கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்

 பகுதி 1 – பதிஇயல்

இயேசுவின் ஜீவிதம்

கிறிஸ்தவர்களின் பரம பிதாவாகிய ஜெஹோவாவிற்கு கடவுளின் உயர்தனித்தன்மைகள் ஏதும் இல்லை என்பதை பைபிள் வசனங்களை சான்றாகக்கொண்டு நிறுவிய ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் இயேசுவின் வாழ்வையும் ஆராய்ந்து அவரது வரலாற்றுத்தன்மை, புனிதத்தன்மை, எல்லாம் அறிந்த தன்மை, ஆகியவற்றையும் முற்றிலும் ஆதாரப்பூர்வமாக நிராகரித்ததை கடந்த பகுதிகளில் கண்டோம்.

இரட்சிப்புக்கு ஒரேவழி என்றும் இறைமகன் என்றும் கிறிஸ்தவர்கள் கருதும் இயேசு சர்வவல்லமை உடையவரா, சுதந்திரரா என்ற கேள்விகளுக்கு ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் ஆதாரப்பூர்வமாக பதில் அளிக்கிறார். தெய்வீககுணங்கள் ஏதும் இயேசுவுக்கும் இல்லை என்று எவ்வாறு நிரூபிக்கிறார் என்பதை இந்தப்பகுதியில் அறிந்துகொள்ளுவோம்,  வாருங்கள் நண்பர்களே! … 

இயேசு சர்வவல்லமை உடையவரா? சுதந்திரரா? ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே! உங்களுடைய பரிசுத்தவேதாகமாகிய பைபிள் சொல்லுகிறது.

“அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்”

(லூக்கா 22:43).

“அந்நாள் முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்”

(யோவான், 11:53-54).

இந்த இரு விவிலிய வசனங்களும் உங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு சர்வவல்லமை இல்லை என்பதையும் அவர் சுதந்திரர் அல்லர் என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன, இயேசு அமைதி சமாதானம் ஆனந்தம் நிறைந்தவரா? உங்களுடைய விவிலியம் சொல்கிறது.

“பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார்”.”

மத்தேயு 26:37).

இந்தவசனம் உங்கள் கர்த்தராகிய இயேசு அமைதியாக(சமாதானம்) இல்லை என்பதையும், துன்பத்தை சந்திக்கும் துணிவும் அவருக்கு இல்லை என்பதையும் காட்டுகிறது. அவருக்கு மகிழ்ச்சியில் இருந்த இச்சையையும், அவர் எப்போதும் ஆனந்தமானவராக இருந்தவர் அல்லர் என்பதையும் தெளிவு படுத்துகிறது.

இயேசு ஜெஹோவாவின் தாசரே?

இயேசுவைப்பற்றி ஜெஹோவாவாகிய உங்கள் தேவன், பரமபிதா சொல்லுவதைப் பாருங்கள்.

“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.”

(மத்தேயு 12:18).

இயேசுவே தன்னைப்பற்றி சொல்லுவதையும் காணுங்கள்.

“இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”

(லூக்கா 13:35)

இந்த இரு விவிலிய வசனங்களிலிருந்தும் இயேசு ஜெஹோவாவால் தெரிந்தெடுக்கப்பட்ட பணியாளர், ஆசீர்வதிக்கப்பட்டவர், விரும்பப்பட்ட தாஸர் என்பது தெளிவாகப் புலனாகிறது.

இயேசுவின் மரண பயம்!

“இயேசு: ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்,’ என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.”

(லூக்கா 23:46).

“சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: ‘என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,’ என்று ஜெபம்பண்ணினார்.”

மத்தேயு 26:39).

மேற்கண்ட வசனங்களை இயேசுவே சொல்லியிருப்பதால் இயேசுவுக்கு மேலாக பிதாவாகிய ஜெஹோவா இருக்கிறார் என்பதும் அவரே இயேசுவின் காவலர் என்பதும், இயேசு கடவுள் அல்லர் என்பதும், இயேசுவின் விருப்பப்படி எதுவும் நடப்பதில்லை என்பதும், எது நடப்பதற்கும் இயேசு ஜெஹோவிடத்தில்தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு பட்ட துன்பங்களைக்கண்டு யூதமக்கள் கேலியாகச் சிரித்தபோது மிகவும் உரத்தகுரலில் அவர் கீழ்க்கண்டவாறு புலம்பியதாக பைபிள் சொல்லுகிறது.

“ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு, ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.”

மத்தேயு 27:46)

மேற்கண்ட விவிலிய வசனம் இயேசு ஒரு சாதாரண மனிதரைப்போன்றே மரணபயத்தில் கதறினார் என்பதும் அவர் ஜெஹோவா என்னும் சிறுதெய்வத்தின் தாஸர் என்பதால் அவரது பிரார்த்தனை பலிக்கவில்லை என்பதும் அவரது தெய்வம் அவரைக் கைவிட்டது என்பதும் தெளிவாகிறது .

இயேசுவால் தன்னிச்சையாக வரம் அருளமுடியுமா? செபத்தேயுவின் தாய் தனது குமாரர்களை ஆசீர்வதிக்கும்படி இயேசுவைப் பிரார்த்தித்தபோது இயேசு சொன்னதாக பைபிள் சொல்லுவது

“இயேசு அவர்களிடம், ‘மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை”,’ என்றார்”.”

மத்தேயு 20:23).

இதிலிருந்து இயேசுவுக்கு யாருக்கும் எந்த வரத்தினையும் அளிக்கும் அதிகாரம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர் ஜெஹோவாவின் அடியவர் என்பதும், அவரது பணியை, அவரது ஆணையை, சிரமேற்கொண்டு செய்பவர் என்பதும், அவரது பெயராலே இவர் மஹிமையைப்பெற்றதும் தெளிவாகிறது. ஜெஹோவாவின் ஆணைப்படியே அவர் வாழ்ந்து தனது உயிரையும் அவரது காலடியில் அர்பணித்ததும் தெரிகிறது.

இயேசுவுக்கு தெய்வீக இயல்புகளோடு மனித இயல்புகளும் இருந்தன என்றும் மேற்கண்ட அவரது செயல்கள் அவரது மனித இயல்பின்பாற்பட்டது என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அந்த வாதத்தினை ஏற்கவியலாது.

உங்கள் பரிசுத்த வேதாகமாமாகிய பைபிளில் இயேசு ஞானஸ்நானம்பெற்றபோது ஒரு புறாவின் வடிவில் பரிசுத்த ஆவியானது அவருள் இறங்கி அவரை எங்கும் நிறைந்தவராக்கியது கூறப்படுகிறது. அவரை ஒரு தேவதூதன் சர்வவல்லமை உடையவராக்கியதும் அதிலே சொல்லப்படுகிறது. அவர் ஜெஹோவாவின் தாஸர், சேவகர், என்பதும் சொல்லப்படுகிறது.Mark 15 - The Crucifixion - Scene 03 - Nailed to the cross

அதேபோன்று, சிலுவையில் அறையப்பட்ட அவர், தனது உயிரைவிடும் தருவாயில் தனது தேவனை நோக்கி, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கதறியதும் கூறப்படுகிறது. இயேசுவுக்கு மனித இயல்புகளன்றி தெய்வீகத்தன்மைகள் இருந்திருந்தால் மேற்கண்ட எதுவுமே நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

சாதாரணமாகப் பிறந்து, வளர்ந்து, சாதாரண விடயங்களைப் போதித்து நடமாடிய ஒரு மனிதனை தெய்வீகபுருஷர் என்று நீங்கள் ஆதாரம் ஏதும் இன்றி சொல்கிறீர்கள். இதனை ஏற்க முடியாது.

இயேசு ஜெஹோவாவின் ஏககுமாரரா?

இயேசு தனது குமாரன், தான் அவரது பிதா என்ற ஜெஹோவாவின் பைபிள் வார்த்தைகளைக்கொண்டு இயேசுவுக்கு தெய்வீக இயல்புகள் உண்டு என்று நீங்கள் வாதாடலாம். இந்தவாதமும் கீழ்கண்ட காரணங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று. யூதர்கள் இயேசுவை நோக்கி, “உம்மை தேவகுமாரன் என்று சொல்வதன் மூலம் நீ தெய்வக்குற்றம் இழைத்திருக்கிறாய்,” என்று குற்றம் சாட்டியபோது அவர் கொடுத்த மறுமொழியைப்பாருங்கள்.

“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான், என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?”

(யோவான் 10:34-35).

jesus and mary magdeleneதனது அடியார்களுள் ஒருவரான மகதலேனா மரியாளிடம் இயேசு சொன்னதையும் காணுங்கள்.

“இயேசு அவளிடம், ‘என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால், போய் என் சகோதரர்களிடம் நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்,’” என்றார்”.“

யோவான் 20:17).

இந்த வசனங்களிலிருந்து இயேசுவின் தேவனும் மற்றவர்களின் தேவனும் ஒன்று என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது. ஜெஹோவா இயேசுவுக்குமட்டுமன்று மற்ற யூதர்களுக்கும் தந்தை என்பதும் தெளிவாகிறது.

மேலும் உங்கள் தேவனாகிய ஜெஹோவாவே“இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்,’ என்றும் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற அவரது வாக்குகளை பைபிளில் பலவற்றைக்காணமுடிகிறது.

இயேசுவை தனது குமாரனாக அவர் சொல்வதும் ஒரு சம்பிரதாயப் பூர்வமானதாகத்தான் தெரிகிறது.

பைபிளில் பல இடங்களில் பலரை ஜெஹோவா தனது குமாரர் என்று சொல்லியிருப்பதால், இயேசு அவரது ஒரே குமாரர் என்பதை ஏற்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இயேசு ஜெஹோவாவால் குமாரனாக அழைக்கப்பட்டதால், அவர் தேவன்/கர்த்தர் என்று சொல்வீரானால், அவரால் குமாரர் என்று அழைக்கப்பட்ட அனைவரும் கர்த்தராக, தேவனாக இருக்கவேண்டும். ஜெஹோவாவால் தலைச்சன் பிள்ளை என்று அழைக்கப்பட்ட எப்பிராயீம் மூத்ததேவன் ஆகவும், கடைசியாக குமாரன் என்று அவரால் அழைக்கப்பட்ட இயேசு இளைய கர்த்தராகவும் கருதப்படவேண்டும். இப்படிப்பார்த்தால் பல கடவுள்களைக் கருதவேண்டிவரும்.

கன்னிப்பெண் பெற்றதால் இயேசு தெய்வமாகக்கூடுமா?

கன்னி மரியாள் தனது கணவனோடு கூடாமலேயே இயேசுவைப்பெற்றதால் அவர் தெய்வீகத்தன்மை உடையவர் என்று நீங்கள் வாதிடலாம்.

மரியாள் யோசேப்புடன் திருமணமானபின்னர் கருவுற்றதால் அவர்கள் இருவரும் கூடாமல் இயேசு பிறந்தார் என்று எப்படி உறுதியாக சொல்லமுடியும்? திருமணத்திற்குப்பிறகு பிரம்மச்சரியத்தை அவர்கள் இருவரும் அனுசரித்தனர் என்றால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள்வேண்டிய அவசியம்தான் என்ன?

“அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”

(மத்தேயு 1:25).

“அதன் பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.”

(யோவான் 2:12).

யோசோப்பு மரியாள் முதற்பிள்ளையைப் பெறும்வரையிலும், அதற்குப்பிறகும் அவளோடு சேர்ந்து இருந்தார் என்பதும் தெரிகிறது. இருவரும் ஒரேவீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதும் புலனாகிறது. ஒன்றாக வாழ்ந்த அவர்கள் கூடவில்லை என்பதை நீங்கள் எப்படி உறுதியாகக் கூறமுடியும்? அவர்களே அப்படி சொல்லியிருந்தாலும் கூட தமது பெருமைக்காக அவர்கள் அப்படிக்கூறியிருக்கலாம் அல்லவா?

ஆகவே இயேசு கன்னிப்பெண்ணுக்கு. கனவனோடு கூடாமலே பிறந்தார் என்பது உண்மையாக இருக்க வாய்ப்பேயில்லை.

இயேசு முதற்பாவத்தால் தீண்டப்படாதவரா?

ஓ கிறித்துவின் சீடர்களே!

உங்கள் வழிகாட்டியாகிய இயேசுவைப் பெருமைப் படுத்துவதற்காகவும், மகிமைப்படுத்துவதற்காகவும் அவர் வாழ்ந்தகாலத்துக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு புனையப்பட்ட கதைகளை எப்படி நாங்கள் நம்புவது? கன்னிப்பெண்ணுக்கு இயேசு பிறந்தார் என்பது கட்டுக்கதையாக இருப்பதால், அவரை தெய்வீகப் புருஷர் என்றோ, தேவன் என்றோ, கர்த்தர் என்றோ சொல்லமுடியாது.

அவர் ஆண்-பெண் கூடலினால் பிறக்கவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால்கூட, அவர் ஒரு சிறப்பான மனிதர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே அன்றி ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்த அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

வழிவழியாக, வம்சபாரம்பரியமாக வந்த பாவத்தினால் தீண்டப்படாமல் இயேசு பிறந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆதிமனிதனின் சந்ததிகள் அனைவரையும் முதல்பாவமானது தொடர்ந்து வழிவழியாகப் பற்றிச்செல்லும் என்பது ஜெஹோவாவாகிய உங்கள் கர்த்தரின் கட்டளையல்லவா?

ஆகவே அந்த தேவ ஆணையின்படி இயேசுவிடமும் அந்தப்பாவத்தின் தொடர்ச்சி உண்டு; ஏன் என்றால் ஆதாமின் பரம்பரையில் வந்த மரியாளின் பிள்ளைதானே அவர்? முதல் பாவத்தை பெண் ஆண் இருவரும் செய்ததால் அவர்களது வம்சபாரம்பரியத்தில் வந்த அனைவரையும் அது பீடிக்கும் என்ற தேவ ஆணையிலிருந்து இயேசுவுக்கு விதிவிலக்கு கிடைப்பது எப்படி சாத்தியமாகும்?

கடவுள் என்பவர் பாரபட்சம் இல்லாதவராகத்தானே இருக்கமுடியும்? இயேசு தனது தேவனை சார்ந்திருந்தவரே! இயேசு தனது தந்தையாகிய ஜெஹோவாவின் கருணையையே அருளையே எப்போதும் நம்பியிருந்ததைப் பல்வேறு விவிலிய வசனங்கள் காட்டுகின்றன. “என் தேவனே! என்னைக்கைவிட்டீரே!” என்ற கதறலும், “பிதாவே, உம்முடைய கரங்களில் எனது ஆவியை ஒப்புவிக்கிறேன்,” என்ற முடிவும், இயேசு தனது பிதாவையே சார்ந்திருந்தார் என்பதை நிறுவுகின்றன.

பல நூறுமுறைகள் விவிலியத்தைத் தேடினாலும் இயேசு எங்கும் தன்னை கர்த்தர் என்றோ, தேவன் என்றோ, தானே சொல்லிக்கொண்டதை காணமுடியவில்லை. அப்படியிருக்க, இயேசு கடவுள், கர்த்தர், தேவன் என்று நீங்கள் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?

இயேசு தன்னைக் கடவுள் என்று அழைத்துக்கொள்வதை விரும்பவில்லை என்று நீங்கள் வாதிடலாம்.

அப்படியானால் அந்தப்பொய்யை நீங்கள் திரும்பத்திரும்ப மொழிவது ஏன்? இயேசு மனுஷகுமாரனாகத் தன்னை கூறிக்கொண்டது ஏன்? சரி, இயேசு தன்னைப் பலமுறை மனுஷகுமாரன் என்று அழைத்துக்கொண்டது ஏன்? எந்த ஒரு மனிதனும் தன்னை மனிதகுமாரன் மனிதகுமாரன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளுவதில்லையே! உங்களைக்கேட்டால் சிலர் அதற்கு சிறப்பான காரணம் உண்டு என்று சொல்வீர்கள்.

ஆம் அதற்கு சிறப்பான காரணம் இருக்கவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு தச்சரின் மகனான இயேசு, பாமரர்களைச் சேர்த்துக்கொண்டு, தான் தேவ குமாரன் என்றும், கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதுவன் என்றும் பிரச்சாரம் செய்தார்.

இதைக்கேட்ட யூதர்கள் கடுங்கோபம் கொண்டனர். தேவதூஷணம் செய்த இயேசுவை தண்டிக்கவிரும்பினர். இதை அறிந்த இயேசு தான் கைதுசெய்யப்படலாம் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சினார், பயந்துபோனார். தண்டனையிலிருந்து தப்பிக்கவே இயேசு தன்னை மனுஷகுமாரன் என்று பலமுறை அழைத்துக்கொண்டார். இதுதான் அந்த சிறப்பான காரணமாக இருக்கமுடியும்.

இயேசு பகைவர்களுக்கு அஞ்சி, அவர்கள் கைகளுக்கு அகப்படாமல் ஒளிந்துகொண்டிருந்ததற்கு பைபிளிலே பல ஆதாரங்கள் உள்ளன.

இயேசுவின் இரண்டாவது வருகை: தீர்க்கதரிசனமா, புனைவா?final judgement

கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

உங்கள் புனிதநூலான விவிலியத்தில் இயேசு சொல்கிறார்

“மனிதகுமாரன் தமது தகப்பனின் மகிமையில் தேவதூதர்களோடு வருவார்; அப்போது, அவரவருடைய நடத்தைக்குத் தக்கதாக அவரவருக்குப் பலன் அளிப்பார். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இங்கு நிற்கிறவர்களில் சிலர், மனிதகுமாரன் ராஜ அதிகாரத்தில் வருவதைப் பார்ப்பதற்குமுன் சாக மாட்டார்கள்”

(மத்தேயு 16:27, 28).

மேற்கண்ட பைபிள்வசனத்திலிருந்து 1890 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு வாழ்ந்தகாலத்தில் உலகின் முடிவு நெருங்கிவிட்டதை அவர் சிலருக்கு உரைத்திருக்கிறார் என்பதும், அவர்களில் சிலர் நியாயத்தீர்ப்பு நாளையும் காண்பதற்கு உயிரோடு இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிகிறது.

இயேசு சொன்னதைக் கேட்டவர்கள் ஒருவராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?

அப்படியிருந்தால் அவர்கள் குறைந்தது 1890 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டுமே? யாரும் அவ்வளவுகாலம் வாழமுடியாது என்பதால் அவர்கள் அனைவரும் மரித்துப்போயிருக்கவேண்டும்.

ஆனால் இன்னும் உலகம் அழியவில்லை, நியாயத்தீர்ப்பு நாள் வரவும் இல்லை.

ஆகவே இயேசு நன்றாகக் கதையளந்திருக்கிறார் என்பதுதான் தெரிகிறது. அவரது தீர்க்கதரிசனம் பொய்யாகியிருப்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவின் புனைவுரையின் விபரீத விளைவு!

ஐரோப்பாவில் கிபி 1000 ஆம் ஆண்டில் பல கிறிஸ்தவர்கள் உலகின் அழிவைப்பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை நம்பினார்கள். அது வெகுசமீபத்தில் நிகழவிருக்கிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். இதைக்கேட்டப் பலகிறிஸ்தவர்கள் பாதிரியார்களிடம் சென்று சரண்புகுந்தார்கள்.

சூரிய கிரகணத்தைக்கண்ட ஒரு ஐரோப்பிய படைத்தளபதி, “ஓ! உலகத்தின் இறுதி நெருங்கிவிட்டது, எனவேதான் சூரியன் கொஞ்சம்கொஞ்சமாக மறைகிறது. அதேபோன்று உலகமும் முடியப்போகிறது,” என்று சொன்னான். தனது படையோடு அஞ்சி நடுங்கி திக்குத்தெரியாமல் அல்லாடினான்.

அதேசமயத்தில் பலர் தமது சொந்தம்-பந்தம், சொத்துபத்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாலஸ்தீனத்தில் கூடினார்கள். தங்களைக் காப்பாற்றுவதற்கு அங்கே இயேசு எழுந்தருளுவார் என்று நம்பினார்கள். அந்தக்காலத்தில் சூரிய கிரகணமோ சந்திரகிரகணமோ நிகழ்ந்தால், ஐரோப்பிய மக்கள் வீடுகளைவிட்டுவிட்டு குகைகளில் ஒளிந்துகொள்ளுவது வழக்கம். வானியலும் புவியலும் தெரியாததாலும், இயேசுவின் தீர்க்கத்தரிசனத்தின்மீது எல்லையில்லாத நம்பிக்கைவைத்ததாலும்தான் இந்த துரதிர்ஷ்டமான நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது.

அதே ஐரோப்பியக் கண்டத்தில் சில மிஷநரிகள், 1881இல் உலகத்தின் அழிவு சமீபத்துவிட்டதாகவும் இயேசுவின் இரண்டாவது வருகை நிகழப்போகிறது என்றும் சில உதிரிப்பத்திரிக்கைகளில் எழுதினார்கள். மக்களிடையே பீதியை உருவாக்க முனைந்தார்கள். பெரும்பாலான மக்கள் அதனை நம்பவில்லை என்றாலும், அந்த மிஷநரிகள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்கள்.

ஆனால் அவர்கள் பிரச்சாரம் செய்தபடி எதுவும் நிகழவில்லை.

ஆம்! உலகும் அழியவில்லை.

அவர்களது மீட்பராகிய இயேசுவும் வரவில்லை. எழுந்தருளவில்லை!

இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குப் போகமுடியுமா?

மேற்கண்ட எமது வாதங்கள் தெள்ளத்தெளிவாக, சான்றாதாரங்களோடு இயேசு கடவுள் அல்லர், தெய்வீகத்தன்மைகள் ஏதும் அவருக்கு இருந்ததில்லை என்பதனை நிரூபித்திருக்கின்றன. ஆகவே, அவரை நம்புவதால் விசுவாசிப்பதால் இகத்திலும் (இவ்வுலகவாழ்வில்) சரி, பரத்திலும்(அவ்வுலகில்) சரி, எந்த நன்மையையும் யாரும் அடைந்துவிடமுடியாது என்பதும் புலப்படுகிறது .

இதைக்குறித்து இயேசுவே என்ன சொன்னார் என்று மத்தேயுவின் சுவிசேஷ வசனம் காட்டுவதைப்பாருங்கள்.

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே யல்லாமல், என்னை நோக்கி,: ‘கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினால் பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள். அப்பொழுது, நான், ‘ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்,’ என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”

(மத்தேயு, 7:21).

மேற்கண்ட வசனத்திலிருந்து இயேசு தான் கடவுள் அல்லர் என்பதை உணர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது நாமத்தை கர்த்தர், கர்த்தர், இயேசு, இயேசு என்று சொல்லுவதால் சொர்கத்துக்குப் போகமுடியாது என்பதும் புலப்படுகிறது.

இயேசு நல்லவர் என்று ஒருவன் சொன்னதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று பாருங்கள்.

“அதற்கு அவர் ‘நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவரும் இல்லையே: நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்,’ என்றார்.”

(மத்தேயு, 19:17).

இந்த ஒரு விவிலிய வசனம் போதாதா, இயேசு கடவுள் அல்லர் என்பதற்கு சான்றாக. வேறொரு விளக்கமும் தேவையில்லையே!

இயேசு கடவுள் அல்லர் என்று நிறுவுவதற்கு இதுபோதாது என்று நீங்கள் சொல்லக்கூடும். திரித்துவக்கோட்பாட்டை பைபிளிலிருந்து அதற்கு சான்றாகக் காட்டலாம். இயேசு அந்த மக்களின் மனதைப் புரிந்துகொண்டார் என்றும், அதனால் அவர்கள் இயேசுவைக் கடவுள் என்று ஏற்கவில்லை என்பதை உணர்ந்திருந்தார் என்றும், அவர்களுக்காக உரைத்தது இது என்றும் நீங்கள் வாதிடலாம்.

ஆனால் அதெற்கெல்லாம் உங்கள் பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரம் ஏதும் கிடையாதே!

ஒருக்கால் விவிலியமே உங்களது வாதத்திற்குச் சான்று பகர்ந்தாலும், மற்ற மனிதர்களின் மனதில் உள்ளதை உள்ளவண்ணம் அறியும் சக்தி இயேசுவுக்கு எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட ஆற்றல் இயேசுவுக்கு இருந்ததற்கு உங்கள் புனிதநூலில் ஆதாரம் கிடையாது.

யூதாஸைத் தனது சீடனாக வைத்திருந்த அவர், அவன் பணம் வாங்கிக்கொண்டு தனது குருவையே காட்டிக்கொடுப்பான் என்பதை அறியவில்லையே? தனது சீடனே துரோகியாய்த் தன்னைப் பணத்துக்காகக் காட்டிக்கொடுத்ததை அறிந்த இயேசு மிகுந்த துயரத்துக்கு ஆளானார். காட்டிக்கொடுத்த துரோகியான யூதாஸை சபித்தார் என்றல்லவா உங்கள் பரிசுத்த வேதாகமாகிய பைபிள் சொல்கிறது.

யூதாஸின் மனதில் இருந்ததை அவர் அறிந்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்காதே.

இதைப்போன்று பல நிகழ்வுகளை அவருக்கு அத்தகைய ஆற்றல் எப்போதும் இருந்ததில்லை என்பதற்கு உதாரணமாகக்காட்டலாம். அவற்றை இந்த நூலின் பின்பகுதியில் காண்போம்.

அன்பான நண்பர்களே! இந்தப்பகுதியிலே ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தனது ஆழ்ந்த தர்க்க அறிவின் துணைக்கொண்டு பைபிளை ஆராய்ந்து, மனிதர்கள் தமது பாவங்களைக்கழுவி சொர்க்கம் செல்வதற்கு ஒரே வழி ஆதிமனிதரின் முதல்பாவக்கறைபடியாத தேவகுமாரன் இயேசு என்ற கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையை ஆதாரமற்றது என்று நிரூபிப்பதைக்கண்டோம். இயேசு சாமானிய மனிதர் ஜெஹோவாவின் பக்தர், விசுவாசி ஆனால் அசாதாரணமானவரோ அல்லது சர்வவல்லமையுடையவர், முக்திதாதா அல்லர் என்பதும் அவரால் இகபரசுகங்களை மானிடருக்கு அருளமுடியாது என்பவற்றையும் புரிந்துகொண்டோம். அடுத்தபகுதியில் இயேசு செய்ததாக சொல்லப்படுகிற அற்புதங்கள் போலியானவை என்பதை ஸ்ரீலஸ்ரீ சுவாமிஜி எப்படி நிறுவுகிறார் என்பதைக்காண்போம்.

குறிப்புகள்:

[1] மரணபயம் இல்லாதவர்களே மஹான்கள், மரணத்தையே வென்றவர்கள்தான் ஞானிகள் என்பது பாரத நாட்டு சமயங்கள் சொல்லும் ஒரு அற்புதமான உண்மை. பாரத நாட்டின் வரலாறு நெடுகிலும் மரணத்தருவாயிலும் ஆனந்தமாக இருந்த பெரியார்களைக் காணமுடியும். மரணம் வருகின்றபோதும் தைரியமாக சிரித்துக்கொண்டே அதை எதிர்கொண்ட பாதத்தாயின் வீரப்புதல்வர்களைக் காணமுடியும். ஆனால் மரணத்தின்போது அழுதுபுலம்பிய ஒருவரை மரணத்தை வென்றார் என்று இந்தக்கிறிஸ்தவர்கள் புனைகிறார்கள். அதைவிடக்கொடுமையானது மரணத்தை வென்ற பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்கே உரிய ம்ருத்யுஞ்ஜயன் என்ற அம்ருத நாமத்தையும் இயேசுவுக்கு சூட்டி இந்த மிஷனரிகள் மதமாற்றமுயலும் புரட்டு!

[1]  உலகத்தின் இறுதி சமீபித்துவிட்டது, இயேசுவைச் சரணடையுங்கள்; செத்தாலும் பின்னால் உயிர்த்தெழுந்து, உடலெடுத்து, சொர்கத்துக்குபோய் தடையற்ற புலனின்பம் அனுபவிக்கலாம் என்று இன்றுவரை மிசனரிகள் சொல்லிவருகிறார்கள். பலமுறை பொய்த்துப்போன இயேசுவின் இந்த தீர்க்கதரிசனத்தை சமீபத்தில் ஐரோப்பியரால் கொலைவெறிகொண்டு அழிக்கப்பட்ட அமெரிக்க செவ்விந்தியரின் மாய  நாகரிகத்தின் பஞ்சாங்கத்தைக்கொண்டு 2012 இல் உலகம் அழியப்போகிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்ததை இங்கே நினைவு கூறலாம்.

[1]  இவ்வுலகில் இல்வாழ்வில் உள்ள மனிதன் இறையருளால் அறவழி நடந்து, பொருள் தேடி இன்பம் பெறலாம் என்பதும். பரம்பொருளின் மீது வைத்த பக்தியால், பிறதிபலன் இன்றி செய்யப்படும் நற்செயல்களால், யோகத்தால், மெய்யுணர்வாம் ஞானத்தால் பிறவிப் பெருங்கடலைக்கடந்து மீண்டும் பிறவாது ஆனந்தமயமான பேரின்பமயமான முக்தி அடையலாம் என்பது ஹிந்து சமயங்களுள் ஆஸ்திக நெறிகள் சொல்லும் கருத்தாகும். ஆனால் கிறிஸ்தவம் இயேசு இறைமகன், அவர் பரிசுத்த ஆவியால் கன்னிமரிக்குப்பிறந்து, மக்களின் பாவங்களை போக்க, குற்றம் செய்யாதிருந்தும் பலியானார், பின்னர் உயிர்தொழுந்தார். இதை யாரெல்லாம் நம்புகிறார்களோ விசுவாசிக்கிறார்களோ அவர்களே  நியாயத்தீர்ப்பு நாளன்று உயிர்த்தெழுந்து சொர்க்கம் சென்று, தடையற்ற புலனின்பங்களை நுகவார்கள் என்று நம்புகின்றனர்.

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

 

2 Replies to “கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7”

  1. அன்பின் ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண் மஹாசய,

    ஹிந்து அறிவியக்கத்தின் ஒரு முக்யமான பங்களிப்பாக இந்த வ்யாசத்தொடரை வாசித்து வருகிறேன்.

    தரம் தாழ்ந்த ஆப்ரஹாமிய கருத்தாக்கங்களை பூஜ்ய ஸ்ரீ சட்டாம்பி ஸ்வாமிகள் கட்டுடைத்ததை தாங்கள் பரிச்ரமப்பட்டு தமிழாக்கம் செய்து வருகிறீர்கள். இந்த பாகத்தில் ஏசுபிரான் என்ற வ்யக்தி விசேஷத்தைப் பற்றி மிஷ நரிகள் செய்து வரும் ப்ரசாரத்திலிருந்து விவிலியம் காட்டும் ஏசு எப்படி வேறுபட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் துலங்குகிறது.

    வ்யாசத் தொடர் முடிந்ததும் தனியொரு பாகமாக …………. குறுவினாக்களாகவும் குறுவிடைகளாகவும் …………ஸ்ரீ சட்டாம்பி ஸ்வாமிகள் கட்டுடைக்கும் கருத்தாக்கங்கள் யாவை……… எப்படி கட்டுடைக்கிறார் என்று வ்யாசத் தொடரின் சாராம்சத்தை முன்னிறுத்தும் படி ஒரு பாகம் படைக்கவும். FAQ என்ற படிக்கு அது அமையுமானால் மிஷ நரிகளுக்கு எதிராக பொதுமக்களிடம் களப்பணியாற்றும் ஹிந்துத்வ செயல்வீரர்களுக்கு அது நிச்சயம் பேருதவியாக இருக்கும்.

  2. அன்புக்குரிய ஸ்ரீ க்ருஷ்ணக்குமார் மஹாசயர் அவர்களுக்கு நன்றி. ஸ்ரீ லஸ்ரீ சட்டம்பி சுவாமிகளின் நூலை மொழிபெயர்ப்பதில் பெரிய சிரமம் இல்லை. கொஞ்சம் நேரம் அதிகமாக செலவாகிறது. ஆழ்ந்தக்கருத்துக்கள். ஆழ்ந்த தர்க்க நுண்ணறிவு ஆகியவற்றோடு ஸ்ரீ சுவாமிகள் எழுதியிருக்கிறார். அதை உணர்ந்து மொழிபெயர்க்க முயன்று வருகிறேன். இந்த தொடர் வெளியானதும் நிச்சயம் இந்த நூலை பதிப்பிக்க முயற்சி செய்வேன்.
    ஹிந்து நோக்கில் கிறிஸ்தவத்தைப்புரிந்துகொள்ள ஒரு FAQ கேள்வி பதில் தொகுப்பு வெளியிடப்பட்டாலும் நல்லதே. அதற்கும் முயல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *