விழா அறை காதை (மணிமேகலை – 2)

மணிமேகலை காப்பியத்திற்கு

சத்தியப்பிரியன் எழுதும்

இருபத்தியோராம் நூற்றாண்டின் உரை

<< முந்தைய பகுதி

அத்தியாயம்-2

 விழா அறை காதை

தேவர்களின் தலைவனாகக் கருதப்படுபவன் இந்திரன். நூறு வேள்விகளைப்புரிந்து தனது தலைமைப் பதவிக்குப் பங்கம் நேராமல் பார்த்துக்கொள்பவன்.  இவன் பல புராணங்களின்மூலம் அறியப்பட்டாலும் இவனைப்பற்றிய முழுமையான உருவம் இன்னும் அறியப்படாமலேயே உள்ளது. தேவர்கள் என்பவர் யார், அசுரர்கள் என்பவர் உண்மையில் தேவர்களை எதிர்த்தவர்கள்தானா போன்ற கேள்விகளுக்கு யூகங்களின் அடிப்படையில்தான் விடைகிடைக்கின்றதே தவிர அறுதியான விடைகிடைக்கவில்லை. இதனை மேலும் சிக்கலாக்கும்விதமாக தங்களது கோட்பாடுகளை உட்புகுத்த, இந்திரனை ஒரு படிமமாக்கிப் பலபுனைவுகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இணைக்கப்பட்டு இந்திரனைப்பற்றி அறியும் செயலை மேலும் சிக்கலாக்குகிறது. எனவே நாமும் இந்திரன் தேவர்கள் என்று அறியப்பட்டவர்களின் கூட்டத்திற்குத் தலைவன் என்ற தகவலுடன் மணிமேகலையைத் தொடர்வோம்.

சோழமண்டலம் இந்திரனுக்கு விழா எடுக்க காவிரிபூம்பட்டினத்தில் கூடுகிறது. இந்த இந்திரவிழாவானது சோழர்குல மரபில் தோன்றிய செம்பியனின் காலத்தில்,  நெடுமலை ஒன்றின்மீது தவம் இருக்கும் அருந்தவமுனி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எடுக்கப்பட்ட விழாவாகும்.  விழா நடைபெறும் இருபத்தெட்டு நாட்களிலும் இந்திரன் அந்த நகரின்கண்வந்து உறைவான் என்பது மக்களின் நம்பிக்கை.

இந்திரவிழாவிற்கான ஆயத்தங்கள் மும்முரமாகத் தொடங்கின. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு நிலைகளையும் நன்கு வகுத்துக்கூறும் அறிஞர்களும், பல்வேறு சமயப்பெருந்தகைகளும், கோள்களின் நிலைகொண்டு கணக்குகள்மூலம் வருவது உரைக்கும் சோதிட வல்லுனர்களும், கண்ணுக்குத் தெரியும்வண்ணம் அந்தப் புகார்நகரில்வந்து தங்கிய தேவர்களும், பல்வேறு நாட்டிலிருந்து பலதர மொழிபேசும் மக்களும், அரசரின் ஐந்துவகையான அமைச்சர் குழுவினரும், எட்டுவகையான ஊர்க்காவல் பிரிவினரும் அந்தப் புகார்நகரின்கண் கூடினர்.

ஒரு பெரிய கரியயானை அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்தது. இடையில் அழகிய வேலைப்பாடுகளால் செய்யபட்டிருந்த பெரிய கச்சையை அணிந்திருந்தது.. அதன் பிடரியின்மீது முரசறிவிக்கும் ஊழியன் ஒருவன் பெரிய முரசு ஒன்றை நன்கு ஒலிக்குமாறு முழக்கி, அரசர்கூறிய செய்தியினை ஊர்மக்களுக்கு அறிவித்துவந்தான்.

“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், முன்னொருகாலத்தில் கொடிகள் அசையும் தேர்ப்படையை உடைய சோழர்குல மன்னர் ஒருவரின் துன்பத்தைத் தீர்த்தது, நாளங்காடிப்பூதம் என்னும் பூதம்.  அந்த நாளங்காடிப்பூதம் இந்திராவிழா எடுத்து, அந்த இந்திரனை வணங்காத மக்களைத் தனது கோபத்தால் சிவந்த வாயினில்,  கோரமாக விளங்கும் பற்களினால் துன்பம் விளைவிக்கும். அதேபோல சதுக்கப்பூதம் என்றொரு பூதமும் இந்த நகரில் உள்ளது. அந்தச் சதுக்கப்பூதம் கையிலுள்ள பாசக்கயிற்றினை வீசி இந்தப் பழமைவாய்ந்த புகார்நகரில் பாவம்செய்பவர்களைப் பிடித்து உண்ணும். அந்தச்  சதுக்கப்பூதமும் இந்திரவிழா எடுக்காதவர்களுக்குக் கேடு விளைவிக்கும். இந்தப் பெரிய பூமண்டலத்திலுள்ள அரசர்கள், மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து, இந்த இந்திரவிழாவைச் சிறப்பிக்க வேண்டுமென்று அரசர் உத்தரவிடுகிறார்.

“திருமகள் தானாக வந்திருக்க ஆசைப்படும் இந்தப் பழமையான புகார்நகரம் வாழ்க! வானம் மாதம் மும்மாரி பொய்க்காமல் பெய்திடுக! நமது சோழமன்னரின் செங்கோலானது வானத்துக் கோள்கள் தங்கள் நிலைதிரியாமல் இருப்பதற்குக் காரணமாகுக! இந்திரவிழா எடுப்பது இந்த நாவலந்தீவு எனப்படும் புகார்நகருக்குச் சாந்திசெய்யும் பொருட்டாகும். அவ்வமயம் இந்திரனும், முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கு குழுமியிருப்பர். சோழர்குலத் திலகம் கரிகால் பெருவளத்தான் வடநாட்டினரை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டபோது, இந்த நகரம் எவ்வாறு உற்சாகப் பெருக்குடன் காணப்ப’ட்டதோ அதே உற்சாகத்துடன் விளங்கவேண்டும் என்பது அரசர் ஆணை!

“தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலும், குற்றமற்ற மன்றங்களிலும் பூரண கும்பங்கள், செழித்து வளரும் பாலிகைகள், பாவைவிளக்குகள் இவைகளோடு மேலும்பல மங்கலப்பொருள்களை வரிசைப்படுத்துங்கள். குலைதொங்கும் கமுகமரங்களையும், வாழை-வஞ்சி மரங்களையும், மலர்கள் பூத்துக்குலுங்கும் கொடிகளையும், நன்கு விளைந்த கரும்புகளையும் வீதி எங்கும் நட்டுவையுங்கள். வண்ணச் சீலைகளில் செய்த கொடிகளையும், கம்புகள் ஊன்றி பறக்கவிடப்படும் கொடிகளையும், மதில்களிலும் மாடங்களிலும் தொங்கவிடுங்கள். நெற்றியில் மூன்றாவது கண்ணை உடைய சிவபெருமான் முதலிய தெய்வத்தில் தொடங்கி, இந்த நகரிலுள்ள சதுக்கத்தில் வாழும் தெய்வம்வரை ஒவ்வொரு கடவுளுக்கும் அவரவர் முறைகளுக்கு ஏற்ப வழிபாடுகளை நடத்துங்கள். குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்கள்கீழ் பலரும் அமரக்கூடிய மன்றங்களில் சிறந்த அறநெறிக் கூற்றுகளுக்கு ஏற்பாடு செய்யங்கள். தத்தம் சமய நெறிகளைப் போட்டியிட்டுக்கொண்டு வாதம் செய்யும் சமய வல்லுனர்களின் உரைகளுக்குப் பட்டிமண்டபங்களில் ஏற்பாடு செய்யுங்கள். இருபத்தெட்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தேவர்களும் மானிடர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்து தங்குவதற்கு ஏதுவாக வெண்மணல் குவியல்களையும், மலர்கள் அடர்ந்த  பூஞ்சோலைகளையும், பொலிவுடன்விளங்கும் நீர்த்துறைகளையும் ஏற்படுத்துங்கள். இது அரசர் ஆணை“ என்று முரசறிவிப்போன் அனைவருக்கும் கேட்கும்வண்ணம் உரத்த குரலில் முரசறிவித்தான்.

அவன் பின்னால் மின்னும் வாளினை உடைய வீரர்களும், குதிரைகளும், ஒட்டகம், யானை போன்ற மிருகங்களும் உடன்வந்தன. அந்தப் பெரிய அணிவகுப்பானது வரவிருக்கும் இந்திர விழாவினை மக்களுக்கு அறிவித்தது.

பின்குறிப்பு:

சோழர்களைப்பற்றிய பல தகவல்களை இந்தக் காதை கூறுகிறது. சோழர்கள் சூரிய வம்சத்தினர் — அதாவது இரவிகுலம் என்பதனைக் கூறுகிறது. செம்பியன் என்ற மன்னவனின் பெயர் கூறப்படுகிறது. இவன் தேவர்கள் முப்புரம் எரித்தபோது அவர்களுக்கு உதவியவன் போலும். இவன் காலத்திலிருந்துதான் இந்திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய காதையில் காந்தன் என்ற மன்னன் காவிரிநீரைத் தமிழகத்திற்குக் கொண்டுவர எடுத்த முயசிகளைப்பற்றிப் பார்த்தோம். செம்பியனுக்கும் முன்னால் முசுகுந்தன் என்ற மன்னனைப் பற்றிய குறிப்பு ஒன்றை மணிமேகலை உரையாசிரியர் குறிப்பிடுகிறார். புராணக் கதைகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லாதிருப்பதுபோல இதுபோன்ற தமிழக மன்னர்களின் புகழ்பாடும் பல கதைகளுக்கு ஆதாரங்கள் எதுவும் இருப்பதில்லை.

“……………வான்பதி தன்னுள்

கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்,

விடுத்த பூதம்…….” என்று கூறப்படும் வரிகளுக்கு,“அவுணர்களுடன் நடைபெற்ற போரில், அவுணர்கள் இருளை உண்டாக்கும் கனிகளை முசுகுந்தன்மேல் எய்தவுடன் சூழ்ந்த இருளால் போரிடமுடியாமல் அந்தச் சோழ மன்னன் அவதியுறும் நேரம் சதுக்கப்பூதம் ஒன்று அவன்முன் தோன்றி, இருளகற்றும் மந்திரம் ஒன்றைக் கூறி உதவியது,” என்று அறிஞர்கள் உரை எழுதிய இந்தக் கதை சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

ஊரில் விழா நடைபெறும் நேரம் நகரம் எப்படி விளங்கும் என்னவென்ன கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும் என்ற பட்டியலை இந்தக் காதை தருகிறது.

அறம் பிழைப்போரை பூதங்கள் உறுத்தும் என்ற செய்தியை இந்தக் காலத்தில் சிறுவர்களை அச்சபடுத்த, பெற்றோர், “தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்,“ என்று கூறுவது போலத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *