ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாஶ்சரிதம் மஹத்”

– வால்மீகி ராமாயணம், பாலகாண்டம் 4-7.

வால்மீகி முனிவர், தனது ராமாயண காவியத்திற்கு ஸீதையின் மஹாசரித்ரம் என்றும் பெயரிட்டார். வால்மீகி ராமாயணமானது – ஸீதையை ராவணன் அபகரித்தது, அவளை ராமர் சந்தேகித்தது, அவளை அக்நி பரீக்ஷை செய்வித்தது, ஒரு வண்ணான் சொன்ன அபவாதம் கேட்டு அவளை காட்டுக்கு அனுப்பியது, இறுதியில் அவள் பூமி ப்ரவேசம் செய்தது முடிய இவ்வாறாக தொடர்ந்து ஸீதையின் துயரங்களை சொல்லும் ஒரு காவிய நூல் என்று தத்துவம் அறியாமல் சிலர் சொல்கின்றனர். ஸ்ரீராமரையும் ஆணாதிக்கவாதி என்று சாடுகின்றனர். மேற்படி அபத்தங்களை மறுத்து, அவற்றை ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளின் படியே விளக்கி, அவள் சரித்திரமே திருவஷ்டாக்ஷரத்தின் தத்துவ விளக்கம் என்பதை அறுதியிடவே இந்த வ்யாஸம் எழுதப்பட்டது.

ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம் என்னும் நூலிலிருந்து சில ஸ்ரீஸூக்தி ப்ரமாணங்கள்.

ஸ்ரீஸூக்தி #5:

இதிஹாஸ ஶ்ரேஷ்டமான ஶ்ரீராமாயணத்தாலே சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது. பாரதத்தாலே தூதுபோனவன் ஏற்றம் சொல்லுகிறது.

ஸ்ரீஸூக்தி #6:

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும், உபாய வைபவமும் சொல்லிற்றாயிற்று.

ஸ்ரீஸூக்தி #7:

புருஷகாரமாம் போது க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.

ஸ்ரீஸூக்தி #8:

பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக, நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக, அநந்தரம் பிரிந்தது அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.

முன்னுரை:

யத்யபி ஏஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித: |
அத்வைத முபசர்தவ்யஸ் ததாப்யேஷ மயா பவேத் ||

– அயோத்யா காண்டம் 117 ஆம் ஸர்கம்.

எனது கணவர் ஸ்ரீராமரான இவர் ,ஒரு கொடுங்கோலன் (SADIST/PSYCHO) ஆக இருப்பாரே ஆனாலும்கூட, என் மனத்தில் எவ்வித சஞ்சலமும் இன்றி,நான் அவருக்கு பணிவிடை கொண்டுதானிருப்பேன்.

கிம் புநர்யோ குணஶ்லாக்ய: ஸாநுக்ரோஶோ ஜிதேந்த்ரிய: |
ஸ்திராநுராகோ தர்மாத்மா மாத்ருவத் பித்ருவத் ப்ரிய: ||

ஆனால் இவரோ எல்லோராலும் புகழத்தக்க குணங்கள் உடையவர் ! கருணைமிக்கவர்! புலன்களை வென்றவர் ! என்மீது நிலையான அன்பு வைத்திருப்பவர் ! தர்மாத்மா ! ஒரு தாயைப் போலும்,ஒரு தந்தையைப் போலும் என்மீது மனப்பூர்வமான நேசமுள்ளவர்.

எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும்,அவரை அனுசரித்துப் போவதிலும் (காட்டிற்கு உடன் வந்ததிலும்) ஆச்சரியம் தான் என்ன?

இவ்வாறு ஸீதையின் ஏக்கமானது “என் கணவர் ஸ்ரீராமர் சகல கல்யாண குணங்கள் நிரம்பியவர். உலகம் நிறைந்த புகழாளர். அதனால் தான், நான் என்னதான் கற்புக்கரசியாய் இருப்பினும், எவ்வளவு தான் தர்மங்கள் அனுஷ்டித்தாலும் எனக்கு என்று ஒரு தனிப்புகழ் கிட்டுவதில்லை. என் கீர்த்தியானது குடத்திலிட்ட விளக்கு போலுள்ளது. எனவே ஒரு கொடூரனுக்கு வாழ்க்கைப்பட்டு, இதேபோல் தர்மங்கள் அனுஷ்டித்து, கற்புக்கரசியாய் இருந்தால் தான் என்னுடைய க்யாதியும் குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிக்கும். ஆனால் ராமரோவெனில் மிகவும் நல்லவர். எனவே இப்பிறவியில் நான் விரும்பும் இந்த வாய்ப்பு கிட்டாது” என்று இருந்தது.

இனி வ்யாசத்திற்கு வருவோம்.

அயோத்தியா காண்டத்தின் இறுதி சர்க்கங்களில் தான் ஸீதையின் சரிதம் தொடங்குகின்றது. 117ஆம் சர்க்கத்தில் ஸீதையும் அநசூயையும் உரையாடுகின்றனர். அப்பொழுது மஹரிஷி அத்ரியானவர் கூறுகிறார்:

தஶ வர்ஷஸஹஸ்ராணி யயா தப்தம் மஹத் தப: |
அநஸூயா வ்ரதை: ஸ்நாத்வா ப்ரத்யூஹாஶ்ச நிவர்திதா: ||
தாம் இமாம் ஸர்வபூதாநாம் நமஸ்கார்யாம் தபஸ்விநீம் |
அநஸூயேதி யா லோகே கர்மபி: க்யாதிமாகதா: ||

– அயோத்யா காண்டம் -117, 11 &13

அநஸூயை என்னும் இவள் பத்தாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றியிருக்கின்றாள். எல்லாவித இடையூறுகளையும் விலக்கி,வ்ரதங்களை முழுமையாக செய்து முடித்தவள். எல்லா பிராணிகளாலும் வணங்கத்தக்கவள். கீர்த்தி பெற்றவள்! முதியவள்! கோபம் என்பதே ஒருபொழுதும் அறியாதவள் ! தன் அன்பு நிறைந்த நற்கர்மங்களால் “அநஸூயா” என்று உலகில் புகழ் பெற்றவள்.

இவ்வாறு தன் மனைவியை பலவாறு புகழ்கின்றார். அநஸூயை என்றால் பொறாமை இல்லாதவள் என்று ஒரு பொருளுண்டு. பிறரால் பொறாமைப்படக் கூட முடியாத இடத்தை அடைந்தவள் என்று மற்றோரு பொருளும் உண்டு. ஸீதை “தாயே! நானும் உன்னைப் போல் புகழ்பெற விரும்புகின்றேன்” என்றாள்.

அப்பொழுது அநஸூயை, “பேரழகியும், குணவதியும், சௌபாக்யவதியுமானயான ஸீதா! புகழ்பெற்ற ராமனால்,சுயம்வரத்தில் நீ அடையப்பட்டாய் என்று கேள்விப்பட்டேன். எது,எப்படி நிகழ்ந்ததோ, அவற்றை அப்படியே விஸ்தாரமாக கூறுவாய்” என்று பூர்வ வ்ருத்தாந்தங்களை கேட்கின்றார்.

ஸீதையும் தனது அயோநிஜ பிறப்பு தொடக்கமான வ்ருத்தாந்தங்களை ரஸமாக சொல்கின்றார். கலப்பை உழுத மண்ணில், புழுதியும் தூசுகளும் பட தன்னை ஜனகர் கண்டெடுத்தது (பாம்ஸு குண்டித ஸர்வாங்கீம் ஜநகோ விஸ்மய: அபவத்). “இவள் உன்திருமகள் ! சாதாரண மானுட பெண்ணன்று ” என்ற அசரீரி வாக்கினை கேட்டு ஜனகர் மகிழ்ந்தது, தாய் ஸுநயநா அரவணைப்பில், தர்ம சூக்ஷ்மமான நல்லுரைகளுடன் வளர்ந்தது, சாவித்திரி – சத்தியவான், அத்ரி – அநஸூயா, ரோஹிணீ – சந்திரன்,அருந்ததி – வசிஷ்டர் போன்ற உதாரண தம்பதியர் பற்றிய கதைகள் கேட்டது, பின்பு திருமணம் நடந்தது, வனவாஸம் செல்லும் முன்னர் மாமியார் கூறிய அறிவுரைகள் என்று விஸ்தரித்து வர்ணனம் செய்கிறாள்.

முடிவில் அநசூயை சீதையைப் பாராட்டுகின்றார். தன்னுடைய திவ்யமான மாலை, என்றுமே கசங்காத / அழுக்கடையாத வஸ்த்ரம், வாசனை த்ரவ்யம், அணிகலன் இவற்றை ஆசீர்வாதமாகக் கொடுக்கின்றார். ஸீதையை அணிகலன்களால் பலவிதமாக அலங்காரம் செய்கின்றார். வாசனைத் திரவியங்களை பூசி, “ஸீதா ! நீ உற்றார் உறவினர்களையும், கௌரவத்தையும், சுக போகங்களையும் துறந்து உன் கணவனுடன் வனவாஸம் செய்ய வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. கற்புக்கரசிகள் இப்படித்தான் நடக்க வேண்டும்”.

அதற்கு ஸீதை -“தாயே! என் தந்தை ஜனகர், எனக்கு சிவ தனுஸை கன்யா சுல்கமாக வைத்தார். எந்த வீரன் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றுகிறானோ, அவனுக்கே என் பெண் மாலை இடுவாள் என்று அறிவித்திருந்தார். ராமனும் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றினார். இதனால் மகிழ்ந்து போன என் தந்தை என்னைத் கன்யாதானம் கொடுக்க சித்தமானார். ராமரோ என் தந்தையின் உத்திரவின்றி நான் எதுவுமே செய்வதில்லை என்று மறுத்துவிட்டார். பிறகு தூதுவர்கள் சென்று தசரதரை அழைத்து வந்து, அவர் சம்மதித்த பிறகே என்னை மணந்தார்.

தீயமாநம் ந து ததா ப்ரதிஜக்ராஹ ராகவ: |
அவிக்ஞாய பிது: சந்தம் அயோத்யாதிபதே: ப்ரபோ: ||

– அயோத்யா காண்டம்- 118-51

தன் தந்தையார் பார்த்து நிச்சயித்த பெண்ணான என்னை மணந்தார். “என் அழகில் மயங்காமல், பித்ரு வாக்ய பரிபாலனம் என்னும் தர்மத்தை அனுஷ்டித்தார்.
எனக்கு காதல் திருமணத்தில் விருப்பமில்லை. தர்மத்தில்தான் பெரு விருப்பம். ஏனெனில் இன்று ஒரு அழகியை விரும்புபவன், நாளை அவளினும் அழகியாக தன் பார்வைக்கு படும் வேறு ஒருத்தியை விரும்பலாம். எனவே இது அவர் மீது இருந்த அன்பினை இருமடங்கு பெருக்கியது.

ப்ரியா து ஸீதா ராமஸ்ய தாரா: பித்ருக்ருதா இதி |
குணாத் ரூபகுணஶ்சாபி ப்ரீதிர் பூயோ அப்யவர்ததா ||
தஸ்யாஶ்ச பர்தா த்விகுணம் ஹ்ருதயே பரிவர்ததே |

– பாலகாண்டம்-77-28

எனது ராமர் – பித்ரு வாக்ய பரிபாலனம், மாத்ரு பக்தி,ஏக பத்னி வ்ரதம், சரணாகத ரக்ஷணம், ப்ராத்ரு ஸ்நேஹம் போன்ற தர்மங்களும், தயை, க்ஷமை, பக்தி, தவம், த்யானம், ஸத்யம், இந்திரிய நிக்ரஹம் போன்ற ஆத்ம குணங்களும், தன் அன்பர்கள் மீது வாத்சல்யம்,ஸௌசீலம், ஸௌலப்யம், ஆர்ஜவம் போன்ற குணங்களும், சிறந்த லாவண்யம், சவுந்தர்யம், ப்ரம்ம தேஜஸ் என்னும் ரூப லக்ஷணங்களும், புகழும், விஷ்ணுவுக்கு நிகரான வீரதீர பராக்கிரமங்களும், த்ரிலோக ஐச்வர்யமும் (வ்யாப்தா, நியந்தா) , குபேரனுக்கு நிகரான செல்வமும், ப்ருஹஸ்பதியைப் போன்று சகல சாஸ்திர நிபுணத்வமும் ,வாய்மை, பெரியோர்கள் / அன்பர் சொல் கேட்டல் என்னும் பல குணங்களும் கூடியவர்.

எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும், அவரை அனுசரித்துப் போவதிலும் ஆச்சரியம் என்ன? இத்துணை கல்யாண குணங்கள் படைத்த ராமனை வேறு எந்தப் பெண் மணந்திருந்தாலும் இப்படித்தான், சந்திரனைப் பிரியாத ரோஹிணியை போன்று கூடவே இருப்பாள்.

என்றிவ்வாறெல்லாம் ஓடிய அவளது உள்ளக்கிடக்கை தனை பெருமாளும் அறிந்தான்.

“உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறியும்” பெருமாள், அவளுடைய குணாதிசயங்களை வெளியிட சங்கல்பித்தார்.

*****

பிராட்டியானவள் நாமெல்லாம் பெருமாளை அடைய புருஷகாரம் ஆகின்றாள் (சிபாரிசு).

இதனை தர்க்கபூர்வமாக நிறுவுவோம். (உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்பன தர்க்கபாஷையின் அங்கங்கள் அதாவது உறுப்புக்கள் ஆகும். எனவே நீங்களும் என்னுடன் கொஞ்சம் தர்க்கம் (அ) ந்யாயம் பயிலுங்கள்).

உத்தேசம்: (பெயரிடல்)

அதற்கு அவளிடம் 1)க்ருபை, 2)பாரதந்த்ர்யம், 3)அநந்யார்ஹத்வம் என்னும் மூன்று குணங்கள் வேண்டும்.

லக்ஷணம்: (விளக்குதல்)

1) க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை. ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும்.

2) பாரதந்தர்யமாவது பரமபுருஷனுக்கு உரிமைப் படுகை. ஸ்வதந்த்ரனான அவனை அனுவர்த்தித்து (அவன் சொன்னபடியெல்லாம் நடந்து) அவனை வசப்படுத்த வேண்டியிருப்பதால் பாரதந்தர்யம் வேணும்.

3) அநந்யார்ஹ சேஷத்வமாவது அவனுக்கன்றி மற்றவனுக்கு உரிமைப் படாதொழிகை. பிராட்டி எம்பெருமானிடத்தில் சென்று “இந்த ஜீவனை நீ அங்கீகரிக்க வேணும்!” என்றால் “இவள் நம்மைத் தவிர வேறொரு விஷயத்திற்கு சேஷப்படாமல் (அடிமைப்படாமல்) நமக்கே அதிசயத்தை (நன்மை) விளைவிக்குமவள் ஆகையாலே நம்முடைய காரியத்தையன்றோ இவள் சொல்லுகிறாள்” என்று பரமன் நினைத்து, அவள் சொன்னபடி செய்கைக்கு உறுப்பாக அநந்யார்ஹத்வமும் வேணும்.

பரீக்ஷை: (சரிபார்த்தல்)

அவளுக்கு இம்மூன்று லக்ஷணங்களும் இருக்கும் படியை நாம் எங்ஙனே அறியலாம் என்னில் – பிராட்டி ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்றுதரம் பிரிந்து இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம். எப்பிரிவில் எக்குணம் வெளியாயிற்று என்னில்:

ராவணன் பிரித்தான் என்னும் சாக்கிலே முதலில் பெருமாளைப் பிரிந்து இலங்கைக்கு எழுந்தருளின சமயத்தில் “க்ருபா குணம்” வெளியாயிற்று.

முற்பட பிரிவு – க்ருபையை காட்டியது (க்ருபை – பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை).

  • தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருந்தமையாலும்;
  • அச்சிறையிலே தன்னை இரவும் பகலும் ஹிம்சித்த ராக்ஷஸிகள், ஒருநாள் திரிஜடையின் கனவு வ்ருத்தாந்தம் கேட்டார்கள். அக்கனவிலே ராவணன் தோல்வியுற்று, தெற்கு – எம திக்கிலே கழுதைமீது, அழைத்துச் செல்லப்பட்டதாகவும் (மாண்டுபோதல்), பெருமாள் வெற்றிபெற்று அயோத்தியில் ஸீதையுடன் முடிசூடியதாகவும் கண்டமை கேட்டு மிகவுமஞ்சி நடுங்கினார்கள். பிராட்டி அவர்களை நோக்கி “நானிருக்க நீங்கள் அஞ்சுவதென் ? அஞ்சவேண்டா !! என்று அபய ப்ரதானம் செய்தமையாலும்;
  • இந்த அபயப்ரதானம், வெறும் வாய்ச் சொல்லாய் ஒழியாமல் ,ராவண சம்ஹாரத்திற்குப் பின் தனக்கு ஸோபனம் (நற்செய்தி) சொல்லவந்த அனுமன், அந்த ராக்ஷஸிகளை சித்திரவதை (கொடியமுறையில் கொலை) செய்ய எத்தனித்தார். அப்பொழுது அவரோடே மன்றாடி, பிறர் படும் ஹிம்ஸையைக் கண்டு பொறுத்திருக்கும் படியான மனக்கொடுமை எனக்கில்லை என்று அறிவுறுத்தியும், அவ்வரக்கிகளின் குற்றங்களை நற்றங்களாக உபபாதித்தும் அவர்களைக் காத்து அருளியமையாலும், க்ருபா குணம் விளங்கிற்று.

இக்குணம் வெளியிடுவதற்கேயாம் பிராட்டிக்கு நேர்ந்த முதற் பிரிவு.

பிராட்டியே எல்லா ஜீவாத்மாக்களுக்கும் அன்னையாதலால், தாய் ஸ்தானத்தில் நின்று ராவணனுக்கு சொன்ன உபதேசங்களுள் சிலவற்றை இங்கே காணலாம்.

ஸுந்தரகாண்டம் 21ஆம் சர்கம்:

இஹ ஸந்தோ ந வா ஸந்தி ஸதோ வா நாநுவர்தஸே ||

இங்கே,இலங்கையில் சான்றோர்கள் யாரும் இருக்கவில்லையா? அல்லது அவர்கள் இருந்தும், நீ அவர்களை பின்பற்றவில்லையா? ஏன் இப்படி அதர்ம வழியில் இழிந்து அழிவைத் தேடுகின்றாய் ?

மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம: ஸ்தானம் பரீப்ஸதா
வதே ச அநிச்சதா கோரம் த்வயாஸௌ புருஷர்ஷப ||

உனக்கு கோரமான அழிவு வேண்டாம் என்று எண்ணினால், புருஷ ச்ரேஷ்டரான ஸ்ரீராமனுடன் நட்புக்கொள் (காலைப் பிடிக்கத் தேவை இல்லை, கையையாவது பிடி. அதாவது நட்புறவு கொள்வதே போதுமானது)

விதித ஸ ஹி தர்மக்ஞ: ஶரணாகதி வத்ஸல:
தேந மைத்ரீ பவத் தே யதி ஜீவிதும் இச்சஸி ||

அறம் அறிந்த ராமர் சரணடைந்தவர்களிடம் பேரன்பு கொண்டவர். நீ உயிருடன் இருக்க விரும்பினால் அவருடன் நட்புக்கொள். அவர் நீ செய்த அனைத்து அபசாரங்களையும் மன்னிப்பார்.

ஆயினும் ராவணன் திருந்தவில்லை. அநாதி துர்வாசனையினால், எவ்வளவு உபதேசித்தும் இவன் திருந்தவில்லையே என்று பரிதபித்தாள். ஐயோ ! இவனுடைய துர்புத்தி நீங்கி அனுகூலபுத்தி உண்டாக வேணும் என்று ஜீவாத்மா திறத்தில் தான் செய்யும் பரமகிருபையாலே அவனை தீமனங்கெடுத்து வழிப்படுத்தப் பார்த்தாள்.

பிற்சேர்க்கை:

பிரிவு என்றால் என்ன ?

நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ |
யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்தவையேதம் த்விஜோத்தம ||

– விஷ்ணுபுராணம் 1-8-17

உலகிற்கெல்லாம் தந்தை பகவான் என்றால், மஹாலக்ஷ்மீ ஜகன்மாதாவாய், கருணைக்கடலாய் நிற்கின்றாள். பகவானை விட்டு ஒருபோதும் பிரியாதவள். எங்கும் நிறைந்திருப்பவன் விஷ்ணு. அதுபோல் இவளும் எங்கும் நிறைந்திருப்பவள். ஆக மிதுனமாய் நிற்கும் இவர்களே நமக்கு பெருந்தெய்வம்.

பராசர ரிஷி, தன்னுடைய விஷ்ணு புராணத்தில் – பிராட்டியானவள் பகவானை விட்டுப் பிரியாதவள். அவளுடன் நித்ய சம்பந்தம் உள்ளவன் எம்பெருமான் என்று முதலில் பொதுவாகக் கூறியவர் பின்னர் அந்த நித்ய சம்பந்தத்தை பல பிரகாரங்களால் விளக்குகின்றார்.

அர்த்தோ விஷ்ணு இயம் வாணீ ||

அர்த்த: என்னும் பொருள் ஆண்பாலினத்தைச் சார்ந்து பகவானது விபூதியாக அதாவது பகவானாக கூறப்படுகின்றது. வாணீ என்னும் சொல் பெண்பாலினத்தைச் சார்ந்து லக்ஷ்மியின் விபூதியாக அதாவது பிராட்டியாக கூறப்படுகின்றது.

சொல் மற்றும் பொருளின் சம்பந்தமும் நித்தியம் என்பது சாஸ்திரங்களால் வலியுறுத்தப்படுகின்றது. இதனால் சொல்லும் பொருளும் போல் இணைந்து நிற்பவர் விஷ்ணு லக்ஷ்மீ என்னும் திவ்ய தம்பதிகள் என்பதும் சொல்லப்பட்டதாகின்றது.

நீதி பிராட்டி என்றால் நியமம் பெருமாள்; புத்தி பிராட்டி என்றால் போதம் பெருமாள்; சத்க்ரியா பிராட்டி என்றால் தர்மம் பெருமாள்; ஸ்ருஷ்டி பிராட்டி என்றால் ஸ்ரஷ்டா பெருமாள்; பிராட்டி பூமி என்றால் ஹரியே பூ-தரன் (பர்வதம் (அ) ராஜா); பிராட்டி துஷ்டி என்றால் ஹரியே சந்தோஷம்; பிராட்டி இச்சை என்றால் ஹரியே காமம்; பிராட்டி ஆஜ்யாஹுதி (நெய்) என்றால் ஜனார்தனனே புரோடாஸம்.

கிம் சாதி பஹுநோக்தேந ஸங்க்ஷேபேண இதமுச்யதே ||

பலவாறு சொல்லி பயன் என்ன ? சுருங்கச் சொல்கிறேன் ஒன்றை.

தேவ திர்யங் மநுஷ்யாதௌ புந் நாமா பகவாந் ஹரி: |
ஸ்த்ரீநாம்நீ ஶ்ரீ: ச விக்ஞேயா நாநயோர் வித்யதே பரம் ||

தேவ ஜாதி, திர்யக் ஜாதி, மனுஷ்ய ஜாதி மற்றும் உள்ளவை இவைகளில் ஆண்பாலினத்தைச் சார்ந்தவை அனைத்தும் பெருமாள் விபூதியாய் விஷ்ணு என்றே சொல்லப்படும். பெண்பாலினத்தைச் சார்ந்தவை அனைத்தும் லக்ஷ்மியினுடைய விபூதியாய் லக்ஷ்மி என்றே சொல்லப்படும். விபூதியென்றால் செல்வம் என்று பொருளாகும்). பல விபூதிகளைச் சொல்ல வேண்டும் என்று தொடங்கிய ரிஷி, பல படிகளையும் காட்டி, முழுதும் சொல்ல முடியாமல் போய் “இவ்வாறே மேலும் கண்டு கொள்க ” என்று தலைக்கட்டுகின்றார்.

ஸ்ரத்தயா அதேவோ தேவத்வம் அஶ்நுதே ||

அதாவது தேவன் அல்லாதவன் ஸ்ரத்தையாகிற லக்ஷ்மியினால்தான் தேவனாகும் தன்மையை அடைகிறான் – என்று வேதமும் சொல்லுகின்றது.

இப்படி லக்ஷ்மியானவள் நொடிப்பொழுதும் பிரியாது வாழும் மார்பனே என நம்மாழ்வாரும், ’அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்றும், திருமங்கையாழ்வாரும் இதையே, ’திருவுக்கும் திருவாகிய செல்வா’ என்றும் கூறுகின்றனர்.

மஹாலக்ஷ்மி நித்யையானவள். பகவானைப் போல் ஆதியும் அந்தமும் இல்லாதவள். பகவானைப் போல் எங்கிருந்தாவது தோன்றுகின்றாள், மறைகின்றாள். மறுபடி வேண்டும்போது மற்றோரிடத்திலிருந்து ஆவிர்பவிக்கின்றாள். பகவான் அதிதி மகனாக அவதரித்தபோது இவள் பத்மையானாள். பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாகத் தோன்றினாள். ராமாவதாரத்தில் ஸீதையாகவும், கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாகவும் இவளே அவதரித்தாள். அவன் தேவனாக அவதரித்தால் தேவப் பிறவியை மேற்கொள்கிறாள். அவன் மனித பிறவியை எடுத்தால், இவளும் மனிதப் பிறவியை ஏற்கிறாள். இப்படி எப்பொழுதும் எம்பெருமானுக்கு ஏற்ப அவதரிக்கின்றாள். பிரிவதே இல்லை.

அனுமனும் இதைக் கூறுகின்றான்:

அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் |
தேந அயம் ஸ ச தர்மாத்மா முஹூர்தம் அபி ஜேவதி ||

– ஸுந்தரகாண்டம் 15-52

இந்தத் தேவியின் மனம் ராமனிடத்திலும், ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது. அதனால்தான் இந்த தேவியும், தர்மாத்மாவான ராமரும், இதுநாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர்.

நாட்டைப் படை என்று அயன் முதலாத்தந்த நளிர் மாமலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே

– நாச்சியார் திருமொழி

குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன். அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஆண்டாள். விமலன் – அவ்விளையாட்டுக்களால் தனக்கொரு பாவமோ கர்மமோ அண்டாதவன்.

திருவிண்ணகர் சேர்ந்தபிரான் பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.

ஒப்பிலியப்பனால் படைத்து, பேணப்பட்டு, அழிக்கப்படும் சோலையே இந்த மூவுலகங்களும் என்று நம்மாழ்வாரும் பாடினார்.

இங்கே பெருமாளை சொன்னது பிராட்டிக்கும் உபலக்ஷணம் ஆகும்.

அவதாரத்தில் பிரிவு என்பது ஒரு நாடகம், அவ்வளவே.

பிறர் சமையல் செய்யக் காணும்,நாம் அதைக் கற்பது போலவும், ஆசிரியர் பரிசோதனைச் சாலையில் செய்யக் காணும் நாம் அதைக் கற்பது போலவும் தான் அவை. JUNIOR LAWYER, HOUSE SURGEON போல நாமும் SENIORS செய்யக் கண்டு PRACTICALS கற்கின்றோம். இதிஹாச புராணங்களில் பெருமாளும், பிராட்டியும், நித்யர்களும், பக்தர்களும், ரிஷிகளுமாக உபநிஷத், ஸ்ம்ருதிகளில் காணும் விதி, நிஷேத தர்மங்களை அனுஷ்டித்தும், த்யஜித்தும் காட்டுகின்றனர். நாமும் விதி, நிஷேதங்களை அறிந்து கைக்கொள்ளவே அல்லது விடவே தான் அவை நடத்தப்படுகின்றன.

பாரதந்தர்யம் மற்றும் அநந்யார்ஹ சேஷத்வம் ஆகியவற்றை இனி, மேல் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

9 Replies to “ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1”

  1. துக்ளக் பத்திாிகையில் பேரா.ஹபிப் முஹம்மது அவா்கள் ஏதோ முஹம்மது கௌதமருக்கு அன்பின் பாிமாணங்களை எடுத்துக் காட்டியவா் போல் பிதற்றியிருக்கின்றாா். வாகாபியா்களை அவா் கண்டிக்கவேயில்லை.வாகாபியா்கள் சீா்திருத்தம் செய்த தொண்டா்கள் என்கிறாா். ஒரு பதிலடி எழுதலாமே ?

  2. ஸ்ரீ வைஷ்ணவர்களின் வியக்யானங்க்களை வாசிக்கும்பூது விளைகின்ற பத்தி அனுபவமும் இன்பமும் அலாதியானவை. பத்தியொழுக்கத்தைச் சார்ந்த கலைச்சொற்கள் ஆழமான பொருள் கொண்டவை. ஸ்ரீ துளசிராம் அவர்கள் வைணவ சம்ப்ரமான வியாக்கியானங்களை மீலும் எழுத வீண்டுகின்றேன்.

  3. ஐயா,
    தங்களைப் போன்ற ஞானம்,பக்தி,அனுஷ்டானம் நிறைந்த பெரியோர்களின் ஆஸீர்வாதம் கிடைத்தால் மேலும் எழுதுவேன்.
    நன்றி,
    துளசிராமன்

  4. The last picture is surely by a Kovilpatti artist. He must have used actress Jamuna to draw Seethai. The image of Seethai reminds me of the famous former actress of Kollywood.

  5. பல முறை வாசித்து வாசித்து ஆனந்தப் பட்ட வ்யாசம். உள்ளத்தைத் தொடுகிறது. வாழ்த்துக்கள்.

    மிக எளிதாக ந்யாய சாஸ்த்ர விளக்கங்கள் உதாஹரணங்களுடன்.

    கற்பார் ராமபிரானையல்லால் மற்றொன்றும் கற்பரோ எனும் வாக்கிற்கு விவரணம் ஆதிகாவ்யமான ராமாயண மஹாகாவ்யம்.

    சீதாயா: சரிதம் மஹத் என்ற படிக்கு முனிசிம்ஹமாகிய வால்மீகி பகவானால் இக்காவ்யம் யாக்கப்பட்டுள்ளது என வ்யாசத் தொடரின் துவக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    ஜகன்மாதாவின் குணவிசேஷங்களை விவரித்துச் செல்லும்படிக்கு இந்த இரண்டையும் மிக அழகாக வ்யாசத் தொடரின் இப்பாகம் ஸமன்வயப்படுத்துகிறது.

    ஸர்வேச்வரன் ஜகன்மாதா எனும் மிதுனத்தின் இணைபிரியாமை சப்தநித்யத்வத்திலிருந்து துவங்கி அடுக்கடுக்காக உதாஹரிக்கப்பட்டமை மிகுந்த நெகிழ்வளிக்கிறது.

    சீதையின் சரிதத்தை சொல்லும் இந்த மஹாகாவ்யத்தின் பலச்ருதி …… ஸ்த்ரீகளுக்கான பலத்தை விசேஷித்துச் சொல்கிறது. குடும்ப வ்ருத்திம் தன தான்ய வ்ருத்திம் ஸ்த்ரியஸ்ச முக்யா: ஸுகமுத்தமம் ச …. என.

    ……………

    ****வால்மீகி ராமாயணமானது – ஒரு வண்ணான் சொன்ன அபவாதம் கேட்டு அவளை காட்டுக்கு அனுப்பியது**** க்ஷமிக்கவும். தோஷம் சொல்லுவதாக எண்ண வேண்டா. அடியேனிடம் இருக்கும் ஸ்ரீமத் வால்மீகி ராமயண ப்ரதி மற்றும் நான் அணுகிய ப்ரதிகளில் இந்த வ்ருத்தாந்தம் காணக்கிட்டவில்லை ஐயா. பிராட்டியைப் பற்றிய அபவாதம் வ்ருத்தாந்தமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படியான அபவாதத்தைச் சொன்னது வண்ணான் என்பது வால்மீகி பக்ஷம் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம். ஒருக்கால் வேறு வால்மீகி ராமாயணப் பதிப்புகள் ஏதிலேனும் இருக்குமானால் அது பற்றிய தகவலறிய விழைகிறேன்.

  6. // பிராட்டியைப் பற்றிய அபவாதம் வ்ருத்தாந்தமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படியான அபவாதத்தைச் சொன்னது வண்ணான் என்பது வால்மீகி பக்ஷம் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்ராயம். //

    தாங்கள் கூறுவது உண்மையே, கிருஷ்ணகுமார் அவர்களே, வால்மீகி இராமாயணத்தில் அப்படிப்பட்ட குறிப்பு இல்லை. வால்மீகி உத்திரகாண்டம் எழுதவில்லை என்போரும் உளர்.

    கம்பநாட்டார் உத்திரகாண்டம் எழுதவில்லை. ஒட்டக்கூத்தர் உத்திரகாண்டம் மட்டுமே உள்ளது.

    ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டத்திலும் துணிவெளுப்போரைப்பற்றிய குறிப்பு இல்லை.

    சீதை வனம்புகு படலத்தில் ஒரே ஒரு பாடல்மட்டுமே உள்ளது. அதைக்கீழே தருகிறேன்:

    “மன்னவன் இராமன் மானபங்கத்தை ம்னத்தினால் நினைக்கிலன் வானோர்க்
    கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
    நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
    பின்னையும் வாழ்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெருநிலத் துள்ளோர் — 728”

    இதுகேட்டதும் வருந்திய இராமன் தம்பியருடன் இதுகுறித்துப் பேசுவதாகவே உள்ளது.

    எனவே, இப்படி இரண்டு இராமகாதைகளிலும் இல்லாத ஒருகதை எப்படிப்புகுந்தது என்று தெரியவில்லை.

  7. மதிப்பிற்குரிய க்ருஷ்ணகுமார் ஸ்வாமிந்,
    சில மாதங்களாக தாங்கள், பின்னூட்டங்களில் கலந்து கொள்ளாமை கண்டு மிகவும் வருந்தியிருந்தேன். ஏதோ பணிச்சுமை என்று எண்ணுகின்றேன். தாங்கள் எனது வ்யாசத்திற்கு, பின்னூட்டமிட்டது என்னுடைய “பெறாப் பேறு” ஆகும். “அஹம் அஸ்ய அவரோ ப்ராதா, குணைர் தாஸ்யம் உபாகத:” என்றவாறு தங்கள் எழுத்துக்களை மிகவும் ரசிப்பவன் நான். எனவே தங்கள் ஆசிக்கு மிக்க நன்றி.
    “ஒரு ரஜகர் (துணிவெளுப்பவர்) பிராட்டி மீது எழுப்பிய அபவாதம்” பற்றி தாங்கள் எழுப்பிய குற்றச்சாட்டு மிகவும் சரியானதே. இது வால்மீகி ராமாயணத்தில் கிடையாது தான். எனினும் பூர்வபக்ஷம் (குற்றச்சாட்டு) என்பதனை மிகவும் பாமரத்தனமாகவே சிந்திப்பது மரபு ஆகும். அதற்கு அநுகுணமாக “தொலைக்காட்சி / திரைப்படம் பார்த்து , அதனை அவ்வாறே நம்பி, விவாதிக்கும் பாமரமக்களின் கருத்தாக” என்னுடைய பூர்வபக்ஷத்தினில் எழுதினேன். “வண்ணார், தனது பூர்வஜன்மத்தில் ஒரு கிளியாக இருந்தது”, “தன் மனைவியை நையப் புடைப்பது” , “அவர் கூறிய அபவாதம்” என்று மிக விரிவாக பத்ம புராணம், 125 ஆம் அத்யாயத்தினில்/ பாதாள கண்டத்தில் காணலாம். இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் அதற்கு சித்தாந்தத்தினை(விளக்கம்) மிக விரிவாக எழுதியுள்ளேன்.
    தான் வைக்கும் வாதத்தில் ,ஹேதுவிற்கும் ஸாத்யத்திற்கும் விரோதம் வந்தால் , அதனை தார்க்கிகர், ஹேத்வாபாஸம்(பொய்க்காரணம்) என்பர். நீங்கள் கண்டு சொன்ன “வால்மீகி ராமாயணத்தில் ரஜக வ்யவஹாரம் இல்லை” என்ற வாதம்- மிகச் சரியானதே .இதனை அஸித்தி அல்லது விருத்தம் என்னும் இரண்டு வகையான ஆபாசமாக கூறுவர் . தங்கள் வாதம் , என்னை நிக்ரஹ ஸ்தானத்தில் நிறுத்தி, தோல்வியில் தள்ளும் . இதனை இரண்டாம் பாகத்தில் விவரித்திருக்கின்றேன் . அதற்குள் நீங்களே முந்தி விட்டீர்கள் .
    மற்றொரு வகையில் பார்த்தால்- “நான் சொன்னது பூர்வபக்ஷம் தான். அதனை யார் மறுத்தாலும் வெற்றி எனக்குத்தான் . ” என்று லகுட உஷ்ட்ர ந்யாயத்தால் அடியேனும், தோல்வியிலிருந்து எளிதாக தப்பிக்கலாம்.
    தாங்கள் என்மீது, “யார் இவன் ! ஏதோ மேஜர்.சுந்தர்ராஜன் போல வடமொழி/தென்மொழிகளில் கலந்து எழுதுகின்றானே!” என்று முனிய வேண்டா. அவ்விளக்கங்கள் வடமொழிக்கு ப்ரசாரம் செய்ய வேண்டியே எழுதப்படுவனவாம். முன்னமே பயின்ற, தாங்களைப் போன்றவர்களுக்கு அல்ல.
    தாங்கள் அறியாதது எதுவும் அல்ல. இருப்பினும் தங்கள் சோதனமாக (தூண்டலாக) பத்ம புராணம் பற்றி இன்னும் சில தகவல்களை பின்வருமாறு அளிக்கின்றேன். பத்ம புராணமானது புலஸ்த்ய ப்ரஜாபதி ,பீஷ்மருக்கு உபதேசித்தது ஆகும். இது 1)ஸ்ருஷ்டி கண்டம், 2)பூமி கண்டம், 3)ஸ்வர்க கண்டம், 4)பாதாள கண்டம் மற்றும் 5)உத்தர கண்டம் என்று ஐந்து பாகங்களால் ஆனது.

    நாம் அன்றாடம் சேவிக்கும்

    பார்வத்யுவாச
    கேநோபாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்|
    பட்யதே பண்டிதைர் நித்யம் ஶ்ரோதும் இச்சாம் அஹம் ப்ரபோ|| -பத்ம புராணம் -5-72-334
    ஈஶ்வர உவாச
    ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே|
    ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராந்நே|| பத்ம புராணம்- 5-72-335

    என்னும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பலஶ்ருதி ஸ்லோகங்கள் பத்ம புராணம் உத்தர கண்டத்தை சேர்ந்தவை.

    ஶ்ரீராமோ ராமபத்ரஶ்ச ராமசந்த்ரஶ்ச ஶாஶ்வத: |
    ராஜீவலோசந ஶ்ரீமாந் ராஜேந்த்ரோ ரகுபுங்கவ: || என்று தொடங்கும் ஶ்ரீராம அஷ்டோத்தர ஶதநாம ஸ்லோகமும் இக்கண்டத்தை சேர்ந்தது.

    மேலும் இப்புராணத்தில் பரமஶிவனார் பார்வதி அம்மைக்கு உபதேசித்த ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகத்தினை, தான் கேட்டு, பிறகு CUSTOMIZE செய்த, பீஷ்மர், பின்னர் அதனை மஹாபாரதத்தில் அநுஶாஸநிக பர்வத்தில் யுதிஷ்டிரருக்கு உபதேசிக்கின்றார்.

    பகவத் கீதையின் 18 அத்யாயங்கள் பற்றி 18 கதைகள் இங்கு உண்டு. ஸ்ரீமத் பாகவத புராணத்தின் மாஹாத்மியமான – ஆத்மதேவர் – துந்துலி கதை, கோகர்ணன் 7 நாள்களில் செய்த பாகவத ஸப்தாஹம், அதன் ஶ்ரவண பலனாக துந்துகாரி மோக்ஷம் பெறுதல் போன்றனவும் இப்புராணத்தில் உள்ளன.
    உத்தர ராமாயணத்தில் விரிவாக சொல்லப்படாத லவகுஶா வரலாறு, ராமர் செய்த அஶ்வமேத யாகம், அனுமனின் திக்விஜயம் ,யாகக்குதிரையை லவகுஶர்கள் கைப்பற்றுவது, ஶத்ருக்நருடன் அவர்களின் யுத்தம், மற்றும் பாலகாண்டம் ராம சகோதரர்களின் நாமகரணம் ,பெயர்க்காரணம் போன்றன சுவாரஸ்யமாக சொல்லப்படுகின்றன. மஹாபாரதத்தின் ஸ்த்ரீபர்வம் , அநுஶாஸநிக பர்வம், போன்றவைகளுக்கும் இதுவே மூலம் ஆகும்.

    நன்றியுடன் ,
    துளசிராமன்

  8. பேரன்பிற்குரிய ஸ்ரீ துளசிராமன் ஸ்வாமிந்

    ஏதுமறியா அபுதஜனனான அடியேனை…… திருப்புகழிலிருந்தும் அருளிச்செயல்களிலிருந்தும் நான் கரந்துறைந்த……. எனக்கு இயல்பாகி விட்ட எனது மணிப்ரவாள எழுத்து நடையை மட்டிலும் வைத்து புதஜனனாக ஏற்றம் கொடுக்கிறீர்களே ஸ்வாமிந்.

    ஹிந்துஸ்தானத்தின் எல்லைப்புறத்தில் விதஸ்த நதிக்கரையோரம் வசித்து வருகிறேன். இங்கு நிலைமை சரியிலாத காரணத்தால் பாதுகாப்பினையொட்டி பாரத சர்க்கார் மற்றும் மாகாண சர்க்கார் இணையத்தை அடிக்கடி முடக்குகிறார்கள். முதலில் அசௌகர்யமாக இருந்தது. ஆனால் பாதுகாப்பினை ஒட்டி எடுக்கப்படும் எந்த ஒரு செயற்பாடும் தேவையானதே என்பதனை அனுபவம் உணர்த்துகிறது. அதனால் சமயம் கிடைக்கும் போது மட்டிலும் அவ்வப்போது தளத்தைப் பார்வையிடுகிறேன். மனதெலாம் பிராட்டியை ராம கதையை நிறைத்து விட்டீர்களே.

    ரஜக வ்ருத்தாந்தம் எனும் போது மூன்று வ்ருத்தாந்தங்கள் நினைவுக்கு வருகிறது. ஒன்று பாத்ம புராணத்து ராமாயண உத்தரகாண்ட வ்ருத்தாந்தம். இரண்டாவது ஸ்ரீமத் பாகவதத்தில் தசம ஸ்கந்த உத்தரார்த்தத்தில் நப்பின்னைமணாளன் கம்சனுடைய ரஜகனை சிக்ஷித்தமை. மூன்றாவது இவர் தான் நம்பெருமாள் என்று வஸ்த்ர ஸுகந்தத்தை வைத்து நம்பெருமாளை பெருத்த பாருளோருடன் கூட்டி வைத்த பரம பாகவதோத்தமர். இவரைப் பற்றி எழுதும் போதே கண்கள் பனிக்கிறது. ரோமாஞ்சனமுண்டாகுகிறது. அவரை எண்ணிக் கைகள் கூப்புகின்றன. ரஜகரென்றதும் என்னுடைய நினைவில் இவர் மட்டிலுமே நீங்காது நிறைந்திருக்கிறார் மனமெலாம் நன்றிகள் நிறைய. இவர் எல்லோருக்கும் கனிஷ்டர். குலோத்துங்கர். எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பனென்று அவனுக்கே ஆட்பட்ட பரம வினீதர்களாகிய வைஷ்ணவோத்தமர் தம் நெஞ்சில் நிறைந்தவரன்றோ இவர்.

    பொறுமை கருணை அன்பு என முத்தேவியரின் ப்ரத்யேகமான குணவிசேஷங்களை ஒருங்கே தன்னிடம் கரந்துறைந்த கோலோக நாயகி ப்ருந்தாவனேச்வரிக்கு கம்சன் தன் ராஜதானியாம் மதுராபுரியில் நந்தநந்தனன் ரஜகனை சிக்ஷித்ததில் வ்யசனமேற்பட்டிருக்கும் போலும். தாயார் கடாக்ஷம் கிடைத்துவிட்டால் பின்னால் ஜீவனுக்கு உத்தாரணமும் இல்லாமற் போய்விடுமோ. ஆயர்பாடியில் ராதிகையின் சரணரேணுவிற்கேங்கும் யசோதையிளஞ்சிங்கம் ப்ரியையின் வ்யாகூலத்தை சஹிக்கவும் செய்வனோ. ஆகையினாலே ப்ரியையின் ஆயர்பாடி அபிலாஷையை யமுனைத்துறைவன் காவிரிக்கறையில் ஸப்தப்ராகார மத்தியில் நிறைவேற்றி ரஜகனை உத்தாரணம் செய்தானோ என்றெல்லாம் அசட்டுத்தனமாக யோசித்திருக்கிறேன். அதனால் வண்ணான் மீது அபவாதம் என்றாலே நெஞ்சு கனத்து விடுகிறது. தலையல்லால் கைம்மாறிலேன் என்ற பாவத்துடன் பூஜ்ய புத்தியுடன் பார்க்க வேண்டியவர்கள் மீது அபவாதத்தைச் சுமர்த்த மனது ஏற்கவே மாட்டேனென்னுகிறது. அன்பின் அரிசோனன் வால்மீகி பகவான் ஆதிகாவ்யத்தில் இதை எழுதவில்லையென்பது ஒரு பக்ஷம் மட்டிலுமே. என் தரப்பிலிருந்து மறுபக்ஷம் இது.

    ந்யாய சாஸ்த்ரத்தை பிழிந்து தருகிறீர்கள். பூர்வபக்ஷம் சித்தாந்தம் என த்ருஷ்டாந்தங்களுடன் தாங்கள் நிர்வாகம் செய்யும் அழகில் சிறியேனைப் போன்ற மௌட்யனும் கூட தாத்பர்யத்தை லகுவாக க்ரஹிக்க முடிகிறது. சாஸ்த்ரோக்தமாக தேவரீர் பேசிற்றே பேசலல்லால் என பகவத்குணமெழுதி துடர்ந்து அடியார் மனதை நிறைக்க வேண்டும்.

    ஹரி:

  9. அன்புள்ள அரிசோனருக்கு,
    /***வால்மீகி உத்திரகாண்டம் எழுதவில்லை என்போரும் உளர்.***/

    வால்மீகி ராமாயணமானது 24,000 ஸ்லோகங்களாலானது. இது உத்தரகாண்ட ஸ்லோகங்களையும் கூட்டி வரும் தொகையாகும். கம்ப ராமாயணத்தில் ஒவ்வொரு 1000 பாக்களுக்கு, ஒருமுறை சடையப்ப வள்ளலை புகழ்ந்து ஒரு வரி அமைந்துள்ளது. அவ்வாறே வால்மீகி ராமாயணத்தில் ஒவ்வொரு 1000 பாக்களும் காயத்ரி மந்த்ரத்தின் ஒவ்வொரு அக்ஷரத்தினை கொண்டு தொடங்கும். அவ்வாறு தொடங்கும் 24 ஸ்லோகங்களை கொண்டு விளங்கும் காயத்ரி ராமாயணம் என்னும் ஸ்தோத்ரமும் உளது. அதில் இறுதி மூன்று பாக்களும் உத்தரகாண்டத்தைச் சேர்ந்தவை. அவை பின்வருமாறு ….

    22.)சாலநாத் பர்வதஶ்சைவ கணா தேவஸ்ய கம்பிதா:| 7-16-26
    சசால பார்வதி சாபி தட ஸ்லிஷ்ட மஹேஶ்வரம்||

    23.)தாரா புத்ரா புரம் ராஷ்ட்ரம் போகாச் சாதந போஜநம்| 7-34-39
    ஸர்வமேவா விபக்தம் நௌ பவிஷ்யதி ஹரீஶ்வர||

    24.)யாமேவ ராத்ரிம் ஶத்ருக்ந பர்ணஶாலாம் ஸமாவிஶத்| 7-66-1
    தமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூத தாரகாத்வயம்

    உத்தரகாண்டம் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்லோகங்களாலும், 111 ஸர்கங்களாலும் ஆனது. ராமாயணம் தொடங்கும் பொழுதே உத்தரகாண்ட கதாபாத்திரங்களான லவகுஶர்கள், அதனை ஶ்ரீராமருடைய திருவோலக்கத்தில்(அஶ்வமேத யாகஶாலையில்) அரங்கேற்றுவதாக அமைந்துளது. உத்தரகாண்டத்தினைப் பற்றி பாலகாண்டத்தில் பின்வருமாறு விவரணம் கூறப்பட்டுள்ளது.

    ராமாபிஷேக அப்யுதயம் சர்வ ஸைந்ய விஸர்ஜநம்|
    ஸ்வராஷ்ட்ர ரஞ்சநம் சைவ வைதேஹ்யா ச விஸர்ஜநம்|| ராமாயணம் -1-3-38
    இங்கு பிராட்டியை காட்டிற்கு அனுப்பியது(வைதேஹ்யா ச விஸர்ஜநம்) என்று பாலகாண்டத்தில் ராமாயண முன்னுரையில் கூறப்படுகின்றது.

    அநாகதம் ச யத் கிஞ்சித் ராமஸ்ய வஸுதா தலே|
    தத் சகார உத்தரே காவ்யே வால்மீகி: பகவாந் ரிஷி: || ராமாயணம் -1-3-39
    பொருள்: இவைகளை எழுதிய பின்னர், மண்ணுலகில், இதற்கு பிறகும் , ராமர் செய்யபோகும் பற்பல நற் செயல்கள் பற்றியும் ,பிற விவரங்களையும் தெய்வாம்ஶம் பொருந்திய முனிவர் வால்மீகி, அடுத்த பகுதியான உத்தர காண்டத்தில் வரைந்து நிறைவு செய்தார்.

    சதுர்விஶ்மஸஹஸ்ராணி ஶ்லோகாநாம் உக்தவாந் ரிஷி: |
    ததா ஸர்கஶதாந் பஞ்ச ஷட்காண்டாநி ததோத்தரம்|| ராமாயணம்-1-4-2
    பொருள்: முனிவர் அந்தக் காவ்யத்தில் இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்க்களும், ஐந்நூறு ஸர்கங்களும் ஆறு காண்டங்களும் மேலும் ஒரு காண்டமும் உள்ளதாக இயற்றினார்.

    ராமாயணத்தின் மொத்த காண்டங்கள், ஸ்லோகங்கள், ஸர்கங்கள், பாராயண முறைகள்-விளக்கங்கள், இன்னின்ன சர்கத்திற்கு வெவ்வேறு பாராயண பலன்கள் என்று வாயு புராணம் உமா-பரமேஶ்வர சம்ஹிதை, மற்றும் ராமாயணத்தின் மாஹாத்மியம் ஸ்காந்தபுராணத்தில் நாரத-ஸநத்குமார சம்ஹிதைகளில் விரிவாகக் காணலாம்.

    நன்றி,
    துளசிராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *