தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

Kejriwal-dharnaதில்லித் தேர்தல்கள் முடிந்து இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை ஸ்ரீ அரவிந்த கேஜரிவால் அவர்களது ஆப்புக்கட்சி பெற்றுள்ளது. 54 சதமான வாக்குகள். மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் அபார வெற்றி. அயராது ஒருங்கிணைந்து இந்த தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்ட ஆப்புக்கட்சியின் கார்யகர்த்தர்களுக்கும் அதன் தலைவரான ஸ்ரீ அரவிந்த கேஜ்ரிவாலுக்கும் நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

நிர்மூலமாக்கப்பட்ட காங்க்ரஸ். எதிர்பாராத படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்த பாஜக:

 

எதிர்பாராத என்ற சொற்றொடர் பாஜகவுக்கு மட்டுமல்ல. ஆப்புக்கட்சியனரே கூட இப்படி ஒரு வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பது சுட்டப்பட வேண்டிய கருத்து. மேலும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஹேஷ்யங்களையே கணிப்பு என்ற பெயரில் மக்கள் மீது திணித்த……… அதிமேதாவிகளாகக் களப்பிணியாற்றிய………. பரங்கிப்பணத்தில் தேசவிரோதக்கடமையாற்றும்……. தொலைக்காட்சி மற்றும் தினசரி சஞ்சிகைகளான ஊடகங்களும் கூட……… இப்படி ஒரு வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பதும் சுட்டப்பட வேண்டியதே.

 

நேர்மை, கடுமையான உழைப்பு,  ஆதர்சமான எளிமை, உறுதியான தலைமை இவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து வரும் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி மற்றும் ஸ்ரீ அமித் ஷா என்ற தேசத்தின் இரு தலைவர்களும் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர்கள் என்ற படிக்கு இந்தத் தோல்வியில் பெரும் பங்கேற்கிறார்கள்.  ஆனால் இந்த ஒரு தோல்வியை மட்டிலும் முழு அலகீடாகக் கொண்டு……… இந்த இருவரின் செயல்பாடுகள்……. இவர்களின் உறுதியான தலைமை மற்றும் சமயோசிதமாக முடிவெடுக்கும் திறமை போன்ற அனைத்தையும் அடிச்சுவடின்றி அழித்தொழித்து வெள்ளையடித்து……. மறைக்க  தொலைக்காட்சி மற்றும் தினசரி சஞ்சிகைகள் முயன்று வருகின்றன. எவை தோல்விக்குக் காரணங்களோ அவற்றைப் பற்றி கிஞ்சித்தும் பேசாதிருத்தல்……….. எவை தோல்விக்குக் காரணம் இல்லையோ அவற்றையே தோல்விக்குக் காரணங்களாக நீட்டி முழக்குதல்……….. என்ற இரட்டைக்குழல் துப்பாக்கியால் சற்றே துவண்டிருக்கும் ஹிந்துத்வர்களை துளைத்து எடுத்துக்கொண்டிருக்கின்றன பரங்கிப்பணத்துக்கு விலை போன ஊடகங்கள்.

ஆகவே இந்த வெகுபல அம்சங்களை புரிந்து கொள்ள முனைவது………..பாஜக அடைந்த பின்னடைவிற்கான காரணங்கள்……….. காரணமல்லாத ஆனால் காரணமாக முன்வைக்கப்படும் விஷமக் கருத்துக்கள்……….. இவற்றை விவாதிக்க விழைவது இந்த வ்யாசத்தின் முயற்சி.  இதற்கு முன்னர் இந்த தேர்தல் சம்பந்தமாக பத்திரிக்கையாளர்கள் ஏற்கனவே எழுதியுள்ள வ்யாசங்களை அனுபந்தமாகக் கொடுத்துள்ளேன்.

முதலில் பறவைப்பார்வையாக முக்ய அரசியல் கட்சிகளான பாஜக, ஆப்புக்கட்சி, காங்க்ரஸ் கட்சி போன்றவை கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்கு சதமானம் சார்ந்த சில புள்ளி விபரங்கள்.

பாஜக 2013 தேர்தலில் 33.3% 2015 தேர்தலில் 32.2% 2014 லோக்சபை தேர்தலில் 46%

ஆப்புக்கட்சி 2013 தேர்தலில்   29.7% 2015 தேர்தலில் 54.3

காங்க்ரஸ் 2013 தேர்தலில் 24.7% 2015 தேர்தலில் 9.7% 2014 லோக்சபை தேர்தலில் 15.2%

காங்க்ரஸ் கட்சியைப் பொறுத்தவரை தொடர்ந்து சரிவு.  முழுமையான புள்ளி விபரங்கள் பகிரப்படவில்லை எனினும் சஹோதரி சுஸ்ரீ மாயாவதி அவர்களது பஹுஜன் சமாஜ் கட்சியும் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது.

பாஜகவைப் பொறுத்தவரையில்  அக்கட்சிக்கு வெகு காலமாக ஆதரவு அளித்து வரும் கிட்டத்தட்ட முப்பது சதமானத்துக்கும் மேற்பட்டவர் தொடர்ந்து அக்கட்சியை ஆதரித்து வருகின்றனர்.  ஆயினும் திட்டமிட்ட ஒருங்கிணைந்த ப்ரசாரத்தின் மூலம் 2014 லோக்சபை தேர்தலில் ஒரு பெரும் முன்னகர்வாக 13 சதமான அதிக ஆதரவைப் பெற்ற பாஜக கட்சி 2015 தேர்தலில் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

எந்த தேர்தலாக இருக்கட்டும் அதில் வெற்றி பெற மூன்று காரணிகள் மிக முக்யம்.  Organisation –  பெருமளவு ஒழுக்கக்கட்டுபாட்டின் பாற்பட்டு பணிபுரியத்தக்க கட்சி அமைப்பு,  Leadership – உறுதியாக சமயோசிதமாக முடிவெடுத்து அதை அமல் படுத்தும் சாமர்த்யம் உள்ள தலைமை Message – தேர்தல் சமயத்தில் வாக்களர்களின் எண்ணத்தை ஒரு குவியத்தில் கொணரத்தக்கதான மையக்கருத்தாக்கம்

தேர்தல் தோல்விக்கான உறுதியான காரணங்கள் யாவை என்று பார்ப்போம். 

 1. ஒருங்கிணைந்த தேர்தல் திட்டம் மற்றும் ப்ரசாரம் :-

2014 தேர்தலில் ஸ்ரீ அமித் ஷா அவர்கள் உத்தர ப்ரதேசத்தில் 71 தொகுதிகளில் பெரு வெற்றி பெற்றது என்பது அவரது சாதுர்யம் அல்லது ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களது சாதுர்யம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  ஆனால் இதில் மிக வெளிப்படையாக அலசப்படா முக்ய காரணி……….. திட்டமிட்ட ஒருங்கிணைந்த  பாஜக தரப்பிலான வெகுஜன மக்கள் தொடர்பு. இதை படம் போட்டுக்காட்டும் ஒரு வ்யாசம் அன்பர் ஷீலா பட் அவர்களால் ரீடிஃப் இணையத்தில் மோதி ஹீரோ மொபைல் ஃபோன் ஹீரோயின் என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ளது .

இந்த வ்யாசத்தில் ஸ்ரீ அமீத் ஷா அவர்கள் உத்தர ப்ரதேச தேர்தல் பணியை எப்படித் திட்டமிட்டு ……..ஒரு ஒருங்கிணைந்த இளைஞர் குழாத்துக்கு தலைமையேற்று……. அதை வழிநடத்தி……….. மொபைல் ஃபோன் மற்றும் கணினிகள் என்று இன்றைய தலைமுறை சாதனங்களின் துணை கொண்டு தேர்தல் வெற்றி பெற்றார் என்பதனை விரிவாக விவரிக்கிறது.

இந்த தேர்தலில் பாஜக வின் படுதோல்வி மற்றும் ஆப்புக்கட்சியின் அபார வெற்றி என்ற இந்த இரண்டு அம்சங்களின் பொது  ஆதாரமாக விளங்கும் மிக முக்யமான விஷயம் இது தான். இதுவே தான். திட்டமிட்ட ஒருங்கிணைந்த வெகுஜன மக்கள் தொடர்பை இலக்காகக் கொண்ட தேர்தல் ப்ரசாரம்.  ஆப்புக்கட்சி இந்த யுக்தியை முழுமையாக தில்லி தேர்தலில் உபயோகித்துள்ளது. ஒரு பெரும் இளைஞர் குழாத்தை இப்படி திறமையாக ஒருங்கிணைந்த ஒரு ப்ரசாரத்தில் பெருமளவு ஒழுக்கக்கட்டுப்பாடுகளுடன் ஈடுபடுத்திய படிக்கு முழுமையான வாழ்த்துக்களுக்கு ஆப்புக்கட்சி உரித்தாகுகிறது. பாஜக தரப்பில் இதன் சுவடு கூட காணப்படவில்லை என்பது கசப்பான உண்மை. மேலோட்டமான உத்சாஹமில்லாத ப்ரசாரமே பாஜக தரப்பிலிருந்து காணப்பட்டது.

மிக உறுதியான ஆதர்சமான தலைமை பாஜக விடம் இருந்த போதிலும் Organisation மற்றும் Message என்ற இரு காரணிகளில் பாஜக தரப்பு நடந்து முடிந்த தில்லி தேர்தலில் ப்ரகாசமாக ஒளிரவில்லை என்பது நிதர்சனம்.

 1. கட்டுக்கோப்பான தலைமை :-

20110721_011940_india-gate-delhiகடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக தில்லியில் பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவைத் தருவது கட்சியின் பற்பல தலைவர்களாகப்பட்டவர்கள் தலைமையேற்பதில் நாட்டம் கொண்டு அதனால் ஏற்படும் தள்ளுமுள்ளு. இந்த ஒரு ப்ரச்சினையால் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட மிகவும் காலம் கடந்து தேர்தலுக்கான திட்டமிடலைத் துவங்குதல்.  யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது என்பதில் குழப்பங்கள்.  ஒவ்வொரு முறை கட்சி தோற்கும் போதும் இவை கட்சிக்கு பெரும் பின்னடைவைத் தந்துள்ளன என்றால் மிகையாகாது.

ஒருபுறம் கட்டுக்கோப்பான ***ப்ராந்திய*** தலைமை என்ற அம்சத்தில் பாஜக தரப்பில் குறைபாடு இருக்கையில் மிக உறுதியான கட்டுக்கோப்பான தலைமை ஆப்புக்கட்சியின் தரப்பிலிருந்து ஸ்ரீ கேஜ்ரிவால் அவர்கள் தலைமையில் காணப்பட்டது.

ராமஜன்ம பூமி போராட்டத்திற்குப் பிறகு நடந்த லோக்சபை தேர்தலில் ஸ்ரீ லால் க்ருஷ்ண அத்வானி தலைமையில் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்கள் பின்னணியில் பாஜக பெரும் வெற்றி பெற்ற சமயத்தில்………… சங்கத்தில் பாடப்பெற்ற பாடல் ஒன்று அக்காலத்து பல சங்கத்தினருக்கு நினைவில் இருக்கலாம்.

பத் கா அந்திம் லக்ஷ்ய நஹீ ஹை…………

சிங்காசன் சட் தே ஜானா………

பதவி நமது இலக்கு இல்லை. சிங்காசனத்தைக் கடந்து செல்வாயாக………. என்ற படிக்கு பொருள் தரும் பாடல் ஷாகாக்களில் பாடப்பட்டது.

தேசத்தின் உன்னதி, தேச ஒற்றுமை, தேச விரோத சக்திகளுக்கு எதிராக உறுதியாகச் செயல் படுதல் போன்றவையே பாஜக வின் அறுதி லக்ஷ்யங்கள்.    இவை தாரக மந்த்ரம் போன்று தலைவர்களுக்கும் கார்யகர்த்தர்களுக்கும்  திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டும்.

 • பாஜக வின் தொலைநோக்குத் திட்டங்களும் ஆப்புக்கட்சியின் இலவசங்களும் :-
 • 67க்கும் ஹிந்துஸ்தானத்தின் அவலத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போலும்.

  1967ல் தமிழகத்தைப் பிடித்த க்ரஹணம் இதுவரை விட்டபாடில்லை.  க்ரஹணம் விடுபடுவதின் அறிகுறிகள் தமிழகத்தில் தெரிகிறது.  இன்னாட்டு இங்கர்சால், பேரறிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட …………. ஸ்ரீ அண்ணாத்துரை முதலியார் அவர்கள் ரூபாய்க்கு ரெண்டு படி அரிசி தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சியைக் கைப்பற்றியதில் 1967ல் துவங்கிய அவலம் ……… தமிழகம் த்ராவிட கட்சிகளால் பீடிக்கப்பட்ட இருண்ட காலம் ……….இதுவரை தொடர்கிறது.  அதே காலத்தில் படிக்காத மேதை என்றும் தமிழகத்து நேர்மையான அரசியல் வாதி என்றும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் ரூபாய்க்கு ரெண்டு படி அரிசி எப்படிக் கொடுக்க முடியும் என்று அறிவு பூர்வமாக அரசியல் நடத்த முனைந்ததுது அக்காலத்தில் த்ராவிட கவர்ச்சி அரசியலின் முன் எடுபடவில்லை. அதே போன்றதொரு காட்சி இன்றைக்கு தில்லியில் அரங்கேறியுள்ளது என்றால் மிகையாகாது.

  தற்போது 2015ல் ஸ்ரீ அரவிந்த கேஜ்ரிவால் அவர்கள் இலவச/ மலிவு விலை மின்சாரம், இலவச/மலிவு விலை தண்ணீர், நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் மற்றும்  ஆதுரசாலைகள் கட்டுமானம், பளபள சாலை,  இலவச வைஃபை, ஆயிரக்கணக்கில் தாத்காலிக வேலையில் இருக்கும் தில்லி அரசாங்கத்தில் பணி புரியும் உத்யோகஸ்தர்களுக்கு நிரந்தர வேலை, வ்யாபாரிகளுக்கு விதிக்கப்படும் வரி சதமானக்குறைப்பு என்று இலவச மயங்களை அள்ளி விட்டு 67 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளார்.  இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் காய்க்கும் என்பதனை ஆப்புக்கட்சியோ அதன் மதியூகிகளோ பொதுமக்களிடம் பகிரவில்லை. அல்லது தெளிவில்லாத படிக்கு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மேலோட்டமான ஒரு சித்திரத்தைக் காண்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

  ஃபோர்டு ஃபவுண்டேஷன், பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள்,  இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்றோரின் பணக்குவியல்கள் மற்றும் ஆசீர்வாதப் பின்னணியில் …….. ஹிந்துஸ்தான அரசியல் அரங்கில் மூக்கறுபட்ட போலி மதசார்பின்மையை தாத்காலிகமாக மீட்டெடுத்து ……. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீ கேஜ்ரிவால். ஒரு புறம் ஊழல் ஒழிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை ப்ரச்சினைகள் சார்ந்த அரசியல் என சாதக அம்சங்கள் ஆப்புக்கட்சியின் தரப்பிலிருந்து நம்பிக்கை தருகிறது எனினும்………… போலி மதசார்பினமை மற்றும் தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளுடன் கைகோர்த்தல் போன்றவை இவர்களது எதிர்கால செயல்பாட்டின் மீது சந்தேஹங்களை எழுப்புகிறது.

  பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதும் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீஸல் விலையை…… உலக அரங்கில் குறையக் குறைய ஹிந்துஸ்தானத்திலும் குறைத்து வந்துள்ளது. அரிசி, கோதுமை மாவு போன்ற பண்டங்களின் விலையை மத்ய சர்க்கார் பெருமளவு கட்டுக்குள் வைத்துள்ளது.  ஆயினும் தில்லியிலும் தில்லையை அடுத்த பகுதிகளிலும் பருப்பு வகைகள் அன்றாடக் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் விஷம் போல ஏறிவந்ததைக் கட்டுக்குள் கொணர முடியவில்லை.

  எந்தப் பொருட்களின் விலைகள் கட்டுக்குள் கொணரப்பட்டதோ…… அதனை கட்டுக்கோப்பான ஒருங்கிணைந்த ப்ரசார யுக்தியைக் கையாண்டிருந்தால் பொது மக்களிடம் வீடு வீடாக ப்ரசாரம் செய்திருக்க முடியும்.  அது இல்லாமல் போனதில் விலையேற்றம் மட்டிலுமே பொது மக்களின் கசப்புணர்வில் ஆழமாகப் பதிந்து விட்டது.

  பாஜக ஒரு புறம் தொலை நோக்குத் திட்டங்களை ஆரவாரமில்லாமல்…….. முறையான சங்கம் சார்ந்த தனிநபர் ப்ரசாரயுக்தி சாராது…….. மக்களின் முன்வைக்கையில்……. கவர்ச்சிகரமான அன்றாடத் தேவைகள் சார்ந்த விஷயங்களை ஆப்புக்கட்சி ……..பொய்யான, பித்தலாட்டமிகுந்த வகையில் மக்களின் முன்வைக்கையில் ……. அதுவும் சங்கத்தினர் மற்றும் பாஜக வின் செயல்பாடை ஒத்த முழுநகரமளாவிய …..ஆதர்சபூர்வமான பாராட்டத்தக்க தனிநபர் தொடர்பு ப்ரசாரயுக்தியில்……….. தங்களுடைய இலவசத்திட்டங்களை கவர்ச்சிகரமாக ப்ரசாரம் செய்ததில்…….. பாஜக தரப்பிலான தொலை நோக்குத் திட்டங்கள் எடுபடாமல்……… கவர்ச்சியே எடுபட்டுள்ளது.

  1. கவர்னர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்படாத நடவடிக்கைகள் :-

  முன்னாள் முக்ய மந்த்ரி ஸ்ரீமதி ஷீலா தீக்ஷித் அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் நடந்த ஊழல் பற்றி 2013 தேர்தலின் முன்னர் ஆப்புக்கட்சியினர் ஒவ்வொரு கூட்டத்திலும் முழக்கினர். பாஜக வும் 2013 தேர்தலிலும் 2014 தேர்தலிலும் இதை ப்ரச்சினையாக்கியது.  2013ல் 49 நாள் ஆட்சியின் போது காங்க்ரஸ் ஆதரவில் ஆட்சி நடத்திய கேஜ்ரிவால் அவர்களிடம் ஷீலா தீக்ஷித் மீது வழக்கு விசாரணை ஏன் தொடரப்படவில்லை என்று வினவிய போது கழுவிய மீன் களில் நழுவிய மீனாக ……… சாட்சியைக் கொடுங்கள் வழக்கைத் தொடர்கிறேன் என்று நழுவினார்.  2014ல் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவும் இவர் மீது இதுவரையிலும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  BJP cadreபாஜக மின்சாரத்தின் விலையைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தும் கவர்னர் ஆட்சியில் விலையைக் குறைக்காது விலையேற்றம் நிகழ்ந்த போது அதைத் தடுக்க முன்வரவில்லை. இந்த செயல்பாடு கட்சி ஆதரவாளர்களைக்கூட முகம் சுளிக்க வைத்தது என்றால் மிகையாகாது.

  மின்சார விதரணம் செய்யும் டிஸ்காம் கம்பெனிகளின் கணக்கு வழக்குகளை சி.ஏ.ஜி மூலம் தணிக்கை செய்யவேண்டிய ந்யாயமான நடவடிக்கையை ஆப்புக்கட்சி முன்வைத்து விஷயம் ந்யாயாலயம்  வரை சென்று வழக்காடப்பட்டது. ந்யாயாலயம் சிஏஜி தணிக்கைக்கு தீர்ப்பளித்த பின்னரும் கவர்னர் ஆட்சியில் முழு முஸ்தீபுடன் தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது பொது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை வளர்த்தது. முழுத்தணிக்கை செய்தாலும் 5% முதல் 10% க்குள் தான் விலை குறைக்கப்படும் என்பது வேறு விஷயம்.  ஆயினும் இந்த நேர்மையான நடவடிக்கை கவர்னர் ஆட்சியில் எடுக்கப்படவில்லை என்பது  மக்கள் மத்தியில் ஆழப்பதிந்தது.

  தில்லியின் பற்பல ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் வினியோகம் டேங்கர் லாரிகளின் மூலம் நடைபெறுகிறது.  இவை பொதுமக்களால் டேங்கர் மாஃபியா என்றே அறியப்படுகின்றனர்.  கவர்னர் ஆட்சிக்காலத்தில் இவர்களைக் கட்டுக்குள் கொணரவும் பெருமளவில் முயற்சி எடுக்கப்படவில்லை என்பதனையும் பொதுமக்கள் எதிர்மறையாகவே பார்க்க நேர்ந்தது.

  கவர்னர் ஆட்சி என்பது மத்ய சர்க்காரின் மறைமுக ஆட்சி என்ற படிக்கு பாஜக இந்த ஆட்சியின் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க நேர்ந்தது.

  1. காலதாமதமாக வேட்பாளர்களைத் தேர்வு செய்தமை :-

  தேர்தல் அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த காலத்தில் ஆப்புக்கட்சி தன் தரப்பிலிருந்து அபேக்ஷகர்களை வெகு விரைவாக அறிவித்தது. மிக காலதாமதமாக அபேக்ஷகர்களை அறிவித்த கட்சி பாஜக.  ஆப்புக்கட்சி மற்றும் பாஜக என்ற இரண்டு கட்சியிலும் தேர்தலுக்கு சற்று முன்னர் கட்சியில் சேர்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியட வாய்ப்பளிக்க முனைந்தது இரண்டு கட்சியிலும் அத்ருப்தியை அதிகரித்தது. அதுவும் பாஜக தரப்பில் ஸ்ரீமதி கிரண் பேடியை முக்ய மந்த்ரி ஸ்தானத்தில் வேட்பாளராக அறிவித்தது கட்சியில் பெரும் அத்ருப்தியை அளித்தது.  இதுவே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று கூட ஒரு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. சங்கக் கருத்துக்களை தாங்கி வரும் பாஞ்சஜன்ய என்ற ஹிந்தி சஞ்சிகையிலும் இக்கருத்து பகிரப்பட்டிருப்பதாக அறிகிறேன்.  ஆயினும்  ஒருங்கிணைந்து எதிர்கொள்ளப்படாத இந்த தில்லித் தேர்தலில் மோதி—ஷா தரப்பிலிருந்து ஸ்ரீமதி கிரண்பேடியை முக்யமந்த்ரியாக முன்னிறுத்திய இந்த ஒரு முடிவு எடுக்கப்படாதிருந்தால் இப்போது கிடைத்துள்ள வாக்கை விட வாக்குகள் குறைவாக கிட்டியிருக்கவும் வாய்ப்புண்டு என்ற மாற்றுக்கருத்தும் உண்டு. பின்னிட்டும் வேட்பாளர்களை காலதாமதமாக தேர்வு செய்தல் என்ற எதிர்மறை அம்சம் பாஜக செயல்பாட்டை பாதித்துள்ளது என்றாலும் புதிய நபர்கள் சேர்க்கை……….. அதுவும் மாற்றுக்கட்சியினர் தேர்தலின் முன் கட்சியில் சேர்க்கப்படுதல் என்பது …………. கட்சிகள் கடந்து இன்றைய அரசியல் கட்சிகளில் பொதுவாகக் காணப்படும் விஷயமாகி விட்டது.

  1. மக்களின் உடனடித் தேவைகள், ஊழல் ஒழிப்பு போன்ற மக்கள் அவதியுறும் அன்றாட அவலங்கள் பற்றிய ப்ரசாரம் :-

  நாட்டின் நீண்ட கால உன்னதியை விரும்பும் எந்த ஒரு அரசாங்கமும் குறுகிய காலத் திட்டங்களைத் தவிர நீண்ட தொலை நோக்குத் திட்டங்களையும் பரிசீலனை செய்து அவற்றை அமல் படுத்துவதற்கு முயற்சிசெய்யும். செய்ய வேண்டும்.  மோதி சர்க்கார் பதவியேற்ற பின்னர் அப்படிப்பட்ட பல திட்டங்களை அரசாங்கம் தீட்டி வருகிறது. அதன் பயன்கள் தெரிய வருவதற்குக் கூட…….. மக்களை அவை சென்றடைவதற்கு….. இன்னம் ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷம் பிடிக்கும் என அறிஞர்கள் மற்றும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.  ஆனால் மக்களுடைய அன்றாட வாழ்வில் அவர்களுக்கு பயனளிக்க வல்ல குறுகிய கால திட்டங்களைப் பற்றியும் மத்ய சர்க்கார் பரிசீலனை செய்ய வேண்டியது அவற்றை வெற்றிகரமாக அமல் படுத்த வேண்டியதும் மிக அவச்யம்.

  பாஜக ஆட்சி செய்யும் மாகாணங்களான மத்யப்ரதேசம், சத்தீஸ்கர், கோவா, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில்… ஊழல் ஒழிப்பு மற்றும் மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்யமானவையான பிஜ்லி, சடக், பானி என்று சொல்லப்படும் மின்சாரம், சாலை அமைப்பு, தண்ணீர் போன்ற வசதிகளை மக்களுக்கு அளிப்பதில்……… இந்த அரசுகள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த அரசாங்கங்களின் செயல்பாடுகளில் மக்கள் பெருமளவு பயனடைந்துமிருக்கிறார்கள். ஆதலாலேயே இந்த அரசுகளை மக்கள் தொடர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

  இது போன்ற மக்களின் அன்றாட ப்ரச்சினைகள் தில்லி தேர்தல் ப்ரசாரத்தில் பாஜக தரப்பிலிருந்து உரக்க எழுப்பப் படவில்லை. மாறாக ஆப்புக்கட்சியின் தரப்பிலிருந்து தாங்களே இவற்றை தீர்க்க வல்ல மஸீஹாக்கள் என்றபடிக்கு ஒரு சித்திரம் மக்கள் முன் வைக்கப்பட்டது. அது மக்களை பெருமளவு கவரவும் செய்தது.

  உண்மை பாதி உண்மை போன்று காட்சியளிக்கும் பொய் பாதி போன்ற காரணிகளைப் பார்ப்போம். 

  லவ் ஜிஹாத், கர்வாப்ஸி, த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற இடங்களில் நிகழ்ந்த கலவரங்கள் :-

  மாற்று மதத்தினர்களின் அன்னிய தேசத்துப் பிச்சைப்பணத்தில் நிகழ்ந்த……… நிகழ்ந்து வரும்………. சமூஹ விரோதச் செயல்பாடுகள் பற்றிய சரியான ப்ரசாரம் ஹிந்துத்வத் தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை.

  வெவ்வேறு மதத்தினரிடையே திருமண உறவுகள் என்பது ஹிந்துத்வ இயக்கத்தினரிடம் இல்லாத ஒரு முறைமைப்பாடு இல்லை.  ஸ்ரீமான் சையத் ஷா நவாஸ் ஹுஸைன் அவர்களுடைய தர்மபத்னி ஹிந்து.  நம் அன்பு சஹோதரர் ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்களுடைய தர்மபத்னி க்றைஸ்தவர்.  ஹிந்துத்வ இயக்கங்களின் செயல்வீரர்களிடையே மதங்கள் கடந்த திருமண உறவு என்பது புதிதும் இல்லை அவற்றுக்கு இயக்க ரீதியாக என்றும் எதிர்ப்பும் இருந்ததில்லை.

  ஆனால்…………… ஆனால்……….

  இஸ்லாமிய மதத்தவர் இளம் ஹிந்துப்பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ………. பித்தலாட்ட முறைமைகள் சார்ந்து………திருமணத்துக்கு முன்னரோ திருமணத்துக்குப் பின்னரோ மதமாற்ற விழையும் பயங்கரவாதமான செயற்பாட்டை லவ் ஜிஹாத் என்று பெயரில் ஹிந்துத்வ இயக்கத்தினர் எதிர்க்க முனைந்தனர்.  மனசாட்சியுள்ள மனிதத்தன்மையுள்ள நேர்மையாளர் எவரும் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் இந்த அக்ரமத்தை நிச்சயம் எதிர்க்கவே செய்வர்.

  ஆனால் ஹிந்துத்வ இயக்கங்களின் தரப்பிலிருந்து இந்தக் கொடுமையை எதிர்க்க முனைந்தவர்களும் சரி இஸ்லாமிய சஹோதரர்களின் தரப்பிலிருந்து வெகுண்டெழுந்தவர்களும் சரி………. எதிர்க்கப்படுவது திருமணம் என்ற பெயரில் பித்தலாட்ட முறைமை  சார்ந்த மதமாற்றமே என்ற தெளிவில்லாது…….. எதிர்க்கப்படுவது மதங்கள் கடந்த திருமண உறவுகள் என்றே இந்த ப்ரச்சினை கையாளப்பட்டமை மிகவும் துரத்ருஷ்டவசமானது.

  இதே போன்றே கர் வாப்ஸி நிகழ்வுகளும்.  ஒரு புறம் ஹிந்துஸ்தானமுழுதும் பித்தலாட்ட முறைமைகளின் பாற்பட்டு மட்டிலும் லக்ஷக்கணக்கில் கடந்த சில நூற்றாண்டுகளாக மதமாற்றங்களை நிகழ்த்திவரும் க்றைஸ்தவ மிஷ நரிகள்……… இவர்களோடு பித்தலாட்ட முறைமைகளில் மதமாற்றம் செய்ய ……போட்டிக்குப் போட்டியாக கடந்த சில ஆண்டுகளாக களத்தில் இறங்கியுள்ள ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்.

  இவர்களுடைய மதமாற்ற நடவடிக்கைகள் அனைத்தும் பித்தலாட்டமில்லாதது போன்றும் ஹிந்துக்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படும் கர்வாப்ஸி நிகழ்வுகள் மட்டிலும் முழுக்க முழுக்க பித்தலாட்ட முறைமைகள் போன்றதாகவும்…….. தொலைக்காட்சி ஊடகங்கள்……. தினசரி இரவுக்காட்சிகளாக ஒளிபரப்பப்படும் விவாதக்களங்கள்…….. என்ற பெயரில்……… அரங்கேறும் கூச்சல் சந்தைகளில்  முன்வைத்தன.

  Times Now, Headlines Today, CNN IBN மற்றும் NDTV போன்ற ஊடகங்களில் கொட்டப்படும் பரங்கிப்பணம் எவ்வளவு என்பது உலகமறிந்ததே. இந்த ஊடகங்களில் ஹிந்துப்பெயர்களில் இயங்கி வரும் க்ரிப்டோ க்றைஸ்தவர்களையும் உலகம் அறியும். ஆனால் இந்த கட்டுக்கடங்கா அன்னிய கைக்கூலி சக்திகளை அடக்குவதில் முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசு எப்படி வெற்றி பெறவில்லையோ ………… அதே கதை இப்போதும் தொடர்கிறது. மோதி சர்க்கார் ஆட்சி துவங்கிய ஆரம்பத்தில் இந்த சக்திகள் வாலறுபட்டது போல் தோன்றினாலும் ………….. பரங்கிப்பண சுகத்தை அனுபவித்து வரும் இந்த சக்திகளின் கூச்ச நாச்சமில்லாத தேச த்ரோஹமும் சமூஹ விரோதச் செயல்பாடுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

  ஒருபுறம் பாஜக, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் மற்றும் விச்வஹிந்துபரிஷத், ஆங்காங்குள்ள சங்க பரிவார இயக்கங்களான ஹிந்து முன்னணி போன்ற இயக்கங்களிடையே ஒருங்கிணைந்து செயல்படும் பாங்கில்   பின்னடைவு……..

  மறுபுறம்………. சங்க பரிவாரத்துக்கு வெளியேயான ஹிந்துமஹாசபை, ராம்சேனே போன்ற அதி தீவ்ரவாத ஹிந்து இயக்கங்களின்…………. காந்தியடிகளைக் கொன்ற ஸ்ரீ நாதுராம் கோட்சே அவர்களுக்கு சிலை வைத்தல், கோவில் கட்டுதல் போன்ற பரபரப்பு சார்ந்த ………… முகம் சுளிக்க வைக்கத்தக்க செயற்பாடுகள்……

  என்ற குழப்பநிலைகளுக்கிடையே ……….

  ஒட்டு மொத்த சமூஹத்துக்கும் தீங்கிழைக்கக்கூடிய ………. மதமாற்றத்தை பின்னணியில் கொண்ட பித்தலாட்ட க்றைஸ்தவ செயல்பாடுகள் மற்றும் பித்தலாட்ட மதமாற்றத்தையும், பயங்கரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட வஹாபிய செயற்பாடுகள் ……….  தேசத்திலும் சமூஹ ஒற்றுமையிலும் அக்கறை உள்ள அனைத்து ஹிந்துக்கள், இஸ்லாமியர் மற்றும் க்றைஸ்தவர்களால் எதிர்க்கபடவொண்ணாது ………..

  பரங்கிப்பணத்தில்………… தொலைக்காட்சிகளில் விவாதக்களம் என்ற போர்வையில்……… கேளிக்கை போன்றும்…….. கூச்சல் சந்தை போலும்……… அன்றாடம் தொடரும் அவலம்………..தேச விரோத சக்திகள், பிரிவினை வாத சக்திகள், இடதுசாரி நக்ஸல்பாரி பயங்கரவாத மதவெறி சக்திகள், முற்போக்கு மாஃபியா, பித்தலாட்ட மிஷ நரி சக்திகள், பயங்கரவாத வஹாபிய சக்திகள் போன்றவை கைகோர்த்து அரங்கேறி வருகிறது.

  தில்லியில் 1984 கலவரத்துக்குப் பிறகு பெருமளவில் எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் எதிராக கலஹம் ஏதும் நிகழ்ந்ததில்லை.  ஆனால் தேர்தலுக்கு சற்றுமுன் த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற பகுதிகளில் இஸ்லாமிய சஹோதரர்களின் மொஹர்ரம் பண்டிகைக்கு முன் ஏற்பட்ட மதப்பதற்றம்……… நிர்வாகத்தினரால் வெகு விரைவாக கட்டுக்குள் கொணரப்பட்டது.  ஆனால் இப்படி ஒரு பதற்றம் நிகழும் வரை நிர்வாகம் செயல்படாமல் இருந்தது……. இது போன்ற பதட்டங்கள் வராமல் முன்னடவடிக்கை எடுக்க முடியாமற் போனது……….நிர்வாகத்தின் மீது பொதுமக்களிடம் அத்ருப்தி கொள்ளச் செய்தது.

  இந்த ஒரு பின்னணியில்………… சங்க பரிவாரம் மற்றும் பாஜக தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் எல்லா சமயங்களையும் மதங்களையும் மதிக்கும் ஆதர்ச கோட்பாடான ஹிந்துத்வம் எடுபடாமல்………… ஆப்புக்கட்சியாகப்பட்டது காங்க்ரஸ் கட்சி போலல்லாமல் மிக ஜாக்ரதையாக முன்வைத்த போலி மதசார்பின்மை பளிச்சென எடுபட்டு விட்டது.

  love-jihadலவ் ஜிஹாத்துக்கு எதிர்ப்பு, கர் வாப்ஸிக்கு ஆதரவு போன்ற செயல்பாடுகள் ஹிந்துத்வ சக்திகளால் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் போன்ற ஸ்தாபனங்கள் மூலமாக ஸ்தாபன ரீதியாக கருத்தாக்கம் சார்ந்து வலுவாக விவாதிக்கப்பட்டு இருந்திருந்தால்…………. இஸ்லாமிய சஹோதரர்கள் பாஜக மற்றும் சங்க பரிவாரத் தரப்பிலிருந்து முன்வைத்த…….. அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஹிந்துத்வக் கோட்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு ……… பாஜகவுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்திருப்பர்.

  நடந்து முடிந்த தேர்தலில் கூட தில்லி வாழ் முஸ்லீம் சஹோதரர்கள் ஆப்புக்கட்சிக்கு அளித்த ஆதரவு என்பது பெருமளவில் மதம் சார்ந்தது என்ற படிக்கு பார்க்க முடியவில்லை.  அது பெருமளவு ஆப்புக்கட்சியின் கவர்ச்சி இலவச ப்ரசாரம் சார்ந்தது என்றே கொள்ள முடியும். இந்த அலகீட்டின் படி இந்த ப்ரச்சினைகள் வாக்குகள் இழப்புக்குக் காரணமில்லை என்று ஒரு கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது.

  ஆயினும் மத ரீதியாக கணிசமான இஸ்லாமிய சஹோதரர்கள் பாஜக தரப்பிலிருந்து விலக நேர்ந்ததையும் புறக்கணிக்க முடியாது. இதற்குக் காரணம் ஹிந்துத்வ இயக்கங்கள் எடுத்த நிலைப்பாடுகள் அல்ல. மாறாக அந்த நிலைப்பாடுகளை தெள்ளெனத் தெளிவாக மாற்று மத சஹோதரர்களுடன் பகிரமுடியாத செயல்பாடே என்பதே கவனிக்கப்பட வேண்டிய தத்யம். இந்த அலகீட்டின் படி இந்த ப்ரச்சினைகள் வாக்குகள் இழப்பிற்கு மறைமுக காரணம் என்பதை ஒதுக்கவும் முடியாது.

  தோல்வியுடன் சம்பந்தப்படாத கொசுக்கடிக் காரணிகள் :-

  1. தில்லி தேர்தலில் கடந்த சில ஆண்டுகளாகவே வாக்குகள் ஜாதி அடிப்படையில் அளிக்கப்பட்டதில்லை.சேகரிக்கப்பட்டதும் இல்லை. ஜாதி என்ற படிக்கில்லாது வர்க்கம் என்ற படிக்கான பிரிவு என்றும் தில்லியில் உண்டு. தனவான்கள் வசிக்கும் பகுதிகள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகள் என்று பிரிவு உண்டு.  ஆகவே ஜாட் ஓட்டு, பிற்படுத்தப்பட்டோர் ஓட்டு, மேல் ஜாதி ஓட்டு போன்ற படிக்கான ஜாதி அரசியல் தில்லி அரசியலில் இல்லை.  ஆனால் ஜாதி அரசியலுக்கு வெளியே அரசியல் என்ற செயற்பாட்டையே அறியாத திரியாவரங்கள்…….. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற கணக்கில் தில்லித் தேர்தல் வெற்றி தோல்வியில் ஜாதிக்காழ்ப்பரசியலை ஒரு காரணியாக்க முனைந்தனர். ஆனால் அதில் சாரமில்லை என்பதனை தில்லி அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர் அனைவரும் அறிவர்.
  1. தேர்தல் ப்ரசாரத்தில் *உபத்ரவி கோத்ர* மற்றும் *North Eastern Immigrants* ……….. போன்ற குழப்பச் சொல்லாடல்கள் பாஜக தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட ஒழுங்கற்ற……. தேர்தல் ப்ரசார யுக்தியில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய சொல்லாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. அரசியல் அரங்கில் உத்தரபாரதத்தில் தன்வசம் பெருமளவில் தேர்ந்த பேச்சாளர்களை மொழியறிஞர்களை தன் வசம் கொண்ட பாஜக தரப்பிலிருந்து இப்படிப்பட்ட சொல்லாடல்கள் யாருக்கும் வியப்பைத் தரும். மிக அதிக பக்ஷமாக இது போன்ற சொல்லாடல்கள் பாஜக தரப்பினரை பெருமளவில் முகம் சுளிக்க வைத்தன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மேலும் அதே சமயம் இந்த அபத்தமான சொல்லாடல்கள் பாஜகவின் எதிர்த் தரப்பினருக்கு தொலைக்காட்சி கூச்சல்சந்தைகளில் கூச்சல் போட வாய்ப்பளித்தன. ஆனால் வாக்கிழப்புக்கு காரணியல்ல.
  1. தேர்தல் வாக்குறுதி பத்ரம் — Manifesto ……… ஆப்புக்கட்சியனர் 70 அம்சங்கள் அடங்கிய கவர்ச்சிகரமான இலவச திட்டங்களடங்கிய தங்கள் வாக்குறுதி பத்ரத்தை சரியான சமயத்தில் முன்வைத்தனர். பாஜக தரப்புக்கு வாக்குறுதி பத்ரம் என்ற சொல்லாடலில் என்ன அலர்ஜி என்று தெரியவில்லை. Vision Document ….. என்ற ஆவணத்தை மக்கள் முன் வைத்தனர்.  பொதுமக்களைப் பொறுத்தவரை இவையெல்லாம் சடங்கு சம்ப்ரதாயங்களே.  விஷயமெல்லாம் சாதுர்யமாக….. ஸ்தாபன ரீதியாக….. தனிநபர் ரீதியிலான வெகுஜன தொடர்பு எந்த அளவுக்கு வெற்றிகரமாக எந்தக் கட்சியால் நடத்தப்பட்டது என்பதே.  பின்னிட்டும் பாஜக காலதாமதமாக வாக்குறுதிகளை அளித்தது போதாது என்றில்லாது அதன் நாமகரணத்தை வேறு சொதப்பித்தள்ளியது கட்சியின் குழப்ப நிலையை மக்களின் முன் வத்தது என்றே சொல்லலாம்.  ஆயினும் இந்த சடங்கு சம்ப்ரதாயம்  கூட வாக்கிழப்புக்கு காரணி என்று சொல்ல முடியாது.

  பாஜக மற்றும் ஹிந்துத்வ இயக்கத்தவர்கள் பெற வேண்டிய பாடங்கள் :-

  1. மிக உறுதியான மற்றும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டிய வெகு ஜன தொடர்பு. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தரப்பிலிருந்து இந்த செயல்பாடு துவக்க காலத்திலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக பேணப்படும் ஒரு அம்சம். பாஜக தரப்பிலிருந்து இந்த செயல்பாடு அவ்வப்போது அழுத்தம் திருத்தமாக பேணப்படுகிறது. அவ்வப்போது கைவிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் தொய்வு இருப்பது கட்சியை பாதிக்கும் என்பதனை பாஜக உணர்வதற்கு தில்லித் தேர்தல்கள் ஒரு முக்ய பாடம்.
  1. Idle Mind is devil’s workshop என்பது ப்ரஸித்தமான ஆங்க்ல வசனம். பாஜக தரப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களை கட்சி எந்த அளவுக்கு உபயோகித்து வருகிறது என்பது கேழ்விக்குறியாக இருக்கிறது.  ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்கள் திறமை வாய்ந்த அரசு அதிகாரிகளை முழுமையாக உபயோகித்து வருகிறார் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் திறமை வாய்ந்த எம்பிக்களின் திறமைகள் முழுதும் கட்சியால் உபயோகத்துக்குள்ளாகிறதா என்று சம்சயம் வருகிறது. டாக்டர் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி, ஸ்ரீ ராம்ஜெத்மலானி, ஸ்ரீ அருண் ஷோரி ஸ்ரீமதி மீனாக்ஷி லேகி, உபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி (பெயர் நினைவிலில்லை) திறமை வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஸ்ரீ உதித்ராஜ் போன்றோர்களின் கல்வி மற்றும் பணி அனுபவங்களை கட்சி மற்றும் அரசாங்கம் முழுமையாக நுகர்தல் மிகவும் அவச்யம்.  முகம் சுளிக்க வைக்கும் மற்றும் அதீத அடிப்படைவாதம் சார்ந்த சில கருத்துக்களை அவ்வப்போது ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி போன்றோர் தெரிவித்தாலும் ………. நாட்டில் தனியொரு மனிதராக…….. ஊழல் பெருச்சாளிகளான த்ராவிட ஊழல் கழகக் கும்பினியார்களை (இரு தரப்பினரையும்) ந்யாயாலயத்துக்கு இழுத்து பலரை காராக்ருஹத்துக்கு அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.  இதில் இன்னமும் ஒரு படி முன்னகர்ந்து இத்தாலி ராஜமாதா ஸ்ரீமதி சோனியாகாந்தி அம்மையார் மற்றம் அவரது புத்ர ரத்னமான ஸ்ரீ ராஹுல் காந்தி என்ற தாய் தனயர்களை ஜோடியாக நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிக்க வைத்த பெருமையும் இவரைச் சாரும். ஆனால் இந்த வழக்கு ஏன் விரைவாக முன்னேறாது தொய்வாக நத்தையாக நகர்கிறது என்பது மர்மமாக இருக்கிறது. இது போன்றே தேர்தல் சமயத்தில் ராஜமாதாவின் மருமகப்பிள்ளையான  ஸ்ரீமான் ராபர்ட் வத்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். பொதுமக்கள் இவற்றின் மீது விரைவான விசாரணை எதிர்பார்க்கிறார்கள். ஒன்று இவர் குற்றமிழைத்திருந்தால் அவை நிரூபணம் செய்யப்பட்டு குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.  குற்றமில்லையென்றால் இவர் மீது குற்றம் சாட்டிய அரசியல் கட்சிகள் பொதுதளத்தில் பொய்யான குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைத்ததற்கு மன்னிப்பு கேழ்க்க வேண்டும். ஹிந்துத்வ இயக்கங்களைச் சார்ந்த ……………. ந்யாயாலய அனுபவம் உள்ள எம்பிக்களின் சேவையை கட்சி முழுமயாக உபயோகிக்கவில்லையா என்ற சம்சயம் வருகிறது.  இது விரைவில் சரிசெய்யப்பட வேண்டும். இது போன்றே வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப்பணம் விரைவில் ஹிந்துஸ்தான பொக்கிஷத்தைச் சேர்வதற்கான முஸ்தீபுகள் சர்க்கார் தரப்பிலிருந்து செய்யப்பட வேண்டியமை. இதுவும் பொதுமக்களாலும் மாற்றுக்கட்சியினராலும் தொடர்ந்து எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டு வரும் விஷயம்.
  1. கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்களுக்கும் கட்சியின் தரப்பிலிருந்து அவர்கள் திறமை சார்ந்த பணிகளை…….. இலக்குகளை நிர்ணயம் செய்து கட்சி அளிக்க வேண்டும். அதில் தனிநபர்கள் செயல்பாட்டு வெற்றிகளை அடையும் போது கட்சியின் தரப்பிலிருந்து வெகுமானம் செய்வதும் வேண்டும்.  அப்படி செய்யப்பட்டிருந்தால் மைக்கோஃபோபியா வ்யாதியால் பீடிக்கப்பட்டு கருத்துக்கந்தசாமிகளாக கட்சியின் பல எம்பிக்கள் loose canon என்ற படிக்கு அவ்வப்போது மனம்போன போக்கில் கருத்துதிர்ப்பதே தங்கள் வேலை என்று செயல்பட்டிருக்க மாட்டார்கள். பழைய அனுபவஸ்தர்களான ஸ்ரீ லால் க்ருஷ்ண அத்வானி ஸ்ரீ முரளி மனோஹர் ஜோஷி போன்றோரின் அனுபவங்களை அவர்கள் மனதுவக்கும் படிக்கு அரசாங்கம் அவ்வப்போது நிச்சயம் நுகர்தலும் அதை அவர்கள் போன்றோர் உணர்தலும் மிக அவச்யம்.
  1. சங்கத்தின் தரப்பிலிருந்து துவக்கப்பட்ட பெரும் மத நல்லிணக்க முயற்சி முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச். இந்த ஸ்தாபனத்தின் வாயிலாக தேசப்பற்றுள்ள………. பண்பாட்டுப்பற்றுள்ள……. ஹிந்து சஹோதரர்களுன் கைகோர்த்து தேச உன்னதிக்குப்பாடுபட விழையும் நமது இஸ்லாமிய சஹோதரர்களுடன் ஒரு தொடர்ச்சியான சம்வாதத்துக்கு வழி செய்யப்பட்டது. இந்த சம்வாதத்துக்கு வழிவகுத்தவர் மானனீய ஸ்ரீ சுதர்சன் ஜீ அவர்கள். மானனீய ஸ்ரீ இந்த்ரேஷ் குமார் ஜீ அவர்களால் இந்த சம்வாதம் தொடர்ந்து மேலெடுக்கப்பட்டது. இது உறுதியாக முன்னகர வேண்டும்.  அப்படிப்பட்ட ஒரு செயற்பாடு வலுவான ஒரு பாரதம் அமைய ஹேதுவாகும்.
  1. க்றைஸ்தவ சஹோதரர்களுடனான சம்வாதம் முழு ஹிந்துஸ்தானத்திலும் தமிழகத்திலிருந்தே……….. ஹிந்துத்வத் தரப்பில் இருந்து ஹிந்துத்வ செயல்வீரர்களால் தொடங்கப்பட்டது என்றே எண்ண வாய்ப்பிருக்கிறது. கேரளத்தில் கூட ஏழை க்றைஸ்தவர்களின் அமைப்பில் அத்யக்ஷகராக இருக்கும் ஸ்ரீமான் ஃப்ரான்ஸிஸ் என்ற அன்பர் நிறுவன சர்ச் எடுக்கும் அரசியல் ரீதியிலான போலி மதசார்பின்மையின் பாற்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஏழை க்றைஸ்தவர்களின் முன்னேற்றத்தில் ரோமன் கத்தோலிக்க சர்ச் அமைப்பினர் ஈடுபடாததையும் சாடியது மற்ற ஹிந்துத்வ இணையதளங்களில் வாசிக்கக் கிட்டியது. இது போன்ற க்றைஸ்தவ சஹோதரர்களுடனான தொடர்ந்த சம்வாதம் வலுவான பாரதம் அமைய மிகவும் தேவை.

  அதே சமயம் இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ மதங்களின் தரப்பிலிருந்து போலி மதசார்பின்மையை முன்னிறுத்தி செய்யப்படும்………….. மதமாற்றம், லவ் ஜிஹாத், பயங்கரவாத நடவடிக்கைகள் போன்ற  சமூஹ விரோதச் செயல்பாடுகளை ………..  முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் மற்றும் தேச மற்றும் மத ஒற்றுமையில் நாட்டமுள்ள க்றைஸ்தவ ஸ்தாபன சஹோதரர்களுடன் …………… தொடர்ந்து விவாதிக்க வேண்டும்.  இவற்றை தடுக்க அல்லது குறைந்த பக்ஷம் பெருமளவு தடுக்க ஹிந்துத்வ இயக்கங்களின் தரப்பிலிருந்து முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

  1. தோழமைக் கட்சிகளுடனான உறவு பலப்படுத்தப்பட வேண்டும். புதிய தோழமைக் கட்சிகளை தேசிய ஜனநாயக முன்னணியில் சேர்க்க வேண்டும். பாஜக தரப்பிலிருந்து ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி மற்றும் ஸ்ரீ அமீத் ஷா போன்ற தலைவர்கள் தோழமைக் கட்சிகளுடனான உறவில் அளவு கடந்த பொறுமையையும் நிதானத்தையும் காண்பித்து தோழமையை காக்க தங்கள் தரப்பிலிருந்து முனைவது தெரிகிறது. அவ்வப்போது தோன்றும் வேறுபாடுகளை முனைந்து களைதல் கூட மிகவும் அவச்யம்.
  1. பாஜக ஆளும் மாகாணங்களில் ஊழல் ஒழிப்பு, citizen charter என்று சொல்லப்படும் காலக்கெடுவில் செய்யப்படும் அரசாங்கப் பணிகள், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிஜ்லி, சடக், பானி காரணிகளில் அரசாங்கத்தின் குறுகிய காலச் செயல்பாடுகள் எந்த அளவு மக்களை சென்றடைந்தன என்ற விபரங்களை ஒவ்வொரு காலாண்டும் கட்சி ஆராய்ந்து அதை மக்கள் முன் வைப்பதும் ………. வெகு ஜன மக்கள் தொடர்பின் மூலம் கட்சியின் தரப்பிலிருந்து மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்களில் அவர்கள் த்ருப்தியுருகிறார்களா என்ற ஃபீட்பேக் பெறுதலும் மிக அவச்யம்.
  1. Amitshahபாஜக ஆட்சியில் இல்லாத மாகாணங்களில் ஸ்ரீ அமீத் ஷா அவர்கள் கட்சியை நிறுவுவதற்கு அயராது திட்டம் தீட்டி பணியாற்றி வருகிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம், விச்வ ஹிந்து பரிஷத் போன்ற சங்கபரிவார இயக்கங்கள் இங்கெல்லாம் தொடர்ந்து விரிவான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தரப்பிலிருந்தும் சங்க பரிவார இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து இப்பகுதிகளில் பணியாற்றப்பட்டால் கட்சியின் வெகு ஜன மக்கள் தொடர்பு விரைவாக முன்னேறும்.
  1. ஊடகம் என்ற பெயரில் அன்னியக்கைக்கூலிகளாகவும் பரங்கிய க்றைஸ்தவ தேவாலயத்தின் முகமூடியாகவும் இயங்கிவரும் தேச விரோத சக்திகளை சங்கபரிவாரம் அடக்கியாள்வது மிக அவச்யம். இறையருளால் சமூஹ ஊடகம் என்ற இணையத்தொடர்பினால் தொலைக்காட்சி மற்றும் சஞ்சிகைகள் போன்ற வெகுஜன ஊடகங்களின் டம்பாச்சாரித்தனத்தையும் இவர்களது ஊழல் போக்குகளையும் ஹிந்துத்வத் தரப்பினர் அவ்வப்போது தோலுறித்து வருகின்றனர். ஆனால் அரசியல் வாதிகள் செய்யும் ஊழல்கள் ந்யாயாலயங்களில் வழக்காடப்படுவதைப் போன்று ஊடக் மாஃபியாக்கள் மற்றும் தாதாக்கள் செய்யும் ஊழல்கள் மற்றும் இவர்களது சமூஹ விரோத நடவடிக்கைகள் இதுவரை வழக்காடப்படாதது மாற வேண்டும். ஊழல் அரசியல் வாதிகள் காராக்ருஹம் செல்லலாம் என்றால் ஊழல் ஊடக மாஃபியாக்கள் மட்டிலும் சுகபோகங்களை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மட்டும் இல்லாமல் ஏன் தொடர்ந்து அனுபவித்து வர வேண்டும் என்று படித்த பொதுமக்கள் மத்தியில் கேழ்விகள் எழுகின்றன. பல ஊடகவியலாளர்கள் மீது பொதுதளத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இது வரை ஒன்றாவது ந்யாயாலயப்படிக்கட்டு ஏறியுள்ளதா என்பது கேழ்விக்குறியதே.
  1. ஊடகங்களில் விவாதக்களம் என்ற கூச்சல் சந்தையில் பாஜக தரப்பிலிருந்து பங்கு பெறும் பல தொலைக்காட்சி முகங்களை தொடர்ந்து பரிசீலனை செய்து தொய்வான வாதங்களில் ஈடுபடும் அன்பர்களை வேறு பணிக்கு மாற்றி அதில் திறமையுள்ள முகங்களை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக ஸ்ரீமதி மீனாக்ஷி லேகி போன்ற அன்பர்கள் இப்பணியில் வெற்றிகரமாக முன்னர் செயல்பட்டு வந்தமையைத் தொடர்தல் கட்சிக்கு மேன்மை சேர்க்கும்.
  1. என். ஜி. ஓ என்ற பணம் காய்ச்சி மரத்தைப் பற்றி ஹிந்துஸ்தானத்தின் ந்யாயாலயங்களே தொடர்ந்து பெரும் கேழ்விகள் எழுப்பி வருகின்றன. என். ஜி. ஓ என்ற இந்த பணம் காய்ச்சி மரத்துக்கும் அன்னியப் பணத்தில் இயங்கும் ஹிந்துஸ்தானத்தின் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கிடையே உள்ள சதிப்பின்னல் வலை தேச ஒற்றுமைக்கும் மத ஒற்றுமைக்கும் எந்த அளவு குந்தகம் விளைவிக்கிறது………… எந்த அளவு போலி மதசார்பின்மைக்கு ஊக்கம் அளிக்கிறது………. எந்த அளவுக்கு தேச விரோத மற்றும் பிரிவினை வாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கிறது என்பது தேச ஒற்றுமையில் மற்றும் மத ஒற்றுமையில் நாட்டம் உள்ள அனைவரும் அறிந்துள்ள விஷயம். சர்க்கார் தரப்பிலிருந்து இந்த இயக்கங்களை கட்டுப்படுத்தும் முயற்சி விரைவில் எடுக்கப்பட வேண்டும்.  மட்டில்லாத ஊழலில் திளைக்கும் இந்த ஸ்தாபனங்களின் கணக்கு வழக்குகள் சி.ஏ.ஜி தணிக்கைக்கு கால இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தணிக்கை ரிபோர்ட் பொதுமக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.  இதே போன்றே மைனாரிட்டி ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் ரெவ ரெண்டு புனித தெரசாள் ஸ்தாபனம் போன்ற ஸ்தாபனங்களின் கணக்கு வழக்குகளும் தணிக்கை செய்யப்பட்டு பொதுமக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.  இவர்களின் வரவு செலவுகள் ………… எக்காரணங்களுக்காக இந்த ஸ்தாபனங்களின் பணம் செலவிடப்பட்டுள்ளது. அவற்றில் தேச விரோத நடவடிக்கைகள் சமூஹ அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்காக எந்த அளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பது பொது மக்கள் முன்வைக்கப்பட வேண்டும்
  1. அடுத்த தலைமுறை தலைவர்களை கட்சி பயிற்றுவிப்பது அவச்யம். சங்க பரிவார இயக்கங்களில் தலைமுறை இடைவெளி கிடையாது. பாஜகவில் இதுவரை இல்லை. எதிர்காலத்திலும் இந்த இடைவெளி இல்லாமல் அடுத்த தலைமுறை இளைஞர்களை கட்சி சித்தாந்தங்களிலும் கட்சிப்பணியிலும் பயிற்சி அளிக்கும் பாங்கு தொடர வேண்டும்.

  போலி மதசார்பின்மைக்கு எதிரான உரத்த பொது விவாதம் மற்றும் உறுதியான ஊழலற்ற தொலைநோக்கு சார்ந்த ஆட்சிமுறைமை தேசமளாவிய தொழில் மற்றும் சேவைத்துறை அபிவ்ருத்தி………என்ற ஆதர்சங்களை அரசியல் விவாதங்களில் முன்வைத்ததன் மூலம் பாஜகவும் அதே போன்றே ஊழலற்ற அரசாட்சி மற்றும் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிஜ்லி சடக் பானி போன்ற விஷயங்களை அரசியல் விவாதங்களில் முன்வைத்ததன் மூலம் ஆப்புக்கட்சியும் ………….. ஹிந்துஸ்தானத்தில் அரசியல் களத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்படும் விஷயங்களில் பெரும் முன்னகர்வை ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையாகாது.

  இவற்றிற்கு எதிராக வாரிசு வாதம், உளுத்துப்போன ஜாதிய வாதம், போலி மதசார்பின்மை, சோஷலிஸம் போன்ற கருத்தாக்கங்கள்………… பொது மக்களால் வெற்று கோஷங்களாகவே அரசியல் அரங்கில் எதிர் கொள்ளப்படுகிறது.

  வெற்று கோஷங்களிலிருந்து அரசியல் விவாதம் மக்களது அன்றாட ப்ரச்சினைகள் சார்ந்தும் தொழில் அபிவ்ருத்தி சார்ந்தும் உண்மையான மத நல்லிணக்கம் சார்ந்தும் தேசத்தின் இறையாண்மை தேச ஒற்றுமை போன்ற ஆதர்சங்கள் பாலும் நகர்த்தப்படுவது தேசத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் செய்கிறது.  பெரும் கனவுகளை தேசமளாவி பாஜகவும் தில்லி நகரத்திற்காக ஆப்புக்கட்சியும் முன்வைத்துள்ளன.  இவர்களது பெரும் கனவுகளில் சிலப்பல அம்சங்களாவது வெற்றி பெறுவது……. மக்கள் அரசியல் கட்சிகளின் மீது வைக்கும் நம்பிக்கையை பலப்படுத்தும்.  அது பலப்படவும் வேண்டும்.

  வந்தே மாதரம். பாரத் மாதா கீ ஜெய்.

  அனுபந்தம் :-

  https://www.rediff.com/news/column/ls-election-sheela-says-modi-is-the-hero-mobile-phone-is-the-heroine-in-up/20140422.htm –  Ms.Sheela Bhat

  https://indiafacts.co.in/debacle-delhi-beware-termites-around-mr-modi/ – Smt. Radha Rajan

  https://swarajyamag.com/politics/what-the-delhi-verdict-means/ – Sh.Swapandas Gupta

  https://organiser.org//Encyc/2015/2/14/Cover-Story–Landslide-Victory-Uphill-Task.aspx

  https://www.firstpost.com/india/aap-vs-bjp-proxy-fight-two-grand-narratives-india-2099149.html – Sh.Rajiv Malhotra

  https://www.firstpost.com/politics/paanch-saal-sisodia-heres-what-arvind-kejriwals-real-gameplan-may-be-2099789.html – Sh.Jagannathan

  10 Replies to “தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்”

  1. திரு. கிருஷ்ண குமார்….

   மொத்தம் 12 பாய்ன்ட் அடுக்கி இருக்கீங்க .. அதுல 13ஆவதா இதையும் சேர்த்துக் கொள்ளவும். வாக்களித்த 90% அப்பாவி ஏழை நடுத்தர மக்களுக்கும் கொஞ்சம் விசுவாசமா நடந்துக்கணும்னு கொஞ்சம் அறிவுரை கூறினால் நன்றாக இருக்கும்.

  2. ஆப்பின் வெற்றி மிஷனரிகள், வல்லரசு வெள்ளைக் கிறிஸ்தவ நாட்டின் உளவுத்துறை, மாவோயிஸ்டுகள் இவர்களின் வெற்றியே. அடித்தட்டு மக்களிடம் பா ஜ கவுக்குத் தொடர்பில்லாதது ஒரு காரணம். நீண்டகாலத் திட்டங்கள் மூலமே ஏழை மக்கள் நிரந்தரப் பொருளாதார விடுதலை அடைய முடியும் என்பதையும் , இலவசங்கள் அவர்களைப் பிச்சைக்காரர்களாகவோ, நிரந்தர ஏழைகளாகவோதான் வைத்திருக்கும் என்பதைக் கூட மக்களுக்கு விளக்கக் தெரியாத,அல்லது விளக்க மனமில்லாத பா ஜ க தோல்வி அடைந்ததில் வியப்பில்லை.

   ஜன சங்கத்தை நிறுவிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி , பின்பு தலைமை ஏற்ற தீன் தயாள் உபத்யாய போன்றவர்கள் எதற்காக அக்கட்சியை ஆரம்பித்தனர் என்பதை அணுவளவும் அறியாத பலர் இன்று பா ஜ க வில் தலைவர்களாக இருப்பதும் மற்றொரு காரணம்.
   பா ஜ க ஒரு கட்சியல்ல; அது ஒரு இயக்கம் என்பதையும், அது தேச பக்தி, மக்கள் சேவை ,நாட்டின் பாதுகாப்பு, மக்களின் ஒற்றுமை , காங்கிரசின் ஹிந்து விரோத மற்றும் தேச விரோதப் போக்கிலிருந்து நாட்டைக் காப்பாற்றுதல் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டது என்பதையும் அவர்கள் உணரவில்லை. தமிழ் நாட்டிலிருந்து 300 மிஷ ‘நரிகள்’ ஆப்புக்குப் பிரச்சாரம் செய்யச் சென்றதாக ஒரு கூடுதல் தகவல்.

  3. எல்லாவற்றிக்கும் மூலகாரணம் அந்நிய சக்திகள் ஆதரவோடு செயல்படும் என்ஜிஒ மற்றும் அவர்களால் இயக்கப்படும் ஊடகங்கள். மற்றும் வேற்று நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறி நாடுமுழுவதும் விரவியுள்ள பல கோடி வேற்று மதத்தோர். ஆனால் இவற்றை முதல் வேலையாக கவனிக்கவேண்டிய மோடி அரசு, சும்மா கையை மட்டும் உயர்த்தி இளிச்ச வாயன் இந்துக்களுக்கு வெற்று அறிவுரை வழங்கி கொண்டிருக்கின்றார். உதயகுமார், அமர்த்தியா சென், கேஜ்ரிவால் போன்றோரின் பின்புலத்தை இந்நேரம் அம்பலபடுத்தியிருக்க வேண்டாமா? ஆட்சி அதிகாரம் எல்லாம் கையில் வந்த பின்பும் என்னதான் எதிர்பார்க்கிறார்? கேவலம் தனது தொகுதியிலேயே முகவரி இழந்த வைகோ போன்ற பிரிவினைவாதிகள் (இதில் மே 17 இயக்கம், வேல்முருகன், தீ.க. திருமாவளவன் போன்ற லேட்டர்பெடுகளும் அடக்கம்) கூட தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யும் அளவுக்கா நாம் உள்ளோம்? இதனை படிக்கும் பாஜக பொறுப்பாளர்கள் இத்தகைய விஷயங்களை சீர்தூக்கி பார்த்து, தலைமைக்கு கொண்டு சேர்த்தால் சரி. மற்றபடி தமிழக பாஜக குறை சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால் பாண்டிச்சேரி பாஜக, படு கேவலமாக நடந்துகொண்டிருக்கின்றது. தமிழ்நாடு போன்ற கட்சி பணி, பாண்டிச்சேரியில் நடந்தால், நிச்சயம் கௌரவமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை வரும் தேர்தலில் நாம் பெற இயலும். ஏனெனில் அங்கு மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராகவே உள்ளனர்.

  4. சில விஷயங்களை ப. ஜ.க புரிந்து கொள்ளவேன்றும்.

   1. பசியோடு இருக்கும் ஏழை. அவனுக்கு தொலை நோக்குத் திட்டங்களை விட அன்றைய உணவு முக்கியம். 9 மாதங்களில் நாம் ஒன்றுமே தொடங்க வில்லை.

   2. யதார்த்த உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசு அலுவலர்களுக்கு வேலை இலக்கு நிர்ணயிக்க வேண்டுமே தவிர வேலை நேரம் நிர்ணயிக்கக் கூடாது. தமிழ் நாட்டிலோ, குஜராத்திலோ காலை ஒன்பதரை மணிக்கு அலுவலகம் வந்து கார்ட் அடிக்கவேண்டும் என்றால் முடியும். டில்லியில் மூன்று மாதம் கடும் குளிர் மற்றும் பனி. 9 மணி வரை எதிரே என்ன இருக்கிறது என்றே தெரியாத கடும் பனி. விமானம், ரயில் ஏன் நடக்க கூட முடியாது. அப்போது அவர்களை ஒன்பதரைக்கு வர வில்லை என்றால் சம்பளம் இல்லை என்றால் என்ன செய்வார்கள். அதை விட பைல்களுக்கு கால அளவு நிர்ணயிக்கலாம்.
   3. ஹர்ஷா வரதன் போன்றவர்களுக்கு இன்று கட்சியில் முக்கியத்துவம் இல்லை.
   4. பெட்ரோல் விலை குறைந்தும் விலைவாசி குறையவில்லை.
   5. பிறரைக் குறை கூறுவதை விட நாம் என்ன தவறு செய்தோம் என்று அலசுவது முக்கியம்.

  5. மட்டில்லாத ஊழலில் திளைக்கும் all political party yum கணக்கு வழக்குகள் சி.ஏ.ஜி தணிக்கைக்கு கால இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தணிக்கை ரிபோர்ட் பொதுமக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.

  6. திரு க்ருஷ்ணகுமார்
   Budjet க்கு பின்பு நான் போதும் காமென்ட் இது. இங்கு honestman போல என்னுடிய BJP பாசத்தையும் மர்றிக்கொள்ளவேண்டிய தருணம் இது. கார்பொரேட் tax 25% , individual tax 30%.

   ஒரு வகையில் AAP இஸ் பெஸ்ட். குடிநீர், மின்சாரம் நடுத்தரமக்களுக்கு உடன நிறைவேர்ரிவிட்டார்கள்

  7. திரு பாண்டியன் சார். வணக்கம்
   நான் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் என் நினைப்பில் மண் விழுந்துவிட்டது.(1) உலக சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தபோது அதன் மீதான வரியை உயர்த்தினார்கள். உலக சந்தையில் பெட்ரோல் விலை அதிகரித்தபோது உடனே அதிகரிக்கிறார்கள்.(உயர்த்திய வரியை இப்போது குறைத்திருக்கலாமே!) (2) இது பெரு முதலாளிகளுக்குகான அரசு என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியபோது அதை நான் நம்பவில்லை. ஆனால் பட்ஜெட்டில் corporate tax னை 30% லிருந்து 25% ஆக குறைத்தபோதே அவர்களின் குற்றசாட்டு உண்மை என்று உறுதியாகவிட்டது. (3) தனி நபர் வருமான வரம்பை atleast Rs 50000 மாகிலும் உயர்த்தியிருந்தால் பரவாயில்லை. எதிர் கட்சியாக இருக்கும்போது ஒரு நாக்கு. ஆட்சிக்கு வரும்போது ஒரு நாக்கு. இவர்கள் என்ன பிறவிகள்? (4) நாளுக்கு நாள் பிஜேபி யின் base கரைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பிஜேபி தலைவர்
   (இவர் பேசாமல் மருத்துவ தொழிலை கவனிப்பது நல்லது) 2016ல் தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சி அமைக்கும் என்று அறிக்கை விடுகிறார். ஊராட்சியில் கூட பிஜேபி வராது. சேது சமுத்திரத்தை வேறு பாதையில் அமைப்போம் என்று நிட்கரின் கூறிவிட்டு சென்றார். அது பட்ஜெட்டில் பிரதிபலித்ததா? அதை நிறைவேற்றினால் தமிழகத்தில் பிஜேபி வளர வாய்ப்புள்ள்ளது. அதை செய்ய ம்த்திய அரசு விருப்பமில்லாதபோது திருமதி தமிழ்சை பெருத்த கனவு கண்டுவருகிறார். (5) காங்கிரஸ் கட்சியை போல பெட்ரோல் விலையை உயர்த்திவரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரபோகிறது. மக்கள் காரி துப்ப போகிறார்கள். ”வந்தவனைவிட போனவனே மேல்” என்று மக்கள் நினைப்பார்கள். அதனால் ஊழல் காங்கிரஸ் மீண்டும் வரபோகிறது. பெட்ரோலுக்கு பதில் electric vehicle , மற்றும் பிரேசில் நாட்டில் கரும்பு பாகுவிளிருந்து தயாரிக்கப்படும் பொருளை பெட்ரோலுடன் கலப்பது, Jetropha seeds மூலம் எரிபொருள் தயாரிப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி அரபு நாட்டை நம்புவதை விட் டோழிக்கவேண்டும் ஆனால் இவர்களுக்கு அதன் மீதெல்லாம் சிரிதும் சிந்தனை இல்லை.. (5) கட்ச தீவை பற்றிய காங்கிரஸ் கட்சியின் எண்ணத்தை அப்படியே இவர்களும் பிரதிபலிக்கிறார்கள். அப்புறம் எதற்கு உங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்? அவர்களே இருந்து போகட்டும் என்று விட்டு இருப்பார்களே! (6) மோடி மேடையில் கத்தி கத்தி பேசுவதால் பயனில்லை. செயலில் இருக்க வேண்டும். (7) கட்சியை சேர்ந்தவர்கள் மேடையில் ஏறி கண்டபடி பேசுகிறார்கள். அவர்கள் அப்படி பேசியதற்கு எதிர்கட்சிகள் எதிர்குரல் கொடுக்கின்றன. அவற்றிற்கு பதில் சொல்லவே பிஜேபி காரர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. அப்புறம் ஆட்சியில் சாதனை எங்கே நிகழ்த்துவது? (8) RSS காரர்கள் விளம்பரம் இல்லாமல் (பேராபத்து நிகழும் காலங்களில்) சேவை செய்கிறார்கள். அச் செய்தி மக்களிடம் செல்வதில்லை. ஆனால் ‘மறுமதமாற்றம்’, etc போன்ற விஷயங்களை மெளனமாக செய்வதில்லை. அதற்கு விளம்பரம் செய்வதில் சினிமாகாரன் கெட்டான். அதற்கு போலி மதசார்பின்மைவாதிகளிடம் வாங்கி கட்டிகொள்கிறார்கள். RSS க்கு அறிவே இல்லை. (9) VHP காரர்கள் மோடிக்கு மே 2015 வரை கெடு கொடுத்திருக்கிறார்கள். எதற்கு தெரியுமா? ராமர் கோவிலை கட்ட. இவர்களாலேயே பிஜேபி ஆட்சி கவிழபோகிறது.மக்கள் மீண்டும் இந்த கட்சி பக்கமே திரும்ப மாட்டார்கள். தலை வைத்து கூட படுக்கமாட்டார்கள். VHP க்கு புத்தியே கிடையாதா? (10) Development என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு ராமர் கோவில் பற்றி பேசுவது முறையா?
   நாட்டை நல்ல வளர்ச்சி நிலைக்கு கொண்டுவந்து மக்களும் பிஜேபி மீது நர்மதிப்பு ஏற்படும்போது ராமர் கோவிலை கட்டினால் அப்போது எவன் கேட்கபோகிறான்? BJP
   RSS , VHP ஆகிய அனைவருமே திமிர்பிடித்தவர்களே!. இவர்களின் அடாவடி செயலால் ஆட்சி இழக்கபோகிரார்கள். அப்போது இஞ்சி தின்ற குரங்கு போல விழிப்பார்கள். இவர்களுக்கு இப்போது புத்தி சொன்னால் அவர்களின் காதில் விழவே விழாது. பட்டால்தான் புத்தி வரும். படட்டும்.

  8. கருத்துப்பகிர்ந்த அன்பர்களுக்கு நன்றிகள்.

   அன்பின் ஸ்ரீ தாயுமானவன், பாஜக வின் திட்டங்கள் ஏழைகளுக்கு உதவிகரமாக இல்லை என்று சொல்ல முகாந்திரம் இல்லை.ஆயினும் அப்படி ஒரு தவறான புரிதலை கட்சியின் தரப்பு பொதுமக்களிடம் எழுப்புதல் கட்சியின் வளர்ச்சிக்கு ஆபத்தானதே.

   அன்பின் ஸ்ரீ பாண்டியன், பொது ஜனம் பொல்லாதது. கரண்டு மற்றும் தண்ணீர் கிடைத்து விட்டால் சமாதானமாக மாட்டார்கள். 70ல் மீதி எங்கே போச்சு என்று குடையவும் செய்வார்கள். மின்சாரத்தைப் பொறுத்தவரை தாங்கள் சொன்னதில் ஒரு பகுதியளவுக்கு தாத்காலிகமாகவாவது ஆப்புக்கட்சி நிறைவேற்றியுள்ளது. தண்ணீர் தில்லியைப்பொறுத்த வரை அவ்வளவு சுலபத்தில் தீர்க்க முடிந்த ப்ரச்சினை இல்லை. ஹரியாணா மற்றும் உ.பியின் ஆதரவு இல்லாமல் இதை அவ்வளவு எளிதாக தீர்க்க முடியாது.

   அன்பின் ஸ்ரீதரன், வேறு அரசியல் மரபுகளைச் சார்ந்தவர்கள் பாஜகவில் நிச்சயம் இணைய வேண்டும். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு ஹிந்துத்வக் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்கள். அவர்களுக்கு அது பற்றிய சரியான புரிதலை எந்த அளவுக்கு ஹிந்துத்வ இயக்கங்கள் அளிக்கின்றன என்பதும் முக்யம்.

   அன்பார்ந்த ஸ்ரீ கண்ணன் ஜீ, ஸ்ரீமதி மது கிஷ்வர் சார்பில் என் ஜி ஓ என்ற பணம் காய்ச்சி மரங்களை சர்க்கார் தரப்பிலிருந்து முறையாக ஆய்ந்தறிய வேண்டும் என்று பெடிஷன் போடப்பட்டுள்ளது. இலை மறைவு காய்மறைவாக அன்னிய சக்திகளுக்கு துணை போகும் விலை போகும் இந்த ஸ்தாபனங்களின் மீதான ஆய்வு மற்றும் கட்டுப்பாடு மோதி சர்க்கார் தரப்பிலிருந்து செய்யப்படாவிட்டால் அது தேசத்திற்கு பெரிய இழப்பாகும்.

   அன்பின் ஸ்ரீ ரமேஷ் கட்சி தன் மீது என்ன குறை என்பதை நிச்சயம் ஆராய வேண்டும். மற்ற கட்சிகளின் சாதக பாதகங்களும் வெளிப்படையாக அலசப்பட வேண்டும். நான் வேறுபடும் ஒரு விஷயம் ……..சர்க்காரி ஊழியர்கள் நேரத்துக்கு கார்யாலயத்துக்கு வர பாஜக எடுத்த நடவடிக்கை கசப்பளித்தது என்பது. இதற்கு முன்னால் பலருக்கு சர்க்காரி கார்யாலயங்களில் ஊழியர்களை காண்பது கூட அத்ருஷ்டமே. சொந்த ஜோலி க்ளப்பு என பல ஜோலிகள் அலுவலக நேரத்தில் சர்க்கார் ஊழியர்களுக்கு முன்னர். தில்லி மத்ய சர்க்கார் கார்யாலயங்கள் மட்டிலும் அல்ல பல மாகாண சர்க்கார் கார்யாலயங்களிலும் அப்படியே நிலமை. வேலை இலக்குகள் முக்யம் தான். காலத்தே வேலைக்கு வருவது நிச்சயம் முக்யம். தில்லியில் தனியார் துறை ஊழியர்கள் காலத்துக்கு வரமுடியுமானால் சர்க்காரி ஊழியர்களாலும் நிச்சயம் வரமுடியும். அதே குளிர் அதே வெயில் இருவருக்கும் பொதுவானதே.

   அன்பின் ஸ்ரீ சங்கரன் அரசியல் கட்சிகளின் கணக்குகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவே நான் அறிகிறேன். தவறானால் விளக்கவும்.

   அரசியல் என்பது யார் எதைச்செய்தார்கள் செய்யவில்லை என்பதை விட …….. it is very much a war of perception……..AAP is winning this war. Better, BJP does not lag behind in this war.

   வெற்று கோஷங்களால் அரசியலை தொடர்ந்து நீண்ட காலத்துக்கு நடத்த முடியாது. மக்களின் வாழ்வில் ப்ரதிபலிக்கத்தக்க மக்கள் அதை உணரத்தக்க செயல்திட்டங்களே மக்களுக்கு நம்பிக்கையை வளர்க்கும்.

   தொலை நோக்குத் திட்டங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் மக்களது அன்றாட வாழ்வினை பாதிக்கும் ப்ரச்சினைகள். இரண்டிற்கும் இடையே நிச்சயம் சமன்வயம் செய்துகொண்டு முன்னகரும் அரசியல் நாட்டிற்கு மிகவும் அவசியம்.

   இலவசங்கள் மற்றும் சலுகைகள் முதலில் தாத்காலிகமாகத் தான் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நிரந்தரமாகி தொண்டையில் முள்ளாக உறுத்த ஆரம்பித்த பின்னர் சமாளிக்க இயலாததாகி விடுகின்றன. தாத்காலிகமாக நயவஞ்சகமாக ஹிந்துஸ்தான அரசியல் சாஸனத்தில் நுழைந்த ஷரத்து 370 போல.

   சர்க்கார் செயல்படுகையில் நிறைகள் இருப்பது போல குறைகளும் எழுவது இயல்பே. இவை பொதுதளத்தில் விவாதிக்கப்படும் போது இரதரப்பிலுமான கருத்துக்களும் அவற்றின் ந்யாயங்களும் தெரிய வருகின்றன. நமது தளத்தில் இது சம்பந்தமான வ்யாசங்களும் அதையொட்டிய விவாதங்களும் முன்னெப்போதைப்போல உத்சாஹத்துடன் தொடர வேண்டும்.

  9. அன்புள்ள திரு கிருஷ்ணா குமார், பல தனியார் நிறுவனங்களில், குளிர் காலத்தில் தாமதமாக வரவும், சீக்கிரம் செல்லவும் டில்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுமதிக்கிறோம். பெண் ஊழியர்கள் ஐந்து மணிக்கே சென்றுவிடுவார்கள். ஆனால் சனிக்கிழமை வார விடுமுறை எடுக்காது வந்து பாக்கி வேலையே முடித்து விடுவார்கள். அதேபோல் சில ட்ய்பிங் வேலையே வீட்டில் இருந்த படியே முடித்து இ மெயில் செய்து விடுவார்கள். நீங்கள் அரசு அலுவலகங்கள் செய்யும் வேலைபற்றி அறிந்தது குறைவு. அவர்கள் எந்த தனியார் அலுவலர்களுக்கும் குறைந்தவர்கள் இல்லை, ஆனால் சட்ட ரீதியாக அவர்கள் சுய முடிவு எடுக்க முடியாது. மேலிருந்து வரும் ஆணையை செயல் படுத்துபவர்கள், அவர்கள் வேலை செய்ய மேலுருப்பவர்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டும். நாங்களும் சில நேரங்களை சொந்த வேலை பார்க்க மதியம் சென்று விடுவோம். இண்ற்ற்ய உலகில் கையில் லேப்டாப் இருப்பதால் 24 மணி நேரமும் எல்லா வேலையும் செய்து டார்கெட் முடித்து விடலாம். சொந்த வேலையையும் செய்து முடிக்கலாம். காலம் ரொம்ப மாறி விட்டது. நீங்கள் ஒரு சனிக்கிழமை எதாவது ஒஎஉ மாநில தலைமைச் செயலகம், அல்லது ஒரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று பாருங்கள். போக்குவரத்து கழக அதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமை கூட வேலை செய்கிறார்கள்.

  10. அன்பின் ஸ்ரீ ரமேஷ்

   நான் ஒட்டு மொத்தமாக சர்க்காரி ஊழியர்களை புறங்கூறவில்லை ஐயா. அது மிகவும் தவறாகும். ஆனால் நிறைய ஊழியர்களின் போக்கு துரத்ருஷ்டவசமாக இப்படியே.

   சர்க்காரி ஊழியர்களில் எத்தனையோ திறமை வாய்ந்த ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். நிச்சயமாக நான் மறுக்கவில்லை. இவர்களில் ஊழியத்திறமையால் தானே தேசம் முன்னேற முடிந்திருக்கிறது.

   மடி………. ஆலச்யம்……கிட்டத்தட்ட தொத்து வ்யாதி மாதிரி சர்க்காரி ஊழியர்களிடம் பரவி விடுகிறது. என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற படிக்கு வேலை செய்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் மாறுவதில்லை என்பது வேறு விஷயம்.

   நான் பார்த்தபடிக்கு தில்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீ நகர் பற்றிய அபிப்ராயம்.

   தில்லி மத்திய சர்க்கார் கார்யாலயத்து ஊழியர்கள் ……….. அதுவும் JS என்ற ஸ்தானத்தில் இருப்பவர்கள் கூட கோல்ஃப் க்ளப்பு, சொந்த ஜோலி என்று காங்க்ரஸ் காலத்தில் ………. காலத்தைக் கழித்தது……… தில்லி நகரமே அறியும். (அனைவரும் இல்லை.. நிறையப் பேர்). ஜம்மு, ஸ்ரீ நகர்………… மிக மிக மோசம்……….11 மணி வாக்கில் கார்யாலயம் வருதல்…………3 மணிக்கு மேல் முழு கார்யாலயமும் கிட்டத்தட்ட காலி. இங்கெல்லாம் எந்த விபாகமானாலும் சரி மதிய உணவுக்கு முன்னர் உங்கள் வேலைகளை முடித்தால் தான் உண்டு.

   எங்கெல்லாம் பொதுமக்களுடன் ……. வெளிஉலகத்தினருடன் ……கார்யாலய ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட நேரங்களில் ஊழியர்கள் தங்கள் இருக்கைகளில் சன்னத்தமாக இருப்பது அவச்யமே.
   ஆம். மற்ற விபாகங்களில் முறையாகத் திட்டமிட்ட வெயிற்கால மற்றும் குளிர்கால ஊழிய நேரத்தை சர்க்கார் மாற்றி அமைக்கலாம். மேலும்………….FLEXIBLE TIMINGS…..அமல் செய்யலாம். இன்றைய காலகட்டத்திற்கு இது சரியே.

   \\ நீங்கள் அரசு அலுவலகங்கள் செய்யும் வேலைபற்றி அறிந்தது குறைவு. \\

   I have been interacting with them for quite a long time. I agree it is bad to stereotype either way.

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *