முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி


ஒருவழியாக ஜனாதிபதி தேர்தல் களம் தெளிவாகி இருக்கிறது. ஆளும் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பாஜக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் சார்பில் பி.ஏ.சங்மாவும் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களை வேட்பாளர்களாக அறிவிப்பதற்குள் நடந்த நாடகங்கள் தான் எத்தனை?

பிரணாப் முகர்ஜி ஒரு சர்வரோக நிவாரணி- காங்கிரஸ் கட்சிக்கு. பிரதமராக இந்திரா காந்தி இருந்த காலத்திலேயே அவருக்கு முக்கியத்துவம் இருந்தது. நெருக்கடி நிலையின் போது பிரதமருக்கு ஆலோசனை வழங்கிய குழு உறுப்பினர்களில் அவரும் ஒருவர். மிகுந்த திறமைசாலி, அரசியல் சாணக்கியர், சமரசப் பேசுகளுக்கேன்றே உருவாக்கப்பட்டவர் என்று அவரைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. அதற்கேற்ப தனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதைத் திறம்பட நிறைவேற்றுபவராக முகர்ஜி இருந்து வந்திருக்கிறார். இதுவரை திட்டக் குழு துணைத் தலைவர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவரை ‘காங்கிரசின் நெடுஞ்செழியன்’ என்று கூறலாம். இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் என்று யார் பிரதமாராக இருந்தாலும் இவர் தான் ‘நம்பர் டூ’.

இப்போதும்கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்கு சிக்கல் நேரும் போதெல்லாம் தூது சென்று சமாளிப்பவராக முகர்ஜி மட்டுமே இருக்கிறார். அதே சமயம், கட்சித் தலைவி சோனியாவின் பிரதான ஆதரவு முகர்ஜிக்கு கிடைக்கவில்லை. அவர் எப்போதும் முகர்ஜியை சந்தேகக் கண்ணோட்டத்துடன் தான் பார்த்து வந்திருக்கிறார். அதனால் தான் நாட்டை ஆளும் பொறுப்பு தன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டபோது (எல்லாம் கலாம் செய்த கலகம்!) மன்மோகனை பிரதமராக்கி அழகு பார்த்தார் சோனியா. இந்தப் புறக்கணிப்புக்கு வரலாற்று ரீதியான காரணம் உண்டு.

இந்திரா காந்தியின் மறைவை அடுத்து யார் பிரதமர் ஆவது என்ற கேள்வி எழுந்தபோது, அமைச்சரவையில் இருந்த மூத்த சகா என்ற முறையில் தன்னை நாடி அப்பதவி வரும் என்று எதிர்பார்த்தார் பிரணாப். மாறாக, வெளிநாட்டில் இறந்த ராஜீவை அவசர அவசரமாக வரவழைத்து பிரதமராக முடிசூட்டினார் அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங். இதையடுத்து 1984 ல் காங்கிரசில் இருந்து வெளியேறிய பிரணாப், ‘ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரஸ்’ கட்சியைத் துவங்கி நடத்தினார். எனினும், பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி விழி பிதுங்கிய ராஜீவ் காந்தி அழைத்ததை ஏற்று 1989 ல் மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பினார் பிரணாப். இந்த அனுபவத்தை சோனியா இன்னும் மறக்கவில்லை.

பிரணாப் முகர்ஜி என்றுமே தன்னிச்சையாக செயல்படக் கூடியவர் என்பது தான் சோனியாவின் அச்சத்துக்கு காரணம். அதனால் தான், அவரைப் பிரதமர் ஆக்காமல், தனக்குத் தோதான பொம்மையாக மன்மோகனை தேர்வு செய்தார். இதனால் மனம் வருந்தினாலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். தவிர, ஆட்சியில் பிரணாப் கரமே ஓங்கி இருந்தது. ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்கு சோனியா தலைவராகவும், ஆட்சிக்கு நிழல் தலைமை வகிப்பவராக முகர்ஜியும் இருந்தனர். எனவே தான் முகர்ஜியை வேவு பார்க்கும் பணிகளில் சோனியா சத்தமின்றி ஈடுபட்டுவந்தார்.

ஓராண்டுக்கு முன், பிரணாப் முகர்ஜியின் அமைச்சக அலுவலகத்தில் கண்காணிப்பு காமிராக்கள், ஒளிப்பதிவு கருவிகள் மறைவாக பதுக்கிவைக்கப்பட்ட நிகழ்வு வெளியாகி அப்படியே சத்தமின்றி அமுக்கப்பட்டது நினைவிருக்கலாம். இதற்கு சோனியா ஆசி பெற்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே காரணம் என்று கூறப்பட்டது. தன்னை வேவு பார்க்கும் கட்சித் தலைமையையும் சக அமைச்சரையும் அம்பலப்படுத்திய முகர்ஜி, பிறகு அதை அப்படியே விட்டுவிட்டார். அதில் தான் முகர்ஜியின் சாமர்த்தியம் இருக்கிறது.

அமைச்சரவையிலும் ஆட்சியிலும் தனது முக்கியத்துவத்தை நிலைநிறுத்திக்கொண்டே, தன் மீதான அதிருப்தியாளன் என்ற முத்திரையைப் போக்க அவர் மேற்கொண்ட முயற்சி அது. அதற்கு இப்போது காலம் பரிசளித்திருக்கிறது. எந்த சோனியா தன்னை பிரதமர் ஆக்காமால் தவிர்த்தாரோ, அதே சோனியாவால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கச் செய்திருக்கிறார், பிரணாப் முகர்ஜி. இது அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசு.

உண்மையில் சோனியா ஜனாதிபதியாக்க விரும்பியது துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை. ஆனால், அவரை முன்னிறுத்தி தோற்றுவிட்டால் காங்கிரஸ் ஆட்சி குலைந்துவிடும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது.இந்நிலையில்தான் முலாயமுடன் கைகோர்த்து திரிணமூல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி அதிரடியை நிகழ்த்தினார்.காங்கிரஸ் கட்சியின் தேர்வான முகர்ஜி, அன்சாரி இருவரும் வேண்டாம்; முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்’ என்று நெருக்கடி கொடுத்தார். பிறகு கலாமே தனது விருப்பம் என்று அறிவித்தார். மமதாவின் அதிரடியால் ஜனாதிபதி தேர்தல் களம் திசை மாறுவதை உடனடியாகப் புரிந்துகொண்ட காங்கிரஸ், முலாயமை ‘வழக்கம் போல’ சரிப்படுத்திவிட்டு, அவசரமாக முகர்ஜியை வேட்பாளராக அறிவித்தது.

மமதா கூறியபடி கலாம் களம் இறங்கி இருந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் சில்லறைக் கட்சிகளும் ஆதரித்துவிடும் நிலை இருப்பதைப் புரிந்துகொண்டதால் தான், அன்சாரியைக் கை கழுவிவிட்டு முகர்ஜிக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் சோனியா. இந்த வாய்ப்புக்காகத் தானே முகர்ஜி காத்திருந்தார்!

அதாவது, பானர்ஜி மட்டும் கலாமை தனது விருப்பத் தேர்வாக முன்வைக்காமல் இருந்திருந்தால், அன்சாரியை ஜனாதிபதி ஆக்கி இன்னொரு பொம்மையை அங்கு அமர்த்தி இருப்பார் சோனியா. அதற்கு வழி இல்லாமல், இப்போது தன்னிச்சையாக இயங்கும் பிரணாப் முகர்ஜியை சோனியாவே அறிவித்திருக்கிறார். தற்போதைய சூழலில் முகர்ஜி வெல்வது உறுதி என்பதால், முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கியவர் என்று மமதா பானர்ஜியை கண்டிப்பாகப் பாராட்டலாம்.

மறுபுறம், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இடதுசாரிகளும் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் தவித்தனர். எதிர்த்தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு குறைவு என்ற நிலையில், இந்த தேர்தலை அரசியல்ரீதியாகப் பயன்படுத்துவதே நல்லது என்ற கண்ணோட்டத்துடன் அவை இயங்கின. ஆளும்கட்சியே வேட்பாளரை அறிவிக்க தயங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளை இவ்விஷயத்தில் குற்றம் கூற முடியாது. ஆயினும், அப்துல் கலாமை முன்னரே சம்மதிக்கச் செய்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறக்கி இருக்கலாம் என்ற வருத்தம் நாடு முழுவதும் இருப்பது, சமூக இணைய தளங்களில் வெளிப்பட்டது.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் யாரையும் கலந்தாலோசிக்காமல் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை தங்கள் வேட்பாளராக அறிவித்து அவருக்கு ஆதரவு திரட்டினர். சங்மாவும் சாதாரணமானவர் அல்ல. இவரும் காங்கிரஸ் அதிருப்தியாளரே. வெளிநாட்டில் பிறந்த சோனியா பிரதமர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசில் இருந்து வெளியேறிய சரத் பவார், தாரிக் அன்வர், பி.ஏ.சங்மா மூவரும் இணைந்து 1999 ல் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் இன்றும் களத்தில் இருக்கிறது. ஆனால், காங்கிரசுடன் அக்கட்சி இப்போது சமரசம் செய்து கொண்டு மகராஷ்டிராவிலும் மத்திய அரசிலும் ஆட்சி அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறது.

தவறவிட்ட அரிய வாய்ப்பு…

அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வாய்ப்பு ஜெயலலிதா, மமதா, முலாயம் சிங், நிதிஷ் குமார், நவீன் ஆகியோருக்கு உள்ளது என்று ‘கட்சிகளுக்கு ஒரு லிட்மஸ் சோதனை’ என்ற முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். முன்னாள் ஜனாதிபதி கலாமை மீண்டும் தேர்வு செய்யும் அற்புதமான வாய்ப்பு அவர்கள் முன்பு வந்தது. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காகவும் இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளனர், பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள். இதில் மமதா மட்டுமே கலாமுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அதனால் அரசியல் அரங்கில் தனிமைப்பட்டு நிற்கும் நிலைக்கும் ஆளானார். நவீனுடன் சேர்ந்து ஜெயலலிதா அறிவித்த ‘சங்மா’ ஆதரவு நிலைப்பாடு தான் ஒட்டுமொத்த சூழலையும் மாற்றிவிட்டது. அவர்கள் இருவரும் சற்று பொறுமை காட்டி இருந்தால், ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு சவாலை ஏற்படுத்தி இருக்க முடியும். அதே போல, குட்டிக்கரணப் புகழ் முலாயமை நம்பி மமதா ஏமாந்ததும் வருத்தம் அழைக்கும் நிகழ்வு. லிட்மஸ் சோதனையில் நமது அரசியல் கட்சிகள் தோற்றுவிட்டன என்றே சொல்லலாம். அப்துல் கலாம் கடைசி நேரத்தில் களத்தில் இறங்க மறுத்ததும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அவர் ஆரம்பத்திலேயே ‘அனைவரும் ஒருங்கிணைந்து நிறுத்தினால் மட்டுமே தேர்தலில் நிற்பேன்’ என்று தான் கூறினார். அவ்வாறான சூழல் இல்லாதநிலையில், நாகரிகமாக அவர் விலகி இருக்கிறார். அதையும் கூட கேலி செய்பவர்கள் பற்றி என்ன சொல்ல?

மேகாலய முதல்வர், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர், லோக்சபா சபாநாயகர் போன்ற பதவிகளை வகித்த சங்மா இப்போது, ‘பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆக வேண்டும்’ என்று கொடி பிடித்தார். இதன்மூலம் தங்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கக் கூடும் என்ற நோக்கில் தான் ஜெயலலிதாவும் நவீனும் அவரை ஆதரித்தனர். அத்வானியிடமும் சங்மாவுக்கு ஆதரவு கோரினார் ஜெயலலிதா.

இதனிடையே, தேர்தல் களத்தில் போட்டி உறுதி என்று தெரிந்ததும், நாகரிகமாக விலகிக் கொண்டார் கலாம். முன்னதாக அவரை தொடர்பு கொண்ட பாஜக தலைவர் அத்வானி தேர்தலில் அவரை ஆதரிக்க விரும்புவதைத் தெரிவித்தார். ஆயினும், கலாம் பின்வாங்கியதை அடுத்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக வேறொருவரை நிறுத்த வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. ஏற்கனவே அதிமுக, பிஜு ஜனதா தளம் கட்சிகளால் அறிவிக்கப்பட்டிருந்த சங்மாவையே ஆதரிக்க பாஜக விரும்பியது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதற்கு கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

சங்மா கிறிஸ்தவர் என்பதால் அவரை ஆதரிக்க மறுத்த சிவசேனை, காங்கிரஸ் வேட்பாளரையே ஆதரிப்பதாக அறிவித்தது. ஐக்கிய ஜனதா தளமும் சிறந்த வேட்பாளர் என்ற அடிப்படையில் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்தது. தே,ஜ.கூட்டணியின் இரு பெரும் கட்சிகள் பாஜகவுக்கு மாறாக செயல்பட்டபோதும், புதிய கூட்டாளிகளை எதிர்நோக்கி, சங்மாவையே ஆதரிப்பதாக பாஜக அறிவித்திருக்கிறது.
இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முகர்ஜி வெல்லவே வாய்ப்பிருக்கிறது. ‘அன்பு சகோதரி’ என்று முகர்ஜியால் அழைக்கப்படும் மமதாவும் கூட கடைசி நேரத்தில் அவரை ஆதரிக்கக் கூடும். இப்போதைய சூழலில் மொத்தமுள்ள 10.98 லட்சம் வாக்குகளில் 6.29 லட்சம் வாக்குகள் பெற்று முகர்ஜி வெல்ல சாத்தியம் உள்ளது. எனினும், ஜனநாயகத்தில் தேர்தலின் அவசியத்தைக் கருதியும், எதிர்கால சமன்பாடுகளை கருத்தில் கொண்டும் பாஜக சங்மாவை முன்னிறுத்தி இருக்கிறது. அவருக்கு 3.10 லட்சம் வாக்குகள் கிடைக்கக் கூடும்.

இடதுசாரிகள் வழக்கம் போல இதிலும் குழம்பி நிற்கிறார்கள். முகர்ஜியை ஆதரிப்பதாக (ஏனெனில் அவர் தான் வெற்றி வாய்ப்புள்ளவராம்!) மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது. பார்வர்டு பிளாக்கும் இதே முடிவை எடுத்திருக்கிறது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியும் தேர்தலில் கலந்துகொள்ளாமல் இருக்கத் தீர்மானித்துள்ளன. மொத்தத்தில் இத்தேர்தலில் தங்கள் இருப்பை மேலும் தரம் குறையச் செய்திருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.

பிரணாப் ஜனாதிபதி ஆகிவிட்டால், காங்கிரசின் ஆபத்பாந்தவனாக வேறு யார் இருப்பார்கள் என்ற காரணத்தினால் தான் அவரை காங்கிரஸ் ஆரம்பத்தில் முன்னிறுத்தவில்லை என்று தற்போது காங்கிரஸ் சமாளிக்கிறது. எது எப்படியோ, காங்கிரஸ் கட்சியின் பொம்மை ஜனாதிபதியாக பிரணாப் இருக்க மாட்டார் என்பது நிச்சயம்.
எனினும், இவர் மீதும் சில ஊழல் புகார்களை ஹசாரே குழுவினர் கூறி இருப்பதை கவனத்தில் கொண்டாக வேண்டும். நெருக்கடி நிலைக்கால கொடுமைகள் குறித்து ஷா கமிஷனின் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் முகர்ஜி. ரிலையன்ஸ் குழுமத்தின் பாம்பே டையிங் நிறுவனத்துக்கு வரிவிதிப்பில் சாதகம் காட்டியதாகவும் முகர்ஜி மீது புகார் உண்டு.
முன்னெப்போதும் கண்டிராத ஊழல் காலகட்டத்தில் நாடு தத்தளிக்கும் நிலையில் ஜனாதிபதி ஆக உள்ளார் முகர்ஜி. அவர் தனது முந்தைய கறை படிந்த வரலாற்றிலிருந்து விடுபட்டு நியாயமான ஜனாதிபதியாகச் செயல்படுவாரா? நாட்டின் அரசியலில் பெருத்த மாற்றங்கள் நிகழக் கூடிய எதிர்காலம், பிரணாப் முகர்ஜி வருகைக்காகக் காத்திருக்கிறது.

மத்தியில் மாறும் கூட்டணி கணக்குகள்…

எது எப்படியாயினும், இத்தேர்தல் முலாயம், நிதிஷ், பால் தாக்கரே, மமதா போன்றவர்களின் சுய ரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இப்போது, ”கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை”என்று ஐக்கிய ஜனதா தளமும் சிவசேனையும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. மமதா சற்று அயர்ந்து போயிருந்தாலும் நிலை மாறாமல் இருக்கிறார். முலாயம் சிங் நம்பற்குரியவர் அல்ல என்பதி மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அசாம் கணபரிஷத் சங்மாவை ஆதரிப்பதாக அறிசித்திருக்கிறது. இவை எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்த வரை நன்மைக்கே.

பிகாரில் நிதிஷும், மகாராஷ்டிராவில் சிவசேனையும் பாஜக இன்றி இயங்க .முடியாது. இந்த மாநிலங்களில் அவர்களுக்கு பிரதான எதிரியே காங்கிரஸ் தான். எனவே ஜனாதிபதி தேர்தலில் இக்கட்சிகள் அடித்துள்ள அந்தர் பல்டியால் பாஜக கவலைப்படத் தேவையில்லை. முலாயமும் காங்கிரசும் நெருங்குவது உத்தரப் பிரதேச பாஜகவுக்கு நல்லதே. அதேபோல, மமதா தனித்து தத்தளிப்பதும் அக்கட்சி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவும் (தே.ஜ. கூட்டணியில் கிடைத்துவந்த மரியாதையை அக்கட்சி மறந்திருக்காது).

ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் ஜெகன்மோகனும், தமிழகத்தின் வைகோவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். தேவ கவுடா, ராமதாஸ், லாலு, ராம்விலாஸ் பஸ்வான், பாபுலால் மராண்டி ஆகியோரின் காங்கிரஸ் ஆதரவு எதிர்பார்த்ததே. விஜயகாந்த் தான் பெரிய புத்திசாலி என்ற நினைப்பில் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார். இது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.

இந்த சூழலை சாதுரியமாக பாஜக பயன்படுத்திக்கொண்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். அதற்காகவே தேர்தலில் போட்டியை ஏற்படுத்த அத்வானி முனைப்பு காட்டினார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆகவே ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கவுள்ள தோல்வியானது பாஜகவுக்கு எதிர்கால வெற்றிக்கான படிக்கட்டாக மாற வாய்ப்பிருக்கிறது

13 Replies to “முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி”

 1. திரு.சேக்கிழான்,

  “அதனால் தான் நாட்டை ஆளும் பொறுப்பு தன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டபோது (எல்லாம் கலாம் செய்த கலகம்!) மன்மோகனை பிரதமராக்கி அழகு பார்த்தார் சோனியா.”
  என்று எழுதுவது சரியல்ல.

  ஏனெனில், தன் சமீபத்திய புத்தகத்தில், திரு. கலாம் அவர்கள், சோனியா 2004ல் பிரதமர் பதவியைக் கோரியிருந்தால்,
  நான் தடுத்திருக்க மாட்டேன் என்பதை தெளிவாக எழுதி விட்டார். திரு. சுப்பிரமணியம் சாமி, மற்றும் பா.ஜ.க வை
  சேர்ந்தவர்கள், இவ்வளவு வருடங்களும் பாடிய பாட்டை நிறுத்தி விடுவது நல்லது. (நானும் இந்த பாட்டை நம்பியவன்தான்.)

  அடுத்து, நீங்கள் அரசியல் ரீதியாகவே இந்த கட்டுரையை எழுதி விட்டீர்கள். ஆனால், ஒரு நிதி அமைச்சரை
  பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் சாதாரண மக்கள் உள்ளார்கள். என்னைப்
  பொருத்தவரை, திரு. பிரணப் முகர்ஜீ, இந்திய பொருளாதார தேக்க நிலையை மாற்றும் வாய்ப்பை பயன்படுத்த வில்லை
  என்றே தீர்மானமாக நம்புகிறேன். 2008ல் அமேரிக்க பொருளாதார சிக்கலுக்கு பிறகு, சில பொருளாதார சீர்திருத்த
  நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இன்று இந்திய பொருளாதாரம் சற்றே நிமிர்ந்திருக்கும். இந்த வாய்ப்பை கோட்டை
  விட்ட நிதியமைச்சரை என்னால் மன்னிக்க முடியவில்லை.

 2. இத்தேர்தல் அப்துல் கலாமை மேலும் அறிந்துகொள்ள உதவியது. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பெறுவதை மட்டுமே தேர்தலுக்கு தேர்தல் எதிர்பார்ப்பவர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர். என்னே நம் பேறு! தான் நிராகரிக்கப்படுவது உறுதியாகும் வரை அற்புதமான மௌனம்; பின்னர் பழம் புளிக்கும் பழங்கதை.
  நீங்கள் கூறுவது போல் கலாம் ஒன்றும் இதை துவக்கத்திலேயே தெளிவாக்கவில்லை. பாஜக இவரை நம்பி மோசம் போனது. தன் கட்சியும் கூட்டணியும் காங்கிரஸ் பிடியிலில்லாத மற்ற கட்சிகளும் ஏற்கும் ஒரு வேட்பாளரை பாஜக கடைசிவரை கண்டறியமுடியல்லை என்பதே உண்மை.
  ஜெயலலிதா, நவீன் இதில் சரியாகச் செயல்பட்டிருக்காவிடில் போட்டியின்றி தேர்தல் முடிந்திருக்கும்.
  மேலும்நிதிஷ்இன் ஆதரவி காங்கிரஸ் பெற்றவிதம் ஒரு அற்ப அரசியலின் அடையாளம்.

 3. நாடு உண்மையான நல்லவர்களை தன ஆட்சியாளர்களாக எதிர்பார்க்கும் தரும் இது. பா ஜ க சரியான படி இதை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்தை அமைக்கும் சிற்பியாக வேண்டும். தங்கள் குறைகளை களைந்து, வெற்றிப் பாதையில் பயணத்தை த் தொடங்க வேண்டும்.
  வாழ்க பாரதம். வெல்க நல்லவர்களின் செயல்கள்.
  நன்றி.

 4. ஆரம்பத்திலேயே பாஜக அப்துல்கலாமை நிறுத்தி இருந்தால் அவருக்கு மக்கள் இணைய தளங்கள் மூலம் ஆதரவு பெருகி இருக்கும் மற்ற கட்சிகளும் ஆதரிக்கும் ஆனால் பாஜக இப்போது சுஷ்மா சுவராஜ் அருண்ஜெட்லி வெங்கைய நாயுடு அனந்தகுமார் இன்னும் சிலருடன் முடிந்து விட்டது அவர்கள் எப்போ கூடுவர்களோ அதுமட்டும்தான் பாஜக அரசியல் செயல்பாடு ஒரே லாபி மேற்சொன்ன யாரும் மக்களிடம் (தேசம் முழுவதும்) நேரடியாக எந்த தொடர்பும் இல்லாதவர்கள் பாராளுமன்றத்தில் வாதாட திறமை உள்ளவர்கள் அதனால் சில மாநிலங்களில் சில பாஜக தலைவர்கள் மீடியா அரசியல் செய்கிறார்கள் ஆர் எஸ் எஸ் இப்போதெல்லாம் அரசியல் ஆர்வம் தூக்கலாக செயல்படுகிறது ஸ்மருதி மாறலாம் சுருதி மாறக்கூடாது 1998 க்கு பிறகு மம்தா , ஜெயலலிதா போன்றவர்களை ஒதிக்கியது தவறு குறிப்பாக இன்று மம்தாவை விமர்சிப்பவர்கள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் இடதுசாரி அமைப்புகள் நடத்திய அரசியல் கொலைகளை பேசுவதே இல்லை இப்படிப்பட்ட கொலை அரசிலை எதிர்த்து எளிமையான ஒரு சாதாரண பெண் போராடுகிறாள் என்றால் மம்தாவின் போராட்டத்திற்கு நிச்சியம் மரியாதையை தரவேண்டும் இதுவே குஜராத்தில் நடத்தால் இடதுசாரி கூச்சல் கூடாரமாகிப்போன மீடியாக்கள் பூணுல் போட்ட மார்க்சிய முற்போக்கு அறிவுஜீவிகள் கொலைகாரர்களின் அரசியல் என கூவியிருப்பார்கள் திமுகவும் மார்க்கிசிய கட்சிகள் இந்துத்துவ விரோதமானவை இவர்களுடன் (திமுக ,இடதுசாரி) இப்போதும் கூட்டணி அமைக்க பாஜக ஆர்வமாக உள்ளது கட்சிகளை தாண்டி மக்களின் பிரச்சினை என்ன என்பதை அறியவேண்டும் சுகாதாரம் மருத்துவம் கல்வி பாதுகாப்பு எளிய பொறுப்பு ஏற்புடன் கூடிய நிர்வாகம் இவையே இன்றைய அவசியம் பொருளாதார உள்கட்டமைப்பு என்ற பொது போக்குவரத்து தொலைதொடர்பு மின்சாரம் துறைமுக மேம்பாடு போன்றவற்றை வலுப்படுத்துவது பொது நிர்வாகம் சட்ட ஒழுங்கு நிர்வாகம் நீதி நிர்வாகம் முதலியவற்றில் முழுமையான சீர்சிருத்தம் மக்களிடையே தர்மபிரச்சரம் பொது ஒழுங்குக்கு கட்டுபடுவதன் அவசியம் பொருளாதார குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை என விவாதங்கள் மேற்கொள்ளவேண்டும் அதை விட்டுவிட்டு இந்த தங்களை மக்களை காக்க வந்த அவதாரமாக நினைத்துக்கொண்டு தங்களை விட்டால் ஆள் இல்லை என்று கூடி காய் நகர்த்துவதும் மீடியாக்கள் இவர்கள் பிரச்சினையை மக்கள் பிரச்சினையாக மாற்றுவதும் ஜனநாயக விழிபுணர்வுக்கு எதிரானது தமிழகத்தில் 32 மாவட்டங்கள் 25 தலைமையிட மருத்துவமனைகள் இதைப்பற்றி விவாதம் ஏற்படவேயில்லை முல்லை பெரியார் அணைக்கு எல்லா மாவட்டத்திலும் போராட்டம் எல்லா மாவட்டத்திலும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எந்த மாவட்ட நிர்வாகமும் எதற்கும் பொறுப்பேற்பதில்லை ஆனால் வானளாவிய அதிகாரம் வெள்ளையர் காலம் தோற்றது அவ்வளவு காலனிய (அடிமை)அதிகார நிர்வாகம் பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் நேபாள் எல்லாரும் எதிரிகள் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் எந்த வெளியுறவு கொள்கையும் உருவாக்கப்படுவதில்லை எல்லாம் அதிகாரிகள் கையில் உண்மையில் மோடி சதனையளர்தான் அதிகாரிகளை கட்டுபடுத்திவிட்டார் நம் நாட்டில் பிரதமருக்கும் மாநில முதலமைச்சருக்கும்தான் அதிகாரம் மற்றபடி மற்ற தேர்தேடுகபட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை அறுபதாண்டுகாலமாக கம்யுனிஷ போதை வேறு என்னசொல்ல நம் நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையினர் இவர்கள் ஒற்றுமையே இந்தியாவின் வலிமை அதிலும் தர்மபடியான வாழ்க்கையே நலம் பல விளையும் உலகிற்கு அமைதி அளிக்கும் வெறும் மோடி உருவாக்கும் பொருளியல் வாழ்க்கை அல்ல காந்தி அடிமையாய் இருக்கும்போது அகிம்சை பேசினார் அகிம்சை சுதந்திரமான பலம் உள்ளவர்களுக்கானது இசுலாமிய அரசியலுக்கு தலை சாய்த்தார் வழக்கொழிந்த தாந்திரிக சாதனையை முயற்சித்தார் இவை தவறானது என காலம் நிரூபித்தது டாக்டர்ஜி இதை தாண்டி இந்து ஒற்றுமையே அவசியம் என்றார் அதுவே சரி இதை ஆக்கபூர்வமான முறையில் விவாதிக்க வேண்டும் நன்றி

 5. இப்போது அப்துல் கலாம் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும் பொது அவர் மீது இவ்வளவு காலம் நாம் கொண்ட மரியாதை சிறிது குறையத்தான் செய்கிறது.
  இவ்வளவு காலம் மௌனமாக இருந்து விட்டு இப்போது சோனியாவுக்கு மறைமுகமாக ‘அத்தாட்சிப் பத்திரம்’ கொடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
  ஒரு ஜனநாயகம் என்றால் போட்டி இருக்கத்தான் செய்யும்.
  தன் மீது கோடிக்கணக்கானவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், எதிர்பாபார்ப்புக்காகவுமாவது அவர் ஜனாதிபது தேர்தலில் போட்டி இட்டிருக்கலாம்.
  இதுவும் மற்றும் அவர் ஜனாதிபதியாக இருந்த போது பீகார் அமைச்சரவையை காங்கிரஸ் அரசு அவசர அவசரமாகக் கலைத்தபோது ரஷ்யாவிலிருந்துகொண்டே அதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டது , நாடாளுமன்ற வெடிகுண்டு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட அப்சல் குருவின் குடும்பத்தினரை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தது இதையெல்லாம் நினைக்கும் போது ……. இரண்டும் இரண்டும் நான்கு!

  இரா. ஸ்ரீதரன்

 6. //இடதுசாரிகள் வழக்கம் போல இதிலும் குழம்பி நிற்கிறார்கள். முகர்ஜியை ஆதரிப்பதாக (ஏனெனில் அவர் தான் வெற்றி வாய்ப்புள்ளவராம்!) மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது.//

  இவர்கள் எப்போதுமே குழம்பித்தான் நிற்பார்கள்.

 7. Congress has nominated Pranab only because sonia feels he is a threat to rahul gandhi whom she wants to make as future prime minister.

  As rightly pointed out by a few readers, Abdul kalam’s image has taken a beating. He should have announced categorically at the start itself that he was not interested, knowing very well that sonia & her allies will never support him.

  Now he has said that he was not against sonia becoming PM.

  Why this silence all these years?

  Regarding the litmus test, even if JJ, mamta & others – the so called “third front” had announced their support for kalam, he would still have lost. Mayawati & Mulayam would not have supported him. The left parties would have also not supported if the BJP had supported kalam.

  So JJ & biju did the right thing in pitching in for Sangma.

  But soon after they did that, sangam met sonia gandhi & sought her support. He even told reporters that he had apologised to her for having criticised her earlier on the “foreigners issue”.

  Having said that, we cannot expect Pranab to be any different. The president’s post is a dummy post & so even if he wants, he can do nothing. At most, he can give some pin pricks to the congress govt. That is all.

  It is a pity that all the political parties wasted so much time in selecting a candidate for a dummy post.

  If they had shown atleast half as much interest in issues concerning the common man, this nation would have benefitted.

 8. இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு உலகளாவிய அளவில் மரியாதைக்குரியவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதே நமக்குப் பெருமை. பொம்மைகளாக இருந்தவர்களால் நம் நாட்டுக்கு இதுவரை எந்தப் பெருமையும் கிடைக்கவில்லை. டாக்டர் அப்துல் கலாம் மிகச் சிறந்த ஜனாதிபதியாக இருந்திருப்பார். இந்திய குழப்ப அரசியல் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டது. இந்திரா காந்தி அம்மையார் இறந்தபோது, கல்கத்தாவிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்த பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் அடுத்த பிரதமராக நீங்கள் வருவீர்கள் என்கிறார்களே என்று கேட்டனர். ஆம், நான்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்று பதில் சொன்னார். ஒரு முறை கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் காங்கிரஸ் காரர்களால் இவர் தாக்கப்பட்டார். சட்டை கிழிந்த நிலையில் இவர் நிருபர்களிடம், நான் வெகு ஜன தலைவர் இல்லை, எனக்குத் தொண்டர்கள் கிடையாது, அதனால்தான் என்னை அடித்து விட்டனர் என்றார். இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்த இவர், மூன்றாம் தர அரசியல் வாதியைப் போல மக்களவையில் எதிர் கட்சியினரைப் பார்த்து கூச்சலிட்ட இவர் இனி ஜனாதிபதி. அவர் இப்போது நமக்கு ஜனாதிபதியாக ஆகவிருக்கிறார். அடப்பாவமே! பி.ஏ.சங்மா மக்களவையை நல்ல முறையில் வழி நடத்தியவர். ஊழல் குற்றச் சாட்டு எதுவும் இல்லாதவர். ஆனால் பாவம், அவர் தலையெழுத்து, அவர் சோனியாவை எதிர்த்து காங்கிரசை விட்டு வெளியேறினார். சோனியா கிறிஸ்தவர் என்பதற்காக அவரை சங்மா ஆதரிக்கவில்லை. மாறாக அவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர் இங்கு பிரதமராக வரக்கூடாது என்று வெளியேறியவர். அவரல்லவா உண்மையான மதச்சார்பற்றவர். அவரை எதிர்ப்பது சிவசெனைக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். யாரை நம்பி இவர் வெளியேறினாரோ அந்த சரத் பவார் இவர் காலை இப்போது வாரிவிட்டு விட்டார். இவர் கிறிஸ்தவர் என்பதற்காக சிவா சேனை இவரை ஆதரிக்காமல் போனது தவறானது. அது போலவே சரத் யாதவின் முடிவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மார்க்சிஸ்ட் கட்சி கம்யூனிசம் பேசுவது போலித்தனமானது. அவர்களது வங்காள அகங்காரமே பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கக் காரணம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பி.ஏ.சங்மாவை ஆதரித்திருக்க வேண்டும். பா.ஜ.கா. ஆதரிக்கிறது என்பதற்காக அவர் மதவாதியாக ஆகிவிடுவாரா? பா.ஜ.க. மதவாதக் கட்சி என்றால் இந்தியாவில் மதத்தை முன்னிறுத்தாத கட்சி எது? சிவசேனை மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதாக இருந்தால் ஒரு கிறிஸ்தவரை ஆதரிப்பதில் என்ன தவறு? ஆக இந்தியா சோனியாவின் பிடியிலிருந்து வெளியேறும் நாள் தற்போதைக்கு இல்லை என்பது தெரிகிறது. வாழ்க ஜனநாயகம்.

 9. //இந்தியா சோனியாவின் பிடியிலிருந்து வெளியேறும் நாள் தற்போதைக்கு இல்லை என்பது தெரிகிறது. //

  அது மட்டும் நிச்சயம் சார்……சோனியாவை வெளி நாட்டவர் என்று விமர்சித்த சங்மா ,இப்போது அதற்காக மன்னிப்புக்கேட்கிறார்…..

  அடுத்த முறையேனும் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் ,அதை மறுபடியும் சோனியா தடுத்து விடக்கூடாது என்பதற்காக , தான் சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்ததாக [ இவ்வளவு காலம் கழித்து ] அப்துல் கலாம் கூறுகிறார்…

  சோனியா குடும்பத்தின் சுவிஸ் வங்கி கணக்குகள் பற்றி நியாயமான விமர்சனத்தை வெளியிட்ட அத்வானி ,சோனியா மறுப்புக்கடிதம் எழுதியவுடன் [ எந்த திருடன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான்?] மன்னிப்புக்கேட்கிறார்….

  சோனியாவிடம் அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று தெரியவில்லை…..ஒருவேளை வெள்ளைத்தோல் மீதான பயம் நமக்கு இன்னும் குறையவில்லையோ?[ சுதந்திரத்தை போராடி அடையாமல் உதை வாங்கியே பெற்றவர்கள் தானே நாம்?]

 10. //டாக்டர் அப்துல் கலாம் மிகச் சிறந்த ஜனாதிபதியாக இருந்திருப்பார். இந்திய குழப்ப அரசியல் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டது. //

  இன்னுமா சார் இந்த ஊர் இவர நம்புது?

 11. சான்றோன்
  சங்மா, கலாம் பட்டியலில் அத்வானியை இணைத்தது அபத்தம். அவர் தன் குற்றச்சாட்டைப் பின் வாங்கவில்லை. இந்திய அரசியல் களத்திற்கு தேவையில்லாத நாசூக்கு அது என்பதே சரி. வெள்ளை தோல் என்பதெல்லாம் வீண் கற்பனை. அப்பட்டமான பதவி ஆசை.

 12. //டாக்டர் அப்துல் கலாம் மிகச் சிறந்த ஜனாதிபதியாக இருந்திருப்பார். இந்திய குழப்ப அரசியல் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டது. //

  “இன்னுமா சார் இந்த ஊர் இவர நம்புது?”====

  உண்மைதான் நண்பரே. தான் செய்த நல்ல காரியத்தை இப்போது மாற்றி, தான் சோனியாவை பிரதமராக்கத் தயாராக இருந்ததாகக் கூறுவது பொருத்தமில்லாமல் இருக்கிறது. சந்தர்ப்ப வாதம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் அடிப்படையில் நல்ல மனிதர், நேர்மையானவர். இந்த பிரகடனம் மட்டும் வெள்ளைத் துணியில் பட்ட கருப்பு மை போல இருக்கிறது. இந்த மேதைக்கு ஏன் இப்படிப்பட்ட அரசியல் எனும் கருத்து எனக்கும் உண்டு.

 13. திரு முகர்ஜி அவர்கள் ஜனாதிபதி ஆவதால் ஒன்றும் பிரச்சினை இல்லை.
  திறமை மிக்கவர்தான் அவர்.
  நம்ப ஊர் ஜனாதிபதிக்கு பெரிய திறமை இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த அம்மா மாதிரி ஊரே பட்டினி கிடக்க உழைப்பாளிகளோட வரிப்பணத்தில தன்னோட வம்ச்சத்துகளைஎல்லாம் கூட்டிக்கொண்டு உலகம் சுற்றாமல் இருந்தால் சரி.
  பிரணாப் அவர்கள் அப்படி நடக்கவும் மாட்டார்.நம்பலாம்.
  கலாம் அவர்கள் தனது பெருமையை தானே கெடுத்துக்கொண்டார்.
  இதை நான் எதிர்பார்க்கவில்லை.
  பாரதீய ஜனதா கட்சியினர் ஒன்றுபட்டு உழைத்தால் நன்மை விளையும்.
  அத்வானிஜியும்,மோடிஜியும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.
  இது நமது நாட்டுக்கு இன்று முக்கிய தேவை.
  நிதிஷை நம்பக் கூடாது அவரை கழட்டிவிட்டுவிட வேண்டும் .அவர் பின்னால் போவதை நிறுத்தினாலே அவர் நம் பின்னால் வந்துதான் ஆகவேண்டும்.
  ஈஸ்வரன்,பழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *