மறக்கொணா இருவர்

இன்று (மே 1, 2015)  சிதம்பரம் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.

பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த

ஏராரும் மணிமன்றில் எடுத்ததிரு வடிபோற்றி

Chidambaram_Nataraja_patanjali_vyaghrapadaதிருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும். தகரம் – சிறுமை.

பராகாசம், தகராகாசம் எனும் இவ்விரண்டு ஆகாயங்களும் ‘பரை’ அல்லது ‘சித்சத்தி ’வடிவின. இவ்விரு ஆகாசங்களில் இருந்துகொண்டு ஐயன் ஐந்தொழிற் கூத்தியற்றி அண்ட பிண்டங்களை இயக்குகின்றான்.

பரமாண்டத்தின் இருதயகமலமாகக் கருதப்படுவது, புண்ணிய பூமியாகிய பாரதத் திருநாட்டின் அங்கமாகிய மாதவஞ்செய் தமிழ்நாட்டின் தில்லை மூதூர். தில்லை என்பதே பழமையான பெயர். சிதம்பரம் என்பது காலப்போக்கில் தோன்றி நிலைபெற்றுவிட்ட பெயர்.

இதயகமலத்தில் இறை என்னும் பதிப்பொருள் ஞானப்பிரகாசமாக, சிவப்பிரகாசமாக, அறிவொளியாக, அருட்சோதியாகத், தன்னை அன்பால் நினைவார் நினையும் வடிவில் எழுந்தருளுவதை தெய்வப்புலவர், “மலர்மிசை யேகினான்” என்று சுட்டினார்.

திருவாதவூர்ப் பெருந்தகை,

“மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி” என விரித்துரைத்தார். இந்த இதயகமலத்தை,’அனாகதம்’ எனும் பெயரால் யோகியர் குறிப்பர்.

மேலானது, உயர்ந்தது எனும் பொருள்படும் பரம் (supreme being) என்னும் பெயர் ஆண்பால் விகுதியேற்றுப் ‘பரன்’ எனவும், பெண்பால் விகுதியேற்றுப் ‘பரை’ எனவும் ஆகும். பரம்- சிவம்; பரன் –சிவன்; பரை- சிவசத்தி. பராகாசம் அல்லது ஞானாகாசம் சித்சத்தி வடிவம். பரையிடமாக நின்று உரையுணர்வுக் கெட்டா ஒருவன் பஞ்சாக்கரத்தால் வரைமகள் காணும்படிக் கருணையுருக் கொண்டு ஆடிதலைப் பேணுபவருக்குப் பிறப்பில்லை என்பது நம் ஞானசாத்திரமாகிய உண்மைவிளக்கம்.

பரை பக்குவ ஆன்மாக்களுக்குத் திருவருளாகச் சிவத்தைக் காட்டும்; பக்குவமிலாத ஆன்மாக்களுக்குச் சிவத்தை மறைத்து, மறைப்புச்சத்தியாகிய திரோதானமாக நின்று உலகத்தைக் காட்டும்.

சிவத்தைக் காட்டுவது ‘ஞானநடனம்’ என்றும், பிரபஞ்சத்தைக் காட்டுவது ‘ஊனநடனம்’ என்றும் சாத்திரம் பேசும். இவ்விரு நடனங்களின் இயல்பைத் திருவாதவூரிறை,

“ஊனை நாடக மாடுவித்தவா

உருகி நானுனைப் பருக வைத்தவா

ஞான நாடக மாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே”

(திருச்சதகம் 95)

என்றருளினார்.

பிண்டமாகிய உடலில் இருந்துகொண்டு அதனை இயக்கும் உயிர்போல, உயிரின் உள்ளிருக்கும் தகராகாசமாகிய ஞானாகசத்தில் சிவம் இவ்விருவகை நடனங்களையும் இயற்றுகிறது; ஊன நடனத்தால் உலகபோகங்களை ஊட்டிப் பக்குவம் வரச் செய்கிறது; ஞான நடனத்தால் சிவானந்தமாகிய சிவபோகத்தை அருளுகின்றது. இதனை, “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, என்றும், “மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க” என்றும் மணிவாசகர் மொழிந்தருளினார்.

ஆணவ இருளினால் மறைப்புண்டு கிடப்பாருடைய கண்கள் ஞானாகாச வியாபகத்தில் வியாப்பியமாகக் கலந்திருந்தும் இந்தத் திருக்கூத்தினைக் காணும் தகைமை உடையன அல்ல. பலபிறவிகளிலும் ஈட்டிய சிவபுண்ணியப் பயனால் சிவகுருவின் அருள் கிடைத்து ஆணவ இருள் நீங்கப் பெற்றவரே இந்நடனத்தைக் காணும் பேறு பெறுவர். ஞான நடனக் காட்சியால் விளைவது அந்தமிலா ஆனந்தமாகிய சிவபோகம்.

chidambaram-kumbha-3சிவசத்தியால் மலவாசனை நீங்கப்பெற்ற ஆன்மா இச்சிவபோகத்தை ஞானசத்தியால் அனுபவிக்கும். இவ்வனுபவத்தைத் தெய்வச் சேக்கிழார், “உணர்வின் நேர்பெற வருஞ்சிவபோகம்” என்றார். இந்தப் போகம் ஐம்புலன்களின் வழி நுகரப்படும் ‘சுவை ஒளி ஊறு நாற்றம் ஓசை’ போன்றதொன்றன்று. ஞானம் அல்லது அறிவால் அனுபவிக்கப்படுவது.

அதனால், நம் அருணகிரி மாமுனிவரும், “ அறிய அறிய அறியாத அடகள் அறிய அடியேனும், அறிவுள் அறியும் அறிவூர அருள்வாயே” (உத்தரமேரூர்), “”பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் களமான, பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் தருள்வாயே” (கருவூர்), “எப்பொருளுமாய அறிவையறி பவரறியும் இன்பந்தனை” (பொது), “அறிவும் அறியாமையும் கடந்த அறிவுதிரு மேனி” பொது) எனப்பல திருப்புகழ் மறையில் எடுத்தோதியமை காண்க.

‘உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தை” , “ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச்”சேருமாறு ஐம்பொறிகளாலும் அடையப் பெற்றவர்கள் நம் சைவசமயாச்சாரியர்களாகிய நால்வர். அவர்களுக்கும் முன்னதாக அருளப்பெற்றவர்கள், பதஞ்சலி முனிவர் , வியாக்கிரபாத முனிவர் ஆகிய இருவருமாவர்.

பதஞ்சலி முனிவர் ஆதிசேடனின் அவதாரமாகப் பூவுலகில் முனிவராகத் தோன்றியவர். அத்திரி முனிவரும் அவருடைய பத்தினியார் அநசூயா தேவியாரும் மகப்பேறு விரும்பித் தவம் முயன்றனர். எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்த அநசூயாதேவியின் கரங்களில் இறைவனின் அருளால் ஆதிசேடன் சிறுநாகப் பாம்பின் குட்டியாகத் தோன்றினான். அச்சமடைந்த அநசூயாதேவி கையைஉதறினாள். பாம்புக்குட்டி அவளுடைய பாதங்களில் வீழ்ந்தது. அதனால் பதஞ்சலி என்று பெயர் பெற்று மனித உடலும் பாம்பின் வாலும் பெற்று வளர்ந்தது.

யோக சூத்திரம் செய்த பதஞ்சலி இம் முனிவரின் வேறாவர் என்பது அறிதல் வேண்டும்.

பதஞ்சலி முனிவரும் மத்தியந்த முனிவர் மைந்தரான வியாக்கிரபாத முனிவரும் தில்லையில் இறைவனை நோக்கித் தவம் செய்தனர். இருவரும் செய்த தவம் சைவநெறிப்படிச் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவே.

chidambaram-kumbha-2

இருவரும் தில்லைவனத்தில் தவம் செய்யும் நாட்களில் விடியும் முன்னெழுந்து வைகறைப்போதில் மரங்களின் மீதேறி மலர் பறிப்பர். பதஞ்சலி முனிவர் பாம்புடலினராதலின் மரக்கொம்புகளைச் சுற்றிப் படர்ந்து மேலேறுவர்.

மந்தியந்த முனிவரின் மைந்தர், மரங்களின் மீதேறிக் கோட்டுப் பூக்களைப் பறிக்கும்போது பனியீரத்தால் வழுவாதிருக்கும் பொருட்டுப் புலியின் கால்கலையும் மையிருளில் வண்டு புழு அரிக்காத மலர்களைக் காணக் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களை வேண்டிப் பெற்றமையால் புலிக்கால் முனி எனப்பட்டார். இவர் வழிபட்ட்தால் தில்லை ‘புலியூர்’ எனப்பட்டது. புலிக்கு வடமொழியில் வியாக்ரம் எனப் பெயர். எனவே, இவர் விய்ரபாத முனிவர் எனப்பட்டார்.

முனிவர் இருவரும் ஆற்றிய தவவழிபாட்டினை ஏற்று மகிழ்ந்த எம்பிரான்,” இங்குக் கொள வேறேதும் உண்டோ” என வினவினான்.திருக்கூத்துக் கண்ட முனிவர் இருவருக்கும் இத்தரிசனத்திற்கு மேல் வேண்டுவதொன்றுமில்லை. ஆயினும், நிலவுலகில் ஆன்மாக்கள் படுகின்ற துயரினை நீக்கக் கருணையுள்ளம் கொண்டு, பெருமானே! மின்னல் போலும் வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினால் தரிசிக்கும்தோறும் நிறைந்த ஞானவொளியாகிய இச்சபையிலே, அன்பையுடைய துணைவியாகிய உமாதேவியுடனே, இன்று முதல் எக்காலமும் ஆனந்த நடனம் அருளத் திருவுளம் இரங்க வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். தேவர்கள் தேவனாகிய மகாதேவன் திருவருளும் அங்கு அவ்வண்ணமே செய்ய இரங்கியது.

யான் எனது என்னும் வஞ்சத் தலைமையினையுடைய ஆன்மாக்கள் படுந் துன்பத்தினை எண்ணீ, முனிவரிருவரும் கருணையினால் வேண்ட இன்றும் நிகழ்வதுவே தில்லை மன்றுள் நிக்ழும் எம்பிரானின் திருக்கூத்து.

தில்லை வனத்துள் எம்பிரான் ஆடிய மேடை அம்பலம் அல்லது மன்றம் எனப்படும். அம்பரம்- ஆகாசம்.ரகரவொற்று இங்கு லகரவொற்றாகத் திரிந்து, அம்பரம் அம்பலம் ஆயிற்று. இது வெட்டவெளி. மன்று என்பது கூத்தாடும் மேடை. இது எவ்விடத்துள்ளாரும் கூத்தினைக் கண்டின்புறுமாறு உயரமான, நாற்றிசையும் திறந்த வெளி. இவ்வெளி காலப்போக்கில் மூன்று திசைகள் அடைக்கப்பட்டுளதாயிற்று.

நெல்லுக்குப் பாயும் நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது போலவும், நல்லார் ஒருவருளரேல் அவர் பொருட்டுப் பெய்யும் மழை எல்லாருக்கும் பயன்படுவது போலவும் இவ்விருவருக்கும் வெளிப்பட்ட திருக்கூத்து மையல் வாழ்வில் உழலும் நமக்கும் கிடைத்தது.

chidambaram-kumbha-1

இருமுனிவரும் செய்தருளிய உபகாரங்கள் பல. தனக்கெனத் திருமேனியில்லாத பரம்பொருளைத் தன் கருணையையே திருவுருவாக, அத் திருமேனி கொண்டு ஆடலைக் கண்டவர்க்கெல்லாம் முத்தி கிடைக்க அருள் செய்தனர். தேவர் முதலிய நம்மினும் பெரியர் யாராலும் செய்விக்க முடியாத பெருமானின் திருக்கூத்தை நம்பொருட்டு மண்ணின்மேல் தில்லையில் நிகழச் செய்தனர். அதனால் கயிலைமலையைக் காட்டிலும் தில்லை வனத்தை உயரச் செய்தனர். தில்லைத் திருக்கோவில் வழிபாட்டுப் பூசாவிதி, நித்திய நைமித்திய காமிய உற்சவ விதிகளைப் பதஞ்சலி பத்ததி எனும் நூலாக உதவினர். உலகில் உள்ள சிவாலயங்களிலெல்லாம் பொருந்தி உயிர்களுக்கு அருள்செய்யும் சிவகலைகள் அனைத்தும் அர்த்தசாம பூசையின்போது தில்லையில் வந்து குவியும்படி செய்தனர். தில்லையில் அர்த்தசாமபூசையை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்.

சிதம்பரத்துக்குச் சென்று வழிபடுவோர் பலருக்கும் பதஞ்சலி வியாக்கிரபாதர் பற்றிய அறிவோ நினைவோ இருப்பதில்லை. தில்லைக்கூத்தினைக் கண்டு வணங்குமுன் அக்கூத்தினை நமக்குக் காட்டியருளிய இம்முனிவர் இருவரையும் நன்றியுடன் நினைவு கூர்தல் வேண்டும். ஆகையால் இவ்விருவரும் மறக்கொணா இருவராவர்.

9 Replies to “மறக்கொணா இருவர்”

  1. மிக அழகான கட்டுரை

    இதந்தரு மடந்தையொடு இயைந்து உயிருடம்பு போல்
    விதம்படுலகங்களில் விரிந்தொளி விளங்குவார்
    கதம்பமொடு துந்துபி வயங்கெழ முழங்கவே
    சிதம்பர நடம்பயில் செழுங்கழல் இறைஞ்சுவாழ்

    விபீஷணாழ்வானே ஸ்ரீரங்கத்திற்கு பெருமாள் வரக்காரணம் போல, பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களின் தவமே சபாநாதர் சிதம்பரத்தில் ஆடக்காரணம் என்று புராணங்கள் பேசும்… (விபீஷணரை விட, பிள்ளையாரும் காரணம் என்பர்.. ஆனால், நடராஜர் வர இவர்கள் தான் காரணம் என்பது இன்னும் சிறப்பு)

    இதனால் ஈழத்து சிதம்பரத்து நடராஜமூர்த்தியின் திருவுருவத்தில் திருவடிகளை அண்மித்து பதஞ்சலி வியாக்ரபாதருக்கு திருவுருவங்கள் நடராஜப்பெருமானின் திருவடிவினின்று நீக்கமின்றி அமைந்திருக்கிறது (ஏக உருவாய்)… ஆனால், அன்னை சிவகாமியாள் கூட தனித்திருவடிவமே கொண்டிருக்கிறாள்…

    இத்தகு மஹாமுனிவர்களை ஞாபகம் செய்து சிதம்பரேஸ்வருடைய மஹாகும்பாபிஷேக வைபவத்தில் அற்புதமான கட்டுரை படைத்திருக்கிற சைவத்தமிழ் பேரறிஞர் முனைவர் அவர்களை வணங்கி போற்றுகின்றேன்..

    இந்த பதஞ்சில முனிவர் காட்டிய பத்ததிப்பிரகாரமே இன்று வரை நடராஜராஜரின் நித்ய நைமித்யங்கள் நடப்பது இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டியது… சிவபெருமானின் திருவாக்காக கருதப்படும் ஆகம வழிப் பூஜையை விட, தன் பக்தரான பதஞ்சலி முனிவரது வாக்கான பத்ததியையே (அதுவும் ஒரு வகையில் ஆகமம் தான்) தன் வழிபாட்டுக்கு பயன்படுமாறு நடராஜர் செய்திருப்பது கூட சிந்திக்கத்தக்கது…

    இதை வவிட, இன்றைக்கு காலையில் நடந்த சித்சபா கும்பாபிஷேகப் படங்களை இக்கட்டுரைக்கு நடுவே பதிவேற்றியுள்ள தமிழ்ஹிந்து இணையக்குழும ஆசிரியர்களின் அக்கறையும் விரைவான செயற்பாடும் கூட பாராட்டப்பெற வேண்டியனவாகும்..

  2. பதஞ்சலி முனிவரையும் வ்யாக்ரபாத முனிவரையும் கனகசபேசனுடைய ஆலய மஹாகும்பாபிஷேக சமயத்தில் முனைவர் ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் வெகு அழகாக நினைவூட்டியிருக்கிறார்.சைவ சமயக்கோட்பாடுகளை விளக்குமுகமாக இவ்விருமுனிவர்கள் மட்டுமின்றி செந்நாப்போதரிலிருந்து வள்ளல் அருணகிரிப்பெருமான் வரை பல அருளாளர்களின் அருள்வாக்குகளைப் பகிர்ந்திருக்கிறார்.

    பெருத்தபாருளோருக்கு திருப்புகழ் அமுதம் கிடைக்கப்பெற்றது சித்சபேசனுடைய தனிப்பெருங்கருணை என்பதை ப்ரதிக்ஷணமும் நினைக்கவேண்டுமல்லவா.

    வேத நூன்முறை வழுவா மேதினம்
    வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
    மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே

    என்ற திருப்புகழமுதத்துளியினை ஒரு வழக்கு வ்யாஜ்யத்தின் போது பொதுதீக்ஷிதர்கள் உதாஹரித்ததைக் கேட்டபடிக்கு அன்றோ குஹத்திரு வடக்குப்பட்டு த சுப்ரமண்யபிள்ளையவர்கள் திருப்புகழ் ஏடுகளைத் தேட முனைந்தார்.

    முனைவர் அவர்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானுடைய அருள்வாக்குகளை உதாஹரித்த படிக்கு புலியூர்த்திருப்புகழ்களை நினைவுறுத்த முனைந்தது ஒரு பேறு.

    சூரசம்ஹாரஞ்செய்த பெருமான் உலகுக்குத் தீங்கிழைத்த அவுணர்களொடு தான் பொருதுவான். அடியார்களிடம் என்றும் கருணையே கொண்டவன் அல்லவோ.

    நதிமதி யிதழி பணியணி கடவுள்
    நடமிடு புலியூர்க்குமரேசன்……………

    கழலிணை பணியு மவருடன் முனிவு
    கனவிலு மறியாப் பெருமாளே.

    அறுமுகப்பெருமானின் வீரக்கழலிணைகளைப் பணியும் அன்பர்களிடம் கனவிலும் கூட கோபம் காட்டுதலை அறியாத கருணாமூர்த்தி என்று வள்ளல் பெருமான் கட்டியம் கூறுகிறார்.

    ******கழலிணை பணியும் அவருடன் முனிவு
    கனவிலும் அறியாப் பெருமாளே*****

    என்ற திருப்புகழமுதத்துளிகள் குஹத்திரு தணிகைமணி வ.த.சு.செங்கல்வராய பிள்ளையவர்களின் உளத்தை உருக்கியிருக்கும் போலும். இந்த ஈற்றடி மனப்பாடம் செய்யவேண்டிய அடி என்று தணிகைமணியவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

    சுகரே சத்தன பாரச்செங்
    குறமா தைக்கள வால்நித்தஞ்
    சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் …… பெருமாளே

    வள்ளல் அருணகிரிப்பெருமானுக்கு சிவஞானக் கடலில் மூழ்குமாறு திருவருள் புரிந்தவன் என்று

    சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
    தடியே னுக்கருள் பாலிக்குஞ்
    சுடர்பா தக்குக னேமுத்தின் …… கழல்வீரா

    விதந்தோதுகிறார்.

    இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
    கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
    இடங்கட் டிச்சுடு காடுபு காமுன …… மனதாலே……

    இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
    இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
    இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர …… இசைவாயே

    சுடு காட்டில் அடுக்கப்படும் விறகுக் கட்டைகளுக்கு உணவாகி அடியேனுடைய இவ்வுடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என … ஓலமிட்டுக் கதற, கிடக்கும் இடத்தில் கட்டப்பட்டு சுடுகாட்டுக்குப் போவதற்கு முன்னே………………..

    என் மனதால் உன்னுடன் இரண்டறக் கலந்து சமாதி நிலையை அடைந்திட்டு நற்கதியைப் பெறவாவது, அல்லது இந்த உலகில் இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறவாவது, மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை நீயே தீர்மானித்து, அதைக் கொடுக்க மனம் பொருந்துவாயாக

    என பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளை வள்ளல் பெருமான் இறைஞ்சுகிறார்.

  3. முனைவர் ஐயாவின் சிவமணம் கமழும் கட்டுரையை நீண்ட நாள்களுக்குப் பிறகு கண்டு பேரானந்தம் எய்தினேன். படங்கள் அருமையிலும் அருமை.

    நான் ஐந்தாண்டுகள் இருந்த தில்லையை மீண்டும் தரிசிப்பதில் களிபேருவகை கொண்டேன். படங்களை வெளியிட்ட தமிழ் இந்துவுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக!

  4. படங்ககளை காணும்போது எனக்கு ஓர் தேவாரப்பாடல் நினைவுக்கு வருகிறது:

    குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமிண் சிரிப்பும்
    பணித்த தலையும் பவளம்போற்சென்னியில் பால்வெண்ணீறும்
    இனித்தமுடம் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!

    “தில்லையில் கலந்தோர் திருபவும் மீள்வாரோ!” என்று மனது கேட்டுக்கொண்டே இருக்கிறது!

  5. முனைவர் அய்யா அவர்களுக்கு தாழ்ந்த வணக்கம். தங்கள் கட்டுரை மிக நன்றாகவும், பலவற்றைக் கற்றுக்கொடுக்கும் முறையிலும் இருந்தது. பதஞ்சலி முனிவர்கள் பற்றியும், அம்பலம்-அம்பரம் பற்றியுமான பல புது விடயங்களையும் இதன் மூலம் அறிந்துகொண்டேன். தில்லைக்கு எல்லை இல்லைதான்.
    அதற்கு மேலும், என்னளவில் கட்டுரையைப் படித்ததும் நான் 43 வருடங்கள் பின் சென்றேன்!

    அப்போது திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய ஆசை கொண்டிருந்தேன். முதல் விஜயத்தில் கிரி வலம் செய்ய இயலவில்லை. அதற்கு நான்கு மாதங்கள் கழிந்த பின் ஆருத்ரா தரிசனம் செய்துவிட்டு, தில்லையில் இருந்து வரும் வழியில் திருவண்ணாமலை சென்றேன். மறுநாள் ரமணர் பிறந்த நாள். அன்று அதிகாலை தான் கிரிவலம் முதன்முறையாக செய்து முடித்தேன். வெகுநாட்கள் சென்றபின் ரமணர் இயற்றிய இந்த வெண்பாவைப் படித்தேன்.

    அசலனே ஆயினும் அச்சவை தன்னில்
    அசலையாம் அம்மை எதிராடும் – அசல
    உருவில் அச்சக்தி ஒடுங்கிட ஓங்கும்
    அருணாச்சலம் என்றறி.

    அதில் கூறியுள்ளதுபோல அசலன் என்றாலும் அம்மை எதிரே அவன் தில்லைச் சபையில் ஆடியவனே. அவனே அம்மையாகிய சக்தி ஒடுங்க அசலனாக அருணாச்சலத்தில் வீற்றிருக்கிறான் என்று அறிந்து, நான் தில்லை வழியாக திருவண்ணாமலை வந்ததை நினைத்து புளகாங்கிதம் அடைந்தேன். அதை மீண்டும் நினைவுபடுத்தியதற்கும் நன்றி.

  6. மதிப்பிற்குரிய ஐயா, தங்கள் சிறப்பான கட்டுரையைப் படித்து இன்புற என்ன பேறு பெற்றேன். ஆடல்வல்லான் பற்றியும் அவன் உறையும் தில்லை மூதூர் பற்றியும் பல உயர்வான செய்திகளை அறிந்து பயன்பெற முடிந்தது குறித்துப் பெருமகிழ்ச்சி. இதனை குடமுழுக்கு சமயம் வெளியிட்ட தமிழ் ஹிந்து குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி.

  7. மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா,

    உண்மைவிளக்கம் என்னும் நூல் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதி எங்களுக்கு எல்லாம் அத்தத்துவங்களை விளக்குவீர்களா? மறுமொழியை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளோம்.

  8. தில்லை திருத்தலத்தின் பெருமை சொல்வதும் கேட்பதும் எழதுவதும் நினைப்பதும் அலாதியானது. ஆனந்தமானது. ஒருமுறை தரிசித்தாலே முக்தி என்று அதன் பெருமையை பெரியோர் சொல்வார்கள். அதன் பெருமையை மிகச்சிறப்பாக முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றிகள் பலப்பல.

  9. சிதம்பரம் ஆடல்வல்ல பெருமான் சன்னிதிக்கு நேர் பின்புறம் பதஞ்சலி வியாக்ரபாதர் மற்றும் ஜைமுனி என்ற மூன்று மகான் களின் திருவுருவங்கள் சிறிய அளவில் உள்ளன. பொற்சபையை வலம் வருகின்ற போது இடதுபுறத்தில் இந்த மஹானுபாவர்களை தரிசிக்கலாம். இந்த மூன்றாவது மஹானாகிய ஜைமுனியைப்பற்றி ஒரு தகவலும் இல்லை. அவரைப்பற்றியும் எழுதினால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *