அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]

முந்தைய பகுதிகள்: 1, 2

தொடர்ச்சி..

ஒபாமாவும்,. மிட்ராம்னியும் கலந்து கொண்ட முதல் விவாதம் முழுவதுமே அமெரிக்கப் பொருளாதாரம் குறித்தும், ஆட்சி செய்தல் குறித்தும், அமெரிக்கர்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான மருத்துவக் காப்பீடு குறித்தும், அமெரிக்கர்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் எதிர்காலம் குறித்துமே கேள்விகள் கேட்க்கப் பட்டன. இந்த முதல் சுற்றில் வெளிநாட்டு உறவு, தேசப் பாதுகாப்பு போன்ற பிற பிரச்சினைகள் அலசப் படவில்லை. முழுக்க முழுக்க வரிவிதிப்பு, தேசீய நிதிப் பற்றாக்குறை, காப்பீடு திட்டங்கள் குறித்தே விவாதிக்கப் பட்டன.

இந்த முதல் சுற்றில் மிட் ராம்னி பெரும் வெற்றி அடைந்ததாக அமெரிக்க ஊடகங்களும் நிகழ்ச்சியைக் கண்ட மக்களும் கட்சி சார்பின்றி ஏகோபித்துக் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த விவாதங்களின் வெற்றி தோல்வி என்பதே சற்று அபத்தமான ஒன்று, இருந்தாலும் கூட எந்த வேட்ப்பாளர் தன் நிலையை ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியாகவும், மக்கள் மனதில் பதியுமாறும் பேசுகிறாரோ அவர் விவாதத்தை வென்றதாகக் கருதப் படுகிறார். இதில் வெற்றி பெற்றவர் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருந்தாலும் இரு வேட்ப்பாளர்களில் எவரைத் தேர்ந்தெடுப்பது என்று நிலையில்லாமல் இருப்பவர்களிடமும், புது வேட்ப்பாளர் பற்றி அதிகம் தெரியாமல் அவரைப் பற்றிய எந்தக் கருத்தும் உருவாக்காதவர்களிடமும் இந்த டி வி விவாதத்தில் வெற்றி பெற்றவர் சற்று இடம் பிடிக்கலாம். அந்த அளவில் ஏற்கனவே பல மாநிலங்களிலும் அதிக வெற்றி வாய்ப்பை இல்லாமல் இருந்தவரான மிட் ராம்னிக்கு இந்த விவாத வெற்றி கொஞ்சம் நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் இவருக்கு நன்கொடை கொடுக்கலாமா வேண்டாமா என்று ஊசலாடிக் கொண்டிருந்தவர்கள் பலருக்கும் இந்தக் குதிரையையும் நம்பி காசை இறக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள். அந்த வகையில் இந்த டி வி விவாதம் ரிபப்ளிக்கன் வேட்பாளர் மிட் ராம்னிக்கு தன்னம்பிக்கையையும் ஜெயித்தாலும் ஜெயித்து விடலாம் என்ற ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். எதிர்த்தரப்பு ராம்னியோ உற்சாகமாக இருந்தார். ராம்னி கடந்த 18 மாதங்களாக டிபேட் செய்வதையே தினமும் தொழிலாகச் செய்து வருபவர். அவருக்கு விவாதத்தில் ஈடுபட்டு ஜெயிப்பது டோ நட் சாப்பிடுவது மாதிரி. அவரது கட்சிக்குள் நடந்த ஏராளமான விவாதங்களில் பேசிப் பேசியே அதில் ஜெயித்து ஜெயித்தே அவரை வேட்பாளராக அவரது கட்சி நிறுத்தியுள்ளது. ஆக அவருக்கு அதில் சமீபத்திய அனுபவம் மிகப் பலமானதாக உண்டு. அவருக்கு வேறு வேலைகள் கிடையாது. ஒபாமாவுக்கு உலகத்தையே தலையில் தாங்கும் அழுத்தம் நிறைந்த வேலை. மேலும் அவரது கட்சியில் அவரை நிறுத்துவதற்குப் போட்டி ஏதும் கிடையாதாகையினால் அவர் இதைப் போன்ற ஒரு விவாதத்தில் ஈடுபட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. பெரும்பாலும் அவர் பொதுக் கூட்டங்களில் ஒரே மாதிரியான பேச்சைப் பேசுவதில் வல்லவர். இதில இது வேற இவன் கிட்டக் கட்டாயம் பேசித்தான் தொலைய வேண்டுமா என்பது போல இருந்தது அவரது தோரணைகள். கடனே என்று பேசி விட்டுப் போனார். முக்கியமாக மாற்று எரிசக்தி நிறுவனங்களுக்கு 90 பில்லியன் டாலர்களை விரையம் செய்தது, 718 பில்லியன் டாலர்களை இட மாற்றம் செய்தல் போன்ற முக்கியமான குற்றசாட்டுகளுக்கு அவர் பதில் சொல்லக் கூட முயலாததே அவர் மீது வழக்கமான டெமாக்ரடிக் ஆதரவு மீடியாக்களிடம் கூட கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. முக்கியமாக ராம்னியின் 40% பேச்சையும், அவரது பெய்ன் நிறுவனம் குறித்தும் ஒபாமா எதுவுமே சொல்லவில்லை. ராம்னியிடம் வெகு மென்மையாக நடந்து கொண்டார். ஒரு வேளை ’நீங்கள் ஜனாதிபதி. அவரைப் போல தெருவில் இறங்கிக் குழாயடிச் சண்டை போடக் கூடாது, நெகடிவ் இமேஜ் உருவாக்கி விடக் கூடாது’ என்று யாரேனும் சொன்னார்களோ அல்லது அவரே நினைத்துக் கொண்டு விட்டாரோ தெரியவில்லை. அடப் போங்கடா நீங்களும் உங்கள் டிபேட்டும் என்பது போல பேசினார். வழக்கமான ஒபாமாவின் வெற்று வாய்ப்பேச்சுச் சாதுர்யம் கூட இல்லை. காற்றுப் போன பலூன் மாதிரி இருந்தார். மிட் ராம்னி எழுப்பிய பல கேள்விகளுக்கு என்னைப் போன்ற பார்வையாளர்கள் கூட உடனுக்குடன் சூடாகப் பதில் சொல்லியிருந்திருப்போம். ஆனால் ஒபாமாவோ திரு திருவென விழித்துக் கொண்டு நின்றதும் தரையில் கோலம் போட்டுக் கொண்டு வழிந்ததும் அவர் மீது பலத்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விட்டது. தான் சாம்ப்பியன் என்பதைக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அடக்கி வாசித்தது அநியாயமாக இருந்தது. ரொம்ப நல்லவண்டா எத்தனை அடித்தாலும் தாங்குவான் என்று ராம்னி போட்டு தர்ம அடி அடித்தார். அத்தனையும் வாங்கிக் கொண்டு பேக்கு மாதிரி ஒபாமா தலை குனிந்தது அவரது ஆதரவாளர்களிடத்தும், அவரை ஆதரிக்கும் ஊடகங்களிடத்தும் அவர் மீது கடும் எரிச்சலையும், கோபத்தையும் உருவாக்கின, இருந்தாலும் அடுத்த ரவுண்டில் சும்மா வீடு கட்டி அடிக்கப் போகிறார் என்று தங்களைத் தேற்றிக் கொண்டார்கள்.

அமெரிக்காவில் 5, 6 கோடி பேர்கள் பார்த்த இந்த நிகழ்ச்சி ஒரு காசு கொடுக்கத் தேவையில்லாத இலவச நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை ஒபாமா தவற விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் டி வி யில் இவர்கள் விவாதிப்பதை வைத்துத்தான் ஓட்டுப் போடப் போகிறவர்கள் அதிக பட்சம் ஒரு 5% இருக்கக் கூடும் ஆனால் அது 1% ஆகவே இருந்தாலும் கூட வெற்றியை மாற்றி விடக் கூடியது. டி வி யில் பேசுவதை மட்டுமே வைத்து முடிவெடுக்கக் கூடிய மக்கள் ஒரு 2% ஆவது இருப்பார்கள். அதில் பாதிப் பேர் ராம்னிதான் நன்றாகப் பேசினார், அவருக்கே எங்கள் ஓட்டு என்று போட்டு விட்டுப் போய் விடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பேச்சுக்களின் பொழுது பேச்சாளர்களின் முகபாவம், எதிராளியை எதிர் கொள்ளும் விதம், நடை, உடல் மொழி என்று அனைத்தையும் நுட்பமாகக் கண்காணித்து அதை வைத்து ஒரு ஆளைப் பிடிக்கவில்லை என்று சொல்லக் கூடிய ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள். புஷ்ஷை எதிர்த்த அல் கோர் அடிக்கடி பல்லைக் கடித்தார் அதனால் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லி என் நண்பர் ஒருவர் அவருக்கு ஓட்டுப் போடவில்லை. அரசியல் என்று வரும் பொழுது அலசி ஆராய்ந்து ஓட்டுப் போடாமல் இவர் சிவப்பாக இருக்கிறார், இவர் அழகாக இருக்கிறார், இவர் நன்றாக பேசுகிறார், இவர் நன்றாக டிரஸ் செய்திருக்கிறார், இவர் கோபப் படாமல் மிருதுவாக இருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்து ஓட்டுப் போடும் மக்கள் இங்கும் இருக்கிறார்கள்.

ராம்னி அப்படி எதுவும் உருப்படியாகப் பேசி விடவில்லை. அவர் பேசியதில் சரக்கு ஏதும் இல்லை ஆனால் ஸ்டைலாகப் பேசினார். இரண்டு மணி நேரம் அடுக்கு மொழியில் பேசினாலும் கூட எந்த ஒரு உருப்படியான விஷயத்தையும் தொடாமல் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சாகவே அவர் பேச்சு இருந்தது. அவர் வரியைக் குறைப்பேன், ராணுவத்துக்கு கூடுதலாக 2 டிரில்லியன் டாலர் ஒதுக்குவேன், 1.5 கோடி புது வேலைகளை உருவாக்குவேன் என்று பேசினாரே ஒழிய அதை எப்படிச் செய்யப் போகிறார் என்பதைக் கடைசி வரையிலும் சொல்லவேயில்லை. ஒபாமாவின் அலட்சியமும், முனைப்பின்மையுமே ராம்னி இன்று பெரிய ஹீரோவாக்கி விட்டது. ராம்னி எதையும் ஆழமாகவோ விரிவாகவோ உருப்படியாகவோ சொல்லவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் தட்டினால் தங்கம் வரும் வெட்டினால் வெள்ளி வரும் இடித்தால் இரும்பு வரும் என்று அடித்து விட்டாரே ஒழிய ஒன்றைக் கூட எப்படிச் செய்வேன் என்று சொல்லவேயில்லை. இதையேதான் சென்ற முறை ஒபாமாவும் செய்தார் என்பது வேறு விஷயம். சரக்கில்லாத வெட்டிப் பேச்சு. முக்கியமாக கவனிக்க வேண்டியது ராணுவத்துக்காக 2 டிரில்லியன் ஒதுக்குவேன் என்று சொன்னதும், ஆராய்ச்சிகளுக்கான நிதியைக் கட்டுப் படுத்துவேன் என்று சொன்னதும் மருத்துவக் காப்பீட்டை தனியாரிடம் அளிப்பேன் என்று சொன்னதும் ஆகும்.

ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார். முக்கியமாக வெளியுறவுக் கொள்கைகளுக்கான விவாதத்தின் மூலம் தான் ஒரு திறமையான ஜனாதிபதி என்பதை நிரூபித்து மீண்டும் தன் ஆதரவை விவாதங்கள் மூலமாக பலப் படுத்திக் கொண்டார். கடைசி இரு விவாதங்களிலும் ஒபாமா வெற்றி பெற்றதாக ஊடகங்களாலும் மக்களாலும் கருதப் பட்டார். இறுதியாக ஒஹையோ, விர்ஜினியா, ஃப்ளோரிடா போன்ற இழுபறி மாநிலங்களில் யார் ஜெயிக்கிறார்களோ அவரே ஜனாதிபதியாக ஆகும் வாய்ப்பு உள்ளது. அதற்கான போட்டி கடுமையாக நிலவுகிறது.

மாநாடுகளும் நான்கு விவாதங்களும் முடிந்து விட்ட நிலையில், ஒவ்வொரு மாநிலமாகச் சென்று இரு வேட்ப்பாளர்களும் மக்களிடம் உரையாற்றி ஆதரவு கோரி வருகிறார்கள். டி வி விளம்பரங்கள் மூலமாகவும் தங்கள் பிரச்சாரத்தைத் தொடர்கிறார்கள். அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஏற்கனவே முடிவுகள் தெளிவாகத் தெரிந்தவை. அவை தீர்மானமாக டெமாக்ரடிக் கட்சிக்கோ அல்லது ரிபப்ளிக்கன் கட்சிக்கோ உறுதியாக ஆதரவு தெரிவிப்பவை. அங்கு எல்லாம் தேர்தல் நடத்துவது கூடத் தேவையில்லாத ஒன்றுதான். உதாரணமாக நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் உறுதியாக ஒபாமா வெற்றி பெற்று விடுவார். அது போல டெக்சஸ், மிசொளரி போன்ற மாநிலங்களில் மிட் ராம்னி ஜெயிப்பது உறுதியானது. ஆகவே ஒட்டு மொத்த தேர்தலுமே கடைசியாக ஒரு ஐந்தாறு மாநிலங்களில் இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதைப் பொருத்தே அமையும். அதனால் இவர்கள் இருவருமே அந்த மாநிலங்களில் மட்டுமே தீவீரமான பிரச்சாரங்களையும் செலவுகளையும் செய்கிறார்கள். தற்பொழுதைய நிலைப் படி ஒபாமாவின் வெற்றி வாய்ப்புகள் இந்த இழுபறி மாநிலங்களில் அதிகமாக உள்ளபடியால் அவர் அனேகமாக அடுத்த ஜனாதிபதியாகவும் தொடர நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

இந்தத் தேர்தலில் ஜனாதிபதி வேட்ப்பாளர்களுக்கான தேர்வுகள் தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் நடத்தப் படுகின்றன. அவை ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், நகரத்துக்குத் தக்கவாறு மாறக் கூடியவை. உதாரணமாக கலிஃபோர்னியா மாநிலத்தில் அரசின் செலவு அதிகரித்துள்ள படியால் அவற்றை ஈடுகட்ட விற்பனை வரியில் ஒரு கால் செண்ட் அதிகரிக்கலாமா கூடாதா என்றும், ஒரு மிருகக் காட்சி சாலையை விரிவு படுத்துவதா வேண்டாமா என்றும் இன்னும் ஏராளமான பிரச்சினைகளும் ஓட்டுக்கு விடப் பட்டு முடிவு செய்யப் படுகின்றன. ஆக ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது. வேட்ப்பாளர்களைத் தேர்வு செய்வது மட்டும் அல்லாமல் அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும் மக்களின் தேர்வுகள் கேட்க்கப் பட்டு முடிவு செய்யப் படுகின்றன. ஓட்டுச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட வேண்டிய அவசியமும் கிடையாது. வீட்டில் இருந்தபடியே ஓட்டுப் போட்டுத் தபாலில் சேர்த்து விடலாம். ஒரு சில மாநிலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பாக இருந்தே ஓட்டுப் போட ஆரம்பிக்கலாம். நவம்பர் ஆறு அன்று அருகே இருக்கும் சாவடிகளுக்குச் சென்றும் ஓட்டுப் போடலாம். அவரவர் தேர்வையும் வசதியையும் ஒட்டியது. ஓட்டு எண்ணிக்கையும் ஓட்டுப் போடும் முறையும் ஒவ்வொரு ஊரைப் பொருத்தும் மாறுபடக் கூடியது. இந்தியாவைப் போல ஒரே மாதிரியான ஓட்டுப் போடும் முறை நாடு முழுவதும் கிடையாது. அவை பல்வேறு குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் வழக்குகளுக்கும் இட்டுச் செல்கின்றன.

இருவரில் எவர் தேர்வு செய்யப் பட்டு ஜனாதிபதி ஆனாலும் இந்தியாவைப் பொருத்த வரை பெரும் கொள்கை மாற்றங்கள் இருக்கப் போவதில்லை. பெரும்பாலான இந்திய அமெரிக்கர்கள் ஒபாமாவையே ஆதரிக்கிறார்கள். பிற ஜனாதிபதிகளைப் போல ஆட்சியின் கடைசி காலத்தில் இந்தியாவுக்குப் போனால் போகிறது என்று பத்தோடு பதினொன்றாக விஜயம் செய்யாமல் முதல் காலத்திலேயே இந்தியாவுக்கு மரியாதை அளித்து விஜயம் செய்தது. வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடியது, நிறைய இந்திய அமெரிக்கர்களுக்கு தனது மந்திரி சபையில் இடம் அளித்தது ஆலோசகர்களாக வைத்துக் கொண்டது, இந்தியாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தது போன்ற ஒபாமாவின் செயல்கள் அவருக்கு இந்தியர்களிடம் பெரும் ஆதரவை உருவாக்கியுள்ளது. ஆனால் அவர் இந்தியாவுக்கு அமெரிக்க வேலைகளை அனுப்புவதற்கு பெரும் தடை போடுவதும் இந்தியாவில் இருந்து மென்பொருளாளர்களை அழைத்து வருவதற்கு முட்டுக் கட்டைகள் போடுவதும் சிறிய அதிருப்தியையும் அவர் மீது ஏற்படுத்தியுள்ளன. இரு வேட்பாளர்களுமே பாக்கிஸ்தானுக்கு நிதியுதவியையும் ஆதரவையும் தொடர்ந்து அளிக்கப் போகிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கும் பொழுது அதன் பாதிப்பு இந்தியாவுக்கு பெரும் அளவில் இருக்கக் கூடும் அதைப் பற்றி இரு வேட்ப்பாளர்களும் அக்கறை கொள்ளப் போவதில்லை. மற்றபடி இந்தியாவின் மீதான வெளியுறவுக் கொள்கைகளில் பெரும் மாறுதல் ஏதும் இருக்கப் போவதில்லை.

இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள். கலிஃபோர்னியாவின் சிலிக்கான் வேலி பகுதியான ஃப்ரீமாண்ட் நகரின் மேயர் பதவிக்காக அனு நடராஜன் என்ற தமிழ் பெண்மணி போட்டியிடுகிறார். இந்தியர்கள் பெரும்பான்மையாக இல்லாத இடங்களிலும் கூட பல இந்தியர்கள் போட்டியிடுகிறார்கள்.

வரும் செவ்வாய் நவம்பர் 6ம் தேதி இரவு அடுத்த அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப் படுவார். அது எவராக இருந்தாலும் அவர் முன்னால் பெரும் சவால்களும் சோதனைகளும் காத்திருக்கின்றன. முக்கியமாக வேலையில்லாத் திண்டாட்டம் பூதாகரமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதைத் தீர்ப்பதும் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும் பெரும் சவாலாக அமையப் போகிறது. அமெரிக்காவின் கடனைக் குறைப்பது அடுத்த பெரும் சவாலாகக் காத்திருக்கிறது. ஈரான் நாட்டை அணு குண்டு தயாரிப்பதில் இருந்து தடுப்பது முக்கியமான வெளியுறவு சவாலாகக் காத்திருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சினைகளைச் சமாளித்து கடனில் இருந்தும் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து நாட்டை மீட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொறுப்பு அடுத்த ஜனாதிபதிக்கு பெரும் சுமையாகக் காத்திருக்கின்றது. அதை தேர்ந்தெடுக்கப் படவிருக்கும் ஜனாதிபதி எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்பதை அமெரிக்காவும் உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அடுத்து தேர்ந்தெடுக்கப் படவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதினால் இந்தத் தேர்தல் அனைத்து உலக நாடுகளினாலும் உன்னிப்பாக கவனிக்கப் பட்டு வருகின்றன.

வரும் நவம்பர் ஆறு செவ்வாய் இரவு அன்று அதற்கான விடை கிடைக்கும். காத்திருக்கலாம்.

(முற்றும்)

4 Replies to “அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]”

  1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிக கடுமையான வேலையில்லா திண்டாட்டம் , மோசமான பொருளாதார சூழல் இவ்வளவுக்கும் இடையே, ஒபாமா சுமார் இருபத்தெட்டு லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய கட்சியான ஜனநாயக கட்சிக்கு முன்பு இருந்ததை விட , செனட்டிலும், பிரதிநிதிகள் சபையிலும் தலா ஒரு இடம் கூடுதலாக கிடைத்துள்ளது. சென்ற தேர்தலை ஒப்புநோக்கினால், வாக்கு சதவீதமும், வித்தியாசமும் குறைந்து விட்டாலும் கூட, ஒபாமாவுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றி தான். ஜனநாயக கட்சி வெற்றிபெறுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அமேரிக்கா இந்தமுறை, பாகிஸ்தானுக்கு அளித்துவரும் நிதிஉதவியை நிச்சயம் குறைத்துவிடும். ஏனெனில், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ?

  2. நவம்பர் ஆறாம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இன்று தேதி 16 -11 -2012 – தேர்தல் முடிந்து பத்து நாட்கள் ஆகி விட்டன. ஆனால் இன்னமும் சுமார் 650 – க்கு மேற்பட்ட பூத்துக்களின் ரிசல்ட்டு , இது வரை அறிவிக்கப்படவில்லை. ஒபாமாவுக்கு 6,26,15,406/- வாக்குகளும் , அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ரோம்னிக்கு 5,91,42,004/- வாக்குகளும் ,( இன்று காலை இந்திய நேரப்படிகாலை 8 -58 மணியளவில் ) பெற்று இன்னமும் வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. நமது இந்திய திருநாட்டில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய மறுநாள் காலை ஆறு மணிக்குள் 543 – பாராளுமன்ற தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டு விடுகிறது. மேலும் அமெரிக்காவில் பதிவாகும் வாக்குகள் சுமார் 13 – கோடி மட்டுமே. ஆனால் இந்தியாவிலோ, 2009 – பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சுமார் 37 – கோடி . எனவே, இந்திய தேர்தல் முறை அமெரிக்க தேர்தல் முறையை விட பலமடங்கு சிறப்பானதே என்பது தெளிவாகிறது. அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் கேவலமாக உள்ளது. எடுத்ததற்கெல்லாம் அமெரிக்காவை பார் என்று கூறும் நண்பர்கள் சிறிதாவது சிந்திப்பார்களா ?

  3. எனது முந்தைய கடிதத்தில் 2009 – பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 37 – கோடி என்று குறிப்பிட்டிருந்தேன். தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வமான வெப் சைட்டில் பதிவான செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 41.7- கோடி என்று , உள்ளது.

  4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இன்று 19-12-2012- வரை இறுதி வாக்கு விவரம் வெளியிடப்படவில்லை. ஜனவரி மாதம் தான் முடியும் போல இருக்கிறது. நம் நாடு எவ்வளவோ பரவாயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *