எப்படிப் பாடினரோ தொடரின் மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.
ராமாயணத்தில் ஒரு உணர்ச்சிகரமான தருணம்.
சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான். “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்:
எப்படி மனம் துணிந்ததோ சாமி வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ பூமி (எப்படி)
கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ
வருந்தி வருந்தி தேவரீர் வெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல
இரும்பு மனதுண்டாச்சு தல்லோ
என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்ல (எப்படி)
மதுரை டி.என்.சேஷகோபாலன் குரலில் இப்பாடல்
அருணாசலக் கவிராயரின் இராம நாடகத்தில் உள்ள ஒரு கீர்த்தனை இது. சஞ்சய் சுப்ரமணியம் பாடும் போது “வருந்தி வருந்தி”யில் வரும் குழைவும், “கொல்லாமல் கொல்ல”வில் வரும் அழுத்தமும் இந்தப் பாட்டின் *பா*வத்தை வெளிப்படுத்தும் விதமே அலாதியாக இருக்கும். நல்ல கற்பனையும் மனோதர்மமும் கொண்ட பாடகர்கள் சஞ்சரிக்க உகந்த இது போன்ற இடங்கள் இராம நாடகத்தின் பல கீர்த்தனைகளில் உண்டு.
பண்டிதர்கள் மட்டுமே பயின்று வந்த கம்பரின் ராமாயணத்தை, பாமரர்களும் புரிந்து கொண்டு ரசித்து அனுபவிக்கும் வண்ணம் கீர்த்தனைகளாகப் புனைய வேண்டும் என்பது தான் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாசக் கவிராயர் (1711-1778) கொண்ட முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. வணிகர் குலத்துதித்த அருணாசலம் சிறுவயதிலேயே பல நூல்களைக் கற்றுப் புலமை பெற்றிருந்தார். தமது ஊரான தில்லையாடியில் காசுக்கடை நடத்தி வந்தார். வியாபார நிமித்தம் பயணம் செய்யும்போது எதேச்சையாக சீர்காழியில் உள்ள தருமபுரம் மடத்தில் தங்க நேர்ந்தபோது, அவரது தமிழ்ப் புலமையால் கவரப்பட்ட மடத்தின் அதிபர் அவரை சீர்காழிக்கே வரவழைத்து, தமிழ்த் தொண்டும் ஆசிரியப் பணியும் செய்யுமாறு பணித்தார். மடத்தில் பாடம் சொல்லியதுடன், அக்காலத்திய தமிழ்ப் புலவர்களது பாணியில் தலபுராணம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கோவை, கலம்பகம், வண்ணம் என்று பல சிற்றிலக்கிய நூல்களையும் கவிராயர் எழுதியிருக்கிறார். அவரிடம் பாடம் கேட்ட வெங்கட்ராமய்யர், கோதண்ட ராமய்யர் என்ற இரு சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இராமநாடகக் கீர்த்தனைகளைப் புனைந்தார். இரண்டு வித்வான்களும் பல ஊர்களிலும் சென்று அந்தக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தினர். அந்தத் தனித்துவமிக்க இசைத்தமிழ் நூல் தான் இன்றளவும் அருணாசலக் கவிராயர் பெயரை அழியாமல் நிலைநிறுத்தியிருக்கிறது.
சைவ சமயத்தவராக இருந்தாலும், அருணாசலக் கவிராயரின் கீர்த்தனைகள் அனைத்திலும் ராமபக்தி ததும்புவதைக் காணலாம்.
“ராமனைக் கண்ணாரக் கண்டானே – விபீஷணன் கை
மாமுடி மேல் வைத்துக் கொண்டானே”
என்ற கீர்த்தனையில் ஸ்ரீராமனின் திருமேனியழகை வர்ணிக்கிறார்.
அறிவார் யார் உன்னை அறிவார் யார்..
அறியார் யார் மானிடம் போலே குறியா வேஷம் கொண்டதாலே
சிறியேன் செய்த பிழை தன்னைக் குறியாதே ராகவா, உன்னை (அறிவார்)
என்று விராதன் துதியாக வரும் கீர்த்தனையில் ஸ்ரீராமனைப் பரம்பொருளாகவே எண்ணித் துதிக்கிறார்.
இராம நாடகமும் கம்ப ராமாயணத்தைப் போலவே ஆறு காண்டங்களைக் கொண்டது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவ இலக்கணம் கொண்ட கீர்த்தனங்கள் (தருக்கள்), கண்ணிகள் (திபதைகள்) ஆகியவை இதில் காணும் மையமான இசைப் பாடல் வகைகள். இவற்றோடு கூட, விருத்தம், கலித்துறை, கொச்சகம் போன்ற செய்யுள்களும் இசைப்பாடல்களுக்கு முன்பின்னாக அமைந்துள்ளன. என்னிடம் உள்ள பதிப்பில், 450 பக்கங்களில் விரியும் நூல். கீர்த்தனங்கள் மட்டும் 250க்கு மேல் இருக்கும்.
இராம நாடகத்தில் சில கீர்த்தனைகள் மற்றவற்றை விடப் பரவலாக உள்ளதற்குக் காரணம் இருக்கிறது.
“ராமசாமி தூதன் நானடா – அடடா ராவணா
நானடா என் பேர் அனுமானடா… “
“அடித்தானே அசோகவனம் தன்னை முடித்தானே அனுமன்..”
இவை போல ஜனரஞ்சக மெட்டுகளில் அமைந்த பாட்டுக்கள் அக்காலத்தில் நாடக மேடைகளில் பாடி ரசிக்கப் பட்டிருக்கக் கூடும். இசை நாடகங்கள் வழக்கொழிந்த பின், அந்தப் பாடல்களைப் பாடுவார் யாரும் இல்லை. ஆனால் செவ்வியல் தன்மை கொண்ட கணிசமான கீர்த்தனைகள் இன்னமும் பிரபலமாக நீடித்து வருவதன் காரணம் அவற்றின் இசை ஒழுங்கும், உணர்ச்சி பூர்வமான தருணங்களும், அர்த்த கம்பீரமும், ஆரம்ப கால வித்வான்கள் அவற்றைத் தொடர்ந்து தங்கள் கச்சேரிகளில் பாடி வந்ததும் என்று சொல்லலாம்.
யாரோ இவர் யாரோ – என்ன பேரோ அறியேனே (யாரோ)
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில்
கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் (யாரோ)
சந்த்ரபிம்ப முக மலராலே என்னைத்
தானே பார்க்கிறார் ஒருக்காலே
அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (யாரோ)
டி.கே.பட்டம்மாள் குரலில் இப்பாடல்
இந்த அழகிய பைரவி ராகக் கீர்த்தனையைக் கேட்டிருக்காத சங்கீத ரசிகரைக் காண்பது அபூர்வம். “இவர் யாரோ” என்று வருவதால், ராமனைக் கண்ட சீதை பாடும் பாட்டு இது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சீதையை கன்னிமாடத்தில் கண்டு, வீதியில் நடந்து வரும் ராமன் பாடுவது இது. இளம்பெண்ணைக் கூட “இவர்” என்று மரியாதையுடன் அழைக்கும் வழக்கு இரு நூற்றாண்டு முன்பு வரை கூட தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றிய அதே மண்டபத்தில் தனது இராம நாடகத்தையும் அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பி, அவ்வாறே நிகழ்த்தியும் காட்டினார் அருணாசலக் கவிராயர்.
“ஏன் பள்ளி கொண்டீரையா – ஸ்ரீரங்கநாதரே நீர்
ஏன் பள்ளி கொண்டீரையா
என்ற கீர்த்தனை இந்தத் தருணத்தில் அவர் பாடியதாக சொல்லப் படுகிறது.
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறைகடந்த இளைப்போ
மீசுரமாம் சித்ரகூடச் சிகரக் கல்மிசை கிடந்த இளைப்போ
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ
என்று இந்தப் பாடலின் சரணங்களில் வரும் துரித கதியிலான சொற்கட்டுக்கள் அற்புதமானவை.
பாலக்காடு கே.வி.நாராயணசுவாமி குரலில் இப்பாடல்
கவிராயர் கம்பராமாயணத்தை மிகவும் ஆழ்ந்து கற்று அதில் தோய்ந்தவர் என்பது அவர் கம்பனின் சொல்லாட்சிகளை அப்படியே பயன்படுத்துவதில் இருந்து தெரிகிறது. ஆனால், நாடகம் என்பது முற்றிலும் வேறு வடிவம் என்ற பிரக்ஞையுடன், பல இடங்களில் உரையாடல் தன்மை கொண்ட பாட்டுக்களையும், மக்களின் அன்றாட சொல்வழக்குகளையும் மிகவும் சுவாரஸ்யமான வகையில் சேர்த்திருக்கிறார்.
ராமன் அணைகட்ட வழிவேண்டும் போது, சமுத்திர ராஜன் வந்து அடிபணியும் பாடல்.
சரணம் சரணம் ரகு ராமா – நீ என்னைத்
தற்காத்தருள் பரந்தாமா… (சரணம்)
மட்டி மீன் ஒன்றோடொன்று மல்லாடி, அவர்பூணும்
வழக்குத் தீர்க்கப் போனேன்; இதுக்கோ உன் மனம் கோணும்
எட்டும் ரெண்டும் தெரியா எனக்கித்தனையோ காணும்
என்ன பிழை செய்தாலும் நீயே பொறுக்க வேணும்…. (சரணம்)
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் இப்பாடல்
தியாகராஜரின் கீர்த்தனங்களைப் போல, இராம நாடகக் கீர்த்தனைகளின் ராகங்கள் வாக்கேயக் காரரால் தெளிவாக வரையறை செய்யப் படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான கீர்த்தனைகளை புத்தகத்தில் கொடுத்திருக்கும் ராகத்தில் யாருமே பாடிக் கேட்டதில்லை. “யாரோ இவர் யாரோ” – சாவேரி என்கிறது புத்தகம், பைரவி தவிர வேறு ஒரு ராகத்தில் அந்தப் பாடலைக் கற்பனை செய்யவே முடியவில்லை. “சரணம் சரணம் ரகுராமா” – எல்லாருமே புத்தகம் கூறும் அசாவேரி ராகத்தில் தான் பாடுகிறார்கள். அது நன்றாகப் பொருந்தவும் செய்கிறது.
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக்
கண்டேன் ராகவா…
பனிக்கால வாரிஜம் போல நிறம் கூசி
பகல் ஒரு யுகம் ஆகக் கழித்தாளே பிரயாசி
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர, சீசீ
நில்லடா என்றேசி
தனித்துத் தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி
சாரும்பொழுது காணும் சமயமிதுவே வாசி
இனித்தாமதம் செய்யல் ஆகாதென்றிடர் வீசி
ராம ராம ராம என்றெதிர்ப் பேசி (கண்டேன்)
கண்களில் கண்ணீர் வராமல், தழுதழுக்காமல் நெஞ்சு விம்மாமல், உள்ளமுருக்கும் இந்தக் கீர்த்தனையைக் கேட்க முடியாது.
ஒரே கீர்த்தனை தான். ஆனால் அதில் பல வண்ணங்களைக் காட்டி விட முடியும். நெய்வேலி சந்தான கோபாலனின் வசந்தாவில், ஓடோடி வந்து படபடவென்று துடிப்பாக “கண்டேன் கண்டேன்” என்று ராமனுக்கு செய்தி சொல்கிறான் அனுமன். பாம்பே ஜெயஸ்ரீயின் பாகேஸ்ரீயில், இலங்கையில் தான் கண்ட தெய்வத்தை எண்ணி உருகி நெகிழ்ந்து தழுதழுத்துப் போகிறான்.இரண்டு விதமான *பா*வங்களுக்குமான சாத்தியங்கள் இந்தக் கீர்த்தனையில் அழகாகப் பொருந்தி வருகின்றன.
ராக பாவத்தில் லயிப்பது, திளைப்பது என்று வந்து விட்டால், ரசனையுள்ள இசைக்கலைஞனுக்கு தோதான “வெளி” இராமநாடகக் கீர்த்தனையில் நிரம்பவே உண்டு.
சஞ்சய் சுப்ரமணியத்தின் இசைப் பயணம் குறித்த “ஆரார் ஆசைப்படார்” என்ற ஆவணப் படத்தில், அவர் முதிய நாதஸ்வர வித்வான் எஸ் ஆர் டி வைத்யநாதனை சந்தித்து உரையாடும் காட்சி மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்.
நவரத்னத் தங்கத் தோடு நடையிலே அன்னப் பேடு
அவனிமேல் இல்லை ஈடு அவளுக்கவளே சோடு….
என்று சரணத்தை ஆற அமரப் பாடி,
காணவேணும் லட்சம் கண்கள் சீதாதேவி தன்
காலுக்கு நிகரோ பெண்கள்…
என்று பல்லவியில் வந்து முடிக்கும் போது, அந்தச் சுருட்டி அப்படியே நம்மை வாரிச் சுருட்டிக் கொள்கிறது. சீதையின் அழகை இராவணனுக்கு எடுத்துச் சொல்லி சூர்ப்பணகை பாடுவதாக வரும் பாட்டு இது.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்க் கீர்த்தனங்களை நிரம்ப தனது கச்சேரிகளில் பாடி வந்தவர். ஒருமுறை ஒரு கச்சேரியில் அவர் தன்னை மறந்து லயித்துப் பாடிக்கொண்டிருக்க, கூட்டத்தில் ஒரு ஆள் தமிழ்ப் பாட்டு தமிழ்ப் பாட்டு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாராம். சிங்கத்தை சீண்டினால் அது சும்மா இருக்குமா? அரியக்குடி அடுத்ததாக ஒரு பாட்டை கம்பீரமாக ஆரம்பித்தாராம் –
ஆரடா குரங்கே – இங்கே வந்த நீ
ஆரடா குரங்கே!
இராம நாடகக் கீர்த்தனைகள் நவரசமும் பொருந்திய இசைப் படைப்புக்கள் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும் !
கட்டுரையைப் புகழ என்னிடம் சொற்களில்லை. படிக்கையில் மிகவும் நெகிழ்ந்தேன். மிக்க நன்றி. அடுத்த பகுதியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.
மிக சிறப்பான எளிய ஆனால் அர்த்தங்கள் பல பொதிந்த கட்டுரை . அருணாச்சல கவிரயரையும் இராம நாடக கீர்த்தனைகளையும் நினைக்க வைத்த ஆசிரியருக்கு நன்றி ! ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே பற்றி அடுத்த கட்டுரையில் எழுத வேண்டுகிறேன் !
அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகளில் இருந்து பல கீர்த்தனைகளை மிக அருமையாக இந்த வ்யாசம் பகிர்ந்துள்ளது. வாழ்த்துக்கள் அன்பின் ஸ்ரீ ஜடாயு.
பாடல் வரிகளுடன் ப்ரபல கர்நாடக இசைவாணர்களின் பாடல் பற்றிய உரல்களைப் பகிர்ந்ததில்…….. பாடலின் மனோபாவங்களை இசைவாணர்கள் தங்கள் இசையில் வடிக்க முனைதலை நன்றாக அனுபவிக்க முடிந்தது.
ஏன் பள்ளி கொண்டீரய்யா பாடல் மறைந்த என்.ஸி.வஸந்தகோகிலம் அவர்கள் பாடியதும் கூட மிக அருமையாக இருக்கும்.
\\ ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே பற்றி அடுத்த கட்டுரையில் எழுத வேண்டுகிறேன் ! \\
மிகவும் ப்ரபலமான ராம நாடகக் கீர்த்தனைப்பாடல்களில் இதுவும் ஒன்று. திரைத்தாரகை பானுமதி அவர்கள் ஒரு திரைப்படத்தில் ஹிந்தோள ராகத்தில் இந்த இனிமையான பாடலைப் பாடியிருக்கிறார்.
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே |
நன்மையுன்டோரெ காலே ||
பாமரமே உனக்கு என்னடி பேச்சு |
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல் ஆச்சு ||
அடுத்த பகுதிகள் மற்ற தமிழிசை மூவர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை போன்ற பெரியோர்களது கீர்த்தனைகளை விவரித்துச் செல்லுமா ………. அல்லது ராம நாடகக் கீர்த்தனைகளிலிருந்து மேலும் முத்து மணி ரத்தினங்கள் பகிரப்படுமா……….
அருமையான ஆரம்பம். கருத்தாழம் செறிந்த கட்டுரை. இந்தத் தொடரில் இது போன்ற அருமையான கட்டுரைகளை ஆவலாக எதிர் நோக்குகிறேன்.
நல்ல தொடர்… தொடர்ந்து எழுதுங்கள்… தங்களின் செழும் தமிழில் இசைத்தேன் பருக ஆவலாய் இன்னும் காத்திருக்கிறோம்…
கட்டறுத்தெனை ஆண்டு கண்ணார நீறு
இட்ட அன்பரோடு யாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே.
மாணிக்கவாசகர் தனக்குத் திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் குருவடிவாகக் காட்சி தந்த இறைவனை நோக்கி “எட்டோடு இரண்டு என்ன என்பதை அறியாத என்மீது நீ கருணை கொண்டாயே!” என இரங்கிப்பாடுவதாக அமைந்த திருவாசகப் பாடல் இது. சமுத்திர ராஜன்
//எட்டும் இரண்டும் அறியா எனக்கித்தனையோ காணும்
என்ன பிழை செய்தாலும் நீ பொறுக்க வேண்டும்//
என்று பாடுவதாக எழுதியிருப்பது இதை நினைவூட்டியது. அருணாசலக் கவிராயரின் சைவப்பின்னணி இதை எழுத உதவியிருக்குமோ?
நல்ல கட்டுரை ஜடாயு! அடுத்த பகுதிகளை எதிர்பார்க்கிறேன்.
மிக அருமை! புத்தாண்டு வாழ்த்துக்கள் ! ஜடாயுவின் சிறகுகள் மேலும் உயர்ந்து பறக்க ஸ்ரீராமனை வேண்டி நிற்கிறோம்.
மகாராஜபுரம் சந்தானம் பாடும் அருணாச்சல கவிராயரின் ராம நாடக கிருதி ” அந்த ராம சௌந்தர்யம்” (கேதாரகௌளை ) மிகவும் நெஞ்சைத்தொடும் ! மற்றும் ,”காணவேண்டும் லக்ஷம் கண்கள்” (சுருட்டி), ” பரப்ருஹ்ம ஸ்வரூபமே ” (பிருந்தாவனி) போன்ற சில கிருதிகளும் மிக ஜனரஞ்சகம் ஆனவை.