மெஸ்மெரிசம் என்ற ஒரு கலை 80களில் மிக அதிகம் பேசப்பட்டது. இப்போதும் யாராவது ஆங்காங்கே செயல்படுத்தி பார்த்துக்கொண்டிருக்கலாம். மெஸ்மெரிசத்தில் முன்னால் இருக்கும் ஆளை மயக்க நிலைக்கு உட்படுத்தி அவரது இளமைக்கால வாழ்க்கை, அவரது இன்றைய பிரச்சினைகளுக்கு சிறுவயதில் நடந்த சம்பவங்களுக்கும் இருக்கும் தொடர்பை அறிய பயன்படுத்தினார்கள். எவ்வளவுதூரம் நம்பகமானது என்பது என்னளவில் கேள்விக்குறி.
அடுத்து ஒத்த அலைவரிசையுடையவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் மனதளவில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை டெலிபதி என்ற கலை சொன்னது. அதன் மூலம் இருவரும் ஒரே விஷயத்தை பரஸ்பரம் கடத்திக்கொண்டிருந்தனர். அதாவது இரு மனிதர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஊடகம் ஏதுமின்றி மனதிற்குள் நடப்பது.
இரண்டிலும் எதிராளியை தனது இச்சைக்கு ஏற்ப மனதை மாற்றுதல் என்பது சாத்தியமில்லை. ஒருவருக்கொருவர் மனதளவில் தொடர்பு கொள்ளலாமே தவிர, தகவல்களை பரிமாறிக்கொள்ளலாமே தவிர வேறொன்றும் செய்ய வாய்ப்பில்லை. ஹிப்நாடிஸத்தில் மன ஆளுமை சாத்தியமென்றாலும், அதில் மனிதனை நார்மலாக இயங்கும்போது ஆளுமை செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்
இதன் அடுத்த கட்ட சாத்தியமான சம்பந்தமே இல்லாத ஆட்களை குறிப்பாய் நேரில் கண்டிராத ஆட்களை குறிப்பிட்ட எண்ண அலைகளுக்கு கொண்டுவந்து அதுவும் எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் ஒருவனை அல்லது பெரும்கூட்டத்தை அதிர்வலைகள் மூலம் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் பேரழிவை நிகழ்த்த முடியும் என்பதற்கான சாத்தியங்களும் உண்டு என்ற அறிவியல் கருத்தைக் களமாகக்கொண்டு அப்படி நடந்தால் என்னன்ன நடக்க சாத்தியங்கள் உண்டு என்பதின் விவரனையே க.சுதாகர் எழுதியுள்ள 7.83 ஹெர்ட்ஸ் என்ற அறிவியல் புனைகதை (ஃபேஸ்புக்கில் Sudhakar Kasturi என்றே அறியப் படுகிறார்)
பொதுவாக அறிவியல் புனைகதைகளில் அதிகமாக அறிவியலும், அறிவியல் சம்பந்தமான புனைவும் இருக்கும். வாசிக்க நிறைய பொறுமையும், அறிவியல் மீதான ஆர்வமும் வேண்டும்.
தமிழில் அறிவியல் புனைகதைகள் எழுதிய சுஜாதாவும், ஜெயமோகனும், இரா.முருகனும், பிறரும் நம் சூழலை அடிப்படையாக வைத்து அதன் மீது கதைகளை கட்டமைத்தனர். வாசிக்க சுகமான நடையில் எழுதினர். சுதாகர் கஸ்தூரியும் தனது இரு நாவல்களிலும் இந்தியாவைக் கதைக்களனுக்கு அடிப்படையாக கொண்டு கதையை, கதை மாந்தர்களை, கதை நடக்கும் இடங்களை பல நாடுகளுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் விரிக்கிறார், சுவாரசியம் குறையாமல்.
இந்தியாவின் ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும்,
கிடைக்கும் துப்புகளைக் கொண்டு எப்படி படிப்படியாக முன்னேறுகிறார்கள் என்பதும்,
எதைத்தேடுகிறோம் என்பதே தெரியாமல் ஆரம்பித்து இறுதியில் கண்டுபிடிப்பதும்..
துப்பாக்கிகள், ஓநாய்கள், மருந்துகள், மனதினைப் படிக்கும் கருவிகளைக் குறித்த தகவல்களும், வாண் மண்டலம் குறித்த தகவல்களும், நிறைந்திருந்தாலும், அதை நமக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் நிச்சயம் வென்றிருக்கிறார். இதெல்லாம் யாருக்கு வேனும் என நினைக்கும்படியாக இந்த தகவல்கள் படிக்கும் நமக்கு இல்லாததும், கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கும் விஷயங்களாக அதை மாற்றி சொல்ல வந்ததை சொல்லிய விதத்தில் ஜெயிக்கிறார்.
கதைக்களன் மற்றும் கதை நடக்கும் இடங்கள் பெங்களூர், குஜராத்தின் வேலவ்தார் காடுகள், துருக்கி, ரஷ்யா, செசன்யா, மும்பை என சுற்றி வந்தாலும் கதையின் பொது இழையை இணைப்பதால் இந்த தாவல்கள் சுவாரசியமாக்குகின்றனவே தவிர அலுப்பை தரவில்லை.
குஜராத் வேலவ்தார் காடுகளில் ஆராய்ச்சிக்கு செல்லும் ஒருத்தி ஒநாய்களில் நடக்க சாத்தியமில்லாத ஒரு அசாதாரனமான நிகழ்வைக் காண்கிறாள். அங்கிருந்து தொடங்குகிறது கதை.
”நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் குறித்து அன்று அவள் அறிந்திருந்தால், அங்கு போயிருக்கவே மாட்டாள் என முதல் பகுதி முடிகிறது.
அந்த அடிமை ஓநாயின் அசாதாரன செயல்பாட்டுக்கான விடையே இந்நாவல்.
அறிவியல் நாவலிலும் தனது ரசனையான உரையாடல்களை அழகாக சொல்லிச் செல்கிறார் சுதாகர். கனரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் ஏந்தி எதிரிக்காக காத்திருப்பவனின் எண்ணங்களிலும் கவித்துவம்.
“நீல ஆகாய தந்தைக்கும், சிவந்த மண் தாய்க்கும் பிறந்தவர்கள்தாமே நாம்”
”அனைத்தும் அடங்கியபோது அவன் யாசித்தது கிடைத்திருந்தது.. அமைதி.”
”சில்கா ஏரி சூரியன் உதிக்கும்போது ஒரு அழகு எனில், அதன்முன் மெல்லிய இரவுப்படலம் போர்த்தி இருக்கும்போது அதீத அழகு. கருநிறக்காளி போல பயங்கரமாய் அச்சுறுத்தும் அழகு”.
”பளபளத்த வழுக்கைத்தலையில் பாலைவனச் சோலைபோல நாலுமயிற்கற்றைகள் நெற்றியில் மேலே நீண்டிருந்தன.
மொத்தக்கதையின் சாராம்சமே இந்த ஒரு பத்திதான்..
// அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும். வன்முறை, கட்டுப்பாடற்ற தன்னை தானே கொல்கிறது. அமைதியான நிலையில் இருப்பவனை ஒரு தீவிரவாதின்னு எவராலும் சந்தேகிக்க முடியாது. எவனால் தன் மன அலைகளை கட்டுப்படுத்த முடிகிறதோ அவன் மிக பலசாலி. அவன் உன்னை தூண்டிவிட்டு உன்னாலேயெ உன்னை அழிப்பான். அந்த அமைதியின் அதிர்வென் 7.83 Hz. //
இரு பலம் வாய்ந்த எதிரிகள் ஒருவருக்கொருவர் மோதுவதும், எதிராளியின் திட்டங்களை முறியடிப்பதுமாக இருக்கும் கதையில் இருவரும் எதிராளியின் திறமைகளை பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் பாராட்டிக்கொள்வதும் அதற்கான மரியாதையை சிறு சிறு செயல்கள்மூலம் உணர்த்துவதும் அருமை.
கதையில் சுவாரசியமான பகுதிகளாக சில்கா எரியின் மீன்களின் சாயமிடப்பட்ட மீன்களும் அதைத் தொடர்ந்து வரும் கண்டுப்டிப்புகளும் அதனைப்பற்றிய அறிவியல் குறிப்புகளும், அது நீண்டு தாய்லாந்துவரை செல்வதும், அதைச் சொல்லிய விதமும்..
வேதநாயகம் ஓநாய்களின் சரித்திரம் குறித்து சொல்வதும், ஒநாய்க்கூட்டத்தை எதிர்கொண்டதை விவரிப்பதும்.
மனதைக் கட்டுப்படுத்தும் ஸ்கூமான் அதிர்வலைகளைக் குறித்த தகவல்களும் அதை விவரித்த விதமும்.
பிறர் மனதைக் கட்டுப்படுத்துவது குறித்த சோதனைகள் குறித்தும் இதுவரை நடந்தவைகளின் விளைவுகளை ஈராக் வரை நடந்ததைச் சொல்வதும்.
தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை.
நாம் வாசிக்க விரும்பும் நாவல் எப்படி இருக்க வேண்டுமென நாம் நினைப்போம்? நிச்சயம் தொடர்ந்து படிக்க வைப்பதாகவும், சுவாரசியத்துடன் புதிய தகவல்களைச் சொல்வதாகவும், சொல்லும் தகவல்கள் நம்பத்தகுந்ததாகவும் இருக்கும்படி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம். சுதாகர் கஸ்தூரி இந்த விஷயத்தில் ரொம்ப மெனக்கெட்டு அதை சாதித்தும் இருக்கிறார். பக்கத்துக்குப் பக்கம் அவரது கடின உழைப்பு தெரிகிறது. ஏகப்பட்ட தகவல்களை சேகரித்திருக்கிறார், அதை அழகாக நாவலில் பொருத்தியும் இருக்கிறார்.
6174ல் சாதித்ததைவிட ஒருபடி மேலேயே சென்றிருக்கிறார். இனி தமிழில் அறிவியல் புனைகதையைப்பற்றி சரித்திரம் எழுதப்படும்போது நிச்சயம் சுதாகர் கஸ்தூரியைச் சொல்லாமல் கட்டுரையோ ஆராய்ச்சியோ நிறைவடையப்போவதில்லை.
தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு அருமையான அறிவியல் புனைகதை சொல்லியாக தொடர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.
மிக அமைதியாக நாம் இருக்கும்போது நமது உடல் அலைகளின் அதிர்வென் 7.83 ஹெர்ட்ஸ். ஸ்கூமான் அதிர்வலையாம். இந்த அதிர்வென்னிலிருந்து விலகியே இருக்கவேண்டும்போல..
7.83 ஹெர்ட்ஸ்
க.சுதாகர்
வெளியீடு: வம்ஸி புக்ஸ்
//நாம் வாசிக்க விரும்பும் நாவல் எப்படி இருக்க வேண்டுமென நாம் நினைப்போம்? நிச்சயம் தொடர்ந்து படிக்க வைப்பதாகவும், சுவாரசியத்துடன் புதிய தகவல்களைச் சொல்வதாகவும், சொல்லும் தகவல்கள் நம்பத்தகுந்ததாகவும் இருக்கும்படி இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம்.// பொதுவாக அறிவியல் புனைகதைகளில் அதிகமாக அறிவியலும், அறிவியல் சம்பந்தமான புனைவும் இருக்கும். வாசிக்க நிறைய பொறுமையும், அறிவியல் மீதான ஆர்வமும் வேண்டும்.// Excellent review Jeyakumar Srinivasan. Makes one to read the novel. Nicely written.