கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4

ஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்  (1853–1924) தென்னிந்தியாவில் சமீபகாலத்தில் வாழ்ந்த மகான்களில் முக்கியமானவர்.  வேதாந்த ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்த துறவி இவர். அவர் மலையாளத்தில் எழுதிய கிறிஸ்து மத சேதனம் என்ற நூலின் ஆங்கில-வழி தமிழ் மொழியாக்கம் இது.

மற்ற பகுதிகளைப் படிக்க

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பிசுவாமிகளின் கிறிஸ்துமதச்சேதனம்

பகுதி 1

பதிஇயல்

முதற்காரணமும் ஆதிமனிதரின் படைப்பும்

 முதற்காரணம்

ஓ கிறிஸ்தவப்பாதிரிகளே!

உங்கள் தேவனாகிய ஜெஹோவா சூனியத்திலிருந்து உலகைப்படைத்தார் என்று பைபிள் கூறுகிறது. காரணம் விளைவிற்குமுன்னே இருக்கவேண்டும் என்பது தர்க்க நியாயமாகும். முதற்காரணம், துணைக்காரணம் என்று தர்க்கசாஸ்த்திரப்படி காரணங்கள் மூன்று வகையாகும். விளைவு(காரியம்)  முதற் காரணத்துள்ளே மறைந்திருக்கும்.  நிமித்தக் காரணமும் துணைக்காரணமும் செயல்படும்போது காரியம் வெளிப்படும்.

உதாரணமாக ஒரு பானையை எடுத்துக்கொள்ளலாம். பானை, மண்ணிலே மறைந்திருக்கிறது. அது குயவரால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கே மண்ணே முதற்காரணம் ஆகும். குயவன் நிமித்தக்காரணன் ஆவான். சக்கரம் மற்றும் அதை இயக்கும் கோல் ஆகியவை துணைக்காரணங்கள் ஆகும்.

உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள், நிமித்தக்காரணத்தினை மட்டுமே கூறுகிறது. முதற்காரணத்தினையும் துணைக்காரணத்தினையும் சொல்லவில்லை. இது தர்க்க அறிவுக்கு ஒவ்வாததாகும்.

எங்கள் கர்த்தராகிய ஜெஹோவா கடவுள் எல்லாம் வல்லவர்.  ஆகவே அவர் சூனியத்திலிருந்தே எதையும் படைக்கவல்லவர் என்று நீங்கள் வாதம் செய்யலாம். ஆனால் அதுவும் அறிவுக்குப் பொருந்தாது. அனைத்தையும் சரியாக இடையூறின்று ஒழுங்காக இயங்கச்செய்வதே சர்வவல்லமையாகும். ஒரு செயலை ஒழுங்கில்லாமல் செய்வது வல்லமைத் தன்மையாகாது. உதாரணமாகக் கடுகில் மலையைப் புகுத்தும் அற்புதத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கு ஒன்று, கடுகை மலையைவிடப் பெரியதாக்கவேண்டும், அல்லது மலையைவிடச் சிறியதாக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றையும் செய்யாது, கடுகில் மலையைப் புகுத்தமுடியாது. இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாது மலையைக்கடுகில் அடைக்கும் அருஞ்செயலைச் செய்ய இயலாததால் கடவுள் சர்வவல்லமை அற்றவராகி விடமாட்டார்.

அதேகடவுள் தன்னைப்போல இன்னொரு கடவுளைப் படைக்க  முடியாவிட்டாலோ அல்லது அவருக்குத் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஆற்றல் இல்லாததாலோ சர்வவல்லமை இல்லாதவராகிவிடமாட்டார். அப்படித்தான் முதற்காரணத்திலிருந்து உலகைப்படைத்தாலும் கடவுள் தனது சர்வவல்லமையை இழந்துவிடமாட்டார். இந்த வாதத்தினை உங்களால் செரிமானிக்கமுடியாது என்பதை நான் அறிவேன்.

எங்கள் தேவனாகிய ஜெஹோவாவே முதற்காரணமும் நிமித்தக்காரணமும் என்று நீங்கள் வாதிடலாம்.  தர்க்க நியாயப்படி முதற்காரணமே விளைவாக(காரியம்) உருமாறுகிறது. வெள்ளைநிறத்து நூலைக்கொண்டு நெய்த துணி வெள்ளையாகவே இருக்கிறது. அதுபோல கடவுள் உலகிற்கு முதற்காரணமானால், உலகில் உள்ள உயிருள்ள(சேதன) மற்றும் சடப்பொருள்கள்(அசேதன) ஆகியவற்றின் இயல்புகள் அனைத்தும் அவருக்கும் இருக்கவேண்டும். முரண்பட்ட இருவகைத்தன்மைகள் ஜெஹோவாவிற்கு இருப்பது சாத்தியமில்லை.

ஜெஹோவாவாகிய உங்கள் தேவன் பாதி உயிருள்ளவராயும் மீதி உயிறற்வராக இருந்தால் அவருக்குப் பகுதிகள் இருந்தாகவேண்டும். பகுதிகள் உள்ள ஒன்று முதற்காரணமாக வாய்ப்பில்லை. காரியம்(விளைவு) மட்டுமே பகுதிகளைக் கொண்டிருக்கும் காரணத்திற்குப் பகுதிகள் இருக்காது என்பது தர்க்க நியாயமாகும். மண்ணுக்கு பகுதிகள் இல்லை ஆனால் அதனால் விளைந்த பானைக்குப் பகுதிகள் உண்டு. அதே போன்று நூலுக்குப் பகுதிகளில்லை ஆனால் துணிக்குப்பகுதிகள் உண்டு.

ஜெஹோவாகிய கிறிஸ்தவர்களின் தேவனின் படைப்பின் முதற்காரணத்தினைப்பற்றி ஆராயும்போது தெளிவாக அவருக்கு பரம்பொருளுக்குறிய இயல்புகள் ஏதும் என்பது புலனாகிறது.

 ஆதிமனிதரின் படைப்பு

ஓ கிறிஸ்தவப்பாதிரிகளே!

உங்கள் கர்த்தராகிய ஜெஹோவா ஆதி மனிதரான ஆதாமையும் ஏவாளையும் பகுத்தறிவற்றவர்களாகப் படைத்தது ஏன்? அவர்களுக்குப் பகுத்தறிவு இருந்திருந்தால் தம்மைப் படைத்தவனின் கட்டளையைமீறி விலக்கப்பட்டப் பழத்தினை சாப்பிட்டிருக்கமாட்டார்களே? பகுத்தறிவு இருந்திருந்தால் தடைசெய்யப்பட்ட செயலைச் செய்யாமல் இருப்பது சரி என்றும் அதனை செய்வது தவறு என்றும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா?  நல்லது எது? தீயது என்று அறியும் பகுத்தறிவை ஆரம்பத்திலே உங்கள் கர்த்தர் கொடுக்க மறந்தது ஏன்? அவரால் விலக்கப்பட்ட கனியை உண்டபின் அந்தப்பகுத்தறிவு வரவேண்டிய அவசியம்தான் என்ன?

உங்கள் தேவனாகிய ஜெஹோவா ஈடன் தோட்டத்தில் பயனற்றதொரு மரத்தைப் படைக்கவேண்டிய அவசியம் என்ன? அது இருந்த தோட்டத்திலே, ஆதாமையும் ஏவாளையும் உலவவிட வேண்டிய அவசியம்தான் என்ன?

ஒரு தந்தை அழகான விஷப்பழங்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டுவருகிறார். அதை சாப்பிடக்கூடாது என்று தனது குழந்தைகளுக்கு சொல்கிறார். அவர் இல்லாத சமயத்தில் அந்தப்பழத்தின் அழகிலும் நிறத்திலும் தூண்டப்பட்ட அக்குழந்தைகள் அதனைச் சாப்பிட்டுவிடுகிறார்கள். அதனால் அவர்கள் நோய்வாய்ப்பட்டுத் துன்புறுகிறார்கள்.

இந்தத் துன்பத்திற்கு யார் பொறுப்பு? இக்குற்றம் யாருடையது? தகப்பனாருடையதா, இல்லை ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தைகளுடையதா? பகுத்தறிவே இல்லாமல் மனிதரைப் படைத்து, அவர்களுக்கு அருகிலேயே தீயகனிதரும் மரத்தினைப் படைத்த ஜெஹோவா இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமல்லவா!

தடைசெய்யப்பட்ட பழத்தினை உண்டபின்னர் ஆதாமையும் ஏவாளையும் அழிக்காமல் விட்ட ஜெஹோவாவின் செயல் சரிதானா? அந்தப்பழத்தினை உண்டநாளிலேயே அவர்கள் மரணமடைந்திருக்க வேண்டுமல்லவா?  ஒருவேளை அவர் ஆதிமனிதர்களின் மீது கொண்ட கருணையால் மன்னித்துவிட்டார் என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படியானால் இவையெல்லாம் நடக்கப்போகிறது என்று எல்லாம் அறிந்த அவருக்கு இது தெரியாதது ஏன்? அவரை சர்வக்ஞர் என்றல்லவா நீங்கள் சொல்லுகிறீர்கள்!

ஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே! அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா?  தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா?

அப்படியல்ல, அந்த மரத்தின் பழத்திற்கு உண்மையில் பகுத்தறிவை வழங்கும் சக்தியில்லை, அது ஜெஹோவாவின் கட்டளைக்கு அவர்கள் கீழ்படிவது நல்லது என்றும் அதனை மீறுவது தீது என்பதனைக்காட்டும் குறியீடு என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் இந்தவிளக்கத்திற்கு உங்கள் பரிசுத்த வேதாகமமாம் பைபிளில் எந்த ஒரு ஆதாரமும் இல்லையே? மாறாக உங்கள் புனித நூல் ‘விலக்கப்பட்டக் கனியை அவர்கள் உண்டதும் அவர்களது கண்கள் திறந்தன’ என்று தெளிவாக சொல்கிறதே!

சரி ஈடன் தோட்டத்தில் அந்தக் கண்திறக்கும் மரத்தை நட்டுவைத்த ஜெஹோவா அங்கே ஆதிமனிதர்களையும் உலவவிட்டு அதன் கனிகளை உண்ணவேண்டாம் என்று ஆணையிட்டது ஏன்? அவரதுக்கட்டளையை சிரமேற்கொள்வது நல்லது. அவரது ஆணைகளை மீறுவது தீயது என்று அவர்களுக்கு உணர்த்துவதே அவரது நோக்கம் என்று நீங்கள் வாதிடலாம். தனக்கோ மற்றவர்களுக்கோ பயனற்ற இந்தக்கட்டளையை அவர் போடுவதற்கு அவசியம் என்ன?

ஆதி மனிதர்களைப் படைக்கும்போதே ஜெஹோவா அவர்களுக்குப் பகுத்தறிவையும் கொடுத்திருந்தால்  அவர்களுக்கு அவர் தங்கள் கர்த்தர் என்றும், அவருக்குக் கீழ்பணிந்து நடத்தலே நல்லது என்றும் அவரது ஆணையைமீறுதல் தீது என்றும் தெரிந்திருக்குமே? கண்களைத் திறந்து, பகுத்தறிவைத் தரும் கனியைகொடுக்கும் மரத்தினைப் படைக்கும் அவசியம் அவருக்கு இருந்திருக்காதே!

ஆதிமனிதர்கள் தமது கட்டளைகளுக்குக் கீழ்படிகிறார்களா, இல்லையா என்பதை அறிவதற்காகத்தான் அந்த மரத்தினை ஜெஹோவா படைத்தார் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் முக்காலும் உணரும் ஆற்றல் அவருக்கு இல்லை என்று பொருள்படுமே!  உங்கள் ஜெஹோவா சர்வக்ஞர் அல்லரா?

ஜெஹோவா ஆதிமனிதருக்கு சுதந்திரமாக செயல்படும் உரிமையை அளித்திருந்தார். எனவே அவர்கள் செய்த தவறுக்கு அவர்களே பொறுப்பேற்கவேண்டும் என்று நீங்கள் வாதாடலாம். ஒரு தகப்பனார் தமது பிள்ளைகளுக்கு சுதந்திரம் அளித்திருந்து அவர்கள் குற்றம் செய்தால் அதற்கு யார் பொறுப்பு? தந்தையா அல்லது பிள்ளைகளா? பகுத்தறிவில்லாத பிள்ளைகளுக்கு சுதந்திரம் அளித்தது சரிதானா?

உங்களது தேவனால் தன்னைப்போல அச்சு அசலாகத் தனது சாயலில் படைக்கப்பட்ட மனிதனை ஏமாற்றுவதற்கும், அவர்களுக்குத் தீங்கு செய்வதற்கு சாத்தானால் எப்படி முடிந்தது? அப்படி சாத்தானால் ஆதி மனிதர்கள் ஏமாற்றப்படும்போது அங்கே எங்கும் நிறைந்தவராக நீங்கள் போற்றும் ஜெஹோவா இருக்கவில்லையா? அவர்கள் ஏமாற்றப்படுவதை சர்வக்ஞரான அவர் அறியவில்லையா? எங்கள் தேவன் எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர் என்று நீங்கள் சொல்வது புனைந்துரையா? வெற்றுப்புகழுரையா? இல்லை முகஸ்துதிதானா?

சாத்தானின் ஏமாற்றும் நோக்கத்தினை எங்கள் கர்த்தர் அறிவார் ஆனால் அவனது தீச்செயலைத்தடுக்கவில்லை என்று நீங்கள்  வாதிடலாம். அவனது தவறான செயல்களை அவர் தடுக்காதது ஏன்? அவரது சர்வவல்லமை பொய்யானதா? என்ன நடக்கிறது என்பதை அறிந்திருந்தும் அவர் அதனை அனுமதித்திருந்தால் கருணையற்றவரா அவர்? கொடியவிலங்கிடம் அகப்பட்டு பிள்ளைகள் துன்புறுமானால் அவர்களின் தந்தை அதனைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? தம் குழந்தைகளைக் காப்பாற்ற ஓடோடி வருவாரா இல்லையா? அப்படித் தமது பிள்ளைகளைக் காப்பாற்றவராத தந்தை ஒரு தந்தையா? எல்லா மனிதர்களுக்கும் எங்கள் ஜெஹோவா தந்தை என்று நீங்கள் சொல்வது சரிதானா?

ஜெஹோவாவின் நோக்கம் அப்போது சாத்தானை விட்டுவிட்டு பின்னர் தண்டிப்பதும்; மனிதனை அப்போது துன்புறவிட்டுவிட்டு, பின்னர் இரட்சிப்பதும் என்று நீங்கள் வாதாடலாம். அது விசித்திரமான செயலாகும்.  நோயையும் மருந்தையும் ஒரேசமயத்தில் ஒருவர் காசுகொடுத்து வாங்கினால் கைகொட்டி சிரிக்காதா உலகம்?

உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள் சாத்தான் மனிதரின் மனதைக் கெடுத்தான் என்று சொல்கிறது. அதே பைபிள் தன்னால் படைக்கப்பட்ட தேவதை ஒன்று கெட்டுப்போய்விட்டதால் கர்த்தரால் சபிக்கப்பட்டு சாத்தானானது என்றும் சொல்கிறது. மனிதரின் புத்தியைக் கெடுக்க சாத்தான் இருந்தது என்றால் அந்த சாத்தானின் புத்தியைக்கெடுத்த தீயசக்தி யார்? அப்போது கர்த்தராகிய ஜெஹோவைத்தவிர யாரும் இல்லையே?

தேவதையின் புத்தியைக் கெடுத்தது ஜெஹோவாதானா?

சாத்தான் ஒரு பாம்பின் ரூபத்தில் வந்து ஏவாளின் மனதைக்கெடுத்தான், அதனால் எல்லாப்பாம்புகளையும் ஜெஹோவா சபித்தார் என்று பைபிளின் ஆதியாகமம் சொல்கிறது. அதேசமயம்  கடவுளின் ஆணையை மீறிப் பாவம் செய்யத் தூண்டிய சாத்தானுக்கு எந்த தண்டனையையும் அவர் கொடுக்கவில்லை என்றுவேறு தெரிகிறது. குற்றம் ஏதும் செய்யாத நிரபராதிகளான பாம்புகள் தண்டிக்கப்படுதல் நீதியா? பாவம் செய்த சாத்தானைத் தண்டிக்காத உங்கள் கர்த்தரின் நீதிமுறை சரிதானா? ஆதிமனிதர்கள் செய்த தவறுக்கு அவர்கள் சந்ததியினரையும் சேர்த்து சபித்தது சரிதானா? கர்த்தர் நீதிமான் என்று நீங்கள் சொல்வது சரிதானா?

“பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும்பாவிகளாக இருப்பதைக் கர்த்தர் அறிந்தார். அவர்கள் பாவஎண்ணங்களையே கொண்டிருப்பதைக் கர்த்தர் பார்த்தார். கர்த்தர் மனிதர்களை பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார் (ஆதியாகமம் 6:6-7).

தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்? தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே? ஜெஹோவால் படைக்கப்பட்ட சாத்தான் பாவம் செய்து அவரால் படைக்கப்பட்ட மனிதர்களையும் கெடுத்துப் பாவிகளாக்கிவிட்டான். அப்படியானால் சாத்தானின் குற்றங்களைப் பற்றித்தானே அவர் கவலைப்பட்டிருக்கவேண்டும்? ஆனால் அப்பாவி மனிதர்களைப்பற்றி அவர் துயருற்றதேன்? படைப்புக்குமுன்னரே இப்படிப்பட்டத் தவறுகள் நடக்கும் என்று அவருக்குத் தெரியாதா? அவர் எல்லாம் அறிந்தவர் என்றல்லவா நீங்கள் சொல்கிறீர்கள். தெரிந்திருந்தால் அவருக்குக் கருணையே இல்லையா? தெரிந்துகொண்டே துயர்ப்படுவது போல நடித்தாரா?

என்ன நிகழப்போகிறது என்று உறுதியாக அறிந்த ஒருவர் அதற்குத் தகுந்தபடித் திட்டமிட்டு செயல்படுவார் அல்லவா? அப்படியானால் உங்கள் தேவனாகிய ஜெஹோவாவின் திட்டப்படியே எள்ளளவும் மாறாமல் அல்லவா எல்லாமே நடந்திருக்க வேண்டும். ஏடாககூடமாக ஏதாவது நடந்திருந்தால் உங்கள் கர்த்தர்தானே அதற்குப் பொறுப்பேற்கவேண்டும்? அப்படியானால் ஜெஹோவாவின் சர்வவல்லமையும் சர்வக்ஞதையும் பங்கமாகுமே?

அப்படியில்லை, கர்த்தராகிய ஜெஹோவாவின் சித்தப்படியே எல்லாமே நடந்தது, எதுவும் ஏடாகூடாமாக நடக்கவில்லை என்றுகூட நீங்கள் வாதிடலாம்.  அவ்வாறானால் முதல் பாவத்திற்கு ஆதிமனிதராகிய ஏவாளும் ஆதாமும் பொறுப்பு என்பது அநீதியாகாதா? உங்கள் தேவனே அதற்கு பொறுப்பல்லவா? உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள், எல்லாமே கர்த்தராகிய ஜெஹோவாவின் சித்தத்தின்படியே, முன்னரே அவர் முடிவுசெய்ததன்படியே நடக்கின்றன என்று சொல்வதைப் பாருங்கள்.

உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மை கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார்  —  (எபேசியர் 1:4).

 நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மை தேர்ந்தெடுப்பதைப்பற்றி ஏற்கனவே திட்டமிட்டிருந்தார்;  ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம்  —  (எபேசியர்,1 :11).

“தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார்”  —  (ரோமர் 8:27).

“தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார், அம்மக்களைத்தம் குமாரனைப்போல இருக்கும்படி செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற்பேறானவராய் இருக்கவேண்டும் என விரும்பினார்” —  (ரோமர் 8: 28).

“எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். அவர்களைத்தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமைப்படுத்தினார்”  —  (ரோமர், 8:30),

“இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்று தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகு காலத்துக்குமுன்னரே தேவன் இத்திட்டத்தை வகுத்திருந்தார்”  —                                  (அப்போஸ்தலர் 2:23).

“சகோதர சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியாலும் உண்மையின்மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தினாலும்  இரட்சிக்கப்படுகிறீர்கள்”  –  (தெசலோனிக்கேயர் 2:13).

முதற் படைப்பைப் பற்றிய மேற்கண்ட ஆய்வு  ஜெஹோவாவின் திட்டப்படியே முதற்பாவம் நிகழ்ந்தது என்பது தெளிவு படுத்துகிறது.  ஜெஹோவாவின் தவறுக்கு ஆதிமனிதர்களையும் அவர்களது வம்சாவளிகளான மனிதக் குலத்தினை தண்டித்தல் அநீதி என்பதும் உறுதியாகிறது.

 ***   ***   ***

 (தொடரும்)

15 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4”

 1. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுவது மட்டுமே இத்தகைய விஷயங்களில் பலனை தரும். கிருத்தவனான நான் தெரு முனை மிஷனரி பிரசாரங்களை சிறுவயதிலிருந்தே வெறுத்திருக்கிறேன். அந்த பேச்சு என் சக இந்து நண்பர்களின் முகங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் விரும்பத்தக்கதல்ல, அது அவர்களின் மனதில் ஏற்படுத்தும் அசொவ்ய்கர்யமான எண்ணங்களின் வெளிப்பாடு. அவர்களுக்கு அந்த அசொவ்கர்யம் மட்டுமே தெரியும் அதற்கான காரணமும் புரியாது, விளக்கவும் தெளிவிருகாது. இந்து மதத்தின் கோட்பாடுகளோ தத்துவங்களோ தெரியாது, அந்த கிறித்துவ பிரசாகர் சொல்லும் கருத்துக்களுக்கு எதிர்வினை சொல்லவேண்டும் என்ற அவா இருந்தாலும், சொல்ல இயலாது. இந்து மதம் வெகுஜனங்களால் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மதம் என்றே நினைகிறேன். கிருத்துவமும் இஸ்லாமும் தங்கள் கோட்பாடுகளை தங்கள் மதத்தினருக்கு சிறு வயதிலிருந்தே போதிகின்றன , நம்பிக்கையை வளர்கின்றன. இது போன்ற அமைப்போ செயல்பாடோ இந்து மதத்தில் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட இந்து மதத்தில் இதை கொண்டுவருவது சவாலானது. ஆனாலும் இதை செய்தாக வேண்டும். இது இரண்டு விதங்களில் நன்மை பயக்கும், முதலில் இந்துக்களுக்கு இந்து மதத்தினை தெளிவாக விளக்கும், இரண்டு தெளிவு பெற்ற அந்த மக்கள் மூலமும் (அல்லது அந்த அமைப்பின் மூலமோ) பிற மதத்தினரிடமும் இந்து மதத்தினை பற்றிய தெளிவை வளர்க்கும். இந்தியாவில் நிலவி வரும் மத பிரச்சனைகளுக்கு இத்தகைய முயற்சி முற்றுப்புள்ளி வைக்கும்.

 2. ஆங்கில நூலை படித்தாயிற்று. இங்கு மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் முடியட்டும். பின்னரே கருத்து பரிமாற்றம் செய்வது சரியாக இருக்கும். இதற்கிடையில், ஆங்கில மூலமும் தமிழ் மொழி பெயர்ப்புனம் எப்படியிருக்கின்றன?

  ஆங்கிலமூலத்தில் இறுதியில் ஆசிரியரின் சிறுவரலாறு இணைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சுவாமிகள்க்கு பெற்றொடிட்ட பெயர் அய்யப்பன். செல்லப்பெயர் குஞ்சன். பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் குஞ்சனை வகுப்பைக் கவனிக்கும் மானிட்டராக வைத்தார். அதாவது சட்டாம்பிள்ளை. (மலையாளமும் அதே). சட்டாம்பி என்ற பெயர் அவர் சந்நியாசம் ஏற்றபின் மக்களால் அழைக்கப்பட்டு சட்டாம்பி சுவாமிகள் ஆனார்.

  ஆனால், இங்கே தமிழ் மொழிப்யர்பாளர் சட்டம்பி என்றெழதுகிறார்.

  ஆங்கில மொழிபெயர்ப்பு, தெளிவாக எழுதப்பட்டது மட்டுமில்லாமல், படிப்போர் எவராகவும் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, இந்து மத, குறிப்பாக சைவ சிந்தாந்தச்சொற்களுக்கு விளக்கம் பக்கத்தில் அடிக்குறிப்பாக இணைத்துள்ளார்.

  இவர் அப்படிச்செய்யவில்லை. ஒருவேளை படிப்போர் அனைவருமே வீர சைவமோ, அல்லது சைவ சிந்த்தாந்தித்திலே அறிவைப்பெற்றோராக இருக்க வேண்டுமென்றூ நினைத்துவிட்டார் போலவும்.

  சட்டாம்பி சுவாமிகள் இந்நூலை எழுதியது கிருத்துவ மிசுநோரிகளால் இழுக்க்ப்படும் பாமர மக்கள் படித்து தெரியவே.

 3. இன்னூலாசிரியர் தன் முகவுரையில் தான் ஏன் இந்நூலை எழதினேன் என்று சொல்கிறார். அதை ஜோ படிக்கட்டும். கிருத்துவ மிசுநோரிகள் மதமாற்றப் பரப்புரையைச் செய்யும் போது இந்து மதக்கடவுளரைச் சாத்தான்கள் என்றும் இந்துமதக்கொள்கைகள் உங்களுக்கு ஆன்ம பலனைத்தாராவென்றும் சொல்லி, கிருத்துவமதமே தரும் என்று கிருத்துவ மதக்கொள்கைகளான: மனிதனின் பிறப்பில் வரும் மூல பாவம்; இயேசுவின் தெயவத்தனமை; விவிலியத்தில் காட்டப்படும் தேவனின் குணங்கள், திருத்துவக் கொள்கை, பரிசுத்த ஆவி, தேவகுமாரன் – இவர்களே உங்களுக்கு ஆன்ம வழிகாட்டிகளும் மறு உலக நல்வாழ்க்கையையும் தரும் என்று பரப்புரை செய்து மக்களை மதமாற்றம் செய்கிறார்கள். இன்னூல் அப்படிப்பரப்புரை செய்யும் கிருத்துவ மதப்போதகர்களை நோக்கி அவர்களுக்குச் சவால் விட்டு எழுதப்படுகிறது. ஒவ்வொரு தலைப்பும் தொடங்கும் முன், ஓ கிருத்துவ மதப்பொதகர்களே! என்று தொடங்குகிறது. அதாவது, அவர்கள் இந்நூல் சொல்லும் கிருத்துவமதக்கொள்கைகளின் ஏன் பொய்யுரைகள் என்பதனை எதிர்க்க வேண்டுமென்றும் அதைச் செய்ய முடியாது ஏனெனின்ல் இங்கு வைக்கப்படும் வாதங்கள் மறுக்கவியலா உண்மைகளே என்பதால அச்சவால்கள் விடப்படுகின்றன். அச்சவால்களை பாதிரிமார்கள் ஏற்றார்களா? என்ப்துதான் கேள்வி. ரசல் தான் ஏன் கிருத்துவனில்லை என்றெழதிய போது, அதைப்படித்த பாதிரிமார்களும், சில தீவிர கிருத்தவர்களும், நாங்கள் ஏன் கிருத்துவர்கள் என பதிலுரைகள் எழுதினார்கள்; இப்போதும் அவை இணையத்தில் கிடைக்கின்றன.

  1890ல் எழுதப்பட்ட இந்நூலுக்கு ஏதாவது எதிர்ப்புக்கள், பதிலுரைக்கள் விடப்பட்டனவா என்று தெரியவில்லை. இல்லையென்றால், இந்நூல் எவரை நோக்கி சவாலாகப் பேசப்பட்டதோ, அவர்கள் உதாசீனம் செய்துவிட்டார்கள் என்றே பொருள். அதாவது இந்நூலின் நோக்கம் நிறைவேறவில்லை.

  இன்னூலில் உள்ளே கிருத்தவ மதப்போதகர்களை முதலில் விளித்து, பின்னர் கட்டுரையில் உள்ளே, நீங்கள் இப்படிச்சொல்கிறீர்கள் அதற்கு என் பதில் என்றூ திரும்பத்திருமப் எழுதுகிறார். அதாவது முழுக்க முழுக்க அப்பாதரிகளையே கணக்கிலெடுத்துப் பேசி, அவர்களை மறுப்புரை எழுத சவால் விடுகிறார். ஆனால், முகவுரையில், சொல்வது: யான் இன்னூலை எழுதும் நோக்கம்: இதைப்படித்து மலையாளி இந்துக்களில் ஞானவான்கள் கிருத்துவ பாதிரிகள் இப்படி பொய்யுரைகளை மக்களிடையே பரப்பும் போது நீங்கள் சும்மா இருக்காமல் இன்னூலில் சொல்லப்பட்ட வாதங்களை வைத்து எதிர் உரைகளை மக்கள் முன் வையுங்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே மதமாற்றத்தைத் தடுக்க முடியும் என்கிறார்.

  இன்னூலில் எழுதப்பட்ட நோக்கங்கள்: மலையாளி இந்துக்களில் ஞானவான்கள் கிருத்துவ மதபோதகர்களின் விதண்டவாதங்கள்; அதாவது விவிலியத்தில் சொல்லப்படாதவைகளை வைத்து கட்டப்பட்டவைகளை எதிர்க்க வேண்டியது. அதை எப்படிச்செய்வது? தெருமுனைப பரப்புரை மூலம் மட்டுமா போதகர்கள் செய்கிறார்கள்? இல்லை…கூட்டங்களில். அவை தேவாலய‌ங்களில் ஒவ்வொரு ஞாயிறன்றும், நூலகளாக எழுதப்பட்டு விநியோகம் செய்து; ஆவி எழுப்புதல் என்னும் பெரும் மக்கள் திரள்களில்.

  1890 அப்புறமும் பெருவாரியாக மலையாளிகளும் தமிழர்களும் கிருத்துவமதமேற்றார்கள். இந்நூல் ஏதாவது அதைத்தடுக்க உதவியதா? மலையாளி இந்துக்களில எவராவது இந்நூலை வைத்து மறுப்புரை பரப்பினார்களா? மக்களை அறிய வைத்தார்களா?

  ஜோ சொன்னமாதிரி, இந்துக்கள் தங்கள் மதத்தைப் பற்றித் தெரிந்து கிருத்துவ மத போதகர்களுக்கோ மக்களுக்கோ சொல்லட்டும் என்று இந்நூல் எழுதப்படவேயில்லை. இந்துமதத்தைப்பற்றி ஒரு சொல் கூட இந்நூலில் இல்லை.

  இன்னொன்றும் சொல்கிறார்: தனக்குப் போதிய பொருளுதவி இல்லையாதலால் இந்நூல் மலையாளத்தில் வெளியிடப்படுகிறது. அப்படியென்றால், சில பிரதிகளே வந்திருக்கும். இதே நூல் ஆங்கிலத்தில் அப்போதே மொழி பெயர்க்கப்பட்டு ஐரோப்பாவிலோ, பிரிட்டனினிலோ, அமெரிகாவிலோ, வெளியிடப்பட்டிருந்தால், கண்டிப்பாக இவரின் வாதங்கள் பரவியிருக்கும். கண்டிபாக மறுபதில்கள் நூல்களாக எழுதப்பட்டிருக்கும். காரணம், இன்று போலில்லாமல், அன்று மதத்தைப் பற்றி சட்டை செய்யாத மக்கள் குறைவு. தீவிரமாக கிருத்துவ மதம் ஏற்கப்பட்டது மட்டுமில்லாமல் பல தீவிர பிரிவுகள் 1890 களில் பரவின.

  இந்நூல் மலையாளத்தில் மட்டுமே இருந்த படியால், வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது என்றே தோன்றும். ஆனால் ரசலில் நான் ஏன் கிருத்துவனில்லை என்பது உலகப்புகழ் பெற்றது. இத்தனைக்கும் அஃதொரு சில பக்கக்கட்டுரையே.

 4. அன்பர் ஜோ………குழப்புகிறதே……..

  ஆனால் இங்கு நீங்கள் பதிந்துள்ள கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. சரியான கருத்துக்கள்.

 5. படமே தப்பு. ஒரு ஏஞ்சல் ஆதாம்-ஏவாளை விரட்டுகிறது. ஆனால் சட்டாம்பி சுவாமிகள் அத்தியாயத்தில் ஜெஹோவா- பிதாவே விரட்டுகிறார். அவரது படம் வயதான மனிதரைப்போல இருக்கும். அப்படிப் படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. எடுத்துப்போட்டிருக்கலாமே சரியாக?

 6. வரவேற்புக்கு நன்றி ஸ்ரீ ஜோ அவர்களே.
  காலனி ஆதிக்கத்திலும் அதன்பிறகு அதன் மாயையிலும் இருந்த ஹிந்துக்கள் இப்போது நிராகரணம், சேதனம் என்ற தமது தர்க்கரீதியிலானப்பார்வைகளை மாற்று மதங்கள் அரசியல் கருத்தியல்கள் ஆகியவற்றின் மீது வைக்கும் காலம் இது. உங்களைப்போன்ற கிறிஸ்தவர்கள் இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 7. ஸ்ரீ ஜோ
  “கிருத்துவமும் இஸ்லாமும் தங்கள் கோட்பாடுகளை தங்கள் மதத்தினருக்கு சிறு வயதிலிருந்தே போதிகின்றன , நம்பிக்கையை வளர்கின்றன. இது போன்ற அமைப்போ செயல்பாடோ இந்து மதத்தில் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட இந்து மதத்தில் இதை கொண்டுவருவது சவாலானது”.
  ஹிந்துமதம்(?) வெறும் நம்பிக்கைகள் கோட்பாடுகளின் குவியல் அன்று. அது வாழ்க்கை முறை. அதைப்பெரியவர்கள் வாழும்போது அவர்தம் பிள்ளைகள் இயல்பாகவே கற்றுக்கொள்கின்றனர். ஹிந்துசமயத்தின் ஆழ்ந்தக்கருத்துக்கள் அனுபவங்கள் ஆகியவை காலட்ஷேபம், உபன்யாசம், சொற்பொழிவு, நாடகம், ஹரிகதை, பொம்மலாட்டம், கூத்து என்று பலவகைகளில் இயல்பாக அனைவருக்கும் சமூகப்படுத்தப்பட்டே வந்தன. நிறுவனப்படுத்தி மையப்படுத்துதலை அது ஏற்கவில்லை எனினும். பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சத்வித்யையை அனைவருக்கும் போதித்துவருகின்றன.

 8. பி எஸ் அவர்களுக்கு நன்றி.
  சட்டம்பி என்று ஏன் பயன்படுத்துகிறேன்? இணையத்தில் தேடியபோது அகப்பட்ட முக்கியப்பதிவுகள் சட்டம்பி என்றே காட்டியதால் அப்படி எழுதினேன். அப்படியும் அழைக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். மலையாளி நண்பர்களிடம் விசாரித்தால் தெளிவு கிடைக்கலாம்.
  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF

 9. திரு பி எஸ் சைவம் தொடர்பான அடிக்குறிப்புகள் ஏன் இல்லை என்று கேட்டுள்ளார். சிலவைத்தேவையில்லை என்று நினைத்தேன். சிலவற்றைப்புதிதாகவும் கொடுத்தேன். சைவ சித்தாந்தம் பற்றியப்பதங்கள் ஏதேனும் தங்களுக்குப்புரியவில்லை என்றால் குறிப்பிட்டால் அவை விளக்கப்படும். அடியேனுடையை சைவாச்சாரியார்கள் இந்த தளத்தினை வாசிப்பவர்களுல் உண்டு. ஆகவே அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். இந்த நூல ஆங்கிலம் அறிந்தவர்களுக்கானது. தமிழ் மக்களுள் பெரும்பாலானவர்களுக்கு சைவசித்தாந்தக்கலைச்சொற்கள் பரிச்சயமாகவே இருக்கும் என்பதால் எல்லா அடிக்குறிப்புகளையும் அவசியம் என்று அடியேன் கருதவில்லை.

 10. B S
  “ஜோ சொன்னமாதிரி, இந்துக்கள் தங்கள் மதத்தைப் பற்றித் தெரிந்து கிருத்துவ மத போதகர்களுக்கோ மக்களுக்கோ சொல்லட்டும் என்று இந்நூல் எழுதப்படவேயில்லை. இந்துமதத்தைப்பற்றி ஒரு சொல் கூட இந்நூலில் இல்லை”. ஹிந்து மதத்தினை பாதுகாப்பதற்காகவே மதமாற்றத்தினை தடுப்பதற்கே இந்த நூல் எழுதப்பட்டது என்பதை ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தெளிவாக தனது முன்னுரையில் எழுதிவிட்டார். கிறிஸ்தவத்தின் இறைக்கொள்கை என்ன? ஆன்மாவின் இலக்ஷணங்கள் என்ன என்று அவர் விவாதிக்கிற சைவசித்தாந்த நோக்கே ஹிந்து நோக்குதான். ஹிந்து என்பது வைதீகம் வைதீகமல்லாத அனைத்து ஆன்மிக தரிசனங்கள் சமயங்கள் ஆகியவற்றை இணைக்கிறப் பொதுச்சொல் கருத்தாக்கம்.

 11. பி எஸ் “இந்நூல் மலையாளத்தில் மட்டுமே இருந்த படியால், வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது என்றே தோன்றும். ஆனால் ரசலில் நான் ஏன் கிருத்துவனில்லை என்பது உலகப்புகழ் பெற்றது. இத்தனைக்கும் அஃதொரு சில பக்கக்கட்டுரையே”.
  இந்த நூல் சுவடி தெரியாமல் மறைந்துவிட்டது என்பது உங்களுடையக்கற்பனையோ விருப்பமோ அடியேனுக்குத்தெரியாது. ஆனால் அது உண்மையில்லை. இந்த நூலைப்பற்றி எனது மலையாள மொழி பேசும் நண்பர்களிடம் கேட்டேன். எல்லா ஹிந்துக்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளையும் அவரது இந்த அருமையான நூலையும் தெரிந்திருக்கிறது. இந்த நூலை கிறித்தவர்கள் விவாதித்தார்களா? இல்லையா தெரியாது? ஆனால் இன்றைக்கு கூட கிறிஸ்தவர்களோ அவர்களுடைய ஆதரவாளர்களான மதச்சார்பின்மைவாதிகள் இதைப்பற்றி விவாதிப்பதற்கு வரவில்லை என்பதே இந்த நூலின் ஆழ்ந்த தர்க்கச்சிறப்பைக் காட்டுகிறது. இந்த நூலுக்கு ஒப்புமை சொல்லவேண்டுமென்றால் ஆரியசமாஜத்தை நிறுவிய தவத்திரு தயானந்த சரஸ்வதியின் சத்யார்த்தப்பிரகாசத்தை குறிப்பிடவேண்டும். சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞான சித்தியார், சங்கற்ப நிராகரணம் ஆகிய நூல்களில் காணப்படும் விவாத அணுகுமுறை இந்த நூலுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கலாம். பேரூர் ஸ்ரீலஸ்ரீ சாந்தலிங்க அடிகளின் கொலைமறுத்தல் என்னும் நூலும் கூட இதேபோன்று விவாதிக்கும் அணுகுமுறையில் படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

 12. இன்றைய தி இந்து தமிழ் இ பதிப்பில் உலகம் இன்றுடன் தீயினால் 7,10,2015 அழிந்துவிடும் என்று பிடடல்பியாவில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறியதாக செய்தி வந்துள்ளது .( இம்மாதிரி பாதிரிகளின் உளறல்களை நீங்களும் பாருங்கள் நண்பன்களே) பிறேமதாசன் திருமேனி .

 13. மன்னியுங்கள் நண்பர்களே அவசரத்தில் நண்பர்களே என்பதர்க்குப்பதிலாக தவறான வார்த்தை எழுதிவிட்டேன் அதற்காக என்னை மன்னியுங்கள். அன்புடன் , பிறேமதாசன் திருமேனி .

 14. ஐயா முழுதும் புத்தகமாக உள்ளதா இருந்தால் எங்கு கிடைக்கும் கூறவும்

 15. ஐயா வணக்கம். மூலநூலை படித்து பெருமிதப்பட்டவன். மலையாள நூலைப்போன்ற வடிவமைப்பு கொண்டு இது தமிழ் நூலாய் வரவேண்டும். சகோதரர் ஆங்கில வழியில் சட்டாம்பி என மொழிபெயர்க்கவில்லையென வருத்தப்படுகிறார். சட்டம்பிஸ்வாமிகள் என்பதே சரி. இதுபோல் தமிழும் த்ராவிடமஹாத்மியமும் என்ற ஸ்வாமிகளின் நூல் நீண்ட போராட்டத்திற்குப் பின் கிடைக்கப்பெற்று பதிப்பித்துள்ளனர். சமஸ்கிருத கலப்பிலே மலையாளம் வந்தது என்னும் மலையாள அறிவுஜீவிகளின் கன்னத்தில் ஓங்கி அடித்து இது தமிழ் தந்த கொடை என்கிறார். அவசியம் மொழிபெயர்ப்பு வேண்டிய நூல்.
  மேலும் விமர்சனத்தில் இந்த நூலால் அன்று பலனிருந்ததா என்பதுபோல் கேட்டிருந்தார். நூலை உருவாக்கிய சுவாமிகள் இதனை பல பேரை பேச்சாளராக்கி கிறித்தவ பிரச்சாரத்துக்கு எதிர்வாதம் செய்து பெருமளவு எடுத்ததை மலையாள அணிந்துரை கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *