இராமநுச கதி 

உடையவர் இராமாநுசர் மண்ணுலகில் அவதரித்து மானுடரின் மேம்பாட்டுக்குப் பெருமாளின் அருளோடு ஆற்றிய புண்ணிய கைகங்கரியங்களைப் பற்றிய பல அரிய செய்திகள் இவ்வாண்டு முழுதும் ஊடகங்களில் வெளியாயின. வாசித்து உய்ந்தோர் பலர்.

எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இம் மொழிபெயர்ப்புக் காப்பியத்தின் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப் புலவர்களால் போற்றப் பெறும் பெரும் புலவர், சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள். சுவாமிகள் அருளிய பக்த மான்மியம் எனும் இக்காப்பியம் 7367 விருத்தப் பாக்களில் அரி பத்தர்களின் பெருமையினை விளக்குகின்றது.

பத்தியை உடையவர்கள் பத்தர். அவர்களுடைய மகத்தாகிய பெருமையைக் கூறுவது பக்த மான்மியம். பத்தியாவது யாது? அன்பு பத்தி காதல் என்னுஞ் சொற்கள் இச்சையின் மிகுதிப்பாட்டைக் குறிப்பன. இம்மை வாழ்வில் பரம்பொருளாகிய இறைவனொடு உணர்விற் கலந்து நிற்கும் உணர்வே பத்தி. இறைவனை நெஞ்சிற் பதித்தலால் எழும் இன்ப உணர்வே பத்தி. இதனை முழுமையாகப் பெற்றவர்கள் சீவன் முத்தர்கள்.

இந்த நூல் 104 அரி பத்தர்களின் அற்புதமான வாழ்வை விவரிக்கின்றது. பத்தி என்பது சாமானிய அன்பினைப் போலத் தோற்றமளித்தாலும் பயிலுதற்கரிய தொன்றாம். இறைவன் “எற்பணி யாளாய் எனைப் பிரியாதே, ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு, என்வழி நின்றனன்” எனத் தமிழாகமமும் ,  ‘பத்திவலையிற் படுவோன்’ எனத் தமிழ் மறையும், ஓதினும் அந்நிலை சாமானியத்தில் அடையப்படுவ தொன்றன்று என்னும் உண்மை அரிபத்தர்களின் வாழ்வில் வெளிப்படுகின்றது. அரியின் பத்தர்களாயினும் அவர்களுக்கும் துன்பமுண்டு. அத்துன்பம் உலக வாழ்வில் மயங்கி மண் பெண் பொன் ஏனும் மூவேடணையில் உழலுவோரின் துன்பம் போன்றதன்று. சுடச்சுட ஒளிரும் பொன் போன்று, அரைக்குந்தோறும் மணக்கும் சந்தனம் போன்று, அரிபத்தர்களின் பத்திப் பெருமையைச் சுடர்விடச் செய்வன.  அன்னோர் எதிர்கொள்ளும் சோதனைகளும் துன்பங்களும். உண்மையில் அவைசோதனைகளும் அல்ல; துன்பங்களும் அல்ல. அவை பத்தர்களின் மகத்துவத்தை உலக வாழ்வில் உழலும் மாந்தருக்கு  உணர்த்த அரி மேற்கொளும் உபாயங்களேயாம். அவற்றைக் காப்பியமாக எடுத்துரைப்பதே பக்தமான்மியம்.

சந்திரதத்தர் பத்தமான்மியம் மூல நூலின் ஆசிரியர்; மிதிலையிலே பிறந்தவர். கொடுங்கோல் வேந்தனின் ஏவலால் சிறையினில் வருந்தினார். அரியின் மந்திரத்தை ஓதிய வலிமையினால் சிறை நீங்கினார். தன் அறிவில் தெளிந்து நாரணனைத் தொழுது, நாரணனை போன்ற குரு சொன்ன உபதேசத்தில் மூழ்கி யமபயம் அகல, பகவனது அருளினைப் பெற்று, பரந்தாமனின் சொற்படி, வடமொழியில் பக்தர்களின் பெருமையைச் சாற்றும் பக்தமான்மியம் எனும் காவியத்தை இயற்றினார்.

திருமாலின் பழவடியார்களின் பத்தி ததும்பும் வாழ்க்கையினையும் அடியவர் திருத்தொண்டினையும் எடுத்தியம்பும் அருமையான காவியம் பக்தமான்மியம். இக்காப்பியதில் இருபதாவது கதியாக அமைந்தது இராமாநுச கதி. இக்கதியில் கூறப்பட்டுள்ளவாறு இராமானுஜரின் வரலாற்றைக் காண்போம்.

ஆதிசேடன் மீது அறிதுயில்கொள்ளும் அச்சுதனின் பொன்னடித் துணைகளைப் பரவுகின்ற அடியார்கள் தம் சென்னிமிசை பதிதருளும் திருப்பதம் வாய்ந்தோன்; உயர்ந்த பிராமணக் குலத்தினர் செய்த பெருந்தவம் ஒரு வடிவெடுத்து வதது போன்ற திருமேனி உடையவன்; இராமானுஜன் எனும் திருநாமம் வாய்ந்த ஆச்சாரியன்.அன்னவனை ஈன்றருளும் அன்னை தந்தை ஆகியோர் பெயர் இன்னவென முன்னூலினிடை விளங்கவில்லை. இருப்பினும் பாம்பணைத் துயில்பவனின் ஆயிரம் நாமங்களில் ஒன்று கொண்டவர் தந்தை;  அவனுடைய திருமார்பில் உறைகின்ற திருவின் பெயர்களில் ஒன்று கொண்டவர் அன்னை எனலாம்.

நுண்ணிய அறிவுடையார் ஏத்தும் இராமானுஜப் பேர் ஒண்மையன் தன்னுடைய அறிவாகிய அளவுகோல் கொண்டுவேத சாத்திரங்கள் கூறும் வளமான பொருள்களையெல்லாம் அளவிட்டு ஆராய்ந்து பூரண சந்திரன் போல ஒளி திகழ்ந்தான். தன் தற்போதம் அறத் தன்னைத் தடுத்தாளும் சற்குரவன் வருதல் எந்நாளோ எனக் காதலனை வேட்டுருகும் காதலியைப் போல மனம் ஏங்கியிருந்தான். வரம்பில் கருணை நாரணன் தன் பத்தன் உளம் நலியச் சகிப்பானோ? இராமானுஜனின் அதிதீவிர பக்குவந் தெரிந்து, உள்ளங் கையில் நெல்லிக் கனி போன்று முத்தியை அளிக்கும் மந்திரத்தை அருளினன். அழல் நெய்யைப் பற்றுதல் போல இராமானுஜன் அருமந்திரத்தை நெஞ்சிற் பற்றினன்.

பாம்பின்மேல் பரதம் பயிலும் நாரணக் குரவன், “ ஒருகணத்திற் பலித்து இன்பத்தைக் காட்டும் இம்மந்திரத்தை விண்ணிற் பொலியும் தேவர்களும் அறியார்கள். பத்தியிற் சிறந்த நீ இம்மத்திரத்தைக் கைக்கொண்டு இன்பநிலை எய்துவாயாக” என அருளினான்.

அந்த அரிய மந்திரத்தை இராமானுசன் சிந்தையிற் பதித்து ஏத்திடவே,  மந்தபுத்தி உடைய உலகவர்களின் உள்ளத்தில் காண முடியாத பேரானந்தம் விளைந்தது.

“நாம் பெற்ற இப்பேரானந்தத்தை இந்த உலகில் ஆள்வாரிலி மாடெனத் திரிந்து சற்றும் இறையறிவு இலாத  ஆணவ இருளால் சிமிழ்ப்புண்டு உழல்பவர்களும்  பெற்று உய்யச் செய்வேன்”  என உறுதி பூண்டார்

கீழ்மக்கள் நெஞ்சம்போல் இருண்ட இரவில், பேய்களும் கண்ணுறக்கம் கொளும் யாமத்தில்  அறிவு சூனியரும் தெளியுமாறு குரவன் அருளிய மந்திரத்தை பலமுறை உரக்கக் கூவினான் , அந்த இணையற்ற அருளாளன்.

அந்த ஒலி கேட்டு உறக்கம் ஒழிந்து ‘இஃது என்ன ஒலியோ’ என மருண்டவர்களும்  இராமானுசன் சொன்ன மறையொலி நெஞ்சிற் பதியப் பெற்று, ஒருகணத்தில் ஞான சம்பன்னர்களானார்கள். ஞானவான்களாகிய அவர்கள், ‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின்” எனும் ஆன்றோர் நவின்றதை மெய்ப்பிக்குங் கருணையாளனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பொழிந்து தொழுதனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை   இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்.

அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ, ‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார். ஜகந்நாதரின் பொற்பாதங்களைத் தொழுது வீற்றிருக்கும் நாளில் ஜகந்நாதரைப் பூசிக்கும் அருச்சகர்களின் செயல்களை முற்றும் ஆராய்ந்தார்.

ஜகந்நாதரைப் பூசிக்கும் அருச்சகர்கள் செயல்கள் காண்போர் உள்ளத்தில் அருவருக்கத் தக்க அநாச்சாரம்  கொண்டனவாக இருந்தன; அவர்கள் எச்சாதியினரொடுங் கூடிக் கலந்து உணவருந்துவாராகி இருந்தனர். அந்த அபேதப் பண்பைக் கண்டு இராமானுஜர் ஆச்சரியமுற்றார்.

ஜகந்நாத நகரில் வாழ்வோர்  தாம் தாம் அந்நிய சாதியர் என்ற நினைவின்றி அனைவரும் ஒன்றாகக்கூடி உணவு உண்ணல் ஆகிய கருமங்களைச் செய்கின்றனர். இவர்களை நல்ல ஆசார நியமத்தராக நான் இயற்றுவேன்; அரிய வேதங்கள் புகல்கின்ற சதாசாரத்தினை (சத்+ ஆசாரம். உயர்ந்தோரின் நல்லொழுக்கம்) இங்கு நிலைநாட்டாமல் இப்பதியை விட்டு அகலேன் என்று மனதில் உறுதி கொண்டார்.

சீடர்கள் சூழப் பூசா திரவியங்களொடு, அறக்கருணை ஒரு சற்றுமின்றி, அதிபலாத்காரமாய், அருச்சகர்களைப் புறக்கணித்து விட்டுத் தாமே சகந்நாதத் திருக்கோவிலைத் திறந்து ஜகந்நாதருக்கு ஆசார நியமங்களுடன் அன்பாற் பூசனை சிறக்கச் செய்து நைவேத்தியம் நிகழ்வித்தார். தம் சீடருடன் தாமும் அந்நிவேத்தியத்தை உண்டு உறக்கம் கொண்டார்.

அவ்வுறக்கத்தின்போது இராமானுசர் ஒரு கனவு கண்டார். அச்சொப்பனத்தில் திரு ஜகந்நாத மூர்த்தி தன் மெய்யுருவை இராமானுஜருக்குக் காட்டிப் புகன்றிடுவார்.

“என்பால் மெத்த அன்பு பூண்ட இராமானுஜப் பேர் கொண்ட அன்பனே!  உனக்கு யான் பகர்வதொன்றுண்டு. இத்தலத்து அநாசாரத்தில் எனக்கு மிக்க பெருவிருப்பம். அதோடு மட்டுமன்றிச் சித்தத்தில் பத்தியுடையார் செயல்களெல்லாம் எனக்குத் திருப்தி அளிப்பனவே. பத்திக் கடலில் நெஞ்சம் பதிந்தவர் எவரானாலும் எதனை அவர் எனக்குத் தந்தாலும் எனக்கு அதில் இச்சையே. எனவே, என்னை விரும்பிப் பூசை செய்யும் பூசகர்களை கணத்தில் இங்கு வர அழைப்பாயாக. என்னைப் பிரிந்திருக்க அரைக்கணமும் அவர் ஆற்றார். யானும் அவரை விட்டு அரைக்கணமும் நீங்கேன்.  அதனால் நீ இங்கு அமைத்துள்ள பூசாசாதனங்க ளெல்லாங் கொண்டு அமைத்த நியமங்கள் எனக்கு ஒவ்வாதாம்.

நம்மீது பத்தி சிறிதும் நெஞ்சில்இன்றி  உலக போகங்களாகிய பித்தம் மேவிப் பொய்யான உடலை மெய்யென எண்ணி அதற்கு உழலும் வம்பர்களுக்கு வைத்தாய் உன் ஆசாரத்தை. அந்த ஆசாரக் கதையை வானோர்க்கும் மேலாய் நம் ஜகந்நாதத்து வாழ்வார்க்குச் சிறிதும் ஓதாதே.

பலவடிவோடுப் படிகம் ஒத்து எவற்றையும் பற்றும் கன்ம மயமான மனத்தவர்களுக்கு உன்னுடைய ஆசாரக் கதைகள்மிக இனிக்கும். அதல்லாமல், தற்போத மனம் கழன்று என்னைப்பூசித்து என்மயமாகி நிற்போர்க்கு இனிது யாது? தீது யாது? பேயாற் பிடிப்புண்டோர் செயல்களெல்லாம் பேயின் செயலேயாக நிகழ்தல் போல், என் பத்தராவார் இவர்கள் இயற்றிடுகின்றவெல்லாம் என் செயல்களேயாகி எனக்கு உவப்பளித்திடும்”

என்று அளப்பரும் போதமிக்கவரும் இணையற்ற கருணை வள்ளலுமாகிய இராமானுஜருடைய நற்கனவில் ஜகந்தாதன் நவின்றருளினான்.

இவ்வாறு ஜகந்நாதன் நவின்றும், வேதங்கள் ஓதும் தூய ஆசாரசீலங்களில் ஒன்றையும் அகன்றிடற்குத் தன்னுள்ளம் இசையாத இராமானுசர் , “ மாயவன் அநாசாரபத்தர்களிடம் அருள் மிகுந்து அவர்தம்மை வாஞ்சித்து, என் மீது கோபம் கொள்ளுவது மிகவும் வியப்பைத் தருகிறது. இத்தேயத்தில் நாற்குலத்தோரும் சேர்ந்து ஒன்றாக உணவு நுகர்கின்றார்.இத்தீங்கைக் கண்டும் யான் எவ்வணம் உளம் சகிப்பேன். மேக வண்ணனுக்கு வேதாசாரக் கடப்பாட்டில் நின்று செய்யும் உயர்ந்த ஆசார பத்தி ஒப்பாதது என்னே! பத்திக்குப் பெருமை அநாசாரமே போலும். நம்மைப் போல ஆசாரம் மிக்கவர்களாக இருந்தால் ஜகந்நாதன் கோபம் கொள்வானென்றுதான் இப்பதியில் வாழ்வார் இத்தனை அநாசாரமாக இருக்கிறார்கள் போலும்.

என்னவானாலும் நான் என் உடல் கழியுங்காறும் வேதோக்தமான சதாசாரத்தைக் கைவிடேன்; இவரோடு ஒன்றாக இருந்து உண்ணுதற்கோர் சற்றும் சம்மதம் கொள்ளேன்”   என்று கூறி விரக்தியுடன் அங்குத் தங்கி இருந்தார்.

இவ்வாறு இராமானுஜர் ஜகந்நாதத்தில் தங்கியிருக்கும்போது, அரவணையில் துஞ்சும் பக்தவத்சலன் கருடாழ்வரை நோக்கிச் சொல்லுவன், இராமானுஜன்பாற் சென்று, “இத்தலத்து  உனது ஆசாரமெல்லாம் எனக்கு அவசியமில்லை. இங்குள்ள எனது அருச்சகரை எனக்குப் பூசை இயற்றிடச் செய்யில் என் மனம் உவப்புறும். அவர்கள் மனம் வாடில் ஒருகணமும் யான் சகியேன். யான், நினது ஒரு ஆசாரச் சீல பத்தி முதலிய நற்குணங்களைக் கண்டு அளவில்லாத இன்பம் அமைந்தேன், அது மெய்யே.

உன்னுடைய மந்திரம் தியானம் முதலியவற்றால் நான் உன் வசம் ஆனேனென்றாலும், இங்கு வாழ்பவருக்கு என் மீதில் இணையில்லாத மெய்ப்பத்தி உண்டு. இயல்பான பத்தி உணர்வு உந்துதலால் அநாசாரம் என்று சொல்லப்படுகின்ற  இவர்களுடைய பண்பு என்னுடைய உள்ளத்துக்கு இன்பமே  அடையச் செய்கின்றது.

திருமகளை மார்பிற் பதித்து வைத்துள்ள என்னைப்போல, இந்நகருளார்பால் அன்பு அதிகரித்து வாழும் ஆசை உன் நெஞ்சில் இருக்குமாகில் , இப்பதியில் வாழ்வாயாக. இவர்கள் பண்பு அநாசாரம் , குற்றம் என உனக்குத் தோன்றினால் உடனே இப்பதிவிட்டு நீங்கி உன் பதிக்குச் சென்று உன் ஆசாரத்துடன் அங்கு வாழ்வாயாக  அங்கு தூய நல் சதாசாரத்தின் துறை பிழையாமல் என்னைப் பேரன்பினோடு பூசனை புரிந்து வாழ்தி.

என்னுடைய நாமந்தன்னைச் செபித்தல் ஒன்றாலேயே நினக்குச் சர்வாபீஷ்டங்களையும் ஈகுவன், உண்மை. என்று இனையவை பலவும் யாம் இயம்பியவாகச் சொல்லி இராமானுஜனையும் அவனைத் துதிக்கும் மாணாக்கரையும் உவகையுறப் புரிந்து அரைக்கணத்தில் அவர்தம் பதியேகப் புரிதி” என்றனன்.

நாராயணப் பகவன் உத்திரவிட்டு ஏவக் கருடன்  விரைந்து அகமகிழ்வோடு இராமானுசரை அடைந்து, நிகழ்ந்த செய்தியை ஓதினான். அதைக் கேட்டு இராமானுஜர் நெஞ்சமிக்குவந்து, ‘எந்தப்பொருளை அடையும் பொருட்டு இங்கு வந்தேனோ அந்தப் பொருள் கதுமென என் கைவரக் கடைக்கண்பாலித்தான். பழமறைகள் இன்னும் கண்டு தேறா மூர்த்தி பொது நீக்கி என்னை ஆண்ட கருணக்குக் கைம்மாறு ஏது?  கருமணி வண்ணத்தெம்மான் கரையில்லாத பேரருள் பெற்றமைந்த எனக்கு இந்நகரம் யான் வாழும் தேயம் இருள் நகராகிய நரகம் சொர்க்கம் எதுவாயினும் எனக்கினிதே. விரைவில் என்னுடைய நகருக்கு செல்கின்றேன் என்று இராமானுஜர் , பிரம சொரூபியாக விளங்கிய கருடனிடத்துப் புகன்று தன்னுடைய சீடர்களுடன் உறக்கங் கொண்டார்.

கருடமூர்த்தி, உறக்கம் கொள்ளும் அவர்களை ஒருமாத்திரைப் பொழுதுக்குள்ளே அவர்கள் தம்பதியில் அன்னவர்தம் மனைகளில் கொண்டு சேர்த்தார். அதன்பின் ஜகந்நாதம் வந்தார். இராமானுஜர் ஜகந்நாதத்தை விட்டு அகன்றார் என்னும் செய்தியை அறிந்த அவ்வூர் மக்கள் குற்றமில்லாத அன்பு ஓங்க அருச்சகன்தனை அழைத்து எல்லையில்லாத அன்பும் இன்பமும் பொங்க, வாசத் துளபமாலையும்  ‘மலர்மின்(திரு) செம்பொற் குசயுகளமும் தோய்  மார்பின’னாகிய கார்நிற அண்ணலின் அருட்பதம் பணிந்தர்.

அவ்வேளையில், இராமானுஜர் தம் பதியில் துயிலுணர்ந்தார். ஜகந்நாதத்திலிருந்த தான் தன் பதிக்கு வந்து சேர்ந்த காரணத்தை  நாடி அளப்பிலா வியப்பும் உவகையும் மிக்கோங்கும் உளத்தராகி, விட்டுணு அன்புடன் தம் கனவில் கூறியது பலிதமானதைத் தெளிந்தார்.

“ இத்தகைய திருவிளையாடலை மாயன் இயற்றிடற்கு ஏது தன் தாமரை மலரிதழ் போன்ற தன் திருவடிமேல் மெய்பத்தி கொண்ட பத்தர்கள்மிது வைத்திருக்கும் வாத்சல்லியமே யன்றி வேறென்ன என்று கூறுவது. உத்தம பத்திக்கு ஒப்பது வேறொன்றுளது எனலாமோ?

ஜகந்நாதத்தில் பொருந்தியிருந்த அநாசாரங்களைப் போக்கி, மக்களை நல் நெறிப்படுத்த யான் மேற் கொண்ட சிரமமும், அதனால் அங்குள்ளவர் வருத்தம் கொண்ட செயலையும் தன் உயரிய மனத்திடைச் சகிக்க ஆற்றானாகி இத்திருவிளையாடலைப் புரிந்த கரும்புயன்மேனி வள்ளலின் கருணையை என்ன என்பது?

வேத நெறியில் பலதுறைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பொருந்துகின்ற அதிகாரம் அதாவது தகுதி, பக்குவம் சற்றும் அமைந்திடாதவர்களும் தாமோதரனது திருவடியைச் சிந்தையில் சற்றும் பிரியாத பத்தியுற்ற பண்பினால் நாரணனுக்கு உவப்பானவராக உள்ளனர். அதனால் பத்தியின் மான்மியத்தைப் பேசவும் படுமோ”

என எண்ணிய இராமானுஜர், பின்னர்,  பத்தியிம் மாண்பினை மிகவும் கொண்டாடித் திட சித்தங்கொண்ட தம் சீடர்களும் மற்றும் இவ்வுலகத்தில் பிறந்தவர்களும் நாரணன் பதஞ் சேர்ந்து உய்யும் வண்ணம் பகவனை அடையப் பத்திமார்க்கத்தைத் தாபித்தார்.

புறச் சமயத்தவரும் நாரணனின் பொற்றாளில் பத்தி எய்தச் செம்மையான பாடியம் சொன்ன அப்புகழோன் அறநெறி வழுவாச் சீடர் கூட்டத்துடன் உலகவர் அடைதற்கு அரியதாகிய மாயனின் பொன்னடியாகிய சின்மயத்தை அணைந்தார்.

மேட்டிமையான வருணாச்சிரமத் தூய்மையைக் காட்டிலும் நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்களின் அநாசாரமாக வெளிப்படும் அன்பே நாராயணனுக்கு இன்பமளிப்பது, எனவே பத்தர்களின் அநாசாரத்தைப் பழித்து அவர்களை இகழ்தல் முறையன்று . இது ஸ்ரீவைணவத்தின் சீரிய கொள்கை.

“அற்ற முரைக்கி லடைந்தவர்பா லம்புயைக்கோன்
குற்ற முணந்திகழும் கொள்கையனோ- எற்றேதன்
கன்றி னுடம்பின் வழுவன்றோ காதலிப்ப(து)
அன்றதனை யீன்றுகந்த ஆ. (ஞானாசாரம் 25)

கன்றினைச் சமீபத்தில் ஈன்ற பசு, வாஞ்சையுடன் கன்றின் மேலுள்ள வழும்பாகிய அழுக்கை நக்கி நக்கித் துடைக்கும். அது போல புத்தடியார்களின் புன்மையைக் கண்டு நாரணன் அவர்களை இகழான்; அவர்கள்பால் அவன் கொள்ளும் வாஞ்சையால் அப்புன்மைகளை இன்பமாகவே ஏற்றுக் கொள்வன்.

12 Replies to “இராமநுச கதி ”

  1. இது என்னங்க, ராமானுஜரைப் பற்றிய குரு பரம்பரைக் கதைகளை எல்லாம் பொய்யாக அடிக்கிறது? ராமானுஜர் ஜாதி ஆசாரம் பார்க்காததால் நிறைய பிரச்சினைகளை அனுபவித்தார், பெரிய நம்பியிலிருந்து, உறங்காவில்லியிலிருந்து திரும்பித் திரும்பி வரும் கரு. ராமானுஜர் // ஜகந்நாதரைப் பூசிக்கும் அருச்சகர்கள் செயல்கள் காண்போர் உள்ளத்தில் அருவருக்கத் தக்க அநாச்சாரம் கொண்டனவாக இருந்தன; அவர்கள் எச்சாதியினரொடுங் கூடிக் கலந்து உணவருந்துவாராகி இருந்தனர். // என்பது அவரது பிம்பத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கிறதே! வைஷ்ணவ தொன்மங்களில் ஊறிய யாராவது வாங்க!

  2. The author is completely off target. It is true that Ramanuja wanted to change the style of worship in the Puri Jaganath temple according to Aagama sastras.

    However, this was resisted by the priests & the Lord himself appearing in Udayavar’s dream told him not to do so. Ramanuja accepted it & left.

    Ramanuja never ever coerced anyone to convert to vaishnaivism. They did so as per their own accord.

    Who else, in spite of knowing that disclosing the “Om Namo Narayanaya ” mantra to others would lead him to hell, would climb up the temple tower & instruct the mantra to the world at large?

    Which saint has ever had this large heartedness?

    That is the reason why even his gurus became his disciples.

    Ramanuja was ever ready to accept his failings & saw Lord Narayana in each & every one.

    He was the first saint who allowed people of all castes, religion etc, to enter temples & assigned work to each of them.

    There is a sannidhi for the muslim princess “Thulukka Nachiyaar” in Srirangam temple which was constructed by him.

    An attempt was made on his life not once but thrice.

    To cast aspersions on his motive is not only objectionable but also way off the mark.

    It would be fitting to conclude with what Swami Vivekananda said about Ramanuja.

    India should have the intellect of Shankara & THE HEART OS RAMANUJA.

    Tamilhindu.con would do well in future not to publish such inaccurate & false articles about great saints.

    Bhagawad Ramanuja was, is & will be the greatest Mahapurusha ever to set foot on this earth.

    SRIMATHE RAMANUJAYA NAMAHA

  3. ஸ்ரீ3நாராயணகுருவின் தொண்டுகள் சாதனைகள் குறித்து எந்த தகவலும் தமிழ்இந்துவில் இல்லை.நினைற எழுதவேண்டும் என் கேட்டுக் கொள்கிறேன்.

  4. இது முழுதும் அழுக்காறு கொண்டு எழுதப்பட்டது .
    இதை எழுதியவரின் தரம் இதனால் தெரிய வருகிறது .

    சுரேஸு

  5. ராமானுஜரும் ,அவரது சாதி மறுப்பு புரட்சியும்
    I) ராமாநுச நூற்றந்தாதி யிலிருந்து சில சான்றுகள்
    ——————————————————————————————–
    ராமானுஜர் வாழ்ந்த காலத்தில்,அவரது சீடர் திருவரங்கத்தமுதனார் என்பவரால் எழுதப்பட்ட நூல் ராமாநுச நூற்றந்தாதி ஆகும் . https://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1301
    இதில் முதல் பாடல் –
    “பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் .”
    இதில் ராமாநுசர் -மாறன் என்னும் நம்மாழ்வார் அடி பணிந்து உய்ந்தவர் என்று வருகிறது .
    மாறன் நான்காம் வர்ணமான வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர் .

    இரண்டாம் பாடல் –
    “கள்ளார் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் ” -என்று வருகிறது .
    குறையல் பிரான் என்னும் திருமங்கை ஆழ்வார் ஐந்தாம் வர்ணமாகிய மிலேச்ச இனத்தை சேர்ந்தவர் .

    பத்தாம் பாடல் –
    “சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத் தாரியலும் சென்னி இராமானுசன் “.
    பாண் பெருமாள் என்னும் திருப்பாணாழ்வார் ஐந்தாம் குலமான பாணர் இனத்தை சேர்ந்தவர் .

    இவர்களின் அடிகளை பணிந்து உய்ந்தவர் ராமானுஜர் ஆவார்.

    அதாவது தான் ஒரு ப்ராம்மணராயிருந்தும் ,பிற சாதி வைணவர்களை தாள் பணிந்தார் /தெய்வத்திற்கும் மேலாக வணங்கினார்.
    எடுத்துக்காட்டாக சில பாடல்கள் மட்டும் இங்கு காட்டப்பட்டுள்ளன .

    II) ஆழ்வார் விக்கிரஹங்களிலிருந்து சில சான்றுகள்
    a)சீர்காழி அருகிலுள்ள -திருநகரி கோயிலில் -திருமங்கையாழ்வார் திருமேனி/ விக்ரஹம் சேவிக்கலாம் .அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது.
    https://guruparamparai.files.wordpress.com/2013/01/thirumangai-azhwar.jpg
    b)திருச்சி -உறையூர் கோயிலில் திருப்பாணாழ்வார் திருமேனி யினை சேவிக்கலாம் .அவர் பாதத்திலும் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .
    https://3.bp.blogspot.com/-_QxMF76nHco/TZrG1Jru8BI/AAAAAAAAAlk/0dEfvz4W-O4/s1600/Tiruppan.gif

    c)திருச்சி -திருவெள்ளறை கோயிலில் -குலசேகர ஆழ்வார் திருமேனி யினை சேவிக்கலாம் .அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .
    இவர் இரண்டாம் வருணமான க்ஷத்ரிய இனத்தைச் சேர்ந்தவர்.
    இங்கு அனைத்து ஆழ்வார்களையும் அவர்களது பாதங்களில் தவறாமல் ராமானுஜர் திருவுருவத்தினையும் சேவிக்கலாம் .

    d)திருநெல்வேலிக்கு அருகில் , ஆழ்வார் திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் சடாரியினை சேவிக்கலாம் . அதிலும் ராமானுஜர் திருவுருவம் காணப்படுகின்றது .

    III) இராமானுசர் அருளிச் செய்த பாயிரம் -சான்றுகள்
    இராமானுசர் தமிழில் ஆழ்வார்கள் அருளிய நூல்களுக்கு பாயிரம் (அ) தனியன் பாசுரம் இயற்றியுள்ளார் .
    ஆண்டாள் ,பெரியாழ்வார் ,தொண்டையடிப்பொடியாழ்வார் போன்ற அந்தண குலத்தார்க்கு எழுதாமல் ,மற்ற ஆழ்வார்களுக்கு மட்டும் எழுதினார் .
    குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழிக்கு ராமானுஜர் எழுதிய பாயிரம் இதோ –

    “இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
    தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் – பொன்னஞ்
    சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
    குல சேகரன் என்றே கூறு ”

    குலசேகராழ்வார் ஒரு க்ஷத்ரியர் ஆவார்.

    திருமங்கையாழ்வார் அருளிய பெரியதிருமொழிக்கு ராமானுஜர் எழுதிய பாயிரம் இதோ –
    “வாழி பரகாலன் வாழி கலிகன்றி
    வாழி குறையலூர் வாழ் வேந்தன் -வாழியரோ
    மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
    தூயோன் சுடர்மான வேல்”
    திருமங்கையாழ்வார் அப்ராமணர் குலத்தை சேர்ந்தவர் ஆவார்.
    எனவே ராமானுஜர் சாதி வருணங்களை பொருட்டாக கொள்வதுமில்லை . அதனை மீறி புரட்சி செய்தவர் ஆவார் .

    IV) ராமாநுசருடைய சீடர்கள் / ஆச்சார்யர்கள்
    a) ராமானுஜருக்கு அந்தரங்க சீடராயிருந்து அவருக்கு பால் காய்ச்சுதல் ,திருவாராதன பொருட்களை சித்தம் செய்தல் என்று PERONAL ASSITANT/ அணுக்க தொண்டராய் இருந்தவர் வடுக நம்பி ஆவார் .இவர் ப்ராஹ்மணர் அல்லர் .

    b) திருக்கச்சி நம்பிகளுக்கு சீடனாயிருந்து வைணவ சித்தாந்தம் கற்க ஆசைப்பட்டார் ராமானுஜர்.
    திருக்கச்சி நம்பிகள் அமுது செய்து மீதமாகும் சேஷதத்தினை(போனகம் செய்த சேடம் ) உண்ண ஆசைப்பட்டார் ராமானுஜர்.
    திருக்கச்சி நம்பிகள் மூன்றாம் வர்ணமாம் வைஸ்ய குலத்தைச் சேர்ந்தவர் ஆவார் .

    c) ராமானுஜர் தனது நித்தியகால பூஜைக்காக சிறிய வரதராஜர் விக்ரஹம் ஒன்றை வைத்திருந்தார் .
    அவருக்கு திருவாராதனம் செய்யும் முன்னர் பூதசுத்தி ,ஸ்தலசுத்தி செய்வார் .இவற்றால் திருப்தி அடையாது ,தனது அந்தரங்க சீடரான உறங்கா வில்லி தாசரது கரஸ்பர்சம் பெற்ற பின்னரே முழு சுத்தியானதாக திருப்தி அடைந்து ,அதன்பிறகு ஆராதனை/ஷோடச அங்க பூஜைகளை செய்வார் .இந்த உறங்கா வில்லி தாசரும் ஐந்தாம் வர்ணத்தவர்தான். முன்பு அகளங்க சோழனிடம் மெய்காப்பாளனாயும் / மல்லராகவும் இருந்தவர் . பின்னர் ராமாநுஜரிடம் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரானார்.

    அவரது சாதி மறுப்பு புரட்சியினால் வெறுப்புற்ற சாதி அந்தணர் அவருக்கு பிக்ஷை உணவில் விஷமிட்டனர் .
    இச் செய்திகள் “ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்” என்னும் நூலில் காணலாம் .

  6. தஞ்சமாம்பாள்
    ———————————

    குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
    நலந்தானிலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,
    வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
    கலந்தார், அடியார் தம்அடியார் எம் அடிகளே.

    ராமானுஜருடைய பூர்வாசிரம இல்லத்தரசியார் பெயர் தஞ்சமாம்பாள் என்பதாகும்.
    இவர் மநு, பராசரர், யாக்ஞவல்கியர், கௌதமர், ஹாரீதர், யமன், விஷ்ணு, சங்கர், லிகிதர், பிருஹஸ்பதி, தக்ஷன், அங்கிரஸ், பிரசேதர், ஸம்வர்த்தர், அசனஸ், அத்ரி, ஆபஸ்தம்பர், சாதாதபர் என்றிப்படிப் பதினெட்டு ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட ப்ரவ்ருத்தி ஆசாரங்களையே பெரிதாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த குலத்தில் பிறந்தவர் . இல்லத்தரசியாருக்கு குமாரில பட்டரின் பூர்வ மீமாம்ஸா மதத்தில் முழு பற்று(ஸ்மார்த்தர் ) இருந்தது .

    இராமானுசரோ “பண்டைநாளாலே திருமாலின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு, அவன் கோயில் சீயத்துப் பல் படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்” தொண்டக் குலத்தில் பிறந்தவர் . இவரது தாய்மாமன் பெரிய திருமலை நம்பிகள் -திருப்பதி – திருமலையில் திருவேங்கடத்தானது அணுக்கத் தொண்டர் ஆவார் .
    ராமானுஜர் மாறன் அடிபணிந்து ,அவரது பாக்கள் மன்னும் திருவாய்மொழி கற்று ,அதன்படி உத்தர மீமாம்ஸை என்னும் பிரம்ம ஸூத்திரத்திற்கு சரணாகதி வழியாக -உரையும் எழுதியவர் ஆவார் .
    இராமானுஜருக்கும் அவரது இல்லத்தரசியாருக்கும் பக்தி /ப்ரவ்ருத்தி ஆசாரங்கள் விஷயத்தில் பெரிய ,பெரிய பிணக்குகள் ஏற்பட்டது.
    அதனால் ,இல்லத்தரசியாரும் உம்முடன் இருந்து ஸ்ம்ருதி-தர்ம -அனாச்சாரமாக வாழ்வதைவிட எனது தகப்பனாருடன் ஆசாரங்களையே பெரிதாகக் கொண்டு வாழ்கிறேன் என்று பிரிந்து போனார் .

    ஆனால் பேராசிரியர் எழுதிய இவ்வ்யாசத்தில் –
    “என்னவோ “ ராமானுஜருக்கு பக்தி வந்தது ஜெகந்நாதம் நகரில்தான் என்பது தவறு .

    அவருக்கு பக்தி வந்தது திருமணத்திற்கு முன்னரே -பிறவிலேயே பெற்ற பேறு ஆகும் .(ஜாயமான கடாக்ஷம் ).
    அவருக்கு யமுனைத்துறைவரின் ஆசிகளும் இருந்தன .
    மேலும் திருமணத்திற்கு முன்னரே பெரிய திருமலை நம்பிகள் ,மற்றும் திருக்கச்சி நம்பிகளின் உபதேசங்களை பெற்றார் . சன்யாசியாகும் முன்னரே பெரிய நம்பிகளிடமும் கற்றார் .ஜெகந்நாதத்திற்கு செல்லும் முன்னரே திருக்கோஷ்டியூர் நம்பி ,திருவரங்க பெருமாள் அரையர் போன்ற ஆச்சார்யர்களிடம் உபதேசம் பெற்றார் .

    பெரிய திருமலை நம்பிகளிடம் ஒரு வருடம் ஸ்ரீமத் ராமாயணத்தில் வரும் சூக்ஷ்மார்த்தங்களை கற்றார் .
    ஜடாயு ,சபரி ,குகப்பெருமாள் போன்றோர் பக்தியும் அவருக்கு தெரியும் .
    இந்த ஸ்ரீமத் ராமாயணத்தில் இல்லாத ஸூக்ஷ்ம தர்மங்களா(ப்ரபத்தி) ,ஜெகந்நாதத்தில் அவர் கற்றது(பக்தி) ? நகைப்புக்கு உரியது உங்கள் வ்யாஸம் .
    பக்தி என்பது மடு என்னில் சரணாகதி என்பது சமுத்திரம்.
    பிராமணர்கள் ,அப்ராமணர்கள் பக்தி பற்றி விவாதம் ஏன் ?
    அவருக்கு மனிதர்களல்லாத ஜடாயு(பெரிய உடையார் ) ,விபீஷணாழ்வான் , அனுமன் (திருவடி ) ,சுக்ரீவன் (மஹாராஜர்) ஆகியோரது பக்தியும் தெரியுமே !!!
    (ஒரிஸ்ஸா) கௌடீய வைஷ்ணவர்கள் பக்தர்கள் . (தமிழக) திராவிட வைஷ்ணவர்கள் ப்ரபன்னர்கள்.

  7. முனைவர் அவர்களே ,

    /***அன்றதனை யீன்றுகந்த ஆ. (ஞானாசாரம் 25) ***/
    ஞானாசாரம் என்னும் நூலினை எழுதியவர் அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆவார்.
    இவர் காசியில் வாழ்ந்த ஒரு அத்வைதி ஆவார். இவரது இயற்பெயர் யக்ஞமூர்த்தி என்பதாகும். இவர் ஒருமுறை ராமாநுசருடன் வாதம் செய்ய அழைப்பு விடுத்தார் . அதில் சில சவால்களையும் முன்வைத்தார். அதாவது வாதில் தோற்பவர் 1)ஜெயித்தவரின் மதத்திற்கு மாற வேண்டும் ,2) ஜெயித்தவரின் பெயரை இட்டுக் கொள்ள வேண்டும் என்பவையே அவை.
    ராமாநுசருடன் 18 நாள்கள் தர்க்கம் செய்து பின்பு தோற்று எம்பெருமானார் ராமாநுசருடைய சீடரானார். காஞ்சிபுரம் வரதராஜர் பெயரான அருளாள பெருமாள் + ராமானுசரது பெயரான எம்பெருமானார் இரண்டையும் சேர்த்து இவருக்கு அருளாள பெருமாள் எம்பெருமானார் என்று தாஸ்ய நாமம் வாய்த்தது. இவருக்கு சன்யாசம் கொடுத்து தனியாக ஸ்ரீரங்கத்தில் ஒரு மடமும் கொடுத்தார் ராமானுஜர். அவரிடம் திருமலை அனந்தாழ்வார் போன்றோரை சீடராகவும் ஆக்கினார்.

    பின்பு ஒருசமயம் ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்த யாத்திரிகர்கள் சிலர் இங்கு எம்பெருமானார் மடம் எங்குள்ளது என்று வினவினார்கள். அதற்கு -“இங்கு இரண்டு எம்பெருமானார் மடங்கள் உள்ளன . அதில் நீவிர் செல்ல வேண்டிய மடம் எது ? “என்று விடை கிட்டியதாம். இதனை கேள்விப்பட்ட அருளாள பெருமாள் எம்பெருமானார், தமது மடத்தினை இடித்துவிட்டு ராமாநுசரிடமே சேர்ந்தார் என்பது சரித்திரம்.
    பின்னர் ராமானுஜரின் அறிவுரைப்படி தமிழில் ஞானாசாரம், ப்ரமேயசாரம் என்று இரண்டு நூல்கள் எழுதினார்.

    முனைவர் அவர்களே !! நீங்கள் அந்த நூல்வரிகளையே எடுத்து எம்பெருமானாருக்கே குறை இருப்பதாக காட்டுவது அறியாமை ஆகும் .

    “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு”

    “கற்க கசடற கற்பவை”

    சுரேஸு

  8. சித்து விளையாட்டுக்காரரும் ஜகதாசார்யரும்
    ———————————————————————————–

    ஆரணியில் ஒரு சாமியார் உண்டு .அவர் தலைமுறை தலைமுறையாக ;ஏதோ ஒரு சிறுதேவதையை உபாசனை செய்து , தன்னை நாடும் அன்பர்களுக்கு ஹிதம் செய்து தருகின்றார் .நானும் அவரை யாத்ருசிகமாக திருப்பதியிலே சந்தித்தேன் .
    பெரிய ஹை கோர்ட் வழக்குரைஞர்களும், மருத்துவர்களும் ,என்ஜினீயர்களும் ,அரசியல் வாதிகளும் அவர் பாதங்களில் தொழக் கண்டேன் .
    எத்தனையோ ஆண்டுகளாக பிள்ளை பேறு இல்லாதோருக்கு ,பிள்ளை வரம் தந்தார் ! திருமணம் நடாத்தினார் ! தேர்வு எழுதாமலேயே பாஸ் செய்ய வைத்தார்! டாக்டர் ஸீட் வாங்கி கொடுத்தார்; தீராத குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்தார் ! வியாதிகளை குணப்படுத்தினார் ! பேச்சு வராதவர்களை பேச வைத்தார் ! என்று அவரிடம் பல நூறு பிரமுகர்கள் ,அன்பர்கள் மொய்த்திருந்தனர். பாக்கியம் இருந்தால் உடனே பலிக்கும் .கர்மங்கள் காரணமாக இடையூறு ஏற்பட்டால் சில அன்பர்களுக்கு இரண்டு வருடங்கள் கழித்தும் காரியம் காய் கூடும் என்று நண்பர் சொன்னார் . சென்னையில் வார இறுதிநாட்களில் உபன்யாசம் செய்து ,அன்னதானம் செய்கின்றார்.

    அலுவலகத்தில் பணிபுரியும் ,ஒரு அய்யங்கார் நண்பர் ,எனக்கும் என் மேலாளருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார் . அவருடன் இரண்டு முறை சென்னை சென்று கலந்து கொண்டேன் .அவரது பேச்சிலே அஹங்காரம் தாண்டவமாடும் . ஒருமுறை மார்கழி மாதம் ,திருப்பாவை உபன்யாசம் செய்து கொண்டிருந்தார் . அன்றைக்கு -“அங்கண் மா ஞசாலத்தரசர்- “21 ம் பாசுரம் உபன்யாசம் .பாமரனுக்கு புரியும் படியாக பாமர பாஷையிலே பேசினார் .அதிலே ஆண்டாள் கல்யாணம் பற்றிய பேச்சும் வந்தது .திடீரென அவரது மகளுடைய திருமணம் பற்றிய நினைவு வர பெற்றார் . மிக்க உற்சாகத்துடன் ,தன்னுடைய மகளுடைய திருமணத்தை எவ்வளவு ஆடம்பரமாக நடத்தினார் என்றும் அவ்வாறு சீரும் சிறப்புமாக ஆண்டாள் நாச்சியாருக்கும் கூட நடந்திருக்காது என்றார் .எனக்கு ஒரே வெறுப்பாகிப் போனது .அன்றிலிருந்து நண்பருடன் அங்கு செல்லவில்லை .

    இதுபோன்று சில சிறுதேவதையை உபாசனை செய்து ,சித்து விளையாட்டு காட்டும் சில சாமியார்கள் நாட்டில் உண்டு .ஆனால் அவர்களுக்கு உபநிஷத் ,நிவ்ருத்தி மார்க்கம் ,பிரபத்தி ,பக்தி ,மோக்ஷம் ,பரமாத்மா என்றெல்லாம் தெரியாது . மோக்ஷம் வாங்கி தரவும் இயலாது .

    இவர்களுக்கு இறைவனது மெய்யடியாரான ஆழ்வார்கள் ,ஆச்சார்யர்கள் பற்றியும் ஆழமாகத் தெரியாது .

    சிறுதேவதையை உபாசனை செய்து ,சித்து விளையாட்டு காட்டும் இவர்கள் “மஹா பக்த விஜயம்” ,”பகவத் கீதை உரை ” என்று நூல்களை எழுதுவதுண்டு .

    அதாவது சுய நிதி இஞ்சினீரிங் கல்லூரியில் படித்த ஒருவன் , பட்டம் பெற்று அங்கேயே விரிவுரையாளர் ஆவது போல . இவர்களை

    முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
    பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே -தம் நெஞ்சில்
    தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச
    வாற்ற தென்பர் மூர்க்கர் ஆவார் .
    -அருளிய -உபதேச இரத்தின மாலை -71 என்று கண்டிக்கின்றார் மணவாள மாமுனிகள்.

    (i)ப்ரம்ம சூத்ரம்(ஸ்ரீ பாஷ்யம்-ராமானுஜர் சொல்ல கூரத்தாழ்வார்/எங்களாழ்வான் எழுதியது ) ,(ii)பகவத் கீதா(கீதா பாஷ்யம்-தானே எழுதியது ) ,(iii)உபநிஷத்துக்கள் (ரங்க ராமானுஜர் எழுதியது) என்று பிரஸ்தானத்ரயத்திற்கும் பாஷ்யம் உண்டாக்கி ,4000 திவ்ய ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானம் உண்டாக்கி ,கத்ய த்ரயம் ,வேதாந்த ஸங்கிரஹம் ,நித்திய ஆஹ்னிகம் என்று பல நூல்களை அருளி ,பாரதம் முழுதும் திக் விஜயம் செய்து விஷிஷ்டாத்வைத சித்தாந்தத்தினை தேசம் முழுதும் பரவச செய்து ,சாதி மறுப்பு புரட்சி செய்த எங்கள் ராமானுஜர் எங்கே ? சந்திரதத்தர் எங்கே ?

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரஹஸ்ய மந்த்ர வ்யாக்யான நூல் – முமுக்ஷுப்படி என்பதாம் .
    ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய தர்மங்கள் பற்றிய நூல் -ஸ்ரீவசன பூஷணம் என்பதாம் .
    இவற்றையும் மேலும் 16 ரஹஸ்ய க்ரந்தங்களும் அருளிச் செய்தவர் பிள்ளை லோகாச்சார்யார் என்னும் மஹாசார்யர் ஆவார் .இவர் திருமணம் புரியாமல் திருமாலுக்கும் ,அவரது அடியாருக்கு தொண்டு புரிந்து 90 வருடங்கள் வாழ்ந்தவர் . இவரது திருத்தம்பியார் அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளியது “மாறன் மனம் ” என்னும் “ஆசார்ய வைபவம் ” என்னும் நூலாகும் . மேற் சொன்ன நூல்களை ,ஞ்சானம் -அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்து கற்க வேண்டும் . இவைகளுக்கு மூலம் ஆழ்வார்கள் அருளிய 24 ப்ரபந்தங்களே ஆகும்.

    நடுநிலையாளர்களுக்கு ஒரு கேள்வி ?

    வைஷ்ணவர்களுக்கு – ஆழ்வார்கள் ,ஆசார்யர்கள் சொன்னது ப்ரமாணமா ? அல்லது யாரோ சித்து விளையாட்டுக்காரன் சொன்னது ப்ரமாணமா ?
    இப்பிரபஞ்சத்திலேயே வெறுமனே இறைவனது அருளாலே அனைத்தும் அறிந்தவர் ,மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் நம்மாழ்வார் ஒருவரே.

    இதனை எப்படி நம்பலாம் என்று நீவிர் கேளுங்கள் ?
    அவரது திருவாய்மொழியில் ,வ்யாஸர் சொன்ன ப்ரம்ம சூத்திரங்கள் =>545 சூத்திரங்கள், அடைவு கெடாமல் சொல்லப்பட்டன.

    சாந்தோக்ய உபநிஷத்தில்,இறைவனை அடைந்தவருடைய எண்குணங்கள் -“அபஹதபாப்மா ,விஜரோ ,விம்ருத்யு: ,அசோகோ,விஜிகித்சோ,அபிபாஸ :, சத்ய காம :,சத்ய சங்கல்ப: என்று குணங்கள் சொல்லப்பட்டன .
    அவையாவன – பாபமின்மை ,கிழத்தனமின்மை ,மரணமின்மை,சோகமின்மை ,பசியின்மை ,தாகமின்மை , கண்ணன் மீது காதல், எண்ணியது கிடைக்கப் பெறல் .

    நம்மாழ்வார் தான் பிறந்தது முதல் ,அழுதது கிடையாது
    அன்னையிடம் பாலோ அருந்தியதில்லை .கண் திறந்ததில்லை .துளி அசைவு கிடையாது .நீரும் அருந்தவில்லை .மலசலம் கழிக்கவில்லை .
    வெறும் மூச்சு சுவாசம் இருந்தது .இவரை திருக்குருகூர் ,ஆதிபிரான் சந்நிதியில் விட்டு புலம்பினார் பெற்றோர் .
    சடக்கென தவழ்ந்து சென்று அங்குள்ள புளிய மர பொந்தினுள் சென்று யோகத்தினில் அமர்ந்தார் . 16 ஆண்டுகளில் வளர் பிறை சந்திரன் ,கண்ணபிரான் போன்று வளர்ச்சி இருந்தது .பிறகு மதுரகவிகள் என்னும் சீடர் வந்து சேர்ந்தார் .அவருக்கு ரிக் வேத ஸாரமாக -திருவிருத்தம் ,யஜுர்வேத ஸாரமாக -திருவாசிரியம் ,அதர்வண வேத ஸாரமாக -பெரிய திருவந்தாதி மற்றும் சாமவேத ஸாரமாக -திருவாய்மொழி என்னும் பிரபந்தங்களை அருளிக் கொடுத்தார் – தனது 32ம் வயதில் கண்ணனைப் போன்றும் /ராமனைப் போன்றும் நேரே வைகுந்தம் அடைந்தார் .
    அவர் பிறக்கும் போது ஒரு குழந்தையின் தனது முற்பிறப்பு ஸ்மரணையை மறப்பிக்கும் சடம் என்கிற வாயுவினை தனது ஹூங்காரத்தால் வென்றதால் அவருக்கு சடகோபர் /சடாரி என்று திருநாமம் ஏற்பட்டது . அவருக்கு பாபமில்லை ,கிழத்தனமில்லை ,மரணமில்லை ,சோகமில்லை ,பசியில்லை ,தாகமில்லை ,கண்ணனையே உண்ணும்- சோறு பருகு நீர் -திண்ணும் வெற்றிலை என்று இருந்தவர் (சத்ய காமம் ), தான் நினைத்தபோது 32 திவ்ய தேச எம்பெருமான்களும் அவர் இருந்த குருகூரிலே காட்சி அளித்தனர் (சத்ய சங்கல்பம்).

    இப்பொழுது சொல்லுங்கள் ! நாம் யாரிடமிருந்து- பக்தி அல்லது சரணாகதியினை கற்க வேண்டும் ?

    ஆழ்வார் வழி வந்த ஆச்சார்யர்களிடமா அல்லது சித்து விளையாட்டுக்காரரிடமா ? சந்திரதத்தரை பாமரர்கள் நம்பலாம் !! பேராசிரியரே நீவிருமா ?

  9. /***
    மேட்டிமையான வருணாச்சிரமத் தூய்மையைக் காட்டிலும் நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்களின் அநாசாரமாக வெளிப்படும் அன்பே நாராயணனுக்கு இன்பமளிப்பது,
    ***/

    வருணாச்சிரமத் தூய்மை மேட்டிமையானதா ? இதற்கு பதில்
    ஜகத்குரு காஞ்சி பெரியவர் அருளிச் செய்த, தெய்வத்தின் குரல் 2 ம் பாகம் படிக்கவும்.
    https://www.kamakoti.org/tamil/2dk1.htm

    “புராண இதிஹாஸங்கள் பக்தியைப் பிரதானமாகச் சொல்கின்றன. ஆனால் நாம் தினமும் அறுபது நாழியும் பக்தி பண்ணிக்கொண்டு, பூஜையும் தியானமும் பண்ணிக்கொண்டு, ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? முடியாதே! குடும்பத்துக்காக நாம் அநேக காரியங்கள் செய்ய வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது போன்றதைச் செய்யவேண்டும். இது போகவும் மிச்ச நாழி முழுதும் பூஜையிலேயே இருப்பது என்றால் முடியாது. அலுப்புத் தட்டிப் போகும். வேறு ஸத்கர்மாக்கள் நமக்கு வேண்டும். அவற்றை எங்கேயிருந்து தெரிந்து கொள்வது?

    தர்ம சாஸ்திரங்களிலிருந்துதான்.

    பதினாலு வித்யைகளில் புராணத்துக்கப்புறம் கடைசியாக வருவது இந்த தர்ம சாஸ்திரமே.

    புராண புருஷர்கள் நமக்கு லட்சியத்தைக் காட்டுகிறார்கள். அந்த லட்சியத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம். நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று வேதத்தில் அங்கங்கே உதிரியாகச் சொல்லியிருக்கிறவற்றையெல்லாம் நன்றாக வகைப் படுத்தி விவரமாகச் சொல்கிற வேத உபாங்கம் இது.

    குடும்பக் காரியம், சொந்தக் காரியம், குளிப்பது, சாப்பிடுவது முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரு நிர்ணயப்படி, நியதிப்படி செய்யவேண்டும். வேத தர்மத்தில் மநுஷ்ய வாழ்வின் ஸகல அம்சங்களையும் ஆத்மாபிவிருத்திக்கு அநுகூலமாக ஆக்கி விதிகள் போட்டிருக்கிறது. இப்படிப் படுத்துக் கொண்டால் சிரேயஸ், இப்படி ட்ரெஸ் பண்ணிக்கொண்டால் அது ஆத்மாவுக்கு நல்லது, இப்படி வீடு கட்டினால்தான் அநுஷ்டானத்துக்கு ஸாதகமாக இருக்கும் என்பதாக வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மதத்தோடு அது சம்பந்தப்படுத்தி விடுகிறது. லௌகிக வாழ்க்கை (secular life), மத வாழ்க்கை (religious life) என்று அது இரண்டாகப் பிரிக்கவில்லை. லௌகிகம் கூட மதத்தில் கொண்டு சேர்க்கும்படியாகவே வேத தர்மம் அமைந்திருக்கிறது. எந்தக் கர்மாவைப் பண்ணினாலும் அதை மந்திர பூர்வமாகச் செய்யும்படிப் பண்ணி ஆத்மாபிவிருத்திக்கு அங்கமாக ஆக்கிவிடுகிறது. லௌகிகத்தையும் ஆத்மிகத்தையும் சேர்த்துக் கொடுப்பது போலவே, தனி மநுஷ்யன் தன் சிரேயஸுக்காக ( individual salvation)காகப் பண்ண வேண்டியதிலேயே ஸமூக வாழ்க்கையின் ஒழுங்கும், லோக க்ஷேமமும் (general welfare -ம்) சேரும்படியாக இணைத்துக் கொடுத்திருக்கிறது.

    இப்போது நாம் தெரிந்து கொண்டிருக்கிற புராணங்களிலுள்ள பக்தி வேதத்திலே இருக்கிறது. ஆனால் அதோடுகூட ஏகப்பட்ட கர்மாவும் இருக்கிறது. பக்தியையே பூஜை என்ற கர்மாவாகப் பண்ணும்போது அதற்கும் நிறைய விதிகள் இருக்கின்றன. பூஜையோடு கூட அநேக யாகங்கள், சிராத்தம், தர்ப்பணம் எல்லாம் வேத தர்மத்துக்கு வெகு முக்யமாக இருக்கின்றன.

    வேதத்தில் இத்தனையும் இருக்கின்றன. ஆனால் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் முறைப்படுத்தி (Codify -பண்ணி) கொடுத்திருக்கவில்லை. ஒவ்வொரு கர்மாவுக்கும் procedure விரித்துச் சொல்லி இருக்கவில்லை.

    “வேதோ (அ) கிலோ தர்ம மூலம்” என்று மநு சொல்கிறபடி வேதந்தான் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்ற நெறிகளுக்கும் காரியங்களுக்கும் மூலமாக, வேராக, ஊற்றாக இருக்கிறது.

    ஆத்ம க்ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோக க்ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தருவது வேதம். இந்த இரண்டும் ஏற்பட எது உதவுகிறதோ அதுதான் ‘தர்மம்’ என்பது. அந்த தர்ம மூலமாக வேதம் இருப்பது வாஸ்தவம்தான். வேதோ (அ)கிலோ தர்ம மூலம்.

    ஆனால் வேதங்களைப் பார்த்தால் ஒரு கிரமமாக, திட்டவட்டமாக நாம் செய்ய வேண்டியவற்றுக்கு ‘லிஸ்ட்’ இல்லையே! இப்படி இப்படி செய்ய வேண்டுமென்ற விரிவான விளக்கமும் இல்லையே! அனந்தமான வேதத்தில் நமக்குக் கிடைத்திருப்பதே கொஞ்சந்தான். நமக்குக் கிடைத்திருக்கிற வேத வாக்கியங்களைப் பார்த்தாலும் அவற்றில் அநேகத்துக்கு அர்த்தங்கூட முழுக்கத் தெரிய மாட்டேன் என்கிறதே!

    இப்படி இருக்கிற வேதங்களிலிருந்துதான் கல்பம் என்கிற ஆறாவது வேதாங்கத்தில் உள்ள தர்ம ஸூத்ரங்களும் க்ருஹ்ய ஸூத்ரங்களும் ச்ரெளத ஸூத்ரங்களும் ஒருத்தன் பண்ண வேண்டிய கர்மாக்களைத் திரட்டி ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கின்றன. ஆனால் இதுவும் சுருக்கமாகத்தான் இருக்கும். எல்லா அம்சங்களையும் ஒரே இடத்தில் சொல்வதாகவும் இராது. இவையும் விரிவான- guide ஆக இல்லை. இவற்றை சந்தேகத்துக்கு இடமில்லாமல் விரித்துச் சொல்கிறவைதான் தர்ம சாஸ்திரங்கள்.

    தர்ம ஸூத்ரங்கள் (ஆபஸ்தம்பர், கௌதமர் முதலானவர்கள் செய்தவை) சின்னச் சின்ன வாசகங்களாக ஸூத்ர லக்ஷணப்படி இருக்கும். ஸூத்ரம் என்றால் ரத்னச் சுருக்கமாகத்தான் இருக்க வேண்டும். தர்ம சாஸ்திரங்கள் என்கிற ஸ்மிருதிகள் (மநு, யாக்ஞவல்கியர், பராசரர் முதலானவர்கள் செய்தவை) ச்லோக ரூபத்தில் விரிவாக இருக்கும்.

    ஆனால் எல்லாவற்றிற்கும் பொதுவான ஆதாரம் வேதந்தான். நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு வேதத்தின் ஆக்ஞைகளைத்தான் மேற்கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். வேதக் கட்டளைகளை ஓரளவுக்கு முறைப்படுத்திச் சொல்கிற கல்பத்தை நன்றாக அலசி விஸ்தாரம் பண்ணுவதே தர்ம சாஸ்திரம். யக்ஞ பூமி நிர்மாணம், க்ருஹ நிர்மாணம் போன்றவற்றையே கல்பம் அதிகம் சொல்கிறதென்றால் மநுஷ்யனுக்கு ஸகல விதத்திலுமான நடத்தைமுறையையும் (code of conduct) விவரமாகச் சொல்வது தர்ம சாஸ்திரம்.

    “நான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இந்தக் காரியத்தைச் செய்வது சரியா, தப்பா என்று வேதத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே! ‘அநந்தா வை வேதா:’ என்றபடி வேதம் அளவு கடந்ததாக அல்லவா இருக்கிறது? இவற்றில் பெரும்பாலானவை இப்போது மறைந்தே போய் விட்டன. அதனால் எங்கே இந்தக் காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லையே! இவை எல்லாவற்றையும் படித்தவர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லையே? என்ன செய்வது?” என்று கேள்வி.

    ஸமுத்திரம் மாதிரி விரிந்து கிடக்கிற வேதங்களிலிருந்து நமக்கு வேண்டிய காரியங்களைப் பொறுக்கி எடுப்பது அஸாத்யம்தான்.

    “இப்படி செய் என்று வேதத்தில் இதைப்பற்றிச் சொல்லியிருப்பது தெரிந்தால் வேத வாக்கியப்படியே செய்து விடுவேன். அது தெரியாதபோது என்ன செய்வது?”

    இதற்கு மநு பதில் சொல்கிறார்: “சரி, அப்படியானால் ஒன்று சொல்கிறேன். அந்த வேதங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்த மஹரிஷிகள் ஸ்ம்ருதிகள் என்று செய்திருக்கிறார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்” என்கிறார். ஸ்ம்ருதி என்பதே தர்ம சாஸ்திரம்.

    வேதோகிலோ தர்மமூலம்| தத்விதாம் ச ஸ்ம்ருதிசீலே|

    “ஸ்ம்ருதி” என்றால் நினைவுக் குறிப்பு; விஸ்ம்ருதி என்றால் பைத்தியம். “வேதத்துக்கு ஸ்ம்ருதி இருக்கிறதே! அதாவது, நினைவுக் குறிப்பு (notes) இருக்கிறதே! வேதங்களையெல்லாம் நன்றாக உணர்ந்த மஹரிஷிகள் அவற்றிலுள்ள தர்மங்களையும், கர்மங்களையும் ஒரே இடத்தில் தொகுத்து முறைப்படுத்திக் குறிப்பாக எழுதி வைத்தவையே இவை. இந்த ஸ்மிருதிகளில் நமக்கு நன்றாக அர்த்தம் புரிகிற பாஷைகளில் எழுதப்பட்டவை. அவற்றைப் பார். நீ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படிச் செய்ய வேண்டும் என்பவையெல்லாம் அவற்றில் ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது” என்கிறார் மநு. “தர்ம சாஸ்திரம்” என்று சொல்வது இந்த ஸ்ம்ருதிகளைத்தான்.

    வேதம் சொல்லும் காரியங்களை, அநுஷ்டானங்களை எப்படிப் பண்ண வேண்டும் என்று வேதாங்கங்களில் ஆறாவதாக உள்ள ‘கல்பம்’ சொல்கிறது. கல்பத்தில் அடங்கும் க்ருஹ்ய ஸூத்ரங்களும், ச்ரௌத ஸூத்ரங்களும், தர்ம ஸூத்ரங்களும் வேள்வி முதலானவற்றின் செய்முறையைச் சொல்கின்றன. இதையே ஒரு ஜீவன் கருவாக மாதாவின் கர்ப்பத்தில் உருவாவதிலிருந்து, அது பிறந்து வளர்ந்து, கலியாணம் பண்ணிக்கொண்டு, குடும்பம் நடத்தி, கடைசியில் சிதையில் வைத்து தகனம் செய்யப்படும் வரையில் இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று அடியிலிருந்து நுனி வரையில் நுணுக்கமாகச் சொல்பவையே ஸ்ம்ருதிகள். தினந்தினமும் எழுந்திருந்ததிலிருந்து தூங்குகிற வரையில் ஒருத்தன் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி யெப்படிச் செய்ய வேண்டும் என்று அது routine போட்டுக் கொடுத்து விடுகிறது.

    ஸ்மிருதியைப் பார்த்து விட்டால் போதும். நம் மதப்படி நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன என்பது பூர்ணமாகத் தெரிந்துவிடும். “

    வார்த்தைக்கு வார்த்தை “அடியேன்” என்று சொல்லும் ஸ்ரீவைஷ்ணவர் உமக்கு மேட்டிமைகாரரா ?
    “என் வீட்டிற்கு நீங்கள் வரவும்” என்பதை அவர்கள் பாஷையில்
    “அடியேன் குடிசைக்கு தேவரீர் பொன்னடி சாற்ற வேண்டும்” என்பர்.

    மேட்டிமைகாரர் இங்கிலாந்தில் வாழும் LORDS ராபர்ட் கிளைவ் , காரன் வாலிஸ் ,டல்ஹஸ்சி ,வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் BARRONS தான்.

    பொறுமையாக ஒருமுறைக்கு இருமுறை, காஞ்சி பெரியவா கூறிய 15 பக்கங்கள் வாசித்தால் வருணாச்சிரமத் தூய்மை என்றால் என்ன ? அதன் இன்றியமையாமை பற்றியும் தெரிய வரும் .

    அவை பக்தி மற்றும் சரணாகதிக்கு அங்கங்கள் தான் .
    அவையின்றி பக்தி கிடையாது .

  10. /***அன்றதனை யீன்றுகந்த ஆ. (ஞானாசாரம் 25) ***/

    ஞானாசாரம் என்னும் நூலினை எழுதியவர் அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆவார்.
    இவர் காசியில் வாழ்ந்த ஒரு அத்வைதி ஆவார். இவரது இயற்பெயர் யக்ஞமூர்த்தி என்பதாகும். இவர் ஒருமுறை ராமாநுசருடன் வாதம் செய்ய அழைப்பு விடுத்தார் . அதில் சில சவால்களையும் முன்வைத்தார். அதாவது வாதில் தோற்பவர் 1)ஜெயித்தவரின் மதத்திற்கு மாற வேண்டும் ,2) ஜெயித்தவரின் பெயரை இட்டுக் கொள்ள வேண்டும் என்பவையே அவை.
    ராமாநுசருடன் 18 நாள்கள் தர்க்கம் செய்து பின்பு தோற்று எம்பெருமானார் ராமாநுசருடைய சீடரானார். காஞ்சிபுரம் வரதராஜர் பெயரான அருளாள பெருமாள் + ராமானுசரது பெயரான எம்பெருமானார் இரண்டையும் சேர்த்து இவருக்கு அருளாள பெருமாள் எம்பெருமானார் என்று தாஸ்ய நாமம் வாய்த்தது. இவருக்கு சன்யாசம் கொடுத்து தனியாக ஸ்ரீரங்கத்தில் ஒரு மடமும் கொடுத்தார் ராமானுஜர். அவரிடம் திருமலை அனந்தாழ்வார் போன்றோரை சீடராகவும் ஆக்கினார்.

    பின்பு ஒருசமயம் ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்த யாத்திரிகர்கள் சிலர் இங்கு எம்பெருமானார் மடம் எங்குள்ளது என்று வினவினார்கள். அதற்கு -“இங்கு இரண்டு எம்பெருமானார் மடங்கள் உள்ளன . அதில் நீவிர் செல்ல வேண்டிய மடம் எது ? “என்று விடை கிட்டியதாம். இதனை கேள்விப்பட்ட அருளாள பெருமாள் எம்பெருமானார், தமது மடத்தினை இடித்துவிட்டு ராமாநுசரிடமே சேர்ந்தார் என்பது சரித்திரம்.
    பின்னர் ராமானுஜரின் அறிவுரைப்படி தமிழில் ஞானாசாரம், ப்ரமேயசாரம் என்று இரண்டு நூல்கள் எழுதினார்.

    ஞானாசாரம் நூல்வரிகளையே எடுத்தாண்டு எம்பெருமானாருக்கே குறை இருப்பதாக காட்டுவது பெரிய தமாஷ் ஆகும் .
    அன்புடன் ,
    சுரேசு

  11. சப்த பிரமாணம் ,ஸ்ம்ருதி மற்றும் ஆகமம்
    *************************************************
    /*** மேட்டிமையான வருணாச்சிரமத் தூய்மையைக் காட்டிலும் நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்களின் அநாசாரமாக வெளிப்படும் அன்பே நாராயணனுக்கு இன்பமளிப்பது, எனவே பத்தர்களின் அநாசாரத்தைப் பழித்து அவர்களை இகழ்தல் முறையன்று .***/
    இக்கட்டுரையில் முழுக்க முழுக்க பல முரணான குறிப்புக்களை காண்கிறேன் .
    1) ஜெகந்நாதம் நகரில் வாழும் அர்ச்சகர்கள் கௌடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள்.
    2) அவர்களின் ஆகமம் நாரத பாஞ்சராத்திரம் என்பதாகும்.
    அவர்கள் ஒன்றும் பாமரபத்தர்கள் அல்ல.

    சப்த பிரமாணம்
    ********************************************

    இறைவனையோ ,அவனை வணங்கும் முறைகளையோ ,அவனை அடையும் வழிகளையோ ,அவனை அடைந்த பிறகு கிடைக்கும் பேற்றினையோ சொல்வது சப்த பிரமாணம் மட்டுமே. ப்ரம்ம சூத்திரம் -1.1.3 – “சாஸ்த்ர யோநித்வாத்”.
    “மயர்வற மதிநலம் அருளினன் எவன்; அவன் துயரறு சுடரடி தொழுது ஏழு என் மனனே” – திருவாய்மொழி-1-1-1.
    மற்றபடி ப்ரயக்ஷ ப்ரமாணமோ அல்லது அனுமானமோ இதற்கு உதவாது.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அமெரிக்கனையோ ,ஒரு ஜப்பான்காரனையோ ,ஒரு ஐரோப்பியனையோ – வந்தனம் ,அர்ச்சனம் ,தாஸ்யம் , ஸ்மரணம் ,கீர்த்தனம் ,ஸ்ரவணம் என்று கேட்டால் திரு திரு என முழிப்பர்.
    இஸ்கான் ஸ்தாபகர் ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் உலகெங்கிலும் சென்று 108 கோயில்களை நிறுவி மேலைநாட்டு மிலேச்சராயிப்பவர்களை திருத்தி பிராம்மணர் என்றும் அர்ச்சகர் என்றும் மாற்றினார். இன்று சென்னை இஸ்கான் தலைவராயிருப்பவர் “பானு மஹராஜ்” என்னும் ஜப்பானிய சந்நியாசி ஆவார்.
    அங்கு கிருஷ்ணா விக்ரஹ பூசனை செய்பவர்களுள் ஒருவர் ஜெர்மனிகார அர்ச்சகர் ஆவார். அகில உலக இஸ்கான் தலைவராயிருப்பவர் “ஆசார்யபாதா” என்னும் அமெரிக்க சந்நியாசி ஆவார்.
    இன்று மேலைநாட்டினர்
    ஸ்மரணம் – விஷ்ணுவை மனத்தால் நினைத்தல் ,
    கீர்த்தனம் – வாயால் “ஹரே கிருஷ்ணா” என்று பாடுதல்,
    அர்ச்சனம் – பகவானுக்கு பூசனை புரிதல் ,திருநாமம் சொல்லுதல் (பாஞ்சராத்ரா ஆகமம், வேதம்),
    ஸ்ரவணம் – அவன் புகழை காதால் கேட்டல்(புராணம் –இதிகாசம்),
    வந்தனம் -உடலால் நமஸ்காரம் செய்தல் என்றும் நமக்கே கற்றுக் கொடுக்கின்றனர்.
    இதுவே சப்த பிரமாணம் கொண்டு ஸ்ரீல பிரபுபாதா செய்த மாற்றம் ஆகும் .

    அவர்கள் டிவி பார்ப்பதில்லை ,செய்தித்தாள் படிப்பதில்லை ,டி ,காபி அருந்துவதில்லை . ஒரு நாளைக்கு இருமுறை தான் ஆகாரம் .ஏகாதசி விரதம் அன்று இரவு மட்டுமே ஆகாரம் ,காலையில் 3 .3௦ துயிலெழுதல் ,மாலையில் 7.30 உறக்கம் ,108 x 16 முறை “ஹரே கிருஷ்ணா” மஹா மந்த்ர ஜபம் , உறங்கினால் குளிக்கணும் ,மலம் கழித்தால் குளிக்கணும் என்று கட்டுபாடு .
    6 முறை கடவுள் வழிபாடு என்று ஆசாரங்கள், அனுஷ்டானங்கள் உண்டு.
    இவையெல்லாம் ஸ்ம்ருதி ,புராணம்- இதிகாசம் ,ஆகமம் ,ஸ்ருதி வழியாகத்தான் கற்க முடியும் .இவற்றிக்கு மூலம் ரிஷிகள்தான்(மந்த்ர த்ரஷ்டா ) .

    எனவே ஜெகந்நாதம் நகரில் வாழும் அர்ச்சகர்கள் – பாமரபத்தர்கள்
    என்று ஒரு வாதத்திற்கு மாத்திரம் எடுத்துக் கொண்டால் ,

    1) அவர்களுக்கு இறைவனைப் பற்றி சொல்லி பத்தியினை வளர்த்தது யார் ?
    “ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் மடுத்து பேரமர் காதல் கடல் புரைய” விளைவித்தது யார் ?
    “குழையும் வாள்முகத்து ஏழையை தொலைவில்லி மங்களம் கொண்டுபுக்கு
    இழைக்கோள் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை” காட்டியது யார் ?
    “ஆவி குமைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பலநீ காட்டாதே ” என்று விஷய வைராக்கியம் விளைவித்தது யார்?

    2) குளிக்கவும் ,சாத்வீக உணவு -பிரசாதம் தயாரிக்கவும் ,அர்ச்சனை செய்யவும் ,திருமஞ்சனம் செய்யவும் ,ஸ்தோத்திரங்கள் சொல்லவும் ,வேதங்கள் ஓதவும் ,
    கோயில் கட்ட -அதனை பராமரிக்க-சுத்தி செய்ய -கும்பாபிஷேகம் செய்ய சொல்லிக் கொடுத்தது யார் ?

    3) அசுத்தம் ,களவு ,பொய், விபச்சாரம் ,கொலை ,புலால் உண்ணல் ,இந்த்ரிய போகம் ,
    மனத்தால் போகம் ,வாயினால் வசவு – கூடாது, இவைகளுக்கு தண்டனை உண்டு என்று சொல்லித் தந்தது யார் ?

    4) இவ்வாறெல்லாம் செய்தால் தீயன அகலும் ,புருஷார்த்தங்கள் கிட்டும் என்றும் சொல்லித் தந்தது யார் ?

    குரு என்பவர் வெறுமனே க்ஞானம் போதிப்பவர் மட்டுமே .
    ஆனால் ஆசாரியன் என்பவர்தான் க்ஞானம் போதித்து ,அதன்படி நடந்து காட்டி ,சீடனை அதன்படி நடக்க செய்து ,அவனது ஒவ்வொரு படியிலும் -முன்னேற்றி தன்னைப் போலே ஆக்குவார்.

    எனவே கோயில் அர்ச்சகம் என்பது ஒரு ஆசாரியன் கீழே வாழ்ந்து ,அவனது ஆசாரங்களை கற்று ,வேதம் ஓத,யாகம் நடத்த கற்றுக் கொண்டு பின் அதன்படி நடக்கும் அந்தணரால்தான் முடியுமே தவிர ,
    பாமரர்களால் முடியாது .

  12. வர்ணாஸ்ரம தூய்மை & நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்கள்
    ———————————————————————
    செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
    செய்வான் இன்றனகளும் யானே என்னும்,
    செய்துமுன் இறந்தனவும் யானே என்னும்
    செய்கைப் பயனுண்பேனும் யானே என்னும்,
    செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
    செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
    செய்ய உவுலகத்தீர்க்கு இவையென் சொல்லுகேன்
    செய்ய கனிவாய் இளமான் திறத்தே.

    1. கண்ணனுடன் குரவை கூத்து புரிந்த 5 லக்ஷம் குடி கோபியர்களுக்கு ,வர்ணாசிரமம் தெரியாதுதான் .
    ஆனால் அவர்கள் முற்பிறவியில் தண்டகாரண்ய ரிஷிகளாயிருந்து ,ராமனை அடைய அவாவுற்று ,
    அப்பிறவியில் மணக்க முடியாமல் போனது . ஏனெனில் பெருமாளும்(ராமனும்) ஏகபத்தினி விரதன்; இவர்களும் ஆண்களாய்ப் போனதுதான். அவர்கள்தாம் மறு பிறப்பில் கோபியராய்ப் பிறந்து எண்ணியது எய்தப் பெற்றனர் /பெறாப்பேறு பெற்றனர்.
    எனவே கோபியரும் வர்ணாஸ்ரம தர்மிகள் தாம் .

    2. கண்ணனுடன் மாடு மேய்த்த பல்லாயிரம் கோப சிறுவர்களை பற்றிக் கேளுங்கள் !
    அவர்கள் அனைவரும் தேவர்கள் தாம் .பூபாரம் குறைக்க வந்த கண்ணனுக்கு உதவி என்ற சாக்கிலே பெறாப்பேறு பெற்றனர். ராமாவதாரத்திலே உதவிய வானரரங்களைப் போன்று என்னலாம்.
    ஒருவன் தேவனாவதும் வர்ணாஸ்ரம தர்மத்தால்தான்.
    100 அஸ்வ மேதம் செய்தால் யாருமே இந்திரனாகலாம்.
    “யே கர்மணா தேவாந் அபி யந்தி ” – (செயல்கள் மூலம் தேவர்களாக ஆனவர்கள் ) – என்கிறது தைத்தீரிய உபநிஷத்.

    3. நிர்ஹேதுக கிருபையால் சில பாமரர்கள் பத்தர் ஆனார்களே என்றால் ?
    a)”மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால்பட்டது”
    அதாவது பக்தியில்லாத ஒருவன், யாரோ மாதவன் என்னும் நண்பனை -“டேய் ! பயலே ! மாதவா “- என்று வைதிருக்கலாம் .
    இச்செயலுக்கு “என் பேரைச் சொன்னான்” என்று ஒரு க்ருபையிட்டும்
    b) “திருமால் இரும்சோலை என்றேன் என்ன ,திருமால் வந்து என்னெஞ்சு நிறைய புகுந்தான் ”
    அதாவது ,யாரோ ஒரு புறமதத்தவன் தன பெண்ணை ,மதுரை அழகர் கோவில் வரனுக்கு மனம் செய்து கொடுத்துள்ளான் .
    பேச்சு வாக்கில் -“பெரிய பெண்ணை அழகர் கோயிலிலும் ,இளையவளை திருவல்லிக்கேணியிலும் கட்டி குடுத்தேன்” என்று சொல்லிருக்கலாம் . – இச்செயலுக்கு, “என் ஊரைச் சொன்னான்” என்று ஒரு க்ருபையிட்டும்
    c) சிலர் சூதாடுவதற்கு என்று சத்திரம் கட்டினார்கள் .ஒரு நாள் மழையில் ,அங்கு சில வைணவர்கள் ஒதுங்கினர் .
    இச்செயலுக்கு , “என் அடியாருக்கு நீர் கொடுத்தான் ,நிழல்/கூரை கொடுத்தான்” என்று ஒரு க்ருபையிட்டும்,

    இவ்வாறாக ஜன்மாந்தர ஸஹஸ்ரங்களில் செய்த புண்ணியங்களை “மடி மாங்காயிடுவது போலே ” கணக்கெழுதி, சிறுக சிறுக சேர்த்து , பெரும் புண்ணியமாக்கி, அப் பாமரர்களையும் வர்ணாச்ரமி ஆக்குகின்றான், பின்பு பத்தராக்குகின்றான் .

    என்னை 4ம் வகுப்பில் செம்மையாக பிரம்பாலே அடித்து ,16 ம் வாய்ப்பாடு வரையில் கண்டஸ்தாயீ ஆக்கியவர் எனது ஆசான். அவரே எங்களுக்கு ஆங்கிலமும் கற்பித்தார் . அந்த உதை தான் என்னை இன்று இன்சினியர் ஆக்கியது .எனவே அந்த ஆசானே எனக்கு முதற் கடவுள் .அந்தப் பிரம்பும் வாழ்க பல்லாண்டு ,என்று பாடுவதே என் பணி .

    சம்ஸ்காரம் =சம் (நன்றாக )+ காரம் (ஆக்குவது ) -> அதாவது ஆத்மாவினை நல்வழிப்படுத்தல் ஆகும் .
    மொத்தம் 40 சம்ஸ்காரங்கள் ஒரு மனிதனுக்கு ஆனவை.

    நான் அப்ராமணனாயிருந்தும் ,எனக்கு இந்த ஞ்சானம் வருவது முற்பிறவிகளில் ஏதோ நானும் ஒரு
    ப்ராமணனாயிருந்து,எனக்கு அல்லது என்னால் செய்யப்பட்ட சம்ஸ்காரங்கள்தான் .
    எனவே தர்மங்களை இகழ்வது என்பது -அவற்றை கருணையினால் நமக்குத் தந்த ரிஷிகளையும் -மநு பகவானையும் இகழ்வதே அன்றோ !! அதுவும் ஒரு பாகவத அபச்சாரமே அன்றோ !!!

    நிழலின் அருமை வெய்யில் இருந்தால் தானே புரியும் .
    உண்மையின் அருமை பொய்யிலே தானே புரியும் .
    இளமையின் அருமை முதுமையிலே தானே புரியும்.
    செல்வத்தின் அருமை நல்குரவிலே தெரியும்.
    பகலின் அருமை இரவிலே தெரியும் .

    த்வேஷமுள்ள ஒருவர் பக்தர் ஆவது எப்படி ?
    ராகம் ,த்வேஷம் என்பன இருமைகள் ஆகும் .அது ராஜஸ குண வெளிப்பாடு தான் .
    ஸாத்விகம் வளர்ந்தாலன்றி ,மனதில் பக்தி மலருமோ ?
    எனவே வர்ணாஸ்ரமத்தின் மீது த்வேஷத்தினை ஒழிப்பீர் .

    கீதையில் -“சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் ” என்கிறான் -கண்ணன் .

    கல்வியையோ -கலைகளையோ (ஞ்சானம் ) ,ஸம்ஸ்காரங்களையோ -வர்ணாஸ்ரமம் (அனுஷ்டானம் )
    குறை கூறுவது நிறுத்தப்படட்டும் .

    கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்
    கற்கும் கல்வி யாவேனும் யானே என்னும்,
    கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
    கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,
    கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
    கற்கும் கல்விநாதன் வந்து ஏறக் கொலோ?,
    கற்கும் கல்வியீர்க்கு இவையென் சொல்லுகேன்
    கற்கும் கல்வி என்மகள் காண்கின்றனவே?

    எனவே நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்கள் ஆவதும் முற்பிறவி வர்ணாஸ்ரம தூய்மைதான்.

    பராசர மஹரிஷியின் தந்தையார் பெயர் சக்தி .சக்தி என்பவர் வசிஷ்டரின் புதல்வர். இந்த சக்திரிஷி ,கல்மாஷபாதன் என்னும் இராக்கதனால் கொல்லப்பட்டார் .அதனை அறிந்த பராசரர் ” என் தந்தையை கொன்ற ராக்ஷஸ பூண்டே இல்லாமல் செய்கிறேன் பார்” என்று சூளுரைத்தார் .ஒரு ஸத்ர யாகம் செய்து அதில் எல்லா அரக்கர்களையும் எரிக்கத் தொடங்கினார். பன்னிரண்டு ஆண்டுகள் பிடிக்கும் ஸத்ர யாகத்தில் பல கோடி ராக்ஷஸர்கள் மாண்டனர். இதனால் தனது குலமே அழிவதைக் கண்ட புலஸ்திய மகரிஷியும் ,அவர் சகோதரர் வசிஷ்டரும் -பராசரரை வேண்டியும் ,உபதேசம் கூறியும் ஸத்ர யாகத்தினை நிறுத்தினர் .அவரும் ராக்ஷசர் மீதிருந்த த்வேஷத்தையும் கோபத்தையும் விடுத்தார் .இதனால் மகிழ்ந்த புலஸ்தியர் அவருக்கு புராண ,ஸம்ஹிதா கர்த்தா ஆவாய் என்றும் ,தேவதா பாரமர்த்யத்தை (பரம் பொருளின் உண்மை நிலையை ) உள்ளவாறு உணர்வாய் என்றும் இரு வரங்கள் அருளினார் .
    புராண ஸம்ஹிதா கர்த்தா பவான் வத்ஸ பவிஷ்யதி |
    தேவதாபாரமார்த்யம் ச யதாவத் வேத்ஸ்யதே பவான் ||

    எல்லாம் இறைவனே என்று உணர்ந்தார் பராசர பகவான் .

    நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
    வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,

    கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,
    தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,

    நகரமும் நாடுகளுமு ஞானமும் மூடமும் ஆய்,
    நிகர் இல் சூழ், சுடர் ஆய், இருள் ஆய், நிலன் ஆய், விசும்பு ஆய்,

    புண்ணியம் பாவம், புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்,
    எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய், அல்லன் ஆய்,

    மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய்,
    பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,

    பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,
    கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்

    நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய்,
    சுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய்,

    கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்,
    மெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய்,
    செய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
    பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே. – திருவாய்மொழி -5-3

    “ராமோ விக்ரஹவாந் தர்ம: ஸாது ஸத்ய பராக்ரம:” – என்பது ராமாயணம்.( மாரீசன் ராவணனுக்கு சொன்னது .)
    ராமன் என்பவன் , தர்மமே ஒரு உருவமாகி வந்தவன் .அவன் என்றுமே மாறாத உண்மை உருவன் ,நல்லவன் ,வீண்போகாத வீரன்.
    அதே ராமனை -“அதாதோ தர்ம ஜிஞ்சாஸ: ” என்று கூறி பூர்வ மீமாம்ஸை தொடங்குகின்றது .

    யத்ர யோகேஸ்வர கிருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர:|
    தத்ர ஸ்ரீ : விஜயோ பூதி : த்ருவா நீதிர் மாதிரி மம || – மஹாபாரதம் .

    எந்தப் பக்கத்தில் ப்ரஹ்மமான கண்ணன் உளனோ, அங்கேதான் நிலைத்த தர்மம் என்கிறார் சஞ்சயன் த்ருதராஷ்டிரரிடம் .
    அந்த கண்ணனை பிரம்மமாக துதித்து -“அதாதோ ப்ரம்ம ஜிஞ்சாஸ: “ என்று கூறி உத்தர மீமாம்ஸை தொடங்குகின்றது .

    எனவே நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்கள் ஆவதும் முற்பிறவி வர்ணாஸ்ரம தூய்மையினால் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *