மதுரைக் கலம்பகம் — 2

<<  முந்தைய பகுதி

மதுரை மகளிர்:

Image result for அம்மானைமதுரை நகரில் பால்போல் நிலாவீசும் முற்றங்களிலே பெண்கள் அம்மானை ஆடுகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் பூமாலைகளிலிருக்கும் வண்டுகள் ராகம் பாடுகின்றன. பெண்களுடைய கூந்தலிலுள்ள மலர்களில் தேன் கொப்பளிக்கிறது. அப்பெண்களுக்கு இடை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி பிறக்கிறது புலவருக்கு. முத்துப் பந்தலில் அம்மானை ஆடும் பெண்கள் கண் இமைக்காமல் அம்மானைக் காய்களையே பார்த்து தேவலோகத்துப் பெண்களோடு விளையாடுகிறார்கள். அவர்கள் விளையாடும்போது இப்பொழுது இவர்கள் கண் இமைக்காமல் ஆடுவதாலும் இவர்களுடைய பேரழகாலும் இவர்களுக்கும் தேவமகளிருக்கும் வேற்றுமை தெரியவில்லையாம்! மதுரைப் பெண்கள் தேவமகளிர்போல் தோற்றமளிப்பதால் தேவர்களுக்கே மதுரைப் பெண்களுக்கும் தேவமகளிர்க்கும் வேற்றுமை தெரியவில்லை. மதுரை மகளிரின் அழகு, நாகரிகம். அம்மானையாடும் திறம் முதலியவற்றைப் பாராட்டுகிறார்.

            பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்பளிக்கும்

                 பனிமலர்க் குழலியர் பளிக்குப்

            பால் நிலா முன்றில் தூநிலா முத்தின்

                 பந்தரில் கண்ணிமையாடா(து)

           அமரர் நாடியரோ(டு) அம்மானையாட

                 ஐயம் நுண் நுசுப்பளவு அல்ல என்(று)

           அமரரும் மருளும் தெளி தமிழ்க் கூடல்

                 அடல் அரா, அலங்கல் வேணியனே!

[பமரம்—-பிரமரம், வண்டு. நறவு—தேன். குழலியர்—மதுரையிலுள்ள மகளிர். அமரர் நாடியர்—தெய்வமகளிர்.  அரா—அரவு, பாம்பு.  ஐயம்—சந்தேகம்.  நுண் நுசுப்பு—நுண்ணிய இடை]

அம்மையின் சங்கடம்:

அம்மை தலை கவிழ்ந்து நிற்பது நாணத்தாலா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று எண்ணும் புலவர், அதைச் சொக்கநாதப் பெருமானிடமே கேட்டுவிடுகிறார்.

மீனக்கொடியையும் திருமாலை ரிஷபக் கொடியாகவும் கொண்ட அழகிய சொக்கநாதரே! ற்பூரவல்லியாகிய அம்மை முப்பத்திரண்டு அறங்களையும் செய்கிறாள் ஆனால் அவள் கணவராகிய நீரோ புலால் நாறும் பிரும்ம கபாலத்தை எடுத்து, வீடுகள்தோறும் பிச்சை எடுக்கிறீர். இதை எண்ணித்தான் அம்மை தலைகவிழ்ந்து நிற்கிறாளோ?”

ஆனேறும் வலனுயர்த்த அழகிய சொக்கர்க்கு

                 இதுவும் அழகிதேயோ?

     கானேறும் குழல் சரியக் ற்பூரவல்லி

                 தலை கவிழ்ந்து நிற்ப

     ஊனேறு முடைத்தலையிற் கடைப்பலி கொண்டு

                 ஊரூர் புக்கு உழலுமாறே!

[ஆனேறு—திருமாலாகிய ரிஷபம்.  கான்—-நறுமணம்.  கற்பூரவல்லி—அம்பிகை.  ஊனேறு முடைத்தலை-புலால் நாறும் தலை, பிரமகபாலம்.  கடைப் பலி—-வாயில்கள் தோறும் வாங்கும் பிச்சை]

மடக்கு:

ஒரே வார்த்தை வெவ்வேறு பொருளில் மடக்கி வருவது மடக்கு எனப்படும். சோமசுந்தரக் கடவுளுக்கு நடனசாலையாக (அரங்கமாக) விளங்குவது, வெள்ளியம்பலமான மதுரை. ஐயனைத் தவிர மற்றெல்லாவற்றையும் வெறுத்தவர்களுடைய மனமும் அரங்கமே. (ஆலயமே) ஐயன் மார்பினில் அணியும் அணிகலன்கள் எலும்பு, அரவு, ஆமை முதலியன. (என்பு + அரவு + ஆமை = என்பரவாமை) மக்கள் என்னை(ஐயனை)ப் பரவாமல். (தோத்திரம் செய்யாமல்) இருப்பது அறியாமையால். (என் பரவாமை) அறிந்திருந்தால் பரவியிருப்பார்கள்.

Image result for நான்மாடக்கூடல்இறைவன் விரும்புவது மா(மகா)கவியான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற மகாகவிகளின் தேவாரப் பாடல்களை. (மா=கவி+மானமே). அவர் விரும்பி வீற்றிருப்பதும் மாக விமானமே (இந்திர விமானமே).  ஐயனுடைய இருப்பிடம் (ஸ்தானம்) வளைந்த மதில்களையுடைய மதுரை. இயற்கையாக இருப்பது நான்மாடக்கூடலான மதுரை. செயற்கையாக இருப்பது வெள்ளிமலை.

அரங்கம் ஐயற்கு வெள்ளி அரங்கமே

                 ஆலயம் பிற எள்ளியர் அங்கமே

     உரங்கொள் பல்கலன் என்பு, அரவு, ஆமையே

                 உணர்வுறாமையும் என் பரவாமையே

     விரும்பு பாடலும் மா கவிமானமே

                 மேவும் மானமும் மாக விமானமே

      திருந்து தானம் தடமதிற் கூடலே

                  செயற்கை வெள்ளித்தட மதில் கூடலே

[அரங்கம்—நடன சாலை.  அங்கம்—மனம்.  பிற எள்ளியர் அங்கம்-சிவபெருமானையன்றிப் மற்றாவற்றையும் வெறுத்தவர்களுடைய மனம். உரம்—வன்மை. மார்பு.  மானம்—பெருமை.      மேவும் மானம்—விரும்பி வீற்றிருந்தருளும் விமானம்.  மாக   விமானம்—இந்திர விமானம்.  தானம்—இருப்பிடம்.  தடமதில் கூடல்—வளைந்த மதில்களை உடைய மதுரை.  வெள்ளித் தடம்—வெள்ளி மலை, கைலாயம்.]

இப்பாடலில் அரங்கம், என்பு, அரவு, ஆமை, விமானம், கூடல் என்ற சொற்கள் இரு பொருளோடு மடங்கிவருவதைக் காணலாம்.

மேகவிடு தூது:

சொக்கநாதர்பால் காதல்கொண்ட தலைவி மேகத்தைத் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவிக்கிறாள்.

“மேகங்களே! பொன்னாலான மேருமலைக்கும் கயிலாய மலைக்கும் சமமான தென்று பொதிய மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமான் தடாதகைப் பிராட்டியின் மனம் கவர்ந்தவர்.

“முச்சங்கங்களும் முத்தமிழும் வளர்ந்த பெருமையுடையது மதுரை. சந்தன மரங்கள் மிகுந்த பொதியமலைச் சாரலில் தாமரையில் கண்துயிலும் திருமால்போல மலையில் படியும் மேகங்களே! இந்த பிறைச் சந்திரனும் குயில் குஞ்சுகளும் காதலால் தவிக்கும் என் உயிரைப் போக்குகின்றனவே! இதை அந்தப் பெருமானிடம் சொல்லுங்கள் இந்தப் பிஞ்சும் குஞ்சுமே இப்படி உயிரை எடுக்குமென்றால் இவை பெரிதாக வளர்ந்தால் என்னவெல்லாம் செய்யுமோ? எனக்கு அச்சமாயிருக்கிறதே!”

ஏம வெற்பென்று கயிலாய வெற்பென்று

                 மலயாசலத்தென்றும் உறைவார்

    கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர்

                 கூடலிற் சென்று புகலீர்

    தாமரைககண் துயிலும் மாலெனச் சந்தமலி

                 சாரலில் துஞ்சு முகில்காள்

      மாமதிப் பிஞ்சும் இரைதேர் குயில் குஞ்சும் 

உயிர் வாய் மடுத்து உண்டு ஒழிவதே.

{ஏம வெற்பு—மேருமலை.  ஏமம்—பொன்.  மலயாசலம்-பொதிய மலை.  கோமகட்கு அன்பர்—அரசியாகிய தடாதகைப் பிராட்டியாருக்குக் கணவர்.  முச்சங்கம் வளர் கூடல்—-இயல், இசை, நாடகமென்னும் மூன்று தமிழுக்கும் உரிய சங்கங்கள் வளர்ந்த மதுரை.     சந்தமலிசாரல்—சந்தன மரங்கள் மிக்க மலைச் சாரல்.  மதிபிஞ்சு—பிறை நிலா.  உயிர்—என் உயிர்]

புலவரின் ஏக்கம்:         

Image result for சோமாஸ்கந்தர்அம்மையப்பருக்கு நடுவில் சோமாஸ்கந்தனாக வீற்றிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்ததும் புலவருக்கு ஒரு ஏக்கம் தோன்றுகிறது. அதை வெளிப்படயாகவே ஐயனிடம் தெரிவிக்கிறார்.

பிறையைச் சடையில் வைத்த பெருமானே!

“நீண்ட பெரிய கண்களையுடய உமாதேவியுடன் வீற்றிருக்கும் பொழுது, குழலினும் யாழினும் இனிய மழலைமொழி பேசும் முருகனை மடியிலிருத்தி உள்ளம் பூரிக்க உச்சி முகந்து அணைத்துக் கொஞ்சுகிறீர்கள். நீங்கள் இருவரும் உலகத்துக்கே தாய் தந்தை அல்லவாஅதனால் தானே நாரதர் கொடுத்த மாங்கனியை அம்மையப்பனாகிய உங்களை வலம்வந்து விநாயகர் பெற்றார்? உலகையெல்லாம் பெற்ற உங்களுக்கு உலகமக்கள் எல்லோருமே குழந்தைகள்தானே? அப்படியிருக்க முருகனை மட்டும் மடியிலிருத்திக் கொஞ்சுவது பட்சபாதம் அல்லவா?”

    வள்ளை வாய் கிழித்துக் குமிழ் மறித்தமர்ந்த

             மதாரிக் கண்ணியும் நீயும்

   மழலை நாறமுதக் குமுத வாய்க் குழவி

             மடித்தலத்து இருத்தி, முத்தாடி,

   உள்ள நெக்குருக, உவந்து மோந்தணைத்து

            ஆங்கு உகந்து நீர் இருத்திரால் உலகம்

   ஒருங்கு வாய்த்திருக்கு ஒருதலைக் காமம்

            உற்றவா என்கொலோ? உரையாய்!

[வள்ளை-=காது.   குமிழ்—நாசி.   கண்ணி=கண்ணை உடையவள். உமாதேவியார்.  குழவி=முருகன்.  முத்தாடி==முத்தமிட்டு

மதுரைக் கதம்பம் பலவண்ண மலர்களால் தொடுக்கப் பட்டிருப்பது போல மதுரைக் கலம்பகம் என்ற நூலும் பல்வேறு உணர்வுகளைக் கொண்ட பாடல்களால் பாடப்பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு வண்ணம் ஒரு மணம், நிறையப்பெற்று விளங்குகிறது.

[முற்றும்]

One Reply to “மதுரைக் கலம்பகம் — 2”

  1. மிக அருமையாக இந்தச் செந்தமிழ்ச் சிற்றிலக்கியங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தங்கள் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறப்புற எமது வாழ்த்துக்கள்.

    _

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *