குஜராத்: மோடி அலை ஓயாது!

அண்மையில் நடைபெற்ற இரு மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நாட்டு நலனை விரும்புவோருக்கு உவப்பானதாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக குஜராத்தில் பாஜக பெற்றுள்ள மாபெரும் வெற்றி, மோடி அலை ஓயவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதுவும் தேசியக் கண்ணோட்டத்தில் பாராட்டுக்குரிய முடிவாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் இந்த மாநிலத்தில், வெறும் 0.90 சதவீதம் வாக்குகள் வித்யாசத்தில் தான் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது. 

இமாலய வெற்றி!

குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஏழாவது முறையாக வென்று வாகை சூடி இருக்கிறது பாஜக. மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக மட்டுமே 156 இடங்களை வென்றிருக்கிறது. (சென்ற தேர்தலில் பாஜக வென்ற இடங்கள் 99). காங்கிரஸ் 17 (2017இல் 77) இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 5 (இந்தத் தேர்தலில் தான் களம் காண்கிறது) இடங்களிலும் பிறர் 4 இடங்களிலும் வென்றுள்ளனர். சென்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெல்லவே போராடிய பாஜக, இந்தத் தேர்தலில் தனது முந்தைய சாதனைகள் அனைத்தையும் தானே முறியடித்திருக்கிறது.

அது மட்டுமல்ல, சுமார் 55 தொகுதிகளில் அனைத்து வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கையும் கூட்டினாலும் எட்ட இயலாத வித்யாசத்தில் பல தொகுதிகளில் 30 சதவீதத்துக்கு  மேற்பட்ட வாக்குகள் முன்னிலை பெற்றிருப்பது பாஜகவுக்கு மிகவும் தெம்பூட்டும் செய்தி. 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்யாசத்தில் பாஜக வென்றிருப்பது 20 தொகுதிகளில் மட்டுமே.

இந்த மகத்தான வெற்றியை ஜீரணிக்க இயலாத செக்யூலர் பத்திரிகையாளர்கள், ஆம் ஆத்மி கட்சியின் புதுவரவால் ஏற்பட மும்முனைப் போட்டியால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிளவுபட்டதே பாஜகவின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று கதைத்து வருகிறார்கள். இது உண்மையல்ல. சுமார் 15 தொகுதிகள் மட்டுமே மும்முனைப் போட்டியால் பாஜகவுக்கு கூடுதலாகக் கிடைத்தவை. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் கூட பாஜகவின் வெற்றி பவனியைத் தடுத்திருக்க இயலாது என்பதே தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் சேதி.

இத்தேர்தலில் பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 52.5 சதவீதம். காங்கிரஸ்  27.3 சதவீதம்; ஆம் ஆத்மி கட்சி  12.9 சதவீதம். பாஜவின் இரு பிரதான எதிரிகள் சேர்ந்திருந்தாலும் கூட பாஜகவை வென்றிருக்க முடியாது என்பதையே இந்த வாக்கு சதவீத புள்ளிவிவரம் காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மீதான குஜராத் மக்களின் நம்பிக்கையும் பாசமும் தான் இந்த மாபெரும் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். அதேசமயம், மாநிலத்தில் நல்லாட்சி, சிறந்த முறையில் அமல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள், ஊழலற்ற நிர்வாகம், மாநில முதல்வராக பூபேந்திர படேலை நியமித்தது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் களப்பணிகள், அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்தது, செயல்படாத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது, கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை அளிக்காதது, எதிர்க்கட்சிகளில் இருந்து அடைக்கலமானோரை அரவணைத்துக் கொண்டது போன்ற கூடுதல் காரணங்களும் பாஜகவின் இமாலய வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன.

17 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழக்கிறது. அதைவிட ஆபத்து, வேகமாக வளர்ந்துவரும் ஆம் ஆத்மி கட்சி வளைத்துப் பிடிப்பது, காங்கிரஸ் கட்சிக்கு இது வரை ஆதரவாளர்களாக இருந்த சிறுபான்மையினர், பழங்குடியினரின் வாக்குகள் தான். காங்கிரஸ் தற்போது வகிக்கும் இரண்டாமிடத்தை ஆம் ஆத்மிக் கட்சியால் வருங்காலத்தில் நிரப்ப முடியும் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் 4.91 கோடி பேர் வாக்களித்த (64.3 சதவீதம் வாக்குப் பதிவு) இருகட்டத் தேர்தலில், பாஜக தனது ஆதரவுத்தளத்தை மேலும் விரிவுபடுத்தி இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும், பழங்குடியினப் பகுதிகளிலும், எஸ்.சி, எஸ்.டி. தொகுதிகளிலும் பாஜகவின் திக்விஜயம் தொடர்கிறது. தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்போதும் அரசு நிர்வாகம் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படாத வகையில் செயல்பட்டால், வெற்றி நீடிக்கும் என்பதற்கு குஜராத் பாஜகவே சாட்சி.

கைநழுவிய வெற்றி!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 1985-க்கு பிறகு எந்த ஆளும்கட்சியும் மீண்டும் வென்றதில்லை என்ற நிலைப்பாட்டை மக்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இங்கு ஆட்சியில் இருந்த ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெறவில்லை. புதிதாக காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.

தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்சி மீதான அதிருப்தியால் வெற்றி கைநழுவும் நிலையில் இருந்ததை பாஜக உயர் தலைவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே தான் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஹிமாச்சல் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றும் வழக்கத்தை இம்முறை கைவிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மக்கள் மாறவில்லை. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் பெரிய அளவில் உத்வேகமே இல்லை. தேசியத் தலைமை குஜராத்திலும் ஹிமாச்சலத்திலும் பெயரளவில் மட்டுமே பிரசாரம் செய்தது.

வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு என்றபோதும் பாஜக சளைக்காமல் போராடியது. அதன் விளைவாகவே மிகக் குறைந்த வாக்கு சதவிகித வித்யாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. மொத்தமுள்ள 68 இடங்களில் 40 இடங்களை வென்றிருக்கிறது காங்கிரஸ் (சென்ற தேர்தலில் இக்கட்சி 21 இடங்களை வென்றிருந்தது). பாஜக 25 இடங்களிலும் (2017இல் 44) பிறர் 3 இடங்களிலும் வென்றுள்ளனர்.

அதிகப்படியான இடங்களில் வென்றுள்ள போதும் மாநில முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி திணறியதைக் கண்டு, வாக்களித்த மக்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள். 4 கோஷ்டிகள் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டால், தேர்தல் பிரசாரத்துக்கே வராத ராகுலால் அவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்? ஒருவழியாக சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராகத் தேர்வாகி இருக்கிறார்.

பாஜக ஆட்சியை இழந்துள்ள போதும், பெற்ற வாக்குகளின் சதவிகிதம் கூடி இருக்கிறது. அது மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் அக்கட்சி வெற்றியை இழந்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 18. தேர்தலில் வென்ற காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 43.90 சதவீதம். பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 43.0 சதவீதம் அதாவது. 0.90 சதவீத வாக்குகள் வித்யாசத்தில் தான் வெற்றிக்கனியைப் பறிகொடுத்திருக்கிறது பாஜக.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜகவின் போட்டி வேட்பாளர்கள் 22 தொகுதிகளில் போட்டியிட்டது, அக்னிவீரர் திட்டத்துக்கு எதிரான பிரசாரம், ஆப்பிள் விலை சரிவு, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 நிதியுதவி உள்ளிட்ட காங்கிரஸ் அளித்த இலவச வாக்குறுதிகள், அரசு ஊழியர்களுக்கு முந்தைய ஓய்வூதியத் திட்டமே கொண்டுவரப்படும் என்ற காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஆகியவை அக்கட்சிக்கு சாதகமான காற்று வீசக் காரணமாகி உள்ளன. எனினும் பாஜகவின் தோல்வி படுதோல்வியல்ல.

குஜராத் மாநிலம் போல மிகுந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் அல்ல ஹிமாச்சல். இங்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையே 55.9 லட்சம் (75.6 சதவீதம்) பேர் தான். எனவே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களே வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். அந்த வகையில் பாஜக வெற்றிக்கோட்டை நெருங்கியும் சறுக்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலையில் இருந்தபோது, கடைசிவரை வெற்றிவாய்ப்பு யாருக்கு என்பதைக் கணிக்க முடியவில்லை. இதுவே ஹிமாச்சலின் பிரத்யேக நிலவரம்.

பெரிய அளவில்  ஊடகங்களால் பிம்பமாக வளர்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியால் ஹிமாச்சலில் கொஞ்சமும் சாதிக்க முடியவில்லை. அக்கட்சியால் 1.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்திருக்கிறது. குஜராத்திலும் கூட 5 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது.

ஹிமாச்சல் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடருமா என்பதை உறுதிப்படுத்தும். ஏனெனில், வென்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் நான்கு கோஷ்டிகளாகச் சுருங்கி ஒருவருக்கொருவர் காலை வாரிவிடும்போது, ஆட்சி நிலையாக இருக்க இயலாது. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால் காக்க வேண்டிய கடப்பாடு பாஜகவுக்கு கிடையாது. இதை காங்கிரஸ் தேசியத் தலைமை உணர்வது நல்லது.

தில்லியில் மாற்றம்

கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியை நிர்வகித்து வந்த பாஜக நடந்து முடிந்த மாநகராட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மாநகராட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. 250 இடங்கள் கொண்ட தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றுவிட்டது. என்றபோதும் 104 இடங்களை வென்றிருக்கிறது பாஜக. பல்வேறு ஊழல் புகார்கள், நிர்வாகம் மீதான குற்றச்சாடுகள் இருந்தபோதும், பாஜக தனது களத்தை இழக்கவில்லை என்பதையும் இம்முடிவுகள் காட்டுகின்றன.

மாநிலத்தை ஆளும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசு, பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டதும் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. இலவசங்களை கொள்கைரீதியாக எதிர்க்கும் பாஜகவால் ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்விஷயத்தில் ஈடு கொடுக்க முடியவில்லை.

தவிர, மக்களால் கைவிடப்படும் காங்கிரஸ் கட்சியின் இடத்தைக் கைப்பற்றுவதில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. பாஜகவுக்கு முதன்மை எதிரியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அரவிந்த் கேஜ்ரிவால் சிறுபான்மையினரின் அண்மைக்கால கதாநாயகனாக உருவாகி வருகிறார். தில்லியில் சுமார் 60 இடங்களின் வெற்றியை நிர்னயிப்பது சிறுபான்மையினரின் வாக்குகளே என்பதில் இருந்து தேர்தல் முடிவின் பின்புலத்தை யூகிக்கலாம்.

இவை தவிர சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல்களில் கலவையான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. பிஹாரின் குர்ஹானி தொகுதியிலும், உ.பியின் ராம்பூர் தொகுதியிலும் பாஜக வென்றிருக்கிறது. சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூர் தொகுதியிலும் ராஜஸ்தானின் சர்தார்ஷாகர் தொகுதியிலும் காங்கிரஸ் வென்றிருக்கிறது. ஒடிஷாவின் பதாம்பூரில் பிஜு ஜனதாதளமும்,  உ.பி.யின் கட்டௌலியில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் வென்றுள்ளன. முலாயம் சிங் காலமானதால் உ.பி.யின் மெயின்புரி லோகச்பா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான, முலாயமின் மருமகள் டிம்பிள் யாதவ் அதிகப்படியான வாக்கு வித்யாசத்தில் வென்றிருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், பாஜகவின் எதிரிகள் வென்ற இடங்கள் அனைத்திலுமே பாஜக தான் இரண்டாவது இடம் வகிக்கிறது. அதாவது, பாஜகவை மையமாகக் கொண்டே இந்திய அரசியல் களம் இருப்பதையும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் எந்தத் திசையில் நடைபெறும் என்பதையும் இத் தேர்தல் முடிவுகள் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றன.

.

One Reply to “குஜராத்: மோடி அலை ஓயாது!”

  1. ஆறு சட்டசபை மற்றும் ஒரு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் , ஒரிஸ்ஸாவில் பிஜு ஜனதாதளம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரசும் ,தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொண்டன . பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் தாங்கள் முந்திய தேர்தலில் வென்ற தொகுதியை இழந்து , அதே சமயம் மாற்றுக்கட்சியின் தொகுதியை கைப்பற்றி உள்ளன . சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து 10 முறை ஆஸம்கான் மூலம் வென்ற ராம்பூர் தொகுதியை இந்தமுறை பாஜக தட்டிப்பறித்தது . அதே போல பாஜகவின் தொகுதியை சமாஜ்வாதி தட்டிப்பறித்தது . பீகாரில் ஆளுங்கட்சியான நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் , சென்ற தேர்தலில் ஆளும் கூட்டணி வென்ற தொகுதியை பாஜகவிடம் பறிகொடுத்தது . ஆக மொத்தம் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூடுதலாக கிடைத்துள்ளது . பாஜகவின் எதிரியான JDU ஒரு இடத்தை இழந்துள்ளது .பாஜகவின் வலு சற்று கூடியிருப்பதையே அறியமுடிகிறது . வரும் 2024 மக்களவை தேர்தலில் , பாஜக கூட்டணி சென்ற 2019 மக்களவை தேர்தலில் பெற்றதை விட கூடுதலாக 50 இடங்களுக்கும் மேல் பெற்று பெரிய அளவில் வெற்றிபெறும் என்பதை வல்லுநர்கள் கணிக்கிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *