நரேந்திர மோடி பிரதமரான பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (ஜூலை 2014) பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது. வரிச்சலுகைகளும் வருமான வரி வரம்பு உயர்த்துவதும் தான் மத்திய நிதிநிலை அறிக்கை என்ற வழக்கமான சிந்தனையோட்டத்துக்கு மாறான பல மாற்றங்களை சென்ற ஆண்டே காண முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பாஜக அரசு சமர்ப்பித்துள்ள முழுமையான நிதிநிலை (2015- 16) அறிக்கையில், குறுகியகால கவர்ச்சிகரமான அம்சங்களை விட, தொலைநோக்குடன் கூடிய திட்டங்களுக்கான அறிவிப்புகளே அதிகம் உள்ளன. வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்க நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறுத்திருப்பதை துணிச்சலான செயல்பாடாகவே கருத வேண்டும்.
தனிநபர் வரிச் சலுகையில் மாற்றம் இல்லாதபோதும், கங்கை நதி தூய்மைத் திட்டம், தூய்மை இந்தியா இயக்கப் பணிகளில் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவிகித வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆரோக்கிய காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு ரு.. 25,000 வரை வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கும் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவை அரசின் திசை மாற்றத்தைக் காட்டும் சில அம்சங்கள்.
தங்கமான அறிவிப்புகள்:
இந்தியாவில் தங்கம் மீது இருக்கும் மோகம் வெறும் நகை ஆசை சார்ந்ததல்ல. அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பாதுகாப்பான முதலீடு. அதை அரசு உணர்ந்திருப்பதை, தங்க முதலீட்டுப் பத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. வங்கிகளில் தங்க முதலீட்டு நிதி திரட்டும் திட்டங்கள் துவக்கப்படும் என்ற அறிவிப்பும் முக்கியமானது.
இப்போது தங்கக் காசு வாங்கினால் அதில் வெளிநாட்டு மன்னர்களின் முத்திரை தான் உள்ளது. இதற்கு மாற்றாக, அசோகச் சக்கரம் பொறித்த இந்திய தங்கக் காசு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு, தற்போதைய இந்திய அரசின் சுயமரியாதை உணர்வைக் காட்டுகிறது. இதுவும் தங்க முதலீட்டை அதிகரிக்கும்.
தங்கக் கடத்தலைக் குறைக்க இந்த நிதிநிலை அறிக்கையில் பல அம்சங்கள் உள்ளதாக நகைத் தொழில் துறையினர் கூறுகின்றன. தங்கம் விலை சிறிது அதிகரிக்கும் என்பதும் அவர்களின் கருத்து.
கிராம, விவசாய வளர்ச்சி:
கிராமப்புற வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார் ஜேட்லி. இதற்கெனச் ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தவிர, விவசாயத்திற்கு ரூ. 25,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விவசாயக் கடன் இலக்காக ரூ. 8.5 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயம் மேம்பட உதவும்.
இந்த ஆண்டில் 20,000 கிராமங்களில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தித் திட்டங்கள் துவக்கப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும் தொலைதொடர்பு வசதி உறுதி செய்யப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்படும். இந்த ஆண்டு ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும் என்ற இலக்குகளுடன் கூடியவை.
இந்த நிதியாண்டில் 50 லட்சம் கழிவறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டன. அதனை 6 கோடியாக வரும் நிதியாண்டில் அதிகரிக்க நிதிநிலை அறிக்கை திட்டமிட்டுள்ளது.
மின்சக்தி திட்டங்கள்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகு விரைவில் உற்பத்தியைத் துவங்கும். மேலும் 5 புதிய மின்னுற்பத்தித் திட்டங்கள் தனியார் பங்களிப்புடன் விரைவில் துவங்கும்.
மின்சாரத்துக்கும், தூய்மையான குடிநீருக்கும் இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று ஜேட்லி தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மரபுசாரா மின்சக்தி திட்டங்களுக்கு சாதகமாக புதிய நிதிநிலை அறிக்கையில் பல அம்சங்கள் உள்ளன.
உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியாக ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நலனுக்கு ரூ. 500 கோடியும், குழந்தைகள் பாதுகாப்புக்கு ரூ. 1,500 கோடியும், மகளிர் பாதுகாப்புக்கான ’நிர்பயா’வுக்கு கூடுதலாக ரூ. 1,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பண ஒழிப்பு:
தங்கள் அரசு கருப்புப் பண ஒழிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறிய நிதியமைச்சர் ஜேட்லி, அதற்கான பல தீவிவ்ர நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். வருமான வரி கனக்கு தாக்கல் செய்யாவிடில் 7 ஆண்டு சிறைத் தண்டனை, வெளிநாட்டில் பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறைத் தண்டனை ஆகியவை முக்கியமானவை.
சொத்துவரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக, ஆண்டு வருமானம் ரூ. ஒரு கோடியைத் தாண்டினால் 2 சதவிகித கூடுதல் வரிவிதிப்பு, ஒரு லட்சத்திற்கு மேல் பொருள்கள் வாங்கினால் வருமான வரி கணக்கு எண் (PAN) சேவை வரி 14 சதவிகிதமாக அதிகரிப்பு கட்டாயம் ஆகிய நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்கவை.
ரொக்கப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தினால் கறுப்புப்பண நடமாட்டத்தைக் குறைக்க முடியும் என்ற நோக்கில், பணமில்லாத (வங்கி அட்டை மூலம் பரிமாற்றம்) பரிவர்த்தனை நடவடிக்கைகளை அரசு ஊக்குவிக்கும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.
அதேபோல, ரொக்கமாக பணப் பரிமாற்றம் இல்லாத வகையிலேயே அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
கல்வித் துறை:
நாடு முழுவதும் 80,000 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்ப்டும். அதன்மூலமாக 5 கி.மீ. சுற்றளவுக்குல் ஒரு மேல்நிலைப் பள்ளி என்ற நிலை ஏற்படும் என்ற திட்டம் பாராட்டத் தக்கது. மதிய உணவுத் திட்ட்த்திற்கு இந்த அரசு ரூ. 68,968 கோடியை ஒதுக்கி உள்ளது.
அதேபோல, சரியாக படிப்பு வராத மாணவர்களைக் கண்டறிந்து பிளஸ் 1 வகுப்பிலேயே அவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்கல்வி வழங்கப்படும் என்ற திட்டமும் யதார்த்த உலகில் அரசு நடை பயில்வதை உணர்த்துகிறது.
தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் அகில இந்திய மருத்துவக் கழக மையங்கள் துவக்கப்படும். ஜம்மு காஷ்மீரிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் துவக்கப்படும். கர்நாடகாவில் இந்திய பொறியியல் கல்வி மையம், அருணாச்சலில் திரைப்படவியல் கல்வி மயம் துவக்கப்படும் என்ற அறிவிப்புகள் உயர்கல்வியில் பிராந்திய வேறுபாடின்றி செயல்படும் அரசின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகின்றன.
நட்சத்திர அறிவிப்புகள்:
சிறு, குறுதொழில் முனைவோரின் மேம்பாட்டிற்காக ‘முத்ரா வங்கி’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்ப்ட்டு அதன் மூலமாக கடனுதவி வழங்கப்படும்.
நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த அரசு வழக்கம் போல அதிக நிதி ஒதுக்கி உள்ளது. ராணுவ மேம்பாட்டிற்கு ரூ. 2,46,727 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு ரூ. 68,968 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா வளர்ச்சிக்காக, இந்தியா வந்தவுடன் விசா பெறும் திட்டம் 43 நாடுகளிலிருந்து 150 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு சொந்த வீடு; ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு வேலை என்பதே தனது அரசின் லட்சியம் என்ற ஜேட்லி, நீண்டகாலத் திட்டங்களால் அதை சாத்தியமாக்க தனது முயலும் என்றார்.
பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கு ரூ. 12 என்ற குறைந்தபட்ச பிரீமியத் தொகையில் தலா ரூ. 2 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கப்பட உள்ளது.
சில கடின இலக்குகள்:
பொதுவாக நிதிநிலை அறிக்கையின் கடினமான பகுதி, அதன் எதிர்காலக் கனவுகளை வரையறுப்பதே. அந்த வகையில், ஜேட்லி, தனது நிதிநிலை அறிக்கை இந்த ஓராண்டுக்கானது மட்டுமல்ல, இது நீண்டகாலத் திட்டத்துடன் கூடியது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் (GDP) 8 முதல் 8.5 சதவிகிதம் வரை இருக்கும் என்று இந்த நிதிநிலை அறிக்கை மதிப்பிடுகிறது. நடப்பு நிதியாண்டில் இது 7.4 சதவிகிதமாகும்.
விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பணவீக்க விகிதம் 2015 ஆண்டு இறுதிக்குள் 5 சதவிகிதமாகக் குறைக்கப்படும். மூன்று ஆண்டுகளில் இதன் அளவு 3 சதவிகிதத்திற்குள் குறுக்கப்படும். நாட்டின் நிதிப் பாற்றாக்குறை 4.1 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.
வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் ஜேட்லி. முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் பல அறிவிப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளன.
இந்த நிதிநிலை அறிக்கையின் திட்டமில்லாச் செலவுகள்: ரூ. 13,12,200 கோடி. திட்டச்செலவுகள்: ரூ. 4,65,277 கோடி. எதிர்பார்க்கப்படும் நிதிப் பற்றாகுறை அளவு: ஜிடிபி-யில் 3.9 சதவிகிதம்.
“இந்த ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு 6.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது” என்று தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார் அருண் ஜேட்லி. இந்தப் பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் அரசு கவனம் கொடுத்திருப்பது புதிய நிதிநிலை அறிக்கையில் தென்படுகிறது.
poor peoples wants to more benefit in this budget & more than new trains are introduce to southern region
ஸ்ரீ சேக்கிழார் மிக அழகாக ஸ்ரீ நமோஜி அரசின் முதல் முழு பட்ஜெட்டின் நல்ல அம்சங்களைத்தொகுத்து தொலை நோக்குப்பார்வை கொண்டது என்று சொல்லியிருக்கிறார். நல்ல கட்டுரை பாராட்டுக்கள்.
பாரத நிதி அமைச்சர் ஸ்ரீ அருண் ஜெட்லியின் முதல் முழு பட்ஜெட் ஸ்ரீ சேக்கிழான் குறிப்பிட்டுள்ள அம்சங்களுக்காக நிச்சயம் பாராட்டுக்குறியது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
இந்த பட்ஜெட் நிச்சயமாக இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். பொருளாதாரவியல் வல்லுனர்கள் கூறும் இரண்டு இலக்க வளர்ச்சி வீதத்தினை பாரதப்பொருளாதாரம் அடைவதற்கு உதவும். பொருளாதாரத்தின் இரண்டாவதும் மூன்றாவதுமான தொழில் துறை மற்றும் சேவைத்துறைகள் நிச்சயம் அபரிதமான வளர்ச்சியை அடையும். காரணம் கார்பொரேட்டுகளுக்கு தேவையான ஊக்கமும் ஆக்கமும் வரிச்சலுகைகள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏராளமான நிதி பட்ஜெட்டில் வழங்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதனமையான துறையாகவும் நாட்டின் பெரும்பாலானமக்கள் சார்ந்துள்ள வேளாண்மைக்குப்போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதால் நலிந்த நிலையில் உள்ள அந்தத்துறை மீளுமா என்பது சந்தேகமே. வேளாண்மைக்கு எப்போது மூன்றாவது இடமளிக்கும் காங்கிரசின் அணுகுமுறையை பாஜகவும் தொடர்வது துரதிருஷ்டமானது. நீர்ப்பாசணத்தினை மேம்படுத்தவும் அதில் உயர்தொழில் நுட்பங்களைப்பயன்படுத்திடவும் ஆக்கமும் ஊக்கமும் வழங்க மத்திய பட்ஜெட் தவறிவிட்டது. பாரதப்பாரம்பரியத்தின் பெருமையை எப்போதும் பேசும் ஸ்ரீ மோதி ஜி விவசாயத்தில் நவீனத்தொழில் நுட்பங்களை பின்பற்றவேண்டும் என்று பேசிவருவது ஏற்புடையதன்று. மத்திய அரசு இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பதற்கு வழிசெய்திருக்கவேண்டும். பாரம்பரிய விதைகள், பசு மற்றும் கால் நடை வளர்ப்பிற்கு ஆக்கம் வழங்கியிருக்க வேண்டும். யோகா பயிற்சிக்கு சேவை வரி விலக்கு அளித்த மத்திய அரசு இயற்கை உணவு உண்ணாமல் பிடி ஜிம் சோறு சாப்பிட்டு யோகா செய்தால் பயனேதும் இருக்காது என்பதையும் உணராதது அதிசயமே. இன்னும் ஒன்று கல்விக்கு இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு குறைந்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகமானது. நமது நாட்டின் பலமே அதன் இளைய மக்கள். அவர்களுக்குத்தரமான கல்வி வழங்க மத்திய அரசின் செயல்பாடுக்கல்வித்துறையில் மிகமிக அவசியம். மொத்தத்தில் ஸ்ரீ நமோஜி அரசு இந்த பட்ஜெட்டில் ஸ்வதேசியக்கொள்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை அன்னிய வலதுசாரி பொருளாதாரக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. அவை நிலைத்த வளர்ச்சியை நிச்சயம் தராது. வீக்கம் ஒருகாலும் வளர்ச்சியாகாது.
திரு மோடி அவர்களின் அரசு ஏனோ அரசு ஊழியர்களை அந்நியர்களாக பார்க்கிறதோ என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது.அது இந்த பட்ஜெட்டிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தவறு செய்பவர்களின் மீது கருணை காட்ட வேண்டாம்.ஆனால் அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமலிருப்பது பொதுவாக கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லதல்ல.
பட்ஜெட் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அனைத்தையுமே செயல்படுத்த வேண்டுமே, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரவேண்டுமே. சேவை வரி ஒழுங்குபடுத்தபடவேண்டும், நாம் கட்டும் இன்சூரன்ஸ் தொகைக்கு எல்லாம் சேவை வரி தேவை தானா? நமது பணத்தை நமக்காக அரசுக்கு செலுத்தும் ஒரு காப்பீட்டுக்கு தண்டமாக 14% அழ வேண்டியது உள்ளது. ஒரு லிமிட்டுக்கு மேல செலுத்தும் இன்சூரன்ஸ் தொகைக்கு சேவை வரி விதிக்கப்பட்டால் தேவலை. ஆனால் ரூ.500 & 600/- க்கு எல்லாம் சேவை வரி கட்ட தேவையா? தீர்ப்புகள் எப்போது திருத்தபடுமோ ?