மதுரைக் கலம்பகம் — 1

லம்பகம்: 

பலவகை மலர்கள் கலந்த மாலையைக் கலம்பகமாலை என்று சொல்லலாம். பலவகைப் பொருள்களும், அகத்துறை சார்ந்த பாக்களும் பலவகை யாப்புக்களும் கலந்ததால் கலம்பகம் என்று பெயர்.

Related imageஇக்கலம்பகத்தை இயற்றியவர் குமரகுருபர சுவாமிகள். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் சுமார் 650 வருடங்களுக்குமுன்  பிறந்தவர்.  ஐந்து வயதுவரை வாய்பேசாமல் இருந்தவர், திருச்செந்தூர் முருகன் அருளால் ஊமைநிலை நீங்கப் பெற்று, ”கந்தர் கலி வெண்பா” பாடினார். மதுரைசென்ற சமயம் அங்கு கோயிலில் கொண்டிருக்கும் மீனாட்சி அம்மையின்மேல் மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடினார். மதுரைக் கலம்பகமும் இயற்றினார்.

இக்கலம்பகத்தின் பல உறுப்புக்களில். மதங்கியார்,  பிச்சியார், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியார் அறம், குறம், சித்து, களி, ஊர் அம்மானை, ஊசல் என்னும் சில உறுப்புக்கள் இதில் இடம் பெறுகின்றன.

மதங்கியார்; இவள் வாள் சுழற்றி ஆடுபவள்.

பிச்சியார்:     இவள் சிவ வேடம் புனைந்து ஆடுபவள்.

கொற்றியார்;   வைணவ வேடம் பூண்டு வருபவள்

இந்த உறுப்புக்களில் அந்தந்த மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகளை அமைத்துப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இவை தவிர மறம், குறம், சம்பிரதம், சித்து, களி, ஊர், அம்மானை, ஊசல், என்னும் உறுப்புக்களும் இடம் பெறும்.

மறம் என்பது மறச்சாதி மகள் ஒருத்தியை, ஒரு மன்னன் மணம் பேசி தூதன் ஒருவனை அனுப்ப, அத் திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை, அம்மறச் சாதியின் தலைவன் சினந்து கூறுவது.

குறத்தி குறி சொல்வது குறம்.

பிறர் செய்ய முடியாத செயல்களைத் தான்செய்வதாகச் சொல்வது சம்பிரதம்.

இரசவாதம் செய்யும் வல்லமை உள்ளவனாக ஒருவன் தன்னைக் கூறிக் கொள்வது சித்து.

கள் குடிப்பவன் கூறுவது களி.

பாட்டுடைத் தலைவனுடைய ஊரைச் சிறப்பித்துப் பாடுவது ஊர் எனப்படும்.

மூன்று பெண்கள் ஒருவருக்கொருவர் கேள்வியெழுப்பிய வண்ணம் அம்மானைக்            காய்களை வைத்து விளையாடுவது அம்மானையாகும்.

பெண்கள் ஊசல் ஆடுவது ஊசல்.

விநாயகரின் சேவடியை வந்தித்து வாழ்த்தி, முடிதாழ்ந்து வணங்கி சிந்தித்து மதுரைக் கலம்பகம் தொடங்குகிறார் குமரகுருபரர்.

ஐயனின் எளிமை

அங்கயற்கண்ணி அம்மையோடு செம்பொன் மதில் தவழும் தமிழ்க்கூடலான மதுரையில் வீற்றிருக்கும் பெருமானே! தேவலோக அரசுரிமை, பிரமலோகம், வைகுண்டலோகம் முதலிய உலகங்களின் அரசுரிமைகளை யெல்லாம் முறையே இந்திரன், பிரமன், திருமால் முதலான தேவர்களுக்கு அளித்துவிட்டு ஒரு பெண் [மீனாட்சி] அரசுரிமையைக் கொண்டு பேரரசு செலுத்துகிறாயே!  தேன் சொரியும் கற்பக மலர் மாலையை இந்திரனுக்கு வழங்கி விட்டு வேப்பம்பூக்களில் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலையில் சூடுவதேன்?

இந்திரனுக்கு அசனியைக் [இடி] கொடியாகக் கொடுத்து  பிரமனுக்கும் திருமாலுக்கும் அன்னம் கருடன் ஆகியவற்றைக்கக் கொடுத்திருக்கிறாய். ஆனால் உனக்கோ? மீன் கொடி! ரிஷபக்கொடி! போகட்டும் வேதமாகிய குதிரை இருக்க அதை விடுத்து பாண்டியர்களின் குதிரையாகிய கனவட்டம் வட்டமிடுவதைக் கண்டு களிக்கிறாயே!

பாய்ந்தோடும் கங்கையாலும் நனையாத உன் சடைமுடி, வையை, பொருனை என்ற சிற்றாறுகளில் நீராடி நனைவது பொருத்தமா? வேதங்களின் சுவையை உணர்ந்த நீ புத்தமுதம் வழிந்தொழுகும் இனிய கன்னித் தமிழின் மழலையையும் கேட்கிறாயே!

 

  1. விண்ணரசும் பிறவரசும் சிலரெய்த

                    விடுத்தொரு நீ

        பெண்ணரசு தரக் கொண்ட பேரரசு

                    செலுத்தினையே!

  1. தேம்பழுத்த கற்பகத்தின் நறுந்தெரியல்

                           சிலர்க்கமைத்து

         வேம்பழுத்து நறைக்கண்ணி முடிச்சென்னி

                           மிலைச்சினையே!

  1. வானேறுஞ் சில புள்ளும் பலர் அங்கு

                      வலன் உயர்த்த

            மீனேறோ வானேறும் விடுத்து

                           அடிகள் எடுப்பதே!

  1. மனவட்டமிடுஞ் சுருதி வயப்பரிக்கு

                           மாறன்றே

                        கனவட்டம் தினவட்டமிடக்கண்டு

                           களிப்பதே!

  1. விண்ணாறு தலைமடுப்ப நனையா நீ

                           விரைபொருனைத்

              தண்ணாறு குடைந்து வையைத்

                           தண் துறையும் படிந்தனையே!

  1. பொழிந்தொழுகு முது மறையின் சுவை

                    கண்டும், புத்தமுதம்

              வழிந்தொழுகும் தீந்தமிழின் மழலை

                           செவி மடுத்தனையே!

என்று சொக்கநாதப் பெருமானின் எளிவந்த தன்மையை வியக்கிறார்.

[விண்ணரசு—-தெய்லோக அரசுரிமை.   பிற அரசு—பிரம லோகம் வைகுண்டம் முதலியவற்றின் அரசுரிமை.   பெண்ணரசு—அங்கயற்கண் அம்மை.

கற்பகத்தின் நறுந்தெரியல்—கற்பக மலர்மாலை.  சிலர்—-இந்திரன்.  கண்ணி—தலையில் சூடுவது.  வானேறு—-இடி.  சிலபுள்—அன்னமும் கருடனும்.  மீனேறு—ஆண்மீனை வரைந்த கொடி.    ஆனேறு—விடைக்கொடி.  சுருதி—வேதம்.  மாறு அன்றே—விரோதமல்லவா?  கனவட்டம்—பாண்டியர்களின் குதிரை.  விண்ணாறு—கங்கை.  தமிழின் மழலை—தமிழாகிய மழலைச்சொல்]

புயவகுப்பு:   பாட்டுடைத் தலைவனுடைய தோள்வலிமையை மிகுத்துக் கூறுவது புயவகுப்பு.

ஐயனின் மலையொத்த தோள்களை வணங்கி, ஐயனே! தாருகாவன முனிவர்கள் ஏவிவிட்ட யானையின் தோல் போர்வையாக உன் தோள்களை அலங்கரிக்கிறது. புலியின் தோலை உன் இடுப்பில் ஆடையாக அணிந்திருக்கிறாய். தூணிலிருந்து உக்கிரமாக ஆக்ரோஷத்துடன் வெளிப்பட்ட நரசிங்கத்தின் வலியை அடக்கி உன் தோள்கள் பூரித்தன. அதே புயங்கள் திருக்கோலக்கா என்னும் தலத்தில் ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பொன்தாளம் வழங்கின. மிகவும் பெருமையோடும், கர்வத்தோடும் இடியென ஆரவாரமிட்டு வந்த ஏமநாதனைத் தோற்கடிப்பதற்காக உன் திருப்புயங்கள் விறகுசுமந்து, சாதாரிப் பண் பாடி மதுரையை விட்டே அவனை ஓடும்படி செய்து பாணபத்திரனின் மானம் காத்தது.

“அதே புயங்கள் வந்தி என்ற கிழவி தந்த பிட்டைக் கனிவோடு ஏற்று அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட கரையை சரிசெய்ய, கூடையில் மண்ணும் சுமந்தன. அதுமட்டுமா? உருவிய வாளுடன் வந்த பாண்டியமன்னனின் பிரம்படி பட்டு நடுங்கின. தடாதகைப் பிராட்டியைத் தழுவிய சுந்தரேசனின் பொற்புயங்கள் இவ்வளவு திருவிளையாடல்களையும் நிகழ்த்தின.” என்று ஐயனின் புயவலிமையைப் போற்றுகிறார். குமரகுருபரர்

பொரு சமரிடை யெதிர் பிளிறும் ஓர் களிறு

   பிளந்தொரு போர்வை புறஞ்சுற்றி நின்றன

   புகையெழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை

   வழங்கும் ஓராடை மருங்குற்கு அணிந்தன

   புல எயிறு அயில் தரு குருதியொடு உலவு

   மடங்கலின் வீரம் ஒடுங்கத் துரந்தன

   புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை

   அறிந்தொரு தானம் வழங்கப் புகுந்தன

   உருமிடி யென வெடி பட எதிர் கறுவி

   நடந்தொரு பாணன் ஒதுங்கத் திரிந்தன.

   உருகிய மனமொடு தழுவி ஓர் கிழவி

   கருந்துணி மேலிடு வெண்பிட்டுகந்தன

   உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது

   சுமந்தொரு கூடை மண் உந்திச் சொரிந்தன

   உருவிய சுரிகையொடு எதிர்வரு செழியன்

   பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன

   தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு

   சவுந்தர மாறன் தடம்  பொற் புயங்களே.

[களிறு—தாருகாவன முனிவர் ஏவிய யானை.  போர்வை—யானைத்தோலாகிய போர்வை. உழுவை—முனிவர்கள் ஏவிய புலி.  மடங்கல்—சிங்கம்.  இங்கே நரசிங்கம்.  புகலியர் குரிசில்—-திருஞான சம்பந்தர்.  வெடி—ஓசை.  கறுவி—கோபித்து.  நடந்த ஒரு பாணன்—ஏமநாதன்.   ஒதுங்க—-ஓட.  ஓர் கிழவி—வந்தி என்ற கிழவி.  மனை—அடைப்பதற்காக அரசால் ஒதுக்கப்பட்ட இடம்.  சுரிகை–உடைவாள்]

மதங்கியார்;   இரு கைகளிலும் வாட்படைகளை ஏந்தி, வீசி, பாடி ஆடும் ஒரு மதங்கர்சாதி மங்கையை நோக்கி ஓர் இளைஞன் சொல்வது மதங்கியார். மதங்கர் என்பவர் இசைக்கும் கூத்துக்கும் உரிய ஒரு சாதியர்.

கடம்பவனம் என்று பெயர்பெற்ற மதுரைநாயகர் சுந்தரேசர்முன் வாள்சுழற்றி விளையாடும் மின்னல்கொடி போன்றவளே! உன் கண்கள் இரண்டும் என் உயிரைக் கொள்ளை கொள்கின்றன.உன் நூபுரங்கள், உன் நூல்போன்ற இடை இற்றுவிடுமோ என்று முறையிடுகின்றன. என் நெஞ்சு அலமறும்படி வாளைச் சுழற்றுகிறீர்.  ம்முடைய வேல்போன்ற இரண்டு கண்களுமே என் உயிரைக் கவரப் போதுமே! அப்படியிருக்க இரண்டு வாள்களைவேறு சுழற்ற வேண்டுமோ?” என்கிறான் ஓர் இளைஞன்.

எறி வேல் இரண்டும் எனதாருயிர் சோர

உண்டு உலவ, இகல் வாளிரண்டு விசிறா

வெறிசேர் கடம்பவன மதுரேசர் முன்குலவி

விளையாடும் மின் கொடியனீர்!

சிறு நூல் மருங்குல் இறும் இறுமா கொல்?

என்று சில சில நூபுரம் சொல் முறையீடு

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடு

நும் அதிவேகம் நன்ற அறவுமே

[எறிவேலிரண்டு—கண்கள்.  விசிறா—விசிறி.  வெறி—-நறு மணம்.  நூபுரம்—சிலம்பு.]

பிச்சியார்:  சிவ வேடம் புனைந்து பிச்சைவாங்கச் செல்பவள் பிச்சியார். சிவபெருமானுக்கும் பிச்சியாருக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகிறார் புலவர்

Related imageஐயன், மற்ற இடங்களில் தூக்கிய இடது திருவடியை வெள்ளியம்பலமாகிய மதுரையில் ஊன்றி கால்மாறி ஆடுகிறார்வீடுகள்தோறும் பிச்சைவாங்கப் பிச்சனைப்போல் செல்கிறார். அவருடைய கடைக்கண் பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலானான். அவர் சிரிப்போ முப்புரங்களையும் எரித்ததுகாபாலி என்று பெயர் கொண்ட அவர் கையில் சூலம் ஏந்தியிருக்கிறார்.

பிச்சியாரும் சிவவேடங் கொண்டு வீடுதோறும் பிச்சையெடுக்கிறார். இவரும் கால்மாற்றி ஆடுகிறார். இவருடைய கண்பார்வையும், புன்சிரிப்பும் மற்றவர்களைக் கொல்லாமல் கொல்கிறது. பிச்சியாரும் கையில் சூலம்தாங்கிச் செல்கிறார் .இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது கண்கூடு. சிவபெருமானுக்குப் பிச்சன் என்று பெயர் இருப்பதால் இவருக்குப் பிச்சியார் என்று பெயர் வழங்குவது பொருத்தமே.” என்று இருவரையும் ஒப்பிடுகிறார்.

அடுத்ததோர் தவ வேடமும் புண்டரம் அணிந்த

முண்டமுமாய் வெள்ளியம்பலத்து

எடுத்த தாள் பதித்[துஆடிக் கடைப் பிச்சைக்கு

இச்சைக்குப் பேசும் அப்பிச்சன் எனச் செல்வீர்

கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர்

கவர்ந்து கொள்ள விடுத்த கபாலி போல்

பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ

பிச்சியார் எனும் பேர் உமக்கிட்டதே?

[புண்டரம்—திருநீறு.  முண்டம்—நெற்றி.  கடை—வீட்டு வாயில்கள்.  நோக்கம் மன்மதனை  எரித்தது.  மூரல் முப்புரத்தை எரித்தது]

மறம்:   மறக்குடியில் பிறந்த பெண் ஒருத்தியை மணம் செய்து கொள்ள விரும்பிய அரசனிடமிருந்து வந்த தூதனைப் பார்த்து பெண்ணின் தந்தையாகிய மறவன் கூறுவது இது

கற்பக மரத்தை விட உயர்ந்த உச்சியை உடைய மாடங்கள் நிறைந்த கூடல் நகர பாண்டியர் குடியில் வந்தவர்கள் நாங்கள். எங்களோடு புரிந்த போரில் எதிர்நிற்க முடியாமல் ஒருகோடி மன்னர்கள் மடிந்தார்கள்.

தூதனே! உன்னை இங்கு அனுப்பிய மன்னன் யாரென்று நினைத்து எங்கள் பெண்ணை மணம்செய்ய விரும்பிக் கொடுத்த ஓலையைக் கொண்டுவந்தாய். திருமுகத்தில் எழுதப்பட்ட விஷயம் இது என்றால் அவன் திருமுடியில் எழுதப்பட்டிருக்கும்  அவன் தலையெழுத்தையும் தெரிந்து கொள்ள அவ்வரசனுடைய தலையை வெட்டிக் கொண்டுவா என்று சினந்து கூறுகிறான்.

   தருமுகத்து நிமிர்குடுமி மாடமலி கூடல்

   சவுந்தர பாண்டியர் குடியாம் சமரினிடைஆற்றாது

   ஒரு முகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்தொழிந்தார்

   உனை விடுத்த மன்னர் யார்? உரைத்திடுவாய் தூதா!

   மருமுகத்த நெறிக் குழல் எம்மறக்கொடியை வேட்பான்

   மணம் பேசி வரவிடுத்த வார்த்தையது சொன்னாய்

   திருமுகத்தில் எழுத்து இதுவேல் திருமுடியில் எழுத்தும்

   தேர்ந்தறியக் கொண்டுவா சிகையினொடும் சென்றே!

[தருமுகத்து நிமிர் குடுமி—கற்பக மரத்தை விட உயரமான உச்சியையுடைய….   திருமுகத்தில் எழுத்து—–ஓலையிலுள்ள எழுத்து.  திருமுடியில் எழுத்து.—-தலையெழுத்து.   சிகை—குடுமி]

இங்கு அம்மறவனுடைய குடிப்பெருமையயும், மன்னனுக்கு அஞ்சாத தன்மையையும் பார்க்கிறோம்.

குறம்:  ஒரு தலைவிக்குக் குறி சொல்லும் குறத்தி, “அம்மே! மதுரைத் தேவரான சுந்தரேசர் மணம் செய்த தடாதகைப் பிராட்டிக்குக் குறிசொன்னவள் நான். உனக்கும் குறிசொல்வேன். உன் கையைக் காட்டு என்று சொல்லும்போதே ஒருவர் தும்மல்போட, தும்மலும் நல்ல சகுனம்தான்,” என்கிறாள்

இதன் பின் தலைவி ஒரு சுளகில் நெல்லைக் கொட்டு கிறாள். அந்த நெல்லை எண்ணிப் பார்த்து, அம்மே! நீ நினைத்த பொருள் கை கூடும்.” என்கிறாள். 

இதன் பொருள் என்னவென்றால் முத்தாலாகிய கச்சணிந்த அம்மையின் முலைத்தழும்பும், வளைத்தழும்பும் குறியாக ஐயன் பெற்றதே ஆகும். அம்மை (காமாட்சியாக) காஞ்சியில் தவம் செய்த போது மண்ணால் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தாள். வேகவதி ஆற்றில் வெள்ளம் வந்த போது சிவலிங்கத்தைப் பாதுகாப்பதற்காக அதை இறுகத் தழுவிக்கொள்கிறாள். அப்போது அவளுடைய முலைத்தழும்பும், வளைத்தழும்பும் இறைவன்மேல் அழுத்தமாகப் பதிந்ததன. இந்த வரலாற் றையே குறத்தி சொல்கிறாள்.

அம்மைக்குக் கிடைத்த பேறு உனக்குக் கிடைக்கும்.  அம்மே! நீ நினைத்தபடியே ஐயனைச் சேர்வாய்.” என்று சொல்கிறாள்

   செல்லிட்ட பொழின் மதுரைத் தேவர்

                     மணம் தடாதகா தேவிக்(கு) அன்று

          சொல்லிட்ட குறமகள் யான், தும்மலும்

                     நல்வரத்தே காண், சுளகில் அம்மை

          நெல்லிட்ட குறிக்கு நீ நினைந்ததொரு பொருள்

                     அது நித்திலக் கச்சார்க்கும்

          வல்லிட்ட குறியினொடும் வளையிட்ட

                     குறியுளதோர் வடிவுதானே

[செல்—மேகம்.   சொல்லிட்ட—சொல்லிய.  வரத்து—வரவு.     சுளகு—சிறு முறம்.    நித்திலக் கச்சு—முத்தாலாகிய கச்சு.   வல்—அம்பிகையின் நகில்]

[அடுத்த பகுதியில் முடியும்]

One Reply to “மதுரைக் கலம்பகம் — 1”

  1. தமிழ இலக்கிய அமுதம் பருகுங்கள்.வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *