ஆபுத்திரன் என்று ஒருவன் மதுரையில் இருந்தான். வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அவன் ஒரு பிச்சைப்பாத்திரத்தை ஏந்திச் செல்வான். அதில் விழும் உணவை எடுத்துக்கொண்டு ஒரு மண்டபத்துக்கு வருவான். அங்கே இருக்கின்ற யாவருடனும் அந்த உணவைப் பகிர்ந்து கொள்வான். கடைசியில் மிஞ்சுவதைத் தான் உண்டு, அந்த மண்டபத்திலேயே தங்கிவிடுவான்.
மழைக்காலத்தில் ஒருநாள் இரவு நேரம் கழித்து நெடுந்தூரம் நடந்து களைத்த வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் ஆபுத்திரனிடம் “எங்களுக்குப் பசியாக இருக்கிறது. உணவு கிடைக்குமா?” என்று கேட்டனர். மற்றவர்களின் பசியைப் பார்க்கப் பொறுக்காத ஆபுத்திரனுக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அவனுடைய பிட்சைப் பாத்திரம் அலம்பிக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. என்ன செய்வது?
அவனுடைய துயரத்தைக் கண்ட சிந்தாதேவி (சரஸ்வதி) அவன்முன்னே தோன்றி, அவனிடம் ஒரு அட்சயபாத்திரத்தைக் கொடுத்தாள். “வருந்தாதே, எழுந்திரு. இந்த நாடே மழையில்லாமல் வறட்சி உற்றாலும், இந்தப் பாத்திரம் வறண்டுபோகாது. வாங்குகிறவர்கள் கைதான் வலிக்குமே அல்லாது தான் எதுவுமில்லாமல் போகாது” என்று அப்பாத்திரத்தின் மகிமையைக் கூறி அவனிடம் கொடுத்தாள்.
பிச்சையெடுத்தே பிறர் பசி நீக்கிய ஆபுத்திரனுக்கு அட்சயபாத்திரம் கிடைத்தால் கேட்கவேண்டுமா? அவ்வளவுதான் சுற்றிலும் இருந்த பசியுற்ற மனிதர்கள் மட்டுமல்லாது பிராணிகள் பறவைகளும் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டன. இவ்வாறு இவன் அளவற்ற தருமம் செய்து வந்தான்.
பாண்டுகம்பளம் என்று ஒரு சலவைக்கல் சிம்மாசனம் இந்திரனிடத்தில் இருந்தது. உலகத்தில் நல்லவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டாலோ, யாரேனும் மிகுந்த புண்ணியம் செய்தாலோ பாண்டுகம்பளம் நடுங்கும். அதிலிருந்து இந்திரன் விஷயத்தை அறிந்துகொள்வான். ஆபுத்திரன் செய்த பசிதீர்த்தலாகிய அறச்செயலின் மகிமையை இந்திரனுக்கு அறிவிக்கும் பொருட்டு பாண்டுகம்பளம் ஒருநாள் நடுங்கியது. விவரமறிந்த இந்திரன் கூன்விழுந்து தடியூன்றிய ஒரு முதியவன் வேடத்தில் ஆபுத்திரன் இருக்கும் இடத்துக்கு வந்தான். “நீ மிகுந்த நல்ல காரியம் செய்துவருகிறாய். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் வேறு யாருமல்ல, தேவலோகத்து அரசனான இந்திரன். உன் தானத்துக்கான பலனைத் தர நான் வந்திருக்கிறேன். என்ன வேண்டுமோ கேள்” என்றான் இந்திரன் ஆபுத்திரனிடம்.
ஆபுத்திரன் விழுந்து விழுந்து சிரித்தான். பார்ப்பதற்குக் கொஞ்சம் அசட்டுத் தனமாகவே இருந்ததாம். அவ்வளவு தூரம் விலா எலும்புகள் முறியும்படி சிரித்தானாம்.
“இந்திரன் வந்தேன். யாது நின் கருத்து?
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க” என
வெள்ளை மகன் போல் விலாவிற நக்கு, ஈங்கு
“எள்ளினன் போம்” என்று எடுத்துரை செய்வோன்
(மணிமேகலை: பாத்திரமரபு கூறிய காதை: 34-37)
[என – என்று சொல்ல; வெள்ளை மகன் – அசட்டுத் தனமாய்ப் பேசுகிறவன்; விலாவிற – விலாவெலும்பு முறிய; நக்கு – சிரித்து; எள்ளினன் போம் – இகழ்ந்தேன், போய்விடு]
அப்படிச் சிரித்ததோடு நிற்காமல், “அய்யா தேவேந்திரனே! எனக்கு நீ உணவு கொடுப்பாயா? விதவிதமாய் ஆடைகள் கொடுக்கப் போகிறாயா? இல்லை, அழகான இளம்பெண்களைத் தரப்போகிறாயா? அல்லது நான் இப்படி அனாதையாய் இந்த மண்டபத்தில் இருக்கிறேனே என்பதற்காக என்னை வைத்துப் பாதுகாப்பவர்களைத் தரப் போகிறாயா?” என்று அவனை இகழும்படியாகக் கூறினான். ‘ஈத்துவக்கும் இன்பம்’ அறிந்து அதனுள்ளேயே முழுகியிருக்கும் ஆபுத்திரனுக்கு உணவு, ஆடைகள், பெண்கள் முதலான எதுவுமே உயர்வாகத் தோன்றவில்லை.
ஆபுத்திரனின் இகழ்ச்சி இந்திரனுக்குப் புரிந்து போயிற்று. மிகுந்த கோபம் வந்துவிட்டது. உடனே அவன் பன்னிரண்டு ஆண்டுகளாக மழையில்லாததால் பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் பாண்டிய நாட்டில் ஏராளமாக மழைபெய்து வளம்பொங்கச் செய்துவிட்டான். (சிலப்பதிகாரம், மணிமேகலை, பாகவதம் உட்படப் பழைய நூல்கள் எல்லாமே இந்திரனைத்தான் மழைக்கடவுள் என்று கூறும் என்பதை இங்கே நினைவு கூர்வது நல்லது. வருணன் சமுத்திரங்களுக்கான கடவுள்.) அந்த நாட்டில் வறுமை ஒழிந்துவிடவே ஆபுத்திரனிடம் வந்து உணவு பெறுவோர் யாருமில்லாமல் போய்விட்டது. இதையே, ஆபுத்திரன் போல பெரும் தருமவான் இருந்ததனாலே அந்த நாட்டில் வளம்பெருகி வறுமை ஒழிந்து போயிற்று என்றும் சொல்லலாம்.
ஆபுத்திரனுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டதாம். பிச்சையெடுக்கும் போதே பிறரோடு தன் உணவைப் பகுத்து உண்டவன் ஆயிற்றே, அட்சயபாத்திரத்தை வைத்துக்கொண்டு தான்மட்டும் தனியே சாப்பிடுவது எப்படி? இந்த மனவருத்தத்தோடு அவன் தனியே நடந்து வந்துகொண்டிருந்தான். கப்பலில் வந்த சிலர் அவனை வழியில் பார்த்துவிட்டு “சாவக (ஜாவா) நாட்டில் மழையில்லாது போனதினாலே பெரும் பஞ்சம் நிலவுகிறது. அங்கு சென்று துன்புறுகிறவர்களுக்கு உணவளியுங்கள்” என்று வேண்டிக்கொண்டனர். அதைக்கேட்டு ஆபுத்திரன் அங்கே இருந்து கப்பலில் புறப்பட்டான்.
இது மணிமேகலையில் வரும் கதை. மணிமேகலையின் கையிலே பின்னொரு காலத்தில் வந்து சேரும் அட்சயபாத்திரம் ஆபுத்திரனுக்குச் சிந்தாதேவி மதுரையில் கொடுத்ததுதான். அவளுடைய கைக்கு அந்தப் பாத்திரம் எப்படி வந்தது என்பது இப்போது நமக்குத் தேவையானதல்ல. ஆனாலும், வந்தோருக்கு வயிறார உணவு தருவதை இந்துக்கள் மிகவும் உயர்ந்த அறமாகக் கருதினார்கள். அப்படிக்கொடுக்க முடியாமல் போனால் அதை மிக இழிவாகவும் கருதினார்கள். இதைச் சிலப்பதிகாரக் காட்சி ஒன்று மிக அழகாகக் காட்டுகிறது.
மாதவியிடம் தன் கைப்பொருளை எல்லாம் இழந்து வந்துவிட்டான் கோவலன். “வான்பொருள் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத்தரும்” (குன்று போல இருந்த ஏராளமான செல்வத்தை அழித்துவிட்டு நிற்கும் இந்த வறுமை எனக்கு வெட்கம் தருவதாய் உள்ளது – சிலப்பதிகாரம்:கனாத்திறம் உரைத்த காதை: 70-71) என்று சொல்கிறான் கண்ணகியிடம். சிறிதும் தயங்காது கண்ணகி “சிலம்பு இருக்கிறதே, விற்று வணிகம் செய்யலாமே” என்று கூற அவர்கள் மதுரைக்குச் செல்கின்றனர். மதுரையின் புறநகர்ப் பகுதியில் ஆயர்பாடியில் மாதரி என்பவள் அவர்களுக்கு மனையும் பொருள்களும் அளித்து இருக்கச் செய்கிறாள்.
செல்வச் சீமான் மகளாகிய கண்ணகி தன் விரல்கள் சிவக்கும்படியாகச் சமையல் செய்கிறாள். அந்த ஆய்பாடிப் பெண்கள் பெரிய பாகற்காய், வெள்ளரிக்காய், மாதுளம்பிஞ்சு, மாம்பழம், வாழைப்பழம், சம்பா அரிசி மற்றும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைக் கொடுக்கிறார்கள். சமையல் முடிந்தபின் கோவலனின் பாதங்களை ஒரு மண்சட்டியில் வைத்துக் கழுவுகிறாள். வெப்பத்தினாலே நிலமடந்தைக்கு ஏற்பட்ட மயக்கத்தைத் தீர்ப்பவள் போலத் தன் கையாலே நீர் தெளித்துத் தரையைத் துடைக்கிறாள். அதன் மேலே நேர்த்தியாகப் பின்னப்பட்ட தடுக்கு ஒன்றைப் போட்டு, அதன் முன்னே வாழையிலையின் குருத்தையும் விரிக்கிறாள். “இங்கே அமர்ந்து உணவருந்த வாருங்கள் அடிகளே!” என்று மிகுந்த மரியாதையுடன் அவனை உண்ண அழைக்கிறாள் அவள்.
கடிமலர் அங்கையில் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி;
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல்
தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து “ஈங்கு
அமுதம் உண்க அடிகள்! ஈங்கு” என
(சிலப்பதிகாரம்: கொலைக்களக் காதை: 38-43)
கோவலன் உணவு உண்ணுகிறான். அதைப் பார்க்கும் ஆயர்குலப் பெண்களுக்கு முன்னொரு காலத்தில் ஆய்ப்பாடியில் நப்பின்னை தன் கையாலே உணவளிக்க, காயாம்பூ நிறத்தினான கண்ணன் உணவு உண்டது நினைவுக்கு வந்ததாம். அவனும் மனிதன்தானே? இந்த மென்மையான பெண்ணை இத்துன்பத்துக்கு ஆளாக்கிவிட்டோமே என்று அவனுக்கு மிகவும் துன்பமாகிவிடுகிறது.
அவன் சொல்லுகிறான்…
(தொடரும்)
அள்ளக் குறையாத அன்னம்! சுவையாக இருந்தது.
அள்ளி உண்ண ஆசைப் படுகிறோம். தொடர்ந்து பரிமாறுங்கள் அய்யா!
நன்றி
ப.இரா.ஹரன்.