மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1

நான் கடந்த 15 ஆண்டுகளாக உண்மையாக ஆத்மார்த்தமாக நம்பி இவர் வர வேண்டும் இவர் மூலமாக இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்காலம் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து செய்த பிரார்த்தனைகளின் பிராசரங்கள் அனைத்தும் பலித்து அவர் பிரதமர் ஆன பொழுது அளவிட முடியாத மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அடைந்தேன்.

அவர் கலிஃபோர்னியாவுக்கு வரவிருக்கிறார் என்று தகவல் வந்த பொழுது அவருக்கு அளிக்கப் படவிருக்கும் வரவேற்பு இந்த அளவு பிரமிப்பாக அமையும் என்று நினைக்கவில்லை. அவரின் வரவேற்பு ஏற்பாடுகளுக்காக முதலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டநூற்றுக்கணக்கானோரின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுதே புரிந்து விட்டது இது மாபெரும் மிகப் பிருமாண்டமான ஒரு நிகழ்ச்சியாக அமையப் போகிறது என்று. மில்பிடாஸ் ராயல் பாலேஸ் ஹோட்டலில் நடந்த முன்னேற்பாடு கூட்டத்தின் பொழுது அந்த ஹோட்டல் அரங்கமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது  ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு கூட்டத்திற்கே பெரும் அளவில் மக்கள் வந்தது நான் எதிர்பாராதது. அன்றே ஆயிரக்கணக்கானோர் பல்வேறு வேலைகளையும் செய்ய முன் வந்தனர்.

கிட்டத்தட்ட 500 இந்திய அமைப்புகள் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினர். தமிழ் நாட்டு அமைப்பின் சார்பாக பாரதி தமிழ்ச் சங்கம் மட்டுமே நிகழ்ச்சி உறுப்பினர் அமைப்புகளில் ஒன்றாக கலந்து கொண்டது. அதன் ஏற்பாடுகளை நானும் நண்பர் ராகவேந்திரனும் ஒருங்கிணைக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒரு கோட் அளித்து அதன் மூலமாக அதன் உறுப்பினர்களை பதிவு செய்யக் கோரினார்கள். பாரதி தமிழ்ச் சங்கம் மூலமாக கிட்டத்தட்ட 200 பேர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் பதிவு செய்தனர். பின்னர் பதிவு செய்வதற்கான அவகாசம் முடிந்த பிறகு இன்னும் ஒரு நூறு பேர்கள் காலதாமதமாக சேர்வதற்கு ஆர்வம் காட்டினர்.

modi-CA-visit-4 modi-CA-visit-1

இப்படி ஒரு 500 அமைப்புகள் மூலமாகவும் தனியாகவும் கிட்டத்தட்ட 50,000 பேர்கள் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கைக் கூடிக் கொண்டே சென்றது. இப்பகுதியில் கிட்டத்தட்ட 5 லட்சம் இந்தியர்கள் வசிக்கக் கூடும் அவர்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர்கள் மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெரும் ஆர்வம் காட்டியிருந்தனர். ஆனால் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அரங்கின் கொள்ளளவோ வெறும் 18000 மட்டுமே. ஆகவே ஒவ்வொரு அமைப்பினர் கேட்டுக் கொண்டிருந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அழைப்புகளையே நிர்வாகிகளினால் அளிக்க முடிந்தது.

ஆக நாங்கள் கோரியிருந்த 200 இடங்களுக்கு வெறும் 65 அழைப்புகளே அளிக்கப் பட்டன. அந்த 65 அழைப்பிதழ்களையும் அனுமதி கோரியிருந்த 200 பேர்களுக்கு பிரித்துக் கொடுப்பதென்பது பெரும் சவாலாக இருந்தது. அதன் பிறகு கெஞ்சிக் கேட்டு இன்னும் ஒரு 35 சீட்கள் வாங்கி வீட்டுக்கு ஒருவர் அல்லது இருவர் என்று பிரித்து பகிர்ந்து கொடுத்தோம். கிடைக்காத பலருக்கு பெரும் மனக் குறைகள் கோபதாபங்கள் எல்லாம் உருவாயின. பதிவு செய்ய மறந்தவர்களிடமிருந்து எப்படியாவது இடம் பெற்றுக் கொடுங்கள் என்று கேட்டு கடும் அழுத்தங்கள் வரலாயின. ஒரு பாரதப் பிரதமருக்கு இந்த அளவுக்கு ஆதரவு பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் என்பது எனக்கு பிரமிப்பாக இருந்தது. நான் மோடியை நன்கு அறிவேன் அவரை ஆதரித்தவன் அவரைப் பின் தொடர்ந்தவன் ஆனால் இத்தனை ஆயிரம் பேர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பும் ஆர்வமும் அவர் மீது கடந்த 2 ஆண்டுகளுக்குள் உருவானது என்பது பெரும் ஆச்சரியமாக இருந்தது.

மோடியின் கூட்டத்திற்கான செலவு கிட்ட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர்கள் அதாவது 6.5 கோடி ரூபாய்கள். அந்த செலவை பெரும்பாலும் கலந்து கொள்ளும் மக்கள் தானாக முன் வந்து அளித்த நன்கொடைகள் மூலமாகவும் நிகழ்ச்சி சிறப்பு மலரின் விளம்பரங்கள் மூலமாகவும் கடைகள் போட அனுமதிப்பதன் மூலமாகவும் டி ஷர்ட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலமாகவும் இப்பகுதி வாழ் கொடையாளர்கள் மூலமாகவும் திரட்டினார்கள். இதை ஏற்பாடு செய்வதற்காக என்றே பிரத்யோகமாக பிரதமர் மோடி வரவேற்பு குழு ஒன்று தற்காலிகமாக உருவாக்கப் பட்டு அதில் பல்வேறு அமைப்பினர்களும் நிர்வாகிகளாக அமர்த்தப் பட்டனர். பெரும்பாலான வேலைகளை இப்பகுதியின் இந்திய அமைப்யின் தொண்டர்கள் கச்சிதமாக செய்தனர். அவர்களின் கட்டுப்பாடும், பொறுமையும், சுயநலமில்லாத அயராத உழைப்பும் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மகத்தான வெற்றிக்கு முக்கியமான காரணம்.

துபாய், ஆஸ்த்ரேலியா, நியூயார்க் நகரங்களின் பொழுது பயன் படுத்தப் பட்ட அதே நிகழ்ச்சி ஏற்பாட்டு மென்பொருள் கட்டுமானங்கள் இந்த நிகழ்ச்சிக்காகவும் பயன் படுத்தப் பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்காக ஒரு போர்ட்டல் பயன் படுத்தப் பட்டது. அதில் பெயர், முகவரி, ஃபோன் நம்பர், மெயில் ஐடி, வயது விபரங்கள் போன்றவை பெறப் பட்டு பதிந்து கொள்ளப் பட்டன.

தனியான ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் இணைய தளங்களும் உருவாக்கப் பட்டன. உணவு, விருந்தினர்களை அழைத்தல், அலங்கார அமைப்புகள், கலை நிகழ்ச்சிகள், ஆடியோ, வீடியோ, அரசு துறைகளுடன் தொடர்பு, போக்குவரத்து, விழா மலர், விளம்பரங்கள், அனுமதி சீட்டு விநியோகித்தல், பாதுகாப்பு தொடர்புகள், ஹோட்டல் ஏற்பாடுகள், சந்திப்புகள் என்று ஏராளமான குழுக்கள் அமைக்கப் பட்டு பணிகள் பிரித்தளிக்கப் பட்டன. அனைத்து பொறுப்பாளர்களும் அனைத்து வேலைகளையும் மிகக் கச்சிதமாக முடித்தார்கள்.

ஒரு மாபெரும் ப்ராஜக்டை குறித்த காலத்துக்குள் சரியாக முடித்தனர். பேரிடர் பகுதிகளில் ஆர் எஸ் எஸ் எப்படி செயல் படும் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்த ஏற்பாடுகள் நடந்தன. கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்த முன்னேற்பாடுகள் நடந்தன. இப்பகுதியில் வசிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களுடைய ப்ராஜக்ட் மேனேஞ்மெண்ட் அனுபவங்கள் இந்த மாபெரும் நிகழ்ச்சியையும் கச்சிதமாகவும் சிறப்பாகவும் நடத்த பெரிதும் உதவியாக இருந்தன.

*****

இந்த நிகழ்ச்சிக்காக இப்பகுதியுள்ள அனைத்து நகர மேயர்களும், கலிஃபோர்னியா சட்டமன்ற உறுப்பினர்களும், செனட்டர்களும், காங்கிரஸ்மேன்களும், கவர்னர்களும், பிற தலைவர்களூம், பேராசியர்களும், மீடியா ஆட்களும், சி இ ஓக்களும் அழைக்கப் பட்டிருந்தனர். அதற்காகவே தனியாக ஒரு குழு இயங்கியது.நாள் நெருங்க நெருங்க நுழைவு பாஸ் கேட்ப்பவர்களின் எண்ணிக்கையும் நெருக்கடியும் அதிகரித்தன. அதற்கான தொண்டர்கள் கடுமையாக இரவு பகலாக உழைத்தார்கள். ஒவ்வொரு அமைப்புக்குமான அனுமதி சீட்டுக்களை அதன் நிர்வாகிகளிடம் அளித்தார்கள். அதில் சில தவறுகள் சில விடுபடுதல்கள் இருந்தன. சரியான பெயர்கள் சிலவற்றில் இல்லை. தான் வரவில்லை தன் மனைவிக்குக் கொடுங்கள் நான் வரவில்லை என் பிள்ளைகளுக்குக் கொடுங்கள் என்றும் பல மாறுதல்களைக் கோரி ஆயிரக்கணக்கானோர்கள் வந்து மொய்த்தனர். அனைவரையும் அந்தத் தொண்டர்கள் குறிப்பாக ஜனார்த்தனம், சுஜாதா, நவீன் ஆகியோர் கையாண்ட விதத்தை நான் ஒரு 3 நாட்கள் அருகில் இருந்து கவனித்தேன். சாரி சாரியாக ஏராளமான கோரிக்கைகளுடன் ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டேயிருந்தனர். அனைவரையும் அந்தத் தொண்டர்கள் அன்புடன் வரவேற்று அமர வைத்து டீ சமோசாக்கள் கொடுத்து உட்கார வைத்து ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் பொறுமையுடன் விசாரித்து கவனித்தனர். ஒரு சின்ன முகச் சுளிப்போ கடும் வார்த்தையோ அலுப்பு சலிப்பையோ எரிச்சலையோ ஒருவர் கூட எவரிடமும் வெளிப்படுத்தவில்லை. முகத்தில் புன்னகையுடனும் நட்பார்ந்த பேச்சுக்களுடன் அனைவரது கோரிக்கைகளையும் ஒன்று விடாமல் நிறைவேற்றினார்கள். கடும் தள்ளு முள்ளுகளும் வரிசையும் இருந்த பொழுதும் சிறிதும் கோபப் படாமல் அமைதியாக அனைவரையும் கையாண்ட விதம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. பொறுமையின் சிகரமாக அனைவரும் செயல் பட்டனர். கிட்டத்தட்ட 18000 அனுமதி சீட்டுக்களை அவர்கள் கையாண்ட விதம் அபாரமானது. மிகவும் பொறுப்புணர்வுடன் எவர் மனமும் கோணாமல் அனைவரையும் அணுகியவிதத்திற்கு நூறு கோடி பாராட்டுக்கள். பல வாரங்களாக இரவு பகல் பாராமல் உழைத்த இந்தத் தொண்டர்கள் எவரும் நிகழ்ச்சி அன்று அரங்கிற்குள் வரவில்லை. தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டேயிருந்தனர். இவர்களது தன்னலமற்ற உழைப்பினாலேயே இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது என்று தயங்காமல் சொல்லலாம்.

modi-CA-visit-2

எதற்காக இத்தனை நூறு பேர்கள் தங்கள் குடும்பம் வேலை எல்லாம் விட்டு விட்டு இரவு பகல் பாராமல் உழைத்தார்கள்? எதை எதிர்பார்த்து? அவர்களுக்குத் தங்கள் பிறந்த தேசத்தின் மீது இருந்த பற்றும் அதன் தன்னலமற்ற தலைவன் மீதான பாசமும் மட்டுமே அவர்களை அயராமல் இயக்கியது. இதற்காக இவர்களுக்கு எந்தவித பிரதிபலனும் கிடைக்கப் போவதில்லை. எதையும் இவர்கள் எதிர்பார்ப்பவர்களும் அல்லர். இவர்களில் பெரும்பாலானோர் சுயம்சேவக்குகள். தேசப் பணியும் தொண்டும் மட்டுமே இவர்களது ஒரே நோக்கம் குறிக்கோள் அனைத்துமே. அனைத்து தன்னலமற்ற தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இவர்களைப் போன்ற லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தொண்டர்களைக் கொண்ட தேசம் பாரதம். கலிஃபோர்னியாவில் அவர்களது ஒப்பற்ற தொண்டினை அன்று வெளியுலகம் அறியச் செய்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு ராகவேந்திரன் அழைத்து நமது பெயர்களை மோடியை வரவேற்கும் குழுவிற்காக செக்யூரிட்டி ஏஜென்ஸிக்கு வழங்கியிருக்கிறார்கள் ஆகவே நாளை காலை 9 மணிக்கு சான் ஓசே விமான நிலையத்தின் ஹேங்கர் ஒன்றுக்கு வந்து விடுங்கள் என்று அழைத்திருந்தார். காலையில் ராகவேந்திரனுடன் சான் ஓசே விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் அமைந்திருந்த ஒரு விமான கூடத்தில் ஆஜராகியிருந்தோம். வெயில் அன்று கடுமையாக இருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் எங்களுடன் வண்ண வண்ண இந்திய ஆடைகளில் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு நூறு பேர்கள் முன் கூட்டிய அழைப்பின் பேரில் குழுமியிருந்தார்கள். எங்களை முதலில் அமெரிக்க சீக்ரட் சர்வீஸ் ஏஜெண்டுகள் விசாரித்து எங்கள் பெயர்களையும் அடையாள அட்டைகளையும் அவர்கள் பட்டியலுடன் சரிபார்த்து அனுப்பினார்கள். தொடர்ந்து இந்தியாவில் இருந்து வந்திருந்த பிரதமரின் செக்யூரிட்டி அதிகாரிகள் அதே போல இன்னொரு பட்டியலுடன் சரிபார்த்தார்கள். பிறகு விமான நிலையத்திற்குள் நுழையும் பாடி ஸ்கேனும் செய்த பிறகு உள்ளே அனுமத்தித்தார்கள். விமானம் நிற்கும் அந்த மாபெரும் கராஜின் உள்ளே தண்ணீர், பாத்ரூம் வசதிகளும் இருந்தன. தண்ணீர், காஃபி, டீ, சமோசாக்களை ஏராளமாக ஏறபாடு செய்து தயாராக வைத்திருந்தார்கள். எங்கள் குழுவுடன் இந்திய அமெரிக்க டி வி நிருபர்கள், பத்திரிகை நிருபர்கள், இந்தியத் தூதர், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள், செக்ரட்டரிகள், மேயர்கள், ராணுவ அதிகாரிகள் என்று சகல விதமான அதிகாரிகளும் சேர்ந்து காத்திருந்தனர்,

குழந்தைகளும் பெண்களும் தொடர்ந்து வந்தே மாதரம், ஜாரா சகான் சே அச்சா, பஜனை பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். இடை இடையே மோடி மோடி மோடி என்ற கோஷமும் மோடியை வாழ்த்தும் கோஷங்களும் அந்த விமான நிலையப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டிருந்தன. பாடி முடித்தவுடன் பாரத் மாதா கீ என்று சொல்ல ஜெய் என்ற கோஷத்தில் அந்த ஹேங்கரின் கூரை அதிர்ந்தது. மோடியின் விமானம் எத்தனை மணிக்கு வரப் போகிறது என்பதையும் நாங்கள் கூடியிருந்த ஹேங்கரின் விபரத்தையும் ரகசியமாக வைத்திருந்தனர். விமானம் தரையிற்ங்குவதற்கு பத்து நிமிடம் முன்பாகவே அறிவிப்பு செய்தனர்.

இந்தியாவில் இருந்து பி எஸ் ஜி படையினரும் விமானத்தைப் பாதுகாக்கத் தனியான அதிகாரிகளும் பிரதமரின் அலுவலகப் பணியாளர்களும் முன் கூட்டியே அங்கு வந்து எங்களுடன் காத்திருந்தனர்.

******

modi-CA-visit-3
பிரதமர் மோடியை வரவேற்க ஒரு பெரும் மோட்டார் அணிவகுப்பு காத்திருந்தது. அவற்றுடன் தீயணைப்பு வண்டிகள், எமர்ஜென்சி வேன்கள், போலீஸ் கார்கள், பைலட் மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஹெலிக்காப்டர், 15 லிமோசின்ம்கள் என்று  அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. 12.20 ஏர் இந்தியாவின் பிருமாண்டமான போயிங் 737 விமானம் தரை இறங்கியது. காற்றில் பரபரப்பு அதிகரித்தது. எவருக்கும் வெயிலும் காத்திருத்தலும் ஒரு பொருட்டாக இல்லை. அனைவரும் ஒரு வித பரவச நிலையில் ஆழ்ந்திருந்தனர். பாரத் மாதா கீ, வந்தே மாதரம் மோடி மோடி என்ற கோஷங்கள் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் வரை பிளந்தன. காற்று முழுக்க மோடி மோடி என்ற கோஷம் நிரம்பியிருந்தது. பதாகைகளுடனும் இந்தியக் கொடிகளுடனும்  மோடி உருவப் படங்களுடனும் அனைவரும் உற்சாகத்தின் எல்லையில் பரவசத்துடன் கோஷமிட்டபடி இருந்தனர். அமெரிக்க அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மீடியா ஆட்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. தூர்தர்ஷனும், ஏபிபியும், என் பி சியும் இன்னும் பல மீடியாக்களும் அங்கிருந்த அனைவரையும் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். நான் வழக்கம் போலவே அனைத்து விதமான காமிராக் கண்களிலும் படாமல் ஒதுங்கி நின்று அந்த பரவசமான ஆனந்தக் கூத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.ஒரு உயரமான அமெரிக்கப் பெண்மணி அங்குமிங்கும் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தார். அவர் தான் இங்குள்ள நகரங்களின் ப்ரோட்டாக்கால் அதிகாரி என்றார். அவர் முதல் முறையாக மோடியின் வருகைக்காக சிறப்பாக ஒரு சிவப்புக் கம்பளத்தை விசேஷமாகச் நெய்து தயாரித்து நியூஜெர்சியில் இருந்து தருவித்திருந்தார். மோடியின் விமானம் வந்தவுடன் அந்த சிறப்பு சிவப்புக் கம்பளம் விரிப்பதற்குத் தயாராக இருந்தது. விமானம் தரையிறங்கி எங்களின் அருகே வந்து சுற்றி நின்றது.

modi-CA-visit-4

விமானத்தின் ஒரு பக்கமாக பிரதமருடன் வருகை தந்திருக்கும் அஜித் டோவால், ஜெய்ஷங்கர் போன்ற அதிகாரிகள் இறங்கினார்கள். மறுபக்கம் சிவப்புக் கம்பளத்தின் மீது மோடி இறங்கினார். முதலில் அங்கு காத்திருந்த மேயர்கள் சான்ஃபிரான்ஸிஸ்கோ கன்சல் ஜெனரல் அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுடன் கை குலுக்கி விட்டு பின்னர் ஒரு புறம் அமெரிக்க பாதுகாப்புப் படையினரும் மறுபுறம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளும் படை சூழ எங்களை நோக்கி நல்ல வெயிலில் நடந்து வந்தார்.விமானம் இறங்கும் பொழுதில் இருந்து வாழ்த்து கோஷங்கள் உச்ச நிலையை அடைந்திருந்தது. மோடி அருகே வர வர ஏர் இந்தியா விமானமே நகர்ந்து விடும் அளவுக்கு வானை எட்டும் அளவுக்கு வாழ்த்துக்கள் எழும்பின. புன்னகையுடன் அந்த அன்பு கோஷங்களை ஏற்றுக் கொண்ட பிரதமர் அங்கு கூடியிருந்த அனைவரையும் ஒருவர் விடாமல் கை குலுக்கினார். அனைவரது கண்களையும் ஊடுருவி உற்று நோக்கி கனிவான புன்னகையுடன் அழுத்தமாகக் கைகளைப் பற்றிக் குலுக்கினார். ஆயிரக்கணக்கான காமிராக்கள் தொடர்ந்து கிளிக்கிக் கொண்டேயிருந்தன. ஒரு சிலர் அவரது கைகளை விடாமல் பிடித்துக் கொண்டனர். சிறுவர்களைக் கொஞ்சினார். ஸ்வாகதம் ஸ்வாகதம் மோடி ஸ்வாகதம் என்று அனைவரும் ஒரே குரலில் வரவேற்றனர்.

மோடியை ஒரு முறை இரவில் மதுரையில் மேலமாசி வீதி தெற்குமாசி வீதி சந்திப்பில் பார்த்திருக்கிறேன். அப்பொழுது அவர் ஒரு ஆர் எஸ் எஸ் தொண்டர் ஒருங்கிணைப்பாளர். இத்தனை வருடங்களில் அவரது கம்பீரமும் பொலிவும் பல மடங்கு கூடியிருந்தன. நல்ல நிறத்துடனும் மிகவும் புத்துணர்ச்சியுடனும் முகப் பொலிவுடனும் காட்சியளித்தார்.

நான் கைகுலுக்கிய பொழுது உங்களை நான் நன்கு அறிவேன் என்னைப் போன்ற பாரத தேசத்தின் கோடிக்கணக்கான புதல்வர்களின் ஆதர்சம் நீங்கள். எங்கள் அனைவரின் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பிரதிபலிப்பவர் நீங்கள் எங்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பவர் நீங்கள். குடும்பம் சொந்தம் எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு இந்தியாவின் வளர்ச்சி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கருதி உழைக்கும் உன்னதமான தொலைநோக்கு கொண்ட தலைவர் நீங்கள். நீங்கள் சகலவிதமான ஆரோக்யங்களுடனும் பாதுகாப்புகளுடனும் நீடூழி வாழ வேண்டும் என்று மனதிற்குள் வாழ்த்தியவாறே அவரது கைகளைப் பிடித்து அழுத்தமாகக் குலுக்கினேன். அதன் வழியாக எனது எண்ணங்கள் அவரிடமும் சென்று சேர்ந்திருக்க வேண்டும். அதை ஆமோதிக்கும் விதத்தில் கண்களை ஊடுருவி மனதிற்குள் சென்று ஆம் நம்மை நாமறிவோம் என்று புன்னகையுடன் வழிமொழிந்தது போலிருந்தது.

அவரது அணிவகுப்பு அங்கிருந்து நீங்கும் வரை வாழ்த்தொலிகள் விண்ணை முட்டின. குழந்தைகளும் பெண்களுமாக அவர் இறங்கியவுடன் அவருக்கு அளிக்கப் பட்ட அந்த சிறு குழுவினரின் வரவேற்பு அபாரமாக அமைந்திருந்தது. ஏர்ப்போர் பொதுஜனத் தொடர்பு அதிகாரியான அமெரிக்கப் பெண்மணியும் ப்ரோடோக்கால் அதிகாரியும் இத்தனை பேர்கள் இவ்வளவு ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடனும் ஆராவாரத்துடனும் அளித்த வரவேற்பே அவர் இந்தியாவின் தன்னிகரற்ற ஒப்பற்ற மக்கள் தலைவராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஒரு மாபெரும் தலைவரை வரவேற்றதில் இந்த விமான நிலையம் வரலாற்று சிறப்பு பெற்றுள்ளது என்றனர்.

(தொடரும்)

4 Replies to “மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1”

 1. அருமையான ஆரம்பம். அனுமதி கிடைக்காத என் போன்றோருக்கு நேரில் ஈடுபட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது. அனுமதி கிடைத்திருந்தாலும் நியூ ஜெர்ஸியில் இருந்து மிகுந்த அயர்ச்சியுடன் தான் கலந்து கொண்டிருக்க முடியும். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கும் அதே சமயம், இரவு பகலாக உழைத்த அந்த உண்மை தொண்டர்களுக்கு நன்றிகள் பல.

 2. அன்பின் ஸ்ரீ திருமலை. மிகவும் நேர்த்தியான ஒரு தொகுப்பிற்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  ஹிந்துஸ்தானத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் ஹிந்து ஒற்றுமைக்கு உழைக்கிறது. இந்த நாட்டை தமது தாய்நாடாக ஏற்று அதன் தொன்மையையும் அதன் சான்றோர்களையும் போற்றி மதிக்கும் அனைத்து ஹிந்துஸ்தானியரையும் ……… அவர்கள் மதத்தால் ஹிந்துவாகவோ இஸ்லாமியராகவோ அல்லது க்றைஸ்தவராகவோ இருப்பினும் கூட……… சங்கம் ஹிந்துவாக ஏற்று அவர்களை ஒன்றிணைக்கப்பாடுபடுகிறது.

  த்வீபாந்தரங்களில் இதே பணியினை ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம் என்ற இயக்கம் செய்து வருகிறது. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின்…. சங்க பரிவார இயக்கங்களின்……. த்வீபாந்தரக் கிளை ஹெச் எஸ் எஸ்.

  அமேரிக்காவில் இயங்கும் இந்த ஸ்தாபனத்தின் உரலைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  https://www.hssus.org/

  அமேரிக்கா வாழ் ஹிந்து ஒற்றுமையில் நாட்டமுள்ள ஹிந்துஸ்தானியர் இந்த ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பினை அளிக்கலாம். ஹிந்துஸ்தானத்தின் தொன்மையிலும் அதன் சான்றோர்களிடம் மதிப்பு உள்ள அனைத்து அன்பர்களையும் சங்கம் ஹிந்துக்களாகவே கருதுவதை நான் பகிர்ந்த படிக்கு அங்கு வசிக்கும் மாற்று மதத்தவர்களிலும் இது போன்ற ஒருமித்த கருத்துள்ளவர்கள் இந்த ஸ்தாபனத்து நிகழ்ச்சிகளில் பங்களிக்கலாம்.

  சங்கப் பயிற்சி பெற்றவர்களும் சங்கத்துடன் தொடர்பு கொண்ட அன்பர்களும் ஏற்று செய்யும் எந்த ஒரு பணியிலும் உறுதி மற்றும் நேர்த்தியான செயல்பாடு காணப்படுவது இயல்பு. தாங்கள் பகிர்ந்த இந்த பாகத்தில் அந்த ஒருங்கிணைந்த செயல்பாடு அழகாக வெளிப்பட்டுள்ளது.

  \\ ஜாரா சகான் சே அச்சா \\

  ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா

  உலகில் உள்ள எல்லா தேசங்களினின்றும் நல்ல தேசம் எம் ஹிந்துஸ்தானம். என்ற பொருள் படும் பாடல். எழுதியவர் ஜெனாப் மொஹம்மத் இக்பால். பிற்காலத்தில் உலகளாவிய இஸ்லாமிய உம்மா என்ற கருத்தாக்கத்தில் நாட்டம் கொண்டவர். ஆயினும் இவர் எழுதிய இந்தப்பாடல் காலம் மற்றும் 1947ல் கசப்பான பிரிவினை போன்றவற்றை விஞ்சி நிற்கிறது.

  அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

 3. மிகவும் அருமை. நேரில் சென்று நாமே வரவேற்றது போல உள்ளது. வாழ்த்துக்கள்.
  வாழ்க ஹிந்துஸ்தானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *