சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

Sakshi Maharaj
சாக்‌ஷி மஹராஜ்

அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்‌ஷி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சி என்ற பிம்பம் குலைகிறது. சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத்துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் நிலைப்பாடுகள் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கருத்தில் கொண்டதாக இருந்தாக வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் பாஜகவின் லட்சியங்களை முழுமையாக ஏற்கும் நிலை வரும்வரை கட்சி பொறுமை காத்தாக வேண்டும்.

மதச்சார்பின்மை என்ற காங்கிரஸ் கடைப்பிடித்த போலித்தனத்தில் பாஜக உழல வேண்டியதில்லை. அதேசமயம், பாஜக இப்போது ஆளும்கட்சி என்பதையும் மறந்துவிடக் கூடாது. இங்கு தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் தலைவர்கள் தடம் புரள்கிறார்கள்.

இன்றைய தேசிய அரசியல், பாஜக – அதன் எதிரிகள் என இருகூறாகப் பிளவுபட்டு நிற்கிறது. பொதுவாகவே பாஜகவைக் குறைகூற காரணங்களைத் தேடும் எதிர்க்கட்சியினருக்கு,  ‘வெறும் வாயை மெல்லுவோருக்கு கிடைத்த அவல் போல’ சில சர்ச்சைகளை சொந்தக் கட்சியினரே உருவாக்கித் தருவது நல்லதல்ல. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் அட்டகாசம் கிளப்பிவிட்டதாக கதைத்துவரும் போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு உதவும் வகையிலேயே சாக்‌ஷி மஹராஜ் போன்றோரின் கருத்துக்கள் இருக்கின்றன.

சென்ற லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மையை மக்கள் வழங்கியதன் காரணம், இத்தனை நாட்களாக போலி மதச்சார்பின்மை மூலம் மக்களை காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் மூன்றாவது அணியினரும் ஏமாற்றியதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர் என்பது தான். அதே சமயம், நாட்டின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடியே தேவை என்ற எண்ணமும், ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சி பாஜகவால் மட்டுமே அமையும் என்ற நம்பிக்கையும் கூட மோடியின் பெரும் வெற்றிக்குக் காரணங்களாயின.

சாத்வி நிரஞ்சன் ஜோதி
சாத்வி நிரஞ்சன் ஜோதி

மோடி பிரதமரான பிறகு பல நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இப்போது அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளின் பலனை முழுமையாக அடைய நாட்டிற்கு குறைந்தபட்சம் ஓராண்டாவது ஆகும். இப்போதே பொருளாதாரத்தில் மீட்சி தென்படத் துவங்கியுள்ளது. ஊழலுக்கு மோடி அரசு கடும் எதிரி என்பதை எல்லாக் கட்சியினரும் உணர்ந்துவிட்டனர். அவர்களால் மோடி அரசை வேறெந்த வழியிலும் குறைகூற முடியாது.

கருப்புப்பண மீட்பில் தாமதம், அவசரச் சட்டங்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் நியாயமானவை அல்ல என்பது எதிர்க்கட்சியினரே அறிந்தவை. எந்த ஒரு அரசும் எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படும்போது அவசரச் சட்டங்களை கொண்டுவந்தே ஆக வேண்டும். கருப்புப்பண மீட்புக்கு முதல் முறையாக ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மோடி அரசு தான் எடுத்துள்ளது. எனவே இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், பாஜகவின் உளறல் திலகங்களால் ஏற்படும் சேதாரம் தான் அதிகமாக இருக்கிறது.

ஆர்வத்துக்கும் ஆர்வக் கோளாறுக்கும் ஒரு நூலிழை தான் வித்யாசம். சில நேரங்களில் ஆர்வக் கோளாறு உண்மையான ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையாகி விடுவதும் உண்டு. அதுபோலவே சில பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கள் சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் உத்தரப்பிரதேசத்தின் உண்ணாவ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.யான சாக்‌ஷி மஹராஜ்.

துறவியான இவர் ஏற்கனவே மூன்று முறை எம்.பி.யாக இருந்திருக்கிறார். உ.பி.யில் முக்கியமான பாஜக தலைவரான இவர் மீது மாயாவதி அரசும் அகிலேஷ் யாதவ் அரசும் பல பொய்வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. இவரது அதிதீவிர ஹிந்து உணர்வுப் பேச்சுகளே இவரது அடையாளமாகவும் சில நேரங்களில் தடையாகவும் மாறிவிடுகின்றன.

“மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்; பசுவை வதைப்போருக்கும் ஹிந்துக்களை முஸ்லிமாக மதம் மாறுவோருக்கும் மரண தண்டனை தரும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; மதரஸாக்கள் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டன” என்றெல்லாம் இவர் இதற்கு முன்னர் கூறி இருக்கிறார். இதன்மூலமாக ஊடகங்களில் அதீத கவனம் பெறும் சாக்‌ஷி மஹராஜ், இதனால் கட்சிக்கு பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கி விடுகிறார்.  இவரது பேச்சுக்கு வக்காலத்து வாங்குவதோ, அல்லது அவரது கருத்து கட்சியின் கருத்தல்ல என்று மறுப்பதோ பாஜக செய்தித் தொடர்பாளர்களின் வேலையாகி விடுகிறது.

குறிப்பாக கோட்சேவின் முன்யோசனையற்ற செயலால் விளைந்த சரித்திரத் தவறின் விளைவாக, சங்கமும் பாஜகவும் பல்லாண்டுகாலமாக தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத  ‘காந்தி படுகொலை’ என்ற சிலுவையை நீண்டகாலமாக சுமந்துகொண்டிருக்கின்றன. அதன்பயனாகவே பாரதத்தின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது; ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒளிவதற்கான மதச்சார்பின்மை என்ற தந்திர குகையும் உருவாக்கப்பட்டது. இதை எல்லாம் மறந்துவிட்டு கோட்சே புகழ் பாடும்  சாக்‌ஷி போன்றோரால், பாஜகவின் மதிப்பு குலைகிறது. தவிர காந்தி கொலையை இன்னமும் பிரசாரம் செய்யும் எதிரிகளுக்கு இவர்களே துணை போகிறார்கள்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், “ஹிந்துப் பெண்கள் அனைவரும் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டின் மக்கள் தொகையில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்படாது” என்று உ.பி.யில் ஒரு நிகழ்ச்சியில் பேசி மீண்டும் செய்தி ஆகி இருக்கிறார் சாக்‌ஷி.

நாட்டின் மக்கள் தொகை விஷயத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒப்பிட்டால் சாக்‌ஷி கூறியது தவறில்லை என்பது உண்மையே. ஆனால், அரசு அளவான குடும்பத்தைப் பிரசாரம் செய்யும் நிலையில், அரசின் பிரதிநிதி அதற்கு எதிரான கருத்தைத் தெரிவிப்பது சிக்கலையே ஏற்படுத்தும். அதுவே தற்போது நடந்துள்ளது. சாக்‌ஷி இப்போது ஆளும் பாஜகவின் அங்கம். ஆனால் இன்னமும் தான் முலாயமை எதிர்க்கும் ஒரு பாஜக ஊழியன் என்ற நினைப்பிலேயே உள்ளார். இது தான் பிரச்னை.

எனவே தான், சாக்‌ஷியின் கருத்து பாஜகவின் கருத்தல்ல என்று விளக்கம் அளிக்க வேண்டி வந்தது. தவிர, இது தொடர்பாக சாக்‌ஷி மஹராஜ் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஊடகப் பரபரப்புக்காக எதையாவது உளறிக் கொட்டுவோரை கட்சி எச்சரித்திருக்கிறது.

இந்த இடத்தில் மக்கள் பெருக்கம் குறித்த சாக்‌ஷியின் கருத்தையும் உதாசீனம் செய்ய முடியாது. ஹிந்து மக்கள் தொகை குறைந்த பகுதிகளாக இருந்த பிரதேசங்கள் தான் 1947-இல் தேசப்பிரிவினைக்கு இலக்காயின என்பதை மறந்துவிட முடியாது. இங்கு சாக்‌ஷி மஹராஜ் செய்திருக்க வேண்டியது, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து சமுதாயங்களும் சரிசமமாகக் கடைபிடிக்கச் செய்ய என்ன செய்வது என்ற ஆலோசனையை அரசுக்கு வழங்கி இருக்க வேண்டும் என்பது தான்.

அதுவும் கூட சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். ஆனால், மதரீதியாக இதனை அணுகாமல் தேசநலன் என்ற அடிப்படையில் அணுகும்போது, சர்ச்சைகள் குறைவது மட்டுமல்ல, பாஜகவின் மதிப்பும் அதிகரிக்கும்.

தில்லியில் சட்ட்சபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, “இந்தியாவில் பிறந்தோர் அனைவரும் – ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அனைவருமே ஸ்ரீராமனின் வழித்தோன்றல்கள் தான்” என்று கூறினார். அத்துடன் அவர் நிறுத்தி இருந்தால் அவரை யாரும் நிராகரித்திருக்க முடியாது. ஆனால் அடுத்து, “இதை ஏற்காதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்” என்று கூறியது சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இந்த நாட்டைவிட்டு வெளியேறுமாறு யாருக்கும் உத்தரவிட எந்த ஒரு தனி நபருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற பேச்சுக்கள் அதிகார மமதையாகவே மக்களால் பார்க்கப்படும்.

சாத்வியின் பேச்சை முக்கியமான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கின.  யோகி  ஆதித்யநாத்தின் தாய்மதம் திருப்பும் ‘கர் வாபஸி’ பேச்சுக்களும் நாடாளுமன்றத்தில் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தின.

நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இன்னமும் தேசிய அரசியல் மாற்றத்தின் அர்த்தம் புரியாமல், அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஹிந்துத்துவ அடையாளங்களைக் காண்பதாக எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் தான் பாஜகவின் சர்ச்சைக்குரிய பேச்சாளர்கள் பெரும் பிம்பம் ஆக்கப்படுகிறார்கள். ஊடகங்களுக்கு அமைதியான முறையில் நிர்வாகத்தை நடத்திச் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் போன்றோரைப் பாராட்ட நேரமில்லை. மோடியின் அனாவசியமற்ற ஒரு வார்த்தையையும் இந்த ஊடகங்களால் சுட்டிக் காட்ட முடியாது. அதனால் தான், அவலாகக் கிடைக்கும் சாக்‌ஷி போன்றோரைக் கொண்டு அரசை விமர்சிக்கிறார்கள்.

மறக்கக் கூடாத மாமனிதர் பண்டித தீனதயாள் உபாத்யாய
மறக்கக் கூடாத மாமனிதர்
பண்டித தீனதயாள் உபாத்யாய

சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக தலைமை அளித்திருக்கும் எச்சரிக்கை, பிற தலைவர்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்க உதவினால் நல்லது. கட்டுப்பாடற்ற கட்சி என்ற தோற்றம் உருவாக இடம் கொடுப்பது, மோடியின் வளர்ச்சி நோக்கிய ஆட்சிக்கும் வெளிப்படையான நிர்வாகத்துக்கும் தடைக்கல்லாகிவிடும்.

‘ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இறுதி இலக்காகக் கொண்ட தத்துவத்தின் மீது கட்டப்பட்ட அரசியல் மாளிகை தான் பாஜக. இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர்- சிறுபான்மையினர் வேறுபாடும், உயர்ந்த ஜாதி- தாழ்ந்த ஜாதி வேறுபாடும், செல்வர்கள்- ஏழைகள் வேறுபாடும் இல்லாமல் செய்ய வேண்டும். அதுவே பாஜகவின் இறுதி இலக்கு. பண்டிட் தீனதயாள் உபாத்யாய கனவு கண்ட ஒப்பற்ற பாரத சமுதாயம், பாஜகவின் நிதானமான, பெருந்தன்மையான அணுகுமுறைகளால் தான் சாத்தியமாகும்.

 

சமூக ஊடகங்களில் கவனம் தேவை

முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிதீவிர ஹிந்துத்துவர்களின் புலிப்பாய்ச்சல் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. மோடி அரசு மத்தியில் இருப்பதாலேயே பலருக்கு உற்சாகம் கிளப்பி சகட்டுமேனிக்கு கருத்துக்களை வாரி இறைக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கும் ஹிந்துத்துவ இயக்கங்களுக்கும் எந்த்த் தொடர்பும் இல்லாதிருந்தாலும் கூட, அவர்களின் ‘போலி வேகம்‘ மிகுந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பாஜகவுக்கும், ஹிந்து இயக்கங்களுக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது குறித்து ஹிந்து இயக்கத்தினரும், பாஜகவினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

சமூக ஊடகங்களை நமது லட்சியங்களைப் பரப்பும் களனாக மாற்றலாம்; நமது நிகழ்வுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் கருவியாக்கலாம்; ஆக்கப்பூர்வமான ஊடகமாக அதைப் பயன்படுத்தும் வரை யாருக்கும் தீமை இல்லை. ஆனால், எல்லை கடந்த விமர்சனங்கள், நாகரிகமற்ற சொல்லாடல்கள், தன்னிச்சையான மிரட்டல்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காணுபோது வருத்தம் மேலிடுகிறது.

உண்மையான சமூக ஊழியர் இதுபோன்ற நீர்க்குமிழிகளிலிருந்து விலகியே நிற்பார். ஏனெனில் குறைகுடங்களே கூத்தாடும்; நிறைகுடங்கள் என்றும் தளும்புவதில்லை.

19 Replies to “சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?”

 1. ஸ்ரீ ராமனின் வாரிசுகள் என்றும் அதனை ஏற்காதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியது ..ஒரு உணர்ச்சிபூர்வமான தீவிரவாதமாகவே இருக்கலாம். இதற்கு இம்மாதிரி பேச வேண்டிய அவசியத்தை யார் உருவாக்கி இருக்கிறார்கள். ஹைதராபாத் நகரில் உவைசி என்ற பாராளு மன்ற உறுப்பினர்…காவல் துறை சிலமணி நேரம் கண்டு கொள்ளாமல் இருந்தால் அத்தனை ஹிந்திக்களையும் அழித்துவிடுவேன் என்று பேசினாரே….அதன் பின்னணி என்ன. அவருக்கு தைரியம் கொடுத்தது யார். இன்று வரை அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? இது எத்தனை கொடுமையான தீவிரவாத ஆட்டம். இவற்றை முளையிலேயே கில்லி எறிந்தால் …இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காதே….

 2. ஆனால் என்ன நடந்தாலும் தமிழகம் மட்டும் தேசிய நீரோட்டத்துடன் ஓட்ட மறுக்கின்றதே. ” தமிழ்” மொழியை மட்டும் வைத்து அனைத்து விஷயங்களையும் அணுகுவதனால் நஷ்டம் நமக்குத்தான். 60, 70 களில் என்னுடைய generation ஆரம்பித்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இன்று தமிழகத்தை தனியே விட்டு விட்டது. தனி மனிதன் என்ற வகையில் இதற்கு நானும் என்னுடைய பள்ளி நாட்களில் பங்கு வகித்திருக்கிறேன். தமிழ் என்று பெருமைப் படுவதா அல்லது பிற மொழிகளை இழந்ததற்கு வருந்துவதா என்று தெரியவில்லை

 3. //ஆனால் என்ன நடந்தாலும் தமிழகம் மட்டும் தேசிய நீரோட்டத்துடன் ஓட்ட மறுக்கின்றதே….//

  எதற்காக ஓட்ட வேண்டும்……….

  //” தமிழ்” மொழியை மட்டும் வைத்து அனைத்து விஷயங்களையும் அணுகுவதனால் நஷ்டம் நமக்குத்தான்.//

  என்ன நஷ்டம் என்று கூற முடியுமா? அது சரி, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் லாபகரமாகத் தான் தங்கள் வாழ்கையை ஓட்டுகிறார்களா. இல்லை இதை என் கேட்க்கிறேன் என்றால், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் சென்றுப் பார்த்தால் மக்களை சுரண்டும் இந்திப் பேசும் மார்வாடி வர்க்கமும், கூலி தொழில் செய்யும் வட இந்திய ஏழைகளும் ஒரு சேர பஞ்சம் பிழைக்க பரதேசியாக வருவதை பார்க்க முடிகிறதே..

  //தமிழ் என்று பெருமைப் படுவதா அல்லது பிற மொழிகளை இழந்ததற்கு வருந்துவதா என்று தெரியவில்லை…//

  நீங்கள் பெருமை படுவதோ, படாமல் போவதாலோ தமிழுக்கு ஒரு நட்டமுமில்லை, மாறாக எண்களின் மீது எந்த ____________யும் திணிக்காமல் இருந்தால் அதுவேப் போதும்.

 4. தாயுமானவன்

  நீங்கள் பேசுவதெல்லாம் நாங்கள் 40 வருடத்துக்கு முன்பே பேசி முடித்து விட்டோம். இன்றும் எனக்கு ஹிந்தி நாரசம்தான்.

  நஷ்டம் தமிழுக்கு இல்லை நமக்குத்தான் – எப்படித் தெரியுமா ?

  ஹிந்தி வேண்டாம் என்பதிலே கவனமாக இருந்த நாங்கள் தமிழைக் கோட்டை விட்டோம். மாறாக தமிழை வளர்க்க முயற்சித்து இருக்கவேண்டும். கோர்ட்டிலிருந்து கம்ப்யூட்டர் கோடிங் வரை அதை முன்னேற்றி இருக்கவேண்டும். அது நடக்க வில்லை. இன்று தொலைக்கட்சிகளில் ஹாய் viewers !!! என்று சீரழிந்து விட்டது.

  //மக்களை சுரண்டும் இந்திப் பேசும் மார்வாடி வர்க்கமும//

  வியாபாரம் என்பது வேறு விஷயம் – அங்கே bargaining power என்பது அதன் தர்மம். அதில் மார்வாடி மக்கள் சிறந்தவர்கள். மார்வர்டியிடம் 16 வருடம் வேலை செய்த அனுபவத்தில் கூறுகிறேன். அவர்களுக்கு கொடுத்த வாக்கு கடவுளுக்கு ஒப்பானது. உடனே தமிழுக்கு இல்லையா என்று பாயாதீர்கள். என் அனுபவத்தை மட்டும் சொல்கிறேன் அவ்வளவுதான்.

  //வட இந்திய ஏழைகளும் ஒரு சேர பஞ்சம் பிழைக்க பரதேசியாக வருவதை பார்க்க முடிகிறதே..//

  தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அங்கங்கே பிழைத்திருக்க வேண்டியது தானே. ஏன் சென்னைக்கு வந்து கட்டிடம் கட்டும் தொழிலுக்கு வந்து பிளாட்போரத்தில் படுத்து லாரி ஏறி உயிர் விட வேண்டும் ? வறுமை என்பது பொதுவானது. அதைப் போக்க வழி தேடாமல் மொழி அடிப்படையில் போராடி ஒரு நன்மையும் இல்லை.

 5. அன்பின் ஸ்ரீ தாயுமானவன்

  நமது முன்னோர்கள் நம்முடைய கலாசாரக்கூறுகளைத் தன்னில் தக்க வைத்துக்கொள்ளும் அதே சமயத்தில் பரந்து விரிந்த அகண்ட பாரதத்தையும் தமது கருத்தாக்கத்தில் கொண்டிருந்தமையை எப்படிப்புறக்கணிக்க முடியும்

  \\ எதற்காக ஓட்ட வேண்டும்……….\\

  ஸ்ரீ ஜெயமோகன் அவர்களது வ்யாசத்திலிருந்து தங்கள் கவனத்துக்கு

  ————————–

  ஆனால் தமிழ்ச்சமூகத்தின் இந்த சுய அடையாளத்தில் மிகநுட்பமான ஒரு தனித்தன்மை உண்டு. அன்றைய தமிழ்ச்சமூகத்தின் மனதில் ஒரேசமயம் இரண்டுவகையான சுயஅடையாளங்கள் காணப்படுகின்றன. ஒன்று அந்த மக்கள் பாரதம் என்ற விரிந்த நிலப்பகுதியை தங்கள் பண்பாட்டின் உறைவிடமாக எண்ணியிருக்கிறார்கள். அந்நிலம் தங்களுக்குரியது, தாங்கள் அந்நிலத்தின் மக்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை ஏராளமான வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.

  “தென்குமரி வடபெருங்கல்
  குணக் குட கடலா எல்லை
  குன்று மலை காடு நாடு
  ஒன்றுபட்டு வழிமொழிய. (புறம் – 17)

  என்ற புறநாநூற்றுப்பாடலில், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிப் பாடும் குறுங்கோழியூர் கிழார் ஓர் நில எல்லையை அளிக்கிறார். தெற்கே குமரி, வடக்கே மாமலை. கிழக்கும் மேற்கும் கடல்கள் கொண்டது தங்கள் நாடு என. அந்த நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்கப்பட்டவன் என அம்மன்னனை சொல்கிறார்.

  சிலர் இந்த வட எல்லையின் மலை எந்த மலை என்ற வினாவை எழுப்பக்கூடும். அதற்கு இன்னும் தெளிவான விடை புறநாநூற்றின் ஆறாவது பாடலில் உள்ளது. ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தைச் சேர்ந்த பாடல் இது.

  “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
  தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
  குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
  குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் (புறம் – 6)

  பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை காரிகிழார் பாடிய பாடல் இது. ஒருவேளை புறநாநூற்றின் மிகத்தொன்மையான பாடல் இதுவாக இருக்கலாம். இங்கே வடக்கே உள்ள மலை பனிபடர்ந்த பெரிய மலை என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது.

  இப்பாடல்கள் தெளிவாகவே பாரதநாடு என்ற தேசத்தை நிலவியல்ரீதியாக வகுத்துவிடுகின்றன. அந்த நிலத்துமக்கள் தாங்கள் என்ற தன்னடையாளம் அக்காலத்தில் வலுவாகவே இருந்துள்ளது.

  ஆனால் கூடவே தங்களை அந்த விரிந்த நிலப்பரப்பில் ஒரு தனியடையாளம் கொண்டவர்களாக சொல்லிக்கொள்வதையும் காணலாம். சங்கப்பாடல்களைக் கொண்டுபார்க்கும்போது பாரதநாடு என்ற நிலவியல் அடையாளமே பழையது என்று தெரிகிறது.

  அதற்கும் சிலநூறுவருடங்களுக்குப்பின்னர்தான் அதற்குள் தங்களுடைய தனித்த நிலஅடையாளத்தை தமிழ்ச்சமூகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

  ————-

  இந்த நில அடையாளம் காலம்செல்லச்செல்ல மேலும் பரவலான அங்கீகாரம் பெற்றது என்பதை தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பனம்பாரனார்

  வடவேங்கடம் தென்குமரி
  ஆயிடைத்
  தமிழ்கூறு நல்லுலகத்து

  என்று சொல்வதிலிருந்து காணலாம்.

  தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்மொழியே இருந்துள்ளது என்பதை சிலப்பதிகார வரியும் பனம்பாரனாரின் வரியும் காட்டுகின்றன. ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற சொல்லாட்சி தமிழ்பேசப்படுவதனாலேயே இந்த நிலப்பகுதி தங்களுடையதாக ஆயிற்று என்று அன்றைய தமிழர் எண்ணியிருந்ததைக் காட்டுகிறது.

  நிலம், மொழி என்னும் இவ்விரு சுயஅடையாளங்களும் உருவாகிவந்த காலகட்டத்தில் தமிழ் வரலாறு தொடங்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். பழந்தமிழ்நூல்கள் குறிப்பிடுவதுபோல திருப்பதிக்கு தெற்கே குமரிவரைக்கும் அரபிக்கடல்முதல் வங்காளவிரிகுடா வரைக்கும் விரிந்திருக்கும் நிலத்தை அந்த வரலாற்றின் களம் என்று வரையறை செய்யலாம். அதேசமயம் பழந்தமிழ்நூல்களின் வழியை பின்பற்றி அந்த தமிழ்நிலத்தின் வரலாறு விரிந்த இந்தியப்பெருநிலத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்ற தெளிவும் நமக்குத் தேவை.

  தமிழக வரலாற்றை எழுதும் எந்த முயற்சியும் இவ்விரு கோணங்களிலும் முற்றிலும் சமநிலைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். இல்லையேல் அதற்கு எந்த அறிவார்ந்த மதிப்பும் இல்லை. தமிழக வரலாற்றை இந்தியாவின் பொதுவரலாற்றில் இருந்து பிரித்து அதன் விதிகளையும் இயங்குமுறைகளையும் தனியாக புரிந்துகொள்ளவும் வகுக்கவும் முயல்வது குறைபட்ட பார்வையையே உருவாக்கும்.

  அதேபோன்று, தமிழ்நிலத்தின் தனித்தன்மையை முற்றிலும் பொருட்படுத்தாமல் இந்தியாவின் பொதுவரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமே அதை ஆராய்வதும் போதாமையையே உருவாக்கும். இவ்விருவகைகளுக்கும் வரலாற்றாய்வுத்தளத்தில் முன்னுதாரணமாக அமையும் ஏராளமான நூல்கள் உள்ளன. சமநிலைப் பார்வைகொண்ட நூல்கள் மட்டுமே அனைத்து வரலாற்றுப் பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று அறிவுபூர்வமாக பொருந்திப்போகும் விரிந்த சித்திரத்தை அளிக்கமுடியும்.

  ————–

  மிக ஆதர்சமான விளக்கம்.

 6. தேசிய கல்வி சிந்தனை வரலாற்றுப் பெருமிதம் தேசிய தலைவா்கள் சாதனை மீது மதிப்பு போன்ற பண்புகள் 50 ஆண்டுகாலமாக மறக்கடிக்கப்பட்டு தேசிய உணா்வு சிந்தனை மழுங்கிப்போனதால்தான் இத்தகைய பேச்சுக்கள்
  குற்றமாக கருதப்படுகின்றது. பண்டிகை காலம் முடிந்ததும் காபீா்களை பிடறி யில் வெட்டுங்கள்.தேடித் தேடி கொல்லுங்கள் என்று பிற மதத்தவா்களை கொல்ல அறைகூவல் வீடும் குரானை விமா்சிக்கும் தைாியமற்றக் கோழைகள் நினைற்த நாடு இப்படித்தான் இருக்கும். ஆனால் சோா்ந்து போக அவகாசம் இல்லை.தொடா்ந்து இந்து தேசிய சிந்தனை கருத்தக்களை நாடு முழுவதும்சுனாமி வெள்ளமென பாய்க்க வேண்டும். நிறை மாறியிருக்கின்றது.நிச்சயம் முழுவதும் மாற்றிவிடலாம்.

 7. எனது கட்டுரை வெளியிட தகுதியற்றது எனத் தள்ளுபடி செய்யப்ட்டுவிட்டதோ ?நினைவு படுத்துகின்றேன். கடிதங்களை வெளியிடுவதுபோல் கட்டுரையைம் வெளியிடலாம். விவாதம் பிறக்கட்டுமே!

 8. தமிழ் நாடு தேசிய நீரோட்டத்தோடு ஒட்ட்டவில்லை என்று சொல்வது தேசிய கட்சிகளை தேர்ந்தேடுக்கவில்லை என்று பொருளில் சொல்லி இருக்கலாம். இந்திரா, ராஜீவ், வாஜ்பாயி போன்றவர்கள் பிரதமராக வரவேண்டும் என்று தமிழ் நாடு அந்தக் கூட்டணிகளுக்கு ஒட்டு அளித்திருக்கிறது. முதலில் தேசிய கட்சிகள் சிறந்த மாநிலத் தலைவர்களை உருவாக்கட்டும். திடீர் என்று நாலு நாளில் இது நடக்காது. திட்டமிட்டு உழைக்க வேண்டும்.

 9. ////வட இந்திய ஏழைகளும் ஒரு சேர பஞ்சம் பிழைக்க பரதேசியாக வருவதை பார்க்க முடிகிறதே..// என்ற கேள்விக்கு ரங்கனின் பதில்:

  //தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அங்கங்கே பிழைத்திருக்க வேண்டியது தானே. ஏன் சென்னைக்கு வந்து கட்டிடம் கட்டும் தொழிலுக்கு வந்து பிளாட்போரத்தில் படுத்து லாரி ஏறி உயிர் விட வேண்டும் ? வறுமை என்பது பொதுவானது. அதைப் போக்க வழி தேடாமல் மொழி அடிப்படையில் போராடி ஒரு நன்மையும் இல்லை.
  //

  கேள்விக்கு பதில் சரியில்லை. ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென்று சொல்பவருக்குத்தான் அக்கேள்வி. ஹிந்தி பேசும் பீஹார், உ.பியிலிருந்து லட்சக்கணக்கில் இளைஞர்கள் வெளியேறி ஹிந்தி பேசா மாநிலக்களுக்குச் சென்று வேலை வாய்ப்பைத் தேடுகின்றனர் என்பதற்கு இன்றைய தமிழகம் சாட்சி. வங்காளத்தில் கொல்கொத்தாவில் கூலிகள் எல்லாரும் பீஹாரிகள். அவர்களுக்குத் தாய்மொழி வங்காளமில்லை. ஏன் ஹிந்தி மொழி வேலைவாய்ப்பைத்தரவில்லை?

  இதற்கு வறுமை என்பது பொதுவானது என்பதுதான் பதிலா? ஹிந்தி மொழியேன் அவர்கள் வறுமையைப்போக்கும் வேலை வாய்ப்புக்களைத்தரவில்லை?

 10. //எனது கட்டுரை வெளியிட தகுதியற்றது எனத் தள்ளுபடி செய்யப்ட்டுவிட்டதோ ?//

  உங்களது தீவிர இசுலாமிய எதிர்ப்புதான் காரணமாக இருக்கவேண்டும். இந்திய தேசிய சிந்தனை என்றால் கண்டிப்பாக குரானை கடுமையான விமர்சனம் செய்வோருக்கே இருக்க முடியும் எனவும், விமர்சனம் செய்யாதவர்கள் கோழைகள் எனவும் கருத்துக்களைக்கொண்டு பறைச்சாற்றுவது ஒருவகையான வஹாபிசம்தான். ஒருவேளை அப்படிப்பட்ட வஹாபிசம் இங்கு தேவையில்லை என்று நினைத்து விட்டார்கள் போலும். Tone down, Dr Anburaj. They may release your essay.

 11. Tamilians should start thinking themselves as Indians first and foremost. Until then, TN and Tamils will be sidelined in the broader scheme of things. Tamils should get over this Dravidian and Aryan myth for good and give anti Brahmanism the boot. The problem with Shri தாயுமானவன் is obvious. He is a Tamilian first and an Indian second.

 12. தமிழ்நாடும் தமிழர்களும் தேசிய நிரோட்டத்தில் ஒட்டவில்லை என்பதே தவறான கருத்து. இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பதால் அதை நேரடியாகச் சொல்லாமல்,, மீசையில் மண் ஒட்டாமல், என்னமோ தான்தான் தேசிய நீரோட்டம் எனபது போலவும், மாநிலக் கட்சிகள் மாநில ஓடைகள் போலவும் தோற்றத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட கருத்து, தவறானது.

  தேசியம் எனபதன் பார்வை காங்கிரசைத் தாண்டி வேறில்லை என்று கூறும் இக்கருத்து தவறானது.

  தமிழ்நாடு இந்த தேசத்தின் ஓர் அங்கம்தான்.

  அரசியல் களத்தில் ஆங்காங்கே இருக்கும் தேவைகள் சூழ்நிலைகள் இவற்றின் அடிப்படையில் மக்கள் சுதந்திரமாக எடுக்கும் முடிவுகளைக் கொச்சைப்படுத்தும் இப்படிப்பட்ட புரட்டு வாதங்களை ஒதுக்கவேண்டும்.

  மாநிலக் கட்சியை ஆதரிப்பது என்பது தேசியத்தோடு ஒன்றாதது என்ற கருத்து மிகவும் தவறானது.

  கிருஷ்ணகுமார் சுட்டிய ஜெயமோகன் கட்டுரைக் கருத்துக்கள் கூடத் தொன்றுதொட்டு பாரத தேசம் என்ற நிலப்பரப்பில் தமிழுக்குரிய அடையாளத்துடன் தமிழகம் இருந்ததை நிறுவுகின்றன. அந்த நிலை இன்றும் தொடர்கிறது. அவ்வளவே. ஆக, தேசியத்தில் தமிழ்நாடு கலக்கவில்லை என்பது தவறான கண்ணோட்டம், ஏன் கலக்க வேண்டும் என்பது தவறான கண்ணோட்டத்துக்குத் தவறான எதிர்வினை!

 13. //கேள்விக்கு பதில் சரியில்லை. ஹிந்தி படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமென்று சொல்பவருக்குத்தான் அக்கேள்வி. ஹிந்தி //

  ஹிந்தி படிக்க மறுத்ததினால் பல வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன் என்ற அடிப்படையில் சொல்லப் பட்ட பதில் அது.

  திரு சேக்கிழான் எழுதிய தலைப்புக்கு நேரடி சம்பந்தமில்லாமல் விவாதத்தை நான் ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்கின்றேன். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

 14. //He is a Tamilian first and an Indian second.//

  That is correct on his part.

  Ask a Malayali. He says he is a Malayali first; and Indian only later. K P S Menon, India’s First Foreign Secretary, wrote in his autobiography ‘Many Worlds”, that he is a Malayali to the tips of his fingers! I read once in Abu’s column the same assertion. All Malayalis give the same emphasis to their mother-tongue and to regional identity. I have nver come across a fellow Malayali finding fault with such fanatical love of regional identity of their brethren.

  Anti-brahaminism rose in Kerala earlier than in TN; achieved its end namely pushing Namboodri from the front of society and settled down completely. In TN, it has not settled down yet.

  In Mahastra, Raj family scions are doing the same, I mean, shouting anti-Hindi and anti-North and energising the Maharashtrians ! They also use violent ways to make their point of regional identity assertively. According to them, their people are being cheated in the name of Nationalism.

  I have heard my Hindi (UP friends) saying //Ýou, South indians, take better care of your states as you have rejected to get attached to the national stream. Our leaders (he means mostly Congresswalas) look to centre for anything like beggars; and finally our state is being run from the centre. We lose our identity and our state is left uncared for. It remains undeveloped”

  I don’t want to conclude you should reject all that is centre. But beware of being neglected exactly for the same reason as you put here: Cut off from the centre, you wither away. W/o a strong regional identity, you will be swamped and tramped under foot unless you are stronger than those who are ready to trample you upon. Be strong first yourself. W/o a strong regional identity, there is no question of national identity.

 15. இந்தி மொழி வெளி மாநில வேலை வாய்ப்புகளை பெருக்கும், பல மாநிலங்களுக்கு செல்ல உறுதுணையாக இருக்கும் என்பதற்காக சொல்லப் பட்டது.

 16. நான் கேட்டது –

  ஹிந்தி பேசும் மாநிலத்தவர் ஏன் ஹிந்தி பேசா மாநிலங்களுக்குப் பிழைப்பைத் தேடி வருகிறார்கள்?
  ஹிந்தி மொழி வேலை வாய்ப்புக்களைத் தருமென்றால், அவர்கள் ஏன் இங்கு வருகிறார்கள்?

  இக்கேள்விக்கு //பொதுவான வறுமை// என்பதுதான் பதிலா?

  ஏன் ஹிந்தி வேலை வாய்ப்புக்களை அவர்களுக்குக்கொடுக்கவில்லை ?

 17. ஹிந்தி மொழி என்றவுடன் பெரிய தொழில் அதிபர்களுடன் discussions, tourism etc etc, என்று பெரிய பெரிய கனவு யாருக்கும் இல்லை. !!!!

  பிகார் பிட்சைக்காரன் என்ற ரேன்ஜ் இல் தான் மூளை போகின்றது . அட விடுங்கப்பா ஹிந்தி தெரிந்தால் பெரிய 10 மாநிலம் வரை போயி பிட்சை எடுக்கலாம், அந்த வசதி இருக்கா?

 18. //ஹிந்தி மொழியேன் அவர்கள் வறுமையைப்போக்கும் வேலை வாய்ப்புக்களைத்தரவில்லை?//

  எந்த மொழி எந்த உலகில் எல்லா மக்களயும் மற்ரும் ஆடு மாடுகள் உட்பட செழிப்பா வைத்து இருகின்றது. ?

 19. சமீபத்தில் சென்னையில் சில உணவு விடிதிகளில் பணியாளர்களுடன் பேசுகையில் அவர்கள் பெரும்பாலும் பீகார், மணிப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து வேலை தேடி வந்தவர்கள் என்று அறிந்தேன். இதே போல கும்பகோணம் அருகிலுள்ள ஒரு ரிசொர்ட் விடுதியில் பணிபுரியம் பெண்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. செஹ்ன்னை கட்டடம் மற்றும் மேம்பாலம் பணியாளர்கள் எல்லாருமே வடக்கத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒரு டாக்ஸி ஓட்டுனர் “தமிழர்கள் டாஸ்மாக் கடையில் அரசு அளிக்கும் இனாம் பணத்தை செலவிடுகிறார்கள். அவர்களுக்கு வலை செய்ய நேரம் இல்லை” என்று குறிப்பிட்டார். போகின்ற போக்கில், இனிமேல தமிழ்நாட்டில் இந்தி தெரிந்தால்தான் மற்றவர்களுடன் உரையாட முடியும் என்கிற நிலை உருவாகலாம். அதற்காகவேனும் ஹிந்தி படிப்பது அவசியம். மற்றும், ஹிந்தி எதிர்ப்பை மூலமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடிய மகானுபாவர் தன்னுடைய சந்ததிக்கு ஹிந்தி தெரிந்திருப்பதால் அவரை மத்திய மந்திரியாக சிபாரிசு செய்ததாக சிறிது நாக்கூசாகாமல் செய்தி அறிவித்தார். இழப்பு தமிழனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை. ஒன்று இரண்டு அந்நிய மொழிகளை படித்தால் மொழி பெயர்ப்பாளனாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது கஜான டாஸ்மாக் விலையில்லா துணிமணிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *