக்கு, குறிப்பாக பெங்களூருக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து இரண்டு முக்கியமான விஷயங்களுக்காக சென்னைக்கு வந்தார்.

ஒன்று திருக்கடையூருக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும், இரண்டாவது சங்கர நேத்ராலயாவுக்கு விஜயம் செய்ய வேண்டும்.

அதன் படி டாக்டர் குரேந்திரா சார் ஐயும், அவரது மகள் வந்தனாவையும் திருக்கடையூர்க்கு அழைத்துச் சென்று ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்யுவிக்கும் பாக்யம் திரு வெங்கட்ராமன் தம்பதியினருக்கு கிடைத்தது.

அடுத்து டாக்டர் குரேந்திரா சார், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு வந்து டாக்டர் பத்ரிநாத் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

சங்கர நேத்ராலயாவிற்கு நன்கொடை அளிக்கும் டாக்டர் (திருமதி) குரேந்திரா சார்
சங்கர நேத்ராலயாவிற்கு நன்கொடை அளிக்கும் டாக்டர் (திருமதி) குரேந்திரா சார்

டாக்டர் பத்ரிநாத், டாக்டர் திருமதி சார் சங்கர நேத்ராலயா மருத்துவமனை முழுவதையும் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். சங்கர நேத்ராலயாவின் தன்னலமற்ற உலகத்தரமிக்க சேவையை நேரில் கண்ணுற்ற அவர் தனது மகள் வந்தனா மூலமாக 11 ஏழை நோயாளிகளுக்கு மேஜர் ஆபரேஷன்கள் இலவசமாகச் செய்வதற்க்காக 2,500 அமெரிக்க டாலர்கள் நன்கொடையளித்தார். மேலும் இந்த சேவையை ஒவ்வொரு வருடமும் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

பக்த மார்க்கண்டேயனுக்கு தனது குரலினால் ’மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை’ தனது அசரீரியான குரலினால் எடுத்துக்கொடுத்த, ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியின் ஆசியினால், மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது எனபது மீண்டும் உறுதியானது.

ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியின் ஆசியினால் வறுமையில் வாடும் 11 எழை நோயாளிகளுக்கு சங்கர நேத்ராலயாயில் ஒவ்வொரு வருடமும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கிடைத்து வருகிறது.

(குறிப்பு: இந்த கட்டுரை, இந்த கட்டுரையில் வரும் திரு வெங்கட்ராமன் அவர்களோடு நேரில் உரையாடிய போது தெரிவித்த சம்பவங்கள் மற்றும் அவரது மின்னஞ்சல், மற்றும் டாக்டர் திருமதி குரேந்திரா ஆகியோரிடம் தொலைபேசியில் உரையாடியபோது தெரிவித்த தகவல்கள் மின்னஞ்சல் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

கட்டுரையாசிரியர் அ.போ. இருங்கோவேள், சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் மருத்துவ சமூகவியலாளர் (Medical Sociologist) மற்றும் மேனேஜர் – நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். சென்னையில் சமூகசேவை அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து சேவைப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர். தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

 

6 Replies to “கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்”

 1. Excellent article, Very touching….
  The power of Mahamrityunjaya Mantra is limitless..

  Sambo Mahadeva!!!!

 2. படித்த பொழுதே மெய்சிலிர்த்தது. இந்தக் கலியுகத்திலும் கடவுளின் கருணை எங்கெல்லாம் ஊற்றெடுக்கிறது! இத்தருணத்தில் எனக்கு ஒரு தமிழன்பர் சுட்டிக் காட்டிய ஒரு பாடலையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல்
  பாயிற் கிடவாமல் பாவியேன் காயத்தை
  ஓர்நொடிக்குள் நீக்கி என்னை- ஒண்போரூர் ஐயா
  உன் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.

  இது திருப்போரூர் சந்நிதி முறை எனும் பாடல். தினம் ஒருமுறை கூறிவந்தால் மிக்க நன்மை பயக்கும் என்றார். பொருளும் எளிமையானது; விளங்கிக் கொள்ள முடியும்.
  வணக்கம்; நன்றி.

 3. என்னுடைய அனுபவத்தை எழுத விரும்பிகிறேன். 1983இல், வெளிநாட்டில், கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தேன். கடுமையான ஜுரம். என்ன காரணம் என்று மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
  என்னுடன் வேலை செய்த நண்பர், திருப்பதி வெங்கடாசலபதிக்கு, ஒரு ரூபாய் மஞ்சள் முடி போட்டு வேண்டிக்கொள்ள சொன்னார். சரியாக 5 தினங்களுள், படிப்படியாக ஜுரம் குறைந்து, நார்மல் நிலைமைக்கு வந்தேன். இன்னமும் நான் எண்ணி ஆச்சரியப்படும் விஷயம் இது.

 4. அருமையான ஸ்ம்பவம் ரிக்வேதம் மற்றும் யஜூர்வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்திலும் காணப்படும் ம்ருத்யுஞ்ஜய மந்த்ரத்தின் பயனை எடுத்துரைக்கும் சம்பவத்தினை வரைந்த இருங்கோவேள் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
  மரணத்தினைவிட கொடுமையானது மரணபயம். அதைப்போக்கிட காலனைவென்ற காலத்தினைக்கடந்த சிவபெருமானை சரணடைதல்வேண்டும். அதற்கான அற்புத உபாயம் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தினை ஜபித்தல். இந்த மந்திரத்தினை சிவ வழிபாடு செய்பவர்கள் த்யான ஸ்லோகமாகவும் பயன்படுத்துகின்றனர். சிவராத்திரியின் மறு நாள் செய்யப்படும் சிவவேள்வியிலும் பயன்படுத்தப்படும் அற்புதமான மந்திரம் இது. இதனை எந்த பேதமும் இன்றி அனைவரும் நித்திய வழிபாட்டில் பயன்படுத்துதல் நலம். சிவசிவ. ஜய ஜய ம்ருத்துஞ்ஜெய மஹாதேவ சிவசிவ

 5. ” மிருத்யுஞ்ஜய மகாமந்திரம் ஒரு பொக்கிஷம் … நாள்தோறும் இம்மந்திரத்தை பாராயணம் செய்தால் மகிழ்ச்சிக்கு அளவேது “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *