மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4

<< முந்தைய பகுதி

மோடியின் உரையின் தொடர்ச்சி…..

சில சமயங்களுக்கு முன்பாக எந்த நாடுகள் முன்னேறிச் செல்லும் என்பது குறித்தான ஒரு புதிய சொலவாடை வந்தது. அதில் இருந்து ப்ரிக்ஸ் என்ற சொல் உருவானது. இந்த சொல்லை  உருவாக்கியவர்கள் ஐந்து நாடுகளின் பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டு உருவாக்கினார்கள். அந்த நாடுகள் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சவுத் ஆப்பிரிக்கா என்பதாகும். ஆனால் கடந்த இரு வருடங்களாக இந்த சொல்லில் உள்ள ஐ என்ற எழுத்து மட்டுமே அதி வேகமாக முன்னேறி வருவதாக ஒத்துக் கொள்கிறார்கள். இன்று இந்த ப்ரிக்ஸ் என்னும் சொல்லில் உறுதியாக இருக்கும் முன்னேறி வரும் ஒரே நாடு ஐ என்பதைக் குறிக்கும் இந்தியா மட்டுமே. இதை நான் உறுதி படக் கூறுவேன். கடந்த 15 மாதங்களுக்குள் புதிய உயரங்களை எட்டுவதினால் பொருளாதார முன்னேற்றங்களை அடைவதினால் புதிய முயற்சிகளைத் துவக்குவதினால் பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளது. இந்தியா ப்ரிக்ஸ் நாடுகளின் சக்தி வாய்ந்த தேசமாக உருவாகி வருகின்றது. அது உலக வங்கியாகட்டும், உலக நிதி அமைப்பாக இருக்கட்டும் மூடியாக இருக்கட்டும் ஸ்டாண்டர்ட் அண்ட் புவராக இருக்கட்டும் வேறு பல மதிப்பிடும் நிறுவனங்களாக இருக்கட்டும் அவை யாவும் ஒருமித்த குரலில் சொல்கின்றன ஒரே குரலில் சொல்கின்றன இந்தியா மட்டுமே உலக நாடுகளிலேயே மிக வேகமாக முன்னேறி வரும் நாடு என்று. சகோதர சகோதரிகளே கடும் வறுமையுடனும் பொருளாதாரத்துடனும் இந்த நாடு எதையும் செய்ய முடியாது என்று சொன்னார்கள் ஆனால் அவற்றையெல்லாம் மீறி இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வருகின்றது. அதை இந்த உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது

modi-CA-visit-10
பிற நாடுகள் பல முறை முயன்ற பின்னரே செவ்வாயை சென்றடைந்துள்ளார்கள். என்னைப் போலவே இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது (மோடி மோடி மோடி என்ற பெரும் ஆமோதிப்பு குரலோசை அலையலையாய் எழும்புகின்றது) நமது இந்தியாவின் திறனை கொஞ்சம் பாருங்கள். விண்வெளித் துறையில் ஹோமி பாபாவும் விக்ரம் சாராபாயும் இருக்கும் பொழுது நாம் ஏன் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இன்று நமக்கு அதே துணைக் கோள்கள்தான் நமது நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் அளவு உதவி புரிகின்றன. மீனவர்களுக்கு எங்கு மீன் அதிகம் கிடைக்கும் என்று அந்த சாட்டிலைட்டுகள் அளிக்கும் தகவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் டெல்லிக்கு வந்த பொழுது சொன்னேன் இந்த உலகம் மாறி விட்டது. நாம் டிஜிடல் தொழில் நுட்பத்தை பின்பற்ற வேண்டும் என்றேன். என்னுடைய நீண்ட குஜராத் அனுபவத்தில் இருந்து நான் கண்டு கொண்டது இ கவர்னன்ஸ் என்பது ஈஸி கவர்னன்ஸ் ஈ கவர்னன்ஸ் என்பது எக்கனாமிக்கல் கவர்னன்ஸ். நான் அதிகாரிகளிடம் கேட்டேன் எவ்வளவு தூரம் செயற்கைக் கோள்களை நீங்கள் பயன் படுத்துகிறீர்கள் என்று? நான் அதிகாரிகளுக்கும் விண்வெளித் துறை விஞ்ஞானிகளுக்கு இடையில் தொடர்புகள் ஏற்படுத்தினேன். கூட்டங்கள் நடத்தினேன். இன்று 170 துறைகள் செயற்கைக் கோள்களை திறமையாக பயன் படுத்துகின்றார்கள். எப்படி செயற்கைக் கோள்கள் துணை கொண்ட விண்வெளி தொழில் நுட்பம் புதிய திறனையும் பயனையும் அளித்ததோ அது போல இன்று இந்த டிஜிட்டல் டெக்னாலஜி இந்த உலகிற்கு புதிய ஆற்றலையும் திசையையும் காண்பித்துக் கொடுத்திருக்கிறது. அந்த திசையில் இந்தியாவிலும் டிஜிட்டல் இண்டியா என்ற திட்டத்தை நாங்கள் கொணர்ந்திருக்கின்றோம். இந்தியாவில் அடிமட்ட ஏழைகள் கூட கை தொலைபேசியை பயன் படுத்துகின்றன. காலையில் பால் கொண்டு வருபவனும் பேப்பர் போடுபவனும் கைபேசியை பயன் படுத்துகின்றனர். அந்த அளவுக்கு இந்தியாவில் தொழில் நுட்பம் ஊடுருவியுள்ளது. அந்த தொலைபேசிகளை தொழில் நுட்பம் மூலம் இணைப்பதன் மூலமாக ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் அதன் பெயர் தான் ஜாம் என்பது.

நான் ஜாம் என்று குறிப்பிடுவதில் உள்ள ஜே ஜன் தன் யோஜனா என்னும் வங்கிக் கணக்குத் திட்டத்தைக் குறிக்கின்றது.

என் சம வயது மக்கள் இந்தியாவில் வங்கிகள் 1969 முதல் 71 வரை தேசீயமயமாக்கப் பட்டதை அறிவார்கள். அப்பொழுது வங்கிகள் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. ஏழைகளுக்கானதாக இல்லாமல் இருந்தது. அதனால் அவை தேசியமயமாக்கப் பட்டன. அதனால் அரசாங்கத்திற்கு வங்கிகள் ஏழைகளையும் அணுக வேண்டி வைக்க  வேண்டிய பொறுப்பு உருவானது

நான் டெல்லிக்கு வந்த பொழுது கிட்டத்தட்ட 50% மக்களை இன்னும் இந்திய வங்கிகள் சென்றடையவில்லை அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் உருவாகவில்லை என்பதை அறிந்த பொழுது கடும் ஏமாற்றமடைந்தேன். இன்றைய காலக் கட்டத்தில் வங்கிகள் தான் ஒரு தேசத்தின் தனிநபர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமான பொருளாதார நிதி முதுகெலும்பாக செயல் படுகின்றன. அதில் 50 சத மக்கள் இன்னும் வங்கிகள் பற்றி அறியாமல் இருந்தால் எப்படி அவர்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க இயலும்?

Indian Prime Minister Narendra Modi gestures during a community reception in San Jose, California
நாங்கள் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டோம். அனைத்து மக்களும் இன்னும் நூறு நாட்களுக்குள் வங்கிக் கணக்குத் துவக்க வைக்கப் பட வேண்டும் என்ற பொறுப்பை எடுத்துக் கொண்டோம். நீங்கள் நினைக்கலாம் கடந்த 40 ஆண்டுகளாக சாதிக்க முடியாத ஒன்றை எப்படி மோடிஜி நூறு நாட்களுக்குள் சாதிக்கப் போகிறார் என்று. என் சக தேச குடிமக்களே நீங்கள் 18 கோடி புதிய வங்கிக் கணக்குகள் இப்பொழுது துவக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். அடிமட்ட ஏழைகள் கூட இப்பொழுது வங்கிக் கணக்குத் துவக்கியுள்ளார்கள்

அவர்கள் ஏழைகள் அவர்களுக்கு வங்கியில் சேமிக்க எங்கிருந்து பணம் வரப் போகின்றது? அதனால் நாங்கள் ஒரு விதியை ஏற்படுத்தினோம். அதாவது பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் படி எவரும் ஒரு பைசா சேமிப்பு இல்லாமல் வங்கிக் கணக்கைத் துவக்கலாம் என்று. வங்கி ஊழியர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். எங்களுக்கு இதற்காகும் பயணச் செலவுகளையாவது அளியுங்கள் என்று கோரினார்கள். நான் சொன்னேன் கடந்த 40 ஆண்டுகளாக நாம் பல சுகபோகங்களை அனுபவித்து விட்டோம். இப்பொழுது அதைத் திருப்பித் தர வேண்டிய நேரம் வந்து விட்டது என்றேன்.

நாங்கள் அவர்களை 0 ரூபாய் சேமிப்புடன் கணக்கைத் துவக்கச் சொன்னோம். நாம் இதுவரை பணக்காரர்களின் அற்பத் தனத்தைக் கண்டு வந்திருக்கிறோம் ஆனால் இங்கே ஏழைகளின் செல்வங்களை பாருங்கள். இது மிகப் பெரியதொரு மகத்தான சாதனை. ஒவ்வொருவரும் 50,100, 200 என்று கணக்கில் இட்டு 32000 கோடி ரூபாய்களை வங்கிக் கணக்கில் சேமித்தளித்தனர். நமது குடிமக்களின் பரந்த தன்மையை கொஞ்சம் கவனியுங்கள் நாட்டின் அடிமட்ட ஏழைகள் கூட தேசத்தின் வளர்சிக்காக ஏதாவது அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த இயக்கத்தின் மூலமாக தேசத்தின் பொருளாதாரத்திற்கு நாங்கள் உதவியுள்ளோம்

அடுத்தது ஜாம் என்ற சொல்லின் இரண்டாம் எழுத்து எ என்பதாகும். அதன் அர்த்தம் ஆதார் அட்டை என்பதாகும். அனைத்து குடிமக்களும் உயிரியல் அடையாளம் மூலம் அடையாளப் படுத்தப் பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப் படுகிறது. அதை முக்கியமான மையப் புள்ளியாக கொணர்ந்துள்ளோம்

மூன்றாவது எழுத்து எம் என்பதாகும் அதன் அர்த்தம் மொபைல் கவர்னன்ஸ் ஏன் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் அவன் விரல் நுனியில் கிடைக்கக் கூடாது?

இந்த மூன்று எழுத்துக்களின் கூட்டணியும் மிக முக்கியமானதாகும். சரி நீங்கள் சொல்லுங்கள் நம் தேசம் ஊழல்களினால் அழிக்கப் பட்டதா இல்லையா? (ஆமாம் ஆமாம் ஆமாம் என்ற பெரும் ஒலி எழுகின்றது) நீங்கள் இந்திய அரசாங்கத்தில் இருந்து ஊழல்கள் அறவே அகற்றப் பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லவா? (ஆமாம் ஆமாம் ஆமாம் என்ற கோஷம் எழுகின்றது) ஆனால் ஊழல்கள் அமைதியாக நீக்கப் படலாம் என்பதை அறிவீர்களா? நான் ஒரு உதாரணம் அளிக்கப் போகின்றேன். இந்த அரசு மக்களுக்கு பல்வேறு உதவித் தொகைகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு குடிமகனும் அவனுக்குத் தேவையான எரிவாயு உருளைகளை வாங்க அரசாங்கம் 150 ரூபாய்கள் முதல் 200 ரூபாய்கள் வரை உதவித் தொகை அளிக்கின்றது. அதை செல்வந்தர்களும் எழைகளும் ஒரு சேர அனுபவித்து வந்தனர். அந்த உதவித் தொகை ஏழைகளுக்கு மட்டுமானது அல்லவா? நான் இந்த உதவித் தொகை ஜன் தன் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அனுப்பப் பட வேண்டும் என்று முடிவு செய்தேன். முதலில் ஒவ்வொரு மாதமும் 19 கோடி மக்கள் இந்த உதவித் தொகையை பெற்று வந்தனர். இப்பொழுது 14 கோடி பேர்கள் மட்டுமே அந்த உதவித் தொகையைக் கோருகிறார்கள் மீதமுள்ள 5 கோடி மக்கள் அந்த உதவித் தொகையை பெற விரும்பவில்லை. அதனால் அரசுக்கு பெரும் சேமிப்பு உருவானது. தேவையற்றவர்களுக்கு அநாவசியமாக உதவித் தொகை வழங்குவது நிறுத்தப் பட்டது விரயம் தவிர்க்கப் பட்டது

ஆகவே நீங்கள் கணக்குப் போட்டுப் பார்த்தால் பழைய எரிபொருள் விலையில் 19000 கோடி ரூபாய்கள் திருடப் பட்டு வந்தது புரிய வரும். இப்பொழுது இந்தப் பணம் அரசின் கஜானாவில் மிச்சப் படுகின்றது. இனிமேல் அந்த உதவித் தொகையைப் பெற இடைத்தரகர்கள் தேவையில்லை, திருடர்கள் கிடையாது. எனது ஜாம் மூலமாக ஊழலை ஒழிக்கத் துவங்கியுள்ளோமா இல்லையா? சொல்லுங்கள் மக்களே. திருட்டை தவிர்த்திருக்கிறோமா இல்லையா? நிதியை சேமித்துள்ளோமா மிச்சப் படுத்தியுள்ளோமா இல்லையா? அந்த சேமிப்பு நிதி ஏழைகளூக்கு பயன் படுமா இல்லையா? (ஆமாம் ஆமாம் ஆமாம் என்ற கோஷம் விண்ணை முட்டுகின்றது) இப்படித்தான் மாற்றம் உருவாகின்றது.

modi-CA-visit-11
எனது பிராசரங்கள் ஒன்றில் பெரும் வியாபாரிகளும் பணக்காரர்களும் இருந்தார்கள். நான் அவர்களிடம் சாதாரணமாகக் கேட்டேன் ”ஏன் நீங்கள் எல்லாம் இந்த எரிவாயு உதவித் தொகையைப் பெறுகிறீர்கள் என்று? ” மறுத்து விடுங்கள் என்றேன். இது மனித இயல்பு. நீங்கள் எத்தனைதான் செல்வந்தராக இருந்தாலும் எந்தவொரு இலவச வசதியையும் விட்டுத் தர மனம் வராது. ஆனால் நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிரேன் 30 லட்சம் மக்கள் இனிமேல் தங்களுக்கு இந்த உதவித் தொகை தேவையில்லை என்று சொல்லி இனிமேல் இந்த உதவி வேண்டாம் என்று தானாகவே முன் வந்து மறுதலித்திருக்கிறார்கள். இதை விட இந்த தேசத்தின் வலிமை குறித்து உணர்த்த வேறு என்ன உதாரணம் வேண்டும்? அந்த வலிமையே அந்த தேச உணர்வே இந்த தேசத்தை முன்னேற்றும் என்பேன் நான்

சகோதர சகோதரிகளே நாங்கள் மனித வள மேம்பாட்டுக்காக ஒரு பெரும் இயக்கத்தைத் துவக்கியுள்ளோம். அதன் படி தேசத்தின் 80 கோடி இளைஞர்களுக்கு தொழில் கல்வி வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். அவர்கள்தான் புதிய பாரதத்தைப் படைக்கப் போகின்றார்கள். நமது தாய்மார்களும் சகோதரிகளும் தேசத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லப் போகின்றார்கள். அதற்காக ஒரு மாபெரும் இயக்கத்தைத் துவக்கியுள்ளோம். பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம் என்பதே அந்த இயக்கம். நமது புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு மண் வள அட்டை விவசாயிகளுக்கு அளித்துள்ளோம்.அதைக் கொண்டு நமது விவசாயிகள் முன்னெப்பொழுதையும் விட தொழில் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இதைப் போன்று ஏராளமான புதிய திட்டங்களை அளித்துள்ளோம்.

நாங்கள் இன்னொரு காரியத்தையும் செய்துள்ளோம்.விவசாயிகளுக்கு யூரியா உரம் தேவைப் படுகின்றது. அரசாங்கம் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகின்றது. 80000 கோடி ரூபாய்கள் யூரியா உரத்திற்காக மட்டுமே உதவியாக வழங்கப் பட்டு வந்தது. அதில் எவ்வளவு தொகை உண்மையிலேயே விவசாயிகளின் கைகளில் சென்றடைந்தது என்பதற்காக கணக்கு வழக்கு ஏதும் இல்லை. நாங்கள் இதில் உள்ள ஊழலைத் தடுப்பதற்காக யூரியா உரத்தின் மீது வேப்ப இலைச் சாறை பூசினோம். அப்படி வேம்பு பூசப் பட்ட யூரியாவை விவசாயம் தவிர வேறு எந்த பயன்பாடுகளுக்கும் பயன் படுத்த முடியாது. முன்பு இந்த யூரியா கள்ள மார்க்கெட்டில் வேதிப் பொருள் நிறுவனங்களுக்கு கடத்தப் பட்டு வந்தது. நான் ஒன்றை மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லிக் கொள்கிறேன் சகோதர சகோதரிகளே அடுத்த வருடம் இந்த யூரியா உதவித் தொகையில் எத்தனை ஆயிரம் கோடி ஊழல்கள் தடுக்கப் பட்டு அந்த பணம் சேமிக்கப் பட்டுள்ளது என்ற விபரம் தெரிய வரும். நிச்சயமாக அரசாங்கம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை இந்த யூரியா திருட்டை வேப்ப சாயம் பூசியதன் மூலமாக தடுத்ததன் மூலமாக சேமித்திருக்கும். யூரியா திருட்டு தடுக்கப் பட்டதினால் யூரியா பயன் படுத்தப் பட்ட அளவு நிச்சயம் குறைந்திருக்கும். இதைப் போலவே பிற துறைகளிலும் நாங்கள் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி இந்தியாவின் முன்னேற்றத்தினை வேகப் படுத்தி வருகின்றோம். நான் நாங்கள் எடுத்து வரும் அத்தனை முயற்சிகளையும் சொல்ல ஆரம்பித்தால் 2 மணி நேரம் போதாது நான் சொல்லி முடிக்க 15 நாட்கள் பிடிக்கும். ஆகவே இன்று உங்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டத்தை மட்டுமே காண்பிக்கின்றேன். நீங்கள் நமது தேசம் புதிய உயரத்தினை எட்டுகின்றது என்பதை இன்று உணர்ந்திருப்பீர்கள்

இன்று இந்த உலகம் இரண்டு பெரிய சவால்களை சந்தித்து வருகின்றது. ஒன்று பயங்கரவாதம் இன்னொன்று உலக வெப்பமயமாதல். உலகில் சமாதானத்தை விரும்பும் அனைத்து நாடுகளும் இணைந்து வந்தால் பயங்கரவாதமும் வெப்பமயமாதலும் ஒழிக்கப் படும் என்று நம்புகின்றேன். நாங்கள் இந்த சவால்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். இந்தியா இந்த சவால்களை எதிர் கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. இன்று உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இந்த இரண்டு பிரச்சினைகளே முக்கியமாகப் பேசப் படுகின்றன.

ஐ நா சபை 70 வருடங்களாக இயங்கி வருகின்றது. ஆனால் அதனால் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட முடியவில்லை. அதற்கான ஒரு வரையறையைக் கூட அதனால் உருவாக்க முடியவில்லை. எது பயங்கரவாதம் என்பதை விவரிக்கவே விளக்கவே புரிந்து கொள்ளவே இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டால் என்று இவர்கள் பயங்கரவாதத்தை நிஜமாகவே ஒழிக்கப் போகின்றார்கள்? நான் அனைத்து உலக நாடுகளுக்கும் எழுதியுள்ளேன் விரைவில் பயங்கரவாதம் எது என்பதை வரையறை செய்யுங்கள். யார் பயங்கரவாதி என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. யார் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய சமயம் வந்து விட்டது. யார் மனித நேயத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை கண்டறியும் நேரம் வந்து விட்டது. மனிதம் நல்ல பயங்கரவாதத்தினாலோ கெட்ட பயங்கரவாதத்தினாலோ பாதுகாக்க முடியாது பயங்கரவாதம் என்பது ஒன்றே ஒன்றுதான் அதில் நல்லது கெட்டது கிடையாது. பயங்கரவாதி என்பவன் எப்பொழுதுமே பயங்கரவாதி மட்டுமே.

1993ம் ஆண்டில் நான் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் சிலரிடம் சொன்னேன் உலகத்தில் பயங்கரவாதத்தினால் பெரும் அச்சுறுத்தல் அபாயம் உள்ளது என்று. அப்பொழுது அவர்கள் அதெல்லாம் கிடையாது என்று மறுத்தார்கள். அப்பொழுது நான் சொல்வதை புரிந்து கொள்ள மறுத்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு உங்களுடன் நீங்கள் சொன்னது குறித்து பேச வேண்டும் என்றார்கள். சரி நானே உங்களை சந்திக்கிறேன் என்றேன். இத்தனை நாட்கள் பயங்கரவாதத்தை மறுத்து விட்டு இப்பொழுது ஏன் வருகிறீர்கள் நாங்கள் 40 வருடங்களாக அதனால் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றோம் இதை உலகத்திற்கு சொல்ல முயன்று கொண்டிருக்கிறோம் நீங்கள்தான் கேட்க்க மறுத்தீர்கள் இப்பொழுது அனுபவிக்கிறீர்கள் என்றேன்.

சில மாதங்களுக்கு முன்பாக ஸ்டாக் மார்கெட்டில் குண்டுகள் வெடித்தன. அப்பொழுதான் இதைப் பற்றி கவலை அடைய ஆரம்பித்தார்கள். உடனே பயங்கரவாதம் குறித்து அக்கறை கொள்ள ஆர்மபித்தார்கள். இன்று உலகின் எந்தப் பகுதியிலாவது பயங்கரவாதம் இல்லையென்றால் அது அங்கு வரவே வராது என்று அர்த்தம் அல்ல. பயங்கரவாதம் உலகின் எந்த மூலையிலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். அதை அனைத்து அமைதி விரும்பும் நாடுகளும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும். அதற்கு முதலில் ஐ நா அதற்கான வரையறையை உருவாக்க வேண்டும். உலகம் ஒன்று கூடி இதில் ஒரு முடிவை தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் பிறகு யாரை உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் யாரை எதிர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். நாம் காந்தியும் புத்தரும் அவதரித்த தேசத்தில் இருந்து வந்திருக்கின்றோம் நாம் அஹிம்சையை போதித்த தேசத்தில் இருந்து வந்திருக்கின்றோம் நாம் 21ம் நூற்றாண்டில் அப்பாவி மக்கள் பயங்கரவாதத்தினால் கொல்லப் படுவதை வேகத்துடன் ஒழிக்க வேண்டும். இதை நான் ஐ நா சபையில் வலியுறுத்தியுள்ளேன். அதை நான் மீண்டும் வலியுறுத்துவேன்

கலிஃபோர்னியாவில் உள்ள எனது சகோதர சகோதரிகளே நான் உங்கள் அன்பிற்கும் வரவேற்பிற்கும் எனக்களித்த மரியாதைக்கும் நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். நாம் அனைவரும் இணைந்து பாரத தேசத்தின் ஏழைகளின் முன்னேற்றதிற்காக அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக பணியாற்றுவோம். நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக நமது சகோதரிகளின் தாய்மார்களின் பாதுகாப்பிற்காக மரியாதைக்காஅக விவசாயிகளின் செழிப்பிற்காக நாம் அனைவரும் இணைந்து செயல் படுவோமாக. நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பையும் நன்றிகளையும் தெர்வித்துக் கொள்கின்றேன். முக்கியமாக அமெரிக்க செனட்டர்கல் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு. நான் நிறைய செனட்டர்களுக்கும் காங்கிரஸ் சபையினருக்கும் இங்கு வருகை தந்ததற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தயவு செய்து என்னோடு இணைந்து சொல்லுங்கள் பாரத் மாதா க்கீ ஜெய் என்று. சத்தமாகச் சொல்லுங்கள். உங்கள் குரல் இந்தியா வரை கேட்க்க வேண்டும் ஓங்கி உரக்கச் சொல்லுங்கள் பாரத் மாதா க்கீ ஜெய் பகத் சிங் அமர் ரஹேஹை (அனைவரும் உரக்க பல முறை திரும்பிச் சொல்கிறார்கள் அந்த குரல்கள் இந்தியா வரை கேட்டிருந்திருக்கும்) மீண்டும் சொல்கின்றேன் அனைவருக்கும் மிக்க நன்றி

ஒரு நற்செய்தியை சொல்ல மறந்து விட்டேன் வரும் டிசம்பர் 2ம்தேதி முதல் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து நேரடியாக டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் பறக்கவிருக்கின்றது. வாரம் மூன்று நாட்கள் இது இயங்கும்.

உரை முடிகின்றது..

(முற்றும்)

2 Replies to “மோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4”

  1. //நாம் அஹிம்சையை போதித்த தேசத்தில் இருந்து வந்திருக்கின்றோம் நாம் 21ம் நூற்றாண்டில் அப்பாவி மக்கள் பயங்கரவாதத்தினால் கொல்லப் படுவதை வேகத்துடன் ஒழிக்க வேண்டும். இதை நான் ஐ நா சபையில் வலியுறுத்தியுள்ளேன். அதை நான் மீண்டும் வலியுறுத்துவேன்//

    பிரதமரின் உரைக்கு மாறாக, நமது தேசத்தின் நற்பெயருக்கு களங்கமாக தத்ரியில் சிறுபான்மை இனத்தவர் மீது பயங்கரவாத தாக்குதல் மற்றும் கொலை. இது தொடர்ந்தால் கூடிய விரைவில் நாம் அஹிம்சையை கடைபிடிக்கும் தேசம் என்ற நற்பெயரை இழந்து விடுவோம்.

  2. யார் மனித நேயத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை கண்டறியும் நேரம் வந்து விட்டது. மனிதம் நல்ல பயங்கரவாதத்தினாலோ கெட்ட பயங்கரவாதத்தினாலோ பாதுகாக்க முடியாது பயங்கரவாதம் என்பது ஒன்றே ஒன்றுதான் அதில் நல்லது கெட்டது கிடையாது. பயங்கரவாதி என்பவன் எப்பொழுதுமே பயங்கரவாதி மட்டுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *