காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

சியாமா பிரசாத் முகர்ஜியுடன் உரையாடும் காந்தி (நன்றி: Alamy Stock Photos)

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போதும் அதற்கு பின்பு ராஜாஜி சூத்திரம் (Rajaji Formula) என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் லீகுக்கும் காங்கிரஸிற்கும் இடையே நடந்த பிரிவினை பற்றிய பேச்சுவார்த்தைகளின் போதும் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய அளவில் முக்கியமான  ஒரு தலைவராக இருந்தார். மற்ற பெரும் தலைவர்களை காட்டிலும் வயதில் மிக சிறியவர் தன்னுடைய 40 களின் ஆரம்பத்தில் இருந்தார். ஆனால் அவர் காந்தியிடம் செலுத்திய செல்வாக்கு அபரிமிதமானது. அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். ஏனென்றால் அது “வங்கத்தை பிரிக்கிறது. போதாத குறைக்கு பஞ்சாபில் சீக்கியர்களை பிரித்து பாதி இந்தியாவிற்கும் பாதி பாகிஸ்தானுக்குமாக அனுப்புகிறது. அவர்கள் குரல்வளையை நெறிக்கிறது” என்று முகர்ஜி கருதினார்.

அவருக்கும் காந்திக்கும் நேரடியான தொடர்புகளும் கடித போக்குவரத்தும் தொடர்ந்து இருந்து வந்தது. இத்தனைக்கும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கம்யுனிஸ்டுகளுடன் இவரும் ஆதரிக்கவில்லை, வெளிப்படையாகவே எதிர்த்தார் என்று இன்றும் குற்றம் சாட்டப் படுகிறது. ஆனாலும், அதற்கு பின்னாலும் காந்தி இவரிடம் பெரும் மரியாதை வைத்திருந்தார்.  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பூரண் சந்த் ஜோஷி,  ”நீங்கள் சியாமா பிரசாத்தின் பேச்சை தான் கேட்கிறீர்கள்” என்று  காந்தியைக் குற்றம் சாட்டுவது வரை அது வந்தது.

ராஜாஜி சூத்திரம் இறுதியில் தோல்வியடைந்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் காந்தியே அதை விரும்பவில்லை என்று அன்றைய இந்திய வைஸ்ராயாக இருந்த லார்ட் வேவல் கூறினார்.

காந்தி ஏன் ராஜாஜியின் சூத்திரத்தை விரும்பவில்லை? அது இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஓட்டெடுப்பு நடத்தி அவர்கள் எந்த பக்கம் செல்ல விரும்புகிறார்களோ அந்த பக்கம் செல்வது என்றும், அனைத்து மதத்தினரும் ஓட்டு போடுவது என்பதும் தான் அந்த திட்டம். அதை ஜின்னாதான் ஏற்கவில்லை. காந்தி அதை ஏற்றுக்கொண்டு தானே பேச்சுவார்த்தைக்கு வந்தார். பின்பு ஏன் அதை கைவிட்டார்?

ஒரு வேளை  சியாமா பிரசாத் முகர்ஜியின் வற்புறுத்தல் காரணமோ என்னவோ நான் அறியேன்.  காந்தி முகர்ஜிக்கு எழுதும் ஒரு கடிதத்தில், ”ராஜாஜியின் இந்த திட்டம் ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை? இறைவன் அருளிருந்தால் நான் ஆகஸ்ட் மாதம் சேவாகிராம் வந்துவிடுவேன். நீங்கள் அங்கு வந்தால் இதை பற்றி நீங்கள் நான் மற்றும் ராஜாஜி ஆகியோர் விவாதிக்கலாம்” என்று எழுதுகிறார். காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன.

மனோரஞ்சன் சட்டர்ஜி என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ”உங்களுடைய தந்தி கிடைத்தது நான் எனது அந்தரங்க காரியதரிசியான ப்யாரிலாலையோ அல்லது அவரின் சகோதரி சுஷீலாவையோ அங்கு அனுப்புகிறேன்.  சியாமா பிரசாத் முகர்ஜிக்கு எழுதுகிறேன்” என்று முடிக்கிறார் காந்தி.  அதே தேதியில்,  ”உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்” என்று முகர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ஒருவேளை தனது காரியதரிசியை அங்கு அனுப்புகிறேன் என்று சொன்னது முகர்ஜியை கவனித்துக் கொள்ளவோ என்னவோ எனக்கு தெரியவில்லை.

காந்தி தன் வாழ்நாள் முழுக்க எழுதிக்கொண்டே இருக்கிறார். கடிதங்கள் கட்டுரைகள் என அவரது எழுத்துக்கள் அனுமார் வால் என்று நீண்டு கொண்டே இருக்கிறது. ஒருவர் தன் வாழ்நாளில் அத்தனையும் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. 60000 பக்கங்களுக்கு மேல் இருக்கும்.

இதையே ஒரு கடமையாக ஆய்வாக செய்தால் காந்தியின் பல முகங்கள் வெளிப்படும் அது இன்று நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் காந்திக்கு முற்றிலும் வேறாக இருக்கும்.

(ஆர்.கோபிநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

சியாமா பிரசாத் முகர்ஜி  (1901 – 1953) நவீன இந்தியாவின் மகத்தான தலைவர்களில் ஒருவர்.  கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி எனப் பலதளங்களில் பணியாற்றினார்.  சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசில்  நேருவின் அமைச்சரவையில்  வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக  இருந்தார்.  சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளையே தனது சிந்தனைகளின் அடித்தளமாகக் கொண்டிருந்த முகர்ஜி  1951ல் பாரதிய ஜனசங்கம்  என்ற தேசியக் கட்சியை நிறுவினார். இதுவே பின்னாட்களில் பாரதிய ஜனதா கட்சியாக ஆகியது.  370வது சட்டப்பிரிவின் கீழ் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப் படுவதை எதிர்த்துப் போராடிய  முகர்ஜி,  1953ல்  தனது கோரிக்கையை வலியுறுத்தி  தடைகளை மீறி அங்கு பயணம் மேற்கொண்ட போது அப்போதைய காஷ்மீர் அரசால் கைது செய்து சிறையிலடைக்கப் பட்டு அங்கு  திடீரென சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்தார்.  அதன் மர்மம் இன்றளவும் தீர்க்கப் படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *