உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21

மணிமேகலையின் அருள்வார்த்தைகளைக் கேட்டு மன்னன் சிறைச்சாலையை இடித்து அந்த இடத்தில் ஒரு பெரிய அறச்சாலையை நிறுவிவிட்டான் என்பதுதான் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. தீயசெயல்கள் மூலம் குற்றவாளிகள் என்று தூற்றப்பட்டவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினை காரணமாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுப் புனர்ஜன்மம் அடைந்ததுபோல ஆனார்கள்.

சிறைச்சாலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் மெய்ப்பொருள் அறிந்தவரான ஆதிபுத்தர் சிலை வீற்றிருக்கும் ஒரு பெரிய கோவில் எழுப்பப்பட்டது. புத்தத் துறவிகள் தங்கி, தங்கள் தவவாழ்வை மேற்கொள்ள பெரிய அறவி ஒன்றும் நிறுவப்பட்டது. வறியவர்களுக்கு உணவளிக்கப் பெரிய சமையல் கூடமும், சமைத்த உணவைப் பரிமாறுவதற்கு ஒரு பெரிய உணவுக்கூடமும் கட்டப்பட்டது. மொத்தக் கட்டிடங்களும் ஒரு பெரியவளாகத்தில் நிறுவப்பட்டுத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விளங்கின. மக்கள் புகார் நகரம் மாற்றங்களைச் சந்தித்துவருவதாகப் பேசிக்கொண்டனர்.

உதயகுமாரன் ஒருநிலையில் இல்லாமல் இங்குமங்கும் நடக்கத் தொடங்கினான். ஒரு சமயம் நிற்பான். சிந்திப்பான். பிறகு வேகமாக நடப்பான். பிறகு பொன் இருக்கையில் அமர்வான். எழுவான். சிந்திப்பான். அவனைச் சுற்றியிருந்த சேவகர்களுக்கு அவன் செயல்முறை ஒன்றும் விளங்கவில்லை.

“என்ன ஆனாலும் சரி, படித்தவர்கள் கேலிசெய்தாலும் சரி, இந்தப் பூமண்டலத்து மன்னரான என் தந்தை தடுத்தாலும் சரி, நான் மணிமேகலையை அறக்கோட்டத்திற்குள் சென்று தேடப்போகிறேன். அவளைப் பார்க்கப்போகிறேன். அவள் கூறும் அருள்மொழிகளைக் கேட்கப்போகிறேன். அவளைப் பாராமல் என்னால் இருக்க இயலாது” என்று புலம்பியபடி மாளிகையைவிட்டு வெளியில் வந்தான். அவனது பொற்றேர் தேரடியில் நின்றுகொண்டிருந்தது. தேரின்மேல் ஏறினான்.

“சாரதி விரைந்து உலக அறவி நோக்கிச் செல்,” என்று ஆணையிட்டான்.

உதயகுமாரன் கிளம்பிச்சென்ற நாள் ஒரு விசேடமான நாள். பனிரெண்டு வருடங்கள் கழித்து விருச்சிக முனிவர் அரிய நாவல்கனியை உண்டு தனது பசியைப் போக்கிக்கொள்ளும் நாள்.

காயசண்டிகையின் கணவனான விஞ்சையன், ‘நாம் காயசண்டிகையைத் தனியாகவிட்டுச் சென்று பனிரெண்டு வருடங்கள் ஆயிற்றே! இந்நேரம் காயசண்டிகையின் கொடிய யானைத்தீ நோய் மணிமேகலை அளித்த உணவினால் மறைந்திருக்க வேண்டுமே! ஏன் அவளை இன்னும் காணவில்லை?‘ என்று தவித்த நாள்.

அத்தகைய நாளில் உதயகுமாரன் உலக அறவியில் நுழைந்தான்.

அங்கே காயசண்டிகையின் வடிவிலிருந்த மணிமேகலையைக் கண்டான்.

“பெண்ணே! நில்!” என்றான்.

மணிமேகலைக்கு ஒருகணம் பதறியது. தனது கைகளிலுள்ள அமுதசுரபியைக்கொண்டு தன்னை இன்னார் என்று அரசகுமாரன் அடையாளம் கண்டுபிடித்துவிட்டால் அவனிடமிருந்து தப்பிப்பது எப்படி என்ற அச்சம் மூண்டது.

“காயசண்டிகை,” என்று வேறொரு ஆண் குரல் கேட்டது.

மணிமேகலை திரும்பினாள்.

“வான்வெளியில் செல்லும் ஆற்றல்கொண்ட வித்யாதர உலகைச் சேர்ந்த விஞ்சையளான காயசண்டிகை! உன் கைகளில் பிச்சை பாத்திரம் ஒன்றை ஏந்தியவண்ணம் தேவையானவர்களின் பசியைப் போக்குகிறாய். உன் கையில் இருப்பதோ ஒரே ஒரு பிச்சை பாத்திரம். ஆனால் நூற்றுக்கணக்கனோர் உன்னிடம்வந்து பசியாறுகின்றனர். எனக்கு இது மிகவும் வியப்பூட்டுகிறது. யானைத்தீ என்ற உன்னுடைய தீராதபசியைப் போக்கும்பொருட்டு வானத்துத் தேவர்கள் உனக்கு இதனைக் கொடுத்துள்ளனரா?” என்று கேட்டான்.

இவன் யார் என்ற குழப்பத்தில் மணிமேகலை அவனைப் பார்த்தாள்.

“காயசண்டிகை! பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீ செய்த பிழையின் காரணமாக முனிவரிடம் சாபம்பெற்று, தீராத யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளான உன்னை இந்தப் புகார் நகருக்குப் போகச்சொல்லி, பொதிகை சாரலில் தனிமையில் தவிக்கவிட்டுச்சென்றது என் தவறுதான். அதற்காகக் காதல்மணாளனான என்னையே அடையாளம் கண்டுகொள்ளாமல் விழித்துப்பார்க்கிறாயே!” என்று கேட்டான்.

ஏதடா இப்படி ஒரு வம்பு என்று மணிமேகலை தடுமாறினாள். ஒருபுறம் தனது உள்ளம் கவர்ந்த மணிமேகலையைத் தேடிவந்த அரசகுமாரன். இன்னொரு புறம் காயசண்டிகைபோல் வேடம்தரித்த மணிமேகலையைப் பின்தொடர்ந்து வந்துள்ள அவளுடைய கணவன்.

நிலைமை விபரீதமாகப் போவதை உணர்ந்த மணிமேகலை, மெல்ல காயசண்டிகையின் கணவனைத் தவிர்த்து அரசிளங்குமரன் அருகில் சென்றாள்.

தொலைவில் உலக அறவியில் பிச்சைபெறுவதற்கு ஒரு மூதாட்டி தள்ளாடியபடி வந்துகொண்டிருந்தாள்.

“இளவரசே! அதோ அந்த வயதான மூதாட்டியைப் பார். ஒருகாலத்தில் கரிய மணல் பரப்பைப்போல இருந்த கூந்தல் இப்போது அலைதள்ளிய நுரையைப்போல வெளுத்திருப்பதைப் பார். ஒருகாலத்தில் பிறைபோன்று வட்டவடிவில் இருந்த நெற்றி சுருக்கங்கள் விழுந்து தொய்ந்துகிடப்பதைப் பார். நாணேற்றிய வில்லினைப்போல வளைந்து காணப்பட்ட புருவங்கள் கருவாடுபோலக் காய்ந்துகிடக்கின்றன. கழுநீர்மலர்கள் போன்ற கண்கள் என்று வருணிக்கப்பட்ட கண்களில் பூளை சேர்ந்துபோயிருக்கிறது. குமிழ்மூக்கு என்று கூறப்பட்டவை சளியுமிழ் மூக்குகளாகிவிட்டன. முத்துக்களை அடுக்கிவைத்தது போன்ற பற்கள் சுரைக்காயின் விதைகளைப்போல உருமாறி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கின்றன. முருக்கமலரைப் போன்ற சிவந்த உதடுகள் என்று புகழப்பட்ட இதழ்கள் புலால் நாற்றம் எடுக்கும் புண்ணின் வாய் என்று தூற்றப்படுகிறது. வள்ளைத் தண்டினைப்போலத் திகழ்ந்த செவிகள் இரண்டும் அந்தத் தண்டு வெயிலில் உணங்கியதுபோலச் சுருங்கிக்கிடக்கிறது. திமிருடன் எழும்பிநின்ற முலைகள் காற்றுப்போன பைகளைப்போல வற்றிக்கிடக்கின்றன. மூங்கில்களைப்போலத் திரண்டிருந்த தோள்கள் காய்ந்த தென்னைமட்டைகளைப்போலத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. நகங்கள் உதிர்ந்து, நரம்பு தளர்ந்து, சுருங்கிய விரல்களைப் பார். வாழைத்தண்டினைப் போன்ற தொடைகள் இரண்டும் தாழைத்தண்டினைப்போல வற்றிவிட்டன. அம்புறாத் துணியில் கணைகள் வெளியில் நீட்டிக்கொண்டிருப்பதைப்போலக் கணுக்கால்களில் வெளியில் தெரியும் நரம்புகளையும் எலும்புகளையும் பாராய்! முதிர்ந்த தென்னையின் தெங்கிலிருக்கும் பருப்பை வெயிலில் உணர்த்தியதைப் போன்ற பாதங்களைப் பார்! இதுதான் மன்னவனே, இந்த ஊன் உடம்பு! இதனைத்தான் மக்கள் புனுகு, சந்தனம் போன்ற வாசனைப்பொருட்களால் பூசி மறைக்கின்றனர். இதனைத்தான் ஆடைகளாலும், மாலைகளாலும் மூடிமறைக்கின்றனர்.” என்று காயசண்டிகையின் வடிவத்தில் இருந்த மணிமேகலை கூறினாள்.

தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.

சந்தேகமும் பொறாமையும் ஒருசேர ஒருவனிடம் தோன்றும்போது ஏற்படும் விளைவுகள் விபரீதமாகப் போய்விடுமல்லவா!

‘அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.

பதுங்கியபடி அந்த இடத்தில் இருந்த செடி, புதர்களின் பின்னால் மறைந்துமறைந்து, புற்றினுள் மறைந்திருக்கும் கொடிய விஷமுடைய பாம்பைப்போல அவர்கள் இருவரின் பின்னால் மறைந்திருந்தான்.

அரசகுமாரனுக்குக் காயசண்டிகை வடிவிலிருந்த மணிமேகலை கூறிய நற்சிந்தனைகளைத் தூண்டும் சொற்கள் எதுவும் செவிகளில் ஏறவில்லை. அவன் விருப்பமும், வேட்கையும், மோகமும், தாகமும் மணிமேகலையை அடையவேண்டும் என்பதிலேயே இருந்தது. வளைக்கரம் குலுங்கும் அழகிய கரங்களை உடைய மணிமேகலைதான் இப்போது காயசண்டிகை உருவத்தில் கையில் பிச்சைப்பாத்திரம் ஏந்தி ஏமாற்றுகிறாள் என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது.

எப்படியும் இவள் ஒரு அயலானோடு அன்றிரவு இரவோடு இரவாக வான்வழியில் தன் சொந்த ஊருக்குச் சென்று வடமாட்டாள் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு ஏற்பட்டது. எப்படியும் நள்ளிரவில் மீண்டும் அங்கு வந்து, மணிமேகலையைக் காணலாம் என்று எண்ணினான். அந்த நினைப்பு வந்ததும் இளவரசன் அவ்விடத்திலிருந்து அகன்றான்.

காஞ்சனனுக்கும் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற சந்தேகம் தோன்றியது. அவர்கள் இருவரையும் மறைந்திருந்துதான் கண்காணிக்க வேண்டும் என்று எண்ணியபடி மீண்டும் இரவில் வருவதற்கு உறுதிபூண்டு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

இது எதுவும் அறியாத மணிமேகலை, அந்த நேரத்தில் உதயகுமாரனிடமிருந்து தப்பியதால் நிம்மதியடைந்து உலக அறவியினுள் புகுந்தாள்.

இரவு வந்தவுடன் உதயகுமாரனும் தனது பள்ளியறையிலிருந்து எழுந்தான்.

யானை வேட்டைக்குத் தனியாகச் செல்லும் கொடிய புலியைப்போலக் கிளம்பினான். பதுங்கிப் பதுங்கி அரண்மனை வாயிலை அடைந்தான். காவலர்களுக்குத் தெரியாமல் வாயிலைக் கடந்து உலக அறவியின் அம்பலத்தை அடைந்தான். கொடிய விஷமுடைய பாம்பு புற்றிற்குள் நுழைவதுபோல உலக அறவியினுள் நுழைந்தான்.

‘அவளைத் தேடி இதோ வந்துவிட்டான்,‘ என்ற சினத்துடன், மறைவான இடத்தில் இருந்த காஞ்சனன் சீறிவரும் பாம்பு படம் எடுத்து நிற்பதைப்போல வெளியில்வந்து நின்றான்.Image result for warrior with raised sword

“உன் கதை முடிந்தது, அரசகுமாரனே! என் மனைவியைப் பின்தொடரும் உன்னைக் கொன்றுவிட்டு வானில் எழுந்து என் உலகம் செல்வேன்” என்று கூறிவிட்டு உதயகுமாரன்மேல் பாய்ந்தான். தனது வாளை உருவி, மாலைகள் அணிந்த அரசிளங்குமரனின் தோள்கள் இரண்டும் துண்டித்துவிழும் வண்ணம் வெட்டிவீழ்த்திவிட்டு உள்ளே மணிமேகலையைத் தேடிச் சென்றான்.

அவன் அம்பலத்தினுள் நுழைந்ததும் கம்பத்தில் இருந்த தெய்வத்திற்குத் தூக்கிவாரிப்போட்டது.

“நில்” என்றது.

காஞ்சனன் நின்றான். கம்பத்தில் இருந்த தெய்வம் அசைவதைக் கண்டான்.

 “உள்ளே போகாதே!” என்று கம்பதெய்வம் தடுத்தது.

“உள்ளே இருப்பது என் மனைவி காயசண்டிகை!” என்று அவன் உறுமினான்.

“இல்லை. அது காயசண்டிகை வடிவில் இருக்கும் மணிமேகலை!”

“அப்படி எனில் என் காயசண்டிகை எங்கே?” என்றான். தனது ஆத்திரம் பெரும் ஊறு விளைவித்துவிட்டதே என்று மருகினான்.

“மணிமேகலையின் கையில் அமுதம் பெற்றதால் யானைத்தீநோய் மறையப்பெற்ற காயசண்டிகை, உன்னுடன் இணைவதற்கு வித்யாதர நகருக்குத் திரும்ப வான்வழி சென்றாள். அவ்வாறு வான் வழியே செல்லும்போது அந்தரி என்ற பெயர்கொண்ட துர்க்கை கடவுள் வீற்றிருக்கும் விந்தியமலை குறுக்கிட்டது.”

“விந்தாகடிகை என்ற விந்திய மலையின் காவல் தெய்வத்தை வலம் வந்து செல்வதுதானே முறை? என் மனைவி குறுக்கே போனாளா?”

“ஆம் அப்பனே. இதனால் கோபமுற்ற விந்தாகடிகை உன் மனைவி காயசண்டிகையின் நிழலைப் பற்றி அவளைத் தன் வயிற்றிற்குள் போட்டுக்கொண்டுவிட்டது. இது தெரியாமல் நீ வீணாக உதயகுமாரனைக் கொன்றுவிட்டாயே? உன் கைகளால் இறக்கவேண்டும் என்பது அவனுடைய ஊழ்வினைப் பயன். மாற்றமுடியுமா? அவனை அறியாமல் கொன்றிருந்தாலும், உன்னுடைய பாவமும் உன்னை நிழல்போல் தொடரும்,” என்றாள்.

மடத்தனம் செய்து விட்டேனே என்று தலையில் அடித்துக்கொண்டு அரற்றிய விஞ்சையன் அங்கிருந்து கிளம்பி வான்வழியே தனது வித்யாதர உலகம் நோக்கிச் சென்றான்..

உலக அறவியில் உதயகுமாரன் யாருமற்ற அனாதையாக மடிந்துகிடந்தான்.

பின்குறிப்பு: நவீன இலக்கியப் போக்குகளில் சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய இலக்கிய உத்தியாகக் கருதப்பட்ட உத்தி மாய யதார்த்தவாதமாகும். ஜெர்மனியில் தோன்றி, தென் அமெரிக்காவில் வளம் பெற்ற இலக்கிய வகை இது. ஆதிக்கசக்திகளின் போக்கை யதார்த்தவாதம்மூலம் கூறமுயன்று தோற்றுப்போன இலக்கியவாதிகளுக்கு வேறொரு வகை தேவைப்பட்டது. அப்படித் தோன்றியமுறையே இந்த மாய யதார்த்தவாதம் என்பார்கள், விவரமறிந்தவர். எந்த ஓர் இலக்கிய வகையும் மேலைநாட்டின் வழியாக இங்கு வந்தால்தான் நாம்கொண்டாடுவோம். மணிமேகலை பெண்ணியத்தின் அவலத்தையும், அரசர்களின் — குறிப்பாகச் சோழமன்னனின் ஆணவத்தையும் காட்ட இந்த மாய யதார்த்தவாதத்தைக் கையில் எடுக்கிறார். சம்பாபதி, தீவதிலகை, கம்ப தெய்வம், ஓவிய தெய்வம், மணிமேகலா தெய்வம் போன்றவை இவர் கையாளும் மாய யதார்த்தவாதத்திற்கு உதவும் படிகளாகும்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *