உயிருண்ணி

Image result for merging with sivaசிவனை மணிவாசகர் ‘உயிருண்ணி’ என்கின்றார்.  சிவன் அடியவர்களின் உயிரை உண்ணும் பான்மையினை உயிருண்ணிப் பத்து என்னும் பதிகத்தில் பாடுகின்றார்.  சீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான்.   இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது.

‘ஏகன் ஆதல்’ என்ற பிரயோகத்தில், ‘ஆதல் என்ற ஆக்கச்சொல்லால் சிவனும் சீவனும் என இரண்டாக நின்றவை ஒற்றுமைப்படுதல் என்று பொருள்படும்.  இவ்விரண்டு பொருள்கள் எவ்வாறு ஒற்றுமைப்பட்டு ‘ஏகம்’ ஆகும் என்பதைச் சைவசித்தாந்தம் ஆராய்கின்றது.

  1. ஒருபொருளாய் ஒற்றுமைப்படுதல். குடத்திலுள்ள ஆகாயமும் வெளியில் உள்ள ஆகாயமும் ஒருபொருளே.  குடம் உடைந்தவழி குடாகாயமும் வெளியில் உள்ள ஆகாயமும்போல ஒன்றாதல்.
  2. திரிவுக் காட்சியால் ஒற்றுமைப்படுதல். கயிற்றினைப் பாம்பெனக் காணுதல், கானலை நீரெனக் காணுதல்
  3. ஒன்று திரிந்து ஒன்றாய் ஒற்றுமைப்படுதல்மண்ணே குடமாதல் போல்.
  4. குணகுணித் தன்மையால் ஒற்றுமைப்படுதல்வெள்ளை நிறமும் தாமரையும் கூடி வெண்டாமரை ஆதல், செம்மை நிறமும் தாமரையும் கூடிச் செந்தாமரையாதல்.
  5. ஒன்றோடுன்று விரவுதலால் ஒற்றுமைப்படுதல் தீ இரும்புடன் விரவி இரண்டும் கூடி நெருப்புப் பிழம்பாதல்.
  6. பிரிக்கமுடியாத ஒற்றுமை சையோகம்பாலொடு கூடிய நீர்போல ஒற்றுமைப்படுதல்.
  7. பாவனையால் ஒன்ற்றுமைப்படுதல். – கருடோகம் பாவனையால் கருடனும் மாந்திரீகனும் ஒற்றுமைப்படுதல்.  
  8. இலயமாய் ஒற்றுமைப்படுதல்காய்ந்த இரும்பில் நீர் இலயமாதல் போல ஒற்றுமைப்படுதல்.
  9. ஆவேசத்தால் ஒற்றுமைப்படுதல்பேயால் பிடிக்கப்பட்டவன் செயலெல்லாம் பேயின் செயல் போல ஆவேசத்தான் ஒற்ருமைப்படுதல்
  10. விளங்காமையால் ஒற்றுமைப்படல் விறகில் நெருப்பு இருந்தும் காணப்படுவதில்லை; இருந்தும் விளங்காமல் நெருப்பு ஒற்றுமைப்பட்டுள்ளது
  11. சத்திகெட்டு ஒற்றுமைப்படுதல்விளக்கின் ஒளி சூரிய ஒளியின்முன் தன் சத்திகெட்டு இரண்டு ஒளிகளும் ஒன்றாய்நிற்றல்போல ஒற்றுமைப்படுதல்.
  12. இன்பநுகர்ச்சியில் ஒற்றுமைப்படல்தலைவனும் தலைவியும் கலவி இன்பத்தில் ஒற்றுமைப்படுதல்போல.
  13. நட்பு மிகுதியால் ஒற்றுமைப்படல்.
  14. ஒப்புமையால் ஒற்றுமைப்படல்ஆவும் காட்டுப்பசுவும்போல

இச்சூத்திரத்துள் ஒற்றுமைப்படுதல் என்பது இங்கு காட்டப்பட்ட எதனுள்ளும் அடங்காது.  இங்கு சீவனும் சிவனும் ஒற்றுமைப்படுதலை, “அவனே தானே ஆகிய அந்நெறி,’ என்ற தொடரால் மெய்கண்டார் சுட்டினார்.  அவன் – சிவன்; தான்  – ஆன்மா

இறைவன் உயிர்களுக்கு உடல் கருவிகளை நல்கி உலக போகங்களை அனுபவிக்கச் செய்கின்றான்.  அதோடு நின்றுவிடுவதில்லை.  உயிரோடு கலந்து ஒன்றாயும் உயிரோடு கூடிநின்று உடனாயும் தோன்றாத் துணையாக இருக்கின்றன்.  அவனது கலப்பில்லையானால் உயிருக்கு அறிவு முதலியன நிகழா.

காணும் ஆற்றலுடைய கண்ணுக்கு ஆன்மபோதம் கண்ணுடன் நின்று பொருள்களைக் காட்டுகின்றது.  ஆன்மபோதம் உடன் நிற்கவில்லையென்றால் கண்கள் விழித்திருந்தாலும் பொருள்கள் காட்சிப்படா.  அதுபோல அறிவித்தால் அறியும் ஆன்மாவுக்கு இறைவன் உடன்நின்று வினைப் போகங்களை ஊட்டுகின்றான்.

இதனைச் சிவஞானபோதம் 11ஆம்நூற்பா, காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல், காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்,என்றுகூறுகின்றது.

இறைவன், கண்டு காட்டுகின்றான் என்று நூற்பா கூறினும், காட்டிக் காண்கின்றான் என மாற்றிக்கொள்ளவேண்டும்.  காட்டுவதோடு அமையாது, உயிரின்பொருட்டு அவனும் காண்கின்றான்

நாம் ஒரு பொருளைக் காணும்போது நம்முடைய ஆன்ம அறிவும் கண்ணின் காட்சியும் பிரித்தறிய இயலாதவாறு உடன்நிகழ்கின்றன.  அதுபோலவே, இறைவன் உயிர்களுக்குக் காட்டுவதும், தான் உயிர்களின் பொருட்டுக் காண்பதுவும் உடன்நிகழ்கின்றன.

ஆன்மபோதம் காட்டக் காண்கின்ற கண் தானே காண்பதாக அறிகின்றது.  அதுபோல இறைவன் காட்டக் காண்கின்ற ஆன்மா தானே அறிவதாக அறிகின்றது.

ஒரு செயல் நிகழ இருவரும் இருக்க, தானே முதல், கருத்தா என ஆன்மா நினைக்கும்போது, இறைவன் மறைந்துநிற்கிறான்.  ஆன்மா ஒன்றே ‘ஏகமாக’ வெளிப்பட்டு நிற்கின்றது  இது ஆன்மா மலங்களால் கட்டுண்டபோது நிகழ்வது.

தன்பொருட்டு இறைவன் காட்டுவதும், காண்பதுமாகிய பேருபகாரங்களைச் செய்வதை ஆன்மா அறிகின்றபோது நன்றியால் அவ்விறைவன்பால் பேரன்பு பெருகுகின்றது.  அந்த அன்பு ஆன்மாவை இறைவனிடத்தில் செலுத்துகின்றது

பேரன்பு ஆன்மாவைத் தன்னை மறக்கச் செய்கின்றது, தன் செயலறுகின்றது.  தன் செயலற்ற ஆன்மாவின் செயலெல்லாம் சிவச்செயலாகின்றன.  இந்நிலைமையினைத் திருவுந்தியார் எனும் தமிழாகமம்,

நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன்

தன்செயல் தானேயென் றுந்திபற

தன்னையே தந்தானென் றுந்தீபற.“ (6)

என்றுணர்த்தியது.

தற்போதம் ஒழிந்த ஆன்மாவிடத்தில் சிவன் அவ்வான்மாவாகவே நிற்றலை ‘ஏகனாகி’ எனச் சாத்திரம் கூறுகிறது.  அங்கு ஆன்மா இல்லை; சிவனே இருக்கின்றான்.

ஆன்மா பிரவிருத்தியில் செல்லாமல் சிவோகம் பாவனையில் ஊற்றமொடுநிற்கையில்  சிவன், தற்போதமும் பாசக்கூட்டமும் நீங்கித் தனியாக நிற்கும் அவ்வான்மாவிடத்து  தானேயாக நிற்பன் எனச் சிவாகமம் கூறும்.  (சிவஞானபோதம், 2ஆம் நூற்பா முதலதிகரணம்).

இந்நிலையில் சிவமே முனைத்துநிற்றலின் உயிர் என ஒருபொருள் இல்லாததுபோன்று நிற்கும்.  உயிர் தற்போதம் முழுதும் நீங்கி, அது நின்றநிலையில் சிவம் நிற்றலால் அச்சிவத்தை, உயிருண்ணி என்றார் திருவாதவூரடிகள்.

மணிவாசகர் அருளிய உயிருண்ணிப் பத்தின் கருத்து, சிவானந்தம் மேலிடுதல்  என உரைத்தனர் நம் முன்னோர்.  சிவம், ஆனந்தமே; இன்பமே.  (திருவாசகம் (386).

உயிர் தானென்றொரு பொருள் இல்லாததுபோல் தற்செயலற்று நிற்கையில் உயிர் தோன்றாத் தன்மையாய்த் தழைத்து வளர்பேரின்பம் தானாகிச் சிவானந்தம் மேலிட்டு நிற்கும் என்பது முன்னோர் நெறி.  அதனால், திருவாசகத்தின் உயிருண்ணிப் பத்து என்னும் பகுதிக்குச் சிவானந்தம் மேலிடுதல் எனக் கருத்துரை கூறினர், நம் முன்னோர்.

இவ்வாறு உயிரின் குணமான சீவபோதத்தைச் சிவன் தன் சிவானந்தத்துள் அடக்கிக்கொள்ளுதலினால், அச்சிவனை உயிருண்ணி என்றனர், அடிகளார்.

இப்பத்தின் முதற்பாடலில், விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார், அடிகள்.  இந்நிலையில் சிவானந்தம் மேலிடத் திருவருள் வியாபகத்துள் தாம் அடங்கும் பக்குவத்தை அடிகள் அடைந்துவிட்டார்.  இந்த நிலையில் தாம் எய்த உள்ளது இனி எல்லா நாள்களிலும் சிவானந்தத்தில் திளைத்து, அத்திளைத்தலினால் களிப்புற்றிருத்தலே என்கிறார், அடிகள்.

“எந்நாட் களித்து எந்நாள் இறுமாக்கேன் இனி யானே?” என்ற தொடரில், ‘எந்நாள் களித்து’, ‘எந்நாள் இறுமாந்து’ என்பனவற்றினோடு, முற்றும்மையாகிய ‘உம்’ சேர்த்து, எந்நாளும் களித்து, எந்நாளிலும் இறுமாந்து எனப் பொருள்கொள்ளவேண்டும்.  எந்நாள் என்பதனை வினாவாக்கினால், ‘சிவானந்தம் மேலிடுதல்’ எனும் தலைப்புக்குப் பொருந்துவதில்லை.

இரண்டாவது திருப்பாடலில்,அடிகள், தம்முடைய ஊனாருடலில் உள்ள தம் உயிருடன் பெருமான் கலந்து, தம் நெஞ்சைவிட்டு நீங்காதவனாய்த் தன்னுள் தம்மை அடக்கிக்கொண்டு, அமரர்களுக்கும் கிடைக்கவொண்ணாச் சிவானந்தத்தை அருளும் கருணையை வியக்கின்றார்.

முதல்வன் அன்பர்களின் ஊனாருடலில் புகுந்து, உயிருட்கலந்து உய்விக்கும் பெருங்கருணையைப் பெரியோர் பெரிதும்வியந்து நன்றிபாராட்டுகின்றனர்..

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட

அங்ஙனே பெரியநீ சிறிய

என்னையாள் விரும்பி யென்மனம் புகுந்த

எளிமையை யென்றும்நான் மறக்கேன்;

முன்னம் மாலறியா வொருவனா மிருவா!

முக்கணா! நாற்பெருந் தடந்தோட்

கன்னலே! தேனே! அமுதமே! கங்கை

கொண்ட சோளேச்சரத் தானே!” (திருவிசைப்பா)

இறைவன் அடிகளின் ஊனாருடலில் புகுந்து உயிருட்கலந்து உடலினைத் தூவெளியாக்கிச் சீவகரணங்களைச் சிவகரணங்களாக மாற்றிச் சிவானந்தம் நுகரப் பக்குவப்படுத்தியதைக் கூறியருளினார்.  இது “யோக தீக்கை” எனப்படும்.  சிவனின் உருவம் இன்பகனமாதலின் அவன் உயிரோடு அத்துவிதமாகக் கலத்தலினால் பாசநீக்கத்துடன் சிவானந்தப்பேறும் விளைந்தன.

மூன்றாவது திருப்பாடலில் சிவானந்த மேலிடுதலால், சிவபூரணத்தில் திளைக்கும் அடிகள், “எனைநானென்ப தறியேன்பக லிரவாவதும் அறியேன்” — என்னை இந்த நிலையை அடையச் செய்து மத்தோன்மத்த னாக்கினான் பரமன் என்கிறார்.  தாம் அறியாமலேயே இறைவன் தம்மிடத்துச் செய்த இம்மாற்றத்தை அடிகள் ‘எனைச் செய்த படிறு’ என்கிறார்.  படிறு என்பதற்குப் பொருள் வஞ்சகம் என்பதாகும். படிறன் – வஞ்சகன்.

இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்

செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்

எனும் குறளில் தெய்வப் புலவர் இச்சொல்லை வஞ்சனை என்னும் பொருளில் ஆண்டுள்ளார்.

இங்கு இறைவன் செய்த வஞ்சனை யாதெனில், இறைவன் தன்னுடைய திரோதான சத்தியால் உயிர்களின் அறிவை மறைத்தும் ஐம்புலன்களிற் கலந்துநின்று அவற்றை இயக்கியும் வினைகளை நுகரச்செய்து உயிர்களுக்கு வினைக்கழிவு செய்தருளியதைக் குறித்தது.  இது இறைவனின் கள்ளக் கருணையாகும்.

வினைக்கேடன் என்னும் பெயர் ஆன்மாவுக்கும் பொருந்தும், சிவனுக்கும் பொருந்தும்.  ஆன்மா வினையினால் கெடுபவன், ஆதலால் வினைக்கேடன்; சிவன் ஆன்மாவின் வினைக்குக் கேடுசெய்பவன், ஆதலால் வினைக்கேடன்.  அந்த வினைக்கேடனாகிய சிவபெருமான் தம்மை ஆட்கொண்டருளித் தம் உடலில் உள்ள எழும்பின் உட்டுளைகள்தோறும் இன்பநீர் பாய்ச்சி உருகச்செய்தான் என்றும், தன்னுட்புகுந்தான் என்றும், மனத்தினுள்ளும் வாக்கினுள்ளும் எழுந்தருளினான் என்றும் அடிகள் நான்காம் திருப்பாடலில் அருளினார்.  இதனால் அவர் சிவமாகவே திகழ்ந்தமையை உணர்த்தினார்.

ஐந்தாம் திருப்பாடலில் தாம்பெற்ற சிவானந்தத்தை அனுபவிக்க, பற்றலாகாப் பற்றுகளை யொழித்து, பற்றத்தக்க பற்றாகிய இறைவனடியினைப் பற்றி, நல்லதொரு கதியை அடைய  உலகினரை அழைக்கின்றார். சிவபெருமானின் புகழ்களைக் கற்று அவன் கழல் பேணினவர்களுடன் கூடுமாறு அறிவுரை கூறினார்.

ஆறாந் திருப்பாடலில், மூன்றாம் திருப்பாடலில் கூறியவாறே இறைவனின் ‘படிறை’க் கள்ளக் கருணையை வியக்கின்றார்.

ஏழாம் திருப்பாடலில், ’புகழ் வேண்டேன்; செல்வத்தை விரும்பேன்; மண்ணுலக விண்ணுலக ஆட்சி வேண்டேன்; பிறப்பிறப்பையும் வேண்டேன்; சிவம் வேண்டா தாரொடு ஒருநாளும் மனத்தாலும் பழகேன்.  சிவனின் திருவடிகளையே தரித்துக் கொண்டுள்ளேன்; அவனை விட்டு நான் அப்பாலே போகேன்; அவனையும் போகவொட்டேன்,’ எனும் தம் உறுதியை ஆணையிடுதல் போலக் கூறினார்.

எட்டாம் திருப்பாட்டில் சிவபெருமான் தம்முயிருட் கலந்து

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான்

வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்

காயத் துள்ளமு தூறவூறநீ கண்டு கொள்ளென்று காட்டி யும்,

உரியே னல்லேன் உனக்கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்

தரியேன் நாயேன் இன்னதென் றறியேன் சங்கரா கருணையினால்

பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டி”யும்

[திருவாசகம் 581,598]

அளித்த இன்பத்தினைக் கொம்புத்தேன் என்பேனோ, குரைகடலில் தோன்றிய அமுதென்பேனோ’ என்றெல்லாம் வியந்த அடிகள், அவ்வின்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப்  பெருக்கின் மாண்பினைக் கூறினார்.

ஒன்பதாம் திருப்பாடலில், அடிகள், “எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன்,” என்றார்.  ‘எனக்கு இருக்கின்றது’ என்றது இப்பொழுது அடிகளிடத்து உளதாகிய சீவன்முத்தநிலையை.  அறியேன் என்றது, இச்சீவன் முத்தநிலையை ஒருபொருட்டாக மதியேன் என்றவாறாம்.  இதனை மதியாமையால் இனி நான் பெறவேண்டி எஞ்சி இருப்பதாகிய ‘எச்சம்’, அதனையே பெரிதும் மதித்து விரும்புவேன்.  அதுவே பரமுத்தி.  சீவன்முத்தி முழுமையானதன்று.  மீண்டு வாராநிலைமைத்தாகிய பரமுத்தியையே நான் அறிந்து விரும்புகின்றேன்” என அடிகள் கூறினார்.

‘எனக்கு உள்ளது,’ என்றது நின்மல அவத்தையில் துரியம்.  ‘எச்சம்’ என்றது நின்மல துரியாதீதத்தை.   சீவன்முத்திநிலையில் உள்ள ஆன்மா, சிவானந்தமாகிய இறையின்பத்தை நுகரும்.  ஆன்மா வாசனாமல வயப்படும்போது அந்த இன்பம் குறையும், சீவபோதம் தலைப்படும்.  எனவே நின்மல துரியாதீதத்தையே அடிகள் வேண்டினார்.

ஈண்டு, காலவ முனிவர், இறைவனை நோக்கித், “தலைவா! ஒன்று வாதனையு மாக்கையொழி கிற்பி னிலையா, நின்ற விவ்வுடலு நீக்குகென,” வேண்டியது நினைவு கூறற்பாலதாம்.  திருப்பேரூரில் கோமுனி பட்டிமுனிகளுக்குத் திருவுருவம் இருப்பக் காலவ முனிவருக்குத் திருவுருவமின்மையின் கருத்தை அறிக.

நின்மல துரியாதீதத்தில் ஆன்மாமுழுவதும் திருவருள் வியாபகத்துள் அடங்கிநிற்றலினால், ஆன்மா எனவொரு பொருள் தோன்றாமல் சிவமே முன்நிற்கும்;  இதனை, அடிகள் “நிச்சமென நெஞ்சின்மன்னி யானாகிநின் றானே,” எனச் சுட்டினார். இந்நிலையில் சிவம் உயிரை உண்டு தானேயாகி நிற்றலால், உயிருண்ணியாயிற்று.

***

2 Replies to “உயிருண்ணி”

  1. excellent article about how the Lord take over the soul from its ” kevala, sakala – stages”

    ‘எனக்கு உள்ளது,’ என்றது நின்மல அவத்தையில் துரியம். ‘எச்சம்’ என்றது நின்மல துரியாதீதத்தை. சீவன்முத்திநிலையில் உள்ள ஆன்மா, சிவானந்தமாகிய இறையின்பத்தை நுகரும். ஆன்மா வாசனாமல வயப்படும்போது அந்த இன்பம் குறையும், சீவபோதம் தலைப்படும். எனவே நின்மல துரியாதீதத்தையே அடிகள் வேண்டினார்

    மிக அருமையான கருத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *