மணிமேகலை வைதீக மார்க்கத்தினர் வாதம்செய்யும் மன்றத்திற்குள் நுழைந்தாள். நான்கைந்து பிரமாணவாதிகள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தார்கள். மணிமேகலை அருந்தவ முனிவனின் வேடத்தில் சென்றதால் அவளால் எளிதாக அவர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடிந்தது.
“யார் நீ?” என்ற குரல் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
ஒரு வைதீகவாதி தனக்குரிய உடையினை அணிந்து கைகளில் நூல்கட்டுகள் சிலவற்றை ஏந்திக் கொண்டு மணிமேகலையை மிரட்டும் குரலில் கேட்டான்.
“ நான் யார் என்பது இருக்கட்டும். தாங்கள் யார் ?” என்றாள் மணிமேகலை.
“ நான் ஒரு வைதீகவாதி. எங்கள் சமயக் கொள்கையில் ஆழ்ந்த அறிவு உடையவன்”
மணிமேகலை அவரை வணங்கினாள்
“ ஐயா இப்படி ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்’”
“எதற்கு?” என்றார் அந்த வைதீகவாதி.
“தங்கள் வைதீகசமயத்தின் கோட்பாடுகளையும், தத்துவங்களையும் அறிந்துகொள்ள விழைகிறேன். சற்று விளக்கமாகக் கூறுங்கள்”
“நல்லது மாதவரே! வாருங்கள், இப்படி இருக்கைகளில் அமர்ந்து பேசுவோம். தாங்களுக்கு நேரம் செலவிடுவதில் ஆட்சேபணை எதுவும் இல்லையே?” என்றார் .
முனிவனின் வடிவில் இருந்த மணிமேகலை தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
வைதீகவாதி தனது வைதீகசமயக் கோட்பாடுகளை நீண்ட உரையாக நிகழ்த்தினார். அதனை இப்போது இங்குச் சுருக்கமாகப் பார்ப்போம்.
வேத வியாசர், கிருதகோடி, ஜைமினி ஆகிய ரிஷிகள் மூவரும் தத்தம் வகைகளில் அளவைகள் முறையே பத்து, எட்டு, ஆறு வகைப்படும் என்று கூறிச் சென்றுள்ளனர். (வேதவியாசர் வேதத்தை முறை படுத்தியவர். பிரம்ம சூத்திரம் என்ற நூலை எழுதியவர். மீமாம்சை சாத்திரத்திற்கு விளக்கவுரை [பாஷ்யம்] எழுதிய கிருதகோடி ரிஷியைப் போதாயனர் என்றும் கூறுவார்கள். இதன் உரை கிருதகோடி என்று வழங்கப்பட்டமையால் இவர் கிருதகோடிகவி என்று வழங்கபட்டுப் பின்னர்க் கிருதகோடி என்றே அழைக்கப்பட்டார். வேதவியாசரின் மாணவர் ஜைமினி. இவர்தான் மீமாம்சை சாத்திரங்களை இயற்றியவர்.
ஒரு பொருளின் உண்மைத் தன்மையை அறிய மொத்தம் பத்து அளவைகள் நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளன. அந்த அளவைகள் காட்சி (தர்சனம்), கருதல் (அனுமானம்), உவமம், ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், மீட்சியால் உணரும் ஒழிவறிவு, மற்றும் தோன்றி உளதாகும் சம்பவம் என்ற பத்துமே அந்த அளவைகளாகும்.
தெளிவான காட்சி ஐந்து வகைப்படும். கண்ணால் நிறத்தை அடையாளம் காண்பதும், செவியால் ஒலியைக் கேட்பதும், நாசியினால் நாற்றங்களை முகர்வதும், நாவால் சுவையை ருசிப்பதும், உடலால் உணர்தலுமாகிய கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐவகையில் சுகமும் உள்ளது துன்பமும் உள்ளது. உயிரும், இந்திரியமும், மனமும் பழுதில்லாமல் இருந்து, பயிலும் ஐவகை உணர்ச்சிகளுடன் பயிலும்போது பொருளும், இடமும் பழுதில்லாமல் இருந்து, பொருண்மை மட்டுமே கணக்கில்கொள்ளும் சுட்டால் என்பதுவும், ஒன்றை வேறாக எண்ணும் திரிதல் என்பதுவும், சந்தேகமும் தோன்றாமல் சார்ந்துள்ள இடம், பெயர், சாதி [category], குணம் இவற்றால் அறியப்படுவது காட்சி அளவையாகும்.
அடுத்தது கருதல் எனப்படும் அனுமானம். கருத்தளவு என்பது அனுமானத்தில் உள்ள அனுமேயத்தின் குணத்தை அறிந்து கொள்வதாகும். அந்த அனுமானம் பொது, எச்சம், முதல் என்று மூவகைப்படும். பொதுக் கருத்தளவை என்பது காட்டிற்குள் செல்லும்போது தூரத்தில் யானையின் பிளிறலைக் கேட்டுக் காட்டினுள் யானை இருப்பதை அனுமானிப்பது. எச்சம் என்ற கருத்தளவை ஓர் இடத்தில் வெள்ளப்பெருக்கு இருந்தால் அங்கு ஏற்கனவே பெருமழை பெய்திருப்பதை அனுமானிப்பதாகும். முதல் கருத்தளவை என்பது ஓர் இடத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தால் நிச்சயம் அங்கு பெருமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அனுமானிப்பது. மேற்சொன்ன ஏது(காரணம்) முக்காலத்தில் ஒன்றைச் சார்ந்திருக்கும். யானையின் பிளிறலைக் கேட்பது என்ற ஏது யானை இருக்கிறது என்ற நிகழ்காலத்தையும், வெள்ளப்பெருக்கு என்ற ஏதுவினால் மழை பெய்தது என்ற இறந்த காலத்தையும், கருமேகங்களின் சூழல் என்ற ஏதுவினால் மழை வரும் என்ற வருங்காலத்தையும் கொண்டிருப்பதால் இந்த அளவை காலம் சார்ந்தது. காணப்படும் பொருளால் கண்ட பொருளையும், காணப்படும் பொருளையும் அறிவது இந்த அளவையாகும்.
உவமம் என்பது அறியாத ஒன்றை விளக்குவதற்கு அறிந்த ஒன்றைக் காட்டி இது போல இருக்கும் என்று கூறுவது. காட்டுப்பசு எப்படி இருக்கும் என்று அறியாதவனுக்குப் பசுவைக் காட்டி இதுபோல இருக்கும் என்று கூறுவதாகும்.
ஆகம அளவை என்று அறியப்படும் உரை அளவை என்பது, வழிவழியாக முன்னோர்கள் சொல்லி வருவதால் அறியப்படாத ஒன்றை உண்டென்று நம்புவது. உதாரணமாக போக நுகர்தலுக்காக நாம் இறந்தபிறகு சொர்க்கத்திற்குச் செல்வோம் என்பதனைக் காலம் காலமாக நமது முன்னோர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு சுவர்க்கம் இருக்கிறதா என்பதை அறிந்தவர் எவருமில்லை.
அருத்தாபத்தி என்பது, ஒரு பொருள்மூலம் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளை அறிவது. ஆயர்பாடி கங்கையில் இருந்தது என்று கூறினால் அது கங்கை நதிக்குள் இருந்தது என்று பொருளில்லை கங்கை நதிக்கரையில் இருந்தது என்று பொருளாகும்.
இயல்பு அளவையாவது, ஒருவன் யானை மீதமர்ந்து கீழே இருப்பவனிடம் கொடு என்று எதையும் குறிக்காமல் கேட்கும்போது அந்த நேரத்தில் அவன் கேட்டது அங்குசம் என்பதைப் புரிந்துகொண்டு அங்குசத்தைக் கொடுப்பதாகும். [இந்தக் கால கட்டத்தில் சொல்வதென்றால் ஒரு கார் மெக்கானிக் கார் எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட கருவியை எதிர்பார்த்து கிளீனர் பையனிடம் கொடு என்றால் அவனும் என்ன என்று கேட்காமல் கேட்ட கருவியை நீட்டுவது போல.]
ஐதீகம் என்பது உலகில் உள்ளவர்கள் காலம் காலமாக அடுத்தவர் கேட்டுச் சொல்லிவரும் சொல்லின் பொருளாகும். புளியமரத்தில் பேய் இருக்கும் என்று கூறுவது ஐதீகமாகும்.
அபாவ அளவை என்பது ஒரு பொருள் ஓரிடத்தில் இன்மையாகும். அதாவது ஒரு பொருள் ஓரிடத்தில் இருக்கிறது என்று அந்த இடத்தில் முற்றாகத் தேடியும் அது இல்லை என்று அறிந்தபின் அது அங்கு இல்லை என்று தெளிவு பெறுதல் அபாவமாகும். ஆனால் ஒரு பொருளின் இன்மையைக் கொண்டு அந்தப் பொருள் அங்கிருந்தது என்று கூறினால் அது அனுமான அளவையாகி விடும் என்பதால் அபாவ அளவையில் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீட்சி(எதிர்மறை) என்ற அளவை இராம-இராவண யுத்தத்தில் இராமன் வெற்றிபெற்றான் என்றால் உடன் இராவணன் தோற்றான் என்பது பொருளாவாதாகும்
மேற்சொன்னவை பத்து அளவைகளாகும். இந்தப் பத்து அளவைகளுக்கும் ஆகாது என்று விலக்கிவைக்கப்பட்ட குற்றங்கள் எட்டு உள்ளன. பொருன்மையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் சுட்டுணர்வு, ஒன்றை வேறொன்றாக தவறாக என்னும் பிரியக்கோடல் ஐயம் எனப்படும் சந்தேகம், ஆராய்ந்து பாராது பார்க்கும் தேறாதுதெளிதல், கண்டுணராமை, இவற்றோடு பொருந்திய இல்வழக்கும், உணர்ந்ததை உணரும் நினைப்பு என்ற எட்டும் அந்தக் குற்றங்களாகும்.
இனி அந்தந்தக் குற்றங்களை விளக்கித் தெரிந்துகொள்ளலாம். சுட்டுணர்வு என்பதற்கு உள்ள குற்றம் ஓர் உருவத்தை இது மனிதன் என்று சுட்டுவதால் அவனை மனிதன் என்று ஏற்றுக் கொள்வதாகும். [இதனை கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக விளக்கியிருப்பார். மூடனுக்கும் மனிதன் போல முகம் இருக்குதடா என்று கூறுவார். சுட்டுணர்வை மற்றும் ஏற்றுக் கொண்டு ஒரு காமக்கொடூரனை மனிதன் என்றுகொள்ள முடியாதல்லவா?]
திரியக்கோடல் என்பது காணும் பொருள் ஒன்றை இன்னொரு பொருளாக உணர்வது. பளபளவென்று மின்னும் வெள்ளைச் சிப்பியை வெள்ளி என்று எண்ணி மயங்குவதாகும். இதனைக் கயிற்றரவு என்பார்.
பிரமாணக் குற்றங்களில் அடுத்து வருவது ஐயம். கண்ட ஒரு பொருளை இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்று சந்தேகம்கொண்டு ஒரு முடிவுயற்கு வரமுடியாமல் இருப்பதாகும். தூரத்தில் கீழே கிடக்கும் கட்டையை, கட்டையா குழந்தையா என்று குழம்புவது ஐயமாகும்.
தேராது தெளிதல் — இதனை தனியாக விளக்க வேண்டாம். தூரத்தில் தெரியும் மரக்கட்டையை ஆராய்ந்து அறியாமல் இது குழந்தைதான் என்ற முடிவுக்கு வருவதாகும்.
கண்டுனராமை என்ற பிரமாணபாசம் என்பது எதிரில் வருவது கொடிய புலி என்று அறிந்தும் அதனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமலிருப்பதாகும்.
இல்வழக்கு என்பது இல்லாத ஒன்றை கூறினாலும் அது இருப்பதுபோலக் கொள்வதாகும். உதாரணத்திற்கு முயல்கொம்பு ல்லாத ஒன்றாகும். ஆனால் முயல்கொம்பு என்ற சொல் வழக்கத்தில் இருந்தால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது இல்வழக்கு என்பதாகும். [அந்தக்காலத்தில் முயல்கொம்பு என்பது வழக்கத்தில் இருந்திருக்கும். இப்போது கூறுவது என்றால் பாம்புச் செவி என்று கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலை. ஏன் என்றால் பாம்பிற்குச் செவிகள் இல்லை.]
உணர்ந்ததை உணர்தல் என்பது ஏற்கனவே உணர்ந்து அறியப்பட்ட ஒன்றை மேலும் ஒருமுறை உணர்ந்து அறிவதாகும். குளிர்காலத்தில் நெருப்பு மூட்டுவது குளிரைத் தணிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அதனை மீண்டும் உணர்ந்து தெளிவதாகும். இதனை மேலும் சிறப்பாகக் கூறுவதென்றால் தீயைத் தொட்டால் சுடும் என்பது தெரிந்தும் அதனை உணர்ந்து தெரிந்து உணர்ந்துகொள்ள முயற்சிப்பதாகும்.
நினைப்பென்னும் பிராமணபாசம் எத்தகையது என்றால் இவர்கள்தான் உன் பெற்றோர் என்று அடுத்தவர் கூறுவதைக் காரண-காரியம் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்வதாகும். [இந்தக் காலத்தில் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவதற்கு இணையாகும்.]
லோகாயதம், பௌத்தம், சாங்கியம், வைசேஷிகம், மீமாம்சை என்று வகுக்கப்பட்டுள்ள சமயங்களுக்கு முறையே பிருகஸ்பதி, புத்தன், கபிலன், அக்கபாதன், கணாதன்,ஜைமினி முதலியோர் ஆவர். கண் முதலிய ஐம்புலன்களால் அறியப்படும் காட்சி, கருதல், ஆகமம், உவமம்,அருத்தாபத்தி, அபாவம் என்று மேற்சொன்ன சமயப்பெரியோர்கள் அனுசரித்த இந்த அளவைகளே இப்போதுள்ள அளவைகளாகும்
அளவைகள் குறித்து அந்த சமயவாதி கூறியவற்றைக் கேட்டுவிட்டு மணிமேகலை அங்கிருந்து அகன்றாள்.
அப்போது “எங்களுக்கு இறைவன் ஈஸ்வரன் ஆவார்,“ என்று கூறிக் கொண்ட சைவவாதியின் முன்பு முனிவன் வடிவில் இருந்த மணிமேகலை போய் நின்றாள்.
“ஐயா, உமது ஈசன் சிவபெருமானைப்பற்றிக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்,” என்றாள் அவரிடம்.
அவர் அளித்த சைவநெறி விளக்கம்:
ஞாயிறு, சந்திரன் ஆகிய இரண்டு சுடர்கள், ஆத்மா, ஐம்பூதங்களான மண், நீர், தீ, காற்று, வான் ஆகிய எட்டினையும் தனதுக்கு உடலாகவும், அவற்றின் உயிராகத் திகழ்பவன் ஈசன் சிவபெருமான். பல்வகைக் கலைகளின் பிறப்பிடம் அவன். இந்த உலகத்தின் உயிரினங்களைப் படைத்தல் அவனது லீலைகளில் ஒன்று. அவற்றைக் காப்பவன் அவனே. அவைகளின் துன்பத்தைத் துடைக்கும் தோற்றத்தை உடையவன். தனக்கு நிகரான மற்றொரு கடவுள் இல்லாதவன். இத்தகைய தன்மைகள் கொண்டவனே எங்கள் இறைவன் ஈசன்.
பிரும்மவாதி மணிமேகலையின் அருகில் வந்து இந்தப் பெரிய உலகம் பிரம்மதேவன் இட்ட முட்டை என்று கூறினார்.
விட்டுணு புராணத்தை மிகுந்த அன்பின் மேம்பாட்டால் படிக்கின்ற வைணவவாதி தங்களுக்கு நாராயணனே காப்பு என்று கூறினார்.
ஒரு வைதிகவாதி எதிர்ப்பட்டார். அவன் தன்னுடைய வாதத்தை மணிமேகலை முன்வைத்தார்.
அவருடைய வாதங்களின் தொகுப்பு இவ்வாறு இருந்தது:
சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என்று ஆறு அங்கங்களை உடைய வேதத்திற்குக் கைகளாக விளங்குவது கற்பமாகும். சந்தம் கால்களாகும். நிருத்தம் செவிகளாகும். சிட்சை மூக்காகும். இவற்றின் ஆதாரமாக விளங்கும் வியாகரணம் என்ற சொல்லிலக்கணம் முகமாகும். எவரையும் சாராத வேதபுருடனுக்குத் தோற்றமும் முடிவும் இல்லை. அத்தகைய வேதமே ஒரு வைதிகவாதியின் நெறியாகும்.
உலகவழக்கிற்கு இந்தச் சமயவாதிகள் கூறும் வாதங்கள் ஏற்புடையது ஆகாது என்பதனை ஆசீவகம் என்ற நூலை நன்கு கற்றறிந்த பூரணன் ஒருவரை அணுகினாள்.
அந்த ஆசீவகவாதியிடம் அவரது சமயம் கூறுபவற்றை எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டாள்.
“கணக்கற்ற பொருள்களில் எல்லாம் எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவன், வரம்பில்லாத அறிவனை உடையவன் எங்கள் இறைவன் மற்கலி. அந்த மற்கலி எங்களுக்கு அளித்த நூலின் பொருள் ஐந்து வகைப்படும். அவை திடமான உயிராகிய அணுவும், மற்ற நிலம், நீர், தீ, காற்று என்ற நான்குவகையான அணுக்களுமாகும். இந்த நான்கு அணுக்களும் ஒன்றினுள் ஒன்று புகுந்து கலந்து ஒன்றோடு ஒன்றாக வகையில் கூடிப்பிரியும். அவை மலையாகவும், மரமாகவும், உடலாகவும் திரண்டு உருப்பெறுவதும் உண்டு. அப்படி சேர்ந்தவை பிரிந்து வேறு வடிவங்களை அடைவதும் உண்டு. திரள்வதும் பிரிவதுமாகிய அணுக்களின் கூறுபாடுகளை அறிவதே உயிர் அணுவைப் பற்றிய அறிவாகும்.
“நிலஅணு வன்மையான தன்மையுடையது. நீரணு தாழ்வான நிலப்பகுதியில் வீழ்ந்து நிலத்தின் ஆழமான பகுதியில் சென்று குளிர்ச்சியுடனும் சுவையுடனும் இருக்கும் தன்மையுடையது. தீ அணுவின் தன்மை எரிப்பதும் மேலே பரவுதலும் ஆகும். காற்று அணு அங்கும் இங்கும் அசையும் இயல்பினை உடையது.
“அணுக்களின் தன்மையை அறிவோம். எப்போது தோன்றியது என்ற முதலினை அறிய முடியாதவை இந்தப் பரமாணுக்கள். இவை ஒன்றோடு ஒன்று கூடியும், பிரிவதுமாக பல உருவங்களை அடைகின்றன. அப்படி வேறுவேறு உருவினை அடைந்தாலும் இந்த அணுக்கள் சிதைவது வேறு ஒரு அணுவாக மாறுவது இல்லை. தம்முடைய இயல்பில் மாறுவதும் இல்லை. ஓர் அணு வேறொரு அணுவில் புகுவதும் இல்லை. நீரணு நிலவணுவாக மாறுவதும் இல்லை. நெல்லைக் குற்றுவதால் உண்டாகும் அவல் போல உருவம் விரிவதும் இல்லை. உலாவுதலும், தாழ்தலும், உயர்தலும் இவ்வணுக்களுக்கு இயல்பாகும். நிலவணுக்களால் உருவான மலை தனது தோற்றத்தில் சிதைந்து மணல் அணுக்களாக மாறுவது உண்டு. பல அணுக்களாகக் கூடியிருக்கும் அவை பின்னர் பிரிந்து தனித்தனியாக மாறுவதும் உண்டு. மரங்களாகித் திண்மையுடன் இருக்கும். மூங்கில்களாக மாறித் துளைபோடும் அளவிற்கு நெகிழ்வுடையவாகவும் இருக்கும். நிலவினைப் போல வட்டவடிவில் பூமியாகவும் பிறக்கும். அவை அளவில் கூடும்போது தமக்குரிய முறைமை மாறாமல் ஒன்றும் முக்காலும் அரையும் காலுமாக அளவில் கூடுவதும் குறைவதும் உண்டு. இங்ஙனம் கூடுமிடத்தில் எண்ணிக்கையில் அதிக அளவிலுள்ள அணுக்களின் பெயராலேயே அறியப்படும். இவ்வாறாக அணுக்கள் செறிவடைந்து நிலமாகித் திண்மையுடனும், நீராகி நெகிழ்வுடனும், தீயாகிச் சுடுவதும், காற்றாகி அசைவதும் இத்தகையச் செயல்களைப் புரிகின்றன.
“தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் ஒவ்வொரு அணுவையும் தங்கள் ஞானக் கண்களால் அறிவர். அவ்வாறு இல்லாதவர்கள் மொத்த அணுத்திரட்சியை மட்டுமே காண்பார்கள். இதைச் சொல்வதென்றால் மாலைவேளையில் ஒளிமங்கும் நேரம் கூந்தலில் உள்ள மயிரிழைகளை தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க இயலாமல் மொத்தக் கூந்தலாக பார்ப்பதுபோலாகும்.
“கரிய பிறப்பென்றும், கருநீலப் பிறப்பென்றும், பசிய பிறப்பென்றும், சிவந்த பிறப்பென்றும், பொன்போன்ற பிறப்பென்றும், வெண்மையான பிறப்பென்றும் இத்தகைய பிறப்புகளை அடைந்து இறுதியில் மிகுதியான வெண்மைப் பிறப்பெய்தி, மக்கள் வீடுபேற்றினை அடைவார்கள். துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்களே அத்தகைய மிகுவெண் பிறப்பெய்தி முக்தியடைவார்கள். இத்தகைய நெறி செம்போக்குநெறி என்று அறியப்படும். இதிலிருந்து தவறி வேறுவழியில் நடக்கும் நெறி, மண்டலநெறி என்று அறியப்படும்.
“நற்பேறுகளைப் பெறுவதும், அவ்வாறு பெற்றவற்றை இழப்பதும், பிறப்பதும், இறப்பதும், கருவில் தோன்றியபோதே உடன்சேரும் துன்பமும் இன்பமும் அடைதலும், இவைகளும் அணுக்கள் என்றே அழைக்கப்படும். முன்பு செய்யப்பட்ட நல்ல மற்றும் தீய ஊழே பின்னால் அவற்றைப் போன்ற வினைகளுக்குக் காரணமாகிறது. இதுவே மற்கலி கூறும் நூலின் நெறியாகும்.”
அசீவகவாதி கூறுவதைக் கேட்டபடி அங்கிருந்து அகன்ற மணிமேகலை ஒரு நிகண்டவாதியின் முன்னால் சென்று, “உன் இறைவனின் பெருமைகளைக் கூறுவீராக,” என்று கேட்டுக்கொள்ளவே, நிகண்டவாதி தனது சமயத்தின் பெருமைகளைக் கீழ்க்கண்டவாறு எடுத்து இயம்பினார்.
“தேவர்களின் தலைவனான இந்திரனும் தொழும் தலைவன் எங்கள் அருகத் தேவன். அந்த அருகத்தேவன் அளித்த நூல்கள் கூறும்வண்ணம் ஒரு பொருளானது தன்மாத்திகாயம், அதன்மாத்திகாயம், காலம், ஆகாயம், அழிவற்ற உயிர், நுண்ணிய அணுக்கள், நல்வினைகள், தீவினைகள், அவை இரண்டினால் கிடைக்கப்பெறும் வீடுபேறு என்ற பத்து வகைகளாகும். இப்படி ஆகமத்தில் கூறப்பட்டுள்ள பொருள் தனது தன்மையுடையாதகவும், தான் சார்ந்த பொருளின் தன்மையுடையதாகவும், எப்போதும் இருப்பதும், எப்போதும் இல்லாததும் ஆகிய குணங்களையுடையது என்று ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. ஒரு கணத்தில் இருத்தலும், நிலைத்தலும், மறைதலுமாகிய மூன்று தன்மைகளைக் கொண்டது.
“நித்தியம் என்பது வேப்பங்கொட்டையை விதைத்து அதிலிருந்து வேப்பஞ்செடி முளைப்பது போன்றதாகும். முளைக்கவிட்ட விதை அழிவது அநித்தியமாகும்.
“உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் வீடுபேறுக்குக் காரணமாக விளங்கும் தன்மாத்திகாயம் என்பது எங்கும் இருந்துகொண்டு பொருள்களை அவற்றின் வினைகளுக்கு ஏற்ப நடத்தும் தன்மையைக் குறிப்பது. தன்மாத்திகாயம் பொருள்களை இயக்கும் தன்மையது என்றால் அதன்மாத்திகாயம் அவற்றை நிலைபெறச் செய்யும் தன்மையது.
“காலம், குறுகியகாலம் என்றும் கல்பம் என்ற நீண்ட கால அளவையும் கொண்டது.
“ஆகாயம் என்பது அனைத்துப் பொருட்களும் தங்கி இருந்து விரிய இடம் கொடுக்கும் தன்மை உடையது.
“ஜீவன் என்பது உயிருடன் பொருந்தியிருந்து, ஐம்புலன்களினால் உண்டாகும் குணங்களை அறிந்து கொள்ளும் தன்மையை உடையது.
“பரமாணு எனப்படும் ஓர் அணு பொருள்களின் புறவடிவமாக விளங்கும். நல்வினை தீவினை ஆகிய இருவினைகளை ஆற்றும். இன்பம் துன்பம் இரண்டையும் முன்னை செய்த வினைகளின் பலனாக மாற்றி அதன் மூலம் கிடைக்கபெறுவதே வீடு என்பதாகும்.”
இவ்வாறு நிகண்டவாதியின் வாதத்தைக் கேட்ட பின்பு மணிமேகலை ஒரு சாங்கியவாதியின் முன்பு போய் நின்றாள்.
அவர் எடுத்துரைத்த வாதத்தின் சாரத்தைப் பார்ப்போம்:
“தான் இத்தகையது என்று அறிவதற்குக் கடினமான, தானே மூவகை குணங்களாக விளங்கி, மனதில் எண்ணங்களுக்கு இருப்பிடமாய், மாட்சிமையுடைய பொதுத் தன்மை உடையதாய், அனைத்து ஜீவராசிகளுக்கும் தோன்றுவதற்கு மூலமாய் விளங்குவதே சித்தம் எனப்படும் மூலப் பகுதியாகும். இந்தச் சித்தத்திலிருந்து மனம் என்று கூறப்படும் புத்தி பிறக்கின்றது. புத்தியிலிருந்து ஆகாயம் வெளிப்படும். அந்த ஆகாயத்திலிருந்து காற்று வெளிப்படும். காற்றிலிருந்து தீ வெளிப்படும். தீயிலிருந்து நீரும் அந்த நீரிலிருந்து மண்ணும் வெளிப்படும். ஆரவாரம் மிக்க மனதில் ஆங்காரம் என்ற விகாரம் பிறக்கிறது. ஆகாயத்தில் இருந்து செவிக்குப்ப் புலனாகும் ஒலி என்ற விகாரம் பிறக்கிறது. காற்றிலிருந்து மேனிக்குப் புலனாகும் ஸ்பரிச விகாரம் பிறக்கிறது. நீரிலிருந்து நாவிற்குப் புலனாகும் சுவை என்ற விகாரம் பிறக்கிறது. நெருப்பிலிருந்து கண்ணுக்குப் புலனாகும் ஒளி என்ற விகாரம் பிறக்கிறது. நிலத்திலிருந்து மூக்கிற்குப் புலனாகும் நாற்றம் என்ற விகாரம் பிறக்கிறது. சொல்லப்பட்ட இவற்றில் மெய்யின் விகாரமாக வாய், கால், கை,, பாயுரு, உபத்தம்(genitals) என்ற ஐந்தும் தோன்றும். இங்கு கூறப்பட்ட ஐம்பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மண் இவற்றின் கலப்பால் மரம், மலை போன்றவை வெளிப்படும். பின்பு அவை தாம் தோன்றிய வழியிலேயே சென்று ஒடுங்கும். இவ்வாறு பிரளயத்தில் ஒடுங்கும் அப்பொருள் ஒன்றாகி நித்தியமாக விளங்கும் தன்மையை உடையது.
“எங்கள் மதநூலில் இருபத்தைந்து பொருள்கள் உள்ளன. ஐம்பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐந்தும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றின் சேர்க்கையால் உணரப்படும் ஸ்பரிசம், சுவை, ஒளி, நாற்றம், ஒலி ஆகிய உணர்சிகளின் கருவிகளான வாக்கும், கையும், காலும், எருவாயும், கருவாயும் இவைகளை உள்நின்று நடத்தும் மனம் புத்தி, ஆங்காரம், சித்தம் ஆகிய நான்கும் இவற்றிற்கு எல்லாம் ஆதாரமாக விளங்கும் உயிர் என அறியப்படும் ஆன்மாவும் ஆகிய இந்த இருபத்தைந்து பொருள்களைத்தான் சாங்கியவாத நூல்கள் விளக்குகின்றன.” என்று சாங்கியவாதி தனது வாதத்தை வைத்ததும் புருஷ தத்துவவாதி ஒருவர் அவள்முன் தோன்றி தனது சமயவாதங்களை முன்வைத்தார்.
“எளிதில் அறிந்துகொள்ளக் கூடியது, முக்குணங்கள் இல்லாதது, பொறிகளினால் அறியப்படும் உணர்ச்சிகளுக்கு மூலப்போருளோடு எவ்வித தொடர்புமில்லாதது, எப்பொருளும் தன்னில் தோன்றுவதற்கு இடமளிக்காதது, ஆயினும் அந்தப் பொருள்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் உணர்வாய் இருப்பது, ஒரே பொருளாய் எவ்விடத்தும் வியாபித்து நித்தியப் பொருளாய் நின்று உள்ளத்து உணர்வாய் நிற்கும் புருடனாய் விளங்குவது எவரோ, அவரே எங்கள் கடவுள்.”
மணிமேகலை அவரிடமிருந்து விலகி ஒரு வைசேடிகவாதியின் அருகில் சென்று “ஐயா! உங்கள் மதம் என்ன கூறுகிறது என்பதனைத் தெளிவாகச் சொல்லும்!“ என்றாள்.
“எங்களது நூல் அழியாத பொருள், அதன் குணம்,செயல், அதன் பொதுத்தன்மை, அதன் சிறப்புத் தன்மை, அதன் தொகுப்பு இவற்றின் மீது கட்டமைக்கப்பட்டது. பொருள் என்பது பண்பும் செயலும் அமையப்பெற்றது. இந்தப் பொருளே எந்தத் தொகுதிக்கும் அடிப்படையானது. அந்தப் பொருள் பூமி, நீர், தீ, காற்று, ஆகாயம், திசை, காலம், ஆன்மா, மனம் என்ற ஒன்பது வஸ்துக்களின் சேர்க்கையாகும். இவற்றுள் நிலம் என்பது ஓசையும், பரிசமும், நிறமும், சுவையும், மணமும் ஆகிய ஐவகைப் பண்புகளை உடையது. எஞ்சிய நான்கும் அவற்றின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு பண்பு குறைந்து காணப்படும். இங்கு கூறப்பட்டுள்ள பொருள்களின் பண்புகள் ஓசை, ஸ்பரிசம், நிறம், நாற்றம்,சுவை, பெருமை, சிறுமை, வன்மை, எளிமை நொய்மை, வடிவம் என்று பலவாகும். பொருளும், பண்பும் வினையாற்றுவதற்கு அடிப்படையானவை. மறைதல், இருத்தல், பிறப்பதும், இறப்பதும் பொருள்களின் பொதுத் தன்மைகளாகும். அணு மட்டுமே தனித் தன்மை வாய்ந்தது.
வைசேடிகவாதி தன் வாதங்களை முன்வைத்த பின்பு பூதவாதிமுன்பு மணிமேகலை போய் நின்று அவனுடைய வாதத்தை கேட்டாள்.
“ஆத்திப்பூவையும் கருப்பட்டியையும் சேர்த்து தீயில் பானை வைத்துக் காய்ச்சும்போது களிப்பூட்டும் உணர்வை அளிக்கும் கள் தோன்றும். அந்தக் கள்ளை அருந்திக் களிக்கும்போது பூத உணர்வு தோன்றும். அந்த உணர்வு பூதக்கூட்டங்கள் சேர்ந்து பிரியும் நேரங்களில் தானும் தோன்றி மறையும். பறையின் ஒலியானது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து உச்சத்தை அடைந்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மறைவது போல இந்த பூத உணர்வும் எழும்பி மறையும். உயிருடன் கூடிய உடம்பில் பூதம் உணர்வுடன் பிறப்பதுண்டு. உயிரற்ற உடலில் பிறக்கும் பூதம் உணர்வில்லாமல் பிறக்கக் கூடும். இதுதான் உண்மை. இதற்கு மாறாகக் கூறுபவர்கள் லோகாயத நெறியில் நிற்பவர்காளவர். இதுதான் பூதநெறி கூறுவது.
“கண்ணால் காண்பவை மட்டுமே உண்மைப் பொருளாகும். அதைவிடுத்து கருத்தால் காண்பது இம்மையின் பயன் இப்பிறவி. இப்பிறவியில் நடப்பதே இன்ப துன்பம். இதற்கு முந்தைய பிறவி காரணமாகாது. முந்தைய பிறவி அறிந்தவர்கள் யார் இருக்கக் கூடும்?” என்று பூதவாதி எள்ளி நகையாடினார்.
அவரைப் பார்த்து மாதவ வேடத்தில் இருந்த மணிமேகலை சிரித்தாள். பூர்வஜன்மம் குறித்து மணிமேகலையிடம் கேட்டது எத்தகைய முரண்? “இவர்களது வாதங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆயினும் இவர்களுக்கு நான் மறுமொழி கூறப் போவதில்லை.” என்று நினைத்துக்கொண்டாள் அவள்.
“எதற்குச் சிரித்தீர்கள்?” என்றார் பூதவாதி.
“ஐயா! முற்பிறவி அடுத்த பிறவி எதுவும் இல்லை என்று கூறும் உங்கள் கூற்றை நினைத்துச் சிரித்தேன்.”
“கருத்து அளவையைத் தவிர மற்ற அளவைகளான அனுமான அளவை போன்றவை பிதற்றலே!”
“சரி ஐயா உங்கள் வாதத்திற்கே வருவோம். உங்களுக்கு ஒரு காலத்தில் பெற்றோர் இருந்திருக்க வேண்டுமல்லவா? பெற்றோர் இன்றி எங்கனம் பிறப்பு இருக்க முடியும்? தற்சமயம் உங்களது பெற்றோர் உயிருடன் இல்லை என்பதற்காக இப்போதைய காட்சி அளவையின்படி உங்களுக்கு பெற்றோர் இல்லை என்று நான் வாதிட்டால் அது முறையாகுமோ? அனுமான அளவை அப்படித்தான். மெய்ப்பொருள்கள் பலவற்றையும் அனுமான அளவை போன்ற அளவைகளால்தான் அறிய இயலும். மெய்யுணர்வு இல்லாமல் மெய்ப்பொருளை அறிய முடியாது. எனவே இம்மை மறுமை பிறவிகள் உண்டு என்பதை ஐயமின்றி நம்பும்.” என்று மறுத்துக் கூறினாள்.
அந்த வஞ்சி மாநகரில் இருந்து ஐவகை சமய வாதங்களையும் கேட்டு அறிந்துகொண்ட மணிமேகலை அந்த நகரை விட்டு அகன்றாள்.
பின்குறிப்பு: இந்தக்காதையில் பலவித சமயங்களைப் பற்றியும், அவர்களின் கோட்பாடுகள் பற்றியும் ஓரளவு விளக்கமான குறிப்புகளைச் சீத்தலை சாத்தனார் கொடுத்துள்ளார். அனுமான அளவை என்பது வைதீக சமயத்திற்கும் பெளத்த சமயத்திற்கும் பொதுவான ஒன்று என்றாலும் தற்கால சித்தாந்தங்களில் ஒன்றான பொருள்முதல் வாதத்தில் கூறுவதை ஒரு பூதவாதியின் வாயிலாக வெளிப்படுத்தி அதனை மறுத்து சீத்தலை சாத்தனார் மணிமேகலை மூலம் தர்க்கத்தை முன்வைக்கிறார்.
அருமையான பதிவு!
பத்தாவது அளவையான உள்ளநெறி (சம்பவம்) விடுபட்டுள்ளது – இதனை உட்சொருவுக.