பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.
<< தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>
தொடர்ச்சி…
மத்தியகால இந்தியாவின் வரலாற்றைப் படிக்கிற வரலாற்று ஆர்வலர்கள் ரஸியா சுல்தானா, அலாவுதின் கில்ஜி, ஃபெரோஸ்ஷா துக்ளக், ஷேர் ஷா, அக்பர் போன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நிதி நிர்வாகத் திறமையைக் குறித்து அளவுக்கதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டிருபதனைக் கண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த விளக்கங்கள் அத்தனையும் பொய்யான தகவல்களே. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த அவர்களின் வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்த பொய்யையும், புனை கதைகளையும் இந்திய வரலாற்றாசிரியர்கள் தங்களின் வசதிக்கேற்ப எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை என்பதினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது. அவ்வாறு செய்வதற்கு அன்றைக்கு ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமிய அரசனின் முழு அனுமதியும் இருந்தது.
ஒரு நாட்டின் நிதி நிர்வாகம் சரியானதாக இருக்கவேண்டுமென்றால் உண்மயான, சட்டபூர்வமான, அனைவராலும் மதிக்கக்கூடியதொரு நிதி நிர்வாகமாக அது இருக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட நிதி பொதுமக்களின் நன்மைக்கென உபயோகப்படுத்தவும் வேண்டும். நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அங்கு சாந்தியும் சமாதானமும் நிலவவும் அந்தப் பணம் உபயோகிக்கப்படுவதே நியாயமானது. முறையானது. குடிமக்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வரி வசூலிக்கப்படவேண்டும். அவ்வாறு வசூலிக்கப்படும் வரியானது ஒரு நிலையான கால வரம்பிற்குள் வசூலிக்கப்படுவதுடன், அத்துமீறி வரி வசூல் செய்வதனைத் தடுக்கும் வகையான நீதி பரிபாலனங்களும் அங்கு செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தியாவை ஆண்ட எந்தவொரு இஸ்லாமிய அரசிலும் இந்த வழிவகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக சரித்திரமே இல்லை.
காரணம், இஸ்லாமிய அரசர்கள் அவர்கள் ஆண்ட நாட்டின் குடிமக்களுக்கு பதிலளிக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்களின் நலம் விரும்பிகளாக அவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. குரான் ஒன்றிற்கு மட்டுமே ஒரு இஸ்லாமிய அரசன் பதிலளிக்கக் கடமைப்பட்டவனாகத் தன்னை எண்ணிக் கொண்டான். மெக்காவையும், மதீனாவையும் மட்டுமே தனது அளவுகோலாகக் கருதிக் கொண்ட இஸ்லாமிய அரசர்கள் அனைவரும் இந்தியர்களை வெறுத்தார்கள். அவர்களை ஒருபோதும் ஹிந்துக்கள் என அவர்கள் அழைத்ததில்லை. தங்களின் கீழ் வாழ்ந்த இந்தியக் குடிமக்களை காஃபிர்கள் என்றும், திருடர்கள் என்றும், விலங்குகள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அழைத்தார்கள். அப்படியே எழுதியும் வைத்தார்கள். தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஹிந்துக்களை அடிமைகளைப் போல நடத்தி அவர்களைக் கசக்கிப் பிழியவே ஒவ்வொரு இஸ்லாமிய அரசனும் நினைத்தான். ஆனால் இந்திய வரலாற்றாசிரியர்கள் எவரும் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல தயங்கியே இருந்திருக்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இஸ்லாமிய அரசனும் விடாமல் தொடர்ந்து போர்புரிந்து கொண்டிருந்தான். தன்னுடைய உடன் பிறந்தவர்களுடன் அல்லது தனக்கெதிராக புரட்சி செய்கிற தனது படைத் தலைவர்களுடன் அல்லது அடுத்த நாட்டு ஹிந்து அரசனுடன் என அவர்களின் போர் ஓயவே இல்லை. அவ்வாறு நடந்த போர்கள் அந்தப் பகுதியில் அல்லது நாட்டில் வாழ்ந்த மக்களைக் கொள்ளையடிக்கவும், கொலைகள் செய்யவும், பெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடவும் உபயோகப்படுத்தப்பட்டது.
ஒரே சமயத்தில் பல முஸ்லிம் அரசர்கள் பலமுனைகளிலிருந்து ஒருவருக்கொருவர் போர் செய்து அழிவதும் நடந்து கொண்டிருந்தது. உதாரணமாக தாரா ஷிகோ, ஷுஜா, அவ்ரங்க்ஸிப், முராத் சகோதரர்கள் முகலாய அரியணைக்காக ஒருவருக்கொருவர் தொடர்ந்து போர் செய்தார்கள். இதுபோன்றதொரு அரசு மக்களிடம் நியாயமான முறையில் வரி வசூலித்து அதில் வரும் பணத்தில் போர் செய்வது என்பது நினைத்துக் கூட பார்க்கவியலாத ஒன்று. கொள்ளையடிப்பது ஒன்றே இதற்கு பதில்.
இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அல்லது ஆண்ட அக்பர், ஃபெரோஸ்ஷா, ஷேர்ஷா, தைமூர் போன்றவர்கள் சாலைகளின் ஓரம் சத்திரங்கள் கட்டி அதில் பயணிகள் தங்க வசதிகள் செய்து கொடுத்தார்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற அண்டப்புளுகுகளே. இந்தியாவை ஆண்ட ஷத்திரிய அரசர்கள் கட்டி வைத்த சத்திரங்களின் மீது தங்களின் பெயர்களைப் பொறித்துக் கொண்டார்கள் அவர்கள் என்பதே உண்மை.
இஸ்லாமிய அரசர்கள் அதுபோன்ற சத்திரங்களையும், தங்கும் விடுதிகளையும் கட்டினார்கள் என்றால் அது தொடர்ச்சியாக அவர்கள் ஆண்ட எல்லாப் பகுதிகளின் சாலையோரங்களிலும் அவர்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் எங்குமே அது காணக்கிடைக்கவில்லை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னர் ஆண்ட ஹிந்து அரசர்கள் நட்டுவைத்த நிழல்தரும் மரங்களைக் கூட ஆக்கிரமிப்பாளர்களான இஸ்லாமிய அரசர்கள் விட்டு வைக்கவில்லை. அவற்றை வெட்டியெடுத்து விறகுக்கும், படகு தயாரிக்கவும், கோட்டைகளில் ஏறும் ஏணிகள் தயாரிக்கவும், ஆயுதங்களுக்குக் கைப்பிடியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள் என்பதே வரலாறே தவிர அவர்கள் எங்கும் மரம் நட்டுப் பராமரிக்கவில்லை.
இன்றைக்கு இந்தியாவில் தேர்வெழுதப் போகும் மாணவனை உண்மைக்குப் புறம்பாக ஜஹாங்கிரின், அக்பரின், ஷேர்ஷாவின், முகமது துக்ளக்கின் அல்லது ஃபெரோஸ்ஷா துக்ளக்கின் ஆட்சிச் சிறப்புகளைக் குறித்து எழுதப் பணிக்கும் தேர்வுகள் இந்தியர்களுக்கு பெரும் துரோகத்தை இழைக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. தங்களின் அரசுகள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் சின்னாபின்னப் படுத்தப்பட்ட பின்னரும் சிறப்பாக ஆண்ட சிவாஜியைக் குறித்தும், ராணா பிரதாப்பின் ஆட்சியைக் குறித்தும், அவர்களின் தியாகத்தைக் குறித்தும், துன்பங்களிடையேயும் குடிமக்களின் அன்பைப் பெற்ற அந்தச் சிறந்த மனிதர்களைக் குறித்தும் அல்லவா அந்த மாணவர்களை தேர்வெழுதச் சொல்ல வேண்டும்?
இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய அரசர்களிலேயே மிகச் சிறந்தவர் அக்பர் என நமக்கு மீண்டும், மீண்டும் கிளிப்பிள்ளைகளைப் போலக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் உண்மையில் அக்பரின் ஆட்சி ஒரு பெரும் கொள்ளைக்கார, குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து துன்புறுத்திய ஆட்சி என்பதினை நாம் காண வேண்டும். குடிமக்களைக் குறித்த அக்கறை சிறிதும் இல்லாத ஆட்சி ஒன்று இருந்ததென்றால் அது அக்பரின் ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.
குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமதிப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா போன்றவர்களுக்குத்தான் அக்பரின் அரசவையில் மரியாதை இருந்தது. “இனிமேல் தன்னைப் பார்க்க வரும் அத்தனை பேர்களும், அவர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் அல்லது சாதாரண குடிமக்களாக இருந்தாலும், தனக்குப் பரிசுகள் கொண்டுவந்து தரவேண்டும்” என ஆணையிடும் அக்பர் எந்த விதத்தில் குடிமக்களுக்கு நன்மை செய்பவராக இருந்திருக்கவியலும்?
தனது ஆட்சிக்குட்பட்ட எல்லா பர்கானாக்களையும் (மாவட்டங்கள்) ஒரே அளவாகப் பிரித்து அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவருடமும் தனக்குக் கோடிக்கணக்கில் வரிகட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் அக்பர். ஆனால் எல்லாப் பர்கானாக்களும் வளமையானவையாக இருந்திருக்கவில்லை. வறண்ட பகுதிகளும், மலைகளும், பாலைவனங்களும், காடுகளும், நதிகளும் இருந்த பகுதிகளும் ஒரே அளவாகப் பிரிக்கப்பட்டு அந்தப்பகுதிகள் அனைத்தும் ஒரேமாதிரியான வரிகட்ட வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களிடமிருந்து பணத்தை எப்பாடுபட்டகிலும் கசக்கிப் பிழிய குரோரிகள் (கோடிப்பணம்) என்பவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
மிகக் கொடூரமாக நடந்து கொண்ட குரோரிகளின் காரணமாக பல ஏழை விவசாயிகள் அவர்களின் பிள்ளைகளையும், மனைவியையும் சந்தையில் அடிமைகளாக விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பலர் அவர்களின் விவசாய நிலங்களைக் கைவிட்டுவிட்டு பிற நாடுகளுக்குத் தப்பியோடினார்கள். விவசாயம் முற்றிலும் நிறுத்தப்பட்டு எங்கும் குழப்பம் நிலவியது. ஆனால் சரிவர பணத்தை வசூலிக்காத குரோரிகள் ராஅஜா தோடர்மல் போன்ற அக்பரின் கையாட்களால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அடிகளாலும், உதைகளாலும் பல குரோரிகள் இறந்தார்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நாட்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
சரியாக வரி வசூல் செய்யாத பல அதிகாரிகள் சிறையிலேயே இறந்தார்கள். அவர்களைக் குழிகளில் புதைத்த மறுகணம் இறந்தவர்களுக்குச் சொந்தமான நிலங்களும், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அக்பரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்பரின் அமீர்கள் அப்பாவிகளிடம் பிடுங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள். சாதாரண குடிமக்களைக் குறித்து அக்பரோ அல்லது அவரது கீழ் பணிபுரிந்த வஸீர்களோ அல்லது அமீர்களோ எந்தக் கவலையும் படவில்லை. ராஜா தோடர்மல் போன்ற அயோக்கியர்கள் அக்பரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேலும், மேலும் குடிமக்களை கசக்கிப் பிழிந்து அவர்களை ஒட்டாண்டிகளாக்கினார்கள்.
இந்த வரலாற்றைத்தான் அக்பரின் சிறந்த நிதி நிர்வாகமாக இந்திய வரலாற்றாசிரியர்கள் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரலாறு நமது குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்குமானால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு இந்தியா ஒரு பெரும் வல்லரசாக மாறியிருக்கும்.
(தொடரும்)