பண்டித மதன்மோகன் மாளவியா ஒரு மண்ணுருண்டை, பாலகங்காதர திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது.
ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை.
தமிழ்ஹிந்து, சொல்வனம், தமிழ்பேப்பர் இணையதளங்களிலும், யாளி இதழிலும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய தேர்ந்தெடுத்த கட்டுரைகள் தொகுக்கப் பட்டு மிக நேர்த்தியாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்துத்துவ எதிர்ப்பு என்ற பெயரில் நமது வரலாற்றின்மீதும் பண்பாட்டின் மீதும் கொட்டப் படும் வெறுப்புக்கு பதில் சொல்வதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
“… அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் இந்துத்துவத்தின் எதிரிகளுக்கு வேண்டுகோளும் அறிவுரையுமாகக் கலந்து ஒரு விண்ணப்பத்தை முன்வைத்திருக்கிறார். அதாவது இந்துத்துவத்தை எதிர்ப்பதற்காக இந்து ஞான மரபையே ஏன் எதிர்க்கிறீர்கள்? இந்து ஞான மரபு என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையானது. இன்றும் தொடர்வது. இந்துத்துவமோ உருவாகி நூற்றாண்டு கூட ஆகாத ஒரு சித்தாந்தம்.
ஆனால் இந்துத்துவ எதிர்ப்பாளர்களோ தொடர்ந்து இந்து ஞான மரபு, இந்து பண்பாடு சார்ந்த அனைத்தையும் கடுமையாக எதிர்க்கின்றனர். இதன் நீட்சியாக, அவர்களுக்கு நம் தேசவிடுதலையின் உன்னத ஆளுமைகள் கூட பழிக்கப் பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்துத்துவர்கள் ஒருவரைக் கொண்டாடினால் அவர் எதிர்க்கப்பட வேண்டும் என்ற எளிய சூத்திரம். அதனுடன் இணைந்து மிகப்பெரிய பிரசாரம்.
இதன் காரணம் எளிமையானது. ஜெயமோகன் போன்ற அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது.
… இன்றைக்கு காந்தியின் பெயரை உச்சரிப்பவர்கள், ராமச்சந்திர குகாவை அடியொற்றிய நியோ-இன்றைய-காந்தியர்கள் காந்தியின் பெயரை உச்சரித்துக் கொண்டே இந்துத்துவத்தை வசைபாடுவார்கள். இந்துத்துவ தரப்பாக கோட்சேயையும் அதன் எதிர்த்தரப்பாக காந்தியையும் நிறுத்துவார்கள். ஆனால், காந்தியே இத்தகைய இரட்டைகளைத் தாண்டி செயல்பட்டவர். இந்துத்துவர்களுடன் அவர் என்றைக்குமே உரையாடி வந்தார். சுவாமி சிரத்தானந்தரும், மதன் மோகன் மாளவியாவும், லாலா லஜ்பத்ராயும் அவருடைய ஆன்மாவுடன் உரையாடியவர்கள். ஆசாரிய கிருபளானி முதல் தரம்பால் வரை காந்தியத்தின் குரல் அப்படியே இன்று ஒலித்தால், நம் போலி மதசார்பற்ற ஊடகங்கள் அவற்றை இந்துத்துவ கடும் குரல்கள் என்றே சொல்லி விமர்சித்திருக்கும். நவீன அரசியல் சித்தாந்த தீண்டாமையை இந்துத்துவத்திற்கு எதிராக வசைமொழியுடன் பாடுபவர்கள் தங்களை காந்தியர்களாக வகைப்படுத்திக் கொள்வது நம் பண்பாட்டுச் சூழலின் முரண்நகை. இத்தகைய சூழலில் எழுதப் பட்டவையே இந்தக் கட்டுரைகள்”.
– முன்னுரையில் நூலாசிரியர்
கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்
ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன்
வெளியீடு: மதி நிலையம், எண் 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை – 86 (தொ.பே: 044-28111506)
பக்கங்கள்: 104, விலை: ரூ. 90 /-
2016 ஜூன் சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் கிடைக்கும்.
இணையத்தில் இங்கு வாங்கலாம்.
மிகவும் அருமையான தலைப்பு , இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்