இலங்கையில் கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு ஆட்சிமாற்றம், அரசியற்புரட்சி நடந்திருக்கிற சூழலில் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மேற்கொண்ட இலங்கை விஜயம் அரசியல் அவதானிகளால் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது.
நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தி காலத்தில் ஏற்பட்ட பல சர்ச்சைகளும், குழப்பங்களும் இந்த உறவை முழுமையாக உடைத்து விட்டன. இந்த நிலையில், கடந்த இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிர்கதியான சூழலை எதிர் கொண்ட போது, இந்தியா ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தும், இந்தியா அப்போது வேடிக்கை மட்டுமே பார்த்தது.
இந்நிலையில், மஹிந்தராஜபக்ச அரசு இந்தியாவின் அரசியல் எதிரிநாடான சீனாவுடன் நெருக்கம் பேணிய பின்னணியில் எதிர்பாராத ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இப்போது புதிதாகப் பதவியேற்றிருக்கிற மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையிலான அரசுடன் நல்லுறவை பேணுவதன் குறியீடாக மோடி அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார்.
இதில் சிறப்பான அம்சம் என்ன என்றால், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்திற்கு இந்தியப்பிரதமர் சென்றுள்ளமையே ஆகும். இந்தியாவின் நிதியுதவியுடன், இர்க்கோன் நிறுவனம் வடபகுதி ரயில் பாதையை சீரமைத்திருக்கிறது. அந்த வகையில், தலைமன்னாருக்கான ரயில் சேவையை மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் வடபகுதிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையான கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கு வழி ஏற்பட்டிருக்கிறது.
அரசியல் தீர்வு தொடர்பில், மோடி அவர்களின் வருகை உண்மையில் எவற்றைச் சாதிக்கும்? என்று சொல்ல இயலாது என்பதே உண்மை. இலங்கைத்தமிழர்கள் மோடியின் விஜயம் திடீரென தங்களுக்கு பெரிய லாபம் கொடுக்காது என்பதை உறுதியாக நம்புவதாகவே தெரிகிறது.
இதனால், தான், யாழகத்தில் பொதுமக்களிடையே மோடியின் வருகை பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்கவில்லை என்று கருதப்படுகிறது. 1927ல் மஹாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்த போது மக்களெல்லாம் பெருந்திரளாக கூடிநின்று தோரணங்கள் கட்டி அலங்கரித்து வீதியெங்கும் பூரணகும்ப வரவேற்பளித்ததாகச் சொல்லப்படுகிறது. ஏறத்தாழ இதே போன்ற ஒரு வரவேற்பு 2012ல் அப்துல்கலாம் அவர்கள் வந்த போதும் கிடைத்தது. இவ்வாறான சூழல் இம்முறை இருக்கவில்லை.
பாதுகாப்பு நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டு, மோடி அவர்கள் பயணிக்கிற பாதைகள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னராக பொலிசாரால் மூடப்பட்டு, பொதுமக்கள் அருகில் செல்ல அனுமதிக்கபடாமை காரணமாக கூட, பெருவரவேற்புகளில் மக்கள் ஈடுபட இயலாமல் போயிருக்கலாம். என்றாலும், நீண்ட காலமாக இலங்கைத்தமிழர்களை இந்திய மத்திய அரசுகள் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவாகவே இம்முறை மோடி அவர்களின் வருகையையும் மக்கள் தங்களுக்கான தீர்வுத்திட்டம் தருவதற்கான வருகையாக நினைக்கவில்லை என்றும் சொல்லலாம்.
மோடி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்து, யாழ்.பெர்து நூலகத்தில், கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதே மாவட்டத்தில் உள்ள இளவாலைப்பகுதியில், இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகளை மக்களுக்கு வழங்கி உரையாற்றினார்.
இலங்கை விஜயத்தின் போது, பாராளுமன்றம் தொட்டு பல்வேறு இடங்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் உரையாற்றிய மோடி அவர்கள் பல நிகழ்வுகளில் “வணக்கம்” என்று தமிழில் குறிப்பிட்டு பேச்சை ஆரம்பித்திருக்கிறார். பாராளுமன்ற உரையில் மஹாகவி பாரதியாரின் “சிந்து நதியின் மிசை..” பாடலை தொட்டுக்காட்டி இலங்கை இந்திய கலாச்சார உறவுகளை விவரித்து அழகாக உரையாற்றினார்.
சிலப்பதிகாரத் தெய்வமான கண்ணகை இலங்கையின் பாகங்கள் எங்கணும் வழிபாடாற்றப்படுவது குறித்தும், பாரதி, மஹாத்மா காந்தி, விவேகானந்தர் இவர்களை குறிப்பிட்டும் உரையாற்றிய மோடி அவர்கள் தமிழர்களுக்கு உரிமையும் வளமும், நலமும் வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
இலங்கை வாழும் தமிழர்கள் யாவரும் அன்று தொட்டு “பாரதமாதா” என்று போற்றி வரும் பாரதத்தின் பெருந்தலைவர் தமிழர் நலனில் அக்கறையோடு உரையாற்றியதுடன், தமிழர் பிரதிநிதிகளான தமிழ்க்கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய அரசுக்கு பிரச்சினை தீர்க்க, காலஅவகாசம் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வட இலங்கையில் உள்ள ஈழத்தின் பஞ்சஈஸ்வரங்களுள் ஒன்றான நகுலேஸ்வரத்திற்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள சஹஸ்ர லிங்கப் பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்து மோடி அவர்கள் வழிபட்டார்.
இப்படி, ஓய்வில்லாமல், சோர்வின்றி, இடைவிடாத பயணத்துடன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மோடி அவர்கள் செயற்பட்டமை அவரது உற்சாகத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியது. அவரது திறமையை அவரது பேச்சும், செயலும் தௌ;ளத்தெளிவாய் உணர்த்தியது.
ஆனாலும் மோடி அவர்களின் வருகயிலும், அவரது செயற்பாட்டிலும் சில விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. பௌத்தம் என்பது பொதுவில் நோக்கப்படும் போது இந்துமதத்துடன் நெருக்கமானதாய், வேறுபடாததாய் காணப்படும் போதிலும், இலங்கையைப் பொறுத்த வரையில், இந்து- பௌத்த வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.
இங்கிருக்கும் தேரவாத பௌத்தர்களின் மததலைவர்களான பிக்குமார்கள் இந்துத்துவத்திற்கு எதிராக தங்கள் மதத்தவரை கடந்த காலத்தில் வழி நடத்தியமையாலேயே இந்த பேதம் பெரியளவில் வளர்ந்தது. இன்றும் அதனால் உண்டான கசப்புணர்வுகளும் மன விரோதங்களும் முழுமையாக மாறி விடவில்லை.
இது இவ்வாறிருக்க, மோடி அவர்கள் பௌத்தத்திற்கு அதிக முதன்மை தந்து பிக்குகளை விழுந்து விழுந்து வணங்கியமை இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து 15.03.2015 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி தினசரிப்பத்திரிகை தனது ஆசிரியத்தலையங்கத்தை தீட்டியிருக்கிறது.
திருஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிய தேவாரத்தலங்கள் காணப்படுவதும், திருமூலர் சிவபூமி என்று குறிப்பிட்டதும், அருணகிரியார் பாடிப் போற்றிய கதிர்காமமுருகன் கோவில் உள்ளதுமான இலங்கையை மஹாகவி பாரதி “சிங்களத்தீவு” என்று குறிப்பிட்டது மகாதவறு என்று சொல்லப்படுகிற நிலையில், பாரதியின் குறித்த பாடலை மோடி ஒப்புவித்தமை கூட தமிழர்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்று கூறுகிறது மேற்படி பத்திரிகையின் ஆசிரியத்தலையங்கம்.
இந்துக்குருமார்கள் எவரையும் தனியே சந்திக்காத மோடி அவர்கள் பிக்குமார்களுக்கு அளவுக்கு அதிகமான முதன்மையை தந்து வணங்கியதும், அநுராதபுரத்தில் பன்முறை மஹாபோதியை போற்றித் துதித்ததும், நகுலேஸ்வர வழிபாட்டை விட, அதிக முதன்மையான நிகழ்வுகள் என்பது இந்துக்களுக்கு ஒரு இந்து சமயியான உலகத்தலைவரின் வருகை என்ற எதிர்பார்ப்பை உடைத்து விட்டது. இவ்வாறு இந்துக்கள் அஞ்சுவதற்கு அடிப்படை என்ன என்றால் கடந்த காலங்களில் பிக்குமார்கள் தமிழின எதிர்ப்பை கக்கி வந்தமையே ஆகும்.
ஆனால், மோடி அவர்களின் இந்த செயற்பாடு பிக்குமார்களிடையே ஒரு நல்ல மனோபாவத்தை உண்டாக்கி எதிர்வரும் காலத்தில், தமிழ்ஹிந்துக்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பும் எனில் சிறப்பானதாகும். இதை விட, இந்த செயற்பாட்டினை ஒரு வகையில், அரசியல் ராஜதந்திரம் என்று கொள்வாரும் உளர்.
மொத்தத்தில், நரேந்திர மோடி அவர்களின் வருகை இலங்கைத்தமிழர்களுக்கு ஓரளவேனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கலாச்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிற மோடி அவர்கள் இந்திய பாரம்பரிய கலாச்சார வளர்ச்சியும், அதனோடு இணைந்த தமிழ் ஹிந்துக்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் கவனித்தாரா? அது குறித்து ஆக்கபூர்வமாக எதனையேனும் முன்னெடுத்தாரா? என்பது குறித்து இன்னும் சில நாட்களின் பின்னரே உணர்ந்து கொள்ள முடியும்.
இது வரை இலங்கைக்கு எத்தனையோ, அரசியற்தலைவர்கள் பெரிய பெரிய தாரை தம்பட்டைகள் முழங்க, இதோ, வருகிறார்… வருகிறார்… என்று வந்து ஒன்றும் முன்னேற்றம் உண்டாகாத சூழலில், வெறுமனே எதிர்பார்ப்புகளை வளர்த்து கொள்ளாமல், ஆறுதலாக, அமைதியாக நடக்கிற விடயங்களை நோக்கும் மனோ நிலையிலேயே இலங்கை வாழ் தமிழ்ஹிந்துக்கள் இன்று இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
நிதர்சனமான உண்மையை உரைக்கும் தெளிவான கண்ணோட்டத்துடன் கூடிய கட்டுரை. வாழ்த்துக்கள் ஐயா!
சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பது , நல்லது , கெட்டது என இரண்டு வாய்ப்புகள் முன் வைக்கப்ப்ட்டால் தவறை மட்டுமே தேர்ந்தெடுப்பது , நல்லதை கூட அவநம்பிக்கையோடு பார்ப்பது , இவை இலங்கைத்தமிழர்களின் கல்யாண குணங்கள்….
அது மாறாதவரை மோடி மட்டுமல்ல ,அந்த பகவானே நேரில் வந்தால் கூட நல்லது நடக்காது….
நிலத்தளவே ஆகுமாம் நீராம்பல்……
வந்துட்டானையா வந்துட்டானையா! சான்றோன் வந்துட்டானையா வந்துட்டானையா.
எங்கள் வரலாற்றையும் நிகழ்வுகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் இழப்புக்களையும் அத்துடன் துரோகிகளையும் எதிரிகளையும், கூடவே எங்கள் அறிவிலித்தன்மையையும் பலவீனத்தையும் மிக நன்றாக அறிந்து வைத்துள்ள சான்றோன் வந்துட்டானையா வந்துட்டானையா. தொடர்ந்து இவரைப்போன்ற மேதவிகள் ஈழ அரசியல் பற்றி கருதிட, ஈழ தமிழர்களை எள்ளிநகையாட கேவலப்படுத்த வரிசை கட்டுவார்கள்.
சும்மா வாலறிவன்.
வணக்கம் திரு மயூரகிரி சர்மா அவர்கள். மிக டைமிங்கான நாசுக்கான பதிவு. அனைத்து விடையங்களையும் தோட்டிருக்கின்றிர்கள். என்றாலும் இந்திய பிரதமர் (மோடி அல்ல) பாராளுமன்றில் தமிழ் இனவழிப்பிற்கு கூட்டு உரிமை கோரியிருக்கின்றார். இது எமக்கு தெரிந்ததுதான், மஹிந்தவும் கோதபஜவும் தற்பொழுது ரணிலும் பலதடவை சொனதுதான்.நிங்களும் சுட்டியிருக்கலாம். வாழ்த்துக்கள் நல்ல பதிவு.
சர்வம் சிவமயம்.
அருமையானக்கட்டுரை சரியான வேளையில் வெளியாகியிருக்கிறது. மயூரகிரியாருக்கு வாழ்த்துக்கள். ஈழப்பிரச்சினைக்குத்தனி ஈழம்தான் தீர்வு என்பவர்கள் யாருக்கும் ஸ்ரீ மோதி ஜி அவர்களின் ஈழ விஜயம் அதில் அவர்களது செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்காது. இந்திராகாந்தியைப்போல் விடுதலைப்புலிகளை வளர்க்கும் கொள்கைகளை அவர்கள் நமோ ஜியிடம் எதிர்பார்ப்பார்கள். சிங்கள -தமிழர்களுக்கிடையே உள்ள இடைவெளியை குறைக்க நினைக்கும் பாரதப்பிரதமரின் செயல்பாடுகள் அவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் அளிக்கும்.
ஸ்ரீ சர்மா “பிக்குமார்களிடையே ஒரு நல்ல மனோபாவத்தை உண்டாக்கி எதிர்வரும் காலத்தில், தமிழ்ஹிந்துக்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பும் எனில் சிறப்பானதாகும் “. இதுதான் நல்ல நிலைப்பாடாகும். சிங்கள் பௌத்தத்தால் தமிழரின் மதம் பண்பாட்டுக்கு எப்போதும் எதிர்ப்பு இல்லை என்ற நிலையும் அரசியல் உரிமைகளுக்கும் உத்திரவாதமும் அளிக்கப்படவேண்டும். ஸ்ரீ நமோ ஜி அரசு தொடர்ந்து அந்த திக்கில் பணியாற்றும் என்று நம்புகிறேன்.
//சும்மா வாலறிவன்.//
என்னுடைய கூற்றை விரைந்து மெய்ப்பித்தமைக்கு நன்றி….
தீதும் நன்றும் பிறர்தர வாரா…..
அங்கே வாழும் தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கல்வினரும் அப்படியே இருக்கிறார்கள், அந்நிய நாடு மீதே இப்போதும் தமிழர்கள் நினைக்கிறார்கள்.அவர்கள் நம்பும்படியாக இருக்கவில்லை. இந்தியாவின் எண்ணம் , நம் எதிர்பார்ப்பு நிறைய செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்…… மிகவும் சிக்கலாகி உள்ளது,,,
அன்பர் சான்றோன், சுயநலம் கொண்ட இலங்கை தமிழ் தலைவர்களால் தவறாக வழிநடத்பட்டு குழப்பம் அடைந்துள்ள பல இலங்கை தமிழர்களின் கல்யாண குணங்கள் பற்றி அழகாய் எடுத்துரைத்தீர்கள்.
நரேந்திர மோதி இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும் போது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வென்று காட்டிய சிங்கள இராணுவத்துக்குத் தனது பாராட்டுகளை மனமுவந்து தெரிவித்தாரே? இதில் மன்மோகனுக்கும் மோதிக்கும் என்ன வேறுபாடு? இலங்கை மீதான ஐநாவின் போர்க்குற்ற விசாரணை பற்றி எல்லாம் மூச்சு விடவில்லையே மோதி.
https://www.tamilwin.com/show-RUmtyDRXSUls7F.html