கம்பராமாயணம்-66 முழுவதையும் மின்-நூல் வடிவில் pdf கோப்பாக இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுந்தர காண்டம்
கடவுள் வாழ்த்து
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் – கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே, மறைகளுக்கு இறுதி யாவார்! (43)
(அலங்கல் – மாலை; அரவு – பாம்பு; விகாரப்பாட்டின் – வேறுபாடுகளின்; வீக்கம் – தோற்றம்; பொருதார் – போர் செய்தார்)
பூ மாலையில் (காணும்போது மதிமயக்கத்தால் உண்டாகும்) பொய்ப் பாம்பின் தோற்றம் மறைவது போல, ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறு வேறு விதமாக அமைந்த பிரபஞ்சத்தின் பன்மைத் தோற்றம் எவரைத் தரிசித்தால் மறைந்து போகுமோ, அவரன்றோ கையில் வில்லேந்தி இலங்கையில் போர் செய்தார் ! – என்று வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள் கூறுவர் (உயர்ந்த ஞான நிலையில், வேறுவேறாகத் தோன்றும் பிரபஞ்சத்தின் மாயைத் தோற்றம் மறைந்து பிரம்மம் ஒன்றே சத்தியம் என்னும் உணர்வு ஏற்படும். இந்த வேதாந்த தத்துவக் கருத்தையே இப்பாடலில் கம்பர் அழகுறக் கூறுகிறார்).
அசோகவனத்தில் சீதையின் நிலை
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா
நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். (44)
(மருங்குல் – இடை; வாள் அரக்கியர் – கொடிய அரக்கியர்கள்; மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய)
பருத்த இடையை உடைய கொடிய அரக்கியர்கள் துன்புறுத்த, சீதை அசோக வனத்தில் இருந்தாள். கற்பாறைக்குப் பக்கத்திலே தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய பிராட்டி, மெல்லிய இடையைப் போல, மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள்.
தன்னை ஏற்குமாறு மன்றாடிய இராவணனிடம் சீதை துரும்பை முன்வைத்துக் கடிந்து பேசுதல்
மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
‘கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல்; இது தெரியக் கேட்டி! துரும்பு! ‘எனக் கனன்று சொன்னாள். (45)
(மல் அடு – மல்லர்களை அழிக்கும்; இல் – நற்குடிப் பிறப்பு; ஏய்வன – ஏற்றவை; வெய்ய – கொடுமையான; கேட்டி – கேள்)
மல்லர்களை அழிக்கும் திரண்ட தோள்களையுடைய வஞ்சகனான இராவணனின் உள்ளம் வேறுபாடு அடையும்படி சீதை சினந்து பேசினாள் – “ஏ துரும்பே! கல்போன்று உறுதிகொண்ட மகளிர் மனம், கற்பைவிடச் சிறந்ததாக வேறு ஒன்றை மதித்தது உண்டா? (உன்னுடைய பசப்பு வார்த்தைகள்) நற்குடிப் பெண்களுக்கு (நினைப்பதற்கும்) ஏற்க முடியாத கொடுஞ்சொற்கள் ஆகும். உள்ளம் உணர இவ்வார்த்தைகளைக் கேள்”.
இராமன் தூதனாக வந்து ஆறுதல் தந்த அனுமனை சீதை வாழ்த்துதல்
‘மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு ‘என்றாள். (46)
(மும்மை – மூன்று; அத்தனே – தெய்வமே; நல்கினை – கொடுத்தாய்; இசையோடு – புகழோடு)
மூன்று உலகங்களையும் படைத்த முன்னோன் ஆகிய பிரம்மதேவனுக்கும் தந்தையாகிய இராமபிரானின் தூதுவனாய் வந்து, நிறைவு பெற்ற பண்பினாலே எனக்கு உயிரை வழங்கினாய். (சிறையிலிருக்கும்) என்னால் உனக்குச் செய்வதற்கு எளிமையான உதவியும் உள்ளதா? அம்மையும் அப்பனும் தெய்வமும் போன்றவனே! அருளுக்கு வாழ்வைத் தருபவனே! நீ இப் பிறப்பிலேயே மறுமை வாழ்வையும் புகழுடன் வழங்கினாய் என்று பிராட்டி கூறினாள்.
கடலைக் கடந்து வந்தது எப்படி என்று வியப்புடன் கேட்ட சீதைக்கு அனுமன் கூறிய பணிவு மொழி
அண்ணல் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான்: ‘அருந்ததியே!
வண்ணக் கடலின் இடைக் கிடந்த மணலின் பலரால், வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத்தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவக்கடவ பணிசெய்வேன் (47)
(வண்ணக் கடல் – அழகிய கடல்; பண்ணைக்கு ஒருவன் – வேலைக்காரர் கூட்டத்தில் ஒருவன்)
பெரியோனாகிய அனுமன், சீதைப் பிராட்டியின் திருவடிகளிலே வணங்கிக் கூறினான் – “அருந்ததி போன்ற பெருமையுடைய அன்னையே! அளவிட முடியாத வானரப்படைத் தலைவர்கள் இராமபிரானின் அடியார்கள். அவர்கள் இந்த அழகிய கடலிலே கிடக்கின்ற மணலினும் பலராவர். அவர்களுடைய கூட்டத்துக்கு ஒரு வேலைக்காரன் என்ற அளவில் நான் இங்கு வந்தேன். ஏவும் பணியையும் கூவும் பணியையும் செய்யும் ஒரு சாதாரணத் தொண்டன் நான்”.
சீதை அனுமனிடம் கூறியது
அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். (48)
(அல்லல் – துன்பம்; மாக்கள் – விலங்குகள்; ஆற்றற்கு – ஆற்றலுக்கு; மாசு – களங்கம்; வீசினேன் – விலக்கினேன்)
(இந்த நகரமே எலும்பு மலையாகப் போகும்) துன்பம் விலங்கு போன்ற அரக்கர்கள் வாழும் இலங்கையுடன் நின்று விடுமா? (அறத்தின்) வரம்பைக் கடந்து போகும் எல்லா உலகங்களையும், என்னுடைய சொல்லினாலேயே சுட்டெரித்து விடுவேன். அவ்வாறு செய்வது தூயவனாகிய இராமனின் வில்லினுடைய வலிமைக்கு களங்கம் உண்டாக்கும் என்று கருதியே அப்படிச் செய்யாமல் இருக்கிறேன்.
சீதை இராமனுக்குத் தெரிவிக்குமாறு அனுமனிடம் கூறியது
வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்! (49)
(வைகல்வாய் – உடன் உறையும் காலத்தில்; வார்த்தை – செய்தி; சாற்றுவாய் – சொல்லுவாய்)
(மிதிலைக்கு) வந்து என்னைக் கைப்பிடித்து மணம் செய்து உடன் உறைகின்ற காலத்தில், இந்தப் பிறவியில் இரண்டாவது பெண்ணை மனத்தாலும் தீ்ண்ட மாட்டேன் என்ற செம்மையான வரத்தை உறுதிமொழியாகத் தந்த செய்தியை இராமன் திருச்செவியில் சொல்வாயாக.
சீதையைப் பிரிந்து இராமன் படும் துயரத்தை அனுமன் கூறுதல்
மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? (50)
(தத்துறும் – தத்தளிக்கும்; தள்ளுறும் – வீழ்த்தும்; எண்ணும் ஈட்டவோ – அளவிடும் தன்மை உள்ளனவோ)
மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?
சீதை அடையாளமாகத் தனது சூடாமணியைத் தருதல்
‘சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்!
கோடி! ‘என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள். (51)
(சூடையின் மணி – சூடாமணி, நெற்றிச்சுட்டி; தொல்நாள் – நீண்ட நாட்களாக; நல்கினை – வழங்கினாய்; நல்லோய் – சிறந்தவனே; கோடி – எடுத்துக் கொள்)
“சிறந்தவனே! கடல் தாண்டி நாடி வந்து, (போவதற்கிருந்த) என் இன்னுயிரை வழங்கினாய். என் கண்மணி போன்ற இந்தச் சூடாமணி, நீண்ட நாட்களாக என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது. எனது அன்பின் பேரடையாளமாக இதை இராமனுக்கு எடுத்துச் செல்வாய்” என்று கூறி உண்மையான புகழைக் கொண்ட சீதை சூடாமணியை அனுமனிடம் வழங்கினாள்.
அனுமன் வாலில் தீமூட்ட, இலங்கை முழுவதும் தீப்பற்றி எறிதல்
நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன், அன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்,
காலமே என்ன, மன்னோ கனலியும் கடிதின் உண்டான். (52)
(நீல்நிற – கருநிற; நிருதர் – அரக்கர்; யாண்டும் – எங்கும்; பால்வரு பசியன் – மிகுந்த பசியுடையவன்; ஆலம் – நஞ்சு; கனலி – அக்கினி; கடிதின் – வேகமாக)
கருநிறத்து அரக்கர்கள் நெய் சொரிந்து செய்யும் யாகங்களை எங்கும் செய்ய விடாமல் நீக்கி விட்டதனால், அக்கினி தேவன் மிக்க பசி உடையவனாக இருந்தான். அன்று, மாருதியின் வாலை அன்புடன் தனக்கு ஆதாரமாகப் பற்றிக் கொண்டு, நஞ்சை உண்ட சிவபெருமானின் ஏவலால், ஊழி (பிரளயம்) முடிவில் உலகம் முழுவதையும் எரிக்கின்ற காலத்தைப் போல, இலங்கை நகரை விரைவாக உண்டு எரித்து அழித்தான்.
திரும்பி வந்த அனுமன் இராமனிடம் கண்டேன் சீதையை என்று கூறுதல்
‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்; (53)
(அணி – ஆபரணம்; தெண் திரை – தெளிந்த, சுருண்ட; அண்டர் – தேவர்கள்; துறத்தி – நீக்கிவிடு; பண்டு உள- முன்புள்ள; பன்னுவான் – கூறுவான்)
“கண்டேன்! கற்பிற்கு ஒரு ஆபரணம் போன்ற சீதையை, தெளிந்த சுருண்ட அலைகளுடன் கூடிய கடல் சூழ்ந்த இலங்கை என்ற தென்திசை நகரத்தில்,
என் கண்களாலேயே கண்டேன். தேவர்களின் நாயகனே! இனிமேல், உனது சந்தேகத்தையும், இதுவரை பட்ட துன்பங்களையும் நீக்கிவிடு” என்று அனுமன் மேலும் விரித்துக் கூறலானான்.
இராமனின் கணையாழி கண்டு சீதை உயிர்பெற்று வந்ததை அனுமன் கூறுதல்
‘அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது – எந்தாய் ! (54)
(திருக்கம் – மாறுபாடு; இன்மை – இல்லாமை; முறிவு அற – குழப்பமின்றி)
“எம் தலைவனே! பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன
அடையாளங்களை எல்லாம் பொருத்தமாகப் பார்த்து, அடியேன் மனத்தில் குழப்பம் ஏதும் இல்லை என்பதை நன்றாக யோசித்து, அழகிய (உனது)
மோதிரத்தை நான் காட்ட, பார்த்தாள். அந்த மோதிரம், முடிவுக் காலத்திலும் உயிர் போகாதபடி நிலை நிறுத்திக் காக்கின்ற சஞ்சீவினி என்ற மருந்தைப் போன்று அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தது” என்று அனுமன் கூறினான்.
யுத்த காண்டம்
சரணடைந்த வீடணனை ஏற்றுக் கொள்வதே அறம் என இராமன் கூறுதல்
இடைந்தவர்க்கு, “அபயம் யாம் “ என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? (55)
(இடைந்தவர்க்கு – ஓடி வந்தவர்க்கு; இரந்தவர்க்கு – கெஞ்சியவர்க்கு; எறீநீர் வேலை – அலைபாயும் கடல்; ஆலம் – நஞ்சு; கண்டிலீரோ – கண்டதில்லையா; ஈயான் – தரமாட்டான்)
அலைபாயும் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி ஓடி வந்தவர்களும், நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று கெஞ்சியவர்களும் ஆன தேவாசுரர்களுக்காக, அந்த நஞ்சைத் தான் உண்டு, அவர்களைக் காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? தோல்வியால் சிதைந்து உடைந்தவர்களுக்கு உதவவில்லை என்றால், தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டு வந்தவர்களுக்குத் தரவில்லை என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணை காட்டி அருள் செய்யவில்லை என்றால், அறத்தால் என்ன பயன்? ஆண்மையால் என்ன பயன்?
வீடணனோடு சேர்த்து தனக்கு ஏழு சகோதரர்கள் என இராமன் கூறுதல்
‘குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’ (56)
(ஆனேம் – ஆனோம்; எம்முழை – எம்மிடத்தில்; அகன் அமர் காதல் – நெஞ்சம் நிறைந்த அன்பு; நுந்தை – உனது தந்தை)
குகனுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள் ஆனோம். இது முன்பு நிகழ்ந்தது. அதன் பின்னர், மேருமலையைச் சுற்றிவரும் சூரியனது மகனான சுக்கிரீவனுடன் சகோதரர் ஆறுபேர் ஆனோம். உள்ளத்திலே நிறைந்த அன்பு கொண்டு எங்களிடம் வந்த விபீஷணா, உன்னுடன் சேர்த்து சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம். எவரும் புகுதற்கரிய கானக வாழ்க்கையை எனக்குத் தந்து, உனது தந்தை தசரதன் புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான்!
வானரர்கள் கடலில் சேது (அணை) கட்டுதல்
மலை சுமந்து வருவன வானரம்,
நிலையில் நின்றன, செல்ல நிலம் பெறா –
அலை நெடுங் கடல் அன்றியும், ஆண்டுத் தம்
தலையின்மேலும் ஒர் சேது தருவ போன்ம். (57)
(நிலம் பெறா – இடமில்லாததால்; தருவ – அமைத்தது; போன்ம் – போல)
அணை கட்டுவதற்காக மலைகளைச் சுமந்து கொண்டு வரும் வானரங்கள், (வானரக் கூட்டத்தின் மிகுதியினால்) செல்லுதற்கு அங்கு இடம் இல்லாமையால் மலைகளைச் சுமந்து கொண்டு அசையாமல் நின்ற தோற்றம், அலைகள் வீசும் பெரிய கடலில் மட்டுமல்லாது, தங்கள் தலைகளின் மீதும் ஒரு சேது அமைத்தது போலக் காணப் பட்டது.
போருக்கு முன் இராமனின் தூதனாகச் சென்ற அங்கதன் இராவணனிடம் கூறுதல்
‘பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் ‘என்றான். (58)
“(என் தலைவனாகிய இராமபிரான்) ஐம்பூதங்களுக்கும் தலைவன். (அந்த ஐம்பூதங்களுக்குள், நீ வாழ்கிற) கடல் சூழ்ந்த இம் மண்ணுலகிற்கும் தலைவன். அழகிய தாமரை மலர்மேல் வாழும் சீதையின் நாயகன். வேறே உள்ள தெய்வங்களுக்கும் அவன் நாயகன். நீ ஓதும் அந்த வேதங்களுக்கும் அவனே தலைவன். இனிமேல் நீ பட உள்ள விதியின் விளைவுகட்கும் அவனே தான் தலைவன். இத்தகையவன் உனக்கு அனுப்பியுள்ள தூதன் நான். அவன் உன்னிடம் உரைக்கச் சொன்னதைக் கூறிவிட்டுப் போக இங்கே வந்தேன்” என்றான்.
முதற்போரில் அனைத்தையும் இழந்து நின்ற இராவணனை இராமன் விடுவித்தல்
‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா ‘என நல்கினன் – நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (59)
(மாருதம் – பெருங்காற்று; பூளை – பூளைப்பூ; கமுகு – பாக்கு மரம்)
அரக்கரை ஆள்கின்ற ஐயா, உனக்குத் துணையாக அமைந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து போனதைக் கண்டாய். இன்று போய்ப் போருக்கு நாளை வா என்று (இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான் – (யார் என்னில்) மிகவும் இளைய கமுக மரத்தின்மீது வாளை மீன்கள் தாவிப் பாயும் (நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான்.
கும்பகர்ணன் சாகும் தறுவாயில் இராமனை வேண்டுதல்
நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். (60)
“நீதிமுறைப்படி வந்த சிறந்த தரும நெறி அல்லாது, சாதிப் பிறப்பினால் உண்டான சிறு நெறியை அறியாதவன் என் தம்பி விபீஷணன். அதனால் தான் உன்னை அடைக்கலமாக அடைந்தான். முழுமுதலே! உலகில் அரசர் வடிவு கொண்டு வந்தவனே! வேதங்களால் புகழப் படுகின்றவனே! மீண்டும் அவனை உனக்கு அடைக்கலப் பொருளாகக் கொண்டு நீ காக்க வேண்டும் என்று நான் வேண்டுகின்றேன்”.
கருடனின் வருகையால் நாகபாசத்திலிருந்து இராமலக்குமணர் விடுபட்டவுடன், கருடன் இராமனைத் துதித்தல்
சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய
மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி;
மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
கொல் என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி;
கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று நிற்றி; பகல் ஆதி – ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்? (61)
(உரைத்தி – சொல்லப் படுகிறாய்; ஆதி – ஆகிறாய்; துறந்து – கடந்து; சரம் – அம்பு; சங்கம் – சங்கு; அங்கை – அழகிய கை; நிற்றி – நிற்கிறாய். அல் – இருள், இரவு; அதிரேக மாயை – மிகுந்த மாயை)
(நாதவடிவான) சொற்களாகவும், அவற்றின் பொருளாகவும் நீயே இருக்கின்றாய். தூய்மையான வேதங்களையும் கடந்து விளங்குகிறாய். (அறத்தை நிலை நிறுத்துதற்காக) வில்லையும் அம்பையும் எடுத்திருக்கிறாய். அழகிய கைகளில் ஒளி பொருந்திய சங்கை (பாஞ்சசன்னியம்) ஏந்தியவனும் நீயே. (தீயவர்க்குப் பகைவனாய் இருந்து) கொல்லுக என்று சொல்லுகிறாய். (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக் கிடக்கிறாய். (இவ்வாறு) கொடிய முரண்கள் கொண்ட பரம்பொருளே! உனது மாயச் செயல்களை எவ்வகையிலும் என்னால் அறிய முடியவில்லை. இரவாகவும், பகலாகவும் நீயே தோன்றுகின்றாய். மிகுந்த இந்த மாயச் செயலை யார் தான் அறிவார்கள்?
வானில் மருத்து மலையை எடுத்துச் செல்லும் அனுமனை சிவனும் பார்வதியும் வாழ்த்துதல்
‘என், இவன் எழுந்த தன்மை? ‘ என்று, உலகு ஈன்றாள் கேட்ப
‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நல் நுதல்! நாமும் வெம்போர் காணுதும், நாளை ‘என்றான். (62)
“இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க, “மன்னவன் இராமனின் தூதனாகிய அனுமன் இவன். மருந்தைக் கொண்டு போக வந்திருக்கின்றான். தென் இலங்கையின் வஞ்சக அரக்கரால் உளதாகிய தீமை இனித் தீர்வது திண்ணம். அழகிய நெற்றியுடையவளே! நாளை நாமும் (தேவர்களுடன் சேர்ந்து வானிலிருந்து) கொடிய போரைக் காண்போம்” என்று (சிவபிரான்) கூறினான்.
இறுதிப் போரில் இராமன் அம்பினால் இராவணன் வீழ்ந்து மடிதல்
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
‘எக்கோடி யாராலும் வெலப்படாய் ‘
எனக்கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த
புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று,
இராகவன்தன் புனித வாளி. (63)
(எக்கோடி – எந்த வரிசையிலும்; திக்கோடும் – திசைகளோடும்; புயவலி – தோள் ஆற்றல்; புக்கு – புகுந்து; புறம் – வெளியே; வாளி – அம்பு)
(இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், பிரமன் முற்காலத்தில் ‘(முப்பத்து முக்கோடி தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும் அவர்களால் நீ வெல்லப்பட மாட்டாய்’ என்று தந்த வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, (இராவணனுடைய) மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு (பிரம்மாத்திரம்)!
சிறையிலிருந்து மீண்டு வரும் சீதையை இராமன் காணுதல்
கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். (64)
(காப்பினை – வாழ்விடத்தை; பொற்பு – அழகு; போலியை – போன்றவளை; அற்பின் – அன்பினால்)
கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாகவும், பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாகவும், அழகிற்கு அழகாகவும் விளங்குகின்றவளை, (தனது மற்றும் தன் நாயகனது) புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை, தனி நாயகனாகிய தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை, அந்தத் தலைவனாகிய இராமனும், அன்பினால் நன்றாகப் பார்த்தான்.
தீக்குளித்து வந்த சீதையை வானில் தோன்றி தேவர்களும் தசரதனும் வாழ்த்துதல்
“பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி‘ என்று, “உலகில்
பின்னைக் காட்டுவது அரியது“ என்று எண்ணி இப்பெரியோன். (65)
பொன்னை நெருப்பில் போடுவது பொன்னைச் சொக்கத் தங்கம் என உலகிற்குக் காண்பிப்பதற்காகத் தான் என்று மனத்தில் நினைத்தலே தகுதி. (அதுபோல) குணங்களால் உயர்ந்த இந்த இராமன், உலகத்தில் (இச்சமயம் தவறினால்) பிறகு தெளிவித்தல் இயலாது என்று கருதியே உன்னை ‘கற்பிற் சிறந்தவள்’ என்று (இந் நிகழ்ச்சியால்) தெளிவித்தான்.
அயோத்தியில் இராமன் திருமுடி சூடிய காட்சி (பட்டாபிஷேகம்)
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி. (66)
அரியணையை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்க, பரதன் வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிற்க, இலக்குவன் சத்துருக்கன் இருவரும் கவரி வீச, மணம்கமழும் கூந்தலை உடைய சீதை பெருமிதமாய் விளங்க, சடையனின் கால் வழியின் முன்னோராக உள்ளோர் எடுத்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு, வசிட்ட முனிவனே மகுடத்தை சூட்டினான். (தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலை, நன்றி மறவாமல், ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பத்து இடங்களில் கம்பர் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமானது இது).
(முற்றும்)
கம்பராமாயணம் – 66 (தேர்ந்தெடுத்த அறுபத்தாறு பாடல்கள்)
தொகுப்பு, உரை: ஜடாயு
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய தமிழின் ஒப்புயர்வற்ற காவியமான கம்பராமாயணத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இதனை முழுவதுமாக அல்லது பகுதிகளாகக் கூடக் கற்பது என்பது, தொடர்ந்த வாசிப்பையும், உழைப்பையும் கோரும் ஒரு பணியும், ஒரு வாழ்நாள் முழுவதற்குமான கல்வியும், நற்பேறும் ஆகும். பல்வேறு பணிகளுக்கிடையில் அதனை மேற்கொள்ளுதல் என்பது ஆர்வமுடையவர்கள் பலருக்கும் கூடக் கடினமான ஒன்று.
இந்த மிகச் சிறிய தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது.
இராமாயண பாராயணம் என்ற வகையில் பக்தியுணர்வுடன் இப் பாடல்களை ஓதிப் பயன்பெறலாம். கதைச் சொற்பொழிவுகளில் எடுத்தாளலாம். தமிழார்வம் உள்ள குழந்தைகள் இந்தப் பாடல்களை மனப்பாடம் செய்ய ஊக்குவிக்கலாம்.
இப்பாடல்களை எனது 6 மணி நேர இராமாயண உரையிலும் அந்தந்த இடங்களில் கூறி விளக்கியுள்ளேன்.
கம்பராமாயணம் முழுவதும் உரையுடன் tamilvu இணையதளத்தில் கிடைக்கிறது. பெங்களூர் கம்பராமாயண வாசிப்பு இயக்கம் வாரந்தோறும் நடத்தும் வகுப்புகளின் முழுமையான வீடியோ பதிவுகள் யூட்யூபில் கிடைக்கின்றன.
கம்பராமாயணத்தை விரிவாகக் கற்க அனைவருக்கும் இது ஒரு தூண்டுகோலாக அமையட்டும்.
66 பாடல்களில் கம்பராமாயணம் -நல்ல படைப்பு. வாழ்த்துக்கள் ஜடாயு
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய
பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
‘எக்கோடி யாராலும் வெலப்படாய் ‘
எனக்கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த
புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று,
இராகவன்தன் புனித வாளி. (63)
(எக்கோடி – எந்த வரிசையிலும்; திக்கோடும் – திசைகளோடும்; புயவலி – தோள் ஆற்றல்; புக்கு – புகுந்து; புறம் – வெளியே; வாளி – அம்பு)
(இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், பிரமன் முற்காலத்தில் ‘(முப்பத்து முக்கோடி தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும் அவர்களால் நீ வெல்லப்பட மாட்டாய்’ என்று தந்த வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, (இராவணனுடைய) மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு (பிரம்மாத்திரம்)!
I’m Very happy. Because I got what I search. Thanks
“சரியாக ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை என்று கிடையாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் ஒரு ஐந்தாறு பாடல்கள் தான் தேரும். மற்று பாடல்கள் எல்லாம் வலிந்து பொருள் கொள்ளலே(contrived)!”- என்று ஜெயகாந்தன் சொல்லுவார். அவர் கம்பனை படி என்று ஆக்ஞை செய்ததும் உடன்( during 2000) கம்பராமாயணம் முழுவதும் வாங்கினேன்! பாரதியை யானும் குருவாக ( ஜெயகாந்தன் போல) வரித்துக் கொண்டதால்! ஆனால் இன்னும் கம்பனை முழுமையாக படிக்க இயலவில்லை! ஆர்வம் இருந்தும், பல காரணங்களால் தடைப்பட்டு நிற்கிறது.
“சரியாக ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை என்று கிடையாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் ஒரு ஐந்தாறு பாடல்கள் தான் தேரும். மற்று பாடல்கள் எல்லாம் வலிந்து பொருள் கொள்ளலே(contrived)!”- என்று ஜெயகாந்தன் சொல்லுவார். அவர் கம்பனை படி என்று ஆக்ஞை செய்ததும் உடன்( during 2000) கம்பராமாயணம் முழுவதும் வாங்கினேன்! பாரதியை யானும் குருவாக ( ஜெயகாந்தன் போல) வரித்துக் கொண்டதால்! ஆனால் இன்னும் கம்பனை முழுமையாக படிக்க இயலவில்லை! ஆர்வம் இருந்தும், பல காரணங்களால் தடைப்பட்டு நிற்கிறது.
சடையன் ‘கவுண்டர்’ என்ற ஒரு கருத்து உண்டு என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன் . அது குறித்து தங்கள் கருத்து?
“சரியாக ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை என்று கிடையாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் ஒரு ஐந்தாறு பாடல்கள் தான் தேரும். மற்று பாடல்கள் எல்லாம் வலிந்து பொருள் கொள்ளலே(contrived)!”- என்று ஜெயகாந்தன் சொல்லுவார்.அது குறித்து தங்கள் கருத்து?
சடையன் ‘கவுண்டர்’ என்ற ஒரு கருத்து உண்டு என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன் . அது குறித்து தங்கள் கருத்து?
ரொம்ம்ம்ப முக்கியம்
அருமை. மிகச்சிறந்த பொருள்
விளக்கம். வாழ்த்துக்கள்…