எப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்

எப்படிப் பாடினரோ தொடரின்  மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம். 

னகராஜனின் அரண்மனை; விசுவாமித்திரர் அழகான இரு வாலிபர்களுடன் அரசவைக்குள் நுழைகிறார். அந்த வாலிபர்களுள் ஒருவனான ஸ்ரீராமன் யாராலுமே தூக்கி நிறுத்தக் கூட இயலாத சிவதவனுசை நாணேற்றலாமா என எண்ணுகிறான். குருவின் அனுமதிக்காக அவர் முகத்தை அண்ணந்து நோக்குகிறான். வாலிப மிடுக்கும், எழிலும், கருணையும்,  ராஜ கம்பீரமும் பொங்கும் முகம், எடுத்த காரியத்தில் ஈடுபட்ட முனைப்பு; சுருண்ட கேசக் குழல்கள் நெற்றியில் புரண்டு விளையாடுகின்றன;  அந்த அழகில் ஈடுபட்டு மெய்மறந்த ராஜரிஷி விசுவாமித்திரர் பேசவும் மறந்து, கண்ணால் சைகை செய்து அனுமதி அளிக்கிறார். சிவதனுசை நாணேற்றுகிறான் ஸ்ரீராமன்.

எப்படிப்பட்டதொரு கண்கொள்ளாக் காட்சி! தியாகராஜர் என்னும் மாபெரும் வாக்கேயகாரர் எழுதிய மிக ஒரு அழகான சித்திரத்தை அல்லவோ கண்முன் காண்கிறோம். காதாலும் கேட்கிறோம்!

‘அலகலல்ல ஆடககனி ஆராண்முனி எடுபொங்கெனோ’– சுருண்ட குழல்கள் அசைந்தாடும் அழகில் சொக்கிப் போய் மெய்ப்புளகமுற்று நிற்கும் ராஜரிஷியான விசுவாமித்திரர் தனது சீடன் ராமன் வில்லை நாணேற்றுவானா எனக் கவலையே படவில்லை! ராம லாவண்யத்தில் தன் வயமிழந்து நிற்பவராக விசுவாமித்திரர் தியாகராஜரால் உருவகப் படுத்தப்பட்டுள்ளார்.

‘முனிகனு சைக தெலிசி சிவதனுவுனு விரிசே’- முனிவனின் கண் சைகை அறிந்து வில்லை எடுக்கிற ராமனின் நெற்றியில் புரளும் குழல்களின் அழகில் நம்மையும் மயங்க வைக்கும் பாடல். இத்தகைய ஒரு நுணுக்கமான விஷயத்தை மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்து ராமனின் அழகில் ஈடுபட்டு விடும் தியாகராஜரின் இந்த மத்யமாவதி ராகக் கிருதியை அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் விறுவிறுப்பான பாடாந்தரத்தில் கேட்கலாம். மனக்கண்ணில் காட்சியைக் கண்டு நமது பாரம்பரியப் பெருமையை எண்ணி உள்ளம் பூரிக்கலாம்.

கேட்க: அலகல்ல ஆடககனி – அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்

thyagarajaஇறையனுபவம் என்பது அவனுடைய எண்ணற்ற கல்யாண குணங்களில் (அருள், கருணை, பேராண்மை, இன்ன பிற) ஆழ்ந்து, அதைப் போற்றுவது. குணம் என்பதில் வடிவும் உருவும் சேரும். இவற்றில் ஆழ்ந்து ஈடுபட்டு ராமனை கார்முகில் வண்ணன், தடந்தோளன், தடக்கையன், தாமரைக் கண்ணன் என்றெல்லாம் வர்ணித்து மகிழ்கிறார் தியாகராஜர்.

ராமனின் எல்லையற்ற ‘அழியா அழகை’த் தமது எல்லையற்ற கற்பனைக்குள் அடக்கிப் பார்த்து மகிழும் இது போன்ற எண்ணற்ற கிருதிகள்! எத்தனை முயன்று நீந்திப் பார்த்தாலும் ஆழம் காண முடியாத பெரும் சங்கீத சாஹித்யக் கடல் தியாகராஜருடையது. இதில் மூழ்கி ஒரு சில அபூர்வமான முத்துக்களை எடுத்துப் பார்த்து, கேட்டு மகிழலாமே!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜர் என நாம் அறிவோம். ராமபக்தியில் மூழ்கி, தன்னை, தன் வாழ்வையே ராம சேவையில் கழித்தவர். நாரதரின் மறு அவதாரம் எனப் போற்றப் படுபவர். இவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு. திருவாரூரில் பிறந்த இவர் வாழ்ந்த ஊர் திருவையாறு. திருவாரூர் தியாகேசனின் பெயரையே தாய் தந்தையர் இவருக்குமிட்டனர். தெலுங்கிலும் சம்ஸ்கிருதத்திலும், சங்கீதத்திலும் மிகத் தேர்ச்சி பெற்ற பரம்பரையில் வந்தவர். தந்தை பெயர் ராமப்பிரம்மம். திருவாரூரிலிருந்த ராமப்பிரம்மத்தின் குடும்பம் தியாகராஜரின் கல்விக்காகத் திருவையாற்றுக்குக் குடி பெயர்ந்தது.

தர்க்கம், வியாகரணம் ஆகியவற்றில் நாட்டமின்றி, சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தார் தியாகராஜர். ராமபக்தியிலேயே மூழ்கியிருந்த தியாகராஜர் பிற தெய்வங்களை ஏறெடுத்தும் பாராதிருந்தார். ‘லாவண்ய ராம கனுலார ஜூடவே’ என்ற பூர்ணஷட்ஜ ராகக் கீர்த்தனையில் ‘உன் மனசு, உன் தினுசு, உன் சொகுசு வேறு தான்! நீ இருக்கும்போது தாமச தெய்வங்களை நான் தொழலாகுமோ?’ எனப் பாடினார். ஆனால் இவரது மனைவி சிவபக்தை; ஹரியும் சிவனும் ஒன்றென எண்ணுபவர். திருவையாறிலே வாழ்ந்திருந்தாலும் கூட தியாகராஜர் தர்மசம்வர்த்தனி அம்பிகையின் பவனியைப் பார்க்க மாட்டாராம்! கனவில் தினமும் ராமனைத் தரிசித்து மகிழ்ந்தவர், ஒருமுறை நோயில் படுத்தார்; அப்போது ராமன் அவர் கனவில் வரவில்லையாம்! ‘எல்லா தெய்வங்களும் சமம்; ஒன்று’ என்ற எண்ணம் அப்போது தான் அவருக்கு உதித்தது. பின்பு சிவன், அம்பிகை ஆகிய தெய்வங்களின் மீதும் அழகான பல பாடல்களை இயற்றினார்.

கேட்க: லாவண்ய ராம கனுலார ஜூடவே..

இவர் இயற்றிய கீர்த்தனைகள் கிட்டத்தட்ட 24,000 என்பார்கள். ஆயினும் சில நூறுகளே தற்போது புழக்கத்திலுள்ளனவாம்.

ஸ்ரீராமனைத் தன் ஆண்டானாக, தோழனாக, குழந்தையாக, மகனாக, தந்தையாக, குருவாக என எல்லாமாக எண்ணி நவவித பக்தி செய்தவர் தியாகராஜர்.

‘மானமுலேதா தனவாடனி அபிமானமு லேதா’ என்ற ஹமீர் கல்யாணி ராகப் பாடலில், “உனக்கு வெட்கம் இல்லையா, உன் தனயனான என்னிடம் அபிமானமும் இல்லையோ?” என்று உரிமையுடன் ராமனைக் கேட்கிறார். ‘கானமுரா நீவலெ நிர்மோஹினீ,’ எனும் அனுபல்லவி வரிகளில், “உன்னைப் போன்ற பற்றற்றவனை (நிர் மோஹியை) நான் கண்டதில்லையே,’ எனப் பரிகசிக்கிறார். பரிகாசம் ஏன்? எல்லா பந்த பாசங்களையும் ஒதுக்கி விட்டு, கற்பில் சிறந்தவளான சீதையை ஊராரின் சொல்கேட்டு வனவாசம் செய்ய அனுப்பினான் ராமன். இசையில் சிறந்த குச லவர்களின் தந்தை,’ எனக் கூறி, ‘இருப்பினும் ஒரு அரசனுக்கு தனது தருமமே முக்கியம் எனக் கருதியே இவ்வாறு செய்தவன்,’ எனவும் ஏத்துகிறார்.

கேட்க: மானமு லேதா – சஞ்சய் சுப்ரமணியன்

விஜய்சிவாவின் ஆழம் பொதிந்த ஸ்பஷ்டமான அபூர்வக் குரலில் அர்த்தம் செறிந்த இவ்வரிகள் அழகு மிளிரப் பொங்கியெழுந்து உள்ளத்தைச் சுண்டியிழுக்கும்.

தியாகராஜர் எல்லாப் பாடல்களிலும், அவற்றின் வரிகளினூடே ஒரு தத்துவத்தை, ராம காதையிலிருந்து தாம் ஆழ்ந்து அனுபவித்த ஏதேனும் ஒரு செய்தியை அல்லது ரசத்தை கோடியிட்டுக் காட்டியிருப்பார்.

‘ஆடமோடி கலதா’ எனும் சாருகேசி ராகப் பாடல்- ‘என்னுடன் ஒரு சொல் பேச நீ ஏன் இவ்வளவு பிணங்குகிறாய் ராமைய்யா?… கற்க வேண்டியது அனைத்தையும் கற்றறிந்த, சங்கரனுடைய அம்சமான அனுமனிடம் கூட  (முதல் சந்திப்பில்) உனது தம்பியை விட்டுப் பேசச் செய்தவன்  நீ…  (எளியவனான இந்த) தியாகராஜனிடம்  பேச மாட்டாயா..” எனப் பாடிப் பரிதவிக்கிறார்.

‘சதுவுலன்னி தெலிஸி சங்கராம்ஸுடை
ஸதயுடாஸுக ஸம்பவுடு ம்ரொக்க
கதலு தம்முனி பல்க ஜேஸிதிவி கா-
கனு த்யாகராஜு ஆடின மாட(லாட)’

இதனை லால்குடி ஜயராமன் வயலினில் அற்புதமாக வாசித்துள்ளார். அன்னாரது சாருகேசி ராக ஆலாபனையே பிள்ளையார் சுழி இட்டு ஒரு தேவானுபவத்திற்கு நம்மைத் தயார் செய்து விடும். பின்பு இந்தக் கிருதியைக் கேட்கும் போது கண்களில் கங்கைப் புனல் பெருகி விடும். பாடலின் சாஹித்யங்களையும் புரிந்து கொண்டு கேட்டு பாடலுடன் ஒன்றி நெகிழச் செய்யும் இன்னொரு ஒலிப்பதிவு பாலமுரளி கிருஷ்ணாவினுடையது!

கேட்க: ஆடமோடி கலதா: எம்.பாலமுரளி கிருஷ்ணா

இவையெல்லாம் தான் தியாகராஜரின் கிருதிகளின் மேன்மை எனலாம். தான் மட்டுமின்றிக் கேட்பவர்களையும் இறைவனோடு ஒருங்கிணைக்கும் வாக்சாதுர்யம் ததும்பும் கவிநயம், பாவம்!

தியாகராஜர், இறை அனுபவம் மட்டுமின்றி அந்த இறைவன் குடியிருக்கும் இயற்கையையும் போற்றிப் பல பாடல்களை இயற்றியுள்ளார். ‘முரிபமு கலிகே கதா ராம சம்முனினுத’ என்ற முகாரி ராகப் பாடலை தற்போது புழக்கத்தில் இருக்கும் இத்தகைய பாடல்களுள் ஒன்றாகக் கொள்ளலாம். இசைக்குயில் எம். எஸ். சுப்புலட்சுமி இதனை மிக அழகாகப் பாடியுள்ளார். தென்றல் தவழும் காவேரி நதி தீரத்தை வர்ணிக்கும் கீழ்க்காணும் வரிகள் அவரின் இனிய குரலில் நம்மை மயக்கும். நாமும் அங்கு சென்று குடியிருக்க மாட்டோமா என ஏங்கவும் வைக்கும்!

‘ஈடுலேனி மலயமாருதமுசே
கூடின காவேரி தடமந்து
மேடலமித்தெலதோ ஸ்ருங்காரமு
மிம்சு சதனமுலலோ………’

‘ஈடிணையற்ற தென்றல் வீசும் காவேரி நதிக் கரையில் உள்ள அழகிய வீடுகளில் வாழும் உத்தம புருஷர்கள் வேதங்களை ஓதி இறைவனை வழிபட்டு வருகின்றனர்,’ என்பது இதன் பொருள்.

கேட்க: முரிபமு கலிகே – நேதனூரி கிருஷ்ணமூர்த்தி

யாருமே பாடாத (நான் தான் கேட்டதில்லையோ என்னவோ!) ஒரு அருமையான அசாவேரி ராகக் கிருதி காவேரி நதியின் பெருமையை விண்டுரைக்கின்றது! ஒரு ஆடிப்பெருக்கின் போது, காவேரி பூஜையின் சமயம் ஸ்வாமிகள் இதனை இயற்றியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

rama_gives_darshan_to_thyagaraja‘ஸாரி வெடலின ஈ காவேரினி ஜூடரே’ எனத் தொடங்கும் கிருதி, ‘கரை புரண்டு வரும் இந்தக் காவேரி நதியைத் தரிசியுங்கள்! யாரிடத்தும் வேறுபாடு கொள்ளாமல் எல்லாருக்கும் நல்வாழ்வை வழங்கியபடி, ஓரிடத்தில் அலைகள் புரள, பிறிதோரிடத்தில் கர்ஜனை புரிவது போன்ற பெருத்த ஓசையுடனும், மற்றோரிடத்தில் அமைதியாக நடை பயின்றும் ஸ்ரீரங்கநாதனைத் தரிசிப்பது போல ஸ்ரீரங்கத்தின் வழியே பெருக்கெடுத்து ஓடி, ஈரேழுலகங்களையும் உய்விக்கும் ஈசன் உறையும் பஞ்சநதீஸ்வர  க்ஷேத்திரத்தின் வழியே பாய்ந்து, அவ்வீசனையும் தரிசித்து, எல்லா மக்களும், தேவர்களும் இருகரைகளிலும் கூடி நின்று ‘ராஜராஜேஸ்வரி’ என மலர்களைத் தூவிக் கொண்டாடி வழிபடும் காவேரி என்னும் இந்தக் கன்யகா மணியைத் தரிசியுங்கள்,’ என ஆனந்த பரவசராய் ஸ்வாமிகள் பாடியது.

காவேரியின் போக்கை எத்துணை அழகாக வர்ணித்துள்ளார்! ‘நடந்தாய் வாழி காவேரி,’ என்று இயற்கையைப் போற்றிக் காவேரியை வழிபட்ட இளங்கோவடிகளுக்கு இதோ ஒரு போட்டியாளர் எனத்தான் வியக்கத் தோன்றுகிறது! இத்தனை அழகிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து மேடைகளில் பாட இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்கள் முன் வருவார்களா எனக் கேட்கவும் ஆவல் மிகுகின்றது!

திருவையாறு பஞ்சநதீசன் மேலும் அன்னை தர்மசம்வர்த்தனியின் மேலுமாகப் பதினோரு கிருதிகளைத் திருவையாறு க்ஷேத்ரக் கிருதிகள் என்ற பெயரில் இயற்றியுள்ளார் தியாகராஜர். சங்கீத வித்வானும் சித்திரக் கலைஞருமான திரு. எஸ். ராஜம் அவர்கள் இவற்றுள் சிலவற்றைத் தமக்கே உரிய தனித்து விளங்கும் பாணியில் அற்புதமான சித்திரங்களாக வழங்கி (Musings on Music) விளக்கமும் அளித்துள்ளார்.

‘விதி சக்ராதுலகு தொரகுணா’ என்ற யமுனாகல்யாணி ராகக் கீர்த்தனையில், தர்மசம்வர்த்தனியான அன்னையின் வெள்ளிக்கிழமை தர்பார் வைபவத்தை மிக அழகான சொல்- இசை ஓவியமாகவே வர்ணிக்கிறார். தியாகராஜரின் சொல் ஓவியத்தை திரு. ராஜம் வண்ண ஓவியமாக வடிக்க, இதன் இசை ஓவியத்தை திரு. ராஜம் அவர்களின் சிஷ்யையான விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் தனது வசீகரக் குரலில் பாடியுள்ளார். சாக்தம் எனும் பெயர் கொண்ட இசைக் குறுந்தகட்டில் இதைக் கேட்டு ரசிக்கலாம்!

‘பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுக்கும் காணக் கிடைக்காத தர்மம் என்னும் கடலில் துயிலும் அன்னையின் இந்த சேவையைக் காண வாரீர்! அன்னையின் வரவை எதிர் நோக்கி அனைவரும் காத்துள்ளனர்.  விருதுச் சின்னங்களை ஏந்தி நிற்கின்றனர். ஜய ஜய என்ற கோஷங்களை எழுப்புகின்றனர். நாட்டியமாடுகின்றனர். மலர்களைச் சொரிகின்றனர். அன்னை பராசக்தி (தர்மசம்வர்த்தனி) மஹாலட்சுமியுடன் சிரித்துப் பேசியபடி வருகிறாள்; அவளுடைய பிரகாசமான புன்னகையுடன் போட்டியிட்டபடி அவளணிந்துள்ள வைர வைடூரிய ஹாரங்கள் ஜொலிக்கின்றன,’ எனவெல்லாம் நேர்முக வர்ணனையாளர் போல விவரிப்பவர், முத்தாய்ப்பாக,

‘….. அமரகோடுலு
தடபட பூமினி தண்டமுலிடகா சந்தோஷமுனனு
கடகண்டினி ஜூசெ சொகஸு..’

என உள்ளம் குளிர வைக்கிறார். அதாவது, தேவர்கள் ‘தடபட’ வென பூமியில் விழுந்து தண்டமிட்டு வணங்குவதை கடைக்கண்ணால் பார்த்து அங்கீகரித்துக் கொள்ளும் அழகை (சொகுசை) நம் கண்முன் படம் பிடித்து வைத்து விடுகிறார். இந்த ஒரு அனுபவத்தை உணருவதற்காகவே தர்மசம்வர்த்தனியின் திருக் கோவிலுக்குப் போகத் தோன்றும்!

இந்தக் கிருதியை இறை வழிபாடாக மட்டுமின்றி, முதலில் கண்ட தியாகராஜரின் மற்றும் பல கீர்த்தனைகளைப் போல தெய்வீக அழகின் ஆராதனையாகவும் நாம் காணலாம்.

இவை அனைத்தும் ஒரு சில துளிகள் தான். இன்னும் பஞ்சரத்னக் கிருதிகள், நௌகா சரித்ரம், ப்ரஹலாத பக்தி விஜயம் எனும் இசை நாடகங்கள், ஸ்ரீரங்கம் பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம் எனும் ஒப்பற்ற இசைச் செல்வங்களை நமக்கு வாரி வழங்கியிருக்கிறார். இசை விற்பன்னர்களுக்கு மட்டுமன்றி, அன்றாடம் இறைவனுக்குச் செய்யும் பஜனையிலும் பூஜைகளிலும் சாமானியர்களும் பங்கேற்று மகிழும் வண்ணம் அழகான எளிய ராகங்களில் ‘சீதா கல்யாண வைபோகமே.’ லாலி, ஊஞ்சல் வகைப் பாடல்களை உத்சவ சம்பிரதாயக் கிருதிகள் என இயற்றியுள்ளார். ராமனை, ‘லாலி ஊகவே,’ எனத் தாலாட்டி மகிழ்ந்துள்ளார்.

‘சீதம்மா என் தாய். ஸ்ரீராமன் என் தந்தை; பரதன், லக்ஷ்மணன், அனுமன் ஆகியோர் உறவினர்கள்,’ எனக் கொண்டாடிப் பெருமைப் பட்டுள்ளார் (சீதம்ம மாயம்ம – வசந்தா ராக கிருதி).

‘ராம சன்னிதி சேவையே பொன்னிலும் பொருளிலும் மிக உயர்வானது,’ என அறுதியிட்டுக் கூறுகிறார் (நிதி சால சுகமா).

கேட்க: நிதி சால சுகமா – கல்யாணி- எம்.எஸ்.சுப்புலட்சுமி

தியாகராஜ கிருதிகள் அளக்க இயலாத பொற்குவியலான சொற் சித்திரங்கள். வான் பொய்த்தாலும் தான் பொய்யாத குலமகள் காவேரியின் கரைகளில் பிறந்து வளர்ந்து பண்பட்டு நமக்கெல்லாம் பெருமை தரும் அருமைத் தென்னக கர்நாடக இசைச் செல்வங்கள்.

தியாகராஜ ஸ்வாமிகள் சமாதியடைந்த தினமான புஷ்ய பகுள பஞ்சமி தினம் ஆண்டு தோறும் அவருடைய சமாதியில் அனுசரிக்கப் படுகின்றது. கர்நாடக இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி அவருடைய கீர்த்தனைகளைப் பாடி ஆராதனை செய்து அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாண்டும் ஜனவரி 9-ம் தேதி ஆராதனை நடைபெறப் போகிறது.

சமீபத்தில் காவேரி பெருக்கெடுத்தோடும் திருவையாறில் தியாகராஜரின் சமாதிக்குச் சென்றிருந்தேன். ஒரு குழு அமர்ந்து ‘எந்தரோ மஹானுபாவுலு’ எனப்பாடிக் கொண்டிருந்தது. எத்தனை பொருள் செறிந்த சொற்கள். ‘எத்தனையோ மஹான்கள்; அனைவருக்கும் எனது வந்தனம்,’ என்ற மஹா பக்திமானான ஒரு அடியவரின் கால்பட்ட மண்ணில் நான் நிற்பதை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து அஞ்சலியில் கைகளைக் குவித்தேன்.

பிறிதொரு வாய்ப்புக் கிடைத்தால் மேலும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். வணக்கம்.

3 Replies to “எப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்”

 1. மிக நன்று. இதில் வரும் எல்லா பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்தத்வை. மிக்க நன்றி.
  PS: சொற்சித்திரங்கள் என்று சொல்லலாமா? ஹ்ம்ம்..சரி சொற்சித்திரங்களும் கூட.

 2. தியாகராஜ கீர்த்தனங்களை மிகவும் ரசித்து அனுபவித்து லயித்த ஒருவரால் எழுதப் பட்ட அருமையான கட்டுரை. இணைப்புத் தரப்பட்டுள்ள இசைக் கோவைகளும் அருமை. இதில் வரும் கீர்த்தனங்கள் எல்லாம் எனக்கும் பிடித்தவை.

  “முரிபமு கலிகே.. ” என்ற முகாரி ராக கிருதியை கேள்விப் பட்டதில்லை.. இந்தக் கட்டுரை மூலம் தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

  காவேரி நதியைப் பற்றிய ‘ஸாரி வெடலின’ கிருதியை தி.ஜானகிராமன் அவரது ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண நூலில் கொடுத்திருக்கிறார். அந்தப் பாட்டு எந்த வித்வான்களுக்குமே பாடாந்தரம் இல்லை போலிருக்கிறது.

 3. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனால் தியாகையரின் இசை பக்தி அனுபவத்தை ஊட்டியது.
  மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர், கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த காலத்தில் படித்த ஒரு குறுநாவலிலிருந்து ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ‘ மிக ஆச்சாரம ஸ்ரீவைஷ்ணவ சங்கீதக்குடும்பம். குடும்பத்தலைவர் சங்கீதத்திலும் சமய சம்பிரதாயங்களிலும் படு வைதிகம். அவருடைய புதல்வன் சங்கீதத்திலும் வாழ்க்கையிலும் புதுமை காண்பவன். வேற்றுமதம், வேற்றுச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கின்றான். பெரியவரின் அன்பைப் பெற அவர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களை அவர் மன்னிக்கவேயில்லை. பேரக்குழந்தையையும் அவர் வெறுத்து வந்தார். ஒரு நாள் தள்ளாமையில் பெரியவர் படுக்கையில் இருக்கிறார். நா வறண்டுபோயிருக்கின்றது. நீர் கேட்கக்கூட குரல் எழும்பவில்லை. படுக்கையில் தத்தளிக்கின்றார். பேரக் குழந்தை அவரைக் காண்கிறது. தண்ணீருக்குத்தான் தவிக்கின்றார் எனத்தெரிந்து ஒரு குவளையில் நீர் கொண்டு வந்து பெரியவருக்கு உதவுகிறது. பெரியவருக்குப் போகவிருந்த உயிர் மீண்டு வருகின்றது. பெரியவரின் உள்ளம் கசிகின்றது. அவருடைய வாய் அவர் அறியாமலேயே “நன்னு பாலிம்ப நடச்சிவச்சிதிவோ” (என்னைக் காப்பற்ற நடந்து வந்தாயா இராமா ) என்று பாடுகிறார். (ஜெ.கே யின் ‘பாரீசுக்குப் போ’ வாக இருக்குமோ?)
  தியாகையர், இராமபிரானை அழைக்கு முகமாகப் பாடிய ‘ரா ரா ராஜீவலோசன ராமா’, ராரா தேவாதி தேவா, ராரா மகானுபாவா’ முதலிய வரிகளைக் கேட்கும்போது குழந்தை இராமனும் கோசலையுமே மனக்கண்ணுக்குத் தென்படுகின்றனர்.
  பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் வருகைப்பருவத்தைப் பாடுவோனுக்கும் பாட்டைப் படிப்போனுக்கும் இந்த மனநிலை தேவைப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *