தமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டுவரும் சில நண்பர்களுக்கு எனது பரிந்துரை (நூலகத்தில் போய் புத்தகம் படிப்பதெல்லாம் ruled out, வாங்கித் தான் வாசிக்க வேண்டும் என்பதால், ‘வாங்கி’ படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதையும் கணக்கில் கொண்டு):
அ) நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் (ஜெயமோகன்) வெளியீடு: கிழக்கு பதிப்பகம். உங்கள் ஒட்டுமொத்த தமிழ் நவீன இலக்கிய வாசிப்புக்கு இந்த நூலை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம். நூலின் கடைசியில் தமிழின் மிகச்சிறந்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வணிக இலக்கியம் எனப் பட்டியல்கள் உள்ளன. அதிலுள்ளவற்றை நீங்கள் விரும்பிய வரிசை / தேர்வு / விருப்பப் படி வாசிக்க, வாங்க ஆரம்பிக்கலாம்.
ஆ) தமிழின் சிறந்த 100 சிறுகதைகள் (தொகுப்பு: எஸ் ராமகிருஷ்ணன்) – டிஸ்கவரி புக்பேலஸ் வெளியீடு… திரும்பத் திரும்ப வாசித்துத் தீரவேண்டிய, பல எழுத்தாளர்களின் கதைகள் ஒரே புத்தகத்தில் அடங்கிய தொகுப்பு. (ஜெமோ சிறுகதைப் பட்டியலுடன் எஸ்.ரா பட்டியல் சுமார் 60% ஒத்துப் போகிறது)
இ) ஜெமோவின் நாவல் பட்டியல் நீளமானது. எனவே, உங்களுக்கு உதவ, எனது பார்வையில் கட்டாயம் வாசித்தாக வேண்டிய 10 தமிழ் நாவல்கள் (முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு)
1. சிவகாமியின் சபதம் – கல்கி
2. பொய்த்தேவு – க.நா.சு.
3. மோகமுள் – தி.ஜானகிராமன்
4. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
5. பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
6. வாசவேஸ்வரம் – கிருத்திகா
7. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
8. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
10. தூர்வை – சோ.தருமன்
ஈ) கவிதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா தெரியவில்லை. ஆனால், கவிதைகளை வாசித்து ரசிக்க இயலாத இலக்கிய வாசிப்பு முழுமையானதல்ல, சொல்லப் போனால், ரொம்பவே அரைகுறையானது. கொங்குதேர் வாழ்க்கை – பகுதி 1 (மரபிலக்கியம்: சங்ககாலம் முதல் பாரதிக்கு முன்பு வரை) & பகுதி 2 (நவீன கவிதைகள்) – இரண்டையும் வாங்கி விடுங்கள். தமிழ்க் கவிதைகளுக்கான மிகச்சிறந்த anthology இவை இரண்டும். என்னிடம் உள்ளது யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு. தமிழினி மறுபதிப்பாக வெளியிட்டிருக்கலாம். உங்களிடம் ‘பாரதியார் கவிதைகள்’ இருக்குமென்றே எண்ணுகிறேன். இல்லையெனில், தமிழ் வாசகனாக அது ஒரு அவமானம் உடனே வாங்கி விடுங்கள். வாங்கிய புத்தகம் உள்ளே உறங்குகிறது என்றால் எடுத்து வாசியுங்கள்.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
கடைசி இரண்டைத் தவிர மற்றவை பலமுறை வாசித்திருக்கிறேன். நல்ல தேர்வு!
இது ஒரு நல்ல அறிமுகம்-தொடக்கம்.நான் ஜயமோகனின் புத்தகத்தைப் பார்க்கவில்லை. அதன் விமர்சனமாகவோ, இந்தக் கட்டுரையின் விமர்சனமாகவோ இதை எழுதவில்லை. இந்தக் கட்டுரை தூண்டிய சில கருத்துக்களைச் சொல்கிறேன்-அவ்வளவுதான்!
நவீன இலக்கியம் இரண்டு விதத்தில் மலர்ந்தது- மரபையொட்டியும், மரபிலிருந்து விலகியும் அல்லது அதை மறுத்தும்/எதிர்த்தும். புதிய இலக்கியத்தைப் பயிலுமுன் மரபைத் தெரிந்துகொள்வது நல்லது.
தமிழிலக்கியம் தொன்மையானது மட்டுமல்ல- ஆழிபோல மிகப் பரந்து விரிந்தது. இதைப்பற்றி எழுதுபவர்கள் ஏதோ ஒருசில விஷயங்களை மட்டுமே எழுதுகிறார்கள்- கடல் நீரை கோப்பையில் கொடுப்பது போல. நமது இலக்கியம் சங்க நூலிலிருந்து தொடங்குகிறது. சங்கம்-சங்கம் சார்ந்த நூல்கள் ஆகிய 36 ஐப் பற்றிய சுருக்கமான, எளிய விளக்கத்தை கி.வா. ஜ அவர்கள் “தமிழ் நூல் அறிமுகம்” என்ற பெயரில் எழுதியிருக்கிறார். சிலவற்றை விளக்கமாக “சங்க நூற் காட்சிகள்” என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.
பொதுவாக, இலக்கியம் படிப்பவர்களை- பயில்பவர்கள், ரசிப்பவர்கள் எனப் பிரிக்கலாம். பள்ளி- கல்லூரிகளில் பயில்பவர்கள் முதல் வகை. இவர்கள் சர்க்கார் வைத்தபாடத்தைக் ‘கடனே’ என்று கற்பவர்கள். இவர்களுக்காக புத்தகம் எழுதுபவர்களும் ஆட்சியாளரின் விருப்பப்படியே, அவர்களின் கருத்தை ஆதரித்தே எழுதுகிறார்கள். அதனால் இவர்கள் எழுத்தில் ரசனையோ, நடுநிலையோ இருப்பதில்லை. திரித்தல், மறைத்தல், குறைத்தல் ஆகியவை உள்ளதைச் சொல்ல இவர்கள் கையாளும் யுக்திகள். ஆகவே நல்ல தரம்வாய்ந்த எழுத்தை- விளக்கமானாலும், விமர்சனமானாலும்- கல்வித்துரைக்கு வெளியியில்தான் தேடவேண்டும்.
இங்கும் தமிழ் நாடு சோடைபோகவில்லை. கி.வா.ஜ, ரசிகமணி டி.கே.சி, ஜஸ்டிஸ் மகாராஜன், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஆகியவர்களின் எழுத்தில் கருத்தாழம், விஷயச் செறிவு, தெளிந்த ஞானம், உயர் ரசனை ஆகியவற்றை ஒருங்கே கண்டு அனுபவிக்கலாம். க்ருபானந்த வாரியாரை ஏதோ சமயச் சொற்பொழிவாளர் என்றே பலரும் நினக்கின்றனர். இவருடைய உரையில் காணும் இலக்கியப் பரப்பும் ஆழமும் வியப்பூட்டுபவை. இவருடைய சமயக்கருத்தை ஏற்காதவர்கள்கூட இவருடைய தமிழை ரசிக்கலாம்.
தமிழ் நடையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கியவர் கல்கி. அவருடைய சரித்திர நாவல்களை அனைவரும் அறிவர். அவருடைய சமூகக் கதைகளில் சீர்திருத்த மணம் கமழும்- ஆனால் யார் மனத்தையும் நோகவைக்காது. அவர்இசை, கலை, சினிமா பற்றிய விமர்சனங்கள் எழுதினார். அரசியல், சமுதாயம், பொருளாதாரம் பற்றியும் எழுதினார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அவை வியப்பூட்டும். அவருடைய எளிய, இனிய, நளினத் தமிழ் நடையை திரு.வி.க அவர்களே வியந்து போற்றினார் என்றால் , வேறு எதுவும் சொல்ல நமக்கு அருகதை இல்லை!
தமிழில் சீர்திருத்தம், விமர்சனம் என்று போகாமல்,சமூகத்தின் சில அம்சங்களை வைத்து அருமையாக சமூகத் தொடர்கள் எழுதியவர் ‘தேவன்’. இவர் தன்னை முன்வைக்காமல் தன் கலையில் கரைந்துவிட்டவர்.எழுத்தே பணி என்று இருந்தவர். அதனால் தானோ, அல்லது கல்கியின் சமகாலத்தவராக இருந்த குற்றம் அல்லது தவறினாலோ இவர் பலருக்கு அறிமுகமாகவில்லை, இவருடைய படைப்புக்களும் படிக்கவேண்டியவை.
கல்கி, தேவன் ஆகிய இருவரும் சர்லஸ் டிக்கனஸ், தாமஸ் ஹார்டி என்ற ஆங்கில இலக்கியக் கர்த்தாக்களுக்கு நிகராக வைத்து போற்றப்படவேண்டியவர்கள். அமரத்தன்மை பெற்றவர்கள்.
கவிதை என்று வந்தால், பாரதியாருக்குப்பின், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையைச் சொல்லவேண்டும். கவிமணியைச் சொல்லவேண்டும். பாரதியார் 1921லேயே மறைந்தார். அதனால் அவர் காந்திய யுகத்தைக் காணவில்லை, அந்த யுகத்தில் வாழ்ந்து, அதைப் பாடியவர் நாமக்கல் கவிஞர். இவர்கள் தேசீயவாதிகளானதால் இவர்கள் படைப்புக்கள் பரவவிடவில்லை.
ஆங்கில இலக்கிய உலகில் கவிதைகளை விளக்கி வரும் நூல்கள் , இலக்கிய மாணவர்களுக்கென்றே இல்லாமல், பொதுவாக அனைவரும் வாசிக்கும் வகையில் இருக்கின்றன, விஞ்ஞானம் பற்றிய நூல்கள்/கட்டுரைகளும் அவ்வாறுதான்.
தமிழில் அப்படி இல்லை. அறிவியல் விஷயங்கள் பற்றி வரும் கட்டுரைகளும் நூல்களும் விஷயத்தைக் கடுமையான நடையில் விவரிக்க முற்படுகின்றன. இதற்கு நேர்மாறாக இருந்தவர் சுஜாதா. அறிவியல், இலக்கியம் (புறநானூறு) சமய இலக்கியம் ( ஆழ்வார்கள் அறிமுகம், பாசுரங்கள்) என்று எதிலும் எளிமையாகவும் புதுமையாகவும் விளக்கியவர். கல்கி, தேவன் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர்.
வாசிக்க எவ்வளவோ இருக்க, எங்கு தொடங்குவது? எதைப் படிப்பது, விடுவது? நாலடியார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:
கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; – தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகிற் றெரிந்து.
ஜடாயு, அருமையான கட்டுரை, வாழ்த்துக்கள்.
உங்கள் டாப் டென்னோடு எனக்கு முழு இசைவு இல்லை என்பதையும் பதிவு செய்கிறேன். சிவகாமியின் சபதமா? என்ன சார்! தூர்வையை நான் படித்ததில்லை, இருந்தாலும் சோ. தர்மன் டாப் டென் லிஸ்டில் வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
ஆர்.வி, நன்றி.
// சிவகாமியின் சபதமா? என்ன சார்! //
// சோ. தர்மன் டாப் டென் லிஸ்டில் வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. //
எனது பட்டியலின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் – முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு என்று.
சிவகாமியின் சபதம்: தமிழின் “சரித்திர நாவல்” என்பதற்காக. அது கல்கி நாவல் என்றான பிறகு, பொன்னியின் செல்வனை விட, இது கச்சிதமான நாவல் என்பதால் சி.சபதம்.
தூர்வை – தலித் இலக்கியம் (அப்படி ஒன்று தனியாக இல்லை என்பீர்கள், அது சரிதான், தலித் வாழ்க்கையைக் கூறூம் ஒரு படைப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்) என்பதற்காக, பூமணியின் நாவல்களை விட தர்மனின் இந்த நாவல் தலித்வாழ்க்கையை அதன் முழுமையுடன் பதிவு செய்கிறது என்று நான் கருதியதால்.
சிவகாமியின் சபதத்தை விட பொன்னியின் செல்வன் தான் மாஸ்டர் பீஸ். கல்கியின் சிவகாமியின் சபதத்தினை அகிலனின் வேங்கையின் மைந்தனுடன் ஒப்பிடலாம்.
பொன்னியின் செல்வன் தமிழ் எழுத்துலகில் ஒரு பெரிய புரட்சியை செய்த சரித்திரக் கதை.
நல்ல முயற்சி. முனைவர் மு .வ. மற்றும் பாரதிதாசன் ஆகியோர் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டும் .
https://siliconshelf.wordpress.com/2016/06/18/ஜடாயுவின்-பரிந்துரைகள்/