பிடிபிடி, கண்ணையாவை இறுக்கிப்பிடி!

ஆங்கில மூலம்: மது பூர்ணிமா கிஷ்வர்

தமிழாக்கம்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்

தர்மம்குன்றி அதர்மம் தலைதூக்கும் காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பேன்,” என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் தனது பக்தர்களுக்கு உறுதியளித்திருக்கிறார்.  கம்யூனிஸ்டுகள் கிருஷ்ணபரமாத்மாவை நம்புவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இடதுசாரிகளும் அவர்களது அறிவுஜீவி ஆதரவாளர்களும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கண்ணையாவை தமது இரட்சகராக முன்வைத்திருக்கிறார்கள். அவர்களது கருத்தியலான மார்க்சியமும், வர்க்கப்போராட்டமும், அவர்களது நம்பகத்தன்மையை அடியோடு இழக்கச்செய்து, மீண்டும் வளர்வதற்கான வாய்ப்பின்றி தேய்ந்துபோய் இருக்கிற காலகட்டத்தில், கண்ணையா வாராதுவந்த மாமணியாய் இவர்களுக்குத் தெரிகிறார்.

 கண்ணையாவை லெனின், மாசேதுங், சேகுவேரா மற்றும் பகத்சிங் ஆகிய அனைவரும் ஒரேவடிவில் உருத்திரண்டு வந்தவராகவே இவர்கள் காண்கிறார்கள். அதற்குக் காரணம், நரேந்திரமோதிக்கு எதிரான யுத்தத்தில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்பதே.  இவர்கள் கண்ணையாவை ஒரு இரட்சகராக முன்வைப்பதற்கான அடிப்படைதான் என்ன?

 இவர் ஜேஎன்யூ[ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி]வின் மாணவர் மன்றத்தேர்தலில் ஏழாயிரம் வாக்குகளில் ஆயிரம் ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்றார் என்பது ஒன்று. திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியேவந்தபிறகு சங்கக்குடும்பத்தை கடுமையாகச்சாடி இடிபோல் முழங்கியது, அடுத்தது.

jnu
ஜே.என்.யூ

மோதி அரசு ஜேஎன்யூவில் நுழைந்து எடுத்த கடுமையான நடவடிக்கையின்மூலம் பிரபலமான இவர், பிப்ரவரி 9ம்தேதி கண்ணையா பேசிய பேச்சு பிரமாதமாகத்தான் இருந்தது என்றாலும், தான் ஒரு சோளக்காட்டு பொம்மை என்பதை விரைவில் தானே வெளிப்படுத்திவிட்டார்.

ஜேஎன்யூவில் மாவோயிஸ்டுகளும் காஸ்மீரிப் பிரிவினைவாதிகளும் அனுமதியைமீறிக் கூட்டம் நடத்தி, இந்தியாவை துண்டுதுண்டாகப்பிளக்கும் வரை அதன் மீது போர்தொடுப்போம் என்று கோஷம் போட்ட நிகழ்வில் தனக்கு எந்தப்பங்கும் இல்லை என்று தனது தொலைக்காட்சிப் பேட்டிகளில் மறுத்தார் கண்ணையா.  மாவோயிஸ்டுகளின் மாணவர் அமைப்பான டிஎஸ்யு (ஜனநாயக மாணவர் அமைப்பு)வுக்கு இந்தக்கூட்டம் நடத்துவதற்கு ஜேஎன்யூ நிர்வாகம் அனுமதியை ரத்துசெய்தபோது, அனுமதி மீண்டும் வழங்கப்படவேண்டும் என்று கண்ணையா வலியுறுத்தினார். இதை ஜெ என் யூ நிர்வாகம் உறுதிப்படுத்தியபோது கண்ணையாவின் விஷமத்தனம் வெட்டவெளிச்சமானது. பகத்சிங் இப்படி பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

இந்த தேசவிரோத கோஷங்களைப்பற்றி நேரடியாகக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, கண்ணையா அதிலிருந்து மெள்ள நழுவி, பட்டினி, வறுமை, பாகுபாடு, மனுவாதம், சங்கம் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெறுவதைப்பற்றி ஒரு பெரிய சொற்பொழிவே நிகழ்த்தத்துவங்கிவிட்டார். ஆனால், ஜேஎன்யூவின் மேல்மட்ட விசாரணைக்குழு அவர் குற்றம்புரிந்ததற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் கண்ணையாமீதும் மற்றும் நால்வர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரைசெய்தது.

கடந்த ஆண்டு பொது இடத்தில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்ததைக் கண்டித்த சகமாணவியிடம் கண்ணையா என்ற இந்த பெண்ணுரிமைப் போராளி தவறாக நடந்து கொண்டதற்காக ஜே என் யூ நிர்வாகம் இவருக்கு மூவாயிரம்ரூபாய் அபராதம் விதித்தது.  இந்தச் செய்தி இவரது உண்மை முகத்தை புலப்படுத்துகிறது.

இன்னும் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், மாணவர் சங்கத்தின் தாய்க்கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியும் 1940களில் ஸ்டாலினிஸ சோவியத் யூனியனின் கருத்தியல் தாக்கத்தால் தேசப்பிரிவினையை ஆதரித்தது. இந்தியா பிளவுபடுத்தப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்படுவதையும் கம்யூனிஸ்டுகட்சி ஆதரவளித்தது என்பதும் வரலாறு. கண்ணையாவின் உதவியோடு டிஎஸ்யூவால் நடத்தப்பட்ட கூட்டமும் இதையேதான் எதிரொலித்திருக்கிறது.

மேற்கண்ட சாபங்களிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு ராகுல் காந்தியை தனது கூட்டாளியாக வரவேற்பதற்கு கண்ணையாவுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. மோதியையும் ஆர்எஸ்எஸ் காரர்களையும் தாக்குவதுபோல காங்கிரசையும் கம்யூனிஸ்டுகளையும் தாக்கினால் ஊடகங்களில் நட்சத்திரமாக முடியாது என்பதை அவர் அறிந்தே இருக்கிறார்.

சரி, பாஜகவுக்கு எதிராகக் கண்ணையாவின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

அவரது முதலாவது குற்றச்சாட்டு, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இந்திய ஜனநாயகமும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் கொடிய அச்சுறுத்துதலுக்கு ஆளாகியிருக்கின்றன என்பது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள குடிமக்களுக்கு, காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் ஆட்சிசெய்யும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களைக்காட்டிலும் சுதந்திரம் குறைவாக இருக்கிறது என்று புத்தியுள்ள யாராவது சொல்வார்களா?

இரண்டாவது குற்றச்சாட்டு — விவசாயிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் பெண்கள் சங்கத்திடமிருந்து விடுதலைபெறவேண்டும் என்பது.

இந்தியாவை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சிசெய்தது என்பதை மறந்துவிடவேண்டுமா? விவசாயிகளும், பட்டியல் பிரிவினரும், காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலே முன்னேற்றத்தைக்,கண்டார்களா? பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சியில் பெண்களுக்கும் பட்டியல் பிரிவினருக்கும் சுதந்திரமும் சமத்துவமும் முழுமையாகக் கிடைத்தனவா? பாஜக ஆளும் குஜராத் அல்லது மத்தியப்பிரதேசத்தில் வாழும் பட்டியல் பிரிவு மக்களுடைய நிலமை லாலு-நிதிஷ் ஆளும் பிகாரைவிடவா மோசமாக இருக்கிறது?

மூன்றாவது குற்றச்சாட்டு, ஆர்எஸ்எஸ் பிரிவினை சக்தி என்பது.

வர்க்கப்போராட்டம் என்னும் மார்க்சியக் கருத்தியல் – பிரிவினைவாதம், பூசல்வாதம் அல்லவா? பாஜக ஆளும் மாநிலங்களில் வர்க்கமோதல்கள் அதிகமாக இருக்கின்றனவா, இல்லை, கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் அதிகமாக மோதல்கள் இருக்கின்றனவா?  முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளிகளைத் தூண்டிவிட்டு, கம்பெனிகளை மூடவைக்கும்வரை மோதவிடுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். கேரளம்போன்ற மாநிலங்களில் சிறுவிவசாயிகளுக்கு எதிராக கூலித்தொழிலாளர்களை தூண்டிவிட்ட கம்யூனிஸ்டு சங்கங்களால் விவசாயிகள் விவசாயத்தையேவிட்டு வெளியேறுவதுதான் நடக்கிறது. காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் எண்ணற்ற வகுப்புமோதல்களும் சாதிமோதல்களும் நடக்கவில்லையா?

 நான்காவது குற்றச்சாட்டு, கல்வியைத் தனியார்மயமாக்குதல் ஜனநாயகத்தின்மீதான கடுமையான தாக்குதல் என்பது.

கல்வியில் தனியார்மயமாதல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துவங்கியதா? கடந்த அறுபதாண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது அரசால் நடத்தப்படும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கிராமத்து ஏழைமக்கள், பட்டியல்சாதியினர் பழங்குடிகள், பெண்கள் ஆகியோரது கல்வித்தேவைகளை நிறைவேற்றினவா? இல்லை, முப்பதாண்டுகள் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அவை நிறைவேற்றப்பட்டனவா?

முப்பத்தொரு சதவீதம் வாக்குகளைப்பெற்ற பாஜக ஒட்டுமொத்த பாரதநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தமுடியாது என்று நையாண்டிசெய்கிறார் கண்ணையா. ஆனால் பொதுத்தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளைக் கூடப்பெறமுடியாத இந்திய கம்யூனிஸ்டுகட்சியைத் தாய்க்கட்சியாகக்கொண்ட இவர் 130 கோடி இந்தியமக்களின் சார்பிலே பேசுவதற்கு உரிமை பெற்றவராம்.

சங்கக்குடும்பத்தின் அரசியலிலும், மோதி அரசின் செயல்பாடுகளிலும் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் கண்ணையாவின் வக்கிரமான விரோதபாவம் கருத்தியல் ரீதியிலானதுதானே அன்றி, உண்மையை நுணுகி அறிவதால் விளைந்ததன்று. பிஎச்டி படிக்கும் ஓர் ஆராய்ச்சி மாணவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் — உண்மையைத்தேடும் கூர்ந்த நோக்கில் விளைந்ததன்று, இந்த விரோதம்.

கண்ணையாவின் ஜேஎன்யூ ஆச்சாரியார்கள் இவரை மூளைச்சலவை செய்து, இயந்திரகதியிலான அரசியல் செயல்வீரராக உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களால் இவரை ஓர் ஆழமான ஆராய்ச்சியாளராகவோ, அல்லது கூர்மதியுள்ள அரசியல் நோக்கராகவோ உருவாக்க இயலவில்லை.

மரணப்படுக்கையில் கிடக்கும் இடதுசாரி இயக்கத்தினையும் குறுகிச்சிறுத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ்கட்சியையும் இரட்சிப்பதற்கு, உணர்ச்சிவசப்படும் ஒரு மாணவர்தலைவரை முன்னிறுத்தியிருக்கிறார்கள்.  இந்த முயற்சி அவர்கள் எவ்வளவு ஆழமாகப் புதைகுழிச் சேற்றில் முழுகிக்கிடக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

கம்யூனிஸ்டுகளின் பரிந்துரைகளும் போராட்டங்களும் மோதல்களையும் தேக்கநிலையையுமே அளித்ததாலும், முன்னேற்றத்தையும் செழுமையையும் தராததாலும்,  அவர்களது கருத்தியலின் ஆதாரப்புள்ளியான உழைக்கும் வர்கத்தவர்கள், இவர்களைக் கைகழுவிவிட்டார்கள். அதனால் அவர்கள் நம்பிக்கை இழந்துபோய்விட்டார்கள்.

அதேபோல வானளாவிய ஊழலும், ஒற்றைக்குடும்ப ஆதிக்கமும், ஈர்ப்புசக்தி குறைந்துபோன வகுப்புப்புவாத அடிப்படையிலான அரசியல் ஆகிவற்றினால், காங்கிரஸ் சுருங்கிப்போய்விட்டது. தனது பழைய ஆதரவுக்குழுக்களின் ஆதரவை இழந்துவிட்ட காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் — மார்க்ஸ், அம்பேத்கர் மற்றும் ஜின்னா ஆகியோரின் ஒன்றுக்கொன்று முரணான கருத்தியல்களைக்கோர்த்து, பட்டியல்பிரிவினரிடமும் இஸ்லாமியரிடமும் தமது வாக்குவங்கியை மீட்டெடுக்க முனைகிறார்கள்.

ஒரு அரைவேக்காடு மாணவர் தலைவனை சோஷலிச வெற்றுரைகளைப் பேசவிட்டு, மோதி அவர்களுக்கும், சங்கப்பரிவாரத்துக்கும் எதிராகப் போட்டியாக நிறுத்துவது வேடிக்கைதான். ஆவேசப் பேச்சுக்களால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்றால், தில்லியிலும் பிஹாரிலும் மோதியின் பாஜக படுதோல்வி அடைந்திருக்காது.

***   ***   **

இந்த ஆங்கிலக் கட்டுரையை எழுதிய மது கிஷ்வர் தில்லியிலுள்ள வளரும் சமூகங்கள் ஆராய்ச்சிமையத்தில் ஒரு பேராசிரியர். ‘மனுஷி’ என்ற சமூக அறிவியல் பத்திரிக்கையின் நிறுவன ஆசிரியரும் ஆவார். ‘மனுஷி சங்கடன்’ என்ற ஜனநாயக உரிமைகள்  நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

The writer is founder-editor, ‘Manushi’, and professor, CSDS, Delhi.

https://indianexpress.com/article/opinion/columns/clutching-at-kanhaiya/#sthash.5eRzA274.dpuf

Madhu Kishwar@madhukishwar

Professor, Centre for the Study of Developing Societies, Delhi & founder editor Manushi Journal, President Manushi Sangathan–A Forum for Democratic Rights

https://linkis.com/indianexpress.com/ar/XOoYB

https://indianexpress.com/article/opinion/columns/clutching-at-kanhaiya/#sthash.5eRzA274.dpuf

 

5 Replies to “பிடிபிடி, கண்ணையாவை இறுக்கிப்பிடி!”

  1. அன்பின் ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண்,

    க்றைஸ்தவ மத சித்தாந்தங்களை பூஜ்ய ஸ்ரீ சட்டாம்பி ஸ்வாமிகள் அவர்களது சிந்தனைகள் மூலமாக கட்டுடைப்பது மற்றும் இப்போது தாங்கள் பகிர்ந்துள்ள கன்னையா என்ற வழிதவறிய இடதுசாரி நபரைப் பற்றித் தாங்கள் எழுதிய வ்யாசங்களை ஹிந்துத்வ அறிவியக்க முயற்சியின் தொடர்ந்த முன்னகர்வாகக் காண்கிறேன். வாழ்த்துக்கள்.

    பயங்கரவாத இடதுசாரி அமைப்பின் (Radical left) கருத்தாக்கங்களை பொது தளத்தில் பகிர விழையும் கன்னையா அவர்கள் பொது இடத்தி சிறுநீர் கழிப்பதுடன் நின்று விடவில்லை. மாறாக அதை எதிர்த்துக்கேட்ட இன்னொரு இடதுசாரி பெண்ணின் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார். அந்த அவக்கேட்டை ஒரு பொதுதளத்தில் வார்த்தைகளில் வடிப்பதற்குக் கூட நாம் கூசுவோம்.

    எந்த ஒரு நடவடிக்கை வார்த்தைகளால் வடிக்கப்படுவதற்குக் கூட கூசத்தகுந்ததோ…………. அப்படிப்பட்ட நடவடிக்கையை எந்தக் கூச்சமும் இல்லாமல் பொதுஇடத்தில் ஒரு பெண்ணின் முன் நிறைவேற்ற பயங்கரவாத இடதுசாரி அமைப்பினரால் மட்டிலும் தான் முடியும் என்பதை இந்தக் கன்னையா என்ற வழிதவறிய நபரின் செயல்பாடு துலக்குகிறது.

    பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்களின் பணத்தால் இயங்கும் ஊடக வேசிகளும் அவர்களுடன் கைகோர்த்து இயங்கும் பயங்கரவாத இடதுசாரி இயக்கங்களும் தேசத்தின் இறையாண்மைக்கு தொடர்ந்து ஊறு விளைவித்து வருவது முடிவுக்குக் கொணரப்பட வேண்டிய விஷயம்.

    ஹிந்துத்வ அறிவியக்கத்தினர் இவற்றை அம்பலப்படுத்துவது என்பதன் பாற்பட்டு இவற்றை தொடர்ந்து புத்திபூர்வமாக அணுகி எதிர்வினையாற்ற வேண்டும். மறுபுறம் ஹிந்துஸ்தானத்தின் கேந்த்ர சர்க்கார் மற்றும் மாகாண சர்க்கார்கள் இப்படிப்பட்ட தேசத்தின் இறையாண்மையை இழிவு செய்யும் போக்கினை சட்ட ரீதியாக ஒடுக்குவதற்கும் ஆவன செய்ய வேண்டும்.

    ஜெய்ஹிந்த்

  2. வக்கணையாக பேசும் வேற்று மத கைகூலிகள் இந்த கண்ணையாக்கள். இத்தகையோர்களுக்கு ராகுல்காந்தி போன்ற அரைவேக்காட்டு குடும்ப கட்சியினர்கள் ஆதரிப்பது ஒருவகையில் நல்லதே. அப்பொழுதுதான் மிச்ச சொச்ச தேசபக்தியாளர்களும் (உதாரணம், அசாமில் சமீபத்திய நிகழ்வுகள்) காங்கிரசை விட்டு வெளியேறுவர். கடைசியில் காங்கிரசில் இருக்க போவது சோனியா குடும்பம் ஓன்று மட்டுமே. என்ன திமிர் இந்த ராகுல் வின்சிக்கு? ‘தேசத்தை தகர்ப்போம்’, என்று கூறும் பிரிவினை வாதி கன்னையாவை சந்தித்து ஆதரவு தருகின்றார்?

  3. வினவில் வெளியாகி இருக்கும் இந்த கட்டுரை சொல்லும் பொருள் உண்மையா. நாட்டை, மொழியை தாயக வணகும் மரபு ஐரோப்பியர்களிடம் இருந்து கடன் பெற்றவையா. தயவு செய்து விளக்கவும்.

    https://www.vinavu.com/2016/03/29/idea-of-bharat-mata-made-by-europe/

  4. அன்புள்ள தாயுமானவன்,

    நான் ஃபேஸ்புக்கில் எழுதியது:

    “பாரதமாதா என்று தேசத்தைத் தாயாக உருவகித்து வணங்கும் மரபு நாம் ஐரோப்பியர்களிடம் இருந்து கடன் வாங்கியது” என்று ஒரு கருத்தை வரலாற்றாசிரியர் என்ற பெயரில் உலாவும் இடதுசாரி இர்ஃபான் ஹபீப் தெரிவித்துள்ளார்.. “முன்பு பாரதம் என்ற நிலப்பகுதி பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் உண்டு. ஆனால் மனித உருவில் தாயாக, தந்தையாக அதை சித்தரிப்பது பழங்காலத்திலோ இடைக்காலத்திலோ இந்தியாவில் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    இது முற்றிலும் அபத்தமான, ஆதாரமற்ற கருத்து. பூமியை, நிலத்தை, மண்ணை, ராஜ்யத்தை, தேசத்தை பண்டைக்காலம் முதலே பெண்ணாக, தாயாக, திருமகளாக, அரசியாகத் தான் இந்துப் பண்பாடு கூறிவந்திருக்கிறது. ராஷ்ட்ரீ, ராஜ்யஸ்ரீ போன்ற பதங்கள் வேதத்திலேயே உண்டு. மேலும், சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்திலேயே பூமியையும், நதிகளையும் பெண்பாலில் தான் குறிப்பிடுவார்கள்.

    “இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) – அதர்வ வேதம்.

    “.. நிலமென்னும் நல்லாள் நகும்” – திருவள்ளுவர்.

    “கடலை ஆடையாக உடுத்து, மலைகளை மார்பகங்களாக ஏந்தியவளே, விஷ்ணுபத்னி, உன்மீது கால்வைத்து நடக்கும் என்னைப் பொறுத்து அருள்வாய்” – பூமி ஸ்துதி.

    “பெற்ற தாயும் பிறந்த நாடும் சொர்க்கத்தை விடவும் மேலானவை” (ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்க்காதபி கரீயஸி) – வால்மீகி ராமாயணத்தின் சில பிரதிகளில் ராமன் கூற்றாக வரும் சுலோகம்.

    இந்த நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியின் விளைவாகத் தான், “வந்தே மாதரம்” என்ற அமர கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயரின் உள்ளத்தில் கவிதையாக எழுந்தது. தாய்ப் பாசத்தையும் தாய்நாட்டுப் பற்றையும் இணைக்கும் பண்பாட்டு இழை ஏற்கனவே இங்கு ஆழமாக வேரூன்றி இருப்பதால் தான், அந்தப் பாடலும் அது உருவாக்கிய உணர்வுகளும் தீச்சுடர் போல இந்தியா முழுவதும் பரவின. தாகூர் முதல் பாரதி வரை அனைத்து மொழிகளின் மகாகவிகளும் அந்த தேசிய நாதத்தை எதிரொலித்தனர்.

    வங்க ஓவியர்கள் பாரதமாதாவை தேவி உருவில் படமாக வரைந்தது 1905க்குப் பிறகாக இருக்கலாம். “பிரித்தானியா” ஓவியம் அதற்கு முன் வரையப் பட்டிருந்திருக்கலாம். அதை வைத்து இந்தக் கருத்தாக்கமே ஐரோப்பியர்களிடமிருந்து பெற்றது என்று சொல்வது மிக மோசமான திரிபுவாதம்.

    நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் அடிநாதமான இந்த விஷயத்தைக் கூட ஐரோப்பியாவிலிருந்து கடன் வாங்கியது என்று கூசாமல் பொய் சொல்கிறார் ஹபீப். ஒரு தீவிர நேருவிய மார்க்சியரிடம் இந்தக் கபடமும், தேசவிரோத உணர்வும், வரலாற்றை வெட்கமில்லாமல் திரிக்கும் போக்கும் இல்லாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம்.

  5. இறைவனே பஞ்ச பூதங்களாக உள்ளான் என்பதே இந்திய இந்து மரபு ஆகும். அதனையே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் -என்றார். இர்பான் ஹபீபுக்கு இந்து மதம் பற்றியும் தெரியாது. இந்தியாவைப்பற்றியும் தெரியவில்லை. இவரைப்போன்ற அரைகுறைகள் எழுதும் அபத்தங்களை ஒதுக்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *