நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரும் எதிர்பார்த்ததுபோலவே காங்கிரஸ் கட்சியால் சீர்குலைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்க, லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் நடத்திய அமளிகளால் மதிப்பு மிக்க நாடாளுமன்ற அலுவல்கள் பல நாட்களுக்கு பாதிக்கப்பட்டுவிட்டன.
லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, தனது மரியாதையையும் கொஞ்சம் கொஞ்சமாக தனது தரமற்ற நடத்தையால் இழந்து வருகிறது. ஜனநாயகம் என்பது மனம் போன போக்கில் செயல்படுவதல்ல என்பதை அக்கட்சியின் தலைவர்கள் உணர்ந்த்தாகத் தெரியவில்லை. நரேந்திர மோடி பிரதமர் ஆனதை இன்னமும் அக்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் நாடாளுமன்றத்தை அவர்கள் முடக்குகின்றனர் என்ற, நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கைய நாயுடுவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
மோடி பிரதமர் ஆனதிலிருந்தே காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆதரவை அளிப்பதில் தயக்கம் காட்டியே வந்துள்ளது. ஆனால், தில்லி தேர்தலில் பாஜக தோல்விக்குப் பின்னர் தான் அக்கட்சியின் ஆணவப் போக்கு தலைவிரித்தாடத் துவங்கியது. ஜூலை 21 முதல் ஆக. 13 வரை நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து நடத்திய அழிச்சாட்டியத்தால் அந்தக் கூட்டத் தொடர் முழுவதுமே வீணானது. ம.பி. வியாபம் ஊழலுக்குப் பொறுப்பேற்று அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பதவி விலக வேண்டும்; ஐ.பி.எல். ஊழல் புகழ் லலித் மோடி விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக முதல்வர் வசுந்தரா ராஜியும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தக் கூட்டத் தொடரை காங்கிரஸ் கட்சி சீர்குலைத்தது.
அந்த சமயத்தில் லோகசபாவில் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதற்காக, மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்.பி.க்களில் 25 பேரை 5 .நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். அந்த அளவுக்கு வெறுப்பு அரசியல் அப்போது காங்கிரஸால் தூபமிடப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆசைகள் எதுவும் நிறைவேறவில்லை. கூட்டத் தொடர் முடங்கியது தான் மிச்சம்.
உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜக அரசு கொண்டுவரவுள்ள சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரி சட்டம் (ஜி.எஸ்.டி. மசோதா) நிறைவேறிவிடக் கூடாது என்பதே இலக்கு. இச்சட்டம் நிறைவேற்றப்படுமானால், 2016 ஏப்ரல் 1 முதல் நாடு முழுவது வரிவிதிப்பில் பெருத்த மாற்றங்கள் ஏற்படும். அதற்கான புகழ் பாஜகவுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் உள்ளக் கிடக்கை.
நாடு முழுவதும் பலவிதமாக வசூலிக்கப்படும் வரியினங்களை ஒருங்கிணைப்பதுடன், வேறுபாடற்ற வரிவிதிப்பை ஜி.எஸ்.டி. உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உற்பத்தி வரி, மாநில அரசுகளின் மதிப்பு கூட்டு வரி, கேளிக்கை வரி, ஆக்ட்ராய் என்னும் உள்ளூர் வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி என எல்லா வரிகளையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக அமையும் வகையில் புதிய ஜி.எஸ்.டி. வரி முறையானது கட்டமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்கும்போது அதன் மீது கலால் வரி, சேவை வரி, அந்தப் பொருட்களை வர்த்தகத்திற்காக மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும்போது நுழைவு வரி, மதிப்புக் கூட்டு வரி என பல வரிகள் விதிக்கப்படுகின்றன. அதேபோல பொருட்களை இறக்குமதி செய்தால், அவற்றின் மீது சுங்க வரியும் விதிக்கப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு மாநிலமும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி மேல் வரி விதித்து வரிக் கட்டமைப்பை சீர்குலைப்பதாகவும், இது பொதுமக்களுக்கு வரிச் சுமையை ஏற்படுத்துவதாகவும், இதனால் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதாகவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவேதான், மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு திட்டமிடுகிறது.
சொல்லப்போனால், இதை காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு தான் முதலில் முன்னெடுத்தது. ஆனால், இதை அமலாக்கும்போது மாநிலங்கள் பெறும் வருவாயில் பாதிப்பு ஏற்படும் என்பதால், மாநில அரசுகளுடன் விவாதித்த பிறகே இதை அமலாக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக சொன்னது. அதற்குள் தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடவே, சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு பாஜக வசம் இப்போது வந்துவிட்டது.
காங்கிரஸ் கொண்டுவர உத்தேசித்திருந்த ஜி.எஸ்.டி. சட்டத்தில் சில முக்கியமான திருத்தங்களுடன், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல வித மறைமுக வரிகளை ஒன்றிணைத்து சீர்ப்படுத்தி ஒரே வரியாக செயல்முறைப்படுத்தும் நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டது.
இந்த சட்டம், மத்திய அரசு, மாநில அரசுகள் என இரு தரப்புக்கும் பலனளிக்கக் கூடியது. புதிய சட்டம் அமலுக்கு வருகிறபோது, அது நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி பெருக்கத்துக்கு உதவும். நாட்டின் வருமானமும் கூடும். மத்திய, மாநில அரசுகள் என இரு தரப்புக்கும் சரக்குகள், சேவைகள் மீது வரி விதிக்கும் அதிகாரம் உண்டு.
இந்த மசோதாவை அமலுக்குக் கொண்டு வருவதன் மூலம், நாட்டின் வளர்ச்சி குறுகிய காலகட்டத்தில் 1-3 சதவீதமாக உயரும். இதன்மூலம் 2015-ஆம் வருடத்தின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதத்தை எட்ட முடியும் என்று பாஜக அரசு எதிர்பார்த்தது. அதற்காக, கடந்த ஏப். 24-ம் தேதி லோக்சபையில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகப்படுத்தினார். அப்போதே காங்கிரஸ் இதை கடுமையாக எதிர்த்தது. மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றது. அதன் விளைவாக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
அடுத்து வந்த மழைக்காலக் கூட்டத் தொடரும் அமளியால் முடங்க, மசோதாவை நிறைவேற்ற சிறப்புக் கூட்டம் நடத்த அரசு ஆலோசித்தது. அதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை. எனவே அது குளிர்கால கூட்டத் தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடரிலும் (டிச. 23-க்குள்) இதை நிறைவேற்ற முடியாவிட்டால், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஏப்ரலுக்குள் நடத்தி இதை நிறைவேற்ற முடியாது. இதுவே காங்கிரஸ் கட்சியின் சதித் திட்டம் அதற்காக, நாளுக்கொரு காரணங்களைக் கற்பித்து, நாடாளுமன்றத்தை முடக்குவதை அக்கட்சி வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனிடையே பிகார் தேர்தலில் பாஜக பெற்ற தோல்வி காங்கிரஸின் வாலாட்டத்தை அதிகப்படுத்திவிட்டது. இக்கட்சிக்கு விலைபோன சில ஊடகங்களும் திரைமறைவில் உதவுகின்றன.
குளிர்கால கூட்டத் தொடர் (நவ. 26) துவங்கியவுடன், சில மாதங்களுக்கு முன் வெளியுறவு இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் பேசியதாகக் கூறப்படும் ஒரு விஷயத்தை முன்னிறுத்தி லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர் காங்கிரஸார். ஹரியானாவில் தலித சிறுவர்கள் இருவர் கொல்லப்பட்ட்தை வி.கே.சிங் நாய்களுடன் ஒப்பிட்ட்தாக வெளியான ஊடகச் செய்தையை அவர் அக்டோபரிலேயே மறுத்துவிட்டார். அதைத் தான் தூசு தட்டி பிரச்னையாக்கியது காங்கிரஸ்.
அடுத்து பாகிஸ்தானுடன் ரகசியமாக பேச்சுவார்த்தையில் பாஜக அரசு ஈடுபடுவதாகக் கூறி அமளியில் ஈடுபட்டது காங்கிரஸ். இந்த இரண்டு விஷயங்களும் அதிக அளவில் எடுபடவில்லை என்றாலும், ஜி.எஸ்.டி .மசோதாவை ஒத்திப்போடுமாறு செய்ய சில நாட்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன.
அடுத்து லட்டு போல நேஷனல் ஹெரால்டு விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துவிட்டது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை மோசடியாக கைமாற்ற முயன்ற ‘யெங் இந்தியன்ஸ்’ அமைப்பின் நிர்வாகிகளான சோனியா, ராகுல், மோதிலால் வோரா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிட்யினர் மீது சுப்பிரமணியன் சுவாமி தொடுத்துள்ள வழக்கில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, வழக்கில் ஆஜராகுமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு ஒரு தனி விவகாரம். இதற்கு மோடி அரசு தான் காரணம் என்று கூறி, டிச. 7 முதலாக தொடர்ந்து லோக்சபாவில் அமளியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டதால் மீண்டும் கூட்டத் தொடர் முடங்கியது.
காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் சளைக்காதவர்களாக பகுஜன் சமாஜ் கட்சியினரும், சமாஜ்வாதி கட்சியினரும் அமளியில் ஈடுபட்டு பொன்னான அலுவல் நேரத்தை வீணாக்கினர். புதுதில்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவாலின் தனிச் செயலாளர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய சோதனையும் லோக்சபாவில் எதிரொலித்தது. அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உள்கட்சிப் பிரச்னையால் போட்டிக்குழுவினர் முதல்வராக முயன்ற விவகாரமும் லோக்சபாவை முடக்க காங்கிரஸுக்கு உதவியது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒருகட்டத்தில் வெறுத்துப் போய், “நாடாளுமன்ற அவைகள் இயங்காமல் இருப்பதற்காக அமளியை உருவாக்க புதிது புதிதாக காரணங்கள் உருவாக்கப்படுகின்றன” என்று சொன்னார்.
இது முற்றிலும் உண்மை. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியை இழந்த துர்க் கனவை இன்னமும் நம்ப முடியவில்லை. அதிகார சுகம் இல்லாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. தவிர, அதிகார மயக்கத்தில் அக்கட்சியின் தலைவி சோனியா உள்ளிட்டோர் செய்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் துவங்கிவிட்டதால், அவர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
தவிர, நாடு எக்கேடு கெட்டாலும் கவலை இல்லை என்ற எண்ணம் கொண்டவர் தான் அக்கட்சியின் தலைவர். அவரிடம் நிதானத்தையோ, பெருந்தன்மையையோ கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. எந்தச் சட்டம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் சோனியாவுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவருக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், இடதுசாரிகள் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சியினரும் சோனியாவின் பாதையைப் பின்தொடர்வது தான் கவலை அளிக்கிறது. சோனியாவுக்கு போக்கிடமாக இத்தாலி இருக்கிறது. இவர்கள் எங்கே போவார்கள்?
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் ஜி.எஸ்.டி. மசோதா சட்டமாகிவிடக் கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் ஆசை. வெளிப்பார்வைக்கு இதை ஆதரிப்பதாகக் கூறிவிட்டு, தொடர்ந்து நாடாளுமன்றத்தை அக்கட்சி முடக்குவதன் தாத்பரியம் அதுவே. இதை பிற கட்சிகள் உணர வேண்டமா?
ராஜ்யசபாவில் ஆளும் கட்சிக்கு பலம் குறைவாக இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி இந்த நிர்பந்த அரசியலில் ஈடுபடுகிறது. இல்லாவிட்டால், லோக்சபாவில் அமளியில் ஈடுபடும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. எந்த ஒரு சட்டமும் லோக்சபாவில் நிறைவேறுவது போலவே ராஜ்யசபாவிலும் நிறைவேற வேண்டும். அதற்காகத் தான் அரசு பொறுமை காக்கிறது. ஆனால், காங்கிரஸின் மனப்போக்கு பாஜகவுக்குப் புரிந்துவிட்டது.
எனவே தான், “நாடாளுமன்றத்தை தொடர்ச்சியாக முடக்குவதன் மூலம், இனி வரக் கூடிய எதிர்க்கட்சிகளுக்கு தவறான முன்னுதாரணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டினார். ராஜ்யசபாவில் அரசு அலுவல்கள் முடக்கப்படுவது தொடருமானால், எதிர்காலத்தில் கொள்கை முடிவுகளை அதிரடியாகவும், லோக்சபாவில் பண மசோதாக்களின் மூலமாகவும் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் (டிச. 17) தெரிவித்தார்.
வரி விதிப்புகள், அரசின் செலவினங்கள், நிதி விவகார நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் இடம்பெறுவது ‘பண மசோதாக்கள்’ எனப்படும். இப்படிப்பட்ட மசோதாக்களை சபாநாயகரின் ஒப்புதலுடன், லோக்சபாவில் மட்டுமே அறிமுகம் செய்ய முடியும். அவ்வாறு லோக்சபாவில் நிறைவேற்றப்படும் பண மசோதாக்கள் மீது திருத்தங்களை முன்வைக்க ராஜ்யசபாவுக்கு அதிகாரம் கிடையாது. எனவே, அரசுக்குப் பெரும்பான்மை வலுவுள்ள லோக்சபாவில் பண மசோதாக்களை முன்னெடுப்பதன் மூலம் முக்கிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம்- என்பதே அருண் ஜேட்லி தெரிவித்த கருத்தின் பொருள்.
அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸாருக்கு பொட்டில் அடித்துப் புரிய வைப்பதுபோல சில முக்கியமான கருத்துகளை அருண் ஜேட்லி குறிப்பிட்டார்:
“நாடாளுமன்றத்தை செயல்படவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு அமர்விலும் எதிர்க்கட்சியினர் கூச்சல், குழப்பங்களை எழுப்புகின்றனர். இது நாடாளுமன்றத்தையும், சட்ட நடவடிக்கைகளையும் எதிர்காலத்திலும் எதிர்க்கட்சிகள் முடக்குவதற்கு முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
இந்தத் தவறான முன்னுதாரணத்தை யார் ஏற்படுத்துகின்றனரோ (காங்கிரஸ்), அவர்கள் இந்திய ஜனநாயகத்தை தவறான பாதையில் திசை திருப்பிக் கொண்டிருப்பதை உணர வேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைய விடக் கூடாது என்பதும், “நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருக்கும்போது வளர்ச்சி ஏற்படாததால் வேறொருவர் (பாஜக) ஆட்சி செய்யும்போதும் வளர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதும், உங்கள் நோக்கமாக இருக்குமென்றால், உங்களைக் கையாள்வதற்கான மாற்று வழிகளை நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும்”
-இவ்வாறு எச்சரித்திருக்கிறார் ஜேட்லி. இந்நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ் கட்சியின் சதித் திட்டங்களை, பாஜக எம்.பி.க்களும், அமைச்சர்களும் ஜனவரி முதல் மக்களிடையே விளக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 2019 மே வரை மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த நாட்டை ஆளும். அதன் பிறகும் பாஜக அரசு தொடர்வதற்குரிய பணிகளையே காங்கிரஸ் கட்சியின் துர் நடத்தைகள் உருவாக்கி வருகின்றன.
ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்கள் பொறுமையுடன் நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் நயவஞ்சகத் தந்திரங்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியினருக்கே எமனாகும். இதனை மக்கள் அவர்களுக்குப் புரிய வைப்பார்கள்.
.
திரு சேக்கிழான் அவர்களின் காங்கிரசின் கிழ்த்தரமான சதி என்ற அரசியல் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
சோனியாகாந்தியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் இது போன்ற சந்தர்ப்பங்களை பா.ஜ.க. வினர் தவறவிடாமல் மக்கள் மன்றதிர்க்கு எடுத்துச்சென்று
மக்களிடம் பிரச்சாரத்தை செய்வதன் மூலம் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில்
பா.ஜ.க மகத்தான வெற்றி பெற நல்ல சந்த்தர்ப்பம் உள்ளது என்பதை பா.ஜ.க வினர் உணர்ந்து செயல் பட வேண்டும்.
“இந்தியாவை வளர்ச்சியடைய விடக் கூடாது என்பதும், “நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருக்கும்போது வளர்ச்சி ஏற்படாததால் வேறொருவர் (பாஜக) ஆட்சி செய்யும்போதும் வளர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது’ என்பதும், உங்கள் நோக்கமாக இருக்குமென்றால், உங்களைக் கையாள்வதற்கான மாற்று வழிகளை நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும்” – அரசியல் நிலை சாமானியர்களை சிந்தனையில் ஆழ்த்துகிறது.