வைதிக மாமணி அப்பர்

“இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த வைதிக மாமணியானவர்” என்று சம்பந்தரை சேக்கிழார் புகழ்ந்திருக்கிறார். அப்பரும் அதற்குச் சற்றும் குறையாத “வைதிக மாமணி” தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ

என்கிறார் அப்பர் பெருமான். அருக்கன் என்றால் சூரியன் (அர்க்க: என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம்).

அந்தியில் சூரியதேவனை உபாசிக்கின்றனர். அந்த சூரியனும் சிவஸ்வரூபம் அன்றோ?

இக்கருத்து எங்கிருந்து வருகிறது? நேரடியாக வேதத்திலிருந்து தான்.

அஸௌ யோ(அ)வஸர்பதி நீலக்³ரீவோ விலோஹித꞉ ।
உதைனம்ʼ கோ³பா அத்³ருʼஶன்னத்³ருʼஶன்னுத³ஹார்ய꞉ ।
உதைனம்ʼ விஶ்வா பூ⁴தானி ஸ த்³ருʼஷ்டோ ம்ருʼட³யாதி ந꞉ ॥ 1-8॥

என்பது ஸ்ரீ ருத்ரம்.

கரிய கழுத்துடைய நீலக்கிரீவராகிய அவரே சிவந்த வர்ணமுடைய இந்த சூரியனாக வெளிக்கிளம்புகிறார். (சூரிய ரூபியாகிய) இவரை இடையர்களும் கூடக் காண்கின்றனர். தண்ணீர் சுமந்து வரும் பெண்களும் காண்கின்றனர். இந்த ருத்திரனை மற்றும் எல்லாப் பிராணிகளும் கூடக் காண்கின்றன. அங்ஙனம் தரிசிக்கப்பெற்ற அவர் நம்மை இன்புறச் செய்திடுக.

இந்த மந்திரத்தில் குறிக்கப்படுவது சூரிய ரூபம் என்பதை சாயணர் தமது வேதபாஷ்யத்திலும் தெரிவித்துள்ளார் (ஸர்வேஷாம்ʼ த³ர்ஶனார்த²மேவ ருத்³ரஸ்ய ஆதி³த்ய-மூர்தி-தா⁴ரணம்).

ருத்ர ஏகாதஶினி என்கிற பரம மங்களகரமான வைதிகக் கிரியையில் பதினொரு ருத்ர ரூபங்களை பதினொரு கலசங்களில் ஆவாஹனம் செய்து பதினொரு பிராமணர்கள் பதினொரு முறை ஸ்ரீருத்ர ஜெபம் செய்வர். இதில் பதினொன்றாவதாக உள்ளவர் “ஆதித்யாத்மக ருத்ரன்” எனப்படுகிறார். இந்தக் கிரியை போதாயன ஸுத்ரத்தின் அடிப்படையில் அமைந்தது. தமிழ் ஸ்மார்த்த பிராமணர்களில் 60, 70, 80 வயது நிறைவிற்கான ஷஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகிய விசேஷங்களில் ருத்ர ஏகாதஶினி என்ற இந்தக் கிரியையே பிரதானமாக அனுசரிக்கப் படுகிறது.

புராதனமாக புழக்கத்தில் உள்ள ஸ்மார்த்த அந்தணர்களின் சூரிய நமஸ்கார பத்ததியில் தொடக்கத்தில் கூறப்படும் சுலோகங்களில் கீழ்க்கண்ட சுலோகமும் உண்டு.

ஸௌர-மண்ட³ல-மத்⁴யஸத²ம்ʼ
ஸாம்ப³ம்ʼ ஸம்ʼஸாரபே⁴ஷஜம் ।
நீலக்³ரீவம்ʼ விரூபாக்ஷம்ʼ
நமாமி ஶிவமவ்யயம் ॥

சூரிய மண்டல மத்தியிலிருப்பவரும், அம்பிகையுடன் கூடியவரும், பிறவிப்பிணிக்கு மருந்தானவரும், நீலகண்டரும், முக்கண்ணரும், மாறுதலற்றவரும், பரம மங்கள ஸ்வரூபரும் ஆன சிவனை நமஸ்கரிக்கிறேன்.

இந்த சுலோகத்தோடு கூடவே, சூரிய மண்டல மத்தியில் நாராயணனாக தியானிக்கும் சுலோகத்தையும் (த்⁴யேயஸ்ஸதா³ ஸவித்ருʼ-மண்ட³ல-மத்⁴யவர்தீ நாராயண:), மும்மூர்த்திகளாக தியானிக்கும் சுலோகத்தையும் (நமஸ்ஸவித்ரே.. விரிஞ்சி-நாராயண-ஶங்கராத்மனே) சேர்த்துக் கூறுவதும் உண்டு.

இந்த வைதிகப் பாரம்பரியத்தை நன்கு உணர்ந்திருப்பதால் தான் அப்பர் பெருமான், அடுத்த அடியிலேயே

இருக்கு நான்மறை ஈசனையே தொழும்

என்று கூறுகிறார். இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ளாதவர்களை

கருத்தினை நினையார் கல்மனவரே

என்று குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீ ருத்ரத்தின் சாரத்தை அற்புதமாக உருத்திரத் திருத்தாண்டகம் என்ற பெயரில் பாடியருளியவர் அப்பர் பெருமான் என்பதையும் கவனிக்க வேண்டும். இதைக் குறித்து டாக்டர் ஆர்.நாகசாமி Siva Bhakti என்ற தனது நூலில் Vedic Nature of Appar’s Saivism என்ற கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பர் தேவாரத்தில் வேதங்கள் என்று ஒரு சிறப்பான நூலை K.C.லட்சுமிநாராயணன் எழுதியிருக்கிறார். இங்கே வாங்கலாம்.

அப்பர் பெருமான் அடிமலர் போற்றி.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *