அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்

‘நமசிவாய என்னும் சொல்லை ஐந்தெழுத்து மந்திரம் என்றும், பஞ்சாட்சரம் என்றும் சொல்வது வழக்கம்.  இந்த மந்திரத்தை அறியாத இந்துக்களே இல்லை என்று சொல்லாம்.  அனைவரும் அறிந்த இந்த மகாமந்திரம் —  பழங்காலம் தொட்டே வழங்கிவரும் மந்திரம் —  சிவபெருமானைப் போற்றிவணங்கும் இந்த மந்திரம் — எங்கு முதன்முதலாகச் சொல்லப்படுகிறது என்பது அறிய நமக்கு ஆவலாக இருக்கிறதல்லவா?

‘நமசிவாய’ மந்திரம் ஏழு காண்டங்கள் அடங்கிய கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையில், நான்காம் காண்டத்தில், ருத்ர நமகத்தில் எட்டாவது அநுவாகத்தில் வருகிறது.  ருத்திரம் நமகம், சமகம் என்று இரண்டு பிரிவுகளை உடையது.  ஒவ்வொன்றிலும் பதினொன்று அநுவாகங்கள் [துதிகள்] இருக்கின்றன.

சிவபெருமானின் ஒரு அம்சமான ருத்திரனைக் குறித்து இத்துதிகள் பாடப்படுவதால் இதற்கு ருத்ரம்என்று பெயர்.  ருத்ரத்திற்கு குத்ரப் ப்ரஸ்’னம், சதாருத்ரீயம், ருத்ராத்யாயம் என்ற மற்ற பெயர்களும் உள்ளன.

ருத்ர சமகத்தில் சிவபெருமானின் பலவேறு அம்சங்களும், பெயர்களும் சொல்லப்படுகின்றன.  சமகத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பலவிதமான நலங்களும், செல்வங்களும் வேண்டப்படுகின்றன.  இப்படிப்பட்ட, மகிமைபொருந்திய ருத்ரத்தை ஜபிப்பது பல நன்மைகளைத் தருகிறது.  இந்த ருத்ரஜபத்தை வேதமுறைப்படி ஹோமம் செய்து ஜபித்து வேள்வி செய்வதையேருத்ரயக்ஞம் என்று சொல்லப்படுகிறது.

யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பத்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன.  விஷ்ணு ருத்ரயக்ஞத்தைச் செய்த இடம் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானகாளஹஸ்தியாகும்.

திரயோதசியன்று சூரிய அஸ்தமனத்திற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பிலிருந்து, அஸ்தமனம் ஆகி ஒன்றரை மணி நேரம்வரை இருக்கும் காலத்தைப் பிரதோஷகாலம் அல்லதுபிரதோஷம் என்று சொல்வார்கள்.  இந்தநேரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நேரம்.  அச்சமயத்தில் ருத்ரத்தை ஜபிப்பது சிவபெருமானின் அருளைப்பெற்றுத்தரும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

பதினோரு ரித்விக்குகள் [ருத்ரத்தை முறைப்படி உச்சரித்து ஜபிக்கக்கூடியவர்கள்] பதினோரு தடவை ருத்ரத்தை ஜபம் செய்வது [மொத்தம் நூற்று இருபத்தொன்று தடவைகள்], ஏகாதச ருத்ரம் என்று சொல்லப்படுகிறது.  அறுபது ஆண்டு நிறையும் காலத்திலும், மற்ற சிறப்பான நாள்களிலும் ஏகாதச ருத்ரம் ஜபித்து, ருத்ரயக்ஞம் செய்வது நீண்ட ஆயுளையும், நோய்நொடியற்ற வாழ்வையும் தருகிறது.

ருத்ரத்தை நூற்று இருபத்தொன்று ரித்விக்குகள் பதினோருமுறை ஜபித்து [மொத்தம் 1321 தடவைகள்], வேதமுறைப்படி ஹோமம்செய்து ருத்ரயக்ஞம் செய்வதை மஹாருத்ரம் என்று சொல்கிறார்கள்.  இது உலகநன்மையையும், நாட்டிற்கு சுபிட்சத்தையும், செழிப்பையும் தருகிறது.

மஹாருத்ரம் நடத்தும் முறை:

சங்கல்பம் செய்தபின்னர், மஹாருத்ரத்தைத் துவங்குமுன்னர், சிவபெருமானையும், மற்ற தெய்வங்களையும், அவரருக்குரிய மந்திரக்களைச் சொல்லி, புனிதநீர் நிறம்பிய கலசங்களில் ஆவாஹனம் செய்கிறார்கள்.  இது சைவாகமம் கற்ற சிவாச்சாரியார்களால் ஆகமமுறைப்படி செய்யப்படுகிறது.

அது நடந்தேறியதும், சிவபெருமானை மஹாருத்ரம் ஓதப்படும் சமயத்தில் தமக்குள் வந்திருக்கும்படி இறைஞ்சித் துதித்து, மஹாநியாசம் ஓதப்படுகிறது.  அதன்பின்னர், முதல் தடவை, நமகத்திலுள்ள பதினோரு அநுவாகங்களும், சமகத்திலுள்ள முதல் அநுவாகமும் ஓதப்படுகிறது.  அப்பொழுது சிவபெருமானுக்கு பல உபசாரங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.  அடுத்த தடவை நமகம் முழுவதும், சமகத்தின் இரண்டாம் அநுவாகமும் ஓதப்பட்டு, பூஜை தொடர்கிறது.  இவ்வாறே பதினொரு தடவைகள் நமகமும், சமகமும் ஓதி பூஜை நிறைவேறுகிறது.

ருத்ரஹோமத்தில் நெய், சமித்துகளால் [பல புனிதமான மரத்தின் பட்டைகள்] அக்னிபகவானுக்கு ஆகுதி கொடுக்கப்படுகிறது.  இறுதியில் பூர்ணாஹுதியும், வசுதாராவும் செய்யப்படுகிறது.  இச்சமயத்தில் சமகத்தின் பதினோரு அநுவாகங்களும் ஓதப்பட்டு, ருத்ரயக்ஞம் நிறைவுபெறுகிறது.

இவ்வளவு சக்திவாய்ந்த, பெருமைபொருந்திய, நன்மைபயக்கக்கூடிய மாபெரும் வேதவேள்வியான மஹாருத்ரம் அடிக்கடி நடப்பதில்லை.  எப்பொழுதாவது ஒருமுறைதான் நடைபெறுகிறது.  அதிலும், மஹாருத்ரம் நடக்கும்பொழுது அதில் கலந்துகொள்வதற்கான, நேரில் கண்டு, ருத்ரஜபத்தைக் காதுகளில் கேட்டு, மனதால் தூய்மையுற்று, அதன் நற்பயன்களைப்பெறும் வாய்ப்பும் மிகக்குறைவே!

எனவே, மஹாருத்ரம் எங்கு நடந்தாலும், அங்குசென்று, சிவபெருமானின் அருளைப் பெறுவது சிவபக்தர்களின் மரபு.  அப்படிப்பட்ட மரபுக்கு வாய்ப்புத்தரும்விதத்தில் மஹாருத்ர ஜபமும், ருத்ரயஞமும் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மே 6, 7, 8 தேதிகளில் நடைபெற்றது.

rigwiths

இதில் கலந்துகொண்டு ருத்ரம் ஓதுவதற்கென அமெரிக்காவின் பலபகுதிகளிலிருந்தும் — வடகிழக்கிலிருக்கும் நியூயார்க் முதல், தென்மேற்கிலிருக்கும் சான் டியாகோவரை, அரிசோனா மாநிலத்த்யும் சேர்த்துத்தான் – கிட்டத்தட்ட நூற்றைம்பது ரித்விக்குகள் [ருத்திரத்தை முறையாக ஓதப்பயின்றவர்கள்] வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் பலவேறு துறைகளில் பணிபுரியும் இல்லறத்தோரே ஆவர்.

இவர்கள் தங்குவதற்கென்று தனியார் மோட்டல் அதிபர் ஒருவர் தனது மோட்டலில் பல அறைகளைக் கட்டணமின்றித் தந்துதவினார்.  இது தவிர, பல தொண்டர்கள் ரித்விக்குகளைத் தங்கள் இல்லத்தில் தங்கவைத்தனர்.  தொண்டர்கள் ரிக்வித்துகளை விமானநிலையத்தில் வரவேற்று, ஐம்பது மைல் [எண்பது கி.மீ] தொலைவிலிருக்கும் ஆனைமுகன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.

volun1இவர்களுக்கான எளிய உணவு தொண்டர்களால் தனியாகச் சமைத்து வழங்கப்பட்டது.  மேலும், இந்நிகழ்ச்சியைக் கண்டு, கேட்டு அருள்வெள்ளத்தில் மூழ்கவரும் பக்தகோடிகளுக்கும் மூன்று நாள்களும், மூன்று வேளைகளும் சுவையான உணவு ஆலயத்திற்கு அருகிலிருக்கும் ‘அன்னலட்சுமி’ ஹாலில் சமைத்துவழங்கப்பட்டது.  அதுவும் தொண்டர்களாலேயே சமைக்கப்பட்ட்தாகும்.

யாகசாலையில் எட்டடி உயரமுள்ள் தெர்மோகோல் சிவலிங்கம்
யாகசாலையில் எட்டடி உயரமுள்ள் தெர்மோகோல் சிவலிங்கம்

மஹாருத்திர சங்கல்பத்தைத் துவங்கிவைக்க நியூ ஆர்லியன்ஸிலிருந்து தங்கரத்தின பட்டர் [சிவாச்சாரியார்] வந்திருந்தார்.  வெங்கடேசக் குருக்கள் தலைமைதாங்கி, ஆனைமுகன் ஆலய அர்ச்சகர்கள் உள்பட ஆறு சிவாச்சாரியார்களும், மூன்று பட்டாசாரியார்களும் மஹாருத்ர யக்ஞத்தை நடத்திவைத்தனர்.

எட்டடி உயரமுள்ள தெர்மோகோல் சிவலிங்கத்தின் முன்னிலையில் யக்ஞம் நடைபெற்றது.  பூர்ணாஹுதியும் சிவலிங்க வடிவிலேயே இருந்தது மிகவும் சிறப்பான ஒன்று!

maha purnahuthi

மஹாருத்ர யக்ஞம் நடந்தேறிய மறுகணமே இலேசாக மழைத்துளிகள் விழுந்தன.  அது வருண பகவானே அந்த வேள்வியைச் சிறப்பாக நடத்தியமைக்கு அனைவருக்கும் ஆசிகூறியதுபோல இருந்தது.  அதுமட்டுமல்ல, புதங்கிழமைவரை 1000Fயாக இருந்த வெப்பம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 750லிருந்து 800யாகக் குறைந்து பக்தர்கள் விழாவில் இனிது கலந்துகொள்ள உதவியது. மாலைப்பொழுதுகளில் சில்லென்ற தென்றல் வீசி அனைவரையும் குளிர்வித்த்து.  சூரியபகவானே மஹாருத்ர யக்ஞத்திற்கு அருள்பாலிக்கிறார் என்ற பேச்சும் எழுந்தது.

இதுதவிர, சிவபெருமானின் பிரகாரத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணுதுர்க்கையும், வெங்கடேஸ்வர பகவானின் பிரகாரத்தில் தும்பிக்கையாழ்வார், லட்சுமிநரசிம்மர், வராஹர், பர்வாசுதேவர், விஷ்ணுதுர்க்கை முதலிய கோஷ்டக் கடவுளர்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  அதற்காக வெள்ளியன்று[மே 6] தான்யாதிவாசம், ஜலாதிவாசம் நடைபெற்றபோது, அனைத்து பக்தர்களும் கடவுளர்களின் திருவுருவங்களுக்கு நீராட்டிமகிழ்ந்தனர்

dakshi
தட்சிணாமூர்த்தி

lak nara
லட்சுமிநரசிம்மர்

lingo
லிங்கோத்பவ்ர்
brahma
நான்முகன் [பிரம்மா]

paravasu
பரவாசுதேவர்

pil and thu
பிள்ளையாரும், தும்பிக்கையாழ்வாரும்

varahar
வராஹர்

vish durga
விஷ்ணுதுர்க்கை

.

சனிக்கிழமையன்று [மே 7] திருவுருவங்களுக்கு தலைமைச் சிற்பி சண்முகநாதன் கண்களைத் திறந்து [நேத்ரோன்மீலனம்], உயிர்ப்பித்தார்.  முதலில் நிலைக்கண்ணாடி, பிறகு கன்னிச் சிறுமி, வயது முதிர்ந்த தம்பதிகள், மந்திரம் சொல்லி துறவியின் படம்,  பசுவின் படம் இவை திருவுருவங்களுக்குக் காட்டப்பட்டன.  சிவாச்சாரியர்களும், பட்டாச்சாரியர்களும் முறையே தேவாரம், திவ்யப்பிரபந்தங்களை இசையுடன் ஓதினர்.

அதன்பின் அனைவரும் உயிர்ப்பிக்கப்பட்ட தெய்வங்களைத் தரிசித்து, தொட்டு வணங்கினர். கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அவற்றிற்கான இடங்களில் தெய்வங்கள் நிலைநிறுத்தப்பட்டு [பிரதிஷ்டை செய்யப்பட்டு], அஷ்டபந்தனப் பூச்சு பூசப்பட்டன.  அதற்குமுன் யந்திரஸ்தாபனங்கள் நடந்தன.  பக்தர்கள் யந்திரஸ்தாபனம் செய்யப்பட்ட பிறைகளில் நவரத்தினங்களை சமர்ப்பித்து மகிழ்ந்தனர்.

அவ்வமயம் யாகசாலையில் தெய்வங்களுக்கு மூலமந்திர வேள்வி நடத்தப்பட்டது.  வேள்வியின் சிறப்புகளைப்பற்றி ஆசாரியர்கள் தமிழில் கொடுத்த விளக்கத்தை தமிழறியாத அனைவரும் புரிந்துகொள்வதற்காக ஒரு அரிசோனன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கூறினார்.

ஞாயிறன்று யாகசாலையிலிருந்து புனிதநீர்க் கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, கோஷ்ட தெய்வங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.

ஆனைமுகன், சிவபெருமான், வெங்கடேஸ்வர பகவான் திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

மதிய உணவுக்குப் பிறகு, அரிசோனாவாழ் பக்தர்களால் இன்னிசைக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பக்தர்களுக்குமேல் திருவிழாவில் கலந்துகொண்டு, இறையருள் பெற்றனர்.

ஓம் நமசிவாய!

***   ***   ***

3 Replies to “அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்”

  1. Thank you Arisonan Sir, for this article about Rudram . I am not familiar with the rituals like AAhuthi, Poornahuthi and vasudhara. I had no opportunity to witness the performance of the Sacred Maha rudra yagnam. Please explain what these rituals are. Also, I have another request. Could you please explain how to perform “Laghu Rudhri Anushthan”.
    Thanks
    Sakunthala

  2. சிவாய நம என சிந்தித்து இருப்போர்க்கு ( பகுத்தறிந்து) அபாயம் ஏதுமில்லை.

    ஓம் நமச்சிவாய.

  3. இந்த நிகழ்வு தெரிவிக்கும் புராணத்தின் பெயரை குறுப்பிட்டு இருந்தால் அதனை படித்து மகிழ்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *