சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வழக்கம் போலவே இந்த வருடமும் நேரடியான வெறுப்பரசியல் பதிப்பகங்களும் (எதிர், அடையாளம், விடியல் இத்யாதி…) வெறுப்பரசியலும் இலக்கியமும் வெகுஜன சமாசாரங்களும் காக்டெயிலாகக் கலந்த பதிப்பகங்களும் (உயிர்மை, காலச்செவிடு, விகடன் இத்யாதி) கணிசமாகக் கடைகளை விரித்திருந்தன. பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன. இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, சூழலியல் கொள்கைப் பிரசார நூல்களை மட்டுமே விற்கும் அரங்குகள் ஓரளவு இருந்ததும், ஓசியில் குரான் தரும் இஸ்லாமியப் பரப்பு அரங்குகள் கணிசமாகக் குறைந்திருந்ததும் மகிழ்ச்சியான விஷயங்கள்.

Chennai_book_fair_2016

இரண்டு தடிமனான மொழிபெயர்ப்பு நூல்கள் கண்காட்சிக்கு சற்றுமுன்பு வெளிவந்தன. இரண்டுமே வரலாற்று நூல்கள். ஒன்று, வெண்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு”. மேற்கத்திய, ஃபிராய்டிய குறைத்தல்வாத, காலனியக் கண்ணோட்டத்துடன் எழுதப் பட்டது. அதிலுள்ள அடிப்படையான பிழைகளும் திரிபுகளும் அறிஞர்களால் சுட்டிக்காட்டப் பட்டு தர்க்கபூர்வமாக நிராகரிக்கப்பட்டு மதிப்பிழந்த நூல். மற்றொன்று, தரம்பால் எழுதிய “அழகிய மரம்: 18ம் நூற்றாண்டில் இந்திய பாரம்பரியக் கல்வி”. பிரிட்டிஷ் ஆவணங்களையே அடிப்படையாக வைத்து கறாராக எழுதப் பட்ட சிறப்பான நூல். இன்றுவரை காந்தியம், சுதேசியக் கல்வி, சூழலியல், காலனியாதிக்க நீக்கம் (Decolonization) ஆகிய கொள்கைகளைப் பரப்பும் இயக்கங்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் உத்வேகமூட்டிவரும் ஒரு மகத்தான நூல். ஆனால், சென்னைப் புத்தகக் கண்காட்சியில் “அழகிய மரம் 3-4 கடைகளில் மட்டுமே, அதுவும் அமர்ச்சையாக இருந்தது. வெண்டி டோனிகரின் குப்பை 20க்கு மேற்பட்ட அரங்குகளில் படாடோபமாக முன்னால் வைக்கப்பட்டிருந்தது. நாளிதழ்களின் பக்கங்களில் டோனிகரின் விஷஜந்து இடம்பெற்றது, “அழகிய மரம்” கண்டுகொள்ளப் படவில்லை. ஒட்டுமொத்த தமிழ் “அறிவுச்” சூழலின் நிலை என்ன என்பதை இந்த ஒரு விஷயத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

எல்லாவகை அரங்குகளிலும், பெரியார்களுக்கும், அம்பேத்கர்களுக்கும், பிரபாகரன்களுக்கும் மார்க்ஸுகளுக்கும் நடுவில் வசீகரமாக வந்தியத்தேவனும் குந்தவையும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். “புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது. தமிழகத்தின் *முத்திரை புத்தகம்* என்ற பெருமையை இன்னும் சில பத்தாண்டுகளுக்காகவது கல்கி எழுதிய “தமிழ் ஹாரிபாட்டர்” தக்கவைத்துக் கொள்ளும் என்று தோன்றுகிறது. வாசிப்பதோடு கூட, தங்கள் அலமாரியின் அலங்காரத்திற்கும் ஏற்ற ஒரு நூலாக, தமிழ் வாசிக்கும் நல்லுலகத்தில் இந்த நூல் நிலைபெற்றுவிட்டது நமது நல்லூழ். வண்டிவண்டியாகக் கரைத்துக் கொட்டப்படும் வெறுப்பு டாக்ஸின்கள் கொஞ்சமாவது நீர்த்துப் போகும் வகையில் சோழ சாம்ராஜ்யப் பெருமிதமும், பூங்குழலியின் காவியக் காதலும் நிற்கட்டும் என்று ஒரு தெய்வ சங்கல்பம் இருக்கும் போலும். வாழ்க! அதற்கடுத்ததாக பாரதியார் கவிதைகளும், ராமாயண மகாபாரத தேவார திருவாசக திவ்யப்பிரபந்த புத்தகங்களுமே பரவலாகக் கடைகளில் தென்பட்டன என்பதும் ஆறுதலான விஷயம்.

பல நல்ல நூல்களை வெளியிட்டுள்ள பெங்குவின், ஹார்பர் கொலின்ஸ், ஓரியண்ட் ப்ளாக்ஸ்வான் போன்ற பிரபல ஆங்கிலப் பதிப்பகங்களின் அரங்குகள் ஈயாடிக் கொண்டிருந்தன. ஆங்கிலப் புலமையும் ஆங்கில மோகமும் உச்சத்தில் உள்ள சென்னை மாநகரில் இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன? ஆங்கில வாசகர்கள் தங்களுக்கான நூல்களை கிண்டிலில், இணையத்தின் ஓசிப் பிரதிகளில், பிளாட்பார மலிவுவிலைக் கடைகளில் அல்லது நகர புத்தகக் கடைகளில் ஏற்கனவே வாங்கி வாசித்திருக்கலாம் என்பது காரணம் என்று தோன்றுகிறது.

புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களின் பேசுபொருளை வைத்து தமிழர்கள் எந்தமாதிரியான விஷயங்களில் கவனம் கொள்கிறார்கள் என்பதைக் கணிப்பது கடினம். ஆனால்,, ஒட்டுமொத்தமாக, எங்கும் தெரிவது என்ன என்றால் “பழமை”. பழைய வரலாறு. பழைய இனவாதம். பழைய சாதி துவேஷங்கள். பழைய காலாவதியான இடதுசாரி, திராவிட அரசியல். பழைய ஜோதிடம். தாள்களின் வாசனையைத் தாண்டி வேறு எதிலும் பெரிதாகப் புதுமையின் நெடி இல்லை. நவீன இலக்கியம் ஓரளவு கண்ணில் படுகிறது. வெகுசில புத்தகங்கள் தவிர்த்து அறிவியல் அனேகமாக எங்கும் இல்லை. பழைய வரலாற்றைப் பற்றிய புதிய சிந்தனை வீச்சுகளுக்கான தடயங்களும் கூட இல்லை. புதுமைப்பித்தன் என்று பெயர் வைத்துக் கொண்ட தமிழ் எழுத்தாளனின் ஆவி இந்தக் கடைகளுக்கு நடுவில் ஆற்றாமையுடன் அலைந்து கொண்டிருக்கலாம்.

இது எல்லாவற்றையும் தாண்டி, சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம். இப்போது அதன் நிறம் எதுவாக இருந்தாலும், தன் பண்பாட்டின், அறிவுசார் வரலாற்றின் உண்மையான வைகறைச் செஞ்சுடர் வண்ணத்தை தமிழ்ச்சமுதாயம் உணர்ந்துகொள்ள இந்த வருடாந்திரக் கண்காட்சி கட்டாயம் உதவும்.

*****

புத்தகக் கண்காட்சியில் புதிய வெளியீடுகளைத் தான் வாங்கவேண்டும் என்ற கொள்கை எனக்குக் கிடையாது. கவனிக்காமல் விட்ட பழைய நூல்கள், பழைய நூல்களின் புதுப் பதிப்புகள் போன்றவையே நான் அதிகம் வாங்குவது. இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள்:

* இராஜராஜேச்சரம் (குடவாயில் பாலசுப்ரமணியன்) – அன்னம்
* அந்தரங்கமானதொரு தொகுப்பு (அசோகமித்திரன்) – விருட்சம்
* தீக நிகாயம்: பௌத்த மறைநூல் (தமிழில்: மு.கு.ஜகன்னாத ராஜா) – தமிழினி. பாலியிலிருந்து நேரடி தமிழ் மொழியாக்கம்.
* குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (பெ.தூரன்) – இயல்வாகை
* அன்னமாச்சார்யா (அடபா ரா.கி.ராவ்) – சாகித்ய அகாதமி
* தலித் சிறுகதைத் தொகுப்பு (தொகுப்பு: ப.சிவகாமி) – சாகித்ய அகாதமி
* ஒரு நாள் (க.நா.சு) – நற்றிணை
* சாயாவனம் (சா.கந்தசாமி) – நற்றிணை
* சிவகாமியின் சபதம்: சுருக்கப்பட்ட இனிய வடிவம் (கல்கி) – கிழக்கு. என் 14 வயது மகளுக்காக. வாசிப்பாள் என்று நம்பிக்கை. பார்க்கலாம்.
* சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும் (உ,வே.சா பதிப்பு) – டாக்டர் உ.வே.சா நூல்நிலையம். தினமலர் அரங்கில்.
* சரஸ்வதி மேரி டீச்சர்: லட்சிய ஆசிரியர் கனவுப்பள்ளி (பி.ஆர்.மகாதேவன்) – ஸி.ஜி.பப்ளிகேஷன்ஸ். கிழக்கு அரங்கில்.
* ஒட்டகம் கேட்ட இசை (பாவண்ணன்) – காலச்சுவடு. வாங்கியது: நூலாசிரியரின் பெங்களூர் நகர வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதற்காக.
* Mathematics can be fun (Y.Perlman) – NCBH. ஏற்கனவே Physics can be fun உள்ளது. அதற்குத் துணையாக இது 🙂
* Gandhian Economic thought (J.C.Kumarappa) – Sarva Seva Sangh
* Abhijnana Shakuntalam of Kalidasa (Sankrit text & Commentary in English) – Motilala Banarasidas. குமாரசம்பவம், ரகுவம்சம் வாசித்தாயிற்று, இந்த வருடம் சாகுந்தலம்.

ஆங்கில நூல்களின் தமிழ் மொழியாக்கங்களை நான் ஒருபோதும் வாங்குவதில்லை, மூலத்தில் தான் வாசிக்கிறேன். அதே போல இந்திய மொழியிலிருந்து ஆங்கிலம் வழியாக தமிழில் மொழிபெயர்த்ததையும் விரும்புவதில்லை – ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய சாகித்ய அகாதமி வெளியீடுகள் பெரும்பாலும் இப்படித் தான் உள்ளன. இந்திய மொழிகளுக்குள் பரஸ்பர மொழிபெயர்ப்பு என்பதே சில பத்தாண்டுகளில் நின்றுவிடும் என்று தோன்றுகிறது. இது ஒரு பெரிய இழப்பு.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

7 Replies to “சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்”

  1. எல்லாம் சரி….பழைய ஜோதிடம் என்றால் என்ன?

  2. I thought Penguin decided to pulp all of Wendy’s book. How come this book is on sale in the first place?

  3. சிறப்பான முயற்சி. காய்தல் சற்றே கூடுதலாகவும், உவத்தல் குறைவாகவும் உள்ளது.

  4. Dear Sir!
    Vanakkam.
    Infact I missed this year’s opportunity to visit &buy books since I am unaware of this event.I usually visited in January for 3 days except last year due to natural calamity.
    It is a great loss to me.I can’t plan now to come to Chennai immediately.
    Anyway I am satisfied with your article since i think as though i have visited.
    somu.

  5. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
    குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (பெ.தூரன்) – இயல்வாகை- இந்தப்புத்தகம் பற்றிய பதிப்பக விவரங்களைத் தர இயலுமா? நான் இதனை வாங்கிப்படிக்க விரும்புகிறேன். புத்தக கண்காட்சிக்காகச் சென்னை செல்ல இயலவில்லை. வாங்கி அனுப்பவும் ஆளில்லை!

  6. // குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (பெ.தூரன்) – இயல்வாகை- இந்தப்புத்தகம் பற்றிய பதிப்பக விவரங்களைத் தர இயலுமா? //

    இயல்வாகை என்பது பதிப்பகத்தின் பெயர். டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 அல்லது 94459 79797 என்ற எண்ணை அழைத்து புத்தகம் பெயரைக் கூறி ஆர்டர் செய்யலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *