அக்பர் என்னும் கயவன் – 10

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

சிந்து (Indus) நதியைக் கடப்பதக்குச் சரியானதொரு இடத்தைக் கண்டுபிடிக்கும்படி ஒரு அதிகாரிக்கு உத்தரவிடுகிறார் அக்பர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்த ஆசாமி ஆற்றைக் கடப்பதற்கு சரியான இடம் எதுவுமில்லை என்று பதிலளிக்கிறார். நான் சொன்ன இடத்தில் போய்ப் பார்த்தயா? என்று கேட்கிறார் அக்பர். அவ்வளவு தொலைவு செல்லவில்லை என்று சொல்லும் அந்த அதிகாரியை உடனே பிடித்துக் கயிற்றில் கட்ட உத்தரவிடும் அக்பர், அந்த ஆசாமியை அழைத்துக் கொண்டு தான் சென்று பார்க்கச் சொன்ன இடத்திற்கு போகிறார். மாட்டுத்தோலில் காற்றடைக்கப்பட்ட ஒரு மிதவையில் அந்த ஆளைத் தூக்கிப் போட்டுக் கட்டி ஆற்றில் தூக்கி எறிய உத்தரவிடுகிறார். அதன்படியே செய்து முடிக்கிறார்கள்.

அக்பரின் சேனையிலிருந்த அத்தனை பேர்களும் ஆற்றின் கரையில் நின்று அந்தக் காட்சியைக் காண்கிறார்கள். மிதவையில் கட்டப்பட்ட அந்த அதிகாரி ஆற்றின் போக்கில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அலைக்கழிக்கப்படுகிறார். கண்ணீர் விட்டுக் கதறி அழும் அந்த ஆள் தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுகிறான். அக்பரின் கூடாரத்தைத் தாண்டி அந்த மிதவை செல்கையில் அவரை ஆற்றிலிருந்து மீட்கச் சொல்லிய அக்பர், அந்த ஆளை அரசாங்கச் சொத்தாக கணக்கெழுதச் சொல்கிறார். அதன்படி அந்த ஆள் சந்தயில் விற்பனைக்குக் கொண்டு போகப்பட்டு அடிமையாக விற்பனை செய்யப்படுகிறான். அந்த ஆசாமியுடைய நண்பர்களில் ஒருவர் அவரை 80 பொற்காசுகளுக்கு விலைக்கு வாங்குகிறார். அந்தப் பணம் அரசாங்கப் பொக்கிஷத்தில் சேர்க்கப்படுகிறது. இப்படியாக தவறு செய்த ஒருத்தனைத் தண்டிக்கும் அக்பர், அவனை அடிமையாக விற்பனை செய்து அதில் காசும் பார்க்கிறார்.

பாதிரி மான்செராட் அக்பரின் தந்திர நடத்தையைக் குறிக்கும் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். “கைபர் கணவாயைக் கடந்து சமவெளியை அடைந்த அக்பர், தான் ஆப்கானிஸ்தானுக்குப் போகையில் தனக்கு உணவு தானியங்களை அளிக்க மறுத்த கிராமங்களை எரித்து அழிக்கும்படி உத்தரவிட்டார்.  போருக்குப் போகையில் அந்தக் கிராமத்தினரைத் தாக்கினால் கைபர் கணவாயின் குறுகிய வழியில் தானும் தன்னுடைய படையினரும் தாக்குதலுக்கு உள்ளாக நேருமென்பதாலும், ஒருவேளை போரில் தோல்வியடைந்து இந்தியாவுக்குப் பின்வாங்க நேர்ந்தால் அவர்கள் வழியை அடைத்துவிட வாய்ப்பிருப்பதாலும் அவர்களை ஒன்றும் செய்யாமல் சென்ற அக்பர், ஆப்கானிஸ்தானத்திலிருந்து திரும்பி வருகையில் அதனை மறக்காமல் அந்தக் கிராமத்தினரை தாக்கி அழித்தார்”.

தன்னை எதிர்த்த இளவரசன் ஒருவனை குவாலியர் கோட்டையில் அடைத்து, அவன் சாகும் வரை சங்கிலியால் பிணைத்து கட்ட உத்தரவிட்டதை நினைவு கூர்கிறார் பாதிரி மான்செராட். பொதுவாக தண்டனைக்குள்ளான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிற அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் மூலமாக குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் சாதாரணர்கள் அரச காவலாளிகளிடம் அல்லது தபால்களை சுமந்து ஓடுபவர்களிடம் தண்டனை வழங்க ஒப்படைக்கப்படுவார்கள். மேற்படி காவலளி தோல்பட்டைகளும், சாட்டைகளும், கூர்மையான ஆணிகள் அறைந்த மரக்கட்டைகளும், கைதிகளை அடிக்க உதவும் வழ வழப்பான கட்டைகளும்,  அவனின் தலையை நசுக்கிக் கொல்லும் ஆணியறையப்பட்ட வழ,வழப்பான பலகைகளும் எனப் பல கொடூரமான ஆயுதங்களைத் தன்னுடன் வைத்திருப்பான். அத்துடன் பலவிதமான சங்கிலிகளும், இடுக்கி போன்ற ஆயுதங்களும், கை விலங்குகளும் மற்ற இரும்பால் செய்த கொடூரமான ஆயுதங்களும் அரண்மனையில் வாயில் கதவுகளுக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருக்கும். அதனை தண்டனை வழங்கும் காவலாளி பாதுகாத்துக் கொண்டிருப்பான்.

*******

அக்பரின் சமகால இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புகள் அக்பரின் மட்டுமீறிய பெண்ணாசை குறித்தான நீண்ட குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. உண்மையில் பெரும்பாலான அவரது போர்களின் நோக்கம் தோற்கடிக்கப்பட்ட அரசர்களின் பெண்களைப் பிடித்து தனது அந்தப்புரத்தில் அடைப்பது என்பதுதான். தோற்கடிக்கப்பட்டவன் இஸ்லாமியனாக இருந்தால் அவர்களின் நிரம்பி வழியும் அந்தப்புரம் அப்படியே அக்பரின் கையில் ஒப்படைக்கப்படும். அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவர்கள் குரூரமாக மிரட்டப்பட்டு அவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் பிற பெண்களையும் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு நிர்பந்திப்பது அக்பரின் வழக்கமாக இருந்தது.

முகலாய அந்தப்புரம் – ஒரு ஓவியம்

அதையும் விட தனது அந்தப்புரத்திற்குப் பெண்களைக் கவர்ந்து வருவதற்கு அக்பர் பலவிதமான தந்திரங்களையும் கடைபிடித்தார். தன்னைப் பார்க்க வருகிற முக்கியஸ்தர்கள் அல்லது அவரின் படைத்தளபதிகளின் மீதான அக்பரது கோபத்தைத் தனித்து அவரைக் குஷிப்படுத்த அந்தப்புரத்திற்குப் பெண்களை அனுப்ப நிர்பந்திக்கப்பட்டார்கள். அல்லது கணவன் இறந்தபிறகு உடன்கட்டை ஏற முயலும் பெண்களைக் காப்பாற்றுவது என்கிற போர்வையில் அவர்களைத் தூக்கி வருவது, தோற்ற அரசனின் பெண்களைக் கும்பலாக இழுத்துக் கொண்டு வருவது போன்றவை அக்பராலும் அவரது படையினராலும் செய்யப்பட்டன.

ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழும் ஒரு பேரரசனின் சுகத்திற்காக ஆடுகளைப் போல அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டு வாழ்ந்த அந்தப் பரிதாபகராமான அந்தப் பெண்களின் அவலத்தை எவராலும் எளிதில் யூகிக்க முடியும். என்றைக்காவது வெளியூர் செல்லும் அக்பரின் அந்தப்புரத்து அழகிகள் பெண் யானையின் மீது நாலாபுறமும் அடைக்கப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட கூண்டுகளில் ஏற்றப்பட்டு,  அவரின் கூடச் செல்லும் வாழ்வினை மகிழ்ச்சியாகவா நினைத்திருப்பார்கள்? அவர்களின் வாழ்க்கை முழுவதும் புர்காக்களால் அடைக்கப்பட்ட ஊமை விலங்குகளைப் போல வாழ்ந்த அவர்கள், அக்பரின் பார்வை தன்மீது விழும்வரை ஒரு மூலையில் கிடந்தார்கள்.

அக்பரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பாதிரிகளின் குறிப்பைக் கூறும் வரலாற்றாசிரியர் ஸ்மித்,”1582-ஆம் வருடம் அகாவிவா (Aquaviva) என்கிற பாதிரியின் தலைமையில் வந்தவர்கள் அக்பர் ஒரு பெரும் குடிகாரர் எனக் காண்கிறார்கள். வயதான பாதிரியான அகாவிவா அக்பரின் பெண்களைச் சூழ்ந்து வாழும் ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறையைக் குறித்து கண்டனம் செய்கிறார். தன்னை விமர்சிப்பவர்களை மன்னிக்கும் மனோபாவமற்றவரான அக்பர் முகம் சிவந்து அந்த இடத்தைவிட்ட அகன்றார்” என்கிறார். போதைக்கு அடிமையான அக்பரின் முன்னோர்களில் இருந்து அக்பர் எந்தவிதத்திலும் மாறியவராக இருக்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

அடுத்தவனின் மனைவிகளை அபகரிக்கும் எண்ணம் அக்பருக்குள் பெரும் நெருப்பெனக் கனன்றுகொண்டே இருந்திருக்கிறது. அக்பரின் தளபதிகளில் ஒருவனான ஆதம்கான் மால்வாவின் அரசன் பாஸ்பகதூரைத் தோற்கடிக்கிறான். பாஸ்பகதூர் இன்னுமொரு கேடுகெட்ட, தீயொழுக்கம் நிரம்பிய இஸ்லாமிய அரசன். பாஸ்பகதூரின் அந்தப்புர அழகிகளை ஆதம்கான் தனதுடையவர்களாக ஆக்கிக் கொண்டான் என ஆக்ராவிலிருக்கும் அக்பருக்குத் தகவல் வருகிறது. தனக்குக் கிடைக்க வேண்டிய அழகிகளைத் தனது தளபதி கைப்பற்றிக் கொண்டதனை அறிந்த பத்தொன்பது வயதே நிரம்பிய அக்பர்  பெரும் கோபம் கொண்டு உடனடியா ஆக்ராவை விட்டு (ஏப்ரல் 27, 1561) மால்வாவுக்குக் கிளம்புகிறார். ஆதம்கான் அக்பரின் தாதியான மஹம்  அனாகா என்பவளின் மகன். அக்பரின் குரூர மனப்பான்யையும், கொலைவெறித்தனத்தையும் நன்கு அறிந்தவளான மஹம் அனாகா உடனடியாக ஆட்களை அனுப்பி ஆதம்கானை எச்சரிக்கிறாள்.

பின்னர் அக்பரைத் தொடர்ந்து செல்லும் மஹம் அனாகா அக்பரிடம் தனது மகனின் தவறை மன்னிக்கும்படி வேண்டுகிறாள். அக்பர் ஆதம்கானை மன்னிக்கிறார். ஆனால் ஆதம்கானோஅந்தப்புரத்திலிருந்த இரண்டு பேரழகிகளான ஹிந்துப் பெண்களை  அக்பருக்குத் தெரியாமல் தள்ளிக் கொண்டுபோய் ஒளித்துவைக்கிறான். ஆக்ராவுக்குப் புறப்படத் தயாராக இருந்த அக்பருக்குத் தெரிய வருகிறது. உடனடியாக அந்தப் பெண்களை தன் முன்னர் அழைத்துவரும்படி ஆணையிடுகிறார் அக்பர். அந்தப் பெண்கள் அக்பருக்கு முன் வந்து உண்மையைச் சொன்னால் தன்னுடைய மகனின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சிய மஹம் அனாகா அந்த இரண்டு அப்பாவி ஹிந்துப் பெண்களையும் கொலை செய்கிறாள். பின்னர் அக்பரிடம் அந்தப் பெண்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறாள். பின்னர் அந்தப் பெண்களைப் பற்றி அக்பர் எதுவும் கேட்கவில்லை. இறந்து போனவர்களைப் பற்றி அவருக்கு என்ன கவலை?

தனது மிகச் சிறிய பதினாலாவது வயதில் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாக அரியணை ஏறிய நாளிலிருந்து அக்பரின் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. அக்பரின் வரலாற்றாசிரியரான அபுல்ஃபசல் புர்காக்களின் பின்னே வீழ்ந்து கிடந்த அக்பரைக் குறித்து ஓயாமல் புகழ்கிறார்.

அக்பரின் பாதுகாவலரும், மாமனுமான பைராம்கானுடன் ஏற்பட்ட பகை காரணமாக பைராம்கானின் அதிகாரங்களை படிப்படியாக பிடுங்கி அவரைக் கொலை செய்தபின் அக்பர் வேசிகளால் ஆட்டுவிக்கப்பட்டார் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். “பைராம்கானின் அதிகாரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அக்பர் நேர்மையற்ற, தீய எண்ணம் கொண்ட பெண்கள் பட்டாளத்தினால் ஆட்டுவிக்கப்பட்டார். மிக மோசமான பாவாடை அரசாங்கம் நடத்திய அக்பர், ராஜாங்க நடவடிக்கைகளில் முற்றிலும் தனது ஆர்வத்தை இழந்தவராக இருந்தார். மஹம் அனாகா போன்ற நம்புவதற்குத் தகுதியற்ற பெண்கள் அவரை ஆட்டுவித்தார்கள்” என்கிறார்.

முகலாய வரலாற்றில் மகம் அனாகாவின் இடம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. பெண்களைக் கூட்டிக் கொடுகிற, அக்பரின் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கு பெண்களைத் தயார் செய்து, அக்பருக்கும் பிற அரசவை முக்கியஸ்தர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அழகிகளைஅனுப்பி வைக்கிற மகம் அனாகா முகலாய அரசின் முக்கிய முடிவுகளில் தனது ஆளுமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் இருந்தாள். இரண்டு அப்பாவி ஹிந்துப் பெண்களின் கொலையில் மஹம் அனாகாவின் பங்கினை ஏற்கனவே பார்த்தோம்.

அக்பரின் பெண்ணாசையைக் குறித்துக் கூறும் பதாயுனி, “மதுராவிற்குச் செல்லும் அக்பர் அங்கிருக்கும் முக்கியஸ்தர்களின் பெண்களுடன் திருமண உறவு கொள்வதற்காக கவ்வாலி பாடுகிறவர்களையும், அலிகளையும் சுற்றியுள்ள நாடுகளுக்கு அனுப்பி வேவு பார்த்தார். அந்தப்புரங்களில் மிக எளிதாகப் புகுந்த அவர்கள் அங்கிருந்த அழகிகளைக் குறித்து அக்பருக்குச் சொன்னார்கள். மொத்த நகரத்திலும் அச்சம் ஒரு பெரும் தீயைப் போலப் பரவியது. அப்துல் வாஸி என்பவனுடைய மனைவி மிகப் பேரழகுடையவள். அக்பரின் கண்கள் அவள் மீது பட்டன. முகலாய அரசர் எந்தவொரு பெண்ணின் மீதாவது ஆசை வைத்தால் அந்தப் பெண்ணின் கணவன் சத்தமில்லாமல் விவாகரத்து செய்துவிட்டு அவளை உடனடியாக அரசரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்”.

அவ்வாறு அனுப்ப மறுப்பவர்களுக்கு நிகழும் கதியை நம்மால் எளிதாகக் கற்பனை செய்து பார்க்க முடியும். அப்பாவிகளின் அந்தப்புரத்தில் புகுந்து அழகான பெண்களைத் அரசனுக்காகத் தூக்கிச் செல்லும் ஆயுதம் தாங்கிய முகலாய படைத்தலைவனை யாரால் என்ன செய்துவிட முடியும்?

இதன் காரணமாகவே பெரும்பாலான ஹிந்துப் பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களைத் தீயிலிட்டுக் கொளுத்திக் கொண்டு மரணமடைந்தார்கள். இன்னும் சிலர் தங்களின் பெண்களின் முகத்தில் வாளால் வெட்டியும், தீயில் கருக்கியும் அவளது முகத்தை அவலட்சணமாக்கினார்கள். இன்னும் சிலர் தங்களைத் தூக்கிச் செல்ல வந்த முகலாயப் படைத்தலைவனுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அவனது மனதை மாற்ற முயன்றார்கள். பெரும்பாலான சமயங்களில் தப்புவதற்கு வாய்பில்லாமல் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தின் ஐயாயிரத்தில் ஒருத்தியாக அடைபட்டார்கள். இதன் காரணமாகவே அக்பர் வரும் வழியிலிருந்த அப்பாவிகள் சிதறி ஓடினார்கள். தங்களின் சொத்துக்களைப் பறிகொடுத்து பராரிகளானாவர்கள் தங்களின் மனவிகளை, அன்னையரை, சகோதரிகளை ஒரு கயவனுக்கு ஒப்புக் கொடுக்க மனமின்றி அஞ்சி ஒடுங்கினார்கள்.

(தொடரும்)

One Reply to “அக்பர் என்னும் கயவன் – 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *