வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

சதாவதானி டாக்டர் ஆர்.கணேஷ் அவர்கள் “முன்னூறு ராமாயணம்” முன்வைக்கும் கருத்தாக்கங்களை மறுதலித்து வைக்கும் தர்க்கங்கள் :-

ராமானுஜனின் முன்னூறு ராமாயண வ்யாசத்தை வாசித்த படிக்கு, அவர் சொல்லுவதில் மறுதலிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் தான் மூல ராமாயணம் என்ற ஒரு கூற்றை அவர் மறுக்க விழைவது. ராமாயண கதையைப் பகிரும் ஒவ்வொரு நூலும் தன்னளவில் ஒரு ராமகதையை தன் வசம் கொண்ட தனித்ததாகிய நூல் என்று கருத்துப் பகிர விழைகிறார் ஸ்ரீ ஏ கே ராமானுஜன்.

valmiki_smஆனால் வாஸ்தவத்தின் பாற்பட்டு, மனித சமுதாயத்துக்கு ராமாயணம் என்ற பெயரில் ஒரு தொகுப்பாகக் கிடைத்த முதல் நூல் ஆதிகவி வால்மீகி முனிவர் இயற்றிய வால்மீகி ராமாயணமே என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. ஹிந்துஸ்தானத்தின் மற்றைய ப்ராந்தியங்களிலும் நம் தேசத்திற்கு வெளியே ஏனைய தேசங்களிலும் இதற்குப் பின்னால் இந்தப் பெயரில் எழுந்த ஏனைய காவியங்கள் காலத்தால் இதற்கு மிகவும் பிற்பட்டவை என்பது மிக முக்யமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இதையடுத்து சொல்லப்படும் ஒவ்வொரு ராமாயண நூலும்,  “இதை ஒட்டி அல்லது வெட்டி இதனின்று வேறு பட்டு அல்லது இதனின்று முரண்பட்டு” என்ற வகையில், கதைக்களனை எடுத்துச் செல்லும் ராமாயண கதாசிரியரோ அல்லது ஆராயப்புகும் ஆய்வாளரோ அடிப்படை அலகீடாகக் கொள்ள விழைவது வால்மீகி ராமாயணம் என்ற நூல் தான். இதை  எந்த வகையிலும் மறுக்க முடியாது. ராமாயண காவ்யத்தை சொல்லும் நூற்களில் மனித சமுதாயத்துக்கு முதன் முதலில் கிட்டிய ஒரு நூற் தொகுப்பு என்ற படிக்கு இது தான் மூல நூல் என்பதனை மறுக்க இயலாது.  அப்படி மறுப்பதற்கு ஏதுவான எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை.

வால்மீகி முனிபுங்கவர் தமது ராமாயண நூலை எழுதுவதற்கு முன்னரேயே இந்த நூல் சொல்லும் கதை பல பாணர்களால் பாட்டு வடிவினில் இருந்திருக்க வேண்டும் என்று இந்தியவியல் அறிஞர்கள் அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் அப்படிப் புழங்கிய பாடல்கள் எவையும் மறுக்கவியலா ஆதாரங்களின் பாற்பட்டு இதுவரை கிடைத்ததுண்டோ என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இதற்கு மேற்கொண்டு சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் அவர்கள் இந்த விஷயம் சம்பந்தமாகச் சொல்லும் முக்ய விஷயங்களைப் பார்ப்போம் :-

பௌத்த மற்றும் ஜைன ராமாயணங்கள் காலத்தால் மிகவும் பழமையானவை என்று சொல்லப்படுகிறது. சில சமயம் ஆதிகாவ்யமாகிய வால்மீகி ராமாயணத்துக்கும் முற்பட்டவை இவை என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இவை சரியான கூற்றுகளல்ல.

புத்த ஜாதகக் கதைகளில் ராம கதை காணக்கிட்டுகிறது என்றும் அதன் கதைக்களன் வேறானது என்றும் சொல்லப்படுகிறது. புத்த ஜாதகக் கதைகள் என்பவை பௌத்த சாஸ்த்ரங்களாகிய த்ரிபிடகம் என்று நாம் அறியும் பௌத்த மூல நூற்களுக்குப் பிந்தைய காலத்தின் பாற்பட்டவை என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். த்ரிபிடகம் என்று தற்காலத்தில் நாம் அறியும் பௌத்த நூற்கள், பொதுயுகத்தின் முதலாம் நூற்றாண்டில் கனிஷ்க ராஜனுடைய காலத்தில் கூட்டப்பட்ட மூன்றாவது புத்த சங்கத்தில் தொகுக்கப்பட்டவை என்பது அறிஞர்கள் கருத்து. த்ரிபிடக நூற்களில் உள்ளடக்கமாகாத பௌத்த ஜாதகக் கதைகள் என்பவை காலத்தால் இவற்றுக்கும் கூடப் பிற்பட்டவை என்பது கவனிக்கத் தக்கது.

ஆகையால் இவை காலத்தினால் மிகவும் பிற்பட்டவை என்பது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

பௌத்த மற்றும் ஜைன ராமாயணங்கள் ஆதிகவி வால்மீகி முனிபுங்கவரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துக்கு முற்பட்டவை என்ற படிக்கான முன்பின் முரணான காலக்கணக்கு எத்தகையது?  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (1879 – 1955) ஆராய்ச்சி முடிபுகள் ஐஸக் ந்யூட்டனுடைய (1642 – 1726) ஆராய்ச்சிக்கூறுகளுக்கு அடிப்படை என்று  யாராவது கூறினால், அது காலக்கணக்கு  குறித்த எத்தகைய  அடிப்படையான தர்க்கப் பிழையோ  அது போன்றது.

அதே போல, ஜைன ராமாயணங்களுள் மிகப்பழமையான ஜைன ராமாயணம் ஸ்ரீ விமலஸூரி அவர்களால் இயற்றப்பட்ட பவுமாசரிஅ எனும் ஜைன ராமாயணம். ஸ்ரீ விமலஸூரி அவர்கள் பொதுயுகம் 3ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த ராமாயணம் வால்மீகி ராமாயணத்துக்கு மூத்தது என்பது வால்மீகிக்கு மூத்தவர் காளிதாசர் என்பது போன்ற ஒரு கூற்றுக்கு சமமான கூற்று.

ப்ராந்திய பாஷைகளில் சமைக்கப்பட்ட (வாய்வழியான மற்றும் எழுதப்பட்ட) ராமாயணங்கள் பொதுயுகத்தின் 8ம் அல்லது 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பாரதத்தின் பல ப்ராந்தியங்களில் இருக்கும் வாய்மொழியான ராமாயணங்களை மட்டும் கவனிக்குங்கால் இலக்கிய மற்றும் மொழியியல் அலகீடுகளை வைத்து இவற்றின் பாஷா சைலிகளை அணுகுகையில் இவையெல்லாம் கிட்டத்தட்ட ஐன்னூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்பது துலங்குகிறது.

அப்படியானால் வால்மீகி முனிபுங்கவருக்கு அவருடைய ஆதிகாவ்யமாகிய வால்மீகி ராமாயணம் எனும் நூலை எழுதுவதற்கு உந்து சக்தியானவை எவை என்று கேழ்வியெழும் அல்லவா? சம்ஸ்க்ருதத்திலும் மற்றும் ஏனைய ப்ராக்ருத / அபப்ரம்ஸ பாஷைகளிலும் வால்மீகி முனிவரின் காலத்திற்கு முன்னர் ராமாயணப்பாடல்கள் பாடப்பட்டிருக்க வேண்டும். அவையே அவருக்கு உந்துசக்தியாக இருந்திருக்க வேண்டும் என்பதனை ஒருக்கால் ஒப்புக்கொள்வோம்.

அப்படியானால் அடுத்த கேழ்வியெழும் இல்லையா? வால்மீகி முனிபுங்கவருக்கு முந்தையதான ராமாயணக் கதைகளும் பாடல்களும் எங்கே என்று? அவை காலத்தால் அழிந்து போய் விட்டன என்பது மறுக்கப்பட முடியாத விஷயம்.. அஃதாகப்பட்டது காணக்கிட்டும் ஒரு நூலுக்கான ஆதாரம் காணக்கிட்டாதது. ஆனால் அது தான் ஆதாரம் என்றால்,  சான்றுகளின் பாற்பட்டு அல்லாது வெறும் கற்பனையின் பாற்பட்டு மிகும் அப்படிப்பட்ட ஆதாரம் என்பது எப்படியாகும்?

ஆம்லெட்டு தோசை செய்யப்பயன்படும் குஞ்சு பொறிக்கா முட்டையிலிருந்து (Poultry eggs) கோழிக்குஞ்சுகள் பிறந்ததாகவும் அக்கோழிக்குஞ்சுகள் வாயிலாகக் கோழியினம் பெருகியது என்று சொல்லுவது எப்படிப்பட்ட புத்திசாலித்தனமான தர்க்கமாகுமோ அத்தகைய தர்க்கத்தை ஒத்ததாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு தர்க்கம். இல்லையா?

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததின்னு யானக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனக்குஞ்சு சொன்னதின்னு – பாட்டு நினைவுக்கு வருமில்லையா?

துளசிதாசர்
துளசிதாசர்

ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணத்தின் மறுவாசிப்பாக சம்ஸ்க்ருதத்திலும் தமிழ் மற்றும் ஏனைய ஹிந்துஸ்தான பாஷைகளில் எழுதப்பட்ட மற்ற ராமாயண காவியங்களை எழுதிய சான்றோர்கள் அனைவரும் இந்த வால்மீகி ராமாயணத்தை எழுதிய ஆதிகவி வால்மீகிக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதாக எழுதியிருக்கிறார்கள். காளிதாசன், பவபூதி, போஜராஜன், ராஜசேகரன், கவிராஜன், மற்றும் இராமாவதாரம் என்ற பெயரில் தமிழில் ராமகதையை எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்,  ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர், கன்னடத்தில் ராமாயணம் குறித்த எழுதிய நவீன காலத்திய கவிஞர் எழுத்தாளருமான குவெம்பு போன்றோர் அனைவரும் ஆதிகவி வால்மீகியின் வழியே தாங்கள் செல்வதாக எழுதியிருக்கிறார்கள்.

அப்படியானால் ராமாயணத்துக்கு முன்னூறு முகங்கள் உண்டு சொல்லுவதன் பின்னணியும் உந்துசக்தியும் யாது என்று கேழ்வியெழும் இல்லையா?

வாஸ்தவத்தில் இப்படிப்பட்ட ஒரு குதர்க்கமான சதிமிகுந்ததான ஒரு கூற்றின் பின்னணியில் இருப்பது புலமை இல்லை மாறாக யுக்தி என்பதனை நாம் உணர வேண்டும். இடதுசாரிகளின் அப்யாசத்தில் உள்ள நயவஞ்சகமான யுக்திகள் என்பது இப்படிப்பட்ட செயல்பாடுகளின் பின்னணியில் உள்ளது. தாங்கள் எதிர்க்க விழையும் ஒரு பொருளை முற்று முழுதாக நிராகரித்தல் என்பது ஒரு இடதுசாரி யுக்தி. அவர்களை விளக்கங்கள் மற்றும் ஆதாரங்களுடன் எதிர்கொண்டால் போலிவாதத் தர்க்கத்தினையொட்டி தங்களது அடிப்படைகளையே மாற்றிக்கொள்வார்கள். “ஒரே ஒரு உறுதியான நூல் உள்ளது என்பதனை நாங்கள் மறுக்கிறோம்” என்பது இவர்கள் எடுத்துக்கொள்ளும் நிலைப்பாடுகளுள் ஒன்று. மறுபடி இதை மறுதலிக்க இவர்களை விளக்கங்கள், ஆதாரங்கள் என்று அணுக முனைந்தால்,”புராதனமான என்றோ உறுதியான என்றோ எந்த விஷயமும் இருக்கவியலாது; வெவ்வேறு காலகட்டத்தில் மாறிக்கொண்டே செல்லுவது தான் உலகம்” என்று தங்கள் பாதையையும் அடிப்படைகளையும் கமுக்கமாக மாற்றிக்கொண்டு ஏதும் நிகழாதது போலப் பயணத்தை தொடர்வது இடதுசாரிச் செயல்பாடு.

கௌரவர்களை கதாநாயகர்களாகவும் பாண்டவர்களை வில்லன் களாகவும் கொண்ட மெய்யான மஹாபாரதக் கருத்துக்கள் இப்போதெல்லாம் தலையெடுப்பதைக் கண்ணுறுகிறேன் என்று சமீபத்தில் ஞானபீட விருது வென்ற சந்த்ரசேகர கம்பர் என்ற அன்பர் கருத்துத் தெரிவிக்கிறார். இவர் ஏதும் புதிதாகச் சொல்லவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். இப்படிச் சொல்லுவது தான் நவநாகரீகமாயிற்றே. மஹாபாரதக் கதைக்களன் உருக்குலைப்பாளர்களின் பலரகங்களில் ஒரு ரகம் தானே இந்த அன்பர். “On the meaning of Mahabharata” என்னும் நூலின் வாயிலாக இப்படிப்பட்ட உருக்குலைப்புக் கருத்தாக்கங்களை வி.எஸ்.சுக்தங்கர் போன்ற அறிஞர் பெருமக்கள் முழுமையாகவும் முடிவாகவும் கட்டுடைத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

அபாரமான கவிதை படைக்கும் திறன்பெற்ற ஒரு கவிஞர் தேசத்தின் பெருமை வாய்ந்த ஒரு நபரின் வாழ்க்கை சரிதத்தை காவியமாக வடிக்க முனைந்த ஒரு முதல் செயற்பாடு வால்மீகி முனிபுங்கவர் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை சமைத்தமை. ஆதலால் அவர் ஆதிகவி என்று அழைக்கப்படுகிறார். மஹாகவி காளிதாஸன் *கவி* என்ற சொல்லை *வால்மீகி* என்ற சொல்லுக்கிணையான ஒரு பதமாகக் கையாண்டுள்ளான் என்பது நோக்கத் தக்கது. ஹிந்துஸ்தானத்தின் வெவ்வேறு ப்ராந்தியங்களில் வசித்த வெவ்வேறு மொழி பேசும் பலவேறு கவிகளும் காலத்தாலழியாத ஒப்புயர்வற்ற இந்த ஆதிகாவ்யத்தை தங்களுடைய திறமைக்கு ஏற்றபடிக்கு தங்களுடைய மனச்சாந்திக்காக வேண்டி பலமுறை தங்கள் தங்கள் மொழியில் இயற்றியிருக்கிறார்கள். பலமுறை அவ்வாறு பாஷாந்தரங்களில் இயற்றப்பட்ட காவியங்கள் அதை இயற்றிய ஆசிரியரின் பங்களிப்பால் அதீத அழகுடன் செறிவூட்டப்பட்ட ஒரு காவியமாக மிளிர்வதையும் கண்ணுறுகிறோம்.

இப்போது நான் சொல்ல விழைவது ஒரு மலிவான ஒப்பீடாக இருக்கலாம் தான். ஆனால் தற்கால வழக்கியலில் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை மாற்று மொழிகளில் எடுக்க விழைந்தால் அது ஒரு கட்டத்துக்கு கட்டம் ஒத்துப்போகும் திரைப்படமாகவும் எடுக்கப்படலாம் அல்லது ஆங்காங்கு மாறுதல்களைச் செய்து எடுக்கப்படும் ஒரு ரீமேக் ஆகவும் இருக்கலாம்.

ஹிந்துஸ்தானத்தின் ஒவ்வொரு சமயமும் ராமாயண கதையை தத்தெடுத்து அதனை உள்வாங்கி உபயோகப்படுத்தி தங்களது கொள்கைகளை பொதுமக்களுக்கு எளிதாக எடுத்துறைக்க விழைந்தன என்பது நாம் முக்யமாக கவனிக்க வேண்டிய விஷயம். லக்ஷ்மணனால் கொல்லப்படும் ராவணனைச் சொல்லும் ஜைன ராமாயணக் கதையிலிருந்து சீதையின் அபஹரணத்தை வெகுவாகக் கவனப்படுத்தும் பௌத்தராமாயணங்களும் அத்வைதக் கோட்பாடுகளின் சொற்பொழிவினைக் கேட்குமாறு ராமபிரான் உருவகப்படுத்தப்படும் வேதாந்திகளின் ராமாயணங்களும் சரணாகதி தத்துவத்தினை முன்னிறுத்தும் விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை விளக்கும் ராமாயண விவரணங்களும் ஹனுமனை முன்னிறுத்தி அவனைஎதிர்கால ப்ரம்மாவாக சித்தரிக்க விழையும் த்வைத ராமாயண விவரணங்களும் தசமுக (பத்துத் தலை) ராவணன் மரித்த பின்னர் கிளர்ந்தெழும் ஒரு சதமுக (நூறு தலை) ராவணனை வதம் செய்யப்புகும் சீதாபிராட்டியை தேவியாக சித்தரிக்க விழையும் சாக்த ராமாயணங்களும் என்று ஒருபுறமிருக்க ராமபிரானை விஷ்ணுவின் அவதாரமாக சித்தரிப்பதை மறுதலிக்கும் சைவர்களிலிருந்து ராமாயண காவியத்தை தேவையற்றது என மறுதலிக்க விழையும் நூதன யுகத்து அறிவுஜீவிகள் வரை பலரும் பல விதத்தில் ராமாயணத்தில் தங்கள் சிந்தனையைச் செலுத்தி அதில் புகல் பெறுவதை புறத்தொதுக்க இயலாது.

ப்ரம்மதேவனின் ப்ரசித்தமான வசனமான ‘பரம் கவீனாம் ஆதாரம்’  (எல்லாக் கவிகளுக்கும் ஆதாரமான) என்ற சொற்றொடர் 300 ராமாயணம் என்ற ஒரு கருத்தாக்கம் ஒரு மோசடியைப் பரப்புரை செய்யும் ஒரு கருத்தாக்கமாக இருப்பினும் கூட வேறொரு வகையில் அதற்கு அணுக்கமாகக் கூட போய்விடுவதைக் கண்ணுறாமல் இருக்கவியலாது.

ஃபேஸ்புக்கிலும் சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் அவர்களது வ்யாசம் கவனத்துக்குக் கொணரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு சுவையான மற்றும் சுருக்கமான ஒரு விவாதமும் முன்னெடுக்கப்பட்டது. ஸர்வ ஸ்ரீமான்கள் ஜடாயு, ஆர்.வி, மகேஷ் சங்கர் மற்றும் ராமசூரி போன்ற அன்பர்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்தார்கள். சில விஷயங்கள் புரிதலின்றி முன்வைக்கப்பட்டன. சில் விஷயங்கள் மிகக் கூர்மையாக அவதானிக்கப்பட்டன. FAQ என்ற படிக்கு குறுவினாக்கள் வாயிலாகவும் அதற்குப் பகிரப்படும் விடைகளாகவும் இந்த விவாதத்தின் முக்யமான அம்சங்களை முன்னிறுத்துவது ஒரு தெளிவைக் கொடுக்குமாதலால் இந்த வ்யாசத்தின் அடுத்த பகுதி FAQ நோக்கிச் செல்கிறது.

தனிப்பட்ட அன்பர்கள் ஆங்க்லத்தில் பகிர்ந்த தனிப்பட்ட கருத்துக்களைத் தொகுக்க விழைவது எனது முயற்சி. என்னுடைய தனிப்பட்ட விளக்கங்களை ஆங்காங்கு பகிர்ந்திருக்கிறேன். தனிப்பட்ட நபர்களது கருத்துக்களை மொழியாக்கம் செய்கையில் அவர்களது கருத்துக்கள் ஒருக்கால் சிதைந்து அது வேறுவிதமாகப் பகிரப்பட்டால் அது என்னுடைய குறைபாடாக ஆகுமேயன்றி மூலக்கருத்தைப் பகிர்ந்த தனிப்பட்ட நபர்களது குறைபாடாக அவற்றைக் கருத வேண்டாம் என்று விக்ஞாபித்து மேற்கொண்டு தொடர்கிறேன்.

படங்களுடன் கூடிய ராமாயண ஓலைச்சுவடிகள் (ஒரிஸ்ஸா)
படங்களுடன் கூடிய ராமாயண ஓலைச்சுவடிகள் (ஒரிஸ்ஸா)

அப்பகுதிக்குச் செல்லுமுன்னர் பதினைந்து வருஷ காலத்திற்கும் மேற்பட்டு ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் வெவ்வேறு பாடாந்தரங்களை ஆராய்ந்த பதிப்பாசிரியர் குழுவினர் எட்டிய முடிபுகள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வு என்ற வ்யாசத் தொடரின் மூன்றாம் பாகத்தில் பகிரப்பட்டிருந்தது. அவற்றில் முக்யமான முடிபுகளை ஒரு மீள்பார்வை செய்து மேற்கொண்டு செல்லுவோம் :-

பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். உத்தர மற்றும் தக்ஷிண (Northern, Southern). இந்த இரண்டு பாடாந்தரங்களும் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறு பட்டாலும் தங்களிடையே பொதுவிலான ராமாயண கதையை பாதுகாத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது. இந்த பொதுமையான குணாதிசயம் தான் மூலராமாயணம் (Ur-Ramayana) என்ற நூல் இந்த பாடாந்தரங்களின் ஆதாரமாக இருக்கவேண்டும் என்ற முக்யமானதொரு முடிபை எட்ட ஆய்வாளர்களுக்கு ஹேதுவாக இருந்தது என்றால் மிகையாகாது.

வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பாடாந்தரங்களிலும் பல விஷயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆயினும் தெற்குப் பாடாந்தரம் மூலராமாயணம் என்று கருதப்படும் நூலினை அதனுடைய மூல மற்றும் தொன்மையான வடிவில் அப்படியே பாதுகாத்து வைத்துள்ளது என்ற டாக்டர் ஜேக்கபி அவர்களின் கருத்தை பதிப்பாசிரியர் குழுவினர் வழிமொழிகின்றனர்.

தக்ஷிண பாடாந்தரங்கள் முறையே தெலுகு, க்ரந்தம் மற்றும் மலயாள அக்ஷரங்களில் பாதுகாக்கப்பட்டிருந்தன என்பதும் மூன்று வெவ்வேறு வரிவடிவங்களில் பாதுகாக்கப்பட்டிருப்பினும் மூன்றும் கிட்டத்த்ட்ட ஒரே வடிவத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் தெற்கத்திய பாடாந்தரத்தின் சிறப்பு. ஆகவே தான் டாக்டர் ஜேக்கபி அவர்களும் க்ரிடிகல் எடிஷனின் பதிப்பாசிரியர் குழுவினரும் தெற்கத்திய பாடாந்தரமானது மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் மூல வடிவினை அப்படியே பாதுகாத்து வந்துள்ளது என்ற முடிபினை எட்ட ஹேதுவாக இருந்திருக்கலாம் எனத்தெரிகிறது.

அறுதியாக தக்ஷிண பாடாந்தரமே மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் வடிவத்தை அப்படியே பாதுகாத்துள்ளது என்பதாலும் மாறுதல்களுக்கு உட்படாததாலும் பஹு சம்மதமான (பலராலும் ஏற்கப்படும்) ப்ரதி (Vulgate) எனக்கொள்ள வேண்டும் எனவும் ஒருமனதாகப் பதிப்பாசிரியர் குழுவினர் கருதுகின்றனர்.

அதே சமயம் உத்தர பாடாந்தரம் குறைந்த நம்பகத் தன்மையுடையது என்று கருதலாகாது என்ற முக்யமான கருத்தையும் தெரிவிக்கின்றனர். உத்தர பாடாந்தரங்களில் பெருமளவு மாறுதல்கள் மொழிசார்ந்தவையே அல்லாது வடிவு அல்லது உள்ளடக்கம் சார்ந்தவை அன்று என்றும் பகிரப்பட்ட கருத்து நோக்கத் தக்கது.

(தொடரும்)

3 Replies to “வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3”

  1. 300 ராமாயணங்கள் – ராமகதையைப் பற்றிய கொண்டாட்டம்

    க்ருஷ்ணகுமாரின் சமீபத்திய கட்டுரைத் தொடரின் இல்லை இல்லை வ்யாசத் தொடரின் நடையால் நொந்து போனவர்களில் நானும் ஒருவன். இரண்டாம் பாகத்தைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன் – ‘ஸ்ரீ ராமானுஜன் அவர்களின் வ்யாசம்’ என்ற நாலு வார்த்தைகளிலேயே சோர்வு ஏற்பட்டு மேலே படிப்பதை நிறுத்திவிட்டேன். சேக்சுபியர் என்றும் மகாவிட்டுணு என்றும் எழுதும் தனித்தமிழ் கிறுக்கர்களின் கட்டுரைகளைப் படிக்க முயலும்போது ஏற்படும் அயர்வுக்கு சமமான சோர்வு அது.

    பல மாதமாக உழைத்து இந்தக் கட்டுரையை எழுதி இருப்பதாகவும் 300 ராமாயணங்கள் கட்டுரையைப் படிக்காமலே நான் அட்ச்சுவிட்டிருக்கிறேன் என்றும் என் போன்ற போலிகள் சகட்டுமேனிக்கு கதைத்திருப்பதை வெளிப்படுத்தப் போகிறேன் என்று க்ருஷ்ணகுமார் ஒரு பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். அடடா நாம் எழுதியதைப் பற்றி பல மாதமாக – குறைந்த பட்சம் சில நிமிஷங்களாவது – ஒருவர் யோசித்திருக்கிறார் என்று தெரிந்து நான் பூரிப்படைந்தேன். பல மாதமாக உழைத்து எழுதி இருக்கிறாரே, நாம்தான் கட்டுரையை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோமோ என்று மீண்டும் ஒரு முறை 300 ராமாயணங்கள் கட்டுரையையும் படித்துப் பார்த்தேன். இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்றும் இந்தத் தொடரையும் இவரது பழைய ராமாயணம் – பறவைப் பார்வை தொகுப்பையும் படித்துப் பார்த்தேன்.

    ராமகதையைக் கொண்டாடும் ஒரு கட்டுரையை இத்தனை மடத்தனமாக ஒருவர் புரிந்து கொண்டார் என்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. அரசியல் ஹிந்துத்துவர்கள் அரசியல் லாபங்களுக்காக இப்படி ஒரு நிலையை எடுப்பது கேனத்தனம்தான். அவர்களுக்கு ஓட்டு அரசியலுக்காக ஹிந்துக்களை ஒருமைப்படுத்த வேண்டும் – அதற்கு ஒரு தலைவன், ஒரு புத்தகம், குறைந்த பட்சம் ur-texts இருந்தால்தான் வசதி. பொதுவாக அரசியல் கேனத்தனங்கள் எனக்கு வியப்பளிப்பதில்லை. ஆனால் தமிழ் ஹிந்து தளத்திற்கு இலக்கியம் – குறைந்த பட்சம் ஆன்மீகம் பற்றிய நல்ல புரிதல் உண்டு என்று நினைத்திருந்தேன், அது தவறாகிவிட்டதுதான் வியப்பளிக்கிறது.

    300 ராமாயணங்கள் கட்டுரையைப் படிக்கும் எவருக்கும் அது ராமனையும், ராமகதையையும் ராமாயணத்தையும் அதன் அத்தனை வடிவங்களிலும் கொண்டாடும் ஒரு கட்டுரை என்று புரியாமலிருக்க வாய்ப்பில்லை. அதுவும் கம்பனில் என்னை விட பல மடங்கு ஆழ்ந்திருக்கும் ஜடாயுவுக்கு இது புரியவில்லை என்று என்னால் நம்பவே முடியவில்லை.

    க்ருஷ்ணகுமார் தன் பறவைப்பார்வை தொடரில் மேற்கோள் காட்டும் அறிஞர்கள் சொல்கிறார்கள் –

    // முதன் முதலாக ராமாயண காவ்யத்தின் பல்வேறு பாடாந்தரங்களை (Recensions) ஆய்வுக்குட்படுத்திய ஜேக்கபி அவர்கள் கணிசமான அளவு அவற்றில் உள்ள வேறுபாடுகளை அவதானிக்கிறார். ஒரு பாடாந்தரத்தில் பரிசீலனை செய்யப்பட்ட செய்யுள்கள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மற்றொரு பாடாந்தரத்தில் வேறுபடுவது அவரால் ஆய்வில் கண்டறியப்பட்டது. //

    // டாக்டர் ஜே.எல்.ப்ராகிங்க்டன் (Dr.J.L.Brockington) அவர்கள். ராமாயண காவ்யம் ஐந்து நிலைகளில் விரிவடைந்திருக்க வேண்டும் என இந்த ஆய்வாளர் அபிப்ராயப்படுகிறார்.
    முதல் நிலையில் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயண காவ்யத்தில் இன்றைக்கு புழக்கத்தில் உள்ள ராமாயணத்தில் காணப்படும் 2 – 6 காண்டங்களில் காணப்படும் ச்லோகங்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இது இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் ராமாயணத்தின் கிட்டத்தட்ட 37.10 சதமானமாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவிக்கிறார்.//

    பாடாந்தரங்களுக்குள் 33 சதவிகிதம் வேறுபாடு. 37 சதவிகிதம்தான் வால்மீகி எழுதியது. ஆனால் சில பல ஆண்டுகளுக்கு முன் – நூறாண்டு கூட இருக்காது – அறிஞர்களால் தொகுக்கப்பட்ட பிரதி ur-text!

    வால்மீகி ஆதிகவி என்பதற்கும் நூறாண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட பிரதி மூலகாவியம் என்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை புரிந்து கொள்ளாதன் விளைவு இது. ஆதிகாவியத்துக்கும் மூலகாவியத்துக்கும் இருக்கும் வித்தியாசம் சின்னதுதான் – ஆனால் முக்கியமானது.

    ராமானுஜனே சொல்வது போல இந்தியர்கள் – ஜைனர்கள் உட்பட – ராமாயணத்தை முதல் முறை படிப்பதே இல்லை. நம் மனதில் இருக்கும் ராமகதையின் அடிப்படை வடிவம் – நம்முடைய தனிப்பட்ட ur-text – அனேகமாக வால்மீகியை ஒட்டித்தான் இருக்கிறது. நம்முடைய தாய்மொழியால் சில பல வித்தியாசங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக தமிழர்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட ur-text-இல் உத்தர காண்டம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை அவ்வளவு முக்கியமான வேறுபாடுகள் இல்லை. ராமானுஜனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அவை ‘indexical’ வேறுபாடுகள்தான்.

    நாம் விரும்பி கம்பனைப் படிப்பது காவியச்சுவைக்காக மட்டுமல்ல; எங்கெல்லாம் கம்பன் தான் மூலகவி என்று ஏற்றுக் கொண்ட வால்மீகியிடமிருந்து வேறுபடுகிறான் என்பதையும் தெரிந்து கொள்ளவும்தான்; புதிதாக பௌமாசார்யாவையோ ராமகியனையோ படிக்கும்போது இது நம் மனதில் இருக்கும் ur-text-இடம் இருந்து எப்படி எப்படி வேறுபடுகிறது என்று நம் அடிமனதில் ஒரு எண்ண ஓட்டம் இருப்பது இயல்புதான்.

    அவ்வளவு ஏன், நாம் வால்மீகியை – அனேகமாக ஆங்கிலத்தில் – படிப்பது ராமாயணத்தை அறிந்து கொள்ள அல்ல; ஆதிகாவியம் என்று அறிஞர்கள் சொல்வது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளத்தான். அதைப் படிக்கும்போது கூட நம் மனதில் அது நம்முடைய தனிப்பட்ட ur-text-இலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று ஒரு எண்ணம் ஓடத்தான் செய்யும். அதைத்தான் ராமானுஜன் சொல்கிறார் – மூலகாவியம் என்று ஒன்று இல்லை. நம் மனதில் இருப்பது பல பாடாந்தரங்கள் அடுக்குகளாகப் படிந்த ஒரு கதை.

    அனேக இந்தியர்களுக்கு ராமாயணத்துக்கு ur-text இல்லாமல் இருக்கலாம், ஆனால் ராமகதைக்கு ஒரு அடிப்படை வடிவம் இருக்கிறது. அந்த ராமகதை அனேகமாக வால்மீகி எழுதிய கதையை ஒட்டி இருக்கிறது. ஆனால் இந்தப் பொதுவான அடிப்படை வடிவம் என்பது தாய்லாந்துக்காரர்களுக்கு பொருந்தவே பொருந்தாது. (அனேக ஜைனர்கள் பௌமாசார்யாவை அல்ல, ஹிந்து ராமாயணத்தைத்தான் வைத்துத்தான் தங்கள் அடிப்படை வடிவத்தை உருவமைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.) ராமகியனுக்கும் ராமாயணத்துக்கும் உள்ள வித்தியாசம் நோவாவின் பெருவெள்ளத்துக்கும் மச்ச அவதாரத்தின் பெருவெள்ளத்துக்கும் உள்ள வித்தியாசத்துடன் ஒப்பிடத் தக்கது. இரண்டுக்கும் அடிப்ப்டையாக இருப்பது ஒரே மாதிரியான சம்பவங்கள்தான். ஒரு யூதக் குடும்பத்தவரிடம் மச்ச அவதாரத் தொன்மத்தையோ, ட்யூகாலியன் தொன்மத்தையோ, உட்னாபிஷ்டிம் தொன்மத்தையோ பற்றி சொன்னால் அவரால் இந்தக் கதைகளோடு பைபிள் தொன்மங்களை பொருத்திப் பார்க்க முடியும். ஆனால் அந்த யூதருடைய பெருவெள்ளத்தின் அடிப்படைக் கதை, ur-text வேறல்லவா?

    ராமானுஜனை விளக்கும் அளவுக்கு எனக்கு மொழித் திறமை இல்லை. ஆனால் படித்துப் பாருங்கள்! முடிந்தால் க்ருஷ்ணகுமாரின் தொடரைப் படிப்பதற்கு முன்னாலேயே படித்துப் பாருங்கள், படிக்காமல் பின்னூட்டம் எழுதாதீர்கள். ராமானுஜன் ராமாயணத்தை, அதன் எண்ணற்ற வடிவங்களை எப்படி கொண்டாடுகிறார் என்று புரியும். கம்பனின் அகல்யாவையும் வால்மீகியின் அகல்யாவையும் அவர் ஒப்பிடும் இடம் ஒன்று போதும்.

    தமிழ் ஹிந்து தளத்தின் பொறுப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். வெறும் அரசியல் நிலைக்காக இலக்கியத்தையும் ராமாயணத்தையும் சிறுமைப்படுத்தாதீர்கள்.

  2. அன்பின் ஆர் வி

    என்னுடைய வ்யாசத்தைப் படிக்காமலேயே பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

    நாலாவது பாகத்தையும் வாசியுங்கள். பொறுமையாக.

    ராமானுஜன் வ்யாசத்தை என்னுடைய வ்யாசத்தொடர் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்புகவில்லை என்று அறியவும்.

    ராமானுஜன் வ்யாசத்தின் எந்தெந்த அம்சங்களை நான் விதந்தோதியிருக்கிறேன் எந்தெந்த அம்சங்களை மறுதலித்திருக்கிறேன் என்பதனை முழுமையாக அவதானித்து கருத்துப் பகிரல் ச்லாக்யமானது.

    நான் உங்களுடைய கருத்துக்களுடன் மாறுபடாத விஷயங்களில் மாறுபட்டதாகக் கருத்துப் பகிர தேவையில்லை.

    முதல் பாகத்தில் ராமானுஜன் வ்யாசத்தின் முக்யமான அம்சங்களை பட்டியலிட்டுள்ளேன்.

    தங்களுடைய விபரமான கருத்துக்களுக்கு நன்றி.

    மீண்டும்…………… ராமானுஜன் வ்யாசத்தை நானோ அல்லது அதை எதிர்க்கும் வேறு அன்பர்களோ எதர்க்காக (மடத்தனமாக ? 🙂 ) எதிர்க்க விழைகிறார்கள் என்ற விஷயத்தை நீங்கள் தொடக்கூட இல்லை என்பதனை மட்டிலும் இப்போதைக்கு தெளிவு படுத்துகிறேன். நீங்களாக கால்பனிகமாக ஹிந்துத்வா……. மடத்தனம்……… ப்ளா ப்ளா……….. என பொங்கியிருக்கிறீர்கள். சில ஆக்ஷேபங்கள் கால்பனிகமானவை 🙂 ……………. பொலிக. பொலிக.

    ராமானுஜன் வ்யாசத்தை முழுமையாக நீங்கள் உள்வாங்கவில்லை என்று நிச்சயமாகச் சொல்லுவேன்.

    இப்போது கால அவகாசம் இல்லை. இன்று ராத்ரி அல்லது நாளை ஒரு சம் அப் செய்து விடுகிறேன். இதுவரைக்கும் பகிர்ந்த விஷயங்களை.

  3. க்ருஷ்ணகுமார், உங்கள் ஒரு கட்டுரையை இல்லை இல்லை வ்யாசத்தைப் படிப்பதற்குள்ளாகவே உயிர் இல்லை இல்லை பிராணன் இல்லை இல்லை ப்ராணன் போகிறது. இதில் இன்னொன்றையும் படியுங்கள் என்கிறீர்கள். இன்னும் எத்தனை படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? ராமானுஜன் ராமாயணத்தைக் கொண்டாடுகிறார் என்பதே உங்களுக்கு புரியவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக – ஹஸ்தாமலகமாக – தெரிகிறதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *