திருவாரூர் நான்மணிமாலை — 2

கொடிஞ்சித் தேர், கோயில்   

கோயிலுக்குள் நுழையு முன்பாக அந்தத் தேர் நம் கண்ணில் தென்படுகிறது. தேர் எனறாலே நம் நினைவிற்கு வருவது திருவாரூர் தான். குமரகுருபரர் காலத்திலேயே இந்தத் தேர் பிரசித்தி பெற்றிருந்தது என்று தெரிகிறது. திருவாரூர் நான்மணியின் முதல் பாடலிலேயே தேரின் அழகைச் சொல்கிறார். அதை நீள்கொடிஞ்சித்தேர் என்று சிறப்பிக்கிறார்.

தியாகேசர் இந்தத் திருத்தேரில் எழுந்தருளும் போது அடிக்கு ஓராயிரம் பொன் இறைக்கப்படுமாம். அதனால் அவரைத் தேரூர்ந்த செல்வத் தியாகனே என்கிறார்.

இப்பெருமை பொருந்திய தேரில் எழுந்தருளி வரும் அழகைப் பார்த்து மயங்கிய ஒரு பெண் பேசுவதாக முதல் பாடலில் சொல்கிறார்.

தலைவி சொல்கிறாள்.

நீரூர்ந்த முந்நீர் நிலவலய நீள்கொடிஞ்சித்

தேரூர்ந்த செல்வத் தியாகனே—ஆரூர

வீதி விடங்கா அடங்கா வேலை விடம் போலும்

மதிப்பாதி விடங்கா கடைக்கண் பார்த்து.

தியாகேசனிடம் காதல் கொண்ட பெண், ”தியாகேசா! கடலிலிருந்து எழுந்த சந்திரன் எனக்கு நஞ்சாக இருக்கிறான் அவனிடமிருந்து என்னைக் காப்பாய்,” என்று கெஞ்சுவதாகக் குமரகுருபரர் அமைத்திருக்கிறார்.

சோமாஸ்கந்தர்

பூங்கோயில் என்று அழைக்கப்படும் கோயிலுக்குள் செல்வோம். அங்கு சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசனம் செய்கிறோம். இறைவன், அம்பிகை யோடும் முருகனோடும் சேர்ந்திருக்கும் கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி என்கிறோம்.

தியாகேசருக்கும் உமாதேவிக்கும் நடுவில் முருகன் காட்சியளிக்கிறான். தியாகேசரையும் அம்மையையும் முருகனை இருவரும் உள்ளம் நெகிழ மாற்றி மாற்றித் தழு விக் கொள்கிறார்கள். இறைவன் தன் மூன்று கண்களாலும் குளிர நோக்குகிறான். உச்சிமுகர்கிறான். அம்மையும் தன் குமரனைக் குளிர நோக்கி உச்சி முகர்ந்து மகிழ்கிறாள்.  குழந்தை முருகன் மழலைமாறாத மொழியால் ஏதேதோ பேசுகிறான். அது வேதத்தைப்போல ஏழிசை பழுத்த தீஞ்சொற்களாக அமுதம்போன்று இருவர் செவிகளிலும் கேட்கிறது. இவ்வளவு அழகான அமுதம்போன்ற சொற்களைக் கேட்ட திருச்செவியில் என்னுடைய அற்பமான சொற்களையும் கேட்டது மிகவும் அற்புதமானது! என்று நெகிழ்ந்து போகிறார்.

சிங்கம் சுமந்த செழுமணித் தவிசில்

கங்குலும் பகலும் கலந்து இனிது இருந்தாங்கு

இடம் வலம் பொலிந்த இறைவியும் நீயும்

நடுவண் வைகு நாகிளங் குழவியை

ஒருவிரின் ஒருவர் உள்ள நெக்குருக

இருவிருந் தனித்தனி ஏந்தினிர் தழீஇ

முச்சுடர் குளிர்ப்ப முறை முறை நோக்கி

உச்சி மோந்தும், அப்பச்சிளங் குழவி

நாறு செங்குமுதத் தேறலோடொழுகும்

எழுதாக் கிளவியின் ஏழிசை பழுத்த

இழுமென் குரல மழலைத் தீஞ்சொற்

சுவையமுதுண்ணும் செவிகளுக்கு ஐய என்

பொருளில் புன்மொழி போக்கி

அருள்பெற அமைந்ததோர் அற்புதம் உடைத்தே

என்று இறைவனின் கருணையை எண்ணி வியக்கிறார்.

இருந்தாடழகர்

தியாகேசருக்கு இருந்தாடழகர் என்று ஒரு திருநாமம் வழங்கப் படுகிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதற்குக் குமரகுருபரர் ஒரு காரணம் கற்பிக்கிறார். என்ன காரணம்?

பெருமான் நின்று ஆடினால் அவருடைய பாதங்கள் வெளியே தெரியுமே. திருமால் வராக அவதாரம் எடுத்து சிவனுடைய அடியைத் தேடிச்சென்று காணமுடியாமல் திகைத்துத் திரும்பினார் அல்லவா? இப்பொழுது தியாகேசர் நின்று ஆடினால் அவர் திருவடியைக் கண்டுவிட்டேன் என்று சொல்வார் அல்லவா? அதற்காகத் தான் திருவடியை மறைத்துக்கொண்டு இருந்தபடியே ஆடுகிறார் என்று ஒரு காரணம் கற்பிக்கிறார்.

இன்னொரு காரணமும் இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. முன்பு மார்க்கண்டேயனுக்கு அருள் செய்வதற்காகப் பெருமான் யமனைத் திருவடியால் உதைத்தாரல்லவா? இப்போது திருவடியைத் தூக்கி ஆடினால் மறுபடியும் பெருமான் உதைத்து விடுவாரோ என்று யமன் அஞ்சுவானே என்று எண்ணியே இருந்தாடுகிறார் என்று ஒரு காரணமும் தோன்றுகிறது குமரகுருபரருக்கு.

கண்ணனார் பொய் சூள் கடைப் பிடித்தோ?

தென்புலத்தார் அண்ணலார் அஞ்சுவார் என்றஞ்சியோ?

விண்ணோர் விருந்தாடும் ஆரூரா மென்மலர்த்தாள்

தூக்காது இருந்தாடுகின்றவா என்?

என்று கேட்கிறார்.

அர்த்த நாரீச்வரர்

இறைவன் அர்த்தநாரீச்வரராக விளங்குவதை பார்க்கிறார். அவருக்கு ஒரு ஆச்சர்யம் ஏற் படுகிறது. ஒரு பாகம் அம்மையும் ஒரு பாகம் அப்பராகவும் திருக்கோலத்தில் தெரியும் முரண்பாட்டைக் கண்டு வியக் கிறார்.அம்மைக்கு அறம்வளர்த்தநாயகி (தர்மசம்வர்த்தனி) என்று ஒரு திருநாமம் உண்டு. இருநாழி நெல்கொண்டு அவள் 32 அறங்களையும் செய்கிறாள் ஈசன் கையில் கபாலமேந்தி பிக்ஷை எடுக்கிறார். அவருக்கு பிக்ஷாடனர் என்று பெயர்.  அந்நாளில் புரவலர்கள், மன்னர் கள் புலவர்களுக்கு யானை, குதிரை. தனம், பொன் முதலிய வற்றை பரிசுகளாகக் கொடுப்பார்கள் வறுமையில் வாடிய புலவர்கள் இவர்களை நாடிச்சென்று பாடல்கள் புனைந்து பாடிப் பரிசில்பெறுவது வழக்கம்.

ஆனால் இங்கு ஒரே உருவம் ஒருபக்கம் (இடப்பக்கம்) தானதருமங்கள் செய்கிறது அதேசமயம் மறுபக்கம் வலப்பக்கம் பிக்ஷையும் எடுக்கிறதே என்று வியக்கிறார். இந்த அதிசயத்தைப் பார்ப்போம்.

தானமால் களிறு மாநிதிக் குவையும்

ஏனைய பிறவும் ஈகுநர் ஈக

நலம் பாடின்றி நாண் துறந்து ஒரீஇ

இலம்பாடலைப்ப ஏற்குநர் ஏற்க

புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்

இருவேறு இயற்கையும் இவ்வுலகுடைத்தே

அதா அன்று

ஒரு காலத்தில் உருவம் மற்றொன்றே

இடப்பால் முப்பதிரண்டு அறம் வளர்ப்ப

வலப்பால் இரத்தல் மாநிலத்தில் இன்றே

என்று அதிசயத்தைக் காட்டுகிறார்.

ஆரூர்வந்த தியாகேசர்.

திருமால் அன்பாகிய மந்தர மலையில் ஆசையாகிய கயிற்றைக் கட்டி அருளாகிய பெருங்கடலைக் கடைந்தார். அதிலிருந்து அமுதம் போலத் தோன்றினார் தியாகேசர்.இந்திரன் வேண்டு கோளுக்கிணங்கி தெய்வலோகம் சென்றார். அங்கு இந்திரனுக்கு செல்வமும் அரசும் அளித்தார்.

ஏக சக்ராதிபதியாக விளங்கிய முசுகுந்த சக்ரவர்த்திக்கு இந்திரன் இந்தத் தியாகேசரை அளிக்க முசுகுந்தனுக்கு அருள்செய்வதற்காக இந்திரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு எழுந்தருளுகிறார். இதை

அன்பெனும் மந்தரத்தாசை நாண் பிணித்து

வண்துழாய் முகுந்தன் மதித்தனன் வருந்த

அருள் பெருங்கடலில் தோன்றி விருப்பொடும்

இந்திரன் வேண்ட உம்பர் நாட்டெய்தி

அந்தமில் திருவொடும் அரசு அவற்குதவி

ஒரு கோலோச்சியிரு நிலம் புரப்பான்

திசை திசை உருட்டும் திகிரியன் சென்ற

முசுகுந்தனுக்கு முன் நின்றாங்குப்

பொன்னுலகிழிந்து புடவியில் தோன்றி

மன்னுயிர்க்கு இன்னருள் வழங்குதும் யாமென ஈசன் அருள் புரிந்ததை அறிவிக்கிறார்.

ஈசன் திருவிளையாடல்கள்

ஈசனின் திருவிளையாடல்களைச் சொல்லித் துதிக்கிறார் குமரகுருபரர். ஈசனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் சொன்னபடி மன்மதன் பாணங்களை ஏவுகிறான். அதனால் அவர் தவம் கலைகிறது. இதனால் கோபமடைந்த ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க மன்மதன் எரிந்து சாம்பலாகிறான்.

அடுத்தபடி யமனைக் காலால் உதைத்ததைச் சொல்கிறார். மிருகண்டு முனிவரின் புதல்வனான மார்க்கண்டேயனைப் பாசக்கயிற்றால் கட்டி உயிரைப்பறிக்க யமன் வருகிறான். மார்க்கண்டேயன் சிவனைச் சரணமடைய அவரையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுக்கிறான் யமன். அந்தக் காலனை காலால் உதைத்துத் தன் பக்தனைக் காப்பாற்றியதைப் போற்றுகிறார்.

கருங்கடல் வண்ணனான திருமால் வெள்ளை ரிஷபமாக வாகனமாகி ஈசனைத் தாங்கினான். அதற்காகப் பெருமான் பிரளயகாலத்தில் திருமாலின் எலுபுக்கூடாகிய கங்காளத்தைச் சுமந்தான். இதை, “கங்காளம் தோள் மேலே காதலித்தான் காணேடி” என்று மணிவாசகர் போற்றுகிறார்.

திருவாரூரிலுள்ள தேவாசிரயன் என்ற ஆயிரங்கால் மண்டபத்தில் தேவர் குழாங்கள், உருத்திர கணங்கள் எல்லோரும் வணங்கி அர்க்கியம் முதலான உபசாரங்கள் செய்கிறார்களாம். கமலை என்றழைக்கப்படும் திருவாரூரில் பிறந்தவர்கள் இனிப் பிறவியடைய மாட்டார் கள் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் குமரகுருபரர். அவர்கள் சிவகணங்களாக்வே ஆகி விடுவார்களாம்.

இத்தலத்து உற்றவர் இனித்தலத்து உறார் எனக்

கைத்தலத்தேந்திய கனல் மழு உறழும்

மழுவுடைக் கையராகி விழுமிதின்

மாந்தர் யாவரும் காந்தியிற் பொலியும்

வரமிகு கமலைத் திரு நகர்ப் பொலிந்தோய்!

என்று இறைவனைப் போற்றுகிறார். கமலையின் பெருமையையும் பேசுகிறார்.

மயில் துணை   

பொதுவாக முருகனடியார்கள் வேலும் மயிலும் துணை என்று சொல்வார்கள். குமரகுருபரர் புற்றிடம்கொண்ட இறைவனுக்கு மயில் துணை என்கிறார்.

எப்படி?

தியாகேசருக்குப் புற்றிடங்கொண்டார், வன்மீகநாதர் என்றும் நாமங்கள் உண்டு. இவர் பாம்புப்புற்றில்போய் குடியிருக்கிறார். போதாக்குறைக்கு பாம்புகளை விரும்பி ஆபரணமாக வேறு அணிந்திருக்கிறார். அதுமட்டுமா?  கொடிய ஆலகால விஷத்தையும் உண்டாரே! இவருக்குப் பயமே இல்லையா? அவருக்கு ஏன் பயமில்லை? என்று ஆச்சரியப்பட்டவர்  அதன் காரணத்தையும் கண்டுபிடித்துவிடுகிறார். அவருக்குப் பக்கத்திலேயே பாம்புக்குப் பகையான மயில் இருப்பதால்தான் என்று தீர்மானம் செய்கிறார், இடப்பக்கத்திலேயே உமாதேவியாகிய மயில் இருப்பதால்தான் ஈசன் பாம்புகளைப்பற்றிய அச்சமே இல்லாமல் இருக்கிறாராம்.

கரும்புற்ற செந்நெல் வயற்கமலேசர் கண்டார்க்கும் அச்சம்தரும் புற்றினில் குடிகொண்டிருந்தார்.  அதுதானுமன்றி விரும்புற்று மாசுணப் பூணணிந்தார், வெவ்விடமுண்டார், சுரும்புற்ற கார்வரைத் தோகை பங்கானதுணிவு கொண்டே!

எளிவந்த தன்மை

இவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர் என்று நமக்குக் காட்டுகிறார். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார்.

இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்.

தனது அன்பரான சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்காக பரவை நாச்சியாரிடம் கால் நோவ தூதுபோனார். இப்படியெல்லாம் தன் அடியார்களூக்காகப் பல இன்னல்களையும் தாங்கிக்கொண்ட அன்பருக்கு எளியன் இப்பெருமான்! எளியரின் எளியராயினர்.  அளியர் போலும் அன்பர்கள் தமக்கு என்கிறார். அப் பெருமானை நாமும் வழிபடுவோம்.

***   ***   ***

One Reply to “திருவாரூர் நான்மணிமாலை — 2”

  1. தென்னாடுடைய சிவனே போற்றி

    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *