விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…

இந்திய அளவில் அறியப்பட்ட மிக முக்கிய கன்னட எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பாவால் 2007ல் படைக்கப்பட்ட நாவல் “ஆவரணா “. கன்னடத்தில் வெளியான இந்த நாவல் 4 மாதங்களில் 10 மறுபதிப்புகளைக் கண்டது. மராத்தி, ஹிந்தி மொழிகளிலும் பைரப்பாவின் பிற நாவல்களை விட இந்த நாவல் அதிகம் பேசப்பட்டது. கன்னடத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுவிட்டது.

எஸ்.எல்.பைரப்பா
எஸ்.எல்.பைரப்பா

ஆர்வமும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்து இந்த நாவலை கன்னட மொழி மட்டுமல்லாது மொத்த பாரதத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கன்னட இலக்கிய,கலை உலகப் பிரமுகர்கள் பலரும் இந்த நாவலை மிகக் கடுமையாக விமரிசித்தனர். யு.ஆர்.அனந்தமூர்த்தி இந்த நாவலே அபாயகரமானது என்றார். கிரிஷ் கர்னாட் இன்னும் ஒரு படி மேலே போய் தவறான தகவல்களை , தவறான வரலாற்றை இந்த நாவல் பேசுவதாகச் சொன்னார். ஆனால் 80 வயதைக் கடந்த பைரப்பா வெகு நிதானமாக , தன்னை விமரிசித்தவர்களை வாதத்திற்கு அழைத்தார். தான் முன்வைத்த ஒவ்வொரு கருத்துக்கும் ஆதாரத்தை தன்னால் நிரூபிக்க இயலும் என்ற அவர் மறுதரப்பைச் சேர்ந்தவர்களையும் அவ்வாறே செய்ய வேண்டினார். இன்று வரை இந்த நாவலை எதிர்ப்பவர்களை நோக்கி பைரப்பா முன்வைக்கும் ஒரே வேண்டுகோள் – ‘நாவலில் கொடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை ஒரு முறையேனும் வாசித்து விட்டு பேசுங்கள் ‘ என்பதே.

நாவல் அப்படி எதைப் பற்றித்தான் பேசுகிறது?

பல்லாயிரம் வருடப் பாரம்பரியம் வேர் கொண்ட நமது கலாச்சாரத்தை வெகு இலகுவாக அறுத்தெறிந்துவிட்டு 100 வருடங்களைக் கூட முழுமையாகத் தாண்டாத ஒரு சித்தாந்தத்தை கண்ணை மூடிக் கொண்டு கடைப்பிடிக்கும் ஒரு சாரார் இங்கு உண்டு. இவர்கள் கல்வி, கலை, இலக்கியம், களச் செயல்பாடுகள் என எல்லா சமூகத் தொடர்பு தளங்களிலும் பரவி நிற்பவர்கள். “அறிவுஜீவிகள்’, “முற்போக்காளர்கள்” என்று தம்மை சொல்லிக் கொள்ளும் இவர்கள்தான் இன்று ஊடகம் முதல் அரசியல் வரை பெரும் வலைப் பின்னல் அமைத்து அமர்ந்திருக்கிறார்கள். இந்த வலையில் சென்று சிக்கிய ஒரு ராணித் தேனி படும் அவஸ்தையும்,அதன் மனப் போராட்டமும், அது கண்டடையும் சுடும் உண்மைகளும்தான் இந்த நாவல்.

ஒரு காந்திய குடும்பத்தில் பிறந்து கல்வி, பணி ஆகியவற்றில் தனக்கான முழு சுதந்திரமும் தரப்பட்ட லக்ஷ்மி முற்போக்கு எண்ணங்களால் பெரிதும் உந்தப்பட்டு நாடக/திரைத்துறையில் உடன் பணியாற்றும் அமீரை நிக்காஹ் செய்து கொள்கிறாள், ரசியா என்ற பெயர்/மத மாற்றத்துடன். தொடக்கத்தில் எல்லாமே சரியாகச் செல்வது போல இருந்தாலும் அமீர், அமீரின் குடும்பம் மெல்ல,மெல்ல அவளை ஆக்கிரமிப்பதை லக்ஷ்மியால் உணர முடிகிறது. முற்போக்காக வெளியே தோற்றமளிப்பதற்கு மாறாக , இன்னும் தன் மதத்தின் வாழ்க்கை முறையை விட்டுக் கொடுக்க முடியாதவனாக அமீர் இருக்கும் உண்மை லக்ஷ்மியை நிதானமாகச் சுடுகிறது. அதற்குள் அவர்களது வாழ்வின் அடையாளமாக மகன் “நஸீர் ” பிறந்து விடுகிறான்.

அமீரும்,ரசியாவும் ஆவணப்படம் ஒன்றுக்காக ஹம்பே செல்கிறார்கள். அங்கு சிதைந்து கிடக்கும் நகரம், உடைத்தெறியப்பட்ட தெய்வ வடிவங்கள், உடைக்கப்பட்ட சிற்பங்கள் ஆகியவற்றைக் கண்டதும் ரசியாவின் மன ஆழத்தில் எதுவோ ஒன்று விழித்து எழுகிறது. இந்நிலையில் அவளது திருமணத்திற்குப் பின் அவளுடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட அவளது தந்தையின் மரணச் செய்தி அவளை வந்தடைகிறது. நகரத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு கிராமம்தான் அவளது சொந்த ஊர். தந்தைக்குப் பின் அவரது வீடு, நிலம் முதலிய சொத்துக்களைப் பார்க்க 28 ஆண்டுகளுக்குப் பின் அவள் தன் கிராமத்திற்கு வருகிறாள்.

அதே ஊரைச் சேர்ந்த சேஷ சாஸ்திரிகளின் மகனும், தந்தையுடன் வேறுபட்டு நகரத்திற்கு வந்து மொத்த மாநிலத்தின் அறிவுஜீவி முகமாகவும் ஆகி விட்ட பேராசிரியர் என்.எஸ்.என். சாஸ்திரிதான் லக்ஷ்மியை முற்போக்கில் மூழ்கடித்து ரசியாவாக மாற்றுவதில் முன்னின்றவர். நாடு முழுவதும் பயணித்து மிக முற்போக்கான கொள்கைகளை மட்டுமே பேசி வரும் பேராசிரியர் சாஸ்திரி நாடறிந்த அறிவுஜீவிகளில் ஒருவராகிறார். தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும் குழுவுக்கு தலைமை தாங்குமளவு செல்வாக்காகிறார் . ஆனால், அவரது தாயாரின் மறைவுக்கு வரும்போது தந்தை சேஷ சாஸ்த்ரியின் கேள்விகளால் மனம் சிதறும் பேராசிரியர் முன்னிலும் வெறுப்பு மிகுந்தவராக மாறிப் போகிறார். அமீரையும்,ரசியாவையும் மீண்டும் இணைத்து வைக்க அவர் செய்யும் முயற்சிகள் பயனற்றுப் போகின்றன.

இதனிடையே தந்தையின் கிராமத்து வீட்டில் அவரது அறையில் தங்கும் லக்ஷ்மி அவர் சேகரித்து வைத்திருந்த , படித்து குறிப்புகள் எடுத்து வைத்திருந்த பெரும் நூல்களின் குவியலைக் காண்கிறாள். தந்தையின் குறிப்புகளை வாசித்து , அவற்றால் கவரப்பட்டு அதன் வழியே அந்தப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும் லக்ஷ்மி இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களுக்குள் நுழைகிறாள். அந்த வாசிப்பின் அடிப்படையில் முகலாயர்களால் வெல்லப்பட்ட இந்திய நாடுகளையும், அவர்களால் நிகழ்த்தப்பெற்ற அழிவுகளையும், இடிக்கப்பட்ட பிற மத வழிபாட்டுத் தலங்களையும், பிற மதத்தினர் நடத்தப்பட்ட விதத்தையும் அறிந்து கொள்கிறாள். முகலாயப் படையெடுப்பில் தோல்வியுற்று சிறைப்பிடிக்கப்படும் பிற மதத்தினருக்கு என்ன நடந்தது என்பதையும் வாசித்தறியும் லக்ஷ்மி இவை அனைத்தையும் ஒரு நாவலாக எழுதத் தொடங்குகிறாள்.

தேசிய கல்விக் குழு சந்திப்பில் பங்கேற்கும் லக்ஷ்மி இந்த வரலாறும் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும் என்று வாதிட்டுத் தோற்று தனிமைப்படுத்தப் படுகிறாள். இதனிடையே, அமீருக்கும், லக்ஷ்மிக்கும் ஏற்பட்ட இடைவெளியில் லக்ஷ்மி கிராமத்திலேயே சிறிது காலம் கழித்து விட்டு திரும்பும்போதுதான் அமீர் மற்றொரு நிக்காஹ் செய்து கொண்டதை அறிகிறாள். அமெரிக்காவில் படித்து விட்டு மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் மகன் நசீர் தாயைக் காண வருகிறான். அவனுடன் பேசும்போது தந்தையின் மறுமணம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை என்பதையும், அவன் தன்னை ஒரு முஸ்லிமாக மட்டுமே உணர்ந்து பேசுவதையும் கண்டு திகைக்கிறாள் லக்ஷ்மி.

thirai-book-coverஅவளது நாவல் வெளியிடப்பட்டு அறிவுஜீவிகளால் , குறிப்பாக, சாஸ்திரியின் சீடர் குழாமால் கடுமையாகத் தாக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த நாவல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு அனைத்து புத்தகங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. கூடவே அவளது தந்தையால் சேகரிக்கப்பட்டு, அவளது நாவலுக்கு ஆதாரமாக அமைந்த புத்தகங்களும் பறிமுதலாகின்றன. ஆதாரப் புத்தகங்களையாவது திரும்பப் பெற வேண்டி சட்டப் போராட்டத்தை லக்ஷ்மி துவக்கும் இடத்தில் நாவல் முடிகிறது.

நாவலில் விவரிக்கப்படும் ஒவ்வொரு வரலாற்று சம்பவங்களுக்கான ஆதாரங்களும் 136 புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் வழியே விளக்கப்படுகின்றன. இதை வெறும் கட்டுக் கதைப் புத்தகங்கள் என ஒதுக்கிவிடவும் முடியாது.பெரும்பான்மைப் புத்தகங்கள் பல இஸ்லாமிய நாடுகளாலும், அமைப்புகளாலும் பாராட்டப்பட்டு, விருதுகள் அளிக்கப்பட்டவை. ஆக பைரப்பா நிறுவப்பட்ட ஆதாரங்கள் வழியாகவே இந்திய வரலாற்றின் வாசிக்கப்படாத பக்கங்களைக் காட்டுகிறார்.

இந்த நாவல் உருவாக்கும் விவாதம்தான் என்ன? அதை நாம் இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

முதலாவதாக இந்த நாவல் பேசும் விஷயங்களைப் பற்றி. எப்போதோ முடிந்து போன அவற்றை இப்போது நினைவுப்படுத்தி, வரலாற்றின் இருண்ட பக்கங்களை ஏன் இன்று வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற கேள்வி. மேலோட்டமாக இந்தக் கேள்வி மிக நடுநிலையான , நியாமான ஒன்றாகத் ,தோன்றலாம். ஆனால் எந்த நோக்கத்துடன் வரலாற்றின் இந்தப் பக்கங்கள் மறைக்கப்பட்டனவோ , அந்த நோக்கத்தின் 5% கூட இன்று வரை நிறைவேறவில்லை.

மானிட விதிமுறைகளுக்கு சற்றும் பொருந்தாத யுத்த முறைகள், யுத்தத்தில் தோல்வி அடைந்த நாட்டின் ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக விற்றது, அவர்களை பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியது, பிற மத வழிபாட்டுத் தலங்களை அரசாணை பிறப்பித்து இடித்தது, பிற மதத்தினருக்கு கூடுதல் வரிகள் விதித்தது போன்ற பல சம்பவங்கள் மறுக்க முடியாத வரலாற்று உண்மைகள். ஆனால் நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்த பிரிவினைச் சூழலின் பதட்டம் மேலும் தொடர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அதனாலேயே வரலாற்றின் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு ஒரு சராசரியான , பொதுமைப்படுத்தப்பட்ட வரலாறு முன்வைக்கப்பட்டது.

நாளடைவில் இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி , வெறுப்பின்றி இருப்பார்கள்; அதற்கு இந்த உண்மை வரலாறு ஒரு தடையாக இருக்கக் கூடும் என்பதே அன்றைய கருத்தோட்டம். ஆனால் இன்று 65 வருடங்களுக்குப் பிறகும் அந்தப் புரிதல் ஒருவழிப் பாதையாக இருக்கிறது. புதிதாக உருவாகி வந்த அறிவுஜீவி முற்போக்காளர்கள் தங்கள் இடத்தைக் காத்துக் கொள்ள உருவாக்கிய தந்திரமாக புதிய வரலாறு மாறிவிட்டது. சகோதரப் புரிதலுடன் இணைந்து வாழ இரு மதத்தவரும் விரும்பினாலும் அவர்களை இந்த முற்போக்காளர்கள் அனுமதிப்பதில்லை. அவர்களால் உருவாக்கப்பட்ட போலி இரக்க வரிகள்தான் -‘ இந்த தேசத்தில் சிறுபான்மைச் சகோதரர்கள் காலம், காலமாக நசுக்கப்படுவது”. விடுதலைப் போராட்டத்தை நேரில் காணாது, அதன் பின் பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறையிலிருந்து இந்த வரிகள் எண்ணமாக வலுப்பட ஆரம்பித்தது. ஆனால் வரலாறு மட்டுமே இந்த போலி வாதத்தை வலுவிழக்கச் செய்ய முடியும்.

நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற புரிதலை இந்த வரலாற்றுப் பார்வைதான் உருவாக்க முடியும். நாவலில் இந்த நோக்குடன்தான் வரலாற்று உண்மைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நாவலில் லக்ஷ்மி என்ற ரசியாவும் இதையேதான் சொல்கிறாள். இந்த வரலாற்று உண்மைகளை நாவல் பேசும்போது அதை ஒரு மதத்தின் மீதான தாக்குதலாகக் கொள்வது தவறான புரிதலே. இன்னும் சொல்லப்போனால் இன்றைய இந்திய இஸ்லாமியர்களை இந்த நாவல் குற்றம் சாட்டவேயில்லை. அப்படிப் பேசுபவர்கள் உண்மையிலேயே இரு தரப்பின் பொதுப்புரிதலை அடிமனதில் வெறுப்பவர்கள். அப்படி ஒரு புரிதல் நிகழத் தொடங்கினால் அவர்களது முற்போக்கு சிம்மாசனம் சரிந்து விடுவதைத் தாங்க முடியாதவர்கள்.

இரண்டாவதாக,இந்த நாவல் இந்துத்துவம் பேசுகிறது, அதனாலேயே அபாயகரமான ஒன்று என்ற விவாதம். கர்நாடகத்தின் அனைத்து முற்போக்காளர்களும் இந்த வரியைக் கொண்டுதான் இப்படைப்பின் மீதான பேச்சையே தொடங்கினார்கள். மெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா? இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை.

சீன ஜப்பானிய போர் தோல்விகள், மங்கோலிய சீன யுத்தத் தோல்விகள், ஆங்கிலேய செவ்விந்தியப் போராட்டங்கள், பிரான்ஸ் ரஷியப் போர்கள் , ரஷியாவின் இனக்குழு போராட்டங்கள் என்று உலகம் முழுவதும் வரலாற்று அடிப்படை இலக்கியங்கள் வெல்லப்பட்டவனின் அவல நிலையையே பேசத் தலைப்படுகின்றன. தோல்வியுற்றவனின் வேதனை மதம், இனம், சாதி, மொழி கடந்தது. படைப்பாளி மானுட உணர்வுடன் அதைப் பார்க்கிறான். அதற்கு மதச் சாயம், சாதி வண்ணம் பூசுவதெல்லாம் தம்மைத் தாமே உயர்த்திப் பிடிப்பவர்களின் விளம்பர மோகம்தான்.

இந்த வகையில் இந்திய நாடுகள் இஸ்லாமிய நாடுகளுடனான போர்களில் அடைந்த தோல்விதான் உலகிலேயே மிகக் குறைவாக பேசப்பட்ட அல்லது பேசவே படாத இலக்கியம். இலக்கியத்தை விடுங்கள், கருத்து அளவில் கூடஇந்த தேசத்தின் தோல்விகள் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. மாறாக அப்போதைய சமூக சூழலில் இயல்பான ஒன்றாகவும், இன்றைய சமூக சூழலில் தவறென்று ஒதுக்கப்பட்ட ஒரு விஷயத்தையும் எடுத்துக் கொண்டு , அன்றிலிருந்தே அடக்குமுறை, நசுக்குமுறை என்று மட்டும் பேசத் தலைப்படுவார்கள். தோற்றவர்களுக்கும் சொல்ல ஒரு வரலாறு உண்டு என்பது இந்த நாட்டுக்கு மட்டும் பொருந்தாது போல.

இலக்கியப் படைப்பாக இந்த நாவலைச் சொல்வதென்றால் இன்னும் முழுமை அடையாத ஒரு வடிவமாகவே படுகிறது. பைரப்பாவின் முந்தைய படைப்புகளோடு ஒப்பிட்டால் கதைமாந்தர்களின் மனவோட்டம், அதன் முரண்கள் இன்னும் விளக்கப்பட்டிருக்கலாம்தான். இருப்பினும், இந்த நாவல் பேசத் துணிந்த பொருள் , அதன் மீதான படைப்பாளியின் நீதியுணர்ச்சி , படைப்பின் நோக்கத்தை பூசி மெழுகாத நேர்மை ஆகியவற்றால் இந்தியாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக இணைகிறது. தமிழில் “திரை’ எனும் தலைப்பில் ஜெயா வெங்கட்ராமனால் மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்திய ஞான மரபு, சமஸ்க்ருதம் ஆகியவற்றில் விரிவான அறிவு பெற்ற பைரப்பாவின் மொழி நுட்பமான வேறுபாடுகளை உள்ளடக்கியது. அந்த கவனம் மொழி பெயர்க்கப்படும்போது சற்று விலகி நிற்பதாகப் படுகிறது.

வரலாறு என்றுமே சார்பற்றது. அதன் வழி மானுட சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியது முந்தைய தவறுகள் மறுபடி நிகழ்த்தப்படக் கூடாது என்பதையே. ஆனால் வரலாறு தன்னையே மீள நிகழ்த்தும் என்பதை தவறான முன்னுதாரணமாக்குவது நடுவிலிருக்கும் சிலரே.திறந்த மனதுடன் இப்படைப்பை அணுகுபவர் யாரானாலும் அவரது நீதி உணர்வை இப் படைப்பு அசைத்துப் பார்க்கும் என்பதே உண்மை.

தமிழில் வாசிக்க:

திரை
எஸ்.எல். பைரப்பா (தமிழில்: ஜெயா வெங்கட்ராமன்)
விஜயபாரதம் பதிப்பகம்
12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31,
பக்கங்கள்: 470
விலை: ரூ 250.

இணையம் மூலம் இங்கு வாங்கலாம்.

ஆங்கிலத்தில் வாசிக்க:

Aavarana : The Veil
Author: S. L. Bhyrappa
Translated by Sandeep Balakrishna
Length: 400 pages
Rupa Publications India
Price: Rs. 300 (paperback)

You can buy online from here.

(கட்டுரை ஆசிரியர் தீவிர இலக்கிய வாசகர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களால் ஜாஜா என்று செல்லமாக அழைக்கப் படுபவர்)

11 Replies to “விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…”

 1. திரு ராஜகோபாலன். ஜா அவர்களுக்கும் தமிழ் ஹிந்து வலைத்தள பொறுப்பாசிரியர்களுக்கும் அநேக கோடி நன்றிகள்.

  ஜனவரி புத்தகக் கண்காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்நூல் விமர்சனம் மிக அற்புதமாக ஒரு நல்ல விழிப்புணர்வினை, நம் தேசத்தின் உண்மை வரலாற்றினை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் வகையில் எழுதியிருக்கிறார் திரு ராஜகோபாலன்.

  இந்த ஆண்டு ஜனவரி புத்தகக் கண்காட்சியில் விஜய பாரதம் அரங்கில் இந்நூல் எனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  உண்மையை திரித்து அல்லது மறைத்து எழுதுவதே முற்போக்குவாதம் அல்லது முற்போக்கு எழுத்து என்று எனக்கு தெரிந்து சுமார் 35 வருடங்களாக ஓர் இயக்கம் செயல்பட்டு வருகின்றது.

  தமிழ் நாட்டை பொருத்தவரை, தமிழினத்தை நாசம் செய்வதற்கென்ற உதயமான திராவிட இயக்கம், இது போன்ற உண்மை வரலாற்றினை தமிழனாகப் பிறந்தவன் அறிந்து கொள்ள இயலாதவாறு செய்து விட்டது.

  இந்த நூலை தமிழில் விஜயபாரதம் வெளியிட்டிருப்பதனால், கண்டிப்பாக மதச்சாயம் பூசத்தான் செய்வார்கள் – இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜந்துக்கள்.

  பேசப்படாத பொருளாக இருப்பவற்றை எழுத்தாக்கிய திரு பைரப்பாவுக்கும் அதனை தமிழில் வழங்கிய திருமதி ஜெயா வெங்கட்ராமனுக்கும் நன்றி.

  அ போ இருங்கோவேள்

 2. இத்தனை கருத்தாழம் பொதிந்த மதிப்புரையை எழுதியமைக்கும் வெளியிட்டமைக்கும், மிக்க நன்றி. இந்தப் புத்தகத்தைப் பற்றி அறிந்திருந்ததால் நிரம்ப தினங்களுக்கு முன்பே வாங்கிப் படித்து விட்டேன்- மொழி பெயர்ப்பைத் தான். கீழே வைக்க முடியாமல் படிக்க வேண்டித் தூண்டும் விதமான கதைப்போக்கு. சொல்லப்பட்ட விஷயங்கள் நாம் நினைத்திருந்ததற்கும், கற்றிருந்ததற்கும் மாறான ஜீரணிக்க முடியாத உண்மைகள். புத்தகத்தின் முடிவில் தாம் ஆதாரமாகக் கொண்ட புத்தகங்களின் தொகுப்பை ஆசிரியர் கொடுத்திராவிடின், நம்பவே முடியாதவை தான் இந்த விஷயங்கள்.

  நமது இந்திய வரலாற்றை சரியாக அறிந்து கொள்ள ஆசைப்படும் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

 3. இந்த நாவலை நான் ஓராண்டுக்கு முன்பே படித்து விட்டேன்.பலருக்கும் படிக்கவும் கொடுத்து இருக்கிறேன்.படித்த ஒரு வாரம் தூக்கம் வராமல் அவஸ்தை பட்டேன் .மிக அற்புதமான நாவல் .ஹிந்து சமுதாயம் பைரப்பாவிர்க்கு நன்றி செலுத்தவேண்டும் .ஒவ்வொரு ஹிந்து வீட்டிலும் இருக்க வேண்டிய புஸ்தகம் .

 4. //அமெரிக்காவில் படித்து விட்டு மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் மகன் நசீர் தாயைக் காண வருகிறான். அவனுடன் பேசும்போது தந்தையின் மறுமணம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை என்பதையும், அவன் தன்னை ஒரு முஸ்லிமாக மட்டுமே உணர்ந்து பேசுவதையும் கண்டு திகைக்கிறாள் லக்ஷ்மி.//

  லஷ்மி ரசியாவாக மதம் மாறியதாக சொல்கிறது கதை. அப்படியானால் ஒரு முஸ்லிமாகத்தான் வாழ வேண்டும் என்ற முடிவோடுதான் ரஷீதை திருமணம் முடித்திருக்கிறார் லஷ்மி. பிறகு தனது முடிவு தவறென்று உணர்ந்து ரஷீதிடமிருந்து பிரிந்து விடுகிறார். அதன் பிறகு ரஷீது தவறான வழியான விபசாரத்தை நாடாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில் தந்தை மறுமணம் செய்தது தவறில்லை என்பது மகன் நசீரின் முடிவு. இதில் என்ன தவறு காண முடியும்?

 5. அன்புள்ள திரு இருங்கோவேள்,

  இந்த புத்தகத்தை நேற்று விஜய பாரதம் அலுவலகம் சென்று வாங்கினேன். சேத்துப்பட்டு எம் வி நாயுடு தெரு, எண்-3, முதல் மாடியில் உள்ளது- ஒரு வாரத்தில் படித்து முடித்து விடுவேன்.

 6. //தோற்றவர்களுக்கும் சொல்ல ஒரு வரலாறு உண்டு என்பது இந்த நாட்டுக்கு மட்டும் பொருந்தாது போல.// மிகச் சரியான சொற்கள். இரண்டாம் உலகப்போரில் யூதப் படுகொலைகளையும், சீனப் படுகொலைகளையும் பற்றி நூற்றுக்கணக்கான ஆவணப்படங்களும், திரைப்படங்களும், கதைகளும் வந்து குவிந்திருக்கின்றன. ஆனால் இந்திய மண்ணில் தோற்ற பெருவாரி மக்களை எப்படி வென்ற மதங்கள் நடத்தின என்பதைப் பற்றி சொன்னாலோ , எழுதினாலோ ‘ மதத் தீவிரவாதி’ என்றே முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களைச் சாடவும் முற்போக்கு வாதிகள் என்ற ஒரு கூட்டம் இருக்கிறது.
  பைரப்பாவை எதிர்த்த முற்போக்கு வாதிகளும் இந்தக்க் கூட்டத்தின் உறுப்பினர்களே. இந்த போலிச் சீர்த்திருத்த வாதிகளை நிராகரித்து நம் கதையை , நம் வரலாற்றை, அதன் இருண்ட பக்கங்களை அறிவது அனைவருக்கும் நல்லது. ஆரோக்கியமானது.
  நன்றி . இதன் தமிழ்ப் பதிப்பை நானும் வாங்குகிறேன்.

 7. //இந்திய மண்ணில் தோற்ற பெருவாரி மக்களை எப்படி வென்ற மதங்கள் நடத்தின என்பதைப் பற்றி சொன்னாலோ , எழுதினாலோ ‘ மதத் தீவிரவாதி’ என்றே முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களைச் சாடவும் முற்போக்கு வாதிகள் என்ற ஒரு கூட்டம் இருக்கிறது.//

  உண்மை,உண்மை!

  ஏனென்றால் இந்துசமத்தைப் பழிப்பதும், இந்து சமயத்தில் மட்டுமே சாதிப் பிறவினைகள் தலை விரித்து ஆடி, இந்தியாவையே பின்னுக்குத்தள்ளுவதாகவும், இந்து சமயத்தின் ஒரு சாதியினரே இது எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்பவர்கள் மட்டும்தானே “முற்போக்காளர்கள்”, “செக்யூலரிஸ்ட்ஸ்” என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்!

 8. சுவனப்பிரியன் அவர்கள் இந்த அளவுக்கு அடக்கி பின்னூட்டம் இடுவதற்கு என்ன காரணம்? உண்மை சுடுகிறதா

 9. சேஷகிரி சார் ,
  உண்மை சுட வில்லை உலகம் மாறிவிட்டது நம் மாறவில்லை என்பதுத அன் உண்மை இங்கு நன் கிரீன் கார்டு க்கு மனு போட்டு இருந்தேன் நேர் கனல் களில் என் மனைவியை கேட்டார்கள் இந்த மனிதர் உங்களுக்கு எத்தனாவது ,இது தவிர திருமணமற்ற உறவுகள் உண்ட எந எத்தனையோ கேள்விகள் ,இது America கலாச்சாரம் . .

 10. அருமையான மதிப்புரை, மிக ஆழமான கேள்விகள்.அனைவரும் படிக்க வேண்டிய
  புத்தகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *